அம்மா நான் பாஸ்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,165 
 

மொபைல் ஃபோன் அழைத்தது. ஆகாஷ் பாய்ந்து எடுத்தான். அவன் பள்ளி விடுமுறையை, தாத்தா பாட்டியுடன் கழிக்க சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறான்.

“ரிஸல்ட் வந்திடிச்சா? நீ பாஸா? ஓ! கங்கராட்ஸ்! என்னோடது? பாக்கலியா? ஓ.கே.!’ என்று சுருக்கமாகப் பேசிவிட்டு ஓடிப்போய் கம்ப்யூட்டரை “ஆன்’ செய்தான். நிமிடங்களில் ஆகாஷ் ஒன்பதாம் வகுப்பில் பாஸாகிவிட்ட விஷயம் பள்ளியின் வலைப் பதிவிலிருந்து எல்லோரும் தெரிந்து கொண்டாயிற்று.

அம்மா நான் பாஸ்

“ஒரு செகண்ட்ல டென்ஷன் படுத்திட்டான் தாத்தா! அவன் ரிஸல்ட்ட பார்த்தவன் என்னோடதையும் பார்த்திட்டுச் சொல்லியிருக்கலாம் இல்லியா? அம்மாவும் அப்பாவும் படிப்பு விஷயத்திலே எவ்வளவு கண்டிப்புன்னு உனக்கே தெரியுமே. சன்டே ஒரு நாள்தான் விளையாட விடுவாங்க. பரீட்சையில மார்க் கொறஞ்சு போச்சுன்னா அதுவும் “கட்’டாகிவிடும். யப்பா! நல்ல வேளை ஒரு கண்டம் தாண்டியாச்சு!’ என்றான் ஆகாஷ்.
இதேமாதிரி படு டென்ஷனாக தமக்கும் ஒன்பதாம் வகுப்பில் ரிஸல்ட் வந்தது தாத்தா சீனுவுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் ஆகாஷ் படிக்கும் தற்போதைய காலக்கட்டமும், தான் படித்த காலக்கட்டமும் ஒன்றுக்கொன்று எவ்வளவு வித்தியாசமானவை என்று நினைக்கும்போதே சீனுவின் இதழ்களில் ஒரு புன்னகை வந்து அமர்ந்து கொண்டது. சென்னை நகரத்தின் வெற்றிகரமான தொழிலதிபர்களுள் ஒருவரான சீனு பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார்.

இன்று நினைத்தாலும் சீனுவுக்குச் சிரிப்பாகத்தான் வருகிறது. எதற்குப் பள்ளிக்குப் போனோம், என்ன படித்தோம் என்றே தெரியாமல் அந்த வயதில் அவ்வளவு குழந்தைத்தனம்! விளையாட்டுத்தனம்! பள்ளியில், தேஜோமூர்த்தி, ஒன்பதாம் வகுப்பு “டி’ பிரிவு மானிடர். பேண்ட் போட்டுக் கொண்டு குடுமி வைத்துக்கொண்டு வருவான். ரொம்ப வருடங்களாக ஃபெயிலாகி ஃபெயிலாகிப் படிப்பதால், வயதாகி ஒன்பதாங் கிளாஸிலேயே முகச்சவரம் செய்ய ஆரம்பித்துவிட்டான். அவன் “கல்கண்டு’ பத்திரிகை வாசகன். தமிழ்வாணன் எழுதிய “படலில் தெரிந்த கை!’ தொடர்கதையை விடாமல் வாசிப்பவன். ஜாம் பஜார் பத்திரிகைக் கடையில் மத்தியானம் ரெண்டு மணிக்கு திங்கள் தோறும் வரும் அந்தப் பத்திரிகையை, சீனுவை ஏவித்தான் கடையில் வந்தவுடனேயே வாங்கிக் கொண்டு வரச் சொல்வான்.

கபாலி, பால்காரப் பையன். காலையில் வீடுகளுக்கு (ஆசிரியர்கள் வீடுகள் உட்பட) பால் ஊற்றிவிட்டு லேட்டாகத்தான் பள்ளிக்கே வருவான். அவன் தந்தை கையில் பத்து பைசா கொடுப்பார். பள்ளிக்கு வரும் வழியில் மளிகைக் கடையில் கொறிப்பதற்கு உடைச்சக் கடலை வாங்கிக் கொண்டு மீதி காசுக்குத் தலையைக் காட்டி வழிய வழிய எண்ணெய் ஊற்றிக் கொண்டு வந்து விடுவான். கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு கடலையைக் கொறித்தபடியே தலையிலிருந்து நாலா புறமும் வழியும் எண்ணெயைப் பக்கத்தில் இருப்பவர்கள் மேல் விளையாட்டாகத் தடவி விட முயற்சிப்பான். யார் தன் எண்ணெய் வழியும் தலையைக் கண்டு அஞ்சுகிறார்களோ அவர்களைத் தேடிப் பிடித்து அவர்கள் பக்கத்தில் போய் உட்கார்ந்து மாடு முட்டுவது போல் தலையை ஆட்டுவான்.

மத்தியானம் வீட்டுக்குப் போய் எருமை மாடுகளை அரப்புப் பொடி போட்டுத் தேய்த்துக் குளிப்பாட்டி, தானும் நன்றாகத் தலைக்கு அரப்புப் பொடி தேய்த்துக் குளித்துச் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வந்து கடற்கரைக் காற்று இதமாகத் தாலாட்டுப் பாட, வகுப்பில் சுகமாகத் தூங்கிவிடுவான். கபாலி என்ற நினைத்தாலே காலையில் அவனிடமிருந்து வரும் நல்லெண்ணெய் வாசனையும், பிறபகலில் வரும் அரப்புப்பொடி வாசனையும் தான் நினைவுக்கு வரும்.
ஒருநாள் ஆங்கிலப் பாடத்தில் காட்டன் என்ற தலைப்பில் விலாவாரியாகப் பாடத்தை நடத்திவிட்டு ஆசிரியர் வரதராஜன், “ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்’ என்றவுடன், “காட்டன்னா என்ன ஸார்?’ என்று கடைசி பெஞ்சிலிருந்த வெகுளித்தனமாகக் கேட்டான் சீனு. தான் இத்தனை நேரம் சொல்லிக் கொடுத்தது எதுவும் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த அவன் காதுகளில் விழவேயில்லை என்றதும், வெறியோடு பிரம்பை கையில் வைத்துக் கொண்டு தன்னருகே வரச் சொல்லி, அவன் உள்ளங்கையில் விளையாடியது நினைவுக்கு வந்தது சீனுவுக்கு.

பாஷ்யம் அய்யங்கார்தான் வகுப்பு ஆசிரியர். ஆங்கிலமும், வரலாறும் கற்பித்தவர். “அம்மா இருக்கா’ அமெரிக்கா, “அப்பா இருக்கா’ ஆஃப்ரிக்கா, “ஐயோ அப்பா’ ஐரோப்பா என்று எப்படி கண்டங்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வது என்று ஐடியா கொடுத்தவர். சீனு திக்கித் திணறி கரெக்டாக பாஸ் மார்க் எடுத்து கால் பரீட்சை, அரைப் பரீட்சையில் தேறிவிட்டான். ஆனால் சாட்சாத் எருமை மாடு மேல் வரும் எமன் போல முழுப் பரீட்சை வந்துவிடுமே? வகுப்பில் ஆசிரியர் சொல்வதைக் கவனிக்காமல் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு கதை பேசி விளையாடிக் கொண்டிருக்கும் சீனுவைப் பார்க்கும்போதெல்லாம் கோபத்துடன் “டேய்! சத்தியமா சொல்றேண்டா! நீ மட்டும் இந்த ஒன்பதாம் கிளாஸ் பாஸ் பண்ணிட்டே, அந்த சமுத்திரம் இந்த ஹிந்து ஹைஸ்கூல்ல கரையேறிடுண்டா!’ என்பார்.

சீனு வசித்த ராயப்பேட்டை ராமசாமி கார்டன் தெருவில் இரண்டு கோஷ்டிகள். ஒன்று வெஸ்லி உயர்நிலைப் பள்ளியில் படிப்பவர்கள். மற்றொன்று ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் படிப்பவர்கள். வெஸ்லி மைதானம் மிகவும் பெரியது. ஹிந்து செட்டும் விடுமுறை நாட்களில் ஹாக்கியும் கிரிக்கெட்டும் விளையாட, வெஸ்லி மைதானத்துக்குத்தான் போவார்கள். ஹாக்கியில் வெஸ்லி பெயன்கள் ஜெயிப்பார்கள். கிரிக்கெட் என்றால் ஜெயிப்பது ஹிந்து பசங்கதான்.

அந்தந்த சீஸனில் அந்தந்த விளையாட்டு! கோலி குண்டு, “டப்பு டிப்பு’ எனப்படும் “மேச்செஸ்’ விளையாட்டு, முந்திரிக்கொட்டை, “செவென் ஸ்டோன்ஸ்’ எனப்படும் ஏழாங்கல், கில்லிதாண்டு, “பத்துக்குத்து பாறாங்கல்’ என்கிற பம்பர விளையாட்டு, ஹாக்கி பிரபா, பாஸ்கரின் அம்மா தான் அதிசயிப்பாள்.

“இந்தப் பசங்களுக்கு எப்படி எந்த சீஸனில் எந்த விளையாட்டு விளையாடணும்னு தெரியுது’ என்று. விளையாடுவது என்றால் சீனுவுக்குச் சோறு தண்ணி வேண்டாம். இடுப்பை இழுத்து விட்டுக் கொண்டு நாக்கைத் துருத்தியபடியே எந்த விளையாட்டாக இருந்தாலும் அபாரமாக ஆடி ஜெயிப்பான்.
கில்லிதாண்டு விளையாட்டில் தோற்ற கட்சி, வெகு தொலைவிலிருந்து கையில் கில்லியோடு நொண்டிக் கொண்டே ஆட்டம் ஆரம்பித்த இடம் வரை வர வேண்டும். ஜெயித்தவர்கள், “எங்க வீட்டு நாயி திருடித் தின்னப் போச்சு. கல்லால அடிச்சு கால் ஒடிஞ்சு போச்சு’ என்று கத்திக் கொண்டே வருவார்கள். பெரும்பாலும் ஜெயிக்கும் கட்சி சீனுவின் கட்சியாகத்தான் இருக்கும்.

சீனுவின் மாமா பிள்ளை ஒருமுறை எதிர்கட்சியில் நொண்டிக் கொண்டு வர, சீனுவின் கோஷ்டி கொக்கரித்துக் கொண்டே வருவதை மாமாவே ஒருமுறை நேரில் பார்த்துவிட்டார். அன்று வீட்டில் சீனுவுக்குக் கிடைத்த பூசையைச் சொல்லவும் வேண்டுமா?

கோலி விளையாட்டில் பக்கத்து வீட்டு கண்ணன்தான் சீனுவுக்கு பாங்கர். பின்னாளில் அவன் உண்மையிலேயே பாங்கராக ஆனான். (பாங்கில் வேலை கிடைத்தது). சீனு கோலிகளை ஜெயித்து ஜெயித்துத் தர கண்ணன் வாங்கி வாங்கி டப்பாவில் போட்டு வைத்துக்கொள்வான்.

காற்றாடி சீஸனில் அறுபட்ட காற்றாடியைப் பின்தொடர்ந்து கொண்டே அமீர் மஹால் வரை ஓடுவார்கள். அமீர் மஹாலில் நிறைய ஆலமரங்கள். மரங்களில் வெளவால்கள் தொங்குவது ராமசாமி கார்டன் தெரு வீட்டு மாடிகளிலிருந்தே தெரியும். “அங்கே பாருடா பச்சைக் கிளிய, அடிச்சுத் தலைகீழா தொங்கப் போட்டிருக்கங்கடா அமீர் மஹால்ல!’ என்று வெளவால்களைக் காட்டி உற்சாகமாகக் கூவி, “இங்கே வந்து நின்னாதாண்டா நல்லா தெரியும்!’ என்று ஒன்றும் புரியாமல் ஆர்வமாய் ஓடி வரும் பசங்களை எறும்புப் புற்றில் நிற்க வைத்துவிட்டு அவர்கள் “ஐயோ! அம்மா!’ என்று கூட ஆரம்பித்ததும் குறும்புக்கார சீனு பிடித்துவிடுவான் ஓட்டம்!

ஒரு தடவை செல்லப் பிள்ளையார் கோயிலிலய தலையாரித் தெரு பையன் ஒருவனை, “டேய்! செவுத்தில சந்தன வாசனை அடிக்குதடா!’ என்று கூறி அவன் ஓடி வந்து சுவரில் மூக்கை வைத்து முகரும் போது பின்னாலிருந்து அவன் தலையை அழுத்தி, சுவற்றில் மூக்கைத் தேய்த்து, அவன் மூக்கு முழுக்க ரத்த விளாறாக, புகார் சீனு வீடுவரை போய்விட்டது. “அவனை மொத்த அம்மா, கையில் மத்தை வைத்துக் கொண்டு வாசலிலேயே காத்துக்கொண்டிருக்கிறாள்’ என்ற செய்தி சீனுவுக்கு நண்பன் மூலம் வந்து விட்டது.

அவன் பக்கத்து ஓட்டு வீட்டின் மீதேறி தன் வீட்டு முற்றத்துக்குள் கம்பிக் கிராதி வழியாகக் குதித்து, சமையலறைக்குப் போய் சாதம் எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டுவிட்டு, திரும்ப வந்த வழியே வெளியே விளையாடப் போய்விட, பாவம்! அம்மா அன்று எவ்வளவு நேரம் வாசலிலேயே நின்றாளோ தெரியாது!
ஒன்பதாவது வகுப்பு பரீட்சைகள் முடிந்து கோடை விடுமுறை நாட்கள்.

“ஏய்! ஸ்கூல்ல ரிஸல்ட் போட்டுட்டாங்கடா! நா பாஸ்!’ உற்சாகமாகக் கூவினான்.

“எம் பேரு பாத்தியாடா?’ சீனு ஆர்வத்தோட அருகில் வந்தான்.
ராஜி உதட்டைப் பிதுக்கினான்.

“ஒம்பேரு லிஸ்ட்டில் இருந்தா மாதிரி தெரியலையே!’
சீனுவுக்கு ஒரு கணம் இதயம் வேலை செய்ய மறந்துபோய் நின்றது.

“என்னடா சொல்ற?’

“நா பாத்ததைத்தாண்டா சொல்றேன்’.

அவ்வளவுதான். சீனு வெறிபிடித்தவன் போல் தலை தெறிக்க ஓடினான். ஜாம் பஜார் மார்க்கெட் வழியாக, திருவல்லிக்கேணி பெரிய தெருவுக்குச் சென்று “ஹிந்து உயர்நிலைப் பள்ளி’யில் நுழையும்போது வியர்த்து, விறுவிறுத்து மூச்சு வாங்கியது. ரெண்டாவது மாடியில் நோட்டீஸ் போர்டைச் சுற்றி நின்றுக் கொண்டிருந்த கும்பலை, தன் முழங்கையால் இடித்து விலக்கித் தலையை உள்ளே நுழைத்துப் பார்த்து, பாஸான பட்டியலில் “அரவிந்தன், அழகர்சாமி, ஆராவமுதனில் ஆரம்பித்து… ராஜமாணிக்கம், ராமசாமி… ஸ்ரீகண்டன்’ என்ற பார்த்துக் கொண்டே வந்து, “ஜி.ஸ்ரீனிவாஸன்’ என்ற தன் பெயரைப் பார்த்ததும்தான் சீனுவுக்கு ஒழுங்காக மூச்சே வர ஆரம்பித்தது.
“அம்மா! நான் பாஸ்!’ கத்திக் கொண்டே வீட்டில் நுழைந்த சீனுவை, சலனமில்லாத முகத்தோடு “அப்படியா?’ என்பதுபோல ஏறிட்டுவிட்டு, அம்மா தன் வேலையைப் பார்க்க நகர, சீனுவுக்கு “தப்பித்தோம் பிழைத்தோம்!’ என்றிருந்தது.

“நான் பாஸாயிட்டேன் அம்மா!’ ஆகாஷ் சிங்கப்பூரிலிருக்கும் அம்மாவிடம் மொபைல் ஃபோனில் உற்சாகமாகக் கூவிக் கொண்டிருந்தான்.

சீனு இதழ்களில் ஒரு புன்முறுவலோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

– மார்ச் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *