அம்மா எழிலரசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 11,004 
 

காதல், வாழ்க்கையை கற்பித்துக்கொடுத்த நல்லதொரு ஆசான். இப்படித்தான் காதலை எப்பொழுதும் எடுத்துக்கொள்வான் நிதுஷன். காதலை இந்தளவிற்கு சரியாக புரிந்துகொள்தலிலும், காதல் தோல்வியை அத்தனை வலிகள் கடந்து ஆளுமையோடு எடுத்து வருதலிலும் இருந்த நிதுஷனின் விவேகத்தை நான் என்றும் போற்றுவேன். காதலை தேடி தேடி கண்டடைய தெரிந்த நிதுஷனிற்கு அதை கடைசிவரை காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனது என்னவோ அவன் துர்வதிஷ்டம்தான். காதல், கரைமேல் கிறுக்கிய கவிதை. எப்பொழுது அலை வந்து தன்னை அளிக்குமென்று அதற்கு தெரிவதில்லை. இது நடந்துமுடிந்தது இற்றைக்கு சுமார் ஆறு ஏழு வருடங்களிற்கு முன்னர். சரி இப்பொழுது நிதுஷன் எங்கே?

‘அம்மா.. இன்னைக்கு நான் லஞ்சுக்கு வரமாட்டேன்…!’ உச்ச ஸ்தாயியில் கூவியவாறு மோட்டார் சயிக்கிள் நோக்கி பறந்தான் நிதுஷன். ‘ஏண்டா??’ கேள்விக்கு பதில்வருவதற்குள் மோட்டார் சைக்கிள் வீட்டிலிருந்து வெளியே தோட்டாவாய் பறந்தது.

நீண்டதொரு கால இடைவெளியின் பின்னர் இன்று நிதுஷன் தன் நண்பன் பிரேமை சந்திக்கப்போகிறான். சந்திப்பு கிளிநொச்சியில் நிகழவேண்டும். இதுவே இவர்கள் இருவரின் திட்டம். இடம்பெயர்வுகளின் இடர்பாட்டிற்குள் தொலைந்துபோன உறவுகளில் பிரேமின் நட்பும் ஒன்று. இவர்கள் பால்ய சிநேகிதம் கிளிநொச்சியிலிருந்து இறுதியாக இடம்பெயர்கையில் காணாமல் போயிருந்தது. தொலைவுண்ட பிரேமின் இருத்தலை கடந்த வருடம் முகப்புத்தகத்தின் மூலம் கண்டுபிடித்திருந்தான் நிதுஷன். 2008இல் எப்படியோ பிரேம் ஐரோப்பிய நாடொன்றிற்கு அகதியாய் சென்றிருக்க வேண்டும். ஆதேநேரம், நிதுஷனிற்கு அதிகபட்சமாய் மெனிக்பாமில் மட்டுமே அடைக்கலம் தேட முடிந்தது.

காற்றை கிழித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பறந்துகொண்டிருந்தது. இறந்தகால நிழல்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் மனத்திரையில் அழகழகாய் வலம்வந்துகொண்டிருந்தது. போர் தின்ற காலங்கள் இடையிடையே கண்களையும் நனைத்துப்போக, முகத்தை மூடியிருந்த தலைக்கவசத்தை உயர்த்தி உயர்த்தி கண்ணின் மூலையில் தேங்கும் ஈரலிப்பை துடைத்துக்கொண்டிருந்தது அவன் விரல்கள். போரினால் சீரழிக்கப்பட்ட உயிர்கள், வாழ்க்கை, நட்பு, காதல், என தொடர்ச்சியாக சிந்தனைக்குள் வந்து விழுந்துகொண்டிருந்தது பழைய ஞாபகங்கள். இருந்தும், மோட்டார் சைக்கிள் மட்டும் பிடிவாதமாய் தன் வேகத்தை குறைப்பதாய் இல்லை.

அரைமணிநேரம் தொடர்ச்சியாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும், தொடர்ச்சியாக பழைய ஞாபகங்களை கிளறிப்போட்டுக்கொண்டிருந்த மூளையும், அதிகநேரம் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்து களைப்படைந்த அவன் இடுப்பும் கொஞ்சம் இடைவேளை கேட்கத்தொடங்கியது. பயணத்தை நிறுத்தி கொஞ்சம் இடைவேளை எடுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தது நிதுஷனின் மனம். எங்கு நிறுத்துவது..? நாவின் இரண்டு ஓரங்கள்கூட காய ஆரம்பித்துவிட்டது. தாகம், பசி சாதுவாய் ஜாடைகாட்ட வேறு ஆரம்பித்துவிட்டது. சரி, வழியில் எங்காவது ஒரு சிறு கடையில் நிறுத்தி கொஞ்சம் தண்ணீர் தானம் செய்துகொள்ளலாம் இந்த தாகத்திற்கு.. ஏதாவது ஒரு கடையைத்தேடி பாதையின் இரு மருங்கிலும் தாவத்தொடங்கியது நிதுஷனின் கண்கள். ‘கண்ணன் ஹோட்டல்’, இது வேண்டாம். ‘மலர் சுவையூற்று’, இதுவும் வேண்டாம். வீதியின் ஓரம் சிறிதாக ஒரு பெட்டிக்கடை போதும். தற்போதைய ?!
?ேவையெல்லாம், இரண்டு, மூன்று நிமிட நின்மதியான ஓய்வு மற்றும் ஒரு போத்தல் தண்ணீர். அவ்வளவுதான்.

பயணம் மெதுவாய் தொடர்கிறது. தூரத்தில் எதுவும் தெரிவதாய் இல்லை. பயணம் தொடர்கிறது. இப்பொழுது தூரத்தில், வீதியோரம் ஒரு சிறு குடிசை தெரிகிறது. ‘இது நிற்சயமாக எதிர்பார்த்த ஒரு சிறு நிறுத்தமாக இருக்கலாம்!’. நிதுஷனின் மனம் சொல்லிக்கொண்டது. மோட்டார் சைக்கிள் அருகில் செல்கிறது. ‘ஆமாம், இங்கு நிறுத்திவிடலாம்!’, போட்ட ப்ரேக்கில் மோட்டார் சைக்கிள் சொன்னபடி, சொன்ன இடத்தில் அப்படியே நின்றது. தலைக்கவசத்தை அகற்றி கையில் கோர்த்தபடி அந்த சிறு சிற்றுண்டி சாலையினுள் நுழைய முற்படுகிறான் நிதுஷன். ஒரு மேசை, அதை சூழ நான்கு கதிரைகள், வலப்புறம் ஒரு கண்ணாடி அலுமாரி, அதற்குள் காய்ந்துபோன சில தீனிப்பண்டங்கள், இடப்புறம் ஒரு திறந்த அலுமாரியினுள் சில பலசரக்குகள், மேலே கூரையூடு தெளிவாகத்தெரியும் வானம், கீழே மலிவாகக்கிடக்கும் கற்களும் செம்மணல் துகள்களும், சுருக்கமாக அந்த பெட்டிக்கடையை வர்ணிப்பதென்றால் இவ்வளவுதான்! அவ்வளவு பொருட்கள் இருந்தும் நிதுஷனை வரவேற்க ஒரு மனிதரில்லை அந்த கடைக்குள்.

‘அண்ணே.. அண்ணே…!’

கொஞ்சம் குரலை உயர்த்தி அந்த கடைக்கார எஜமானனை அழைத்தான் நிதுஷன்.. அண்ணே என்று அழைத்தாலும், பின்புற வாயில் வழியாக கடைக்குள்ளே ஓடிவந்தவர் ஒரு அக்கா. அதுவும் ஒரு இளம் அக்கா.

‘சொல்லுங்கோ அண்ணா…’ என நிமிர்ந்த அந்த பெண், நிதுஷனைப் பார்த்து விறைப்புற்று விழித்தாள். அதே விறைப்பு தக தகவென நிதுஷனையும் பற்றிக்கொண்டது. ஒரு நிமிடம் கண்வெட்டாத பார்வைகள் மட்டுமே பரிமாறப்பட்டன. இவனது விழிகளில் அவள் விழிகள், அவளது பார்வையில் இவன் கண்கள். ஒருநிமிடம் ஒரு மணித்தியாலமாய் அந்த கடைக்குள் தேங்கி நிற்கிறது. இருவரும் எதற்காக இப்படி பார்த்துக்கொள்கிறார்கள் என்பதை அந்த மேசையும், நாற்காலிகளும், அலுமாரிகளும், காய்ந்துபோய் கண்ணாடி பெட்டிக்குள் கிடக்கும் சிற்றுண்டிகளும் அறிய வாய்ப்பில்லை. கூரையின் ஓட்டை வழியே அந்த கடையை வியாபித்திருக்கும் சூரிய கீற்றுக்களிற்கும் இது பற்றி ஒரு துப்புக்கூட இல்லை.

‘எழில்…!!’ அந்த கடைக்கார பெண்ணின் பெயரை தப்பின்றி உச்சரித்தான் நிதுஷன்.
‘எப்பிடி இருக்கே நிது..?’ அவள் வாய் மலர்ந்தாள். நிதுஷனின் உதடுகள் மெதுவாய் ஒரு ஓரப்புன்னகை உதிர்க்க அசைய ஆரம்பித்தது. கண்களிலோ தடுமாற்றம், இமைகள் அவன் பார்வைகளை அடிக்கடி வெட்ட ஆரம்பித்தது.

எழிலரசி, நிதுஷனின் ஆத்மா! இற்றைக்கு ஆறேழு வருடங்களிற்கு முன்னர். இடப்பெயர்வு நிதுஷனையும் எழிலரசியையும் வடக்கு தெற்காய் காணாமல் போகப்பண்ணியிருந்தது. ஆறு வருடங்களாய் இருவரும் முகவரியற்று இருந்தவர்கள் இன்று இந்த பெட்டிக்கடையில் சந்தித்திருக்கிறார்கள்.

‘நல்லா இருக்கேன்! நீ எப்பிடி… எழில்?’, இவன் வார்த்தைகளில் இன்னும் அந்த காதல் ஒரு அணுவும் குறையாமல் இருப்பதை எழில் நிற்சயம் உணராமல் இருக்கமுடியாது.

‘ம்ம்ம்ம்….இருக்கேன்டா..!’

நிதுஷனிற்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள். ஒன்றன் பின் ஒன்றாய் கேட்டுவிடலாம் என்றால் வார்த்தைகளுக்கு அத்தனை பஞ்சம். இரத்த ஓட்டம் வேகமானத்தில் வார்த்தைகளும் சிதற ஆரம்பித்தன. ஆறு வருடங்களாய் இவளுக்காகத்தானே காத்துக்கொண்டிருந்தேன். இந்த கிளி-முல்லை வீதிக்கும், இந்த அரைகுறையான பெட்டிக்கடைக்கும், என்னை இங்கு நிறுத்த காரணமான என் தண்ணீர் தாகத்திற்கும் எப்படி நன்றி சொல்வேன். நன்றி முருகா! என்னவள் கிடைத்துவிட்டாள். இனியும் இவளை நான் எதற்காயும் இழப்பதாய் இல்லை.. தனக்குள்ளே படபடவென பேசிக்கொண்டான் நிதுஷன். அவள் அழகு கொஞ்சம் குறைந்திருக்கிறது, அவள் முகத்தில் எக்கச்சக்கமான கவலைகள் குடிகொண்டிருக்கிறது, உடைகள் அழுக்காய் தெரிகின்றன… பரவாயில்லை! எனக்காக இவ்வளவு காலம் காத்திருத்தல் என்பது தேய்மானம் இன்றி எப்படி சாத்தியம். பொறுத்துக்கொண்டான் நிதுஷன். தொலைந்த இவன் வாழ்க்கை திரும்பிவிட்டதாய் அத்தனை திருப்தி.. ஒரு பெரிய பெருமூச்சை அப்படியே விட்டுத்தள்ளினான்.

‘எழில், எங்கு இருந்தாய் இவ்வளவு காலம்..?’

‘அது பெரிய கதை நிது, திரும்பவும் என்னால் அழ முடியாது.. கண்ணீர் தீர்ந்துபோச்சி. சரி அத விடு, என்ன குடிக்கிறாய்..?’

‘எதுவும் வேண்டாம், என் தாகம் அடங்கிப்போச்சு! இப்பொழுது இருப்பதெல்லாம் வாழ்க்கைத்தாகம் மட்டுமே..!’ கூறி முடித்து எழிலின் கரத்தை பற்ற முயன்ற நிதுஷனிற்கு கடையின் பின்புறத்திலிருந்து வந்த ஒரு குரல் தோட்டாபோல் பாய்ந்தது செவியில்.

‘அம்மா… அம்மா…’

கூக்குரலிட்டபடி கடைக்குள்ளே ஓடிவந்து நின்றாள் ஒரு குட்டி பெண். ஒரு ஐந்து வயதிருக்கும் அவளிற்கு. குறு குறுவென நிதுஷனைப் பார்த்தாள். நிதுஷன் அப்படியே அருகிலிருந்த நாற்காலியில் திகைப்புற்று அமர்ந்துகொண்டான்..

‘அம்மா….!’

‘என்ன செல்லம்..?’

‘எண்ட நீல கலரு ஹெயர் பண்ட எங்க வச்சே?’

குட்டிப்பொண்ணு கேட்ட கேள்விக்கு எழிலரசி நிதுஷனை பார்த்தவண்ணமே பதில் சொன்னாள்..

‘அம்மா அத கவனமா எடுத்து வச்சிருக்கன்.. இப்ப கடையில ஆக்கள் அல்லா… நீங்க போய் விளையாடுங்க, அம்மா பேந்து வந்து எடுத்து தாறன்.. சரியா.. அச்சாப்பிள்ளை!’ கூறியபடி அந்த குட்டிப்பெண்ணின் தலையை தடவி அனுப்பி வைத்தாள் எழிலரசி.

நிதுஷன் உறைந்து போய்க்கொண்டிருந்தான். கண்கள் கனத்தன.. மூச்சு விட்டு விட்டே வந்துகொண்டிருந்தது. அவன் எழிலை நிமிர்ந்து பார்க்கக்கூட அவனால் முடியவில்லை.. அதுதான் இந்த எழில் இவனுடையது அல்ல என்று முடிவானபின்னும் எதற்கு அங்கு நின்றுகொண்டிருக்க வேண்டும்? நாற்காலியிலிருந்து எழுந்தான்… ஆரம்பத்திலிருந்த ஆயிரம் கேள்விகளில் இப்பொழுது இன்னும் கேட்கவேண்டியிருப்பது வெறும் ஒரே கேள்விதான்…

‘உங்க கணவன்….???????’

தலையை நிமிர்த்தி மெதுவாக கேட்டான் நிதுஷன். எழிலரசி தலையை குனிந்தபடி மௌனத்தையே பதிலளித்தாள்.. அவள் கண்ணிலிருந்து சில சொட்டுக்கள் தரையில் விழுந்து தெறித்தன.. அவள் சொல்லவேண்டிய, சொல்லாத பதிலை இவனாகவே கிரகித்துக்கொண்டான்.

‘இவள் கணவனும் ஆயிரம் ஆயிரம் கணவன்மாரைப்போல, என்னுடைய எழிலையும் அவள் குழந்தையையும் தனியாக தவிக்கவிட்டு இறுதிப்போரில் இறந்துபோயிருக்கவேண்டும்…!’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *