அம்மாவைப் பாக்கணும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 13,104 
 

(உண்மைக் கதை, அல்லது உண்மைக்கு மிக அருகிலான கதை)

“லேய்… ஒன் அம்மா சாவக் கெடக்குதுலே.. என்னதான் இருந்தாலும் பெற்றவ இல்லியா ? ஒரு வாட்டி வந்து பாக்கப்படாதா ? ” தங்கசுவாமி மாமாவின் குரலில் கவலை இருந்தது. எதுவுமே பேசாமல் போனை வைத்தான் வசந்தன்

பொதுவாகவே மாமாவின் பேச்சை அடுத்த வினாடியே மறந்து விட்டு வேலையைப் பாக்கப் போய்விடுவான். ஆனால் இன்று ஏனோ மனசு ரொம்பவே வலித்தது. ஊருக்கும் தனக்கும் உள்ள ஒரே உறவு தங்கசுவாமி மாமாவின் அவ்வப்போதைய அழைப்பு தான். சில வினாடிகள் நலம் விசாரித்தல், விஷயம் பகிர்தல் அதைத் தாண்டி அந்தப் பேச்சில் எதுவுமே இருக்காது. எப்போதும் வெகு சகஜமாய் இருக்கும் வசந்தனால் இன்றைக்கு அப்படி இருக்க முடியவில்லை. ஏதோ ஒன்று மனசில் பாரமாய் வந்து சம்மணம் போட்டு அமர்ந்து விட்டது. அம்மா சாகக் கிடக்குது – எனும் வார்த்தையாய் இருக்கலாம்.

ஏறக்குறைய பத்து வருஷம். அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு இந்த ஊருக்கு வந்தபின் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. ஊருடனான தொடர்பை விட ஆழமாய் அம்மாவுடனான தொப்புள் கொடி உறவே வலுவிழந்து போய்விட்டது. எப்போதாச்சும் மனசுக்குள் எழுகின்ற அம்மா ஆசையையும் மனைவி உடைத்துப் போடுவாள். அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஊரில் தம்பி உண்டு. சொத்து என்று பெருசாக ஒன்றும் இல்லை. சேத்த சொத்து என் பிள்ளைங்க தான் என்று அம்மா அடிக்கடி சொல்லும்.

ஒரு சண்டை. அந்தச் சண்டையிலிருந்து வசந்தன் வெளியே வரவேயில்லை. “நாடுகளுக்கெடையில நடக்கிற சண்டையே நாலு வாரத்துல தீருது, பேசி சமாதானமாயிடறாங்க. உனக்கென்னடே… விட்டுத் தொலைக்கலாமில்லையா ?” இப்படியெல்லாம் அவ்வப்போது சொல்லும் ஒரே நபரும் தங்கசுவாமி மாமா தான்.

“சார் எங்க போணும் ?” பஸ்ஸின் ஓர சீட்டில் அமர்ந்து நினைவுகளைக் கொறித்துக் கொண்டிருந்தவனை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது கண்டெக்டரின் குரல்.

தொடுவெட்டிக்கு ஒண்ணு குடுங்க…. ஆங்… போய் சேர எத்தற மணி ஆவும் ?

இப்போ மணி பத்தாவப் போவுது, காலைல ஒரு ஒம்பதரை பத்துக்குள்ள போவும்.

ஓ.. பத்து மணி ஆவுமோ ?

ஆவும். டிரைவரு இழுத்து பிடிச்சாருன்னா ஒரு ஒம்பது மணிக்கு போலாம். மழ வேற வருதில்லையா…. கரக்டா ஒண்ணும் சொல்ல முடியாது.

பேசிக்கொண்டே கண்டக்டர் கிழித்துக் கொடுத்த டிக்கெட்டை பாக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்டு மீண்டும் கண்மூடினான் வசந்தன்.

“மக்களே மழையில நனையாதே ஜலதோசம் பிடிக்கும்”

அம்மாவின் குரல். எந்த அம்மாவின் குரல் தான் குழந்தைகளின் குதூகல மழைக் குளியலை அனுமதித்திருக்கிறது ?. வசந்தனின் அம்மா ஞானம்மாவுக்கும் மழைக் கவலை ரொம்ப உண்டு. பிள்ளைகள் கண்டு கொள்வார்களா என்ன ? பட்டன் பிய்ந்து போன காக்கி டவுசரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வசந்தன் ஓடினான். வீட்டின் கூரையில் வழிந்து கொண்டிருந்த தண்ணீருக்கு இடையே ஒரு மழை தின்னும் குருவி போல பறந்து திரிந்தான். மழை ஓயும் வரை அம்மாவின் குரல் ஓயவில்லை. வசந்தனும் ஓடி ஓயவில்லை.

அன்றைய இரவில் வசந்தனுக்கு ஏறக்குறைய ஜுரம் வந்து விட்டது. குளிரில் விறைத்து விரல் நுனிகளிலெல்லாம் உலகப் படம் போல சுருக்கங்கள்.

வெள்ளியாவளை வைத்தியரிடம் வாங்கிய பொடி அம்மாவிடம் எப்பவும் இருக்கும். கரண்டியில் கொஞ்சம் பொடி போட்டு, அடுப்பில் காட்டி சூடாக்கினாள். அதை உள்ளங்கையில் கொட்டி, வசந்தனின் உச்சந்தலையில் இளம் சூட்டுடன் வைத்துத் தேய்த்தாள். வசந்தன் மண் அடுப்பின் பக்கவாட்டில் கைகளை வைத்து சூடு பிடித்துக் கொண்டிருந்தான். ‘சொன்னா கேக்க மாட்டினும், பொறவு இருமலும், தும்மலும் எல்லா எழவும் வரும்’. அம்மாவின் வாய் ஓயாது. கை வைத்தியம் பார்ப்பதை நிறுத்தவும் செய்யாது. பாத்திரத்தை எடுத்து சுக்கு காப்பி போட தயாரானாள். சுக்கு காப்பியும், சுடு கஞ்சியும் எல்லா நோயை விரட்டி விடும் என்பது அம்மாவின் நம்பிக்கை. அம்மாவின் நம்பிக்கை பொய்த்துப் போனதில்லை, பெரும்பாலும் ஊசி போடாமலேயே எல்லா நோயும் தீர்ந்து விடும். அப்படியும் மறு நாள் உடம்பு கொதித்தால் கம்பவுண்டரின் வீட்டுக்குப் போய் ஊசி போடுவது தான் ஒரே வழி.

சர்ப்பக் குளத்தில் குதித்து நீச்சலடிக்கும் போதும் இதே பல்லவி தான். சகதியில் புதையுண்டு கிடக்கும் சிப்பிப் புதையலை அள்ளி அள்ளி நேரம் போவதே தெரியாது. வசந்தனுக்கு ஒரு தம்பி உண்டு, செல்வன். இருவருமாக குளத்தில் குதித்தால் சிப்பி பொறுக்கியோ, டவலை முறுக்கிப் பிடித்து கயிலி மீன் பிடித்தோ மணிக்கணக்காய் தண்ணீர் பறவையாய் மூழ்கிக் கிடப்பார்கள். அப்போதும் அம்மாவின் வைத்தியம் தான் கை கொடுக்கும் “எப்பளும் வெள்ளத்தில தானே கெடக்குதிய.. நீங்க கெண்ட மீனா பொறக்க வேண்டியவங்கடே” என்று சிரித்துக் கொண்டே திட்டுவாள்.
ஒரே ஒரு அக்கா வாசந்தி. கிராமத்து நிறம். அப்படியே கிராமத்தின் அக்மார்க் நடை உடை பாவனைகள். ரொம்ப அமைதியானவள். ஊரில் அவளுக்கு பொய்ங்கி என்றொரு பட்டப் பெயரும் உண்டு. எந்த விஷயத்திலும் முன்னால் நிக்காமல் பின்னால் போய் நிற்பவர்களுக்கு வழங்கப்படும் கிராமத்துப் பட்டப் பெயர் அது.

பகல் முழுக்க குளத்தில் குதித்தும், மரத்தில் தொங்கியும் விளையாடினாலும் ராத்திரி அம்மாவின் அரவணைப்பு வேண்டும். அம்மாவின் இரண்டு பக்கங்களிலும் படுப்பது யார் என்று மூன்று பேருக்கும் நடக்கும் சண்டை தினசரி வழக்கு. கடைசியில் பொய்ங்கி அக்கா தான் விட்டுக் கொடுப்பாள். வசந்தனும், செல்வனும் ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டு அம்மாவின் சேலை முனையைப் பிடித்துக் கொண்டே தூங்கிப் போவார்கள். அம்மா அவர்களுடைய உச்சி மோந்து முத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பாள். பிறகு எப்போ தூங்குவாள் என்று தெரியாது, காலையில் தேயிலை வெள்ளம் போட்டு தான் பிள்ளைகளை எழுப்புவாள்.

மூணாவது பையன் பொறந்ததும் கண்ணை மூடின புருஷன் அடிக்கடி கண்களில் ஈரமாய் வழிவான். அதையெல்லாம் பிள்ளைகளிடம் அவள் காட்டியதில்லை. பனை ஓலையைக் கீறிப் பரம்பு செய்வதோ, கடவம் செய்வதோ, மொறம் செய்வதோ என அவளுடைய பொழுது கழியும். அதில் கிடைக்கின்ற சொற்ப வருமானம் தான் வறுமையை விரட்டும். முழுசா விரட்ட முடிந்ததில்லை. ஒரு ரெண்டு பர்லாங் தள்ளி எப்பவும் வறுமை இவர்களையே முறைச்சுப் பாத்துக் கொண்டு நிற்கும். நாலு நாள் ஞானம்மாள் காய்ச்சலில் படுத்தால் போதும், மறுபடியும் அது ஓடி வந்து திண்ணையில் வந்து குந்திக் கொள்ளும்.

“வண்டி பத்து நிமிஷம் நிக்கும், டீ..காபி சாப்டறவங்க சாப்டுங்க, டின்னர் சாப்டறவங்க சாப்டலாம்… இனிமே வண்டி வழியில நிக்காது” பஸ்ஸின் பக்கவாட்டில் அடித்துக் கொண்டே கிளீனர் பையன் போட்ட கத்தல் வசந்தனை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.

எந்த இடம் என்று தெரியவில்லை. ஒரே இருட்டு. டியூப் லைட் வெளிச்சத்தில் ஏதோ ஒரு பைபாஸ் ஹோட்டல். பசிக்கவில்லை. இறங்கினான். டீ கடையில் டி.எம்.எஸ் ஏதோ ஒரு பாட்டை உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்தார். அவர் மறைந்த பிறகு அந்தக் குரல் இன்னும் அதிகமாய் மனதைப் பிசைந்தது. பொட்டிக் கடையில் ஒரு கிங்க்ஸ் வாங்கி பற்ற வைத்தான். விரல்களிடையே புகை வழிய, இதயம் எரிந்து கொண்டிருந்தது. கண்ணில் கனல் இருந்தது.

“உனக்க பெண்டாட்டி சொன்னது சரியில்லடே” அம்மாவின் குற்றச்சாட்டு வசந்தனுக்கு எரிச்சல் மூட்டியது. கல்யாணம் ஆன நாளில் இருந்தே இந்த புராணம் தான். அடிக்கடி இப்படி ஏதாவது குற்றச்சாட்டை இருவரும் மாறி மாறி வைப்பது மனசுக்குள் இருந்த நிம்மதியை எல்லாம் குழி தோண்டிப் புதைப்பதாய் தோன்றியது அவனுக்கு.

“அம்மா.. உங்க சண்டைல என்ன இழுக்காதீங்கம்மா”

“ஏதோ கைவெஷம் குடுத்து பயல மயக்கிட்டா… இல்லங்கி அம்மன்னா அவனுக்கு உசுரு” அம்மா வருவோர் போவோரிடமெல்லாம் அம்மா இப்படிப் பேசுவது சர்வ சாதாரணம். உண்மையிலேயே அம்மாவுக்கு வசந்தன் என்றால் உயிர் தான். முதலில் ஒரு பெண்ணைப் பெற்றபின் அடுத்தது பையனா பொறக்கணுமே என தவம் கிடந்து பெற்ற பையன் இவன். நாலு பெண்ணு பொறந்தா நடைகல்லைப் பெயர்க்கும் என்று ஊரில் சொல்வார்கள். இவர்கள் இருக்கும் நிலமைக்கு நாலு தேவையில்லை, இரண்டு பெண் பொறந்தாலே அந்த நிலமை தான்.

ஆனால் கடவுள் கண் திறந்தார். பையனா பொறந்திருக்கான், இனிமே நமக்கு வசந்தம் தான் என்று தான் வசந்தன் என்று பெயரையும் வைத்தார்கள். சாப்பாட்டில் அவனுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் இருக்கும். எல்லாருக்கும் ஒரு துண்டு பொரிச்ச மீன் என்றால் இவனுக்கு ரெண்டு கிடைக்கும். சோற்றுக்குள் அப்பப்போ அவிச்ச முட்டை ஒளிச்சிருக்கும். அப்படி ஒரு தனி கவனம் அம்மாக்கு வசந்தன் மேலே.

அதனால் தான் சண்டையில் வசந்தன் தன் பக்கம் நின்று பேசவேன்டும் என அம்மாக்கு உள்ளூர ஆசை. அம்மா பக்கம் நின்றால் பொண்டாட்டியின் ஓயாத நச்சரிப்பில் நிம்மதியே போய்விடும் எனும் பயம் வசந்தனுக்கு.

அதனாலேயே அவன் அமைதி காத்தான். அந்த நாள் வரை. அந்த நாளில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது.

அந்த நாள் வராமலேயே போயிருக்கலாம். அந்த ஒரு சண்டை நிகழாமலேயே போயிருக்கலாம். அந்த ஒரு வார்த்தையை வசந்தன் சொல்லாமலேயே போயிருக்கலாம். வாழ்க்கை வேறு விதமாய் அமைந்திருக்கும். அந்த சண்டையின் முதல் பொறி என்ன என்பது இன்று வரை அவனுக்குத் தெரியவில்லை.

“கொம்பியே… பயலை மயக்கி என்னை கொல்லுலாண்ணா பாக்குதே” அம்மாவின் குரல் எகிறியது.

“நான் எதுக்கு உன்னை கொல்லுதேன். நீ காட்டுத வேலைக்கு கடவுளு உன்னை எடுத்தோண்டு போவாரு” வசந்தனின் மனைவி அதை விட எகிறினாள்.

“நான் என்ன காட்டினேன் ? எனக்க பிள்ளைக்கோட பேசவும் விட மாட்டேங்குதே, அவன் ஏதெங்கிலும் வாங்கி தாறதும் உனக்கு பொறுக்க மாட்டேங்குது. அவன நானாக்கும் பெற்றது. நீயில்லா”

“கல்யாணம் வர பாத்தா மதி. எப்பளும் பிள்ள பிள்ள, பிள்ளைக்க பைசான்னு இருக்காதே கெழவி”

“பெண்ணே கெளவின்னா விளிச்சுதே”

“பின்ன நீ குமரியா ? சாவப் போற கெளவி”

சண்டையின் உச்சஸ்தாயியில் வசந்தன் பொறுமை இழந்தான். தாயை நோக்கி விரல் சூண்டினான்.

“கள்ளி.. மிண்டாத கெடப்பியா. உன்னால எனக்க நிம்மதியெல்லாம் போச்சு. வயசானா போய்த் தொலைய வேண்டியது தானே. மனுஷனுக்கு உயிர வாங்கிட்டு ” ஆவேசத்தில் அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் குதித்தன.

அம்மா அதிர்ச்சியானாள். அவளுடைய இமைகள் மூடவில்லை. கண்ணில் கண்ணீர் வழிந்தது. அதன் பின் அம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மனைவி ஏதேதோ கத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அம்மா பேசவேயில்லை. அமைதியாய் உள்ளே போனாள்.

தகப்பன் போனபிறகு ஒரு வினாடி கூட பிள்ளைகளைப் பிரிந்து அவள் இருந்ததில்லை. அந்த வீடு, அந்த ஊர், அந்த எல்லை என்பது மட்டுமே அவளுக்குப் பிடித்திருந்தது. எப்போதும் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் கையால் ஏதேனும் வாங்கி சாப்பிடவேண்டும். அவர்களுடன் பேசிச் சிரிக்க வேண்டும். எப்போதும் அவர்கள் பக்கத்தில் இருக்க வேண்டும். பிள்ளைகள் மட்டுமே அவளுடைய உலகமாகிப் போயிருந்தது.

அந்த நாளுக்குப் பிறகு அம்மா எதுவும் பேசுவதில்லை. வசந்தனின் மனைவி பிடிவாதமாக எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறினாள். அப்போதும் அம்மா எதுவும் பேசவில்லை. வசந்தனும் ஏதும் பேசவில்லை. பிரச்சினை இல்லாமல் போனால் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு. ‘இனி அந்த கெளவி கிட்டே ஒரு வாக்கு பேசினா நான் அறுத்துட்டு போயிடுவேன்’ என்பது மனைவியின் மிரட்டலாய் இருந்தது.

அதற்குப் பிறகு தம்பியின் கல்யாணத்துக்கு ஒரு முறை சம்பிரதாயமாய் வந்ததுடன் சரி. அப்போதும் அம்மாவிடம் சரியாகப் பேசவில்லை. அம்மா வழக்கத்தை விட இன்னும் அதிகமான மௌனத்துக்குள்ளாகவே போய்விட்டாள்.

பஸ் இரவைக் கிழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. சாலைக் கோடுகளெல்லாம் பஸ் சக்கரத்தில் அடிபட்டு அலறி பின்னால் ஓடிக் கொண்டிருந்தன. சின்ன வயதில் அம்மாவோடு விளையாடிய, பேசிய, களித்த நிமிடங்களெல்லாம் அந்த இரவில் ஓடும் மின்மினிகளாய் வசந்தனின் மனசுக்குள் பறந்து திரிந்தன. தப்பு பண்ணிட்டோம் எனும் உணர்வு முதன் முதலாய் அவனுக்கு வந்தது.
அம்மாவைப் போய்ப் பார்க்கவேண்டும். பேசணும். நிறைய பேசணும். மன்னிப்பு கேக்கணும். அம்மாவோட காலடியில கொஞ்ச நேரம் இருக்கணும். கால் நோவுதாம்மா ன்னு கேட்டு கொஞ்சம் தைலம் தேச்சு விடணும். கட்டிப் புடிச்சு கொஞ்ச நேரம் அழணும். அம்மா பேசுவாங்களா, ‘சாரமில்லே மோனே.. நீ நல்லா இருக்கியா’ என்று கையைப் பிடிச்சு முத்தம் தருவாளா ? மனசில் கேள்விகளோடு கண்ணை மூடினான் வசந்தன். எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை.

ரெண்டு சொட்டு மழைத்தண்ணி முகத்தில் விழுந்தபோது தான் விழித்தான்.

வெளியே விடிந்திருந்தது. மெல்லிய சாரல் மழை. பஸ் கண்ணாடியை இழுத்துச் சாத்தினான். அது முழுமையாய் மூடாமல் முரண்டு பிடித்தது. சாரல் துளிகள் முகத்தில் தெறித்துக் கொண்டிருந்தன.
“மக்களே… நனையாதே ஜலதோஷம் பிடிக்கும்” அம்மா சொல்வது போல ஒரு பிரமை.

திடீரென செல்போன் ஒலித்தது.

தங்கஸ்வாமி மாமா தான் பேசினார்.

டேய்… தூக்கமா ?

இல்ல மாமா… அம்மாவைப் பாக்கலாம்ன்னு ஊருக்கு வந்திட்டிருக்கேன். நேற்று சொன்னீங்கல்லா.. அதுக்கப்புறம் வீட்ல இருக்க முடியல. அதான் சொல்லாம கொள்ளாம கெளம்பிட்டேன்.

ஓ.. வீட்டுக்கு வந்திட்டிருக்கியா…. ஒரு வாக்கு சொல்லியிருக்கலாமில்லியாடே… ம்ம்…. செரி… நீ… நீ இப்பம் எவ்வளவு தூரம் வந்திருக்கே ?

நான் தொடுவெட்டி வந்தேன் மாமா. ஒரு அர மணிக்கூர்ல வீட்ல இருப்பேன்.

செரி.. பஸ் ஒந்நும் பிடிக்க நிக்காதே. ஒரு ஆட்டோ பிடிச்சோண்டு சீக்கிரம் வா.

ம்…மாமா…. என்ன சொல்லுதீய ? வசந்தனின் குரல் நடுங்கியது.

ஆமாடே…. போச்சு… ஒரு ரெண்டு மணிநேரம் ஆச்சு. நீ வா.

வசந்தனின் தொண்டையில் சட்டென துக்கம் வந்து அடைத்தது. கண்ணீர் குபுக் என வழிந்தது. வாயைப் பொத்திக் கொண்டு, தலையைக் கவிழ்த்தான். பிடிவாதமில்லாமல் விமானத்திலிருந்து நழுவி விழுவது போல தோன்றியது.

வீடு துக்கத்தில் கிடந்தது.

சொந்த வீட்டை மரணம் சந்திக்கும்போது வரும் துயரம் சொல்ல முடியாதது. ஆட்கள் வந்தும், போயும், விசாரித்தும்… முற்றம் அமைதியான பாதச் சுவடுகளால் நிரம்பியது. முற்றத்தின் நடுவில் புதிய ஆடையில் அம்மா. அந்த முகத்தில் என்ன உணர்வு இருந்தது என்பதை வசந்தனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அம்மாவின் கால்களைத் தொட்டபோது விரல் நடுங்கியது.

மாலையில் எடுத்தாகிவிட்டது. சுடுகாட்டுப் பயணத்தோடு எல்லாம் முடிந்து விட்டது.

வசந்தனின் மனதில் இயலாமையும் ஒன்றும் செய்ய முடியாத குற்ற உணர்ச்சியும், அழுகையும் ஓயாமல் அடித்துக் கொண்டே இருந்தது. இந்தத் தவறை எப்படித் திருத்துவது. வழியே இல்லை. வாய்ப்புகள் இருந்தபோது மனம் இறங்கி வரவில்லை. மனம் கசிந்தபோது வாய்ப்பு இல்லை. அன்பையும் மன்னிப்பையும் தள்ளிப் போடக் கூடாது. அடுத்த வினாடில என்ன நடக்கும்ன்னு கடவுளுக்கு மட்டும் தான் தெரியும். வசந்தன் கலங்கினான். மரண வீட்டின் ஓலத்தையும் ஒப்பாரியையும் விடக் கனமானது அந்த இரவு நேர மவுனம் என்பது வசந்தனுக்கு உறைத்தது.

தூறல் இன்னும் முழுமையாய் விடவில்லை. வானம் விட்டு விட்டு அழுது கொண்டிருந்தது.

“அப்பப்போ வந்து பாத்திருக்கலாம் இல்லியாடே. அம்மா ஒரு வாரமா இழுத்துட்டு கெடக்குது. உன் பேரை சொல்லிட்டு மேல பாத்துச்சு, அப்போ கண்ணீரு பொல பொலன்னு வந்துது. அதான் மனசு பொறுக்காம உனக்கு போன் பண்ணினேன்.”

தங்கசுவாமி மாமா திண்ணையில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகள் மனசை இன்னும் கனமாக்கிக் கொண்டிருந்தன. செல்வன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். தலையைக் கவிழ்ந்திருந்தான்.

நீ வருவேன்னு எனக்குத் தெரியாதுடே… ஒரு போன் அடிச்சு சொல்லியிருக்கலாம் இல்லியா ? – செல்வன் தான் கேட்டான்.

ஒண்ணும் தோணலடே, தங்கசுவாமி மாமா சொன்னதும் நான் கெளம்பி வந்துட்டேன். மாமா கிட்டே வருவேன்னும் சொல்லல. அம்மா சாவக் கிடக்குதுன்னு சொன்னதுக்கு அப்புறம் இருப்பு கொள்ளல. நான் குடுத்து வெச்சது அத்தற தான். ஒரிக்கலாச்சும் அம்மாவை வந்து பாத்திருக்கணும். செய்யாம போயிட்டேன்டே. வசந்தனின் குரல் இடறியது.

உன்ன பாக்கணும்ன்னு அம்மா சொல்லிச்சு. நீ வரும்ன்னு தெரிஞ்சிருந்தா கொஞ்சம் வெயிட் பண்ணியிருப்பேன்.

வெயிட் பண்னியிருப்பியா ? என்னடே சொல்லுதே.

ஆமாண்ணா.. நேற்று நைட்டு தான் அம்மாக்கு தலைக்கு தண்ணி ஊத்தினோம்.

வசந்தனை சட்டென அதிர்ச்சி அடித்தது. திடுக்கிட்டுத் தலையை நிமிர்த்தான். சாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும் வயதானவர்களை நள்ளிரவில் உட்கார வைத்து தலையில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றி விடுவதுண்டு. அப்போது அந்தக் குளிரிலேயே இரவில் உயிர் பிரிந்து விடும். ஒருவகைக் கருணைக் கொலை !

அம்மக்கி தண்ணி ஊத்தினியா ? என்னடே சொல்லுதே… வசந்தனின் கண்களில் திட்டுத் திட்டாய் அதிர்ச்சி தெரிந்தது.

ஆமாண்ணா… நீ மாமாட்டயும் வருவேன்னு சொல்லல. மாமா நிறைய தடவை உனக்கு இதுக்கு மின்னேயும் போன் செஞ்சிருக்காரு. நீ வரல. அது போல நீ இப்பவும் வரமாட்டேன்னு நெனச்சேன்டே. அம்மா படுத கஷ்டத்த என்னால பாத்து சகிக்க முடியல. எழும்பவும் முடியாம, பேசவும் முடியாம இழுத்தோண்டு கெடந்துது. எப்படியெல்லாம் நம்மள பாத்த அம்மா. இப்படி கஷ்டப்படறதைப் பாக்க முடியலே. நீ வருவேன்னு தெரியாதுன்னே.. நீ வருவேன்னு தெரியாது…. ஒரு வாக்கு சொல்லியிருக்கலாமில்லியா…. செல்வன் கண்கள் கலங்கின.

வசந்தன் நிலைகுலைந்து போயிருந்தான். அவனுடைய பார்வை உறைந்து போயிருந்தது. கால்கள் நடுங்கின.

இன்னும் நிற்காத குளிர் சாரல் அவ்வப்போது தெறித்துக் கொண்டிருந்தது.

“மக்களே மழையில நனையாதே.. குளிர் பிடிச்சுரும்” அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்தது. மனசுக்குள்ளிருந்து.

– பெப்ரவரி 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *