அம்மாவுக்கு மறுமணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 7,977 
 

திடீரன்று கண் விழித்த வசந்தா பக்கத்து அறையில் விளக்கெரிவதை பார்த்தாள். மணி என்ன இருக்கும், கண்ணை கசக்கிவிட்டு எதிரில் உள்ள கடிகாரத்தை பார்க்க நாலு மணியை காட்டியது. நாலு மணிக்கு கிருபா எழுந்துவிட்டானா? போய் பார்ப்போம் என்று முடிவு செய்து கட்டிலை விட்டு மெல்ல எழுந்து, விளக்கை போடாமல் பக்கத்து அறைக்கு சென்றாள். கதவு ஒருக்களித்து திறந்திருந்தது.மெல்ல கதவை திறந்தவள் கிருபா என்று கூப்பிட்டு உள்ளே நுழைந்தாள். கட்டிலின் அருகில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்து எதையோ தீவிரமாக படித்துக்கொண்டிருந்த கிருபா வாம்மா என்று அழைத்தான்.

நேரத்துலயே எழுந்துட்டயா? மெல்ல அருகில் சென்று அவன் தலையை கோதினாள் ஒரு முக்கியமான “செம்” இருக்கு, அதைய தயார் பண்ணிட்டு இருக்கேன். நீ எப்பம்மா எந்திருச்ச? இப்பத்தான், உன் ரூம்ல விளக்கெரியறத பார்த்தேன், அதான் வந்தேன் காலையில எந்திருச்சு பண்ணக்கூடாதா? அன்புடன் கேட்டாள், இல்லம்மா, பகல்ல இந்த அளவுக்கு கான்ஸன்ரேசன் கிடைக்கறதில்ல, அடுத்த வருசம் நான் பாரின் போறதுக்கு இந்த அசைன்மெண்ட் ரொம்ப முக்கியம், அதான் படிச்சுட்டு இருக்கேன், நீ போய் படும்மா, நான் வேணா உனக்கு காப்பி போட்டு எடுத்து வரட்டுமா, கேட்டவளிடம் வேண்டாம்மா, காலையில ஆறு மணிக்கு கொடுத்தியின்னா போதும். இப்ப போய் படும்மா, சரி உன் பெட்ல படுத்துக்கட்டுமா, கேட்டவளை உற்றுப்பார்த்து அம்மா நீ எப்பவுமே என் பக்கத்துல இருக்கணும்னு நினைக்காதே, அடுத்த வருசம் நான் உன்னைய
விட்டு அமெரிக்கா போயிட்டேன்னா ரொம்ப சிரமப்படுவே, நிம்மதியா போய் உன் படுக்கையில படு. இப்படி பேசியவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் அவன் தலையை கோதி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவள் அறைக்கு வந்து படுத்தாள். நினைவுகள் மெல்ல விரிந்தன

கிருபா அப்படியே அவன் அப்பாவைப்போல, எதிலும் நிதானம், தெளிவு, ஆழ்ந்த யோசனை. கிருபாவின் பத்து வயதில் ராஜேஸ் தன்னை விட்டு இறந்தபோது டுமாறிவிட்டாள்.நல்ல படிப்பு, உத்தியோகம் என்று இருந்தாலும் அவனைப்போல ஒரு துணை இனி கிடைக்குமா? அதிலும் ராஜேஸ் அவளை ஒரு நண்பனைப்போல நடத்தியவன்.

எதிலும் நிதானம், அவளிடம் அனைத்து விசயங்களையும் அளாவுவது, இவளாவது சில நேரங்களில் கோபம் வர கத்துவாள். ராஜேஸ் அலட்டிக்கொள்ளவே மாட்டான். அவளை சிறிது நேரம் பேச விட்டுவிடுவான். இவள் கத்தி ஓய்ந்த பின் மெல்ல இவன் தரப்பு நியாயத்தை சொல்லும்போது அவன் சொல்வதுதான் சரியாக இருந்திருக்கும். தன்னுடைய கோபத்தை நினைத்து பின்னர் வருத்தப்படுவாள். இப்படி இருந்தவன் ஒரு நாள் காய்ச்சல் என்று சொல்லி படுத்தான் இவள் சாதாரண காய்ச்சலாய் இருக்கும் என நினைத்தவள் பக்கத்தில் உள்ள கிளினிக்கு கூட்டிச்சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி வந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கச்சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பினாள். அலுவலகத்திலிருந்து இரு முறை போன் செய்து எப்படி இருக்கிறது, என்று கேட்டதற்கு நன்றாக இருப்பதாக கூறியவன் இவள் மாலை வீடு வந்தபோது உடல் நெருப்பென கொதித்துக்கொண்டிருந்தது.கிருபாவையும் கூட்டிக்கொண்டு அவசர அவசரமாய் தன் அண்ணனுக்கு போன் செய்துவிட்டு, பிரபலமான ஒரு மருத்துமனைக்கு கொண்டு போனாள். மறு நாள் விடிவதற்குள் மருத்துவமனை அவள் தலையில் ஒரு இடியை இறக்கியது. அருகில் அவள் அண்ணன் சுரேஸ் இருந்ததால் அவளை ஆதுரத்துடன் அணைத்து ஆக வேண்டிய காரியங்களை அனைத்தும் செய்து முடித்தார்.

அவளை தன்னுடன் வந்து இருக்கும்படி எவ்வளவோ முறை சொல்லியும் அவள் நிதர்சனமாய் மறுத்துவிட்டாள், உள்ளூரில் தான் இருக்கிறோம், நீ எப்பொழுது வேண்டுமானாலும் என்னை வந்து பார்த்துக்கொள், அதே போல் நானும் உன்னை வந்து அடிக்கடி பார்க்கிறன் என்று சொல்லி அவன் வாயை அடைத்துவிட்டாள்

அதன் பின் ஏழு வருடங்கள் ஓடிவிட்டன. கிருபாவின் வளர்ச்சி அவளுக்கு ராஜேஸ் கூட இருப்பது போலவே இருந்தது. ராஜேஸை போலவே அவன் உருவமும்,செயல்களும் இருந்ததால் அவளால் ராஜேசின் பிரிவை ஓரளவு சமாளிக்க முடிந்தது. அவன் அடுத்த வருடம் பட்ட படிப்புக்கு அமெரிக்கா சென்ற பின்னால் தன்னால் சமாளிக்க முடியுமா? நினைக்கும் போதே அவளுக்கு பயம் உள்ளத்தில் ஊறியது.

எதிர்பார்த்தது போல கிருபா நல்ல மதிப்பெண்களுடன் தேறி அவன் லட்சியமான அமெரிக்கா பயணத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறான்.ஒரு நாள் இவள் அலுவலகம் முடிந்து வீடு வந்த போது அங்கு இவளின் அண்ணா சுரேஸ், கிருபாவுடன் பேசிக்கொண்டிருந்தார். வாண்ணா எப்ப வந்தே? இவள் விசாரித்தபடியே உள்ளே வந்து தன் கைப்பையை வைத்து விட்டு, பாத்ரூம் சென்று முகம் கை கால் கழுவிக்கொண்டு வந்தவள், இரு டீ போடறேன் என்று சமையலறைக்கு நுழைய முயன்றாள்.

வேண்டாம்மா இப்பத்தான் நானும் கிருபாவும் டீ போட்டு சாப்பிட்டுட்டு உனக்கு பிளாஸ்குல வச்சிருக்கோம், எடுத்து குடிச்சிட்டு எங்கூட கொஞ்சம் வெளிய வா, என்றவனை இவள் வித்தியாசமாய் பார்க்க அரை மணி நேரத்துல வந்திடலாம் என்று மீண்டும் சொல்ல சரி என்று பிளாஸ்கை திறந்து டீ யை குடித்து முடித்து, கிருபாவிடம் சொல்லிவிட்டு அண்ணனுடன் கிளம்பினாள்.

கார் அமைதியாய் ஓடிக்கொண்டிருந்தது.எதுவும் பேசாமல் ஓட்டி வந்த அண்ணணின் முகத்தை கவனித்த வசந்தா அண்ணன் ஏதோ சொல்ல நினைக்கிறார் என தெரிந்தது,அது என்னவென்று இவளுக்கு அறியும் ஆவலில் மெல்ல செருமினாள், ஏதோ பேசனும்னு சொன்ன, இப்ப பேசாமல் வந்தா எப்படி? அதுதான் எப்படி சொலறதுன்னு யோசிச்சுட்டிருக்கேன்,கிருபா ஒரு மாசத்துக்கு முன்னாடியே எங்கிட்ட பேசிட்டான், நான் தான் அதை எப்படி உன் கிட்ட சொல்றதுன்னூ யோசிச்சுட்டிருக்கேன்.கிருபா ஒரு மாசத்துக்கு முன்னாடி அண்ணாகிட்ட பேசிட்டானா,அப்படி என்ன விசயமாயிருக்கும், அவளுக்கு பல சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. எதுவானாலும் எங்கிட்ட சொல்லு, அதெப்படி எங்கிட்ட சொல்லாம உன் கிட்ட வந்து சொல்ற அளவுக்கு அப்படி என்ன ரகசியம் உனக்கும் அவனுக்கும்?

அது உன் சம்பந்தப்பட்ட விசயங்கறதுனால அவன் அதை எங்கிட்ட சொன்னான், நானும் நீ அதை எப்படி எடுத்துக்குவீயோ அப்படீன்னு தயங்கறேன். ராஜேஸ் போன பின்னாடி எதுவும் எனக்கு பெரிய “ஷாக்”ஆன நியூசா தெரியாது, அதனால தைரியமா சொல்லு, என்றவளிடம் “கிருபா உன்னை திரும்ப கல்யாணம் பண்ணிக்க சொல்றான்.” இந்த செய்தி அவளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது, பின் மெதுவாக அதிலிருந்து மீண்டவள் “இந்த பெரிய மனுசன் எப்பத்துலயிருந்து இந்த மாதிரியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிருக்கான்” குரலில் வருத்தம் தோய்ந்த கிண்டல். தயவு செய்து புரிஞ்சுக்கோ, அவன் அடுத்த இரண்டு மாசத்துல அமெரிக்கா போயிட்டான்னா, திரும்ப வர எப்படியும் ஐஞ்சு, ஆறு வருசம் ஆயிடும், அதுவரை நீ இங்க தனியா என்ன பண்ணுவே, அப்பாவும் போயி, நானும் அம்மாவை விட்டு போயிட்டா அவ்ங்க என்ன பண்ணுவாங்க அப்படீங்கறதுதான் அவன் ஆதங்கம், தயவு செய்து அவனோட எண்ணத்தை புரிஞ்சுக்கோ. அண்ணனின் குரலிலும் ஆதங்கம், உனக்கு ஒண்ணும் வயசாயிடலியே, கடைசி காலத்துல உனக்கு ஒரு துணை வேணும்னு அவன் ஆசைப்படறான், நானும் அதையேதான் நினைக்கிறேன். நீ நல்லா யோசிச்சுட்டு சொன்னா போதும். சொல்ல வந்ததை சொல்லிவிட்ட திருப்தி தெரிந்தது.

இரவு மூவரும் அமைதியாய் சாப்பிட்டனர். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து சுரேஷ் விடை பெற்றுச் சென்றார். கிருபா அம்மாவிடம் “குட் நைட்” சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு சென்றான். இருவரின் மனதிலும் என்ன உள்ளது என்பதை இருவருமே வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.

ஒரு வாரம் அமைதியாய் ஒடியது, ஒரு நாள் அலுவலகம் கிளம்புமுன் கிருபாவிடம் இன்னைக்கு மதியமே லீவு போட்டுட்டு வர்றேன், நாம கொஞ்சம் வெளிய போயிட்டு வரணும், ரெடியாயிரு, என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

மூன்று மணி அளவில் காரில் வசந்தா காரை ஓட்டிக்கொண்டிருக்க, மெளனமாய் உட்கார்ந்திருந்தான் கிருபா. கார் ஒரு ஆசிரமத்துக்குள் நுழைந்து வலது புறம் சிறிது தூரம் ஓடி நின்றது. வசந்தா கீழே இறங்கி ‘கிருபா வா’ என்னுடன் என்று உள்ளே அழைத்துச்சென்றாள். முன் வாசல் வழியாக உள்ளே நுழைந்து, அங்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் தன்னுடைய பெயரையும் விலாசத்தையும் சொல்ல, அந்தப்பெண் உள்ளே சென்றவள். ஐந்து நிமிடத்தில் இவர்களை உள்ளே அழைக்க, உள்ளே வயதான் இருவர் நின்று கொண்டிருந்தனர். வசந்தாவைப்பார்த்து மெல்ல புன்னகைத்து வாருங்கள் என்னுடன் என்று உள்ளே கூட்டிச் சென்றார்கள்.

ஒரு அறையில் ஐந்து வயது பெண் குழந்தை ஒன்று சிரத்தையாய் ஏதோ செய்து கொண்டிருந்த்து இவர்களை பார்த்தவுடன் ஓடி வந்து அந்த பெரியவர்களின் அருகில் நின்று கொண்டது.

வசந்தா கிருபாவிடம் “இவள் உனக்கு தங்கையாகப்போகிறாள்” சட்டப்படி இந்தக்குழந்தயை நாம் தத்தெடுத்துக்கொள்ள்ப்போகிறோம்.நீ அமெரிக்கா சென்றவுடன் இந்த அம்மாவும் உன் தங்கையும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்ற நினைவு வைத்துக்கொண்டு அடிக்கடி வந்து போய்க்கொண்டிரு.
அம்மாவின் வார்த்தையில் தெரிந்தது கண்டிப்பா, பாசமா, புரியவில்லை. அம்மா இனி தனியாக இல்லை என்ற எண்ணமே அவன் மனதை நிறைவு கொள்ள வைத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *