அம்மாவுக்காக ஒரு பொய்

 

கங்கா நசுங்கின குட்டியூண்டு அலுமினியக் கிண்ணத்தில் எண்ணையுடன் கோவிலுக்குள் நுழையும்போது கூட்டம் அடி, பிடி என்று முண்டத் தொடங்கிவிட்டது.

தூரத்தில் வரும்போதே காரிலிருந்து அந்த மாமி, பெண், பிள்ளையுடன் இறங்கி உள்ளே போவதைப் பார்த்துவிட்டு வேகவேகமாய் வந்ததால் அவளுக்கு லேசாய் மூச்சிரைத்தது.

இந்த மாமியும் கங்காவும் அனேகமாய் தினமும் ஒரே சமயத்தில்தான் கோவிலுக்கு வருகிறார்கள். நாற்பத்தைந்து நாட்கள் விடாமல் கோவிலுக்கு வருகிறேன் என்று இந்த மாமி பிரார்த்தித் துக் கொண்டிருக்கிறாளாம்; குருக்களிடம், கூட்டம் இல்லாத ஒருநாள் பேசினபோது, இவள் அருகில் நின்று கேட்டாள்.

எதுக்காகப் பிரார்த்தனை?

முதல் முறையாய் அன்று மாமியை நன்றாய் முழுசாய்ப் பார்த்தவளுக்கு, இந்த மாமிக்கு என்ன குறை இப்படி வேண்டிக் கொள்ள என்றே தோன்றியது.

மாமி நல்ல குண்டு. அழித்தால் தாராளமாய் நாலு, ஐந்து பெண்களைச் சாதாரண சைஸில் பண்ணலாம். நல்ல சிகப்பு. இந்தப் பணக்காரர்களுக்கு மட்டும் எங்கேயிருந்துதான் இப்படி யொரு சிகப்பும், தளதளப்பும் வருகிறதோ! பால், பழம், வெண்ணெயில் முங்கி எழுவதாலா? அது நிஜம் என்றால் தன் சக்திக்கும் மீறி இரண்டு வருஷ காலமாய் அம்மா தினம் ராத்திரி பசும்பால் வாங்கிக் குடிக்க வைப்பதற்கு, என் முகரக்கட்டையில் கடுகத்தனையாவது மாற்றம் தெரிய வேணுமே! ஒரு மண்ணையும் காணோமே! அப்படியானால் இது பால், தயிரால் வருவது இல்லையா! ஸ்வபாவமாகவே பரம்பரை ரத்தத்தில் ஊறி வருவதோ! இருக்கும், இருக்கும். அம்மாவின் தேய்ஞ்ச மூஞ்சிக்கு என் மாதிரிப் பெண் பிறக்காமல், இந்த மாமியோடு தினம் வருகிறாளே அந்த அழகு ராணி மாதிரியா ஜனிப்பாள்?

முதல் நாள் மாமியோடு அந்தப் பெண்ணைப் பார்த்ததும் கங்கா திடுக்கிட்டுத்தான் போனாள். இது என்ன கண்ணைக் கூச வைக்கிற அழகு என்று கிட்டத்தில் போய் அந்த வாளிப்பைத் தடவித்தடவிப் பார்க்க வேண்டும்போல இருந்தது. இந்த மெழுகுத் தோலும், பூரிப்பும் நிஜந்தானா என்று தொட்டுத்தொட்டுப் பார்க்க வேண்டும்போல இருந்தது.

அன்றைக்கும்கூட இவள் ‘அடுத்த ஜன்மத்திலாவது நான் இந்த மாதிரிப் பணக்காரர்களுக்குப் பெண்ணாய்ப் பிறக்கணும், சினிமா ஸ்டார் மாதிரி பார்க்கறவர் கண்ணைப் பறிக்கிற அழகோட பிறக்கணும்’ என்று அடிக்கடி ஆசைப்படுவதுபோல, நினைத்துக்கொண்டாள்.

இந்தப் பெண் யார்? பெண்ணா, மாட்டுப்பெண்ணா? இல்லை, உறவுப்பெண்ணா ?

மாட்டுப்பெண்ணாக இருக்கமுடியாது. காலில் மெட்டி யில்லை . கழுத்தில் தடிமனாய் இருப்பது வெறும் செயினா, இல்லை தாலிச்சரடா?

கங்காவுக்குக் குழப்பமாய் இருந்தது. நாள் பூராவும் இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள்.

அந்த மாமிக்கும் அந்தப் பெண்ணுக்கும் உறவு என்ன என்று தெரிந்துவிட்டால் நிம்மதியாக இருக்கும்போலத் தோன்றியது.

நாலைந்து நாட்கள் தவித்தவளுக்கு, அன்றைக்கு அதிசயமாய் அவர்களோடு சேர்ந்து வந்த இளைஞனைப் பார்த்ததும் அம்மாடி என்றிருந்தது.

இளைஞன் பெண்ணின் சாயலாகவே இருந்தான். இருபத்திரண்டு, இருபத்திமூணு வயசு இருக்கும்.

ஆண்பிள்ளைக்கு இத்தனை அழகு எதுக்கு? சன்னதியில் ஓரமாய், தூண் மறைவில் நின்றவண்ணம் அவனையே பார்த்த கங்காவுக்கு, ரொம்பப் பொறாமையாக இருந்தது.

அப்போ, அண்ணா தங்கைதான். நிச்சயம். அம்மா சாயலா இல்லையே! ஒருவேளை ரெண்டு பேரும் அப்பாவைக் கொண் டிருக்காளோ?

அப்புறம், அடிக்கடி அவனைப்பற்றி நினைக்கத் தொடங்கினாள் கங்கா.

ஒருநாள் இவளைப் பார்த்து அவன் புன்னகைப்பதாய் நினைத்தாள்.

ஒருநாள் கிட்டத்தில் வந்து நின்றதாய் நினைத்தாள்.

தினம்தினம் மனசு போனபடி கற்பனை, தமிழ் சினிமாவில் வருகிற மாதிரி. அதுவும் நேற்று, நினைப்பு கொஞ்சம் துணிச்சலாக நீண்டுதான் போனது.

பிராகாரத்தில் சுற்றும்போது, ‘உன் தெய்வபக்தி எனக்குப் பிடிச்சிருக்கு; உன் சாந்தமான முகம் எனக்குப் பிடிச்சிருக்கு; என்ன நாகரிகம், என்ன பணம்! அதெல்லாம் பிடிக்கவேயில்லை’ என்று சொல்லிக் கையைப் பிடித்து அப்புறம்… அப்புறம்…

கற்பனை ஜோராய் இருந்தது.

யாருக்கும் தெரியாமல் முகத்தைத் தலைகாணியில் புதைத்துக்கொண்டு மனசு கிளுகிளுத்ததை அனுபவிக்கும்போது நன்றாய்த்தான் இருந்தது.

இப்போது கோவிலில் தனக்கு முன்னால் போய்க்கொண் டிருந்தவர்களைக் கடந்து சென்று, அவன் முகத்தை நன்றாய்ப் பார்க்கவேண்டும் என்று அரிப்பெடுக்க, கூட்டத்தில் புகுந்து வேகமாய் முதல் பிராகாரத்தை அடைந்து கங்கா நின்றாள்.

குண்டு மாமி மெதுவாய்த்தான் நடப்பார். அதுவும் இன்று கூட்டம் வேறு.

இவள் பிராகாரத்தில் ஒரு தூண் பக்கத்தில் நின்ற இரண்டு நிமிஷங்களில் அவர்கள் வந்தனர். முதல் நாள் கற்பனை மனசைக் கிச்சுகிச்சு மூட்ட ஆவலுடன் அவனை நிமிர்ந்து பார்த்த கங்கா வுக்கு ஏமாற்றமே எழுந்தது.

இவளை அவன் தாண்டிச் சென்றபோது, இவள் ஒருத்தி நிற்கும் உணர்வே இல்லாமல் இவள்மேல் ஒரு கணம்கூடத் தன் கண்களை நிற்கவிடாமல் நகர்ந்ததோடு போகாமல், கொஞ்சம் முன்னால் அர்ச்சனைத் தட்டோடு சென்றுகொண்டிருந்த சாந்தியை மட்டும் அவன் அடிக்கடித் திருட்டுத்தனமாய்த் தேடித் தேடிப் பார்ப்பதைக் கண்டபோது, கிளுகிளுப்பு மறைந்து வெறுப்பு தோன்றியது.

தான் அழகா இருக்கோம்னு திமிர். பணக்காரன்ங்கற கொழுப்பு.

திடீர்னு பெரியம்மை வார்த்து, இவன் அழகெல்லாம் போயிட்டா என்ன செய்வான்?

நினைச்ச நினைப்பில்லாம இவன் அப்பாவோட பணம் இருக்கற பாங்க் திவாலாகி, கம்பெனி எரிஞ்சு போய், இவாத்துல இருக்கற சாமானெல்லாம் திருட்டுப் போயிட்டால் என்ன பண்ணுவான்?

அம்மை வடுக்கள் நிறைந்த முகத்துடன் இவனும் இவளைப் போலவே சாதாரண பழைய வாயில் புடவையில், நசுங்கின எண்ணெய்க் கிண்ணத்தோடு அந்தப் பெண்ணும் கோவிலுக்கு வருவதாய் மனதில் நினைத்துப் பார்த்தாள் கங்கா.

ரொம்பத் திருப்தியாய் இருந்தது. அந்தத் திருப்தியோடு முகத்தைத் திருப்பிக்கொண்டு நகர்ந்தாள்.

முதல் பிராகாரத்தைத் தாண்டும்போது அந்த நாலு பசங்களும் தூரத்தில் ஒரு பக்கமாய் இருப்பதை கங்கா பார்த்தாள்.

அவர்கள் பேர்கூட இவளுக்குத் தெரியும்.

சுப்புணி, ராஜு, பாலு… அப்புறம் அந்த உசரமானவன் பேர் என்ன? ஆ… வெங்கிட்டு…..

இந்த நாலுக்கும் உருப்படியாய் வேலைவெட்டி ஒண்ணும் கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி.யோ, பி.யூ.ஸி.யோ கோட் அடிச்சிட்டு டைப்பிங் கத்துக்கறேன், அது இதுன்னு நாலும் கோவில்காளை மாதிரி நாலைஞ்சு வருஷமாய்ச் சுத்தறதுகள்.

சாயங்காலமானா பாண்ணு நாலு பேரும் கோவிலுக்கு வரது மட்டும் தப்பறதில்லை. பக்தி காட்டாறாய்ப் பெருகி ஓடற மாதிரி.

நெத்தியில் பளிச்சினு விபூதியும் குங்குமமும் இட்டுண்டுட்டா, நல்ல பிள்ளைகள்னு எல்லாரும் நினைச்சுடுவாளா?

போற வர பொண்களைப் பார்க்க வேண்டியது; அவாளெப் பத்திக் கமென்ட் அடிக்க வேண்டியது. தூ… இதே வேலை இந்தப் பொறுக்கிப் பசங்களுக்கு.

முன்பெல்லாம் இவளுக்கு இந்த இளவட்டங்கள்மேல் இத்தனை வெறுப்பு இல்லைதான். தன்னையும், தன் பெண்மையையும், மற்ற பெண்களை ரசிக்கிற மாதிரி திருட்டுத்தனமாய் ரசிப்பார்கள் என்ற எண்ணத்தால் இவர்களைச் சந்திக்க நேரிடும் போதெல்லாம் லேசாய்த் தனக்குத்தானே புன்னகைப்பதும், தாவணி திட்டமாய் இருக்கிறதா என்று கவனிப்பதும், நடை அழகாய் இருக்கவேண்டும் என்ற நினைப்பும் அவளிடம் இருக்கவே செய்தன.

ஆனால், ஒரு தரம், ‘தேங்காய்த் துருவலகா போறதுடா’ என்று ராஜு, இவள் அவர்களைத் தாண்டிப் போகும்போது முணுமுணுத்தது காதில் விழுந்ததிலிருந்துதான் கங்காவுக்கு இவர்களைக் கண்டால் ஆகாமல் போயிற்று.

தேங்காய்த் துருவலகாவா? படவா, ராஸ்கல்… எத்தனை தைரியம் இருந்தா அப்படிப் பேசுவான்?

என் பல் ரெண்டும் லேசாய்த் தூக்கி இருக்கறதுங்கறதால தேங்காய்த் துருவலகானு சொல்லலாமா?

அன்றைக்குக் கண்ணாடி முன் நின்று தன் முகத்தைத் தானே ஊன்றிக் கவனித்துவிட்டு ரொம்ப நாழிகை குளியலறையில் அழுது தீர்த்தாள்.

இப்போதும் இந்தச் சனியன்களிடம் வம்பு எதற்கு என்று போகும் வழியில் அவர்கள் நின்ற பக்கமாய்ப் போகாமல் அப்பிரதட்சணமாய்ச் சென்று உள்ளே நுழைந்தாள்.

இரண்டாம் பிராகாரத்தில் ஜகஜகவென்று ஜனங்கள்.

நல்லவேளையாய் ஆங்காங்கு ஃபேன் போட்டிருப்பது ரொம்ப சௌகரியமாய் இருக்கிறது.

ஒரு ஃபேனின் கீழ் வியர்வை தணிய கங்கா கொஞ்சம் நின்றாள். அண்ணாந்து ஃபேனை எதேச்சையாய்ப் பார்த்தபோது அதில் ஏற்கனவே அடிக்கடி பார்த்திருந்த ‘உபயம்–சங்கரன்’ என்ற வார்த்தைகள் பளிச்சென்று தெரிந்தன.

இதுதான் அந்த சாந்தியோட திமிருக்குக் காரணம்.

அவ அப்பா சங்கரன் ரெண்டு ஃபேனை உபயமாய் வாங்கி மாட்டிட்டதாலோ என்னவோ, இந்தக் கோவிலே தனக்குச் சொந்தம் மாதிரி நடந்துக்கறா.

ஐயே… என்ன ஜம்பம் வேண்டியிருக்கு!

கங்காவும் சாந்தியும் ஒன்றாய்ப் பள்ளியில் படித்து, ஒரு காலத்தில் நெருங்கின சினேகிதிகளாய் இருந்தவர்கள்தாம்.

இவள் எஸ்.எஸ்.எல்.ஸி. படித்து வீட்டோடு அமர்ந்து, அவள் மேலே கல்லூரியில் படிக்கப் போன பிறகு எல்லாம் மாறிவிட்டது.

போன வருஷம் சாந்தி படிப்பை முடித்துவிட்டாள். அவள் தகப்பனார் புளியங்கொம்பாய் மாப்பிள்ளை பிடிக்க வலை வீசுகிறாராம்! ‘என் பெண்ணுக்கு என்னடா… ராஜாத்தியாட்டம் இருக்கா! பட்டப்படிப்பு வேற! சீர்செனத்தி எத்தனை பண்ணனும் சொல்லு? நான் ரெடி’ என்கிறாராம். அமெரிக்க மாப்பிள்ளை யாய் வேணும் என்கிறாராம்.

பெரீ….ய அமெரிக்கா! யாருக்கு வேணும் அமெரிக்காவும் ஆப்பிரிக்காவும்! அங்கிருக்கவனெல்லாம் ஏற்கனவே ஒரு வெள்ளைக்காரியைக் கல்யாணம் பண்ணிண்டுட்டு இங்கே ரெண்டாவதாப் பண்ணிக்கறானாம். அங்க இழுத்துண்டு போய் வேலைக்காரியாட்டம் நடத்தறானாம்! ஒரு கதையிலேகூடப் படிச்சேனே!

கங்கா நெருக்கியடித்துக்கொண்டு கர்ப்பக்கிருஹத்தை நெருங்கி, முன்னால் இருந்த பாவைவிளக்கை அடைந்தபோது, முதல் வரிசையில் உயரமாய் சாந்தி நிற்பது தெரிந்தது.

தலையைத் திருப்பின சாந்தி இவளைப் பார்த்துப் புன்னகைக்கிற மாதிரி இருந்தது.

கங்கா பதிலுக்குச் சிரிக்கவில்லை .

ஆமா… இவ பெரிய ராணி…. இவ சிரிச்சா உடனேயே நா புளகாங்கிதமடையணுமாக்கும்!

திடீரென்று சாந்தி அமெரிக்கா பையனைக் கல்யாணம் பண்ணிக்கொள்வது போலவும், அவன் இவளை அங்கு கூட்டிப் போய் வெள்ளைக்கார மனைவியிடம் ‘இந்தியாவிலிருந்து உனக்கு ஒரு வேலைக்காரி அழைத்து வந்திருக்கிறேன்’ என்று சொல்வதாக வும் மனசில் கற்பனை விரிந்தது.

வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றியதைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள் கங்கா.

பாவைவிளக்கை நெருங்கிக் கிண்ணத்தில் இருந்த இரண்டு முட்டை எண்ணையை அதில் கவிழ்த்தபோது, வெள்ளிக்கிண்ணம் நிறைய மணல் மணலாய் மஞ்சள் பசும் நெய்யை ஒரு கை, விளக்கில் கொட்டியது.

கிண்ணத்தைத் தொடர்ந்து கையை கங்கா பார்த்தாள். ‘நான் பணக்காரக் கை’ என்று அது தம்பட்டம் அடித்தது.

நாலு தங்க வளையல்கள், நடுவில் பச்சையும் முத்தும் பதித்த கல்வளையல். கை மொழுமொழுவென்று உருண்டையாய் வளையல்கள் போடுவதற்கு ஏற்றதாய் இருந்தது.

பட்டையாய், ஒரு ரப்பர் வளையல் மாட்டினால் முழங்கை வரைக்கும் போகும் தன் கையைச் சட்டென்று கங்கா இழுத்துக் கொண்டாள்.

ஏதோ பேப்பரிலே படிச்சேனே, காதுலே இருந்த தோட்டுக்கு ஆசைப்பட்டு காதையே அறுத்துட்டதாய்… அந்த மாதிரி இவ கை வளையலுக்கு மோகிச்சுண்டு ஒருத்தன் கையையே வெட்டிட்டா? நொண்டிக்கை… இப்படிப் பத்து பேர் பார்க்கிறபடி வெள்ளிக் கிண்ணிலே நெய் எடுத்துண்டு வந்து பீத்திக்க முடியாது…..

“முன்னாலே இருக்கறவா செத்த நகருங்கோ. அப்படியே நின்னுண்டு இருந்தா எப்படி?”

பின்னால் பாட்டி ஒருத்தி முணுமுணுக்கக் கூட்டம் கொஞ்சம் கலைந்து, மறுபடி முட்டியது.

பெண்கள் இந்தப் பக்கம், ஆண்கள் அந்தப் பக்கம்.

கை காலை இப்படி அப்படி அசைக்க முடியாதபடி பாட்டி களும், மாமிகளும், சின்னப் பெண்களும் நெரிக்கவே, மெள்ள நகர்ந்து பக்கவாட்டு வாசல் வழியாக கங்கா வெளியில் வந்தாள்.

வியர்வையில் கசகசத்த உடம்போடு சட்டையும் புடவையும் தெப்பலாய் நனைந்து ஒட்டிக்கொண்டன.

கம்மென்று ஏதோ மணம்.

பார்வையைத் தூக்கிப் பார்த்தபோது, தலை நிறைய மல்லிகைப்பூவும், நகையும், பட்டுப்புடவையும் வாய் நிறையச் சிரிப்புமாய் நிறைய பெண்கள்.

ஏதாவது ஜான்வாஸமா?

இருக்கும், தை மாசம் பிறந்துடுத்தோன்னோ , இனிமே இங்கே தினம் பட்டுப்புடவைக் கூட்டம் அமர்க்களப்படும்.

ஒவ்வொருத்தியின் புடவையையும் அலங்காரத்தையும் – ஊன்றிப் பார்த்தாள் கங்கா.

அந்தச் செங்கல் நிற உடம்பும் கறுப்புப் பட்டை ஜரிகை பார்டரும் கொண்ட புடவை நன்னா இருக்கு; உடுத்திண்டு இருக்கறவ மூஞ்சிதான் அடிப்பட்ட தகர டப்பா மாதிரி இருக்கு.

வெளிர் நீலத்துல அந்தப் புடவையைப் பாரேன்! ஜரிகை எடுபட்லியே! இப்படியா ஒருத்தி பணத்தைக் கொட்டி அசடு வழியப் புடவை வாங்குவா?

கங்கா வெளிப் பிராகாரத்தை நோக்கி நடந்தாள்.

ஆட்டி ஆட்டிக்கொண்டு மாமி ஒருத்தி அத்தனைப் பேரை யும் விரட்டிக்கொண்டிருந்தாள்.

“மாப்பிள்ளை டிரெஸ் எங்கேடா? “காருக்கு ஜோடனை ஆயிடுத்தா?”

“அப்பா எங்கே? மாப்பிள்ளைக்கு வேண்டியதைக் கவனிச் சாளா? அவர் பாட்டுக்கு மசமசனு நிக்கப் போறார்…ம்…ஆகட்டும்…”

லங்கிணி மாமி போலருக்கே!

பாவம் மாமா… இவகிட்ட எத்தனை வருஷமா மாட்டிண்டு முழிக்கறாரோ?

கூட்டத்தில் இடிபடாமல் ஒதுங்கி ஒதுங்கி கங்கா வாசலுக்கு வந்தாள்.

கார் ஒன்று தடபுடலாய் அலங்கரித்துக்கொண்டு சற்றுத் தள்ளி நின்றது.

இதில் உட்கார்ந்து ஜோக்காய் சவாரி செய்யப்போகும் மாப்பிள்ளையைப் பார்க்கலியே என்ற நினைப்புடன் கங்கா தெருவில் இறங்கி நடந்தாள்.

நன்றாய் இருட்டத் தொடங்கிவிட்டது. அம்மா கவலைப்படுவாளே? நடையை எட்டிப் போட்டாள்.

பத்து நிமிஷம் வேகமாய் நடந்தால் கங்காவின் வீடு இருக்கும் சந்து வந்துவிடும்.

பெரிய வீதியில் போய், வண்டிக்காரன் தெருவில் திரும்பினால் அந்தச் சந்து.

சந்தில் இறங்கி, ஒண்டுக் குடித்தனங்கள் திணிக்கப்பட்ட நெருக்கமான வீடுகளில் நாலைத் தாண்டி ஐந்தாவதில் ஏறினாள் கங்கா .

வாசற் திண்ணையிலேயே அம்மா, காமுப்பாட்டியோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

கங்கா கையில் எண்ணெய்க் கிண்ணத்துடன் வருவதைக் கண்டு அம்மா கேட்டாள்:

“ஏண்டி கங்கா, கோவில்லே ரொம்பக் கூட்டமா? அதான் இத்தனை நாழியாயிடுத்தா? இன்னிக்கு அம்மன் அலங்காரம் ரொம்ப நன்னா இருக்குன்னு அம்புலு மாமி சொன்னாளே… அப்படி என்ன விசேஷம்?”

அம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்ல முனைந்தபோது தான் அம்பாளைத் தரிசனமே பண்ணாமல், நிமிர்ந்து ஒருமுறை கூடப் பார்க்காமல் வந்துவிட்டது நெஞ்சில் சொரேர் என்றது.

அம்மாவுக்கு மூட்டுவாதம், கோவிலுக்குச் செல்வது கஷ்டம் என்பது ஞாபகத்துக்கு வர, கங்கா மெதுவாய் பதில் சொன்னாள்.

“ம்… சந்தனக்காப்பும், மடிசார் புடவையுமா அம்பாளைப் பார்த்துண்டே இருக்கலாம் போல இருந்ததும்மா… ரொம்ப அழகு!”

“ஆயிரந்தான் சொல்லு. நம்ப கங்கா மாதிரி பொண்ணு இந்தக் காலத்துலே ரொம்ப அபூர்வம்! அததுகள் சினிமா, டிராமான்னு மேல் தாவணி உடம்புல நிக்காம அலைஞ்சுண்டு, முன்னுச்சி மயிரைக் கத்தரிச்சுண்டு அலையற இந்த நாள்லே பதவிசா, குனிஞ்ச தலை நிமிராம, தெனம் அம்மன் கோவிலுக்கு எண்ணை எடுத்துண்டு போய் தரிசனம் பண்ணற இந்த அடக்கமான புத்தி வேற யாருக்கு வரும்? அந்த அம்பாள்தான் சுருக்கக் கண்ணைத் திறந்து பார்த்து இவ கொணத்துக்கு ஏத்த மாப்பிள்ளையா கொண்டு வந்து நிறுத்தணும்… என்னமோ போ… பணங்காசு, அழகு இல்லாட்டா என்ன? கொணம்னா முக்கியம்! அதுக்கு கங்கா கால்லே மத்தப் பொண்களக் கட்டின்னா அடிக்கணும்?”

காமுப்பாட்டி பேசுவதைக் கேட்டுக்கொண்டே படி ஏறி, திண்ணையைத் தாண்டி ரேழியில் கால் வைத்தாள் கங்கா.

- குங்குமம், 1979 

தொடர்புடைய சிறுகதைகள்
"அம்மா..." "என்ன இந்துக் குட்டீ?" "என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?" "ஒரு க்ளயண்டோட முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு-அதுக்காக பாயிண்ட்ஸ் தயாரிச்சிகிட்டு இருக்கேன்..என்ன வேணும்மா?" "இல்லேம்மா.. வந்து..." "சொல்லு டார்லிங், அம்மாக்கு நாழியாவுது பாரு..." "நாளன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே மம்மி... நீங்களும், டாடியும் வரணும் மம்மீ.." "நாளன்னிக்கா? ஏழாம் தேதியா? ...
மேலும் கதையை படிக்க...
அவள் விடிகாலையில் கண்விழித்தபோது ஆரஞ்சு நிற சூரியன் ஜன்னல் பக்கத்தில் நின்று உள்ளே வரலாமா என்று கேட்டுக்கொண்டிருந்தான். காலைக் காற்று இதமாக இருந்தது. எழுந்திருக்க மனமில்லாததுபோல அவள் திரும்ப கண்களை மூடிக்கொண்டாள். ட்ருவ்வி..ட்ருவ்வி...ட்ருவ்வி......... நிசப்தமான அந்த நிமிஷத்தில் திடும்மென ஒரு பறவையின் குரல் பெரிசாய் கேட்க அவள் ...
மேலும் கதையை படிக்க...
சியாமா-எங்கள் நாய்-இரண்டு நாட்களாய் சரியாய்ச் சாப்பிடுவதில்லை; மந்தமாய் இருக்கிறாள். டாக்டரிடம் கொண்டு காட்டினோம். 'நத்திங் டூ ஓர்ரி.. டிவர்ம் பண்ணுகிறேன்... சரியாயிடும்' என்றவர், "எக்ஸசைஸ் கொஞ்சம் கொடுத்துப் பாருங்களேன்; உடம்பு சுறுசுறுப்பாகும்" என்று சொன்னார். என்ன தேகப் பயிற்சி கொடுப்பது! பந்து விட்டெறிந்த பார்த்தேன்-இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
ஸரஸு எச்சில் இட்டுக் கொண்டிருந்தபோது அப்பா உள்ளே நுழைந்து சமையல்கட்டு வாசப்படியில் தலையை வைத்துப் படுத்திருந்த அம்மாவிடம் வந்து நின்றார். பாதி எச்சில் இடுகையில் கையை எடுத்தாலோ தலையை நிமிர்த்தினாலோ அம்மாவுக்குக் கோபம் வந்துவிடும். “எச்சில் இடறப்போ பராக்கு என்னடீ?” என்பாள். “அந்தக் காலத்துலே நாங்கள்ளாம் ...
மேலும் கதையை படிக்க...
அவளுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதென்றால் ரொம்பப் பிரியம். கல்யாணமாகுமுன் பிறந்த வீட்டில் காலேஜ் போகும் கன்னியாக இருந்த நாட்களில் அவளுக்கு எண்ணெய் தேய்த்துவிட என்று ஒரு பெண்மணியை அம்மா நியமித்திருந்தாள். கஸ்தூரி - அதான் அந்தப் பெண்மணி - அடாது மழைபெய்தாலும் ...
மேலும் கதையை படிக்க...
தாய்
அணில்கள்
வாக்
ஜனனம் இல்லாத ஆசைகள்
ட்ரங்கால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)