அம்மாவின் நிழல்!

 

‘பொண்ணுடா அப்படியே உங்க அம்மா மாதிரி மூக்கும் முழியுமா என்னடா ஆனந்த் சத்தமே இல்லே..பொண்ணு பிறந்திட்டேனு கன்னத்திலே கையை வச்சி உக்காந்திட்டியா?’ பாட்டியின் குரலில் வழிந்த சந்தோஷத்தை அப்படியே நகல் எடுத்துக் கொள்ள முடியாமல் செல் போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

பொண்ணு பிறந்ததில் அவனுக்கு ஒன்றும் வருத்தமில்லை. ஆனால் என்ன காரணம் கொண்டும் தன் அம்மாவின் சாயலில் இருக்கக்கூடாது. இந்த நினைப்பே அவனை என்னவோ செய்தது.

ஆபீஸ் வேலையில் ஒவ்வொரு பை·லாக திறந்து மூடிக்கொண்டிருந்தான். பாட்டி சொல்கிற மாதிரி குழந்தை அவன் அம்மாவின் சாயலில் இருந்தால் என்ன செய்வது? அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமொ அதுவே எப்போதும் எதை நினைத்தாலும் முந்திக்கொண்டு வந்து நிற்பது மாதிரி அம்மாவின் நினைவுகள் அவனை அலைக்கழித்தது. அம்மாவின் நினைவாக இருந்த எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிய வீசி எறிந்தப் பின் எங்கிருந்து வந்திருக்கிறது இந்த அம்மாவின்
நிழல்?

தூக்கம் பிடிக்காமல் புரண்டு படுக்கும் போது லைட்டைப் போடாமல் இரவில் நடக்கும் போது அவனை துரத்திக் கொண்டிருந்த அம்மாவின் நிழல் இப்போது நிழலாடைகளை விலக்கிக்கொண்டு நிஜங்களின் பயமுறுத்தலுடன் ரத்தமும் சதையுமாக அவனருகில்.

குழந்தையைப் பார்க்க போகவே பயமாக இருந்தது. பிறந்த குழந்தை இன்னார் சாயலில்தான் இருக்கிறது என்று அவரவர் தன் விருப்பம் போல சொல்வது அவனுக்குத் தெரிந்ததுதான்.இதை எல்லாம் பெரிது படுத்திக்கொள்ள கூடாது என்று அவன் மூலை பல முனைகளிலிருந்து அவனுக்குச் செய்திகள் அனுப்பிக்கொண்டு இருந்தது.

அவன் அம்மா அவன் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொள்கிறாள். அவள் கைகள் தன் தலைமுடிகளைக் கோதிவிடும் முன்பே அவன் படக்கென தன் தலையை அவள் மடியிலிருந்து எடுத்துக் கொள்கிறான். அவன் தலையணை கட்டிலிலிருந்து கீழே விழுகிறது. தூக்கம் கலைத்து அம்மாவின் நிழல் அவனைத் துரத்துகிறது.

**
எப்படித்தான் இந்த மாதிரி நேரங்களில் மட்டும் இந்தச் சனியன் பிடித்தது பிசாசு மாதிரி முழித்துக்கொள்கிறதோ தெரியவில்லை. லைட்டைப் போடாமல் எழுந்து போய் என்ன வேண்டும் என்று கேட்டாள்.

அம்மா பாத்ரூமுக்கு என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு அவன் நின்றான்.

என்னடா.. பாத்ரூமுக்கு.?. எல்லாம் பெட்லேயே இருந்து தொலைச்சப்பிறகு ..கழத்தி தொலையேண்டா அவன் அரை டிராயரைக் கழட்டிவிட்டு அசையில் தொங்கிக்கொண்டிருந்த மற்றொரு டிராயரை மாட்டிவிட்டாள். ஒரமாக நனைந்திருந்த போர்வையை எடுத்து ஒதுக்கி வைத்து நனையாத பகுதியை விரித்து அவனுக்கு மூடிவிட்டாள். லைட்டுப்போடும்மா, பயம்மா இருக்கு என்று அவன் சொல்லவும் அவளுக்கு கோபம் வந்தது. நடுராத்திரியில் செய்வதையும் செய்துட்டு என்று கத்தினாள்.அவன் தொடையைப் பிடித்து
திருகிவிட்டாள்.

உண்மையிலெயே அவனுக்குப் பயமாக இருந்தது. அம்மா பக்கத்தில் படுக்கும் நாட்களில் மட்டும் அவன் போர்வையை ஈரப்படுத்துவதில்லை. நிம்மதியாக தூங்கி எந்திரிப்பான். ஏந்தான் இந்த சரவணன் மாமா வீட்டுக்கு வருகிறாரோ அவர் வருகிற நாளில் எல்லாம் அம்மா அவனுடம் படுத்துக்கொள்வதில்லை. அவன் வீட்டுப்பாடம் எழுத உட்கார்ந்தாலும் எல்லாம் நாளைக்கு எழுதிக்கலாம்டா, ஞாயிற்றுக்கிழமை லீவுதானே, இப்போவே ராத்திரி முழிச்சி உட்கார்ந்து கிறுக்கிவச்சிட்டு நாளைக்குப் பூரா வெளியில் சுத்தனுமா என்று கத்துவாள்.

கண்களை இறுக்கமூடிக்கொண்டு அவன் மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான். அவள் அந்த அறையிலிருந்து எழுந்து போவது அந்த இருட்டிலும் அவனுக்குத் தெரிந்தது. என்ன தான் போர்வையை இழுத்து மூடிக்கொண்டாலும் காதுகளை அவனால் மூடிக்கொள்ள முடியவில்லை. பக்கத்து அறையின் கதவுகள் அடைபடும் சத்தம் அவன் முகத்தில் அறைவது மாதிரி. அவன் வளர வளர அவன் அம்மா அவனிடமிருந்து ரொம்பவே விலகிப்போய்விட்டதாக அவன் நினைத்தான். அவன் சின்னப்பிள்ளளையாக இருக்கும் போதெல்லாம் வீட்டுக்கு வருகிற போகிறவர்களிடமெல்லாம் ‘இவனுக்காகத்தான் நான் வாழ்ந்துகிட்டிருக்கேன்’என்று இவனை இழுத்து மடியில் வைத்துக்கொண்டு அழுவாள். வந்திருப்பவர்களும் சேர்ந்து அழுகிற மாதிரி உட்கார்ந்திருப்பார்கள். ‘தைரியமா இரு.. உங்கப்பா படிக்க வச்ச படிப்பு இருக்கு, மாசச்சம்பளமிருக்கு, யாருக்கும் நீ சுமையா இருக்கப்போறதில்லே.. ‘ என்று ஆறுதல் சொல்வார்கள்.

‘அம்மாவை நீ அழமா பாத்துக்கனும் ராசா’ என்று அவர்கள் சொல்லும்போது இவனுக்குப் பெருமையாக இருக்கும். ஒரு பெரிய மனித தோரணை வந்துவிடும்.’ சரி’ என்று தலையாட்டுவான்.

நாள் ஆக ஆக அம்மா ஏன் இப்படி மாறிப்போனாள் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. சரவணன் மாமா வீட்டுக்கு வர ஆரம்பித்தப் பிறகுதான் அம்மா தன்னிடமிருந்து விலகிப்போனாளா என்று இப்போதும் மண்டையைப் போட்டுக்குழப்பிக்கொண்டது தான் மிச்சம். பாட்டி தாத்தா வந்து சண்டை போட்டதும் சரவணன் மாமாவை கல்யாணம் பண்ணிக்கோ, பிள்ளையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னதும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அதற்கும் மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.
அதன் பின் சரவணன் மாமா வீட்டுக்கு வருவது நின்று போனது என்றாலும் அவள் கோபமும் கத்தலும் மட்டும் அதிகமானது.

அவன் கல்லூரி நாட்கள் ரொம்பவும் கொடுமையானவை. படுக்கையிலிருந்து அவன் எழுந்தவுடனேயே சில நாட்களில் ஆரம்பித்துவிடும் அவள் ரகளை.

‘சம்பளத்தை அப்படியே தான் தந்திருக்கேன், என்னை அடிக்காதீங்க’ என்று அடி பொறுக்க முடியாமல் அலறுவது போலிருக்கும்
அவள் அழுகை..

அப்போதெல்லாம் பாட்டி வந்து ஏதாவது சமாதானம் சொல்லி அம்மாவை இழுத்துக்கொண்டு போவாள்.

அவனுக்குக் கோபம் வரும். எத்தனைத் தடவை சொல்லியிருக்கேன் பாட்டி, நான் காலேஜ் போற வரைக்கும் அந்த ரூம் கதவைத் திறக்காதேனு. கதவில் பூட்டுப்போட்டு அடைத்து வைத்திருந்தாலும் அவன் அம்மாவின் நிழல் மரக்கிளையைப் போல நீண்டு வந்து அவன் பூமியைத் தொடும். அப்படித் தொடுகிற ஒவ்வொரு கணமும் பூமியிலிருந்து பிய்த்துக்கொண்டு பிரபஞ்சத்தில் எங்காவது விழுந்து தொலைக்கும் எண்ணத்தில் அவன் மனம் படபடக்கும்.

அம்மாவின் நிழல் அவனருகில் தலைமுடி முன்பக்கம் தொங்க நின்ற அந்தக் காட்சி. அவன் அலறல் கேட்டு பாட்டி ஓடிவந்து நிர்வாண நிஜத்தை அம்மாவின் நிழல் புடவைக்குள் சுருட்டிக்கொண்டு இருட்டுக்குள் ஓடினாள்.

‘இங்கே பாரும்மா .. சிகிரெட்டால் சுட்டு வச்சிருக்கிறதை..’ அம்மா அழுதுக்கொண்டே சொல்வதும் அவளுடன் சேர்ந்து பாட்டியும் அழ.. அந்த இரவுதான் அவன் அம்மாவைப் பார்த்த கடைசி இரவாக இருந்தது. அதன்பின் அவனை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல படிப்பு பாதிக்கும் என்று ஹாஸ்டலில் இருக்கச் சொல்லிவிட்டாள் பாட்டி. அம்மா இறப்புக்கு அவன் வரவில்லை. பாட்டியும் அவனைக் கட்டாயம் வரச்சொல்லி செண்டிமெண்டலாக பயமுறுத்தவில்லை.

**

அம்மாவைப் பற்றி எதுவும் அவன் யாரிடமும் கேட்க விரும்பவில்லை. மறக்க நினைப்பதைப் பற்றி தூண்டித் துருவி கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள நினைப்பது முட்டாள்தனமாகப்பட்டது. எப்போதுமே அவன் அம்மாவின் நிழலிருந்து ஒதுங்கியே இருக்க விரும்பினான். குழந்தையைப் பார்க்கப்போகும் நாளை அதற்காகவே தள்ளிப்போட்டான். பொங்கல் வருகிறது, கட்டாயம் வா என்றாள் பாட்டி. அவன் மனைவிக்கு வேறு அவன் உடனே பார்க்க வரவில்லை என்று வருத்தம். எவ்வளவு நாட்கள் இப்படி பாட்டி சொன்ன ஒரு வார்த்தைக்குப் பயந்து கொண்டு தன் குழந்தையைப் பார்க்காலிருக்க முடியும்?

பொங்கலுக்கு வீட்டுக்குப் போனவுடன் மனசில் நிறைய தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தொட்டிலை ஒதுக்கி குழந்தையைப் பார்த்தான். குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது. தூக்கத்தில் சிரித்தது. அந்தச் சிரிப்பைப் பார்க்கும் போது அவன் மனம் சிலிர்த்தது. குழந்தையைத் தூக்கவோ தொடவோ அச்சமாக இருந்தது.

பொங்கலுக்கு பாட்டி வீட்டில் பழைய சமான்களை எல்லாம் எடுத்து ஒதுக்கிக்கொண்டிருந்தாள். பரணில் இருந்த பழைய பெட்டி, சூட்கேஸ் என்று நிறைய பழையன கழிதல் செய்வதில் அவன் பாட்டிக்கு உதவியாக இருக்கும் போதுதான் அந்த போட்டோ அவன் பார்வையில் பட்டது. போட்டோ ஸ்டுடியோவில் எடுத்தப் படம். அவன் அம்மா அப்பாவின் திருமண புகைப்படம். மாலையும் கழுத்துமாக அவன் அம்மா அருகில் நிற்பது அவந்தானா? அப்படியே அவனைப் போலவே நிற்கும் அவனுடைய உருவத்தில் மங்கியக் கோடுகளாய் தெரிந்தது அவன் அப்பாவின் நிஜம்..

வேகமாக எழுந்து போய் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். ஒரு மில்லிமீட்டர் கூட பிசகாமல் அப்படியே அதே முகம் .. அவன் பிம்பத்தை ஏறி மிதித்துச் சிதைக்கிறது அம்மாவின் நிழல்.

இனம் புரியாத வேதனையும் வலியும் அவனைப் புரட்டி எடுத்தது. தொட்டிலில் குழந்தைச் சிணுங்குகிறது. மெதுவாக தொட்டிலை விலக்கி குழந்தையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டான். அதன் பட்டு விரல்களைத் தொட்டுப் பார்த்தான். மொட்டின் இதழ்களை விரித்து தொட்டுச் செல்லும் தென்றலைப் போல அவன் கைகள் குழந்தையின் விரல்களை விரித்து உள்ளங்கையைத் தொட்டுப்பார்த்தன.
அந்தத் தொடுதலில் அம்மாவின் நிழல். அவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிழலுக்குள் கரைந்து கொண்டிருந்தான்.

- ஜனவரி 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
"டெலிபோன் அடிச்சிட்டே இருக்கு இந்த வீட்லே எல்லோரும் என்ன செத்து தொலைச்சிட்டீங்களா? " கத்தினான் பிரம்மநாயகம். மெதுவாக வந்து எட்டிப்பார்த்தாள் செல்வி. "அங்க என்னத்தைப் பிடிங்கிட்டு இருக்கே.. உன் சாதிசனமாத்தான் இருக்கும். என்னடீ பாக்கே .. ராத்திரி கூட நிம்மதியா பேப்பர் படிக்க இந்த ...
மேலும் கதையை படிக்க...
இரவு நேர கால்செண்டர்கள் குறித்து ஓர் அலசல் ரிப்போர்ட் எழுதியதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. பிறகென்ன? அதில் உலகமயமாதலை 'வாங்கு வாங்கு' என்று போட்டு வாங்கிவிட்டேன். அதுமட்டுமல்ல இப்போதெல்லாம் உலகமயமாதல், பெண்ணியம் என்கிற மாதிரி வெய்டேஜ்ஜான சமாச்சாரங்களைப் பற்றி எழுதும்போதெல்லாம் அதில் கட்டாயம் ...
மேலும் கதையை படிக்க...
கதைக்கரு: இன்றும் வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் மன்சாம் மால்வா பகுதிகளில், அரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் இந்த நவயுக திரெளபதிகளின் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஞானபீட விருதுபெற்ற பேராசிரியர் குர்தியல் சிங் (Gurdial Singh) ...
மேலும் கதையை படிக்க...
மும்பை நகரமே வெளிச்சத்தில் நனைந்துக்கிடந்தது. வரப்போகும் தீபாவளிக்கு இது வெறும் ஒத்திகைதான் என்று அங்கங்கே வெடிக்கும் வெடிச்சத்தங்கள் பறைச்சாற்றிக்கொண்டிருந்தன.ஸ்டேஷனில் யார்க்கையில் பார்த்தாலும் தீபாவளிப்பரிசுப் பெட்டிகள். அவரவர் உத்தியோகத்துக்கு ஏற்ப பரிசுகளின் ரகங்களும் தரங்களும் வேறுபட்டது. தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்கும் வங்கியில் கடைநிலை ...
மேலும் கதையை படிக்க...
இளையராஜாவைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவளுக்கு அவன் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவளுக்குச் சங்கீதம் பற்றி எல்லாம் சொல்லிக்கொள்கிற மாதிரி எதுவும் தெரியாது. எப்போதாவது தனியாக இருக்கும்போது நல்ல பாட்டு கேட்கப்பிடிக்கும். அதுவும் நாமே இந்தப் பாட்டு கேட்க்கலாம் என்று முடிவு செய்து ...
மேலும் கதையை படிக்க...
கரை சேராதக் கலங்கள்!
இந்த வாரம் ராசிபலன்!
புதிய ஆரம்பங்கள்!
தீபாவளிப் பரிசு
உடையும் புல்லாங்குழல்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW