அம்மாபிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 7,622 
 

பூங்கோதையினருகே சிறியதொரு மரக்கட்டிலில் கண்ணை மூடிப் படுத்திருந்தது அவனது முதல் சிசு.

`அது இனி கண்ணைத் திறந்தாலும் ஒன்றுதான், மூடினாலும் ஒன்றுதான்!’ என்று நினைக்கும்போதே ஏதோ நெஞ்சை அடைத்துக்கொண்டது.

“ஒங்களுக்கு நான் என்ன கொறை வெச்சேன்? இப்படிப் பண்ணிட்டீங்களே!” யாராவது ஏதாவது கேட்டால், ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசும் பூங்கோதை அன்றுதான் முதன்முதலாக அவ்வளவு ஆக்ரோஷத்துடன், சுயமாகப் பேசினாள். அதுவும் கணவனிடமே!

அவளுக்கு விடையளிக்கும் திறனின்றி, தங்கராசு தலைகுனிந்தபடி, ஆஸ்பத்திரி அறையைவிட்டு வெளியேறினான்.

அறைக்கு வெளியே நின்றிருந்த கோமளம் கண்ணில் வேதனையுடன் வெளிநடந்த மகனைப் பார்த்தாள்.

`ஒன்னை எவ்வளவு ஒசத்தியா நினைச்சிருந்தேன்! சீ!’ அவள் மனதில் நினைத்தது அவனுக்குக் கேட்டது.

மனைவி இருக்கையிலேயே கேடுகெட்ட பெண்களை தேடிப் போயிருக்கிறான்!

பத்து வயதுவரை தன் மடியிலேயே வைத்துக் கொஞ்சிய மகன்!

“ஒங்கப்பாமாதிரி நீயும் என்னை விட்டுட்டுப் போயிடாதே, தங்கம்!” சிறுவயதில் அம்மா ஓயாது அரற்றியது அவனுக்குப் புரியத்தான் இல்லை. அப்பா அவர்களுடன்தானே இருந்தார்?

குழப்பத்தினூடே, தனக்கு ஒவ்வொன்றையும் பார்த்துச் செய்யும் அம்மாவின்மேல் பரிதாபம் உண்டாயிற்று. அவளுடைய கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டான்.

எல்லாரும் கடவுளுக்குப் படையல் செய்தால், அம்மாவுக்கு அவன்தான் தெய்வம். அவள் எது சமைத்தாலும், அவன் சாப்பிட்டுப் பார்த்ததும், `பிடிச்சிருக்கா தங்கம்?’ என்று பல முறை கேட்டு, தன் சம்மதத்தைக் காட்ட அவன் தலையாட்டினால்தான் இன்னொரு முறை அதைச் செய்வாள்.

ஒரு முறை, ஏதோ நூதனமான உணவுப் பண்டத்தைத் தயாரித்து, அதை இவன், `நல்லாவேயில்லையே!’ என்று சொல்லிவிட, அவள் துடித்ததைப் பார்த்து, இனி அம்மா மனம் நோக எதையும் சொல்லக்கூடாது என்று நிச்சயித்துக்கொண்டான்.

அன்றையிலிருந்து, எது சொல்வதற்கு முன்பும், `நான் இப்படிச் சொன்னால், அம்மா எப்படி எடுத்துக்கொள்வாள்?’ என்று யோசித்துப் பேச ஆரம்பித்தான். அதனால் பேசுவதே அபூர்வமாகிப் போயிற்று.

தட்டில் அம்மா என்ன போட்டாலும், எவ்வளவு போட்டாலும், சாப்பிட்டான். `குண்டு’ என்று சகமாணவர்கள் கேலி செய்தபோது, `எங்கம்மாவுக்கு நான் இப்படி இருந்தாத்தான் பிடிக்கும்!’ என்று மறுமொழி அளிப்பான், வீம்பாக.

அதிசயமாக ஒருமுறை, “எங்க ஸ்கூல்ல எல்லாரையும் உல்லாசப் பயணம் கூட்டிட்டுப் போறாங்கம்மா. நாலு நாள்! நானும் போறேனே!” என்று அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொஞ்சியபோது, “என்னைத் தனியா விட்டுட்டுப் போக ஒனக்கு அவ்வளவு ஆசையா, தங்கம்?” என்று அழுகைக்குரலில் கேட்ட கோமளம், அன்று பூராவும் எதுவும் பேசாது, எதையோ பறிகொடுத்ததுபோல வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மறுநாள் எல்லா மணவர்களும் பெயரைப் பதிவு செய்யும்போது, “ஏன் தங்கராசு, நீ வரலே?” என்று அதிசயப்பட்டுக் கேட்டாள் ஆசிரியை.

“அவன் அவங்கம்மாவைவிட்டு எங்கேயும் வரமாட்டான், டீச்சர்!” யாரோ ஒருவன் துடுக்காகச் சொல்ல, எல்லாரும் சிரித்தார்கள்.

இந்த மாதிரி ரௌடிகளுடன் ஊர் சுற்றுவதற்கு, வீட்டு வாசலில் தனக்கென்று அம்மா வாங்கிப் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கலாம்!

இவன் ஒதுங்க ஒதுங்க, மற்ற பையன்களின் தொல்லை அதிகமாயிற்று. போதாத குறைக்கு, இப்போதெல்லாம் அப்பாவும் சேர்ந்துகொண்டார்.

தானுண்டு, தன் நண்பர்கள் உண்டு என்றிருந்தவருக்கு அப்போதுதான் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற பிரக்ஞையே வந்திருந்தது.

“இந்தா! அவனை அவன் வயசுப் பசங்களோட பழக விடு. இப்படி, வீட்டிலேயே பிடிச்சு வெச்சுக்கிட்டு!” பொங்கிய ஆத்திரத்தில் பல்லைக் கடித்துக்கொள்ள, முணுமுணுப்பாக வந்தது குரல்.

அதுவே பொறுக்கவில்லை கோமளத்திற்கு. “எல்லாம் எனக்குத் தெரியும். வீட்டிலேயே தங்காம, கூட்டாளிங்களோடேயே பொழுதைக் கழிக்க.., ஒவ்வொருத்தரைப்போல, என் மகன் ஒண்ணும் சூதாடியோ, குடிகாரனோ இல்லே!”

சூதாட்டம் தந்த போதையில், `இதைவிட வேறு சுகமில்லை!’ என்று தோன்றிப் போயிருந்தது அவருக்கு. திருமணமாகிய சில வருடங்களிலேயே, மனைவியை நாடுவதில் நாட்டம் அறவே போயிற்று. அதனாலேயே அவளுடைய ஏளனத்துக்கும், வெறுப்புக்கும் தான் பாத்திரமாகியிருந்தது அவருக்குத் தெரிந்துதான் இருந்தது.

இப்போது தான் அதிகம் பேசினால், தன் குறையை உரக்க விமர்சித்துவிடுவாளோ என்ற பயம் எழ, வாய் அடைத்துப்போயிற்று. `அம்மாவும், பிள்ளையும் எப்படியோ தொலையட்டும்!’ என்று கைகழுவிவிட்டார்.

மகனையொத்த இளைஞர்கள் காதல், கீதல் என்று அலைந்து, தான்தோன்றித்தனமாக எவளையோ கல்யாணம் செய்துகொண்டு பெற்றோரைப் புறக்கணித்துவிட்டுப் போவதைப் பார்க்கையில், கோமளத்திற்கு அவனைப்பற்றி அபாரப்பெருமை எழும்.

`எங்க தங்கத்தைப்போல உண்டா! படிச்சான், வேலையில சேர்ந்தான். `இந்தாங்கம்மா,’ன்னு அப்படியே சம்பளப் பணத்தை என் கையில குடுத்துடறான். ஒரு சிகரெட்டு பிடிச்சிருப்பானா, இன்னிவரைக்கும்!’ எதிரில் யாரும் இல்லாவிட்டாலும்கூட தானே மகன் பெருமையைப் பேசிக்கொண்டிருப்பாள், சலிக்காது.

தங்கராசு நிச்சலனமாக இருந்தான். அம்மா சொன்னால் மகன் முடி வெட்டிக்கொள்ளப் போனான். எந்தக் கடையில் எப்படிப் பேரம் பேசி சாமான் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் உபதேசம் நடக்கும்.

அம்மா இல்லாத ஒரு உலகத்தைக் கற்பனை செய்யக்கூட தங்கராசுவுக்குப் பயமாக இருந்தது. அம்மாவே பார்த்து முடித்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான், அசட்டுச்சிரிப்போடு.

அவனுக்குத் தெரியாது, பலரும் கோமளத்திடம், `ஒனக்கு வயசாகலே ஒரு மருமக வந்தா ஒனக்கு நல்லதுதானே?’ என்று கேட்டதன் விளைவு அது என்று.

மகனுடைய அன்புக்காக மருமகளுடன் போட்டி போட வேண்டியிருக்குமே என்று முதலில் பயந்த கோமளம், மிகவும் சாதாரணமான ஒருத்தியைத் தேர்ந்தெடுத்தாள்.

பூங்கோதை அம்மா மாதிரியே தெரிந்தாள் தங்கராசுவுக்கு.

முரட்டுத்தனமாகப் பேசியோ, நடந்தோ அவளை நோகடிக்கக்கூடாது என்று தோன்றிப்போயிற்று. ‘வேறொரு பெண்ணை — என்னதான் அவள் மனைவியாக இருந்தாலும் — நான் நாடினால், அம்மாவுக்கு வருத்தமாக இருக்காது? என்ற குழப்பம் வேறு எழுந்தது.

கல்யாணமாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் தன்னிடம் ஏதோ குறை இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. ஏதோ வேகத்தில், உடன் வேலை செய்யும் ராமுவிடம் சொல்ல, மன்மதக்கலையைத் தொழிலாகக் கொண்டிருந்த பெண்களின் அறிமுகம் கிடைத்தது. அந்த அனுபவம் அளித்த வேகத்தில் மனைவிக்குக் கணவனாக இயங்க முடிந்தது.

தான் தகப்பனாகப் போகிறோம்! தங்கராசுவுக்குள் ஒரு நிறைவு. முதன்முறையாக, அம்மா சொல்லிக் கொடுக்காமல் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறோம்!

ஆனால், அந்தப் பெருமையும், பூரிப்பும் நிலைக்கவில்லை.

“குழந்தைக்குப் பிறவியிலேயே பார்வையில்லை. கருவிலேயே காம நோயால் பாதிக்கப்பட்டு..,” என்று டாக்டர் கூறிக்கொண்டே போனபோது, தங்கராசுவுக்கு ஒன்றுதான் புரிந்தது. தன்னால் எதையுமே உருப்படியாகச் செய்ய முடியாது.

“எனக்கு ஒண்ணுமே தெரியாதும்மா. ராமுதான் சொல்லிக்குடுத்தான்!” என்று சிறுபிள்ளையாகவே ஆகி, பயத்தில் திக்கியபடி அவன் கூறியபோது, கோமளத்தின் இதழ்களில் ஒரு சிறு புன்னகை.

மகனைப் பிறரிடம் இழந்து, தனிமைக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயம் இனி கிடையாது. அவன் என்றும் அவள் குழந்தைதான்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *