அம்மானா சும்மா இல்லீங்க…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2022
பார்வையிட்டோர்: 4,375 
 

மீனாட்சியைக் கண்டால் எல்லாருக்குமே பயம். சிரிக்கிற குழந்தையும் பார்த்தவுடனே அழுதிடும். அழுகிற குழந்தையும் பார்த்தவுடனே அழுகையை நிறுத்திடும். யாரு மாட்டினாலும் வாயால போட்டு வெளுக்கறது மட்டுமில்லாம, கையிலையும் அடிக்க ஆரம்பிச்சா, யாரா இருந்தாலும் அம்புட்டுதான்..

இப்ப.. நான் இத உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கும் போது, மீனாட்சி யாருன்னு கேக்காதீங்க… அவங்க என்னோட அம்மா..!!

நான் ராஜு.. ஆறாம் வகுப்பு படிக்கிறேன்… இப்ப இதெல்லாம் நான் உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்கும் போது , என் கை, காலெல்லாம் நடுங்கிகிட்டு இருக்கு…

ஏன்னா…? காலைலே நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்.. அப்ப பயத்துல ஓடி வந்தவன் தான். எங்கெல்லாமோ சுத்திட்டு இப்பத்தான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்.

அப்படி என்ன தப்புனு கேக்கறீங்களா…?!!!

எங்க அப்பா.. வெளியூர்ல வேலை பார்க்கறார்.. வீட்ல நான், எங்க அம்மா..

அப்புறம் என்னோட குட்டி தங்கச்சி ரோகிணி மூணு பேரும் தான் இருப்போம்..

தங்கச்சிக்கு இப்பத்தான் தத்தி தத்தி நடக்கற வயசு..

அம்மா.. என்னைய, ரோகிணிய பாத்துக்கோணு சொல்லீட்டு கடைக்கு போயிட்டாங்க..

நானும் ஒழுங்கா பாத்துக்கிட்டு தான் இருந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சு தெருவோரத்துல பயங்கரமான சத்தம்.. என்னானு எட்டிப்பார்த்தா..ஆட்டோக்காரங்க எல்லாம் திடீர்னு அடிச்சுக்கிட்டு இருக்காங்க…

ரோகிணி கட்டில் மேல ஏறி விளையாடிக்கிட்டு இருந்தா.. என்ன நினைச்சேனோ தெரியல… வேகமா நான் வேடிக்கை பார்க்க கெளம்பிட்டேன்…

அங்க போனா, பயங்கரமான அடிதடி சண்டை நடந்துக்கிட்டு இருக்கு..

அக்கம்பக்கத்துல நிக்கறவங்களை எல்லாம் கவனிக்காம கண்ணா பின்னானு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க… எனக்கும் சுளீர் சுளீர்னு ரெண்டு மூணு அடி பயங்கரமா விழுந்து கை, காலெல்லாம் ரத்தம் கட்டின மாதிரி வீங்கிப்போயிருச்சு…

எப்படியோ கஷ்டப்பட்டு வீட்டுக்கு வந்தா.. வீட்டச்சுத்தி ஒரே கூட்டம்…

கூட்டத்த பாத்தவுடனே ஒரு பயம் வந்துடுச்சு…

காதுல விழுந்தத வச்சுப்பார்த்தா.. ரோகிணி கட்டில்ல இருந்து கீழ விழுந்து நல்லா அடிபட்டு மயக்கம் ஆயிட்டாளாம்.. அப்ப சரியா வந்த அம்மா.. பயங்கரமா கத்தி..ஒரு களேபரமே பண்ணி, வேக வேகமா ஆட்டோ பிடிச்சு, உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டாங்களாம்…

கேக்கும்போதே பகீர்னு இருந்துச்சு…

எப்படியும் அம்மா கைல மாட்டினேனா.. பிச்சு பீஸ் பீஸா ஆக்கிறுவாங்க..

திடீர்னு அப்படி ஒரு பயம் நெஞ்ச அடைக்க.. கை, கால் வலியையையும் பொறுத்துக்கிட்டு அங்கேயிருந்து நழுவினவன்.. இப்பத்தான் மனசு பூரா பயத்தோட, நொண்டி நொண்டி வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்…

பயந்துக்கிட்டே போயி கதவைத்தட்ட கதவு மேல கைய வச்சேன்.. கதவு தானா திறந்துக்கிச்சு.. சுவத்து ஓரத்துல அம்மா உட்காந்து அழுதுக்கிட்டு இருந்தாங்க…

என்னைப் பார்த்தவுடனே எந்திரிச்சு வேகமா ஓடி வந்தாங்க.. போச்சு..

இன்னைக்கு பிண்ணு பிண்ணுனு பிண்ணப்போறாங்கனு நெனச்சுக்கிட்டு இருக்கும்போதே என்னை அப்படியே கட்டிக்கிட்டாங்க…

“எங்கடா செல்லம்.. எங்க போனே.. உன்ன எங்கெல்லாம் தேடருது.. இப்படி என்னை தவிக்கவச்சுட்டியே”ன்னு சொல்லி என்னை கொஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க.. என் கை, காலில இருந்த காயத்தை பார்த்தவங்க.. நல்லா துடைச்சுவிட்டு மருந்தும் போட்டு விட்டாங்க…

கட்டில்ல ரோகிணிப்பாப்பா தலைல கட்டோட தூங்கிட்டு இருந்தா.. பார்க்கவே பாவமா இருந்துச்சு… எல்லாமே என்னாலே தானே…

நான் ‘மன்னிச்சுக்கோமா’னு சொல்லணும்னு நெனைச்சேன்..ஆனா கோவக்கார மீனாட்சி அம்மா, எனக்கு அதுக்கு வாய்ப்பே தரலை..நான் பண்ண தப்ப சொல்லிக்கூட காட்டாம, என் மேல காட்டின பாசத்தாலே.. இனிமே என்னை சொல்பேச்சு மீறாத பையனா மாத்தீட்டாங்கனு நெனைக்கிறேன்..

என் அம்மானா அம்மா தான்…

தப்பு பண்ணா அடிச்சும் திருத்துவாங்க.. பாசத்தாலேயும் திருத்துவாங்க…அம்மானாலே அப்படித்தானோ…

– பாவையர் மலர், செப்டம்பர் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *