அம்புலு

 

எனக்கும் அலமேலுவுக்கும் திருமணமாகி இருபது வருடங்கள் ஓடிவிட்டன. இன்னமும் எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஆனாலும் எனக்கு அலமேலுவின் மீது அன்பும் பாசமும் கிஞ்சித்தும் குறையவில்லை. அவளை நான் செல்லமாக ‘அம்புலு’ என்றுதான் கூப்பிடுவேன்.

என் அம்புலுவிற்கு நான்கைந்து மாதங்களாக சிறுநீரக பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. ரத்தப் பரிசோதனையில் க்ரியாட்டின் மிக அதிகம்; பொட்டாஷியம் அதிகம் என்றார்கள். திடீரென சிறுநீரகப் பழுதினால் என்னைவிட்டு அவள் சென்றமாதம் பிரிந்துவிட்டாள்.

அம்புலுதான் எனக்கு எல்லாமே என்று இருந்தேன். ஆனால் அம்புலுவின் சமீபத்திய மரணம் முற்றிலுமாக என்னை நிலைகுலைய வைத்துவிட்ட கொடிய துக்கம்.

அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் துணை இழந்த அகதியாய் என்னை நிற்க வைத்துவிட்ட பயங்கர இழப்பு. அம்புலு இல்லாத வெறுமை ஒவ்வொரு நொடியும் பூதாகாரமாக என்னை ஆட்டி அலைக்கழிக்கிறது.

ஏனெனில் அப்படியொரு அகன்ற அற்புத தளத்தில் ஒவ்வொரு நிமிடமும் சகல பரிமாணத்திலும் எங்களின் உறவு ஊசிமுனை வேற்றுமைகூட இல்லாத ஒருமிப்பில் கைகோர்த்திருந்தது. என்னுடைய விருப்பங்கள் அம்புலுவிற்கும் விருப்பங்கள் ஆயின. அவளுடைய ஆர்வங்கள் எனக்கும் ஆர்வத்திற்கும் உரியதாயின.

உதாரணத்திற்கு சிறு வயதிலிருந்தே செடிகள், பறவைகள், மீன்கள் வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் என்னைச் சந்திப்பதற்கு முன் அம்புலுவிற்கு இவற்றில் குறிப்பிட்ட ஆர்வங்கள் இருந்ததில்லை. கல்லிடைக்குறிச்சியில் அவளுடைய வீட்டில் இயல்பாக செடிகளும் கொடிகளும் வளர்ந்திருக்கின்றன. நானும் அவளும் சேர்ந்து வாழத் தொடங்கியதுமே ஏராளமான செடிகளை இணைந்தே வளர்த்தோம்; அழகான மீன்கள், பறவைகள் வளர்த்தோம்.

அம்புலுவை சந்திப்பதற்கு முன்னால் நான் பிரபந்தம், வால்மீகி ராமாயணம் போன்றவற்றை வாசிப்பதில் பெரும் ஆர்வம் எதையும் காட்டியதில்லை. அவளுடன் இணைந்த உடனேயே நடுநிசிவரைகூட அம்புலு எனக்கு இவைகள் பற்றி பெரும் உபன்னியாசமே ஒவ்வொரு நாளும் செய்திருக்கிறாள். தவிர, ரகுவம்சம், பாகவதம் பற்றிய பற்பல நுட்பமான சமாச்சாரங்களும் அவளால் எனக்குள் பரிவர்த்தனை ஆயின. குறுக்கீடுகள் இல்லாத இந்த இயல்பான பரிவர்த்தனைகளே எங்களின் அன்றாட வாழ்க்கை ஆயின.

காய்கறி, மளிகை சாமான்கள் வாங்க நாங்கள் இணைந்தேதான் போவோம். சேர்ந்துதான் வாக்கிங் போவோம். அம்புலு உடல்நலம் இல்லாமல் இருந்தபோது பக்கத்து வீட்டுப் பெண்கள், “மாமி, நீங்களும் மாமாவும் முன்னே மாதிரி சீக்கிரமே சேர்ந்து வாக்கிங் போகணும், அதான் எங்க ஆசை” என்று மன நெகிழ்வுடன் சொன்னார்கள். இதனாலெல்லாம்தான் அம்புலு இல்லாத ஒவ்வொரு நிமிடமும் சூனியம் கவிந்து என்னை அழுத்தி அலைக்கழிக்கிறது.

அம்புலு தயக்கங்களோ, சங்கோஜங்களோ, அச்சங்களோ சிறிதும் இல்லாதவள். எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் முற்றிலும் அந்நியர்களாக இருந்தாலும்கூட அவர்களை உட்காரவைத்து சகஜமாகப் பேசி நட்புடன் உபசரிக்கிற மேன்மையான சிநேகிதி அவள். எங்கேயும் யாரிடத்திலும் அந்நிய மனநிலையில் இருக்கமாட்டாள். பகைமையோ, பொறாமையோ வந்ததே கிடையாது. அவளுடைய உலகத்தில் இரைச்சல் இல்லாமல், பயங்கள் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.

விதவிதமாக சமைப்பாள். சமைப்பதில் ஒருநாள்கூட ஒருவேளைகூட அவள் மனம் அலுத்துக் கொண்டதோ எரிச்சல் பட்டதோ கிடையாது. சமைப்பதில் எப்படி அவளுக்கு அளவில்லாத ஆசை இருந்ததோ, அதே ஆசை நண்பர்களுக்காகவும் விருந்தினர்களுக்காகவும் சமைப்பதிலும் அவளுக்கு இருந்தது. உபசரிப்பு அம்புலுவின் ரத்தத்தோடு கலந்த ஒன்று. எங்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் காதலுடன் எரிந்துகொண்டே இருந்த அடுப்பு, இன்று வீட்டில் அணைந்து கிடக்கிறது.

அம்புலுவை அவளுக்கு ஏற்பட்ட சிறுநீரகங்கள் பழுதுபட்ட நிலையில் இருந்து மீட்டு காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வலுவாகவே என்னிடம் இருந்தது. கிட்டத்தட்ட மூன்றரை மாத முயற்சியில் அதற்கான பலன்களும் அவளில் ஏற்பட்டிருந்ததை மாதாந்திர மருத்துவ சோதனைகள் டாக்டர்களே ஆச்சர்யப்படும் விதத்தில் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன. அவளின் சிறுநீரகப் பிரச்சனை தொண்ணூறு சதவீதம் குணம் பெற்றுவிட்டதாக நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம். அதை வலுவூட்டத் தக்க விதத்தில் அவளுக்கு அவ்வப்போது மிஸ்டிகல் அனுபவங்கள் அடுக்கடுக்காக ஏற்பட்டன.

சென்றமாத இறுதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் நள்ளிரவு அம்புலுவிற்கு மிகக்கொடிய மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அது தொடர்ந்து நீடித்தது. உடனே அப்பல்லோ ஹாஸ்பிடல் எமர்ஜென்சியில் சேர்த்தேன். எக்ஸ்ரே, ஈஸிஜி, அவசர டயாலிசிஸ் போன்றவை மேற்கொள்ளப் பட்டதில், மருத்துவ சோதனை முடிவுகள் எல்லாமே ‘நெகடிவ்’. அவளின் மூச்சுத்திணறலுக்கு மருத்துவ ரீதியான காரணங்கள் அம்புலுவின் உடம்பில் எதுவுமே இல்லாததில் டாக்டர்கள் திகைத்துப் போனார்கள். மூச்சுத்திணறல் அடங்கியபின் அம்புலு மிகவும் நார்மலாகப் பேசிக்கொண்டும் இயல்பாகவும் இருந்தாள். இந்த அனுபவத்திற்குப் பின் ஒருநாள் இரவு அம்புலுவின் கண்களுக்கு மரணம் தெரிந்தது.

தன் வாழ்க்கையில் சில புதிய ஆன்மீக நிலைகளை காணப்போகிற கனிந்த எதிர்பார்ப்பு அவளின் கண்களில் பளபளத்தது. ஆன்மீக நிலைகள் உத்வேகம் பெற்றன. அழகழகான நந்தவனங்களும் இறகுவிரிந்த தேவதைகளும் அவளின் கண் எதிரே விரிந்து தெரிந்தன. இந்த மிஸ்டிக் அனுபவங்களால் அம்புலு பரவசப் பெருக்கில் ஒருமாதிரியாக சிலிர்த்துப் போயிருந்தாள். விரைவில் நாம் ஓர் ஆஷ்ரமம் தொடங்குவோம் என்றாள். அவளுடைய எந்த விருப்பத்திற்கும் ஒருபோதும் நான் மறுப்புகள் தெரிவித்ததில்லை. “சரி” என்றேன். அவளின் உடல்நிலை நன்றாக முன்னேற்றம் கண்டிருந்தது.

அம்புலுவின் உயிருக்கு எந்த விதத்திலும் ஆபத்து வராது என்ற நம்பிக்கை எங்கள் இருவருக்குள்ளும் வந்தது. கூடிய விரைவில் மரணத்தை நெருங்கப் போகும் ஒரு மனுஷிக்கு இத்தகைய ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுவது சாத்தியமில்லை என்ற எங்கள் நம்பிக்கை சீக்கிரமே தகர்ந்து போனது. அம்புலுவின் உடம்பில் பிபி மிகக் குறைந்து உடல் நலத்தில் பெரிய சரிவை ஏற்படுத்திவிட்டது.

ஆனால் எனக்காகத்தான் அவள் உருகினாள். அவளின் பாசமும் அரவணைப்பும் எப்படி ஒவ்வொரு நொடியும் என்னைச் சூழ்ந்து தோள்களில் தங்கிக் கொண்டிருந்தது என்பது அவளுக்குத் தெரியாதா என்ன? அதனால் அவளுடையை இல்லாமை, எத்தகைய கொடிய துணை இல்லாத தனிமையின் வலியில் ஆழ்த்தி விடும் என்னை, என்ற கவலைதான் அவளுக்கு. கடைசி இரண்டு வாரங்கள் மரணத்தை மனதில் கொண்டே பல காரியங்களை செய்தாள். அவள் ஆசைப்பட்டாள் என்பதற்காக நர்ஸரி போய் இரண்டு புதிய செடிகள் வாங்கிவந்தேன். அவைகளை பார்த்துப் பார்த்து சந்தோஷப்பட்டாள்.

பதினைந்தாம் தேதி காலையில் ஆசையுடன் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டாள். மதியம் சாப்பாடு செல்லவில்லை என்றாள். அவள் பார்க்க ஆசைப்பட்ட ரொம்ப வயதான பெரியம்மாவால் அம்புலுவை வந்து பார்க்க முடியவில்லை. அதை ஒருவித நிராசையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள். அதன்பின் சில வயதான உறவினர்களை வரச்சொல்லி பார்த்து பேசிக்கொண்டிருந்தாள்.

என்னை ஒருவித துயரத்துடனேயே பார்த்துக் கொண்டிருந்தாள். மதியத்திற்கு மேல் அம்புலுவை டயாலிஸிஸ் அறைக்கு அழைத்துப் போனார்கள். இரண்டு மணிக்குமேல் அவளைப் போய் பார்த்தேன். கண்களை மூடிப் படுத்திருந்தாள். “அம்புலு” என்றேன். கண்களைத் திறந்து பார்த்தாள். அந்தப் பார்வை அம்புலுவின் பார்வை இல்லை. எனக்குப் பகீர் என்றிருந்தது. அம்புலுவை அதிர்ச்சியுடன் பார்த்தேன். சில நிமிடங்கள் அவளருகில் நின்று கொண்டிர்ந்தேன்.

அடுத்த அரைமணி நேரத்தில் கோமா போன்ற நிலை ஏற்பட்டு நினைவிழந்தாள். நினைவு திரும்பாமலேயே அடுத்த சிலமணி நேரங்களில் மரணம் ஏற்பட்டு என்னருமை அம்புலுவின் உயிர் பிரிந்தது. டாக்டர் என் தோளைத் தொட்டு ஆறுதல் சொன்னார்.

உடலில் இருந்து பிரியும் உயிர் சூட்சும நிலையின் மூன்று நாட்கள் தேங்கிக் கிடப்பது போன்ற நிலையில் அசைவின்றி இருக்கிறது. நான்காம் நாள் அது உயிர்த்தெழுகிறது. என் அம்மாவின் மரணத்தில் அதைக் கண்ட அனுபவம் எனக்கு உண்டு. நான்காம் நாள் அம்புலுவின் வருகையை நான் எதிர்பார்த்தேன். அதிகாலை ஐந்து மணியளவில் எனக்குத் தூக்கம் கலைந்து விட்டது. ஆனால் எழுந்து கொள்ளாமல் படுத்தே இருந்தேன். ஐந்தரை மணிவாக்கில் அம்புலு என் பக்கத்தில் வந்து சட்டென உட்காருவது தெரிந்தது.

இறந்த அறுபது நாட்களில் அம்புலு நான்கு முறைகள் என் பார்வைக்கு தெரிந்திருகிறாள். நான் ரொம்பவும் நெகிழ்ந்த தோற்றம் – டைனிங் டேபிளில் எப்போதும் அவள் உட்காரும் நாற்காலியில் சாப்பிட வந்து அமர்ந்திருந்த மாதிரியான தோற்றம். அறுபது நாட்களில் மூன்று முறை அம்புலு என்னைக் கூப்பிடும் குரல் துல்லியமாக ஒலித்திருக்கிறது அம்புலு இல்லாத தனிமையிலும் கண்ணீரிலும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

அம்புலுவிற்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறதுக்கு முந்தின நாள்வரை எனக்கு அடுப்பை பற்றவைக்கக் கூடத்தெரியாது. ஊசிமுனை வேலைகூட எனக்கு அவள் தந்ததில்லை, வேலை எதையும் என்னிடம் எதிர்பார்க்கவும் இல்லை. கடைசி காலங்களில் டைனிங் டேபிளில் அமர்ந்து அம்புலு ஆலோசனை சொல்லச்சொல்ல நான் சமையல் செய்தேன். என் சமையலை ரசித்துச் சாப்பிட்டாள்.

ஒருநாள் என்னிடம், “நான் எப்போ இறந்தாலும் சரி, இறந்த அப்புறமும் அரூபமா உங்க கூடவேதான் இருப்பேன்.” இதைச் சொல்லிவிட்டு காதலும் கண்ணீரும் பொங்க என் மார்பில் அம்புலு சாய்ந்திருந்த கணங்கள் அசாதாரணமானவை. ஜூலை பதினைந்தாம் தேதி என்னுடைய பிறந்தாள். பதினான்காம் தேதி இரவு படுத்துக் கொள்வதற்கு முன் அவளுடைய போட்டோவின் முன் நின்று, “அம்புலு, நாளைக்கு எனக்கு பர்த்டே. நீ இங்கேதான் அரூபமா இருக்கே என்கிறதை எனக்கு ஏதாவது விதத்ல காட்டு” என்று சொல்லிவிட்டு அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு ஹாலில் படுத்துக்கொண்டேன்.

மறுநாள் காலையில் ஐந்து மணிக்கு கண்களைத் திறந்தேன். ஹாலில் ஆறு அடி உயரத்திற்கு அலங்காரமாக நிற்க வைக்கப்பட்டிருந்த கம்பீரமான எங்கள் பெடஸ்டல் லாம்ப் தகதகவென்று மெய்சிலிர்க்கும் விதத்தில் ஒளி வீசியது.

தற்போது தினமும் காலை எனக்கான டீயை தயாரித்து நான் மட்டும் தனியாக அமர்ந்துகொண்டு அருந்துகிறேன். அம்புலுவின் துணை இல்லாத வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் கண்ணீரோடும் வேதனையோடும் நத்தையாய் நகர்ந்து கொண்டிருக்கின்றன… 

தொடர்புடைய சிறுகதைகள்
நடிகை மோனாலிசா அந்தப் பிரபல நகைக் கடையின் நங்கநல்லூர் கிளையை மாலை திறந்து வைக்கப் போவதாக, அன்றைய தினசரியில் ஒரு பக்க விளம்பரம் வந்திருந்தது. விளம்பரத்தைப் படித்த குணசேகர் , எப்படியாவது அன்று மோனாலிசாவிடம் ஆட்டோகிராப் வாங்கிவிட வேண்டுமென்று முடிவெடுத்தான். குணசேகரிடம் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
ராகவன் ஒரு சாப்பாட்டுப் பிரியர். அவருக்கு வயது 68. பாளையங்கோட்டை அருகே திம்மாராஜபுரம் என்கிற கிராமத்தில் அந்தக் காலத்தில் வில்லேஜ் முன்சீப்பாக இருந்தவர். அவருக்கு ஐம்பது வயதாக இருக்கும்போதே அவர் மனைவி இறந்து விட்டாள். ஒரேபெண் காயத்ரிக்கு திருமணமாகி தற்போது அமெரிக்காவில் இருக்கிறாள். இப்போது ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘சூதானம்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது) பூரணி சொன்ன பொய்யால் அத்தனை சொந்தக்காரப் பயல்களும் ஓடிப்போய்விட்டான்கள். அதுவும் எப்படி? ‘வெளி வேசத்தைப் பார்த்து யாரையும் நம்பக்கூடாது’ என்று பேசியபடி... செந்தூர் பயல்களே இப்படிப் பேசினான்கள் என்றால் பாளை வியாபாரிகள் ...
மேலும் கதையை படிக்க...
சுமதிக்கு இருபத்தியாறு வயது. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களில் கணவருடன் மேட்டூர்டாம் மால்கோ காலனி குடியிருப்பில் தனிக் குடித்தனம் வந்துவிட்டாள். புது இடம், எவரையும் தெரியாது...எப்படிக் குடித்தனம் நடத்துவது என்று தவித்துக் கொண்டிருந்தபோது அறிமுகமானவள்தான் பக்கத்துவீட்டு மல்லிகா. மல்லிகாவுக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். ...
மேலும் கதையை படிக்க...
பெங்களூரிலிருந்து காரில் திருக்கடையூர் வந்து சேர்வதற்கு மாலை நான்கு மணியாகி விட்டது. ஸ்ரீராம், அவர்கள் தங்க வேண்டிய வாடகை வீட்டைக் கண்டு பிடித்து, வீட்டின் முன் தன் காரை நிறுத்தினான். ஏ.சி. காரின் கதவுகளைத் திறந்ததும் உள்ளே அனலடித்தது. உக்கிரமான வெய்யில். அவனுடைய ...
மேலும் கதையை படிக்க...
ஆட்டோகிராப்
ஊட்டாபாக்ஸ் ராகவன்
பூரணி
தோழிகள்
உயிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)