கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 6,349 
 

அப்பாவிற்கு நெஞ்சு குழியில் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. இன்றோ… நாளையோ. .. எப்போது என்று சொல்ல முடியாத அளவிற்கு ஊசலாட்டம். ஆனால்… கண்டிப்பாய் ஒரு வாரத்திற்கு மேல் தாங்காது என்பது நிச்சயம்.!

வந்திருந்த சுற்றம், நட்புக்கெல்லாம் இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறதே… கவலை.!

டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று வந்திருந்த அண்ணன், அக்காள், தங்கைகளுக்கெல்லாம் சீக்கிரம் போய் விட்டலாவது தூக்கிப் போட்டுவிட்டு ஊர்ப்பக்கம் போகலாமென்று விசனம்.

ஊர் ஜனங்கள் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொண்டிருந்த்தார்கள். அவர்களுக்கும் வேலை வெட்டி என்று கவலை.

நீண்டு சலனமற்று படுத்திருக்கும் அப்பாவின் அருகில் அமர்ந்திருக்கும் எனக்கு மட்டும் எல்லோரையும்விட வித்தியாசமான கவலை.

‘ இவரை எந்த இடத்தில் எரியூட்டுவது ? ‘ என்ற தீவிர யோசனை.

இந்த யோசனை முடிச்சிக்குக் கரணம் அப்பாதான்.!

போன வாரம் வீட்டில் திடீரென்று மயங்கி சரிந்தவரை நான்தான் தங்கி, விழாதவாறு சாய்த்துப் பிடித்து, எட்டு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அள்ளிச் சென்றேன். அவசர சிகிச்சை முடித்து ஸ்டெச்சருடன் வந்த டாக்டர் , ” சந்திரன் ! ரெண்டு நாள் வைச்சிருந்து கூட்டிப் போங்க ” சொன்னார்.

” ஏ. .என் டாக்டர். ? ” கலவரமாக பார்த்தேன்.

” ஒரு வரம் உயிரோட இருக்கிறது கஷ்டம் ! ”

அதற்கு மேல் அவரைத் தோண்டி, துருவி கேட்க எனக்குத் திராணி இல்லை.

வார்டில் கொண்டு கட்டிலில் கிடத்தி போய் விட்டார்கள். நான் கனத்துடன் அவர் தலை மாட்டிலேயே ஒரு ஸ்டூல் போட்டு அமர்ந்தேன்.

வெகு நேரத்திற்கு பிறகு அப்பா மெல்ல கண் விழித்தார். பக்கவாட்டில் திரும்பி என்னைப் பார்த்தார்.

” என்னை சுடுகாட்டுல எரிக்க வேணாம். .! ” என்று மெல்ல சொல்லி மறுபடியும் கண் மூடினார்.

” ஏன். ..? ” கேட்க ஆவல். ஆனால் நான் வாய்த் திறப்பதற்குள், ” நோயாளிக்குத் தொந்தரவு கொடுக்காதீங்க. ” என்று செவிலி கண்டிப்புடன் சொல்லி ஊசி போட்டு விட்டு சென்றாள்.

அன்றைக்குக் கண் மூடிய அப்பா வீட்டிற்கு வந்தும் இன்னும் கண் விழிக்கவில்லை. பெண், பிள்ளைகளுக்கெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு… அவர்கள் வந்து பார்த்து அழுது, அரற்றியும் அசையவில்லை .

‘ அப்பா எங்கே எரிக்கச் சொல்கிறார், எப்போது சொல்லப் போகிறார், இல்லை சொல்லாமல் போவாரா. ?! அப்படி போனால் அவர் விருப்பத்திற்கு மாறாய் சுடுகாட்டில் எரித்தால் அவர் ஆத்மா சாந்தி அடையுமா ?!. அடையாது. சொல்லுப்பா. .! சொல்லுப்பா. .! ‘ என்று எனக்கு அவர் பக்கத்திலேயே இருக்கை .

‘ எதற்கு இப்படி ஒரு முடிச்சி போட்டார். ஊர் சுடுகாட்டில் அவருக்கென்ன அப்படி ஒரு வெறுப்பு. ?.. அதை விட்டு அப்பா தன்னை எந்த இடத்தில் எரியூட்ட ஆசை வைத்திருக்கிறார். மணிமண்டபம் கட்ட ஆசையா. .?!! ‘

‘ அதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதியெல்லாம் பெற வேண்டும். எவ்வளவு சிக்கல்.! செத்த உடலை எங்கே புதைத்தாலென்ன. .? ..எரித்தாலென்ன. .?… ஊர் பயணம் செல்லும்போது கார் விபத்தில் அகால மரணமடைந்தால் எவரிடமும் சொல்லாமல் போவாரே. இவர் ஆசை எப்படி நிறைவேறும். எதற்காக இந்த பைத்தியக்கார நினைப்பு. !! ‘ அப்பாவையே உற்றுப் பார்த்தேன்.

அப்பா ரொம்ப நல்லவர். எங்களின் சிறு வயதுகளில் விவசாயத்திற்கு கால் குழி நிலம் இல்லாத கூலி தொழிலாளி. அலுமினியத் தூக்கில் பழையதை எடுத்துக் கொண்டு வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பை எரியும். இல்லையென்றால் வயிறுகள் எரியும். அப்படி அவர் ஓர் நாலும் விட்டதில்லை. வெயில், மழையடிக்கும் தென்னங்குடிசை… கீற்று வீடு.! அப்புறம் மளமளவென்று முன்னேறியது அவர் சொந்த உழைப்பு, முயற்சி.

விவசாயம் செய்ய பிடிக்காத உள்ளூர் முதலாளி ஒருவர் தன் ஐந்து வேலி நிலத்தை அப்பாவிடம் காரியம் பார்க்க விட்டு விட்டு சென்னையில் குடியேறினார். மாதம் ஐந்து கலம் நெல். ஐம்பது ரூபாய் பணம். இந்த நிரந்தர வருமானத்தில் முதலில் வயிறு நிறைந்தது. அப்பா… ஆளில்லா முதலாளிக்கு நேர்மையாக உழைத்தார். சம்பளம் தவிர சல்லி எடுக்காமல் உத்தமனாய் உழைத்தார். முதலாளிக்கு வருமானம்தானென்றாலும் அப்பாவின் நேர்மை , உண்மை, உழைப்பு. .. அவருக்குப் பிடித்துப் போக. .. ” நான் இந்த ஊருக்கு வர்றதா இல்லேப்பா. நிலத்தை மொத்தமா நீ எடுத்துக்கோ. தவணை முறையில் எனக்கு பணம் கொடு. .” சொல்லி விட்டார்.

அப்பா அன்றுமுதல் முதலாளி. மடமடவென்று முன்னேற்றம். ஊரில் முக்கிய புள்ளி. ஆனால் ஒரு இடத்தில் இடறல். . கரும்புள்ளி. !

அப்பாவின் விவசாய நிலங்கள் அனைத்தும் நான்கைந்து துண்டுகளாக அடைத்து கிடந்தது. எல்லா இடங்களுக்கும் போக்குவரத்து உண்டு. சாலையில் இருந்தபடியே விவசாயம், மேம்பார்வை, வேலை முடித்து… வீடு திரும்பலாம். மேற்கே ஒரு இடத்தில் மட்டும் சின்ன இடைஞ்சல். வாய்க்காலை ஒட்டி வாலாய் நூறு குழி நிலம் வேறொருவருடையது. அந்த ஏழை விவசாயிக்கு அந்த நிலம்தான் ஆஸ்தி, உயிர்.

தண்ணீர் பஞ்சம், கூலியேற்றம், உரயேற்றம், ஆள் பஞ்சம் என்று பல வகைகளில் பாதிக்கப்பட்ட அந்த ஏழை, ” பையன் படிப்பு உதவிக்குப் பணம் வேணும்யா. ஊர் நிலவரப்படி நிலத்தை விலை போட்டு ஏத்துக்கோங்கய்யா. .” சொல்ல. .

அப்பாவிற்கு விருப்பம் இல்லை. அடுத்தவன் வாங்கினாலும் தனக்கு இடைஞ்சல். பையனுக்குப் படிப்பு உதவி..என்று எண்ணி பணத்தையும் கொடுத்து, பத்திரமும் எழுதி வாங்கி விட்டார்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு பையன் படிப்பு முடிந்து வந்ததும்தான் பிரச்சனை.

வாங்கிய வயலில் படுத்துக்கொண்டு, ” தாத்தா சொத்து பேரனுக்கு. அப்பா விபரம் புரியாம வித்துட்டாரு. இப்போ நான் வயசுக்கு வந்த ஆம்பளை. நிலம் எனக்கு வேணும் ! ” என்று அடம்.

அறுவடைக்கு வந்த ஆட்களெல்லாம் பதறி அடித்துக்கொண்டு போய் அப்பாவிடம் சொல்ல. .அப்பா வந்து ஏகாம்பரத்திற்கு ஆளைவிட..அவர் வந்து மகனை அழைக்க. .. அசையவில்லை.

” சரிப்பா. கொடுத்தப் பணத்தைத் திருப்பிட்டு நிலத்தை எடுத்துக்கோ. .” அப்பா சொன்னார்.

” நாலு வருசமா நட்டு அறுத்திருக்கே. பணம் கிடையாது. .!” அவன் முரண்டு பிடிக்க. .

அந்த அடாவடி எவருக்க்த்தான் பிடிக்கும். ..?!

”பயலை அடிச்சி துவச்சி தூக்கி தூரத் தள்ளிட்டு அறுவடை செய்யுங்கடா. .! ” அப்பா இரைந்தார்.

அடுத்த வினாடி பத்து ஆட்கள் அவன் மேல் மொத்தமாகப் பாய்ந்தார்கள்.

எவர் அடி ஏடாகூட இடத்தில் பட்டதோ தெரியவில்லை.

” ஆ. ..அம்மா. ..!!! ” பையன் ஒரே அலறல்தான் . அடுத்த வினாடி பிணம். !

அப்புறம். ..போலீஸ், கோர்ட், வழக்கு, தீர்ப்பென்று அப்பாவிற்கு ஆறு மாத சிறை. அடித்தவர்களுக்கு இரண்டாண்டுகள் கடுங்காவல்.

ஆயிரம்தான் இருந்தாலும் மகன் போன துக்கம், அவன் அடாவடியில் அவமானம். அப்பா சிறையை விட்டு வரும்போது ஏகாம்பரமும், அவர் மனைவியும் ஊரைவிட்டு போயிருந்தார்கள்.

அப்பா ஊரில் பணக்காரர், பெரும்புள்ளி, மிராசு…. என்பதினால் சிறையைப் பற்றி ஊர் வாய் திறக்கவில்லை.

இவருக்கு ஒரு உயிரைப் போக்கிய உறுத்தலோ, என்னவோ…. ஏற்கனவே கொடுப்பதில் கூச்சப்படாதவர் வந்த பின் இன்னும் வாரி வழங்கினார். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஊரை அடைத்து பந்தல் போட்டு… சாதி, மதம் பாராமல் சாப்பாடு போட்டு திருமணங்களையெல்லாம் திருவிழாக்களாகவே கொண்டாடினார்.

இதோ அறுபது வயதைத் தொட்டவருக்கு திடீர் முடக்கம்.

‘ அப்பா ! நீங்கள் சேதியைச் சொல்லிவிட்டுத்தான் சகா வேண்டும். சொல்லாமல் சாகக் கூடாது. அது உங்களுக்கும் குறை, எங்களுக்கும் உறுத்தல் ! ‘ – நினைவில் மீண்ட நான் இன்னும் உற்றுப் பார்த்து பெருமூச்சு விட்டேன். அவரிடம் அசைவுகள் இல்லை.

சிறிது நேரத்தில் அவர் மூடிய இமைக்குள் விழிகள் உருண்டது.

‘ அப்பா கண் விழிக்கப் போகிறார் ! ‘ எனக்குள் பதற்றமும், படபடப்பும் சேர்ந்து தொற்றியது.

என் கணிப்பு வீண் போகவில்லை.

அவரின் இமைகள் மெல்ல விரிந்து பிரிந்தது. அந்த கண்களில் அணையப் போகும் சுடராய் நல்ல பிரகாசம் தெரிந்தது.

ஒரு கணம் என்னை இமைக்காமல் உற்றுப் பார்த்த அவர், ‘ அருகில் வா. .’ என்பது போல் வலக்கையால் மெல்ல அழைத்தார்.

நான் அவரை இன்னும் நெருங்கி அமர்ந்து குனிந்தேன்.

” என் உடலை ஏகாம்பரம் வித்த நிலத்துல வைச்சு எரிச்சிடு. .” எனக்கு மட்டும் கேட்கும்படி மெல்ல சொன்னார்.

கோர்ட், கேசென்று சொந்தப்படுத்தியத்தின் விளைவு ! ….இது என் நிலம். என்னைத்தவிர வேறு எவர்க்கும் சொந்தமில்லை, உரிமை இல்லை ! என்று சொல்லும் வெளிப்பாடா. .? எதனால் இந்த ஆசை. .? ‘ உற்றுப் பார்த்தேன்.

” என்ன பார்க்குறே ? அறியாமல் செய்றான் பையன்னு நான் வீட்டுக் கொடுத்திருக்கனும். அவன் அடாவடி எனக்குள்ளிருந்த மிருகத்தைச் சட்டுன்னு உசுப்பிடுச்சு. நானும் கொஞ்சம் கூட முன்பின் யோசிக்காம… சொல்லாதது சொல்லி… ஓர் உசுரைக் கொன்னதோடு மட்டுமில்லாம, ஒரு வரிசையே அழிச்சி , அந்த குடும்பத்தை நிர்மூலம் ஆக்கிட்டேன். செஞ்ச தப்புக்குச் சிறைன்னாலும், தானம், தருமம் பண்ணியும் எனக்குள் இருந்த உறுத்தல் நிக்கலை. இதுக்குப் பிராயசித்தம் பண்ணனும்னு எனக்குள் ஒரு யோசனை, உளைச்சல். அந்த நிலத்திலேயே சாம்பலாகனும். ஏகாம்பரம் உழும்போதும், நடும்போதும், அவன் கால்ல , கையில பட்டு மன்னிப்பு கேட்கனும்னு வழி தெரிஞ்சிது. மனசு

தெளிஞ்சுது. உடனே என் உடலை எரியூட்டி ஏகாம்பரத்துக்குத் திருப்பிடனும்னு உயில் எழுதி வைச்சிட்டேன். ஏகாம்பரம் இருக்கும் இடத்தையும் கண்டு பிடிச்சுட்டேன். பதினைஞ்சு கிலோ மீட்டருக்கு அப்பால் ஒரு கிராமத்துல மனைவியும் தானுமாய்க் கஷ்டப்படுறான். விபரம் சொல்லி அவனுக்கு நிலத்தைக் கொடுத்துடு. மனசறிஞ்சு நான் தப்பு செய்யலை. ஆனா …தெரிஞ்சு செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தப்பு தப்புதான். .! ” நிறுத்திப் பார்த்தார்.

விழிகள் நிலைக் குத்தின.

நான், ” அப்பா. …ஆ. ..! ” அலறினேன்.

மற்றவர்கள் அறைக்குள் தடதடதடவென நுழைந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *