தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,210 
 

“டண், டண், டண்…’ என, சேகண்டி மணியடிக்கும் சப்தம். தூக்கிவாரிப் போட விழித்து கொண்டேன். சட்டென்று எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை. வியர்வையில் சட்டை தொப்பலாக நனைந்திருந்தது. லேசான நெல் வாசம். அரையிருட்டில் எதிர் சுவற்றில் கண்ணாடி சட்டம் போட்டு மாட்டியிருந்த அண்ணன் – அண்ணி கல்யாண புகைப்படம், நான் ஊரில் இருப்பதை நினைவுப்படுத்தியது. பத்தாயத்தின் மேல் சாய்ந்தவாறே, என்னையறியாமல் தூங்கி இருக்கிறேன். வாயில் கோடாக வழிந்திருந்த எச்சிலை, கைலியால் துடைத்தபடியே, மெதுவாக எழுந்து நிலைவாசலில் இடித்துக் கொள்ளாதவாறு தலையை குனிந்தபடி வெளியே வந்தேன். 12:00 மணி வெயில், கண்ணை கூசியது.
அப்பாவாசலில் திடீரென்று முளைத்திருந்த பந்தலின் கீழே ஆங்காங்கே, இரண்டு – மூன்று பேராக நின்று, பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு பெஞ்சுகளை ஒட்டிப் போட்டு, அதில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவை சுற்றி அதிகம் பேர் இல்லை; பெரியக்கா கூட, அப்பா பக்கத்தில் இல்லை. வந்திருந்த அத்தனை பேர் கண்களிலும் உண்மையான துக்கமோ, வருத்தமோ தெரியவில்லை; சம்பிரதாயமான வருகை. முருகாயி அத்தை மட்டும் தன்னையொத்த இரண்டொரு கிழவிகளுடன், அப்பாவை சுற்றி அமர்ந்து ஈனஸ்வரத்தில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது. அது சரி… அப்பாவின் சாவுக்கு இவ்வளவு பேர் வந்ததே பெரிய விஷயம்.
தூரத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த பெரியத்தான், திண்ணையில் உட்கார்ந்திருந்த என்னை நோக்கி, விடுவிடுவென வருவது தெரிந்தது. நான் பேசாமல் தலையை குனிந்தவாறு இருந்தேன். தோளில் கிடந்த துண்டை எடுத்து, திண்ணையை, இரண்டு முறை தட்டிவிட்டு, என்னருகில் அமர்ந்தார்; நான் யாரையும் ஏறெடுத்து பார்க்கவில்லை.
“”என்ன மாப்ள… நல்ல தூக்கமா? அது சரி… ஒரு நா முழுக்க பயணப்பட்டு வந்துருக்கீங்க… இருக்காதா பின்ன?”
நான் மவுனமாக இருந்தேன்.
என்னை விட, 20 வயது மூத்தவராக இருந்தாலும், மரியாதையாக, “வாங்க… போங்க…’ என்றே அழைப்பார்.
இப்போது என்றில்லை, பெரியக்காவை அவர் கட்டிய போது, நான் அரை டவுசருடன் மூக்கொழுகி நின்ற காலத்தில் கூட, “என்ன மாப்ள… ஒழுங்கா பள்ளிக்கூடம் போறீங்களா… இல்ல கூட்டாளிங்களோட வண்ணாங்கரையில குதிச்சு ஆட்டம் போடுறீங்களா…’ என்று கண்டிக்கும் போதும், இதே மரியாதை தான். குடும்பத்தில் கிட்டத்தட்ட அப்பாவுக்கு அடுத்தபடி.
காதெட்டும் தூரத்தில், புளிய மரத்தின் கீழே, தங்கவேல் அண்ணன் ரோட்டை பார்த்தவாறு திரும்பி நின்று, பீடி பிடித்துக் கொண்டிருந்தார். காது மட்டும் விடைத்தபடி எங்கள் பக்கம் இருந்தது.
கையில் டம்ளர் போட்டு மூடிய சொம்புடன் வந்த அண்ணன் பெண் வரலட்சுமி, “”சித்தப்பா… அம்மா சூடு ஆறிப் போவதற்குள்ள குடிக்க சொல்லிச்சு,” என்று கூறியவாறே, என் முகத்தை குறுகுறுவென பார்த்தாள்; கண்களில் சிரிப்பு தெரிந்தது. என்ன தான் சாவு வீடென்று அடக்கி வைக்கப்பட்டாலும், குழந்தைகளுக்கு துக்கமாக நடிக்க தெரிவதில்லை. அவர்கள் சாவை வாழ்க்கையின் இயல்பான நடப்பென்று ஏற்றுக் கொள்கின்றனர். பெரியவர்கள் தான், சாவு வீட்டில் அசாதாரண சூழ்நிலையை வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். சொம்பை வாங்கிக் கொண்டு அவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தேன். அவள் சந்தோஷமாக குதித்தபடியே ஓடிச் சென்றாள்.
பெரியத்தான், “”க்கும்…” என்று அடிதொண்டயில் செறுமி, என்னுடன் பேசிக் கொண்டிருப்பதை உணர்த்தினார். “”சாயங்காலம், 4:00 மணிக்குள்ள எடுத்தா தான், வந்தவுங்க எல்லாம், 7:00 மணி கடைசி பஸ்சை புடிக்க முடியும். நீங்க இப்படி எதுக்குமே ஒத்து வரலன்னா எப்பிடி… ஏற்பாடெல்லாம் செய்ய வேண்டாமா… நேத்து காலையில போனவரு, உடம்பு வேற வீச்சம் அடிக்க ஆரம்பிச்சுட்டு. நீங்க இப்படி எதையுமே ஒழுங்கா நடக்கவுடாம பிரச்னை பண்றது நல்லால்ல,” பெரியத்தான் குரலில் லேசான கோபம் தெரிந்தது.
நான் அப்பாவின் முகத்தையே பார்த்தேன்… வலது கண் தூங்குவது மாதிரி லேசாக மூடியிருக்க, இடது கண் பசை போட்டு ஒட்டியது போல அழுத்தமாக மூடி, அவரின் பட்டப் பெயரை பறைச்சாற்றியது.
அப்பாவை, சாமிக்கண்ணு ஆசாரி என்ற அவருடைய இயற்பெயரில், நிறைய பேருக்கு தெரியாது; எல்லாருக்கும் ஒத்தக்கண்ணு ஆசாரி தான்.
எங்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அப்பாவுக்கு, இடது கண் மூடி தான் இருந்தது. இருபது வயதில், இரும்பு பட்டறையில், வெட்டருவா அடிக்கும் போது, கொஞ்சம் பெரிய தீ கங்கு தெறித்து, இடது கண்ணில் விழுந்ததாய் சொல்வர். அப்பா, யாரையும் நிமிர்ந்து பார்த்து பேசியதில்லை; தலை தாழ்ந்தே இருக்கும். சற்றே கரகரப்பான குரல். எங்களை பொறுத்தவரை, அப்பா என்றால் ஒற்றை நாடி, சட்டையில்லா கறுப்பு வெற்றுடம்பில், ஒரு அழுக்கு பூணூல், அழுக்கு வேட்டி, சிரித்தறியா முகத்துடன் வீட்டில் யாருடனும் ஒட்டாத ஒரு நபர்.
அப்பாவின் மடியில், ஆசையாக குதித்து விளையாடியதில்லை நாங்கள். அப்பா எங்களுடன் அதிகம் பேசியதில்லை; நாங்களும், அவரிடம் போக மாட்டோம். எதுவாக இருந்தாலும், அம்மா வழியே தான். அப்பா விடுவிடுவென நடந்து வருவதை, தூரத்தில் பார்த்தாலே, அங்கங்கே பதுங்கிக் கொள்வோம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், வாய் பேசாது; அவர் கை தான் பேசும். அவரின் அந்த முரட்டுத் தனத்தை, எங்கள் ஒவ்வொருவரின் உடம்பிலும், உள்ள தழும்புகள் இன்றும் கசப்பாக சொல்லிக் கொண்டிருக்கின்றன.
அப்பாவின் பழக்கங்கள் வினோதமானவை. சாயந்தரம், 6:00 மணிக்கு, பட்டறையை மூடி, வீட்டு உபயோகத்துக்கென்று வெட்டபட்ட குட்டையில் கால்களை நனைத்து, குட்டையையே பார்த்தபடி அமர்ந்திருப்பார். அம்மா, 9:00 மணிக்கு சாப்பிட அழைக்கும் வரை, எழுந்திருக்க மாட்டார். வாய், வெற்றிலை, புகையிலையை குதப்பிக் கொண்டே இருக்கும். சாப்பாடு கூட, தண்ணி விட்ட பழைய சோறு தான். அதுவும், அவரது பிரத்யேக குழிந்த தட்டில், பக்கத்தில் சின்ன தையல் இலையில் உப்பு நார்த்தங்காய்; வேறு தின்பண்டம் எதுவும் கிடையாது. எனக்கு தெரிந்து, இது மாறியதே இல்லை; மாறினால், என்ன நடக்கும் என்பதை, அப்பா ஒரு முறை எங்களுக்கு எச்சரித்தார்.
அப்போது எனக்கு, ஆறு வயதிருக்கும்; தீபாவளி சமயம். பின் பக்கம் சமையல் கொட்டாயில் பெரியக்கா அதிரசம் சுட்டுக் கொண்டிருந்தது. நன்றாக வந்திருந்தது போல… என்னவோ தோன்றி, அதிரசத்தை ஒரு சிறிய இலையில் வைத்து, ஆசை, ஆசையாக கொண்டு வந்து, வாசலில் யாருடனோ உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அப்பாவின் மடியில் வைத்தது. ஏதோ பாம்பை மடியில் விட்டது போல, சடாரென்று பதறி எழுந்து, மடியை உதறிய அப்பா, லேசான பயத்துடன் பின் வாங்கிய அக்காவை, வயதுக்கு வந்த பெண் என்று கூட பார்க்காமல், முடியை பிடித்து, பக்கத்திலிருந்த தூணில் முட்டியதும், அக்கா நெற்றியில் ரத்தம் வழிந்ததும், இன்றும் கண் முன்னாலேயே நிற்கிறது.
­””என்ன இருந்தாலும் வழக்கமுன்னு ஒண்ணு இருக்கு இல்ல… காலங்காலமா, பெரியவங்க அர்த்தம் இல்லாமலா, எல்லாத்தையும் செஞ்சிருப்பாங்க… இந்த தங்கவேலு மாப்ள என்னான்னா, எதுலேயும் பட்டுக்காம எந்த முடிவா இருந்தாலும், நம்மள எடுத்துக்க சொல்றாரு… நேரம் வேற போயிக்கிட்டே இருக்கு…” பெரியத்தானின் குரல், என்னை நிகழ்காலத்திற்கு இழுத்தது.
“”இப்பவே சொந்த, பந்தமெல்லாம் ஒரு மாதிரியா நம்ம காது பட பேசுறாங்க… அவுரு பெத்த புள்ளைங்கறதால தான் மரியாதை குடுத்து பேசிக்கிட்டு இருக்கேன். இல்லைன்னா, நானே தூக்கி போட்டுட்டு, கொள்ளி வச்சிட்டு போயிடுவேன். நாலெழுத்து படிச்சிட்டு, வெளிநாடு போயி நாலு காசு சம்பாரிச்சுட்டா, எல்லாரும் பெரிய மனுசனாயிடுவீங்க… நீங்க எத செஞ்சாலும், நாங்க வாய மூடிக்கிட்டு உக்காந்திருக்கணும்… இல்ல?” பெரியத்தான், கோபமாக பேசிக் கொண்டே இருந்தார்.
அப்பாவை எப்போது பார்த்தாலும், பேயைக் கண்டது போல் பயந்து ஓடியது, அம்மாவின் காதறுந்த பிறகு தான். அப்போது, நான் ஒன்றா வதோ, ரெண்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன்.
அந்த சமயத்தில் தான், தங்கவேல் அண்ணன் எட்டாம் கிளாஸ் பாசாகி இருந்தார். மேற்கொண்டு படிக்க வைக்க வசதி இல்லாமல், கும்பகோணம் மாரியப்ப ஆசாரியிடம் மர வேலை கற்றுக் கொள்ள, அவரை அங்கு அனுப்ப, அப்பா முடிவெடுத்தார். தங்கவேல் அண்ணன், அதிகம் பேச மாட்டார். யார் எந்த முடிவெடுத்தாலும், கட்டுப்படக் கூடியவர். அப்பாவின் முடிவின்படி, மறு பேச்சு பேசாமல், பையை தூக்கிக் கொண்டு கிளம்பினார்; ஆனால், அம்மாவுக்கு இதில் விருப்பமில்லை.
அண்ணன் மேல் அம்மாவுக்கு தனி பிரியம். கிளம்பி கொண்டிருந்தவர்களை இடை மறித்து கெஞ்சலாக, “இப்ப எதுக்கு அவ்வளோ தூரம் அனுப்பறீங்க… நம்ம பட்டறையிலேயே உங்களுக்கு ஒத்தாசையா இருக்கட்டுமே…’ என்றது. கோபமாக நிமிர்ந்த அப்பாவின் அந்த ஒற்றை கண், அம்மா அடுப்பங்கறை உள்ளே விழுந்தபின் தான் தழைந்தது.
நான் பயத்தின் உச்சியில் அழுது கொண்டே அம்மாவிடம் ஓடினேன். இடது காதை மூடியபடி அதிர்ச்சியாக அம்மா உட்கார்ந்திருந்தது. கையை பிடித்து இழுத்தேன்; தோட்டை காணோம், காதறுந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஜன்னல் வழியே அப்பா தூரத்தில் விடுவிடுவென போய் கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் அண்ணன் கலவரத்துடன் வீட்டை திரும்பி, திரும்பி பார்த்தவாறு ஓட்டமும், நடையுமா போய்க் கொண்டிருந்தது தெரிந்தது. அன்றிலிருந்து அம்மா இறக்கும் வரை, அம்மாவின் அந்த அழகான காதில் தோடுகளே இல்லை.
மணி, 1:00 ஆகியது. சொந்த பந்தங்களின் குழப்பங்களுடன் வெயில் வேறு அதிகரித்து கொண்டே இருந்தது. பக்கத்து வீட்டு செல்வியக்கா வீட்டில், மதிய சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாய் கூறி, அண்ணி அழைத்து சென்றது. கூடத்தில் அரை இருட்டில், பந்தி பாய் விரிக்கப்பட்டு, வாழை இலைகள் போடப்பட்டிருந்தன. ஏற்கனவே நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். “”ஏம்பா சாந்திக்கு சொன்னீங்களா… இன்னும் காணுமே…” சாம்பாரை ஊற்றியபடி, செல்வியக்கா ஆவலாய் கேட்டது. பழைய தோழியை பார்க்கும் ஏக்கம் அக்காவின் குரலில். “”எல்லாம் நேத்து காலையிலயே சொல்லியாச்சு. அவளுக்கு அவ அப்பன் செத்தப்பறமும், அவரு மூஞ்சில முழிக்கற எண்ணம் இல்லையாம். அவ புருஷன் மட்டும், 9:00 மணிக்கு காரைக்கால்லேர்ந்து, பொறப்பட்டதா தகவல் வந்துச்சி,” பக்கத்து இலையில சாப்பிட்டுக் கொண்டிருந்த பெரியத்தான், கடுப்புடன் பதிலளித்தார்.
“”ஹும்… கிட்டத்தட்ட, 20 வருஷம் ஆச்சி… அவள பார்த்து,” என்று சொல்லி, செல்வியக்கா பெருமூச்சுடன் நகர்ந்தது.
சாந்தியக்காவின் இந்த உறுதியான வைராக்கியத்தில், ஆச்சரியம் ஒன்றுமில்லை. சாந்தி என்னுடைய இரண்டாவது அக்கா. என்னை விட, 10 வயது மூத்தவள். எங்கள் குடும்பத்திலேயே நல்ல நிறத்துடன், அழகாக இருப்பாள். எப்போதும் கல கலவென சிரித்த முகத்துடன் வளைய வருவாள். லட்சுமி அத்தையின் மூத்த மகன் கார்த்திகேயனை, அக்கா விரும்பியதாய் சொல்வர்; அவரும், இவள் மேல் உயிரையே வைத்திருந்தாராம்; திறமையானவர். அந்த சின்ன வயதிலேயே, இரும்பு பட்டறை வைத்து நன்றாக சம்பாதித்தார். அத்தையும், தம்பி மகளையே மருமகளாக்கி கொள்ள ஆசைப்பட்டு, அப்பாவிடம் பெண் கேட்டது, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
அன்றைக்கு எனக்கு நல்ல ஜுரம். உள்ளறையிலேயே போர்த்தி கொண்டு அவர்களை பார்த்தபடி படுத்திருந்தேன். வெற்றிலை – பாக்கு தட்டை, வாசலை நோக்கி விசிறி அடித்தார் அப்பா. விக்கித்து நின்ற அத்தையை பார்த்து, “ஒம்மவனுக்கு என் பெண்ணை நிச்சயமா குடுக்க மாட்டேன்; இனிமே இந்த பேச்சு பேசிக்கிட்டு, இந்த வீட்டு வாசல மிதிக்காதே…’ அப்பா போட்ட சப்தம், நிச்சயம் தெரு முனையில நின்று கொண்டிருந்த கார்த்தி அத்தானுக்கு கேட்டிருக்கும். சாந்தியக்கா வேகமாய் உள்ளறைக்கு ஓடி வந்து கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, மேல் உத்திரத்தை பார்த்தது. அப்பறம் எதேச்சையாக பாயில் ஓரமாக படுத்திருந்த என்னை பார்த்ததும், அதிர்ச்சியுடன் செய்வதறியாமல் மூலையில் உட்கார்ந்து, குலுங்கி, குலுங்கி அழுதது.
அடுத்த இரண்டு நாள், சாந்தி அக்காவின் பட்டினி, அப்பாவின் மனதை மாற்றவில்லை. மூன்றாவது நாள், அங்கென்ன வாக்குவாதமோ, பயிருக்கு அடிக்க வைத்திருந்த பாலிடாலை, டீயில் கலந்து குடித்து, கார்த்தி அத்தான் இறந்து விட்டதாய் தகவல் வந்தது. சாவு வீட்டுக்கு நாங்கள் யாருமே போகவில்லை. கருமாதி கழிந்ததும், ஓடி வந்த லட்சுமி அத்தை, வீட்டு வாசலில் நின்று, மண்ணைவாரி தூற்றியதும், அம்மா, “வேணாம் அத்தாச்சி…’ என்று, கண்ணீருடன் கெஞ்சியதும், கொஞ்சம் தள்ளி பட்டறையில் சம்மட்டியால் இரும்பை ஓங்கி அடித்துக் கொண்டிருந்த அப்பாவின் காதில் விழவே இல்லை.
சாந்தியக்கா பித்து பிடித்தாற் போல, யாருடனும் பேசாமல் உள்ளறையிலேயே விழுந்து கிடந்தது. அடுத்த மாதம் காரைக்காலில் வாத்தியார் வேலை பார்த்துக் கொண்டிருந்த, தூரத்து சொந்தமான சண்முகத்துக்கு, சாந்தி அக்காவை, அப்பா கட்டி கொடுத்து விட்டார். சாந்தி அக்கா முகத்துல, பழைய சிரிப்பே மறைந்து போனது. நடை பிணம் போல் புருஷன் வீட்டுக்கு போகும் போது, “இனிமே எனக்கும், இந்த குடும்பத்துக்கும் எந்த ஒட்டு ஒறவும் இல்ல… நானும், இங்க வர மாட்டேன்; நீங்களும் என்னை பாக்க வரப்படாது… மீறி வந்தீங்கன்னா, மண்ணெண்ணய ஊத்தி கொளுத்திக்கிட்டு செத்து போயிடுவேன்…’ என்று, அம்மாவிடம் சொல்லிவிட்டு போய் விட்டது. சொன்ன மாதிரியே அம்மாவின் சாவுக்கு கூட சாந்தியக்கா வரவில்லை.
கிட்டத்தட்ட எல்லாரும் அப்பாவை விட்டு ஒதுங்கி விட்டோம். தங்கவேல் அண்ணன் மட்டும் அப்பாவுடன் சின்ன, சின்ன தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தார். கடைசியாக அம்மா சாவில் யாருமே செய்ய துணியாத அப்பாவின் செய்கை, இந்த ஊரை விட்டே ஒழிந்து போக வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அந்த சமயம், நான் டிப்ளமோ முடித்து, சிங்கப்பூரில் வேலைக்காக முயன்று கொண்டிருந்தேன். அம்மாவுக்கு காசநோய் முற்றிக் கொண்டிருந்தது; வைத்தியங்கள் கை கொடுக்கவில்லை. அம்மாவின் கண்களில் இரண்டாம் மகளையும், பேரக் குழந்தைகளையும் பார்க்கும் ஏக்கம், ஆள் விட்டு சொல்லி அனுப்பியும், சாந்தி அக்கா வரவில்லை.
அன்றிலிருந்து ஒன்பதாவது நாள், அம்மா இறந்து போனது. அப்பா, அம்மாவின் இறுதி ஊர்வலத்திற்கு தேவையான பணத்தை, பெரியத்தானிடம் கொடுத்துவிட்டு, எதிலும் கலந்து கொள்ளாமல், ஒதுங்கி, யாருடனும் பேசாமல், அமர்ந்து கொண்டார்.
ஊரே வற்புறுத்தியும் அப்பா, அம்மாவின் கடைசி வழியனுப்பிற்கு, கொள்ளி வைக்க காட்டிற்கு போகவில்லை. கடைசியில் தங்கவேல் அண்ணன் தான் கொள்ளி வைத்தார். எதையும் பெரிதுபடுத்தாமல், அப்பாவிடம் மரியாதை வைத்திருந்த பெரியத்தான் கூட அக்காவிடம், “இப்படி ஒரு மனுஷன் இருப்பாரா?’ என்று வருத்தப்பட்டாராம்.
இதையெல்லாம் பார்க்க சகிக்காமல், அப்பாவின் முகத்தில் இனி விழிக்கக் கூடாது என்ற வைராக்கியத்தோடு, அடுத்த நாளே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், நாகையிலிருந்த என் நண்பன் வீட்டுக்கு சென்று விட்டேன். அங்கிருந்தபடி, 10 நாட்களில் சென்னையிலிருந்து, சிங்கப்பூருக்கு சென்று விட்டேன்.
ஐந்து வருடங்கள் கழித்து, போன மாதம், அப்பாவுக்கு, மூளையில் கட்டி வந்து, படுத்த படுக்கையாய் இருப்பதாகவும், கடைசியாய் ஒரு முறை, அவரை வந்து பார்த்துவிட்டுப் போகும் படியும் தங்கவேல் அண்ணன் போன் செய்தார். அப்பாவுக்கென இல்லையென்றாலும், ஊரில் எல்லாரையும் பார்க்க ஆசைப்பட்டு போன மாதம் தான் வந்தேன். பக்கத்து வீட்டு செல்வியக்கா தான் வேலியோரமாய் அழைத்து, “சும்மா சொல்லக் கூடாதுடா தம்பி… உங்கண்ணி, உங்கப்பாவை பெத்த பொண்ணு மாதிரி பாத்துக்கறா, பீ, மூத்தரம் மொதக் கொண்டு அள்றான்னா பாத்துக்கயேன். சொந்த பொண்ணுங்கள அண்டவுடாம தொரத்துன பாவத்துக்கு, உங்கப்பாவுக்கு இந்த மருமவ, உங்கம்மா செஞ்ச புண்ணியந்தான்…’ என்று கிசுகிசுத்தது.
“சோளியன் குடுமி சும்மா ஆடுமா… அவளுக்கு அடுத்தவள, நம்ம சரவணனுக்கு இளுத்துவுடணும்ன்னு பாக்கறா. சும்மாவா… சிங்கப்பூர் காசில்ல…’ என்றபடி கொல்லப்பக்கம் வாய் கொப்பளிக்க வந்த முருகாயி அத்தையின் குரல் கேட்டு, செல்வி அக்கா மெதுவாக நழுவியது.
நான் சிரித்தபடி, நாகையில் பலசரக்கு கடை வைத்திருக்கும் என் நண்பனை பார்க்க கிளம்பினேன். செருப்பு போடும் போது, யாரோ என்னை உற்று பார்ப்பது போல், பின் கழுத்து குறுகுறுத்தது. தயக்கத்துடன் அப்பா படுத்திருந்த கயிற்று கட்டில் பக்கம் திரும்பினேன். என் யூகப்படி, அப்பா தான் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். கை, கால் செயலிழந்த நிலையில், வாயில் வழிந்த எச்சிலைக் கூட துடைக்க முடியாமல், அவரின் வலது கண் என்னையே பரிதாபமாய் பார்த்து கொண்டிருந்தது, மனதை பிசைந்தது.
முதலில் தயங்கினாலும், பின் மெதுவாக அவரிடம் சென்றேன். அருகில் அமர்ந்து, துண்டால் எச்சிலை துடைத்து விட்டேன். என் முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்த அப்பா, திடீரென்று, வாய் கோணி, வினோத சத்ததுடன் அழுதார். என்னை அறியாமல், என் கண்கள் கலங்கின. அப்பாவின் அந்த கரகரத்த குரல் ஜீவனில்லாமல், சோர்வுடன் ஏதோ சொல்ல முயல்வது தெரிந்தது. குனிந்து அவர் வாயருகே காதை குவித்தேன். திக்கி, திணறி கோர்வில்லாமல், அப்பாவிடம் இருந்து சொற்கள்… கண்ணீர் வழிய, இரண்டு சுட்ட சுள்ளிகளை போல் இருந்த அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டேன்.
கையெல்லாம் தீக்காயத்தின் தழும்பு, அடுத்தடுத்து அப்பா, அம்மா இறந்து போக, நான்கு சகோதரிகளை கரையேற்ற குலத்தொழிலை தவிர வேறு தெரியாததால், 10 வயதிலேயே சம்மட்டி பிடித்த கை… கழுத்தில், முகத்தில், மார்பில் சின்ன, சின்னக் கரும்புள்ளிகளாய் தீத்தழும்பு. வாழ்நாள் முழுவதும் நெருப்பிலேயே வெந்த உடம்பு. நெருப்பை வெறுத்தவாறே எங்களுக்காக நெருப்பில் உழைத்திருக்கிறார். வேலை நேரம் போக, குளுமையாகவே இருக்க நினைத்திருக்கிறார்.
சூடான சோற்றை கூட விரும்பவில்லை. தன்னை போலவே நெருப்பில் வேகும் ஒருவனுக்கு, பெண்ணைக் கொடுக்க மனமில்லாமல், விரட்டியிருக்கிறார். அம்மா, தன் கடைசி பயணத்தில் கூட, நெருப்பில் சுடப்படுவதை பார்க்க விருப்பமில்லை அவருக்கு. எவ்வளவு மோசமான சூழலிலும், வாய் திறந்து தன் மனதில் இருப்பதை கூட சொல்லத் தெரியாத ஒரு முரட்டு கிராமத்து மனிதன் என்று அப்பாவை பற்றி புரிந்தது. நாங்கள் அப்பாவை வேறு விதமாக அணுகியிருக்க வேண்டும்.
அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்; மணி, 3:00 ஆகி இருந்தது. பல்லக்கு கட்ட ஆட்கள் வந்து விட்டனர். என் முடிவை, என்ன சொல்லியும் மாற்ற முடியாத பெரியத்தான், ஊர் பெரியவர்களை என்னிடம் பேச அழைத்து வந்து விட்டார்.
ஆளாளுக்கு என்னிடம் ஏதோ பேச வர, ஒரே சப்தம். நான் சட்டென்று எழுந்து கொண்டேன். என் முடிவை, உறுதியாய் சொல்லும் நேரம் வந்து விட்டது. சுற்றி சொந்த பந்தங்களும், ஊர் பெரியவர்களும் கூடியிருக்க எல்லாரையும் பார்த்து சொன்னேன்…
“”எம்முடிவ யாரும் மாத்த முயற்சி செய்யாதீங்க… இது, என் முடிவு மட்டும் இல்ல. இறந்து போன எங்கப்பாவோட கடைசி ஆசை… அவரு விருப்பத்துக்கு முன்னாடி எந்த சம்பிரதாயமோ, சடங்கோ எனக்கு முக்கியமில்லை. காலம் பூரா நெருப்புல வெந்த அவரோட உடம்பு, செத்ததுக்கு அப்புறமாவது, குளிர்ச்சியா இருக்கட்டும். அப்பாவை பொதைக்கறது தான் சரி. டேய் மணி… அப்பாவை குளிப்பாட்டறதுக்கு ஏற்பாடு செய்யுடா!”

– சுஜா சிவா (அக்டோபர் 2011)

இயற்பெயர் : சுஜாதா
வயது: 38
கணவர் பெயர்: ரா.சிவராமன்
கல்வி: பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், அண்ணாமலை பல்கலைக்கழகம்.
தொழில்: திரைப்பட இயக்குனர் நந்தினியிடம், உதவி இயக்குனராக பணிபுரிகிறார்.
தற்போதைய பணி: விளம்பர படங்கள் மற்றும் இயக்குனர் நந்தினியுடன், புதிய திரைப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதை வடிவமைத்தல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *