அப்பா அப்பாதான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 9, 2019
பார்வையிட்டோர்: 6,506 
 

“அம்மா, ரொம்ப வெயிலா இருக்கு. இந்தப் பதை பதைக்கிற வெயில்ல உன்னால இப்ப பாங்க் வர முடியுமாம்மா?” எழுபது வயது அம்மாவை அக்கறையோடு கேட்டார் பரந்தாமன்.

“பரவாயில்லைடா… நான் வரேன். சீக்கிரமா பாங்க் வேலையை முடிச்சுட்டு ஆத்துக்கு திரும்பி வந்துடலாம்…”

“மறக்காம லாக்கர் கீயை எடுத்துக்கோ.. அப்பாக்கும் உனக்கும் பாங்க் லாக்கர் ஜாயின்ட் அக்கவுண்ட்ல இருக்கு….”

அம்மா எடுத்துக் கொண்டதும், ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் கிளம்பினர்.

பரந்தாமன் பேங்க் மானேஜரைப் பார்த்து அவரிடம், தன்னுடைய அப்பா இறந்து போனதைச் சொன்னார். ஒரு நல்ல கஸ்டமர் இறந்துபோனதை நினைத்து சற்றுநேரம் வருந்தினார் மனேஜர்.

டெத் சர்டிபிகேட்; வாரிசு சர்டிபிகேட்; பாஸ் புக்; மானேஜரிடம் கொடுத்தபின், ஒரு கவரிங் லெட்டர் அவரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு “என்னுடைய அம்மா வேதவல்லி பெயர்லயே எல்லாத்தையும் மாத்திடுங்க சார்…” என்றார் பரந்தாமன்.

அம்மா தலையைக் குனிந்தபடி சோகமாக அமர்ந்திருந்தாள். அப்பா இறந்துபோன இந்த இருபது நாட்களில் அம்மா ரொம்பவும்தான் ஆடிப்போய்விட்டாள். பரந்தாமனும் அவர மனைவியும், “இறப்பு என்பது எல்லோருக்குமே நிரந்தரமானது… அப்பா எழுபத்தியைந்து வயதுவரை நன்றாக வாழுந்துதானே இறந்தார்” என்று அம்மாவை சமாதானப் படுத்தினர்.

மானேஜர் அவர்களை சற்று நேரம் வெளியே அமரச் சொன்னார்.

செப்டம்பர் மாதக் கடைசியில் மகன் ரமணனுக்கு உபநயனம் செய்துடலாம்னு அப்பாவிடம் கடந்த ஜூன் மாதமே நாள் பார்க்கச் சொல்லியிருந்தார் பரந்தாமன்.

அப்பா உடனே பத்துப் பதினைந்து வயது குறைந்தவராக, ஆட்டோ பிடிச்சு நாலு இடம் போய் நல்ல நாள் பார்த்து குறித்துக்கொண்டு வந்தார். . அப்போது பரந்தாமனுக்குத் தெரியாது செப்டம்பர் முதல் வாரமே அப்பா போயிடுவார்ன்னு…

“பரந்து, நீ பணம் எதுவும் கொண்டு வரவேண்டாம், என் பேரன் ரமணனை மட்டும் இங்க கூட்டிண்டு வா, என் பேரனுக்கு எல்லாச் செலவையும் நான்தான் செய்வேன்” என்று சந்தோஷமாகச் சொன்ன அப்பா இப்போது இல்லை.

பென்ஷன் பணம்; நிலத்தில் கிடைக்கும் கொஞ்சம் மகசூல் பணம்; இதெல்லாம் சேர்த்து வைத்திருப்பாரோ… தவிர ஊர்ல ஒரு வீடு இருக்கு, அதையும் வாடகைக்கு விட்டிருந்தார். வாடகைப்பணத்தை நேராக பேங்குக்கு அந்த டெனன்ட் அனுப்பிவிடுவார்.

“லாக்கர்ல அதிகம் எதுவும் இல்லை… எதுக்கு அதுக்கு வேஸ்ட்டா வருஷத்துக்கு ஆயிரத்து ஐநூறு வாடகைவேற கொடுக்கணும்” என்று அம்மா ஒருமுறை சொன்னபோது, “நம்ம பையன் சீக்கிரமா நிறைய நகைகள் வாங்கி அதுல அடுக்குவான் பாரு” என்று அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்…

பரந்தாமன் சம்பாதிக்க ஆரம்பித்து முதல் மாதச் சம்பளம் வாங்கியவுடன், அவர் பெயரிலேயே ஒரு பாங்க் அக்கவுண்ட் திறந்து அதில் மாதா மாதம் சம்பளப் பணத்தைப் போட்டு சேமிக்கக் கற்றுக் கொடுத்தவர் அப்பா…

தற்போது பரந்தாமனுக்கு கல்யாணமாகி பல வருடங்கள் முடிந்த நிலையில் – பிள்ளைகள் படிப்பு; நகர வாழ்க்கையில் வீட்டு வாடகை; இதர குடும்பச் செலவுகள் என்று எப்போதும் செலவுக்கு மேல் செலவுகள்தான்…

எந்த மாதமும் அப்பா பரந்தாமனிடம் பணம் அனுப்பச்சொல்லி கேட்டதேயில்லை. ஆனால் அதற்கு மாறாக அவர்தான் தீபாவளி, பொங்கல், கார்த்திகை தீபம், ஆடிப்பெருக்கு என்று எல்லோருக்கும் உடைகள் வாங்கி அனுப்புவதும்… அவர் மனைவியிடம் “டவுன்ல உனக்கு இதெல்லாம் செய்ய நேரமே இருக்காது” என்று சொல்லி, அம்மா வித விதமான பஷணங்கள் செய்து அனுப்புவதும் வருடா வருடம் நடந்த இன்பமான நிகழ்வுகள்…

அப்பாவும், அம்மாவும் தனியாக இருக்கிறார்கள் என்று லீவு விடும் போதெல்லாம் மகனை அவர்களிடம் அனுப்பி வைப்பார் பரந்தாமன். அப்பா அலுக்காது ஒவ்வொரு முறையும் பேரனுக்கு செயின்; மோதிரம்; ப்ரெஸ்லேட்; சைக்கிள் என்று விலை உயர்வான பொருட்களை வாங்கிக் கொடுப்பார். அவருக்கு செலவுக்கு பணம் இருக்கான்னு எப்போதாவது பரந்தாமன் கேட்டாலும், “நிறைய இருக்கு… கவலையே படாதே, சிக்கனம்தான் சேமிப்பு. பகவான் கொடுக்கிறதை பத்திரமா எண்ணி எண்ணி செலவு பண்ணினாலே நிறைய சேமிப்புதான்” என்பார்….

“சார்… மானேஜர் உங்களைக் கூப்பிடறார்…”

அப்பா பற்றிய நினைவுகள் கலைந்து உள்ளே சென்றார் பரந்தாமன்.

“உங்க அப்பாவோட அக்கவுண்ட்ல நான்கு லட்சத்து எண்பதாயிரம் இருக்கு…அதை அப்படியே உங்க அம்மா அக்கவுண்டுக்கு மாத்திடவா?”

“சரி சார்…”

வெளியே வந்து அம்மாவிடம் சொன்னார்.

அம்மா உடனே, “அது எல்லாத்தையும் ரமணனோட உபநயனத்துக்கு நீயே எடுத்துக்கொள்… அதுக்குத்தான் உன்னோட அப்பா சேர்த்து வைத்திருந்தார்…” என்றாள்.

“இந்த நிலையில் உபநயனம் எப்படிம்மா?”

“அதை நீ எப்போது செய்தாலும் இந்தப் பணத்தில்தான் செய்யணும்… அதுதான் அப்பாவோட ஆசை.”

“சரிம்மா..இப்ப மேனேஜரிடம் சொல்லிக்கொண்டு ஆத்துக்கு கிளம்பலாம்”

மானேஜர், “லாக்கர்ல எதுவும் பார்க்கலையா?” என்றார்.

“ஓ சாரி சார்… அதை மறந்தே போயிட்டோம்.”

அம்மாவும், பையனும் பேஸ்மென்ட் சென்று லாக்கரை சாவி போட்டுத் திறந்தார்கள்.

உள்ளே இரண்டு பெரிய பேப்பர் கட்டுகள். பிரித்துப் பார்த்தபோது அவைகள் அந்தப் பேங்கின் ஷேர் பத்திரங்கள். ஆயிரம் ஷேர்கள், ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு. ஷேர்கள் எல்லாவற்றையும் அம்மாவின் பெயரில் வாங்கி வைத்திருந்தார் அப்பா.

பத்து லட்சம் ரூபாய்க்கான ஷேர்கள்….

அது தவிர, தனியாக ஒரு சுருக்குப் பை லாக்கரில் இருந்தது.

பரந்தாமன் அவசரமாக அதை எடுத்து பிரித்துப் பார்த்தார்.

உள்ளே ஒரு செட் வெள்ளிப் பூணல்! ஒரு செட் தங்கப் பூணல்!!

அதைப் பார்த்த பரந்தாமனுக்கு துக்கம் பீறிட்டது. குலுங்கிக் குலுங்கி அழத் தோடங்கினார்.

பேரனின் உபநயனத்துக்கு எவ்வளவு ப்ளான் செய்து வைத்திருக்கிறார் அப்பா? ஆனால் அதை சிறப்பாக நடத்தி வைக்க அவர் உயிருடன் இல்லையே… வேதனையில் உருகினார் பரந்தாமன்.

கண்கள் கலங்கிய அம்மா, மகனை கட்டியணைத்து ஆறுதல் சொன்னாள்.

எல்லாவற்றையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு இருவரும் வெளியேறினர்.

ஆட்டோவில் வீட்டுக்கு வரும்போது பரந்தாமன் “எனக்குன்னு ஒரு செலவுகூட வைக்கலையே அப்பா… உங்களுக்கும்கூட பேங்க் ஷேர் பத்து லட்சத்துக்கு வாங்கி வச்சிட்டுப் போயிட்டாரே… அவரோட காலத்துக்குப் பிறகும் அவர் காசு நமக்கு வந்து கொண்டிருக்கு…” அம்மாவின் கரத்தைப் பிடித்துக்கொண்டு சோகத்தில் மனம் கலங்கினார்.

“அதாண்டா அப்பா…”

“அப்பா… அப்பா… அப்பா” என்று பரந்தாமன் உள்ளம் நெகிழ்ந்தார்.

ஒரு அப்பா இறந்த பிறகே உலகம் அவரை முழுதாகப் புரிந்துகொள்கிறது.

தாய் பத்து மாதங்கள் தன் குழந்தையைச் சுமந்தாள் என்றால்; தகப்பனோ தன் வாழ்நாள் பூராவும் உழைப்பிலும், மனதிலும், தோளிலும் குழந்தையைச் சுமக்கிறான்.

அப்பா அப்பாதான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *