அப்பாவும், அவரது டட்சன் 120Y-யும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 9,927 
 

மதிய உணவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சாப்பிடுவதற்காக அலுவலகம் விட்டு வெளியேறினேன். அலுவலகம் எதிரே இருக்கும் ஒட்டுக்கடையை நோக்கிச் சென்றேன். கடையில் அமர்ந்திருந்தபோது, சாலையில் ஒரு வெள்ளை நிற டட்சன் 120Y வண்டி என்னை கடந்துச் சென்றது. மனதில் மறைந்திருந்த அப்பாவின் முகம் தானாகவே நிழலாடியது. எப்படியும் முப்பது வருடமாவது இருக்கும் அந்த வண்டிக்கு. இன்னும் சாலையில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இப்போதெல்லாம் அந்த ரக வண்டியைக் காண்பது அரிதாகி விட்டது. வண்டி என் கண்களிலிருந்து மறையும் வரை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். பார்வையின் தூரத்திலிருந்து வண்டி மறைந்தபோது, மனத்திரை முப்பது ஆண்டுகளைப் பின்னோக்கி அப்பாவின் காலத்தை ஒரு நிறுத்தத்தில் நிறுத்தியது.

அப்பாவின் இறப்பை, இறந்தகாலம் மூழ்கடித்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. டட்சன் 120Y வண்டியைக் காணும் போதெல்லாம் ஆழ்மனதில் மறைந்திருக்கும் அப்பாவின் ஞாபகங்கள் மீண்டும் எனக்குள் உயிர்த்தெழுந்து விடுகின்றன. அப்பாவுக்கும் அந்த வண்டிக்கும் இடையே மறைந்திருக்கும் மெல்லிய உறவு இன்றளவும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது எத்தனை பேருக்கும் தெரியும்? வண்டி என்பது வெறும் பிரயாணத்திற்கு மட்டுமே என்றளவில் நில்லாது அதையும் கடந்து, அது ஒருவரின் கௌரவமாக திகழ்கிறது. ஒருவர் பயன்படுத்தும் வண்டியே அவரவர் புறநிலை வாழ்க்கையை உலகுக்கு எடுத்துரைக்கும். என்னை பொறுத்தமட்டில் டட்சன் 120Y வண்டி அப்பாவின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு குறியீடாகவே திகழ்ந்தது.

ஐந்தரையடி உயரத்தில் மெலிந்த உடல். ஒட்டிப்போன முகத்தில் கோடிட்டது போன்ற மீசை. அப்பாவின் அன்றைய புறத்தோற்றம், அவர் எல்லோருக்கும் ஒரு பொடியன் போலவே இருந்திருந்தாலும் மனோபலத்தில் அவர் ஒரு பயில்வானுக்கு ஒத்தானவர் என்பது பலருக்கும் தெரியாது. அப்போது தெலுக் பூலோ தோட்டத்தில் டிரெக்டர் ஓட்டிக் கொண்டிருந்தார் அப்பா. அவரது குடும்ப வாழ்க்கையும் அங்குதான் வெள்ளோட்டம் கண்டது. தோட்டத்தில் அப்பாவை மதிக்காதவர்களே கிடையாது. அப்பாவின் வாழ்க்கைமுறை அவருக்கு மட்டுமல்லாது குடும்பத்திற்கும் தனி கௌரவத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்பாவிடமிருந்து தோட்டம் கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகம். தோட்டத்துக்குத் தெரியாது அதன் பின் அம்மா இருக்கிறாள் என்பது.

நான் சிறுவனாக இருந்தபோது ஒவ்வொரு இரவுகளும் என்னை கடந்துபோக, தன் நெஞ்சுமேல் படுக்க வைத்து தன் ஆரம்ப வாழ்க்கையை எனக்கு கதையாக சொல்லி உறங்க வைத்தவர் அப்பா. அவரது கதைகள் ஒவ்வொன்றும் என் மனதில் ஆழப்பதிந்தவை. அதனாலேயே என் கனவிலும் அப்பா ஒரு கதாப்பாத்திரமாக நுழைந்து அவரது கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். இப்படியாகவே நான் அப்பாவையும் அவரது வாழ்க்கைப் பின்னனியும் அறிந்துகொண்டிருந்தேன்.

ஊரில் நம்மாட்களில் வண்டியை வாங்கிய முதல் ஆள் நான்தானென பெருமிதம் கொண்ட அப்பாவின் வார்த்தைகள் இன்னும் எனக்குள் பதிந்திருக்கின்றன. அப்போதைக்கு மோட்டார் வண்டியை வாங்கும் சக்தி எல்லோருக்கும் வாய்க்கவில்லை. 1975 ஆண்டு காலம் தோட்டத்திலேயே உழன்று கொண்டிருந்தது. அப்போது பலர் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்த போது, சிலர் மட்டுமே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள். அப்பாவும் தனக்கென ஒரு சுசூக்கி மோட்டார் சைக்கிளை வைத்திருந்தார். அப்பா அதிலிலேயே பல மைல்கள் தூரம் சென்று அம்மாவைக் காதலித்து கரம் பிடித்ததாக சொல்லிச் சிரித்ததும் எனக்கு நினைவில் உண்டு.

திருமணத்துக்குப் பிற்பாடுதான் அப்பா மோட்டார் வண்டியை வாங்கியிருந்ததாக கூறியிருந்தார். எண்பதாம் ஆண்டு காலக்கட்டத்தில், நாட்டில் ஜப்பானிய வாகனங்கள் அறிமுகமாகியிருந்த வேளை. நாட்டின் புகழ்பெற்ற மலாய் திரைக்கலைஞர்கள் ஜப்பானிய வண்டிகளை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும் தூதர்களாக செயல்பட சாமானிய மக்களிடத்தில் நல்ல மவுசு பெற்றிருந்தது. அப்போதைய வாகனங்களின் விலை இன்றைய வாகனங்களின் விலையைக் காட்டிலும் பத்து மடங்கு கம்மி. ஆறாயிரத்து ஐந்நூறு வெள்ளியில் புது வண்டியை வாங்கிடலாம். அன்றைய தேதியில் அந்த விலை, இன்றைய வாகன விலைகளுக்கு ஒப்பானது என்பது தின்னம். அக்காலக்கட்டத்தில் சாமானியர்கள் மத்தியில் அப்பாதான் ஊரில் முதன்முதலாக மோட்டார் வண்டியை வாங்கியவர்.

அப்பா வாங்கிய முதல் வண்டி ஜப்பானின் நிஸ்ஸான் நிறுவனத்தினுடையது. பெயர், டட்சன் 120Y. இளமஞ்சள் நிறம். உள் இருக்கையில் அமர்ந்து கொண்டால் ஒய்யாரமாக இருக்கும். வண்டியின் முன்புறத்தில் சிறு காற்றாடி, விசையழுத்தினால் அழகாய் தன் தலையைச் சுழற்றும். வண்டியின் உள்ளே பூக்கள் அச்சிட்டப்பட்ட மெல்லிய நெகிழி ஒட்டப்பட்டிருக்கும். அது தன்னிலிருந்து ஒருவித வாசம் கொடுக்கும். இப்போது கூட என் நாசி அதை உணருகிறது. அப்பா முதன்முதலாக அந்த டட்சன் வண்டியை ஓட்டி வந்தபோது ஊரார்கள் பலர் நின்று வேடிக்கை பார்த்ததாக அம்மா கூறியிருக்கிறாள். அப்பா தான் வாங்கிய வண்டியில் முதன் முதலாக அம்மாவையும் என்னையும் வைத்து தோட்டத்தில் வலம் வந்தபோது சிலருக்கு வயிரெறிந்ததையும் அம்மா நினைவு கூர்ந்திருந்தாள்.

அப்பாவுக்கு வாகனத்து மீது எந்த ஆர்வமும் கிடையாது. வாகனம் வாங்க வேண்டி எந்த நிர்பந்தமும் கிடையாது. வாழ்க்கையில் பிறர் முன்னிலையில் பலமுறை தான் சந்தித்த அவமானங்கள் அப்பாவை வாகனத்தை வாங்க வெறி கொண்டிருக்கச் செய்தது. சில அவமானங்களை சில சமயங்களில் அப்பாவும் அம்மாவும் என்னிடம் பரிமாறியது இன்றளவும் என்னால் மறக்க இயலவில்லை. அப்பா பட்ட அவமானங்களின் வலியும் வேதனையும் எப்படியிருந்திருக்குமென நினைத்துப் பார்த்தபோது பலமுறை என் மனம் கலங்கியுள்ளது.

ஒருமுறை அம்மாவின் உறவுக்காரர், பக்கத்து ஊரில் திருமணம் நடப்பதாகச் சொல்லி வீட்டுக்கு டொயோட்டா வண்டியில் குடும்பத்தோடு வந்திருந்தார். பக்கத்து ஊருக்குச் செல்ல பாதை தெரியாத போது அப்பா வழிக்காட்டியாக அவருடன் சென்றிருந்தார். வழியில், மனதில் தோன்றிய ஆசையாலும் உறவுக்காரர் என்ற உரிமையிலும் அப்பா அந்த உறவுக்காரரிடம் வண்டியை ஓட்டிப்பார்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார். ஒருவரின் வேண்டுகோளை நிராகரிக்கும் நாகரீகம் அறியாத அந்த உறவுக்காரர், குடும்பத்தார் முன்னிலையில் அப்பாவை அவமானம் படும்படியாக பேசியதையடுத்து மனம் வெதும்பிப்போனார் அப்பா.

இன்னொரு முறை பட்டணத்திலிருந்து அப்பாவை சந்திக்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அந்நண்பர் அப்பாவை சந்திக்க வண்டியில் வந்திருந்தார். அவரிடம் இதென்ன வண்டி? என விசாரித்தபோதுதான் அப்பாவுக்கு டட்சன் வண்டி அறிமுகமானது. அப்பாவும் இது மாதிரியான வண்டியை வாங்க எவ்வளவு வருமென கேட்டபோது, நண்பரின் பதில் அப்பாவை சிறுமைப்படுத்தியது. இதுபோன்ற வண்டியை வாங்கி உபயோகப்படுத்த தகுதியொன்று இருப்பதாகவும், நினைத்தவரெல்லாம் வாங்கிட இயலாதென்றும் நண்பர் சூசகமாக சொல்லியது, அப்பாவுக்கு அவரது உணர்வுகளும் எண்ணங்களும் நண்பரால் வேரறுக்கப்படுவதை உணர்ந்திருந்தார்.

அவ்வப்போது அரங்கேறிய இதுபோன்ற அவமானங்களே, அப்பாவை வாகனம் வாங்கிட முறுக்கேற்றியது. அவமானங்களை மனதில் நிறுத்திவைத்து, தடைகளைக் கடந்து வண்டியை வாங்கியபோது, உறவினர்களில் சிலருக்கு வயிரெறிச்சலைக் கொடுத்தது.

சாமானியர்களின் மத்தியில் அப்பாவின் பெயர் 120Y இராமையா என மாறியிருந்தது. பலரும் அவரை 120Y இராமையா என்றே விளித்தார்கள். அப்பாவை பின் தொடர்ந்து ஒரு சிலர் டட்சன் 120Y வண்டியை வாங்கிய போதிலும் அந்த பெயர் அப்பாவுக்கு மட்டுமே நிலையான பெயராக மாறியிருந்தது. வண்டியின் சத்தத்தை வைத்தே அப்பா வருகிறார் என்பதை பலர் அறிந்து வைத்திருந்தனர். அந்த டட்சன் வண்டி ஊரில் அப்பாவின் பிம்பத்தை மாற்றியிருந்தது.

அப்பாவோடு சேர்ந்து நான் தண்ணீரில் ஆட்டம் ஆடியபடியே டட்சன் வண்டியைக் குளிப்பாட்டிய அந்த நாட்கள் இன்னும் என் ஞாபகத்தில் உள்ளது. அப்பா டட்சன் வண்டியை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தார். அப்பாவுக்கு அது அவருடைய அடையாளம். தன்னால் முடியும் என்பதை நிரூபனமாக்கிய சான்று. அப்பா என்னை டட்சன் வண்டியில் வைத்து தோட்டத்தை வலம் வரும்போது என்னைப்போன்ற ஒத்த வயதுடைய சிறுவர்களை வண்டியில் ஏற்றிச் செல்லும்போது நான் கொண்ட மகிழ்ச்சியை அவர்களையும் அனுபவிக்கச் செய்ததுண்டு. அப்பாவின் டட்சன் வண்டியைப் பார்த்தாலே சிறுவர்கள் ஓடிவருவது எல்லாம் என நினைவில் பதிந்தவை.

அப்பா டட்சன் வண்டியை வாங்கியபோது எதுவும் சொல்லாத அம்மா, பின்னொரு நாளில் அப்பாவிடம், வண்டியை வாங்கியது முதல் தன்னை அவளது அப்பா வீடுக்கு அழைத்துச் செல்லவில்லையென குறைபட்டுக் கொண்டாள். அப்பாவும் அம்மாவை அழைத்துக்கொண்டு வண்டியில் தாத்தா வீட்டுக்குச் சென்றபோது அம்மாவுக்கு அது பெருமையாக இருந்தது. குடும்பத்திலேயே அப்பாதான் முதன்முதலாக மோட்டார் வண்டியை வாங்கியவரென தாத்தாவின் குடும்பமே பறைசாற்றியது, அப்பாவுக்கும் பெருமையைத் தந்தது.

வீடு திரும்பகையில் டட்சன் வண்டி நடுச்சாலையிலேயே நின்றுப்போன போது அம்மா தவிப்புக்குள்ளானாள். அப்பா வண்டியின் பிரச்சனை தெரியாது தவித்துக் கொண்டிருந்தார். சீனன் ஒருவன் உதவியுடன் வண்டியைப் பட்டறைக்குச் கொண்ட சென்றபோது, அப்பா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அப்பா வாங்கிய டட்சன் வண்டி ஏற்கனவே ஒரு சீனன் பயன்படுத்திய வண்டி. வாங்கல் கொடுக்கலில் இடைத்தரகராக செயல்பட்டவர் அப்பாவுக்குத் தெரிந்தவர். பழுதிருந்த வண்டி அப்பாவின் தலையில் ஏமாற்றிக் கட்டப்பட்டது பின்னொரு நாளில் தெரிந்தபோது அப்பாவுக்கும் அந்த இடைத்தரகருக்கும் பிணக்கு ஏற்பட்டது.

செலவுகளுக்குப் பின் டட்சன் மீண்டும் உயிர் பெற்றது. அப்பாவுக்காக டட்சன் நன்றாகவே உழைத்தது. ஓரிரண்டு ஆண்டுகள் பிறகு தோட்டத்தில் சில வண்டிகள் அதிகரித்திருந்த போதும் டட்சன் இன்னும் தலைநிமிர்ந்தே இருந்தது. தோட்டத்தில் பலருக்கும் போக்குவரத்துத் துணைவனாக விளங்கியது. டட்சனின் உதவி தோட்டத்தில் அப்பாவின் நன்மதிப்பை மேலும் கூட்டியது. சில வேளைகளில் சில பேர் டட்சன் வண்டியை வாடகை வண்டியாகப் பெற்றுச் சென்றது அப்பாவின் வருமானத்தில் கூடுதல் பங்களிப்பைச் செய்தது.

டட்சன் வண்டி, வாடகை வண்டியாக அடிக்கடி பயணத்தில் ஈடுபட்டபோது, வண்டியில் அவ்வப்போது பழுதும் வர ஆரம்பித்தது. தோட்டத்தில் அப்பாவுக்கு வேண்டியவர் ஒருவர், டட்சன் வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பட்டணம் சென்றபோது, வழியில் வண்டியிலிருந்து புகை கிளம்பி நடுவீதியிலேயே நின்றுப் போனது. விஷயம் தெரிந்து புறப்பட்டுச் சென்ற அப்பா அவருடன் சேர்ந்து சில மைல்கள் தூரம் வண்டியைத் தள்ளி பட்டறைக்குக் கொண்டுப்போய் சேர்த்தார். தொடர்ந்து வண்டியால் செலவு அதிகரித்த போது அம்மா அதை விற்றுவிடலாம் என சொல்ல அப்பா அம்மாவின் பேச்சை தட்டிக்கழித்தார்.

பலமுறை அப்பா டட்சன் வண்டியுடன் பட்டறைக்கு அலைய வேண்டியிருந்தது. டட்சன் வண்டிக்கான செலவுத் தொகை அதிகரித்தபோது அப்பாவுக்குப் பணம் கையைக் கடித்தது. வேறு வழியின்றி அம்மாவின் சங்கிலியை அடகு வைக்க வேண்டியிருந்தது. அப்பா அம்மாவையும் என்னையும் அழைத்துக்கொண்டு பட்டணத்தில் உள்ள அடகுகடைக்குச் சென்றார். செல்லும் வழியில் கடும் மழை கொட்டியது. சாலையோர அகன்ற கால்வாய்களில் நீர்மட்டம் நிரம்பியிருந்தது. அம்மாவும் அப்பாவைக் கொட்டிக் கொண்டிருந்தாள். இனி இந்த வண்டியால் செலவு தாங்கமுடியாதெனவும் விற்றுவிடலாமென சொன்னாள். அப்பா அம்மாவின் பேச்சைப் புறக்கணித்தபோது, அம்மா அப்பாவிடம் சண்டை பிடித்தாள். டட்சன் வண்டி கடும் மழையை ஊடுருவிச் சென்றது. மழை சத்தத்தை அப்பா, அம்மாவின் சத்தம் மிஞ்சியது.

இதெல்லாம் எனக்கு நன்றாகவே ஞாபகத்தில் இருக்கிறது. அந்த அடுத்தகணம் மட்டும் எனக்கு ஞாபகத்தில் இல்லாமல் போய்விட்டது.

கடைசியாக டட்சன் வண்டி சாலையில் சுழன்று கால்வாயில் பாய்ந்தது மட்டுமே என் நினைவில் நிற்கிறது. அம்மா வண்டியிலிருந்து தூக்கியெறியப்படுகிறாள். வண்டிக்குள் கால்வாய் நீர் வேகமாக நிரம்ப நான் பின் இருக்கையிலிருந்து அலறுகிறேன். யார் யாரோ கால்வாயில் குதிக்கிறார்கள். வண்டியிலிருந்து இரண்டு கைகள் என்னை வெளியேற்றிவிடுகிறது. நான் கரையேற்றப்படுகிறேன். அந்த கைகள் இன்னும் அந்த டட்சன் வண்டிக்குள்ளேயே சிக்குண்டு அப்படியே முழ்கிறது. டட்சன் வண்டியும் மூழ்கிப்போனது. என்னை சுற்றிலும் கூட்டம் நின்று வேடிக்கைப் பார்க்கிறது. அம்மா இருக்கிறாள். அவள் மார்பை அடித்துக்கொண்டு கதறுகிறாள். மழை அவளது அழுகையைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. நேரமும் கரைந்து கொண்டிருக்கிறது. கால்வாயில் குதித்தவர்கள் அப்பாவை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்பா சாலையோரத்திரத்தில் கிடத்தி வைக்கப்படுகிறார். எந்த சலனமும் இன்றி அப்பா என்னையும் அம்மாவையும் துண்டித்துக்கொண்டார்.

முதுகில் யாரோ தட்டுகிறார்கள்……

“என்ன சார் நீங்க! வந்ததுல இருந்து ஒக்காந்துகிட்டு ஏதோ கனவு காண்றீங்க போல? சாப்பாடு என்ன வேணும்னு சொல்லுங்க சார்”

நான் இறந்தகாலத்திலிருந்து மீண்டுருந்தேன். சாலையை நோக்கினேன். சாலை அமைதியாக இருந்தது. நான் அமர்ந்திருந்த மேசையில் பெரியவர் ஒருவர் வந்து அமர்ந்தார். என்னை பார்த்து சிரித்தார். நானும் பதில் தந்தேன்.

“யேம்பா நீ 120Y இராமையா மகந்தானே?”

– 2013 தந்தையர் தினத்தை முன்னிட்டு மலேசியத் தமிழ் வானொலி மின்னல் பன்பலையில் ஒலியேற்றப்பட்ட சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *