அப்பாவின் துணை

 

எதையோ மறந்து விட்டேனே… என்ற சிந்தனையிலேயே நடந்து சென்றுகொண்டிருந்தார் சிவநேசன். கையில் ராஜன் மளிகைக் கடையில் வாங்கிய பொருட்கள் இட்டு வைத்த பை… அப்படி என்ன மறந்திருப்பேன்… வழியில் பேருந்து நிழற்குடையின் நிழலில் நின்று அங்கிருக்கும் சிமெண்ட் இருக்கையில் பையினை வைத்து எழுதி வந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கிவிட்டோமா என்று சரி பார்த்துவிட எண்ணினார்… இப்படித்தான் ஒருமுறை வெற்றிலை வாங்க மறந்து விட்டார் வீட்டிற்கு சென்றபின் மனைவியின் முதல் கேள்வி வெற்றிலை எங்கே? கமலம் ஒரு வேளை உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவார் ஆனால் வாயில் வெற்றிலை இல்லாமல் ஒரு பொழுதும் நகர்வது சிரமம். அன்று தான் எவ்வளவு கோபம்… எவ்வளவு கேள்விகள்… எதையாவது ஒழுங்கா செய்யுறீங்களா… கடைக்கு பொய் வருகிற வேலை மட்டும் தான் செய்யுறீங்க அதையாவது ஒழுங்கா செய்யுறீங்களா? அப்படி என்ன ஞாபக மறதி? பொறுப்பு இருந்தால் இப்படி மறப்பீங்களா? எங்களை எல்லாம் எப்படி உங்க நினைப்பில் வைச்சிருப்பீங்க? எப்படித்தான் நீங்க பாங்கில் வேலை செஞ்சீங்களோ? சமர்த்தா அவங்க ரிட்டையர்மெண்ட் குடுத்து வீட்டுக்கு அனுப்பீட்டாங்க? எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இருக்கா? ம்..க்கும்…

சரி இப்பவே நான் பொய் வாங்கிட்டு வந்துடறேன்… கோபப்படாதே என்றவரிடம் உடன் பதிலளித்தார் கமலம், ஆஹா போதும் உங்க அக்கறை… வெளியில பாக்கறவங்க இந்த அம்மா இவ்வளவு பெரியவரை வெயில்னு பாக்காம இத்தனை தடவை கடைக்கு அனுப்புதுன்னு என்ன கரிச்சுக் கொட்டணும் அதுக்குத்தானே.. அப்பப்பா நல்ல பேர் இல்லைனாலும் பொல்லாப்பு வாங்கித்தரன்னு இப்படி அலையுறீங்களே… ஒன்றும் பேச முடியாமல் அறைக்குச்சென்று விட்டார் சிவநேசன்…

அதுபோல இன்று எதுவும் நடந்து விடக்கூடாதே என்று சிமெண்ட் இருக்கை மீது வைத்த பைக்குள் பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இருக்கிறதா என்று சரி பார்த்தார்…

அரிசி 2 கிலோ … இருக்கு
உ.பருப்பு… இருக்கு
பொன்னாங்கண்ணிக் கீரை பார்க்கவே குளிர்ச்சியாக இருந்ததால் பட்டியலில் இல்லாவிட்டாலும் அதை வாங்கி வைத்திருந்தார் அதையும் கொஞ்சம் விலக்கி…
சிந்தால் சோப்பு 2 … இருக்கு
சர்க்கரை… இருக்கு

எல்லாம் இருக்கிறது… பொருட்கள் மறக்கவில்லை… இருந்தாலும் எதையோ மறந்து விட்டேனே என்கிற எண்ணம் துளைத்துக் கொண்டே இருக்க….பையை தூக்கிக்கொண்டு மீண்டும் நடையைத் தொடர்ந்தார். ராஜன் மளிகைக் கடையிலிருந்து அவர் வீடு சுமார் 400 மீட்டர் தொலைவு.

ஒரு வேளை மகன் ஏதாவது சொல்லி மறந்து விட்டேனா… இல்லையே அவன் வாங்கி வரச்சொன்னது வாசன் டைலரிடமிருந்து அவனது தைத்து தயாராக இருக்கும் பாண்ட் மட்டும்தான்… இதோ டைலர் கடை வந்து விட்டது… கடையில் இருந்தது தையற்காரரின் உதவியாளர் ஒரு வாலிபர். அவரிடம் ரசீதை நீட்டினார் சிவநேசன். அந்த வாலிபர் வாங்கிக்கொண்டு ரசீதில் என்ன எண் இருக்கிறது என்று பார்த்தார் பின்னர் டெலிவரி தேதி என்ன என்று பார்த்தார் இன்று தான் என்று சரி பார்த்துக்கொண்டவர் தைத்துத் தயாராய் இருக்கும் உருப்படிகளில் எந்த எண் ரசீதுடன் ஒத்துப்போகிறது என்று சரிபார்த்து… ம்… இதோ கிடைத்துவிட்டது… அந்த பாண்டை மடித்து முறையாக ஒரு காகிதப் பைக்குள் இட்டு சிவநேசனிடம் நீட்டினார், சிவநேசன் பதிலுக்கு ரூபாய் 500 ஒற்றைத்தாளை எடுத்து நீட்டினார்… கடை வாலிபரோ சார் பில் 450, 450 ஆ இருந்தா குடுங்க இல்லாட்டி அண்ணன் வரணும் என்னிடம் சில்லறை இல்லை என்றார். அண்ணன் எப்போ வருவார் என்று கேட்டார் சிவநேசன். சாப்பிடப் போயிருக்கார் இப்போ வர்ற நேரம்தான் அதுவரைக்கும் இந்த சேரில் உட்காருங்க என்று ஒரு நாற்காலியைக் காட்டினார். இருக்கையில் அமர்ந்த சிவநேசனுக்கு பழைய ஞாபகம் தொடர்ந்தது… அன்று மகன் கேட்ட பிளேடு வாங்க மறந்து விட்டார் அதற்குத்தான் மகனிடம் எவ்வளவு பேச்சு வாங்கினார்… ஏன்பா நான் கேட்டது ஒரேயொரு ஐட்டம் அதைக்கூட உன்னால வாங்கி வர முடியலையா… இந்த ராத்திரில பொய் நான் எந்தக் கடையத் தொறக்கச்சொல்லி வாங்குவேன்… நேத்தே பிளேடு தீர்ந்து போச்சு.. பழசை வச்சே அட்ஜஸ்ட் பண்ணிட்டிருக்கேன்… ஷேவ் பண்ணாமப்போனா மேனேஜர் மேலேருந்து ஷூ வரைக்கும் மொறைச்சுப் பார்ப்பான்.. அது போட்டும் ஷேவ் பன்னாமப் போனா எந்த டாக்டராவது மெடிக்கல் ரெப்பா என்ன மதிப்பானா… நீட்டாப்போகும்போதே ரெண்டு மணிநேரம் உட்கார வச்சுடறானுங்க… நீயெல்லாம் பாங்கில பேன் ஏசின்னு சொகுசா இருந்து வேலை பார்த்த ஆளு உனக்கெல்லாம் எங்க கவலை புரியாது… போப்பா… இன்னும் மகன் உதிர்த்த வார்த்தைகளை எழுத்தில் சொல்வது நாகரிகம் அல்ல.

சார் இந்தாங்க 50 ரூபாய் பாக்கி என்று நினைவைக் கலைத்தார் கடைக்கார வாலிபர் அண்ணன் வந்துட்டாரா என்று கேட்ட சிவநேசனிடம், ம்… இதோ… என்று தையற்கடை உரிமையாளரைக் காட்டினார் அந்த உதவியாளர். நன்றி சார் என்று இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு சிவநேசன் வீடு நோக்கிய தன் நடையைத் தொடர்ந்தார்… மீண்டும் தொடர்ந்தது மறந்துவிட்ட உணர்வு… நான் உண்மையிலேயே ஏதாவது மறந்து விட்டேனா இல்லை வெறும் நினைப்பா… சிந்தனை குழப்பமானது…. மகளின் விருப்பம் ஏதாவது வாங்காமல் விட்டுவிட்டேனா… இருக்காது… அவள்தான் கோபத்தில் இருக்கிறாளே எதையும் வங்கச் சொல்லவில்லை என்பது திண்ணம். ஏன் அவளுக்கு கோபம் … சென்ற முறை மருதாணிப் போடி வாங்கி வரச்சொல்லியிருந்தாள் மருதாணிப் பாக்கெட் வாயில் பாதித் திறவு இருந்ததைக் கவனிக்காத சிவநேசன் அதை அப்படியே பையில் போட்டுக்கொண்டார் வீடு வந்து சேர்ந்தபின் பொருட்களை எடுத்து வைத்தார் ஆனால் அவரின் போதாத நேரம் பிரிந்திருந்த மருதாணிப் பொடிப் பாக்கெட் முழுவதும் கொட்டி காய்கறிகள் மீதும் மீதி பையிலுமாக சிதறி ஒட்டிக்கிடக்க காய்கறிகளைக் கழுவி எடுத்துவிட்டார் ஆனால் தண்ணீரோடு கரைந்து போன மருதாணிப் பொடியை அவரால் திரட்டி எடுக்க முடியாமல் மகளிடம் வாங்கி கட்டிக்க கொண்டார்.

சிந்தனைக்கு முடிவுரை எழுதியது வீட்டு வாயிற்படி… வீட்டுக்குள் சென்றவர் பொருட்களை மனைவி கமலத்திடம் நீட்டினார்… ஒரு தம்ளர் காப்பி போடுறயா… மெதுவாகக் கேட்டார் சிவநேசன். ஏன் சாப்பிடுற நேரத்துல காப்பி எதிர் கேள்வி… சரி வேண்டாம்… என்றுவிட்டு அறைக்குள் சென்றார்… மீண்டும் மறந்த உணர்வு சிவநேசனைத் தீண்டியது… எதோ உறுத்துகிறதே என்ன மறந்தேன்…. இந்தாங்க… காப்பித் தம்ளரை நீட்டினார் கமலம். இன்னிக்கு தேதி 5 ஆயிடுச்சு பென்ஷன் வந்திருக்கும் இல்ல சாயங்காலம் வாக்கிங் போகும்போது மறக்காம ATM போயிட்டு வந்துடுங்க… இந்தப் பேன்ஷன்தான் சிவநேசனை மாதந்தோறும் அவர் மனிதன் என்பதை அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது… சரி என்றார்… அடுப்படிக்குச் சென்றுவிட்ட கமலம் அழைப்பு மணி அழைக்கும் ஓசை கேட்டு வாசல் கதவைத் திறக்கறீங்களா நான் அடுப்படிக்கு வந்துட்டேன்…என்றார். மெதுவாக முகப்பு நோக்கி நடந்தார் சிவநேசன்… கதவைத் திறந்தார்… வாசலில் நின்றவர் ராஜன் மளிகைக்கடைச் சிப்பந்தி… என்னப்பா என்றார் சிவநேசன்… இந்தாங்க மறந்து கடையில விட்டுட்டு வந்துட்டீங்க எங்க இதுக்காக திரும்ப நீங்க நடந்து வந்து சிரமப்படப் போறீங்களோன்னு வேகமா வழிநெடுக உங்கள பார்த்துகிட்டே வந்தேன் என்று மூச்சு வாங்கிக்கொண்டே தான் கொண்டு வந்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை சிவநேசனிடம் நீட்டினார் சிப்பந்தி! 

தொடர்புடைய சிறுகதைகள்
வெள்ளிக் கிழமை மாலை, மாஸ்டா வின் வேகம் மணிக்கு 80 மைல் என்று பறந்து கொண்டிருந்தது காரை செலுத்திக்கொண்டிருந்த விவேக்கின் மனவேகம் அதனினும் மேலாய் குதித்தோடிக் கொண்டிருந்தது காரணம் தான் அந்த மூன்றாவது குறுஞ்செய்தியை அனுப்பிவிட வேண்டுமென்பதே. இரண்டு குறுஞ்செய்திகள் வந்துவிட்டது ...
மேலும் கதையை படிக்க...
“நடேசா வாக்குச் செலுத்தீட்டியா..” பக்கத்துத் தேநீர்க்கடையிலிருந்து வந்த குரலுக்கு, காய்கறி முருகனின் மிதிவண்டியின் பின் சக்கரத்தின் மென் சக்கரத் துளையை நீக்கிக் கொண்டிருந்த நடேசன் நிமிர்ந்து பார்த்தான் அது வாத்தியார் அசோகன். அவரிடம்தான் நடேசன் ஆறு முதல் எட்டு வரை படித்தான். ...
மேலும் கதையை படிக்க...
சமையற்கட்டில் தேநீர் ஆற்றிக்கொண்டிருந்தான் பிரகாஷ். குடித்துவிட்டு நாளை இன்டெர்வியுவிற்கு நன்றாக தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆற்றிய தேநீரை ஒரு குவளையில் எடுத்துக்கொண்டு தன் அறை நோக்கிச்சென்று கொண்டிருந்தான், எதிர்பாராத விதமாக எதிரில் நண்பன் சினேகன் வரவைப்பார்த்து "வாடா இப்பதான் ...
மேலும் கதையை படிக்க...
"மாப்ளெ சீக்கிரம் எழுந்திரிடா, இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர் அட்மிஷன், நிறைய கலருங்க வரும் எல்லாருக்கும் நாமதான் ஆரத்தி எடுக்கணும்", எழுப்பினான் சேகர், புரண்டு படுத்த கவிதாஞ்சனுக்கு இவற்றில் அவ்வளவாக ஆர்வம் இல்லை, "நல்ல கனவைக் கலைச்சுட்டியே..., போடா...", மறுபடியும் போர்வையை இழுத்துப் ...
மேலும் கதையை படிக்க...
பேருந்து நிலையத்திலிருந்து வேகமாக வீடு வந்த பிரகாஷ் முதல் வேலையாக தன் கைபேசியில் பிரவீன் எண்ணைத் தேடி அழைத்தான். "என்னடா..." "டேய்.. எனக்கு உடனடியா... ஒரு கவிதை எழுதணும்..." "என்னமோ சர்வர்கிட்ட சாப்பாடு ஆர்டர் பண்ற மாதிரி சொல்ற.." "எப்படி வேண்ணா வச்சுக்க.... பட் ஐ நீட் ...
மேலும் கதையை படிக்க...
கொட்டும் மழையில் மெட்டியில்லாத இரு பாதங்கள் மெல்லத் தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களாகப் பார்த்துப் பார்த்து நடக்க, மாலை இளம் இருட்டு, ஒதுங்கிநிற்க ஒத்துழைக்காத காரணத்தால் நனைந்துகொண்டே வீட்டை அடைந்தாள் வித்யா. "ஏம்மா இப்படி நனைஞ்சிட்டு வர்றியே போகும்போதே குடை கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
மேசை மீதிருக்கும் சுழலும் பூமியை சுழற்றிக்கொண்டிருந்தார் ஹெட் மாஸ்டர் அருகில் இருந்த அலமாரியில் பதிவேடு எடுத்துக்கொண்டிருந்த உதவி ஆசிரியை "சார் சுத்துது..." "ஆமா நான்தான்..." உதாவி ஆசிரியை ஹெட் மாஸ்டரை பார்த்துவிட்டு "சார் நான் பேன் சுத்துறத சொன்னேன்... பவர் வந்துடுச்சு..." "நான் இந்த பூமி சுத்துறத ...
மேலும் கதையை படிக்க...
அழைப்பு மணி ஓசை கேட்கிறது. அடுப்படியில் இருந்து பிரேமி, என்னங்க காலிங் பெல் சத்தம் கேட்கலியா... கதவைத் திறந்தா என்ன... ம்... பெல் சத்தம் உனக்கும்தானே கேட்குது... நீ போய் கதவை திறயேன்... அறைக்குள் இருந்து பதில் கொடுத்தான் பிரகாஷ். அழைப்பு மணி மீண்டும் ...
மேலும் கதையை படிக்க...
3வது குறுஞ்செய்தி
தரைச் சீட்டு
யாருக்கு இண்டெர்வியூ?
இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள்
கவிதை சொன்னா காதல் வரும்!
மெல்லச் சிரித்தது அல்லிக்குளம்!
நியூ அட்மிஷன் ஹெட் மாஸ்டர்
பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)