அப்பாவின் டைரி

 

எந்தக் காலத்திலும் டைரி வைத்துக் குறிப்பு எழுதும் பழக்கம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு முக்கிய நடைமுறை ஒழுக்கம் என்று நம்புகிறவனல்ல நான் இதை விட வாழ்க்கையில் தவறாது பின்பற்ற வேண்டிய மனோதர்ம ஒழுக்கங்களையே பெரிதாக நம்புகின்ற என் கண் முன்னால் காட்சி தரிசனமற்ற ஒரு நிழற் கோலமாக அப்பா தவறாது டைரியில் குறிப்பு எழுதுவதை ஒரு வேடிக்கை நிகழ்வாகவே நான் காண்பதுண்டு

வாழ்க்கையில் உயிரோட்டமாக அனுபவித்து உணர்ந்தறியும் முக்கால சம்பவங்களிலிருந்தே இந்த டைரி எழுதும் ஆதர்ஸ கலை வழிபாட்டுக்கான மையப் பொருள் இயக்கம் தொடங்குவதாய் நான் ஆழமாக எனக்குள்ளேயே முடிவு செய்து நம்பியதற்கு மாறாக அறிவு மந்தமாக இருக்கிற அப்பாவால் அப்படி என்ன பெரிதாக எழுதிக் கிழித்து விட முடியுமென்று நான் நினைத்திருந்தேன் இது பொய்த்துப் போகாத அளவுக்கு திரை மறைவற்ற ஒளிக் கோலங்களுடன் எனது இருப்பு நிலை இருந்ததென்னவோ உண்மை தான்

எனது பெரியண்ணா சுரேஷ் கொழும்பு ரத்மலானையிலுள்ள மஸ்கன் சீற் கம்பனியில் வேலை செய்வதால் ஒவ்வொரு வருடமும் அவனுக்கு டைரி கலண்டர் எல்லாம் கொடுப்பார்கள் அதில் டைரியை மட்டும் அவன் அப்பாவுக்கு அனுப்பி வைப்பான் சின்ன வயதில் அப்பாவுக்குப் படிப்பு ஏறாததால் அவரின் அப்பா சுன்னாகத்தில் அவருக்கு ஒரு இரும்புக் கடை திறந்து கொடுத்து அதற்கு அவரை முதலாளியாக்கி விட்டிருந்தார் பெயருக்குத் தான் அவர் முதலாளி அவர் ராசியோ என்னவோ கடை நன்றாக ஓடவில்லை அதில் தான் வறுமை நிழல் குடித்து நாங்கள் வளர்ந்தோம் அம்மா செயல் திறன் கொண்டு மிளிர்ந்ததால் ஏதோ நாங்கள் வளர்ந்தோம் படித்தோம் பெரியண்ணாவை விட நானும் தங்கை மாலாவும் நன்றாகப் படித்து படித்த படிப்புக்கு ஏற்ப நல்ல வேலையிலும் இருக்கிறோம் நான் ஒரு பட்டயக்கணக்காளன் கொழும்பில் அண்ணாவுடன் தங்கி வேலை செய்யத் தொடங்கி ஒரு வருடம் தானாகிறது அபூர்வமாக எப்போதாவது ஊருக்கு வந்து போவேன் அண்ணா அதுவுமில்லை தங்கை ஆசிரியையாக இருக்கிறாள் அவள் ஊரோடு தான் அம்மாவுக்குத் துணையாக இருந்து பணி புரிகின்றாள் எங்கள் காசு வருவதால் அப்பா இப்போது கடைக்கும் போவதில்லை கடையைக் குத்தகைக்கு விட்டு வெகு நாளாகிறது அவரும் நீண்ட நாட்களாக நோய்வாட்ப்பட்டிருப்பதால் தங்கையின் கல்யாணத்தை முடித்து விட வேண்டுமென்ற அவசரம் அம்மாவுக்கு

அதற்கு இன்னும் காலம் கை கூடாத நிலையிலேயே அப்பாவின் மரணத்தைச் சடுதியாக நாங்கள் எதிர் கொள்ள நேர்ந்தது மந்தப் போக்குடன் செயல் திறனற்று இருந்த அப்பாவின் இழப்பு அம்மாவைப் பாதித்ததோ என்னவோ என்னை பொறுத்தவரை பெரிய அளவில் அவருக்காகத் துக்கம் கொண்டாடுகிற மன நிலையில் நான் இருக்கவில்லை ஆனால் அம்மாவோ இது குறித்து தொண்டைத் தண்ணீர் வற்றிப் போகுமளவுக்கு ஊர் முன்னிலையில் பெருங்குரலெடுத்துக் கதறியழுததை ஜீரணிக்க முடியாமல் நான் வெகுவாக மனம் நொந்து போனேன் அப்பாவின் மறைவுக்குப் பிறகு எனது லீவு ஒரு மாதம் வரை நீடித்தது அண்ணாவுக்கு அப்படி லீவு எடுப்பது கஷ்டமாக இருந்தபடியால் அப்பாவின் காரியம் முடிந்த மறு நாளே அவன் போய் விட்டான்

எனக்கு வீட்டில் இருக்கப் போர் அடித்தது தங்கை மாலாவோடு சேர்ந்து அரட்டை அடிக்கிற கால,மும் மலையேறி விட்டது இப்போது நான் உலகம் முழுவதுமாகவே என் கைக்குள் வந்து விட்ட புது மனிதன் மடியில் பணம் இருப்பதால் மாய சஞ்சாரமான நினைவுகள் தரும் சுகத்தில் என்னை மறந்திருந்த நேரம் அப்பாவின் அதீத கற்பனை வளத்துடன் கூடிய டைரியைத் திறந்து பார்க்க வேண்டுமென்ற முரட்டுத்தனமான ஆசை வெறி எனக்குள் அதைத் திறந்து பார்க்க இது ஒரு அருமையான சந்தர்ப்பம் அவர் தான் இல்லையே

ஒரு பழைய டிரங்குப் பெட்டி டைரி எழுதி முடித்தவுடன் அதை அதற்குள் போட்டுப் பூட்டினால் பூட்டி வைப்பதைப் பல தடவைகள் நான் பார்த்திருக்கிறேன் அதன் திறப்பு எங்கே என்று தேடியும் கிடைக்கவில்லை சுத்தியல் கொண்டு உடைத்ததில் திறந்து கொண்டது டைரியைத் திறந்து பார்த்ததில் பக்கம் பக்கமாக எழுதி வைத்திருந்தார் புரட்டிக் கொண்டு மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டு வரும் போது செந்தூரத் திலகமிட்ட ஒரு மங்கள காரியம் பற்றி நடுவில் அவர் எழுதியிருப்பதைப் பார்த்து நான் திடுக்கிட்டு நின்றேன் தொடர்ந்து வாசிக்கும் போது நிலை தடுமாறிய தவிப்பு எனக்குள் சுதாரித்துக் கொண்டு படிக்கிறேன் அவர் சொல்கிறார்

“என் கல்யாணம் வெறும் சடங்கல்ல மீனாவை அது தான் என் அம்மாவை நான் ஏற்றுக் கொண்டது என்னைப் பொறுத்தவரை ஒரு தியாக வேள்வி தான் கல்யாணமாகுமுன்பே கையில் ஒரு குழந்தையோடு நின்ற அவளைக் காப்பாற்றி நல்லபடி வாழ வைக்கும் பெரும் நோக்குடன் நான் எடுத்த இந்த முடிவு என்னுடனேயே போகட்டும் அவள் என் அக்கா மகள் வயதுக் கோளாறால் தவறிழைத்து நின்ற அவளை ஊர் வாயிலிருந்து மீட்கவும் சராசரி பெண்களைப் போல அவளை வாழ வைப்பதற்காகவும் நான் போட்ட வேஷம் இது இன்று நான் சந்துரு மாலாவுக்கு மட்டுமல்ல சுரேஷினுடைய அப்பா என்ற கெளரவப் பட்டமும் எனக்குத் தான் “அதற்கு மேல் படிக்க முடியாமல் கண்ணீர் திரை போட்டு மறைக்க டைரியைக் கையோடு கொண்டு அம்மாவிடம் ஓடி வரும் போது அவள் கண்ணீர் நதி குளித்தவாறே நிலையழிந்து நின்று கொண்டிருப்பது தெரிந்தது

அதைப் பொருட்படுத்தாது எனக்கு ஏற்பட்ட சோக அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியாத நிலை குலைந்த தடுமாற்றத்தோடு அவளை நேர் பார்க்க மனம் கூசியவனாய் எங்கோ வெறிச்சோடிச் சுழலும் ஒரு மாய வலைக்குள் சிக்கி விட்ட கனத்தோடு பிரமை கொண்டு அவளைக் கேட்டேன்

“அம்மா! உங்கள் வாழ்வில் மகத்தான ஒரு தியாக வேள்வி நடந்திருப்பதாய் இப்ப நான் அறிகிறன் அதன் ஆதர்ஸ நாயகனாக அப்பா இருந்திருக்கிறாரென்பது உண்மையிலேயே என்னை மெய் சிலிர்க்க வைக்குது சொல்லுங்கோவம்மா சுரேஷண்ணா அப்பாவுக்குப் பிறந்த மகனில்லையா?”

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் சொல்லு சந்துரு?”

‘அப்பா டைரி எழுதும் போதே நான் நினைச்சேன் அதைப் படிச்சுத் தான் எனக்குத் தெரியும் அவர் வாழ்வில் சொல்ல முடியாத ரகசியம் ஏதோ ஒன்று இருப்பதாய் நான் நினைச்சது சரியாய் போச்சு. அதுவும் கையிலை பிள்ளையோடு கறைபட்டு நின்ற உங்களை வாழ வைப்பதற்காகக் காலம் முழுவதும் சுரேஷுக்கு ஒரு நல்ல தகப்பனாய் அவர் தியாக மலையாய் உயர்ந்து நின்று வாழ்ந்த வாழ்க்கையை நினைக்கும் போது முன்னரெல்லாம் அவரைத் தவறாக எடை போட்டதற்காக இப்ப நான் வருந்திறன் என்னை மன்னிச்சிடுங்கோ அம்மா “

“உன்னை மன்னிக்கிற தகுதி கூட எனக்கில்லை கறைபட்டு எரிஞ்சு போன துரும்பு நான். இந்தத் துரும்புக்கே உயிர் கொடுத்த உன்ரை அப்பாவை கெளரவபடுத்தி வழிபடுற மாதிரி சுரேஷை உன்ரை சொந்த அண்ணாவாய் நினைச்சு எப்பவும் நீ மாறாமல் இருக்க வேணும் இந்த விடயம் உனக்குள்ளேயே இருக்கட்டும் மாலதிக்குக் கூட இது தெரியக் கூடாது “

“அம்மா! அப்பாவே எவ்வளவு பெருந்தன்மையோடு கடைப் பிடித்த ஒரு தியாக வேள்வி அதை நடை முறைப்படுத்தினால் மட்டுமே நான் அவர் மகன் என்ற அங்கீகாரத்தைப் பெறமுடியுமென நான் நம்புற போது இதைப் பற்றி நான் ஏன் வாய் திறக்கப் போறன்? இவ்வளவு புனிதமான ஒரு கதையல்ல உண்மைச் சம்பவத்தை வெளிப்படையாக வாய் விட்டுக் கூறி உங்களை மாசு ப்டுத்தி அழ வைக்காமல் தனக்குள்ளேயே போட்டுப் புதைச்சு மூடி மறைச்சு வாழ்ந்ததே ஒரு மகத்தான சாதனையில்லையா?இதுக்கே கோவில் கட்டிக் கும்பிட வேணும் அவருக்கு நாங்கள். மற்ற ஆம்பிளையள் மாதிரிக் கட்டின மனைவியைக் கண்ணீர் நதி குளிக்க வைச்சே ம்கிழ்ச்சி கொண்டாடுகிற வக்கிர புத்தி கொஞ்சம் கூட இல்லாமல் அவர் உங்களை மலை போல் தாங்கி வாழ வைச்சதை நினைச்சால் எனக்குப் புல்லரிக்குது அண்ணாவைக் கண்ணுக்குள் மணியாய் வைச்சு நான் காப்பாற்றுவன் இது சத்தியம் “

“இது போதும் எனக்கு என்று அழுகை முட்டி உணர்ச்சிவசப்பட்டுக் கூறிய பின் வாய் திறந்து பேச முடியாத மெளனத் திரைக்குள் அம்மா மறைந்து போனாள் அவன் கூறிய அன்பு மேலோங்கிச் சிறந்து வாழ்ந்து காட்டும் உயர் பண்பு நிலை மாறாத அந்தத் தெய்வீக வரமான வேத வாழ்க்கையின் முடிவுறாத மற்றுமொரு உயிர்க் கோபுரமாய் அவனைத் தரிசித்துவிட்ட மகிழ்ச்சியின் நிறைவோடு அவளும் நிலையழியாத ஒரு நிறைகுடம் போல உயிர் ஒளி மங்காமல் நின்று கொண்டிருப்பது ஒரு சகாப்த காவியமாக அவன் கண்களிலும் ஒளி கொண்டு மின்னிற்று. 

தொடர்புடைய சிறுகதைகள்
பதவி வெறி பிடித்த சுயநல அரசியல்வாதிகளின் பிரவேசத்தால் கரை உடைத்துப் பாயும் சாக்கடை வெள்ளத்தில் மூழ்கி அழியப் போவது தமிழின் புனிதம் மட்டுமல்ல மொத்த தமிழினமுமே கருகி அழிந்து போகும் என்ற தார்மீக சிந்தனையின் உச்சக் கட்ட விளைவாகவே ஞானம் சித்தப்பா ...
மேலும் கதையை படிக்க...
தேவதை என்றதும் கண்களில் ஒரு கனவு மயக்கம் வெறும் உடல் மாயையாக வரும் அழகில் ஒரு பெண் தேவதையே பழகிய சுபாவத்தில் எல்லோருக்கும் நினைவில் வரக்கூடும் இதையெல்லாம் தாண்டி என்றும் கடவுள் தரிசனமாகவே அன்பு நிறைவான மனசளவில் வாழ்க்கை சத்தியத்தின் சிறிதும் ...
மேலும் கதையை படிக்க...
மணிமாறன் உயிர்ப் பிரக்ஞை மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கத் தான் நிஜமென்று நம்பிய அக்காவையே பிணமாகக் காண நேர்ந்த வாழ்க்கை பற்றியஉலகியல் மயமான நினைப்பே அடியோடு வரண்டு போய் தான் மரண இருட்டின் கோரமான விலங்குப் பிடியிலிருந்து விடுபட்டு விடுதலையாகிப் புது உலகிற்கு வந்து ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சமூகப் பிரகடனமாக உள்ளார்ந்த ஆன்மீக விழிப்புடன் தன்னால் நினைவு கூர முடிந்த அந்த வேத வாக்கியத்தை மனம் திறந்து சொல்வதற்கான காலம் இன்னும் கண் திறக்கவில்லையென்பதே செல்வியின் அப்போதிருந்த பெரிய மனக் குறையாக இருந்தது. அதற்கான கால நேரமல்ல காது ...
மேலும் கதையை படிக்க...
திலகவதி முதன் முதலாக அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரிக்குப் படிக்க வந்தது ஒரு மாறுபட்ட புது அனுபவமாக இருந்தது மகளிருக்கான கல்லூரி அது ஆண் வாடையே கிடையாது பழகிப் பார்க்கும் முகங்களெல்லாம் பெண் முகங்கள் தாம் அவர்களோடு புதிதாய் அறிமுகமாக வேண்டிய ...
மேலும் கதையை படிக்க...
மாய இருப்பில் ஒரு மணி விளக்கு
காட்சி நிறைவான ஒரு கடவுளின் தேவதை
ஞானப் பார்வை
இனியொரு விதி செய்வோம்
ஒரு தேவதையின் சரிந்த கிரீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW