அப்பாவின் சைக்கிள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 17,245 
 

மங்கான் தெரு, மாதா கோயில் தெரு, சாமியார் தோட்டம்… என மூன்று தெருக்களைக் கடப்பதற்குள், கூடையில் இருந்த 10 கோழிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. காலையில் பக்கத்து வீட்டு ரேடியோவில் 7:15 மணிக்கு தமிழ்ச் செய்திகள் வாசிக்கிற நேரத்தில் கிளம்பினார்கள். 8 மணி சங்கு ஊதுகிற நேரத்துக்குள் வியாபாரமே முடிந்துவிட்டது. ”எல்லாம் நீ சைக்கிள் தள்ற ராசிடா” என்று முத்துசாமியின் முதுகில் தட்டினார் அவன் அப்பா.

அப்பாவின் சைக்கிள்1செபாஸ்டியன் வீட்டில், 30 ரூபாய் விலை சொல்லி 25 ரூபாய் கணக்கில் மூன்று கோழிகளை விற்றுவிட்டார் அப்பா. அதிகபட்ச லாபம் கிடைத்துவிட்ட உற்சாகம் அவரின் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. அவர் முகத்தில் பிரகாசம் பெருகப் பெருக முத்துசாமியின் மனம் பீதியில் அமிழ்ந்தது. அப்படிப்பட்ட சமயங்களில் அவர் கால்கள் தரையிலேயே நிற்காமல், கள்ளுக்கடையை நோக்கித் திரும்பிவிடும். என்ன செய்வது எனப் புரியாமலேயே ராலே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தான் முத்துசாமி.

ரெட்டியார் ஹோட்டலைக் கடக்கும் சமயத்தில் ‘நில்லுடா’ என்றார். அவசரத்தில் முத்துசாமிக்கு சைக்கிளைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை. ஆறேழு அடி முன்னால் சென்ற பிறகுதான் நிறுத்த முடிந்தது.

”ஏதாச்சும் சாப்புடுறியாடா?”-அவனைப் பார்த்துக் கேட்டார். அவசரமாகத் தலையை அசைத்தபடி, ”வேணாம்பா. ஊட்டுக்குப் போயிடலாம்” என்றான். அவர் உடனே, ”ஊடு ஊடுனு எதுக்குடா பறக்கற? ஊட்டுல என்ன புதையலா வெச்சிருக்க?”-எரிந்து விழுந்தார். அவன் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவர் கால்களைப் பார்த்தபடியே நின்றான். ”நிக்கிறான் பாரு… நல்லா ஒட்டடைக் குச்சி மாதிரி” என்று முணுமுணுத்தபடி வேட்டியை மடித்துக் கட்டினார். சாந்தமான குரலில், ”உன்னைப் பார்த்தா எஸ்ஸெல்சி படிக்கிற பையனாட்டமா தெரியுது? வேகமா ஊதுனாவே உழுந்துருவபோல இருக்குது. வயசுப்புள்ள நல்லா சாப்ட்டாதான்டா சத்து வரும்” என்றார். ”இல்லப்பா… வேணாம்” என்று அவன் சொன்னதை அவர் காதிலேயே வாங்கவில்லை. சைக்கிளை அவனிடம் இருந்து வாங்கிப் பூட்டி ஓரமாக நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்துவிட்டார். அவருக்குப் பின்னால் செல்வதைத் தவிர, வேறு வழி தெரியவில்லை முத்துசாமிக்கு.

அவன் ஒரு தோசை சாப்பிடுவதற்குள் ஒரு செட் பூரி, ஒரு தோசை, ஒரு பிளேட் உப்புமாவை அவர் சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டார். ”சாப்டுற லட்சணமாடா இது? கோழி சீய்க்கிற மாதிரி சீச்சிக்கினே இருந்தா எந்தக் காலத்துலடா சாப்ட்டு முடிக்கிறது?” என்று சொல்லிக்கொண்டே கை கழுவச் சென்றார். மீண்டும் பெஞ்சில் வந்து உட்கார்ந்து ஒரு டீ வாங்கி அருந்தினார். அப்போதுதான் அவன் எழுந்து சென்று கைகழுவிவிட்டுத் திரும்பினான். ஆழ் மனதில் அவனுக்கு பயம் அப்படியே இருந்தது.

சைக்கிள் பூட்டைத் திறந்ததும் மீண்டும் தள்ளியபடி நடந்தான் ஆஸ்பத்திரி மைதானத்தைக் கடக்கும் சமயத்தில் மீண்டும் ”நில்லுடா” என்றார். வழக்கம்போல சிறிது தூரம் முன்னே சென்ற பிறகு வண்டியை நிறுத்தினான். ”இங்க எடம் நல்லா இருக்குது பாரு. உனக்கு சைக்கிள் ஓட்டக் கத்துக் குடுக்கறேன். வா” என்று அருகில் வந்தார்.

அப்பாவின் சைக்கிள்2அந்தக் கணத்திலேயே முத்துசாமிக்கு அடிவயிறு கலங்கியது. சைக்கிள் கற்கத் தொடங்கிய முந்தைய அனுபவங்கள் எல்லாமே கசப்பானவை. ஏற்கெனவே பட்ட காயங்களே இன்னும் ஆறாமல் இருந்தன. மெதுவான குரலில், ”அப்புறமாக் கத்துக்குறேன்பா. அடுத்த வாரம் ஸ்கூல்ல டெஸ்ட் இருக்குது. படிக்கணும்பா” என்று அவரைப் பார்த்துக் கெஞ்சினான்.

”அது பாட்டுக்கு அது… இது பாட்டுக்கு இது. என் பின்னாடியே வா… சொல்றேன்!” என்றபடி அவர் மைதானத்தில் இறங்கி நடந்தார்.

”பெடல்ல காலைவெச்சி ஏறவே வர மாட்டுது. எனக்கு எதுக்குப்பா சைக்கிள்?”

”அது எப்பிடிடா? எதையும் பத்துப்பாஞ்சி தரம் செஞ்சிப் பாத்தாதான்டா வரும். படிக்கிற புள்ளதான நீ? வராது வராதுனு அபசகுனமா ஆரம்பிச்சா, வாழ்க்கையில எதுதான்டா வரும்?”

”பரீட்சைக்கு நிறையப் பாடம் இருக்குதுப்பா; வேணாம்பா; சொன்னா கேளுப்பா” அவன் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.

”த்தூ… அழுவுறான் பாரு. ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு எங்கனா ஓடணும்னா, சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சிருக்க வேணாமா? நாளப்பின்ன நீயே கோழி வாங்கியாரப் போவணும்னா, ஊரூரா நடந்தே போவியா?”

”கோழி யாவாரமே எனக்கு வேணாம்பா!”

”யாவாரம் செய்யாம கலெக்டரு வேலைக்குப் போவப்போறியா?”

”இல்லப்பா!”

”என்னடா, இல்ல நொள்ளனுட்டு!” -அவர் குரல் உயர்ந்தது.

”வேணாம்பா… வேணாம்பா!” என்று அவன் கெஞ்சிய குரல்கள் அவர் காதிலேயே விழவில்லை. ”ஏறி ஸீட் மேல உக்காருடா” என்று அவன் முதுகிலேயே அடித்தார். வேறு வழி தெரியாமல், அவன் சைக்கிள் ஸீட்டில் உட்கார்ந்தான். ஒடுக்கு விழுந்த பாத்திரத்தைத் தட்டி நிமிர்த்துவதுபோல, வளைந்த அவன் முதுகில் அடித்தார். சட்டென முதுகில் விறைப்பேறிவிட, ஒரு பாறையைக் கட்டிவிட்டது போல உணர்ந்தான்.

‘நேரா பாருடா… குனியாம பெடலை மிதி!’ என்றபடி பின்னால் பிடித்துக்கொண்டே சைக்கிளைத் தள்ளிவிட்டார். மறுகணமே அவன் தோள் ஒரு பக்கமாக வளையத் தொடங்கியது. ”தோளை வளைக்காத” என்று அழுத்திச் சொன்னபடி தாங்கி நிமிர்த்திவிட்டார். சமாளித்து சமநிலைக்குத் திரும்பிவந்தபோது வண்டி நின்றுவிட்டது. மீண்டும் பெடலை மிதித்து சைக்கிளை நகர்த்தியதுமே, மறுபடியும் ஒரு பக்கமாகச் சாய்ந்தது உடல். பெடலுக்கும் உடலுக்கும் சமநிலை கூடி வரவே இல்லை. அப்பாவின் கட்டுப்பாட்டையும் மீறி கீழே விழுந்துவிட்டான். இடது தோளில் அடி. தோள்பக்கம் சட்டை கிழிந்துவிட்டது. கெண்டைக்கால் சதை பிய்ந்துபோனது. கண்களில் நீர் தளும்ப, ”அப்பா… வேணாம்பா” என்றான். அவர் அதை காதில் வாங்கவே இல்லை.

”ஏந்து வாடா, சைக்கிள் கத்துக்கும்போது அடிபடறதுலாம் சகஜம்டா. சின்ன வயசுல என் உடம்பு பூரா காயமாத்தான் இருக்கும், தெரியுமா?”

அப்பாவின் சைக்கிள்3அவர் அவனை மீண்டும் சைக்கிளில் உட்காரவைத்து, கற்பிக்கும் முயற்சிகளில் இறங்கினார். அவனைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிநின்று வேடிக்கை பார்த்தது. அவமானத்தில் அவனால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். நெற்றி, கைகள், கால்களில் காயம்பட்டதுதான் மிச்சம். ஏற்கெனவே பட்ட காயங்கள் பெரிதாகி ரத்தம் கசிந்தது. மண்ணில் விழுந்து விழுந்து உடல் முழுக்கப் புழுதி அப்பியிருந்தது. 10 அடிகூட சுதந்திரமாக சைக்கிளை ஓட்ட அவனுக்கு வரவில்லை. ”சரி… போதும் விடு. அடுத்த வாரம் பார்த்துக்கலாம்” என்று சலித்தபடி அப்பா தன் பயிற்சியை நிறுத்திவிட்டார். ”நீ என்கிட்ட சரிவர மாட்ட. நம்ம அப்துல்லாகிட்ட சொல்றேன். அவன் நாலு நாள்ல உனக்குச் சொல்லிக் குடுத்துருவான்!” என்று முணுமுணுத்தார்.

சைக்கிளைச் சோர்வுடன் தள்ளியபடி வீட்டை நோக்கி நடந்தபோது, ”நில்லுடா” என்று மறுபடியும் அதட்டினார் அப்பா. வழக்கம்போல ஆறேழு அடி முன்னால் சென்ற பிறகுதான் நிறுத்த முடிந்தது. பீதியோடு அவர் பக்கமாகத் திரும்பினான். அவர் பையில் இருந்து ரூபாய்த் தாள்களை எடுத்து எண்ணி, அவனிடம் கொடுத்தார். ”எடுத்துட்டுப் போயி உன் அம்மாகிட்ட குடு. நான் அப்துல்லாவைப் பார்த்துட்டு வர்றேன்” என்றபடி எஞ்சிய தாள்களை பைக்குள் வைத்துக்கொண்டு போய்விட்டார்.

‘உங்கள் அபிமான நவீனா திரையரங்கில் ‘இதயக்கனி’ 25-வது நாளாக வெற்றிநடை போடுகிறது’ என ஒலிபெருக்கியில் ஒருவர் பேசிக்கொண்டே இருக்க, ஒரு வாகனம் ஆரவாரத்துடன் அந்தத் தெருவுக்குள் நுழைந்தது. வண்டியோடு ஓரமாக ஒதுங்கி, அந்த வாகனத்துக்கு வழிவிட்டான். ‘விருந்துக்கு முக்கனி; விநாயகருக்கு விளாங்கனி; குடும்பத்துடன் கண்டுகளிக்க ‘இதயக்கனி’. இனிய புதுச்சேரி வாழ் ரசிகப் பெருமக்களே, இன்றே திரண்டு வருக!’ என அறிவிப்புக் குரல் முழங்கிக்கொண்டே போனது.

அவன் கோலத்தைப் பார்த்ததுமே அம்மா ஆத்திரத்துடன் திட்டத் தொடங்கினாள். ”அந்த ஆளுக்குத்தான் அறிவில்லைன்னா, உனக்கு எங்கடா போச்சு புத்தி? சைக்கிளும் வேணாம்… ஒரு எழவும் வேணாம்னு சொல்றதுக்கு என்னடா? வாய்ல கொழுக்கட்டையா வெச்சுருந்த?” என்று ஆரம்பித்த வசைகளை, அவள் நிறுத்தவே இல்லை. எல்லா புண்களையும் கழுவித் துடைத்து, நர்ஸம்மா வீட்டில் இருந்து டிஞ்சர் வாங்கி வந்து பூசி முடிப்பது வரை பேசிக்கொண்டே இருந்தாள். அவன் தம்பிகளும் தங்கைகளும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

அன்று 2 மணி சங்கு ஊதுகிற சமயத்தில்தான் அப்பா வீட்டுக்குத் தள்ளாடியபடி வந்தார். வாசல் படி ஏற முடியாமல் இரண்டு முறை தடுமாறிக் கீழே விழுந்தார். அங்கிருந்தே அவர் வசைகள் தொடங்கிவிட்டன. கையை ஊன்றி படியேறி உள்ளே வந்ததும் சுவரோரமாகப் படித்துக்கொண்டிருந்த அவன் முதுகில் ஒரு உதை விழுந்தது. ”அவனை எதுக்கு இப்ப அடிக்கிற?” என்று சீறியபடி அம்மா எழுந்து வந்தபோது, அவளுக்கும் அடி விழுந்தது. ”ஐயோ” என்று அலறியபடி கீழே விழுந்த அம்மா, பிடிக்கு அகப்படாத கோழியைப்போல அறைக்குள்ளேயே அங்கும் இங்கும் ஓடினாள். பின்பக்கமாக உதைத்து அவளை விழவைத்து அடிக்கத் தொடங்கினார் அப்பா. மீண்டும் மீண்டும் அடிகள்; வசைகள். எதுவும் நிற்கவில்லை. தடுக்கச் சென்ற பிள்ளைகளுக்கும் உதைகள் விழுந்தன. அடிபட்டதில் தம்பியின் உதடு வீங்கிவிட்டது. எல்லாருமே நடுக்கத்துடன் சத்தமாக அலறினார்கள். ”ஊடாடா இது? த்தூ… சரியான நரகம்” என்று காறித் துப்பிவிட்டு, அப்பா வெளியே போனார்.

அப்பாவின் சைக்கிள்4மதியம் எஞ்சியிருந்த சோற்றில் குழம்பை ஊற்றிப் பிசைந்து, தட்டில்வைத்து, இரவில் எல்லோருக்கும் கொடுத்தாள் அம்மா. தம்பிகளும் தங்கைகளும் சாப்பிட்டதும் தூங்கிவிட, முத்துசாமி மட்டும் கேள்வி-பதில் எழுதிப்பார்ப்பதில் மும்முரமாக இருந்தான். மூலகுளம் அமராவதியில் இரண்டாவது ஆட்டம் சினிமா ஆரம்பிப்பதற்கான அடையாளமாக, ‘விநாயகனே…’ பாட்டு ஒலிக்கும் ஓசை கேட்டது.

”டேய், பெரியவனே” என்று அம்மா அழைத்தாள். ”என்னம்மா?” என்று முத்துசாமி அவள் பக்கம் திரும்பினான். ஆனால், அவள் எதுவும் பேசவில்லை. நாக்கைச் சப்புக்கொட்டியபடி தலையை அசைத்துக்கொண்டாள். அவன் மீண்டும், ”என்னம்மா?” என்றான். ”ஒண்ணுமில்ல… படு” என்று சொல்லிவிட்டு தூண் பக்கமாகப் பாயை விரித்துப் படுத்துக்கொண்டாள். விளக்குத்திரியைச் சின்னதாக அடக்கி வைத்துவிட்டு அவனும் படுத்துக்கொண்டான். கண்களை மூடியதுமே தூக்கம் வந்துவிட்டது.

கனவில் எங்கோ பட்டாசு வெடிக்கிற சத்தம்போல கேட்டது. லட்சுமி வெடி, தவளக்குப்பம் வெடி, யானை வெடி, மிளகாய் வெடி எனத் தெரிந்த வெடிகள் அனைத்தும் மாறி மாறி கனவில் தோன்றி மறைந்தன. காதுகள் அருகே வெடிக்கும் சத்தம் கேட்டதும் குழம்பித் தூக்கம் கலைந்து கண் விழித்தான். ஒரு பானை உருண்டோடி சுவரில் சத்தத்தோடு மோதி நிற்பதை, அவன் கண்கள் பார்த்தன. மறுபக்கத்தில் அம்மாவை அடித்துக்கொண்டிருந்தார் அப்பா. காதால் கேட்க முடியாத வசைகள். சட்டென எழுந்தோடி, ”வேணாம்பா… வேணாம்பா…” என்றபடி அவன் அவரைப் பிடித்து இழுத்தான். அதற்குள் தம்பிகள் எழுந்து பீதியில் ஓவெனச் சத்தம் போட்டு அழுதார்கள். அம்மாவின் கன்னங்களில் மாறிமாறி ஏழெட்டு முறை அறைந்துவிட்டார் அப்பா. அம்மா நிலைகுலைந்து தரையில் சரிந்தாள். ”ஒரு நாளாச்சும் உன்கிட்ட மனுஷன் நிம்மதியா இருக்க முடியுதா… பொம்பளையா நீ?” என்று அவர் போட்ட சத்தத்தில் கூரையே அதிர்ந்தது. கோழிகளை மூடிவைத்திருந்த கூடையை உதைத்துவிட்டு, திட்டியபடியே வீட்டைவிட்டு வெளியே போனார். பலவீனமாகக் கூவியபடி கோழிகள் திசைக்கு ஒன்றாக ஓடின. வெளியே அப்பா சைக்கிளைத் திறந்து தள்ளிக்கொண்டு செல்லும் சத்தம் கேட்டது.

மறுநாள் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. அதற்கு அடுத்த நாள் பள்ளியில் மாதிரித் தேர்வுகள் தொடங்கிவிட்டன. ஒரு வாரம் அவன் வேறு எதைப் பற்றியும் யோசிக்க முடியாதபடி பாடங்களில் மூழ்கியிருந்தான். ஒவ்வொரு நாளும் சாயங்காலம் விளக்கு சிம்னிகளைக் கழுவித் துடைத்து மண்ணெண்ணெய் ஊற்றும்போது, அவருடைய சைக்கிள் வந்து வாசலில் நிற்கப் போவதாக நினைத்துக்கொள்வான். அவ்வளவுதான். அப்புறம் பாடங்களின் ஞாபகம் வந்ததும் மறந்துவிடுவான். அப்துல்லா மாமா ஒருமுறை வீட்டுக்கு வந்து விசாரித்தார். அம்மா அழுதபடியே நடந்ததையெல்லாம் சொன்னார்.

இரண்டு நாட்கள் கழித்து அப்பா வீட்டுக்குத் திரும்பிவிட்டார். சைக்கிள் சத்தம் கேட்டு அவன் எழுந்து நின்றான். ”இந்தாடா, எடுத்துப் போயி உங்கம்மாகிட்ட குடு” என்றபடி மீன்பறியைக் கொடுத்தார். பறி நிறைய மீன்கள். அடுப்பைப் பற்றவைத்துக்கொண்டிருந்த அம்மாவுக்கு அருகில் வைத்துவிட்டுத் திரும்பினான் அவன்.

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கோழி விற்பனைக்கு அவன் சென்றான். முடித்துக்கொண்டு திரும்பும்போது, கறிக்கடைக்குப் பக்கத்தில் அப்துல்லா நிற்பதைப் பார்த்துவிட்டு அப்பாவும் நின்றார். அவரைப்போல அவனால் அவசரமாக நிற்க முடியவில்லை. சிறிது தூரம் சைக்கிள் முன்னால் சென்றுவிட பிறகுதான் நின்றான்.

அப்பாவின் சைக்கிள்5”பிரேக் புடிச்சு நிறுத்தாம, ஏன் வண்டிகூடயே ஓடிப் போயி நிறுத்தற?” என்று அப்துல்லா மாமா அவனைப் பார்த்துக் கேட்டார். ”அவனுக்கு பிரேக் புடிக்கவும் தெரியாது; சைக்கிள் ஓட்டவும் தெரியாது. வெறும் சோத்துமாடு” என்று கசப்போடு பதில் சொன்னார் அப்பா. ”அப்படியா?” என்றபடி ஆச்சர்யத்தோடு பார்த்தார் அப்துல்லா மாமா.

”இவ்ளோ பெரிய பையனா இருந்துட்டு சைக்கிள் ஓட்டலைன்னா எப்பிடிப்பா? இங்கே வா. நான் கத்துக்குடுக்கிறேன்” என்றபடி முத்துசாமியின் அருகில் வந்தார். அவனுக்கு அந்தக் கணமே கைகளும் கால்களும் நடுங்கத் தொடங்கின. ”வாப்பா… ஒண்ணும் ஆவாது” என்றபடி அவனை இழுத்து சைக்கிளில் உட்காரவைத்தபோது, நடுக்கத்தில் கால்களைச் சரியாக ஊன்றிக்கொள்ள முடியாமல், சைக்கிளோடு அவன் அவர் மீது சரிய, அவரும் அவனும் ஒன்றாகக் கீழே விழுந்தார்கள். அவன் உடல் நடுங்குவதைப் பார்த்து அவருக்கு பயம் வந்துவிட்டது. உடனே, ”உனக்குப் புடிக்கலைன்னா வேணாம்… விடு. அதுக்காக ஏன் அழுவுற?” என்றபடி அவனை நெருங்கி தோளில் தட்டிக் கொடுத்தார். பிறகு அப்பாவும் அவரும் கடைத்தெரு பக்கம் சென்றுவிட, அவன் சைக்கிளை உருட்டியபடி வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.

பொதுத் தேர்வுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருந்த சமயத்தில், முத்துசாமியின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பழையபடி மோதல். ஒரே சத்தம், அடி, உதை, கலவரம். மீண்டும் அவர் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார். தேர்வு எழுதும் பதற்றத்தில் இருந்தான் முத்துசாமி. ஒவ்வொரு பாடத்திலும் 80, 90 மதிப்பெண்கள் பெற்றுவிடவேண்டும் என நினைத்தான். அதிக மதிப்பெண்கள் வைத்திருந்தால்தான், புகுமுக வகுப்பில் ஆசைப்பட்ட பிரிவு கிடைக்கும் எனச் சொன்ன தலைமை ஆசிரியரின் எச்சரிக்கை, காதுகளில் ஒலித்தபடியே இருந்தது. அம்மாவைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆயினும் அவன் மனதில் எதற்கும் இடம் கொடுக்காமல் படிப்பதில் மட்டுமே கவனத்தைச் செலுத்தினான். காலையில் 4 மணிக்கு சங்கு ஊதும்போதே எழுந்து படிக்கத் தொடங்கினான். ஒரு முறை படித்ததை 10 முறை எழுதிப்பார்த்தான். தேர்வுகள் அனைத்தும் முடிந்தபோது, ஒரு பெரிய பாரத்தை இறக்கிவைத்ததுபோல இருந்தது.

சாப்பாட்டுச் செலவுக்காக அம்மா காலையில் நர்ஸம்மா வீட்டில் சமையல் வேலைக்கும், மதிய நேரத்தில் ரைஸ்மில்லில் அரிசி புடைக்கும் வேலைக்கும் சென்றாள்.

இரண்டு நாட்கள் கழித்து மாலையில், அப்துல்லா மாமா வீட்டுக்கு வந்திருந்தார். முறத்தில் அரிசியைப் பரப்பி கல் பொறுக்கிக்கொண்டிருந்த அம்மா அவரைப் பார்த்ததும் எழுந்து நின்று, ”ஏதாச்சும் சேதி தெரிஞ்சிதாண்ணே?” என்று கேட்டாள். ”நானும் போற திசையிலலாம் விசாரிச்சிக்கினுதான் இருக்கேன். ஒண்ணும் துப்பு கிடைக்க மாட்டுதும்மா” என்று கவலையோடு சொன்னார்.

”சரி விடுங்கண்ணே. எல்லாம் என் தலையெழுத்து!”

”கதிர்காமத்தில் இருந்து பத்துக்கண்ணு பக்கம் போவறதைப் பார்த்ததா ஒரு ஆளு சொன்னான். நாளைக்குப் போயி பார்க்கலாம்னா, நம்ம கடைப்பையன் நாலு நாள் லீவு போட்டுட்டுப் போயிருக்கான். என்னா செய்றதுனு புரியலை!”

”எடத்தைப் பத்தி தகவலை இவன்கிட்ட சொல்லுங்கண்ணே. இவன் போய்ப் பார்த்துட்டு வரட்டும்!”

அவர் திடுக்கிட்டு, ”இவனையா?” என்று கேட்டார். ‘நாலு எடம் திரிஞ்சு பழகுனாதானே அவனுக்கும் வெளியுலகம் தெரியும்’ என்றாள் அம்மா. என் தோளைப் பற்றி அவர் பத்துக்கண்ணுக்குச் செல்லும் வழித் தடத்தை விவரித்த பிறகு, ‘அங்க வீரப்பக் கவுண்டர்னு ஒருத்தரு பாலத்துக்குப் பக்கத்துலயே ஒரு ஹோட்டல் வெச்சுருக்கறாரு. அங்க விசாரிச்சா, விஷயம் தெரியும்’ என்றார்.

மறுநாள் காலையில் உப்புப் போட்டு கலக்கிய நீராகாரத்தை வயிறு நிறையக் குடித்துவிட்டு பத்துக்கண்ணுக்கு நடந்து சென்றான் முத்துசாமி. அந்த ஹோட்டல் கடைக்காரர், ‘அப்பாவைப் பார்த்து ஒரு மாதத்துக்கும் மேல் இருக்கும்’ என்று சொன்னார். பத்துக்கண்ணு மதகில் இருந்து பிரிந்துவரும் கால்வாய் ஓரமாக சிறிது நேரம் உட்கார்ந்து, ஜரிகைப் புடவைபோல மின்னியபடி ஓடும் தண்ணீரையே பார்த்தான். பிறகு, தண்ணீரில் இறங்கி, முகம் கை, கால் கழுவிக்கொண்டு, நாலைந்து வாய் அள்ளிப் பருகிவிட்டுத் திரும்பி நடந்தான். அம்மா அவன் முகத்தைப் பார்த்தே எல்லாவற்றையும் புரிந்துகொண்டாள். ஏமாற்றத்தில் அவள் கண்கள் வறண்டுவிட்டன.

வீட்டுக்கு அருகில் இருந்த நூலகத்திலேயே நாள் முழுக்க இருக்கத் தொடங்கினான் அவன். அங்கே வரக்கூடிய எல்லா செய்தித்தாள்களையும், வார-மாத இதழ்களையும் ஒன்றுவிடாமல் படித்தான். அது மட்டும் இல்லாமல், யாரும் சொல்லாமலேயே தினமும் நூலகத்தைப் பெருக்கி, ஜன்னல் கம்பிகளில் படிந்திருந்த அழுக்கைத் துடைப்பதையும், குடத்தில் தண்ணீர் நிரப்பிவைப்பதையும் தன் வேலையாக நினைத்துச் செய்தான். நூலகப் பணியாளர், அவன் மீது மிகவும் அன்பு காட்டினார். அவன் உறுப்பினர் அல்ல என்றபோதும் பல புத்தகங்களை எடுத்துச் சென்று படிக்க அனுமதித்தார். எப்போதாவது சில மாலை நேரங்களில் நூலகத்தைப் பூட்டும்போது, அவர் அவனுக்கு நாலணாவோ எட்டணாவோ கொடுத்துவிட்டுச் சென்றார். அந்தக் காசில் பொட்டுக்கடலையும் வெல்லமும் வாங்கிவந்து தம்பி, தங்கைகளோடு சேர்ந்து சாப்பிட்டான்.

அப்துல்லா மாமா திடீர் திடீரென வந்து லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், தேங்காதிட்டு, தவளக்குப்பம் என அப்பா செல்லும் இடங்கள் பற்றிய தகவல்களைச் சொல்லிவிட்டுச் செல்வதும், அடுத்த நாளே நம்பிக்கையோடு அவன் நடந்துசென்று பார்த்துவிட்டுத் திரும்புவதும் பழகிவிட்டது. எந்த இடத்திலும் ஒரு சின்னத் தகவல்கூடக் கிடைக்கவில்லை.

தேர்வு முடிவு வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. அவன் மனம் பதற்றத்தில் அலைமோதியது. அப்துல்லா மாமா வீட்டுக்கு வந்து காளாப்பட்டில் இருந்து நம்பகமான ஒரு தகவல் கிடைத்துள்ளதாகச் சொன்னார். அய்யனார் கோயில் தெரு மூலையில், ஒரு கறிக்கடையில் விசாரிக்கும்படி சொன்னார்.

அப்பாவின் சைக்கிள்6அடுத்த நாள் காலையிலேயே முத்துசாமி கிளம்பிச் சென்றான். அந்த இடத்துக்குச் செல்ல மூன்று மணி நேரத்துக்கும் மேல் நடக்க வேண்டியிருந்தது. கறிக்கடைக்காரரிடம் விசாரித்ததும், ”ராமலிங்கம் பையனா நீ?” என்று கேட்டார் அவர். அவன் மெதுவாகத் தலையசைத்தான். தராசுக் கல்லைத் தட்டில் வைத்துவிட்டு அவனுக்கு அருகில் வந்தார். ”ரெண்டு மாசமா ஆளே வரலையே தம்பி. ஏதாச்சும் ஒடம்புகிடம்பு சரியில்லாம போயிருக்கும்னு நினைச்சேன். நீ இப்படித் திடுதிப்புனு வந்து நிக்கிறதைப் பார்த்தா எனக்கே பயமா இருக்குதே’ என்று சொன்னபடி, கடை மூலையில் சுவரோடு சாய்த்து நிறுத்தப்பட்டிருந்த ஒரு சைக்கிள் பக்கமாகச் சென்று பெருமூச்சோடு நின்றார். சில கணங்களுக்குப் பிறகுதான் முத்துசாமி அந்த சைக்கிளைக் கவனித்தான். அது அவன் அப்பாவின் சைக்கிள். ” ‘நாளைக்கு வந்து எடுத்துக்கினு போறேன் பாய்’னு அவன்தான் இங்க நிறுத்திட்டுப் போனான்” என்று சொல்லிக்கொண்டே வந்தவர் நாக்கைச் சப்புக்கொட்டியபடி, ”கடைசியில இப்பிடிச் செய்வான்னு தெரியாமப்போச்சே’ என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். மீண்டும் தராசுத் தட்டின் பக்கம் வந்து, குடத்தில் இருந்து ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துப் பருகினார்.

”என்ன, சைக்கிள எடுத்துக்கினு போறீயா?”- கறிக்கடைக்காரர் அவனைப் பார்த்துக் கேட்டதும் முத்துசாமி தலையசைத்தான். பூட்டியிருந்த சைக்கிளை அவரே தூக்கிவந்து வாசலில் வைத்தார். பிறகு கடைப்பையனை அழைத்து, அதே தெருவில் இருந்த சைக்கிள் கடைக்காரரை அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார். அருகில் கிடந்த ஒரு துணியை எடுத்து, அழுக்கடைந்துபோயிருந்த சைக்கிளை முத்துசாமி துடைத்தான்.

சைக்கிள் கடைக்காரர் வந்ததும் கறிக்கடைக்காரர் விஷயத்தைச் சொன்னார். அவர் சைக்கிள் பூட்டை ஒருகணம் உற்றுப் பார்த்தார். பிறகு பையில் இருந்த கம்பியை எடுத்துப் பூட்டின் துவாரத்தில் மெதுவாக நுழைத்து நெம்பினார். மறுநொடியில் ‘க்ளக்’ எனும் சத்தத்தோடு பூட்டு திறந்துகொண்டது. இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, அவன் சைக்கிளைத் தள்ளினான்.

”ஓட்டிக்கினு போ தம்பி” என்றார் கடைக்காரர். அவன் திரும்பிக் கூச்சத்தோடு, ”எனக்கு ஓட்டத் தெரியாது” என்று சொன்னான். அதிசயமான காட்சி ஒன்றைப் பார்ப்பதுபோல அவர் அவனை ஒருகணம் பார்த்துவிட்டு, பிறகு ஒரு சின்னப் புன்னகையோடு ”சரி, பார்த்துப் போ’ என்றார்.

முத்துசாமி சொன்ன செய்தியைக் கேட்டு அம்மா சில கணங்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டாள். அன்று இரவு அவள் சாப்பிடாமலேயே படுத்துக்கொண்டதைக் கவனித்தான் முத்துசாமி. அவளை நெருங்கி ஆறுதல் சொல்கிற துணிச்சல் இல்லாமல், ஏதோ குருட்டு யோசனைகளில் மூழ்கியபடி தூங்கிவிட்டான்.

தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. 600-க்கு 490 எடுத்திருந்தான். ரைஸ்மில்லுக்குச் சென்று அம்மாவிடம் சொன்னான். அம்மா அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவள் முகம், தலைமுடி, கழுத்து முழுக்க தங்கத் துகள்கள்போல தவிடு படிந்திருந்தது. அருகில் அரிசி புடைத்துக்கொண்டிருந்த பெண்களைப் பார்த்து, ”என் பையன்” என்று சொன்னாள். முந்தானையின் முடிச்சை அவிழ்த்து 10 பைசாவை எடுத்து, ”இந்தா… போய் சாக்லேட் வாங்கிக்க” என்று கொடுத்தாள்.

புகுமுக வகுப்பில் ‘ஏ குரூப்’ கிடைக்கும் என்று எல்லோருமே சொன்னார்கள். தாகூர் கலைக் கல்லூரியில் விண்ணப்பம் வாங்கச் சென்ற நண்பர்களோடு ஒருநாள், முத்துசாமியும் சென்றான். போகும் வழி முழுக்க ஒரே பேச்சுதான். எல்லோரிடமும் எதிர்காலம் பற்றிய கனவுகள் நிறைந்திருந்தன. இன்ஜினீயர், டாக்டர், பாங்க் ஆபீஸர் கனவு. அவனைத் தவிர எல்லோரும் விண்ணப்பம் வாங்கினார்கள். ஒரு விண்ணப்பம் 20 ரூபாய். ”ஏன்டா…

நீ வாங்கலை?” என்று கேட்டான் ஒருவன். ”நாளைக்கு வாங்குவேன்’ என்றான் முத்துசாமி.

அம்மா ஒவ்வொரு நாளாகத் தள்ளித்தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தாள். அவள் கேட்டிருந்த எந்த இடத்திலும் பணம் புரட்ட முடியவில்லை. கடைசி நாள் வரைக்கும் அவள் கையில் ஒரு ரூபாய்கூடச் சேரவில்லை. எதிர்பாராத விதமாகக் கடைசி நேரத்தில் நூலகர் 20 ரூபாய் கொடுத்து, ‘ஓடு, ஓடு காலேஜுக்கு ஓடு’ என அனுப்பிவைத்தார். விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை எழுதி, சான்றிதழ்களை இணைத்துக் கொடுத்த பிறகுதான், அவனால் இயல்பாக மூச்சுவிட முடிந்தது.

10 நாட்களில் பதில் வந்துவிட்டது. வியாழக்கிழமை அன்று நேரில் சான்றிதழ்களோடு வந்து கட்டணம் செலுத்திவிட்டு, ஏ குரூப்பில் சேர்ந்து கொள்ளும்படி எழுதியிருந்தது. ”எவ்ளோ கட்டணுமாம்?” என்று கேட்டாள் அம்மா.

”95 ரூபா” என்றான். ”இன்னும் நாலு நாள் இருக்குதே. மலையையே புரட்டிரலாம். கவலைப்படாத” என்றாள் அவன் அம்மா.

மறுநாள் நர்ஸம்மா வீட்டில் சமைத்துவிட்டுத் திரும்பிய அம்மாவின் முகம் களையிழந்து காணப்பட்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு, ”போய் அப்துல்லா மாமாவைக் கூட்டிக்கினு வா… ஓடு” என்றாள். ”எதுக்குமா?” என்று கேட்டான். ‘போடா… சொல்றேன்’ என்று அவன் வாயை அடைத்துவிட்டாள். ஒரு மணி நேரம் கடைத்தெருவில் தேடித் திரிந்து அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான். அவரிடம் முத்துசாமிக்கு கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும் விஷயத்தைச் சொன்னாள். பிறகு, ”செலவுக்குப் பணம் வேணும்ணே. எப்படியாவது நீங்க அந்த சைக்கிளை வித்துக் குடுக்கணும். ரொம்ப அவசரம்’ என்றாள்.

அப்துல்லாவுக்கு அதிர்ச்சியில் பேச வரவில்லை. ”அவன் எப்பனாச்சும் திரும்பி வந்து யாவாரத்துக்கு வேணும்னு சொன்னான்னா, என்னம்மா செய்யுறது?’ என்று கவலையோடு கேட்டார்.

”போய் மூணு மாசம் ஆவுது. பொண்டாட்டி புள்ளைங்க என்ன செய்வாங்கனு கொஞ்சம் கூட கவலை இல்லை. இனிமேல், அவரு வந்தா என்னா… வரலைன்னா என்னா? அவரைப் பத்தி நாம எதுக்குண்ணே கவலைப்படணும்?’ என்றபடி அம்மா தலையைக் குனிந்துகொண்டாள்.

இரண்டே நாட்களில் சைக்கிள் விற்ற பணத்தோடு வந்தார் அப்துல்லா மாமா. ”இந்தாம்மா… 110 ரூபாய். இவ்ளோதாம்மா கிடைச்சுது” என்றார். ”பெரியவன்கிட்டயே குடுங்கண்ணே” என்று அவன் பக்கமாகக் கைகாட்டிவிட்டாள் அம்மா. அவர் கொடுத்ததை வாங்கி மடித்து பைக்குள் வைத்தான் முத்துசாமி. ”அதான்டா உனக்கு மூலதனம். வெச்சு புத்தியா பொழச்சிக்கோ!” என்றாள் அம்மா.

அவன் கல்லூரிக்கு நடந்து செல்ல ஆரம்பித்தான். போக ஆறு மைல்; வர ஆறு மைல். கூட்டம்கூட்டமாக மாணவர்கள் சைக்கிள்களில் போனார்கள். முத்துசாமி அமைதியாக சாலையோரம் நடந்து சென்றான்.

விதவிதமான சைக்கிள்களைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதை எப்படி ஓட்டுகிறார்கள் என்பது அதைவிட பெரிய ஆச்சர்யம். ஒன்றிரண்டு நண்பர்கள் அவனுக்கு சைக்கிள் பயிற்சியைக் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால், அச்சத்தால் அதை மறுத்துவிட்டான். அப்போதெல்லாம் எல்லா நினைவுகளையும் உடைத்துக்கொண்டு அப்பாவின் நினைவும், அவரிடம் அடிபட்ட நினைவுகளும் தோன்றித்தோன்றி அவனை அலைக்கழித்தன. ஞாபகங்களின் சுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிப்பதை அம்மாவிடம் ஒருநாள் சொன்னான். அப்போது அவள் இரவு கஞ்சிக்காக, முறத்தில் அரிசியை வைத்துக் கொண்டு கல் பொறுக்கிக்கொண்டிருந்தாள்.

”அந்தக் கருமாந்தரம் புடிச்ச ஆளு செஞ்ச அனத்தத்துக்கு அளவே இல்லை. அவனை நினைச்சிக்கினே இருந்தா, ஒரு வேலையும் உருப்படாது. சைக்கிள் ஓட்டத் தெரியலைன்னா ஒண்ணும் குடி முழுவிப்போவாது. ஒழுங்கா மனசைத் திருப்பு. நமக்குக் கீழ இருக்கிறதுங்களை எப்படிக் கைதூக்கி விடலாம்னு யோசனை பண்ணு. அதான் முக்கியம்!” – அரிசியைக் கிளறியபடியே ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிறுத்திச் சொன்னாள். அவள் கறுத்த முகம் எரிவதுபோல இருந்தது.

”சரிம்மா!”

சாலையில் ஒரு சைக்கிள் செல்லும் மணிச் சத்தம் கேட்டது. அந்த ஓசை அவன் மனதைச் கடந்து செல்ல, அவன் தன் அம்மாவின் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான்.

”ஓடிப்போன ஆளவிட உயிரோட இருக்கிறவங்க முக்கியம். எப்பவும் அது ஞாபகத்துல இருக்கட்டும்… புரியுதா?” என்றாள் அம்மா. முத்துசாமி தலையை அசைத்தான்!

– செப்டம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *