அபஸ்வரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2021
பார்வையிட்டோர்: 13,398 
 

அப்பா இன்று கோர்ட்டுக்குப் போக வேண்டும்.

அப்பாவோடு என்னையும் போகச் சொன்னாள் அம்மா, எனக்கு அலுவலகம் இருந்தது. ஆனாலும் அப்பாவோடு வெளியே போவதைவிட எனக்குச் சந்தோஷம் தருகிற காரியம் வேறு என்ன இருக்க முடியும்? நான் ஒப்புக் கொண்டேன். விடியலிலேயே எழுந்து, குளித்துத் தயாராகிவிட்டேன்.

“கோர்ட்டுக்குப் பதினோரு மணிக்கு மேல் வந்தால் போதும்” என்று வக்கில் சொல்லியனுப்பியிருந்தார்.

சரியாகப் பத்தரை மணிக்கு நாங்கள் புறப்பட்டோம். அப்பா வழக்கமான அந்தத் தொள தொள கதர்ச் சட்டை, பளீர் வெள்ளை வேட்டியில் இருந்தார். அப்பா போடும் சட்டையில் ஒரு சுகந்தமாக அலமாரி வாசனை நிலை பெற்றிருக்கும்.

வெயிலின்றி லேசாய் இருட்டிக் கொண்டிருந்தது மார்கழி மாதத்து வானம்.

“நேரம் இருக்கே… வெயிலும் இல்லை…. நடந்தே போகலா மாப்பா….” என்றார் அப்பா என்னைப் பார்த்து.

“சரிப்பா…” என்றேன் நான்.

நாங்கள் தெருவில் இறங்கி நடந்தோம்.

அப்பாவுடன் நடப்பது, அப்பாவுடன் நடப்பது மாதிரி இருக்காது. ரொம்ப நாள் பழகின சிநேகிதனுடன் கடற்கரைக்குப் போவது மாதிரி இக்கும்.

மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தாலும், பனிக் காற்று இன்னும் இதமாகவே இருந்தது.

அப்பா கேட்டார்:

“கடைசியா என்ன சினிமாப்பா பார்த்தே…?”

சொன்னேன்.

“என்ன கதை ….?”

இது ரொம்ப சிக்கலான நேரம் எனக்கு, அப்பாவுக்கு அங்குலம் அங்குலமாகக் கதை சொல்லவேண்டும். அவனும் அவளும் சந்தித்தார்கள். கல்யாணம் பண்ணிக் கொள்ள வீட்டிலே தடை கடைசியில் அவன் அல்லது அவள் செத்துப் போகிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ‘ரெண்டரை மணி நேர சினிமா இவ்வளவு தானா’ என்பார்.

அப்பாவுடன் எதைப் பகிர்ந்து கொள்ள முடிந்தாலும் இந்தக் காதல் சமாசாரத்தை மட்டும் என்னால் பகிர்ந்து கொள்ள முடிவ தில்லை. காதல் விவகாரம் இல்லாத தமிழ்ப் படம்தாள் எது? நான் அப்பாவுக்கு என்று வெகு சாமர்த்தியமான என்னுடைய சினிமாக் கதை ஒன்றைச் சொன்னேன். பொய்யை அப்பா நிமிஷத்தில் கண்டுபிடித்து விட்டார்.

“அது சரிப்பா… அவ்வளவு சீக்கிரத்தில் அவங்க காதலை, அவங்க வீட்டுல ஒப்புக்கிட்டாங்களா, என்ன?”

“இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க அவங்க.”

“அதானே…. கஷ்டப்படறதா காட்டியிருந்தாத்தானே சினிமா… கஷ்டம் கொடுத்தாத்தானே பெற்றோர்கள்.” என்றார்.

கொஞ்ச தூரம் அப்பா பேசாமல் வந்தார். பிறகு சொன்னார்:

“காதல் என்கிறதும், கல்யாணம் என்கிறதும் அந்தப் பிள்ளையும் பெண்ணும் சம்பந்தப்பட்ட அந்தரங்கமான விஷயம். அதுல இந்தப் பெரியவங்க புகுந்து குட்டையைக் குழப்பறதுதான் என்னால சகிச்சுக்க முடியலே…”

நான் இதில் அபிப்பிராயம் சொல்ல ஏதுமில்லை என்று தோன்றியது. சொன்னால் அதிகப்பிரசங்கித் தனமாய் ஆகக்கூடும் என்றும் அஞ்சினேன். காரணம், அது நான் பிரபாவதியிடம் காதல் வயப்பட்டிருந்த நேரம். அப்பா எனக்காகவும் இதைச் சொல் கிறாரோ என்று தோன்றியது…

கோர்ட்டில் வேறு ஏதோ ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடுத்து, எங்கள் வழக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று வக்கீல் சொல்லியிருந்தார். நானும் அப்பாவும் வராண்டாவில் நின்று கொண்டிருந்தோம். நாங்கள் நின்ற இடத்திலிருந்து கடல் தெரிந்தது. அலைச் சத்தம் கேட்டது. மேகம் சூழ்ந்ததன் காரணமாகக் கடல் பழுப்பு நிறமுற்றிருந்தது.

அப்போதுதான் சுந்தரேச மாமா எங்களைக் கடந்து போனார். அப்பாவை கோர்ட்டுக்கு இழுத்த மனிதர். இன்றைக்கு இவரும் கோர்ட்டுக்கு வரவேண்டியிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்பாவைப் பார்த்ததும், தலையைக் குனிந்துகொண்டு வேகமாக எங்களைக் கடந்து போய்விட்டார். எனக்கு உடம்பின் இரத்த மெல்லாம் தலைக்கேறுவது மாதிரி இருந்தது.

அப்பா என் தோளைத் தட்டிச் சிரித்தார். ‘சாந்தம்… சாந்தம்…’ என்று அந்தச் சிரிப்புக்கு அர்த்தம்,

அந்த நேரத்திலும் அப்பாவால் எப்படிச் சிரிக்க முடிகிறது என்று இருந்தது எனக்கு.

இந்த சுந்தரேச மாமாவை எனக்குச் சின்ன வயதிலிருந்தே தெரியும். அப்பாவுக்கு மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.. சொந்த ஊரில் கஷ்டப்பட்டு, பிழைக்க எங்கள் ஊருக்கு வந்தவர் அவர் என்று நான் அறிந்திருந்தேன். அப்பாதான் ஏதோ ஒரு சிறு தொகை கொடுத்து, ஒரு சிறு பெட்டிக் கடையும் வைத்துக் கொடுத்ததாக அம்மா எனக்குச் சொல்லியிருக்கிறாள். அம்மா வருத்தத்தோடுதான் இதைச் சொன்னாள். இப்படி அப்பா ஊர் பேர் தெரியாத பேர் வழிகளுக்கெல்லாம் பணத்தைத் தூக்கிக் கொடுத்து விடுகிறார் என்பது அம்மாவின் குற்றச்சாட்டு. சுந்தரேசன் அதிர்ஷ்டக்காரர் என்பார்கள். எனக்கு அதிர்ஷ்டத்தில் தம்பிக்கை இல்லை. அவர் திறமைசாலி. தொட்ட இடம் துலங்கியது அவருக்கு. வியாபாரம் ஆல்போல் தழைத்தது. இப்போது மார்க்கெட்டில் புகழுடன் இருக்கும் ஒரு பிஸ்கட்டை எங்கள் மாவட்டம் முழுமைக்குமாக ஏஜென்ஸி எடுத்தார் சுந்தரேசன். ஒரு பெருந்தொகை அந்த பிஸ்கட் கம்பெனிக்கு அவர் முன் பணம் கொடுக்க வேண்டி வந்தது. தன்னால் முடிந்த வரை பணம் புரட்டினார் அவர். மேலும் ஒரு லட்ச ரூபாய் அவருக்குத் தேவைப்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் அப்பாவை அணுகினார் சுந்தரேசன்… யாரோ ஒரு சேட்டு கடன் கொடுக்கத் தயார் என்றும், அப்பா ஜாமீன் என்றும் அப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.

அப்பாவை, இந்த இடத்தில்தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அப்பா சொன்னாராம்.

“சுந்தரேசன். பணம் உன்னுடைய தேவை. சேட்டு உன்னை நம்பித்தான் பணம் தரணும்.. உன்னை நம்பாம, நான் கையெழுத்துப் போட்டாத்தான் தருவேன்னு சொன்னான். அது உனக்கு அவமானம் இல்லையா? நான் கையெழுத்துப் போடல்லேன்னா, அவர் தரமாட்டார். போட்டேன்னா சேட்டு நம்பாத ஓர் ஆள் என் சிநேகிதனா இருக்கிறார்னு ஆவுது. இத்தனைக்கும் உன் வீட்டை வெச்சுத்தான் பணம் கேக்கற… இப்போ அவ்வளவு பணம் என்கிட்டேயும் இல்லை. அதனால் ஒண்ணு செய்வோம். நானே என் வீட்டை வெச்சு, என் பேரிலேயே கடன் வாங்கறேன்… பசிக்கு உதவாத அன்னமும், சிரமத்துக்கு உதவாத சிநேகிதமும் பாழ்னு சொல்லுவாங்க…”

சுந்தரேசன், அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு, கண்களில் நீர் தாரை தாரையாக வழிய நின்றார் என்று அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறான். அம்மா அது காரணமாகவே ‘என்னிடம் மூன்று முழு நாட்கள் பேசாமலேயே இருந்தாள்’ என்று அப்பாவே கேலிக் குரலில் என்னிடம் சொல்லியிருந்தார்.

பிஸ்கட் ஏஜென்ஸி எடுத்து மேலும் செழித்தார் சுந்தரேசன். கடற்கரையை ஒட்டிய தெருவில், மிகப்பெரும் பங்களா கட்டிக் கொண்டார். வேன்களும் பல வண்ண மாருதிகளுமாய்ப் பொங்கினார். எங்கள் வீடு அடமானத்திலேயே இருந்தது.

சுந்தரேசன் கூண்டில் நின்று கொண்டிருந்தார். எங்கள் வக்கீல் அவரை விசாரணை செய்து கொண்டிருந்தார்.

“வசந்த்லால் ஜெயின் கிட்டே உங்களுக்காகத்தானே அவர் பணம் வாங்கினார்…?”

“இல்லை …” என்றார் சுந்தரேசன்.

“அந்தப் பணம் ஒரு லட்சத்தையும் உங்களிடம்தானே அவர் கொடுத்தார்?”

“இல்லை ” என்றார் மீண்டும் சுந்தரேசன்.

“நீங்கள் அவரிடம் பணம் வாங்கவே இல்லையா?”

“இல்லை …” என்றார் சுந்தரேசன்,

எனக்கு மயக்கமே வரும் போலிருந்தது. எல்லாவற்றின் மேலும் ஒரு கசப்பு கவிந்தது, அப்பாவைப் பார்த்தேன். நிதானமாகவே இருந்தார். முகத்தில் எந்தக் கலக்கமும் இல்லை . எங்கள் தலைக்கு மேலே ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனாலும் அப்பாவின் நெற்றித் திருநீறு கரைந்து காதுக்கு முன் வழிந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. நான் அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டேன். அப்பா என்னைத் திரும்பிப் பார்த்தார். என் கலங்கிய கண்களைப் பார்த்திருக்கக் கூடும் அவர், என் கையை லேசாகத் தட்டிக் கொடுத்தார்.

என் காதுக்குக் குனிந்து சொன்னார்: “லட்சம் ரொம்ப சிறிசு. கொடுத்துடலாம்…”

அப்பாவும் கூண்டில் ஏறினார். எங்கள் வக்கிலும், சேட்டின் வக்கீலும் அவரைக் கேள்வி மேல் கேள்விகள் கேட்டார்கள்,

அப்பா பதறாமல் நிதானமாக எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். கடைசியாக நீதிபதியைப் பார்த்து அப்பா சொன்னார்:

“இன்னும் சரியாக முப்பது நாளில், வட்டியும் முதலுமாக சேட்டின் பணத்தைக் கொடுத்து விடுகிறேன்…”

வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. நாங்கள் சைக்கிள் ரிக்ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தோம்.

இது இவ்வாறு முடியும் என்று உண்மையில் நான் எதிர்பார்க்க வில்லை. நான் அதிர்ந்து போயிருந்தேன்.

அப்பா சாதாரணமாகப் பேசிக் கொண்டு வந்தார். “நீ ஒன்றும் மனசை விட்டுடாதேப்பா…. வாழ்க்கையில் இப்படித்தான் சிலது நடக்கும்… இந்த வருஷம் பிரபாவதியை உனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுடனும்னு இருந்தேன். அது கொஞ்சம் தள்ளிப் போகுமேன்னு இருக்கு ”

நான் அப்பாவின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

அப்பா சொன்னார்: “துன்பம் வரும் போதுதான் நாம் ரொம்ப தைரியமா இருக்கணும். நாம படிச்ச படிப்பு, அனுபவம் இதையெல்லாம் வெச்சுத் துன்பத்தை வெல்ல வழி பார்க்கணும்… நீ ஒரு காரியம் பண்ணனும்…”

“சொல்லுங்கப்பா….”

“அம்மாகிட்டே எதையும் நீ சொல்லாதே… பக்குவமா நானே சொல்றேன்… பாவம், இதய நோய்க்காரி அவ… சரிதானா….?”

“சரிப்பா ..”

“என்னை வீட்டுல விட்டுட்டு, நீ வேலைக்குப் போ…”

“சரிப்பா ”

நான் ஏழு மணிக்குத்தான் வீடு திரும்பினேன். குளிக்க வேண்டும் போல் இருந்தது. உலகம் முழுதும் அழுக்கு அப்பிக் கொண்டிருக்கிறதே. குனித்தேன்,

“சாப்பிடலாமா….” என்றார் அப்பா,

“உம்…”

“உட்கார்.”

அம்மா கூடத்தில் இலை போட்டாள். சரியாக அழைப்பு மணி ஒலித்தது. நான் எழுந்து போனேன். கதவைத் திறந்தேன், சரஸ்வதி மாமி நின்றிருந்தார். சுந்தரேசனின் மனைவி சரஸ்வதி மாமி, தெருவில் புதிய மாருதி, எப்போது வீட்டுக்குப் போனாலும் குடிக்க ஏதேனும் கொடுக்காமல் என்னை அனுப்பாத மாமி, சேட்டு விவகாரம் வரும் வரை, வாரத்துக்கு ஒரு முறையாவது எங்கள் வீட்டுக்கு ஏதேனும் பலகாரம் செய்து கொண்டு வந்து கொடுத்து, அம்மாவிடமும் அப்பாவிடமும் என்னிடமும் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போவார்,

மாமி என்னைப் பார்த்து, “சௌக்கியமா?” என்றார். வழக்கமான மாமியின் முகம் வாடியிருந்தது. பத்து மைல் நடந்து வந்தது மாதிரி அதீதமாக களைப்பு மாமியின் முகத்தில்.

“இருக்கேன். உள்ளே வாங்க மாமி…”

மாமியைப் பார்த்ததும் இலையிலிருந்து எழுந்த அப்பா, “வா… வா” என்றார். அம்மாவைப் பார்த்து, “பங்கஜம்… சரசுவுக்கும் ஒரு இலை போடு ” என்றார்.

அம்மா, ரொம்ப நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்திருந்த சரசுவைப் பார்த்தாள். உபசாரத்துக்கு “வா… உட்காரு.” என்றாள்.

“இருக்கட்டும்..” என்ற மாமி, அப்பாவைப் பார்த்து, “அண்ணா! உங்களோடு கொஞ்சம் பேசணுமே…”

“சாப்பிட்டுட்டுப் பேசலாமே…” என்றார் அப்பா.

“அப்புறமா சாப்பிடறேனே.”

“சரி..” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் போனார் அப்பா. நானும் மாமியைத் தொடர்ந்தேன். அம்மா உள்ளே போய் விட்டாள். நாற்காலியில் உட்கார்ந்தார் மாமி. எதிரே அப்பா அமர்ந்தார். நான் சுவரில் சாய்த்து நின்று கொண்டேன்.

மாமி சட்டென்று தன் கழுத்தில் போட்டிருந்த பட்டை செயினைக் கழற்றி அப்பாவின் முன் டீபாயில் வைத்தார். பிறகு காதுக் கம்மலைக் கழற்றத் தொடங்கினார்.

“என்ன சரசு… என்ன இது?” என்றார் அப்பா.

“என் வீட்டுக்காரர் செய்த தப்பை அழிக்க என்னால இதுதான் அண்ணா செய்யமுடியும், எல்லாம் ஒரு முப்பது பவுன் தேறும். அது லட்சத்துக்குக் காணாது. அதோட, என் புருஷன் செய்த தப்புக்கும் ஈடாகாது இது என் மனசு திருப்திக்குத்தான். என் பிள்ளை குட்டிகளுக்கு ஒரு தீங்கு வரக் கூடாது, அண்ணா நீங்க வருத்தப்பட்டு, நாங்க வாழ முடியாது” என்றவர், தன் முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு அழுதார்.

தாங்க முடியாத மனச்சுமையோடு மாமி வத்திருந்தார் என்று விளங்கியது.

மாமி அழுது ஓயட்டும் என்று அப்பா அமைதியாய் இருந்தார். பிறகு சொன்னார்.

“சரசு… நீ ரொம்ப நல்ல பொண்ணும்மா… முதல்ல நான் சொல்றதைச் செய்… என் மேல உனக்கு உண்மையிலேயே மரியாதை இருந்தா, தயவு பண்ணி இந்த நகையை எடுத்துக் கழுத்திலே போடு ”

மாமி தயங்கி அப்பாவைப் பார்த்தார்.

“அண்ணா … அள்னக்காவடி மாதிரி இந்த ஊருக்கு நாங்க வந்தப்போ எங்களை ஆதரிச்சு, இடம் கொடுத்து, சோறு போட்டது நீங்க… இன்னிக்கு எங்க சொத்து சுகமெல்லாம் உங்களோடது. என் புருஷனை நினைச்சா எனக்கு அவமானமா இருக்கு”

“அப்படியெல்லாம் சொல்வாதே.. என்ன நடந்து போச்சுன்னு இப்படிப் பிரலாபிக்கிறே…. ஏதோ ஒரு சின்ன…”

“பணத்துக்கு என்ன அண்ணா பண்ணுவீங்க..?”

“கால்வாசிப் பணம் இருக்கு.. நல்ல விலை படிஞ்சா வீட்டை வித்துடவாம்னு இருக்கேன். வரும்போது வீட்டைக் கால்ல கட்டியா கொண்டு வந்தோம்… என்ன கொண்டு போகப் போறோம்”.

“வாழற வீட்டை விக்கணுமா அண்ணா .. என் நகையை வித்தா என்ன ?”

“உன்கிட்டே எப்படிம்மா தான் நகையை வாங்க முடியும்…? எனக்கென்ன உரிமை இருக்கு…?”

“இது நீங்க கொடுத்த செல்வம் அண்ணா …”

“தப்பு- யாரும் யாருக்கும் கொடுத்துட முடியாதும்மா- முதல்ல நகையை எடு…”

அப்பாவின் குரலில் இருந்த கண்டிப்பில், மாமி நகையை எடுத்துக் கழுத்தில் போட்டுக் கொண்டார்.

“ஒரு லட்சம் அண்ணா. ஒரு லட்சம்..! புருஷனுக்குப் பதிலா பொண்டாட்டி கடனை அடைக்கறது தப்பில்லையே….”

“புருஷன் இல்லேன்னா அடைக்கலாம்.”

மாமி தலைகவிழ்ந்து இருந்து விட்டுச் சொன்னார்:

“என் புருஷனைப் பார்க்கவே எனக்கு அவமானமா இருக்கு… சே! இவரோட குடும்பம் நடத்த வேண்டியிருக்கேன்னு இருக்கு…”

மாமி மீண்டும் கேவினார்.

அப்பா என்னைப் பார்த்தார்.

அவர் சொல்ல வந்தது, உணர்த்த நினைத்தது எனக்குப் புரிந்தது.

வெகு நேரம் மாமி பேசிக் கொண்டிருந்தார்.

அப்பா கடைசிவரை நகையைப் பெற மறுத்துவிட்டார். வெளியே வந்தோம்.

“பங்கஜம்… சரசுக்கு இலை போடு…” என்றார் அப்பா, அம்மாவைப் பார்த்து. அப்பாவும் நானும் ஒரு வரிசையாகவும், சரசு எதிரிலும் அமர்ந்தோம்.

அம்மா சாதம் பரிமாறினாள். “நான் வரேண்ணா ….” என்றார் சரசு மாமி.

“செய்… அடிக்கடி வா… சுந்தரேசனையும் முடிஞ்சா வரச் சொல்லு.. ஆமா, பிள்ளைகள்லாம் நல்லா இருக்கா…? கடைக்குட்டி ஒழுங்கா பள்ளிக்கூடம் போறானா?… பள்ளிக்கூடம்னா வேம்பாக் சுசக்கமே அவனுக்கு….”

மாமி சிரித்துக் கொண்டார். நான் கார் கதவைத் திறந்தேன்.

டிரைவர் அப்பாவுக்கு வணக்கம் சொன்னார்.

மாமி என்ன நினைத்தாரோ, அப்பாவை நெருங்கிக் கேட்டார்: “சத்தியமா உங்களுக்கு வருத்தம் இல்லையே அண்ணா?”

அப்பா ஒரு கணம் அமைதியாய் இருந்தார். பிறகு சொன்னார்:

“ஒரே ஒரு வருத்தம்மா ….”

“அண்ணா …”

“நல்ல சங்கீதத்துல ஒரு அபஸ்வரம் விழுந்துட்ட மாதிரி, எங்க சிநேகிதத்துல ஒரு சின்ன விரிசல் ஏற்பட்டிடுச்சேன்னுதான் வருத்தம்… அதனால என்ன? இருட்டு வந்தா பகலும் வரும்தானே? சுந்தரேசனை நான் கேட்டதா சொல்லு ” என்றார் அப்பா.

– 1987

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *