அன்பே சிவம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 6,622 
 

இருண்ட வானம் சிறிது வெளுக்கத்தொடங்கியிருந்தது. என்ன சனியன் பிடிச்ச மழை விடுறமாதிரிதெரியல என்று சினந்தபடி எழுந்தார் சைவப்பழமும் சிவதொண்டனுமாகிய சிவநேசன். சிவநேசனின் கோட்பாடு இது சிவபூமி. இங்கு வேறு மதங்கள் இருக்கக்கூடாது என்பதாகும். வேறு மதம் என்ன? சிவனின் பிள்ளைகளைத் தவிர அதுதானுங்கோ உவையள் பிள்ளையார், முருகன் அவையைத்தவிர வேற ஒருத்தரையும் கும்பிடக்கூடாது. அவரின் தாரக மந்திரம் “அன்பே சிவம் அதுவே சத்தியம்”. இது அவரின் வாயில் மட்டும்தான்.

காலைக்கடன்களை முடித்துச் சிவனை இறுகப்பற்றியபின், வந்து பேப்பரை தூக்கிக்கொண்டு இருந்தவரை சீண்டினாள் மனைவி கவிதா. “ஒபாமா உங்கட நேற்றைய பேச்சுக்கு மறுப்பறிக்கை விட்டிருக்கிறார் போல?” ஆத்துக்காரியின் குரலில் தெரிந்த ஏற்ற இறக்கங்கள் காதலிக்கும்போது சங்கீதக்கலவையாகதான் சிவநேசனுக்கு இருந்தது. கலியாணத்துக்கு பிறகு… என்று சொல்லமுடியாது ஒரு இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு மனைவியின் வாயில் வரும் ஏற்ற இறக்கங்கள் எல்லாம் நாரசாரமாக இருப்பது போல ஒரு நினைப்பு? நினைப்பென்ன உண்மைதான் என மனதுள் நினைத்தார். அதுமட்டுமல்ல,

குரல் ஏற்ற இறக்கங்கள் சங்கீதக்கலவையாக தெரிந்த காலத்தில் கண்களில் இருந்து தேன் வழிந்தமாதிரித்தான் இருந்தது. பிற்பாடுதான் தெரிந்தது அது முகம் கழுவாமல் போனில் கதைத்துக்கொண்டிருந்ததால் கண் பீழைசாறி இருந்தது என்று. அதுவும் இப்ப ஒரு இரண்டு வருடமாகத்தான் உணரக்கூடியதாக இருந்தது.

விசயத்துக்கு வருவம், இன்றைக்கு நாரசாரமாக இருந்த ஏற்ற இறக்கத்தால் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறி பறந்ததுபோல, சிவநேசன் இரு கண்களையும் அகல விரித்து முறைத்தார் மனைவி கவிதாவை.

அப்படியென்ன பேசிப்போட்டார் சிவநேசன்? ஒன்றுமில்லை. கோயில் திருவிழாவில் மேடையில ஒருக்கா ஏறவிட, மனுசன் மதமாற்றம் பற்றி கிழிகிழியெண்டு கிழித்து மேடையை சுற்றி தோரணங்களாகத் தொங்கவிட்டுத்தான் இறங்கினார். திருநாவுக்கரசர் காலத்தில் இருந்து இன்று வரைக்கும் ஒரு பிடி. சனம் கை தட்டோதட்டென்று தட்டிப்பார்த்தும் மனுசன் அசரவுமில்லை, மேடையை விட்டு இறங்கவுமில்லை.

சொந்த மதத்தை விட்டுமாறி இன்னொரு மதத்துக்கு போவதெல்லாம் ஒரு பழைப்பா? எமது பிறப்பிலேயே அதி உச்ச நம்பிக்கை கடவுள். அந்தக் கடவுளையே அந்த அதி உச்சத்தையே நம்பாமல் மதம் மாறுகிறது என்றால்? கட்டிய மனிசிமார், புருசன்மார் இடையில விட்டுட்டு போகமாட்டினம் என்பது என்ன நிச்சயம்? இப்படிப் பல கேள்விகளைக் கேட்டார் சிவநேசன்.

சிவநேசனைக் கேள்வி கேட்கும் துணிவு அவரது ஆத்துக்காரி கவிதாவுக்குத்தான் உண்டு. கவிதாவும் கோயிலில் மேடைக்கு முன்னால் இருந்தவள்தான். அப்படி இருக்காட்டியும் விடமாட்டார் சிவநேசன். ஊரில உள்ள சனமெல்லாம் என்ர பேச்சைக் கேடகுதுகள். உனக்கென்ன கோதாரியே? இருந்து கேடகிறதுக்கு என்று ஒரு உருத்திர தாண்டவம் ஆடிவிடுவார். கவிதாவும் விஜய் ஸ்ரைலில், கட்டின குற்றத்துக்காக என்னவெல்லாமோ செய்யிறம்! இதைச்செய்ய மாட்டோமா என்ன? என்கிற மாதிரி சிவசேனின் பேச்சு எங்கு இருக்கோ? எங்கே மைக்கைப் படிக்கிறாரோ? அங்கே தொபுக்கடீர் என்று குடும்பக் குத்துவிளக்காய் முன்னுக்கு இருந்து விடுவாள். அதனால் வந்தது இன்றைக்கு வினை சிவசேனுக்கு…

ஏண்டி! நான் நேற்றுப் பேசினதில் என்னத்தைப் பிழை கண்டனீ? பிரபா கூட நான் இரவு போன் பண்ண, உங்கட பேச்சு அருமை ஐயா எண்டு சொன்னவன். உனக்கென்ன! தெரியும் எங்கட சமத்தைப் பற்றி? இப்ப மதம் மாறுபவர்களைப்பற்றி? சிவநேசனின் குரலில் மழைக் குளிரிலும் அனல் பறந்தது.

அது சரி, எனக்கு ஒன்றும் தெரியாதுதான். மதமாற்றம் மதமாற்றம் என்று கதைக்கிறியள்; எனக்கொண்டும் விளங்காதுதான் ஆனால் இப்ப எங்கட வடக்கை இருக்கிறவங்கள் திருவிழா கேட்டவங்கள் ஏன் கொடுக்கவில்லை?

அடி செருப்பால! கண்டவங்களுக்கும் திருவிழா கொடுக்க முடியுமே? பரம்பரை, சாதி பார்க்காம கண்டவையையும் கோயிலுக்குள் விடலாமே? என்ன கதை கதைக்கிறாய்? அறிவு கெட்டத்தனமாக. இப்போது சிவநேசனின் குரலில் அனலுடனட பொறியும் பறந்தது. அதுகளை உள்ளுக்கு விட்டதே பிழையெண்று இருக்கிறேன், நீ என்னடா என்றால்?

இஞ்சேரப்பா உங்கள் அளவுக்கு எனக்கொன்றும் தெரியாதுதான்! ஆனால் அவையளும் மனிசர்தானே? அன்பே சிவம் என்று சொல்கின்றீர்கள்? பிறகு அதுகளை ஒதுக்குகின்றீர்கள். கடவுள் இருக்கின்ற இடத்தில் அன்பும்,அங்கீகாரமும் கிடைக்காவிட்டால் கடவுளில் அவர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? யார் தங்களுக்கு அன்பையும் அங்கீகாரத்தையும் கொடுக்கின்றார்களோ? அங்கேதானே போவார்கள்.முதலில் மனிதரை மனிதராக மதிக்க வேண்டும்.மதமாற்றத்துக்கான காரணம் என்னவென்று அறிதல் வேண்டும். பிறகுதான் கடவுள் எல்லாம்.

கவிதாவின் பேச்சினை இடைவெட்டினார் சிவநேசன். நீ மொக்கு மனிசி, அடியே கடவுளுக்கே மதமாற்றம் பிடிக்காமல்தானே திருநாவுக்கரசருக்கு சூலை நோயைக்கொடுத்து அவரை ஆட்கொண்டவர் சிவபெருமான். பிறகு என்னடி அறிவு கெட்டததனமாய்க் கதைக்கின்றாய்?

இஞ்ச பாருங்கோ அன்பே சிவமென்பார் அறிவுடையார். அப்ப நாவுக்கரசருக்கு சூலைநோயைக் கொடுத்த சவனே இப்ப சும்மாதானே இருக்கிறார்? நீங்க எதுக்குக் குதிக்கிறியள்? உவங்கள் அரசியல்வாதிகள் வரும்பொழுதெல்லாம் உதெல்லாம் பார்த்தே கோயிலுக்குள் விடுகின்றனீங்கள். எட்டா மடிஞ்செல்லே உள்ளுக்குள் கூப்பிடுகின்றனீங்கள்.

சிவநேசனுக்கு மழைக்குளிரெல்லாம் பறந்துவிட்டது. கலியாணம் கட்டிய புதுசிலயும் மழைக்குளிர் இப்படிக்கானாமற் போனதுதான்! அதுவேற. இது? குருதியெல்லாம் கொதிநிலையை அடையிற அளவுக்கு வந்திட்டுது சூடு. இப்ப நீ வாயை மூடப்போகிறாயா? இல்லையா? நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உதுகள் நடவாது. சிவநேசனுக்கு மூச்சு வாங்கியது.

அதுசரி, அந்தக்காலத்தில் போர் நடந்துமுடிய போர்வீரர்களை சும்மா இருக்கவிடாமல் அவர்களைக் கொண்டு கோயிலைக் கட்டுவித்தார்கள். நாடும் செழிப்பாக இருந்தது. இப்ப நாங்கள் போர் முடிந்து, அழிந்து, அதிலும் இப்பொழுது சீரழிந்து போய்க்கொண்டிருக்கின்றோம். இப்ப போய் கோடி கோடியாக செலவழித்து கோயில்களைக்கட்டி என்ன பிரயோசனம்? முன்னர் மூர்த்தியுடன் கீர்த்தியும் இருந்த கோயில்களில் உங்களை மாதிர ஆட்களின் திமிர்தான் தெரிகின்றது. கோயில்கள் கட்டுகிற காசில போரால பாதிக்கப்பட்ட பிள்ளையளுக்கு உதவலாமே? பள்ளிக்கூடங்களைத் திருத்தலாமே? அதுகளை செய்யமாட்டியள். மற்றச் சமயங்களில் எல்லாம் எத்தனை சமூக இல்லங்கள் நடாத்துகினம்? நீங்கள் அறநெறிபாடசாலை நடாத்திறதை தவிர என்ன செஞ்சுபோட்டியள்? இதெல்லாம் படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோயில் மாதிரியல்லோ இருக்கின்றது. வேட்டி கட்டி முழுக்கைச் சட்டை போட்டு, சீலை உடுத்திறதிலதான் உங்கட சமய விழுமியங்கள், கலாச்சாரங்கள் பாதுகாப்பாக இருக்குமென்று எந்த விசரன் சொன்னவன்?

மனைவி கவிதாவின் நாக்கில் இன்று சனியன் குந்தியிருந்து கும்மியடிக்கிற மாதிரி இருந்தது. என்றாலும் கேட்கிற கேள்வியெல்லாம் கேட்டாயிற்று. இன் நடக்கிறதைப் பார்ப்போம். என்று பேசாமல் உள்ளே போனவளை இடைமறித்தார் சிவநேசன். என்ன என்பதைப்போல் பார்த்தாள் கவிதா,

முடிவா நீ என்ன சொல்ல வருகின்றாய்?

அது சரி, விடிய விடிய இராமர் கதை மாதிரித்தான். உங்களை மாதிரி ஆட்களுக்கு சொல்லி விளங்கப்படுத்த முடியாது. முதலில் கோயில்களை வியாபார நிலையமாகவும், உங்கள் பரம்பரை அந்தஸ்தை பாதுகாக்கிற இடமாகவும் வைச்சிராதையுங்கோ. கோயில சமூக மயப்படுத்துங்கோ, அங்கே எல்லோரும் சமம் என்ற நிலையைக் கொண்டாருங்கள். எல்லோரையும் அங்கீகரியுங்கோ, சமூகத்தில் உள்ள நலிவுற்றவர்கள் ஆதரவற்றவர்களுக்கு உதவுங்கள். இதுதான் இன்றைய தேவை. இவைகள் நடந்தால் ஏன் மற்ற மதங்களுக்கு மாறப்போகின்றார்கள். எல்லா மதங்களும் ஒழுக்கங்களையும், நற்சிந்தனைகளையும்தான் தருகின்றன. இப்பொழுதான் சில மதங்கள் மதம்பிடித்து அலைகின்றனர்.

வேற்று மதத்தார் எங்களை அழிக்கவில்லை பாருங்கோ நாங்கள்தான் எங்களை அழித்துக்கொண்டிருக்கின்றோம். இந்து சமயம் ஒரு சிறந்த சமயம். யாரும் வரலாம் யாரும் போகலாம். நீங்கள் பாதுகாக்காவினும் அது அழியாது. தீர்க்கமாக சொன்னாள் கவிதா.

சிவநேசனுக்கு இப்பொழுது மனைவி கவிதா, கவிதாம்பாளாக தெரிந்தாள். ஒரு தேத்தண்ணிக் கோப்பையுடன் தனக்கு ஆண்மீக விழப்பைத் தந்த மனைவியை அன்புடன் நோக்கினார். கண்கள் காதலாகிக் கசிந்தன. உடனடியாகவே ஒரு முடிவெடுத்தார் இனி எக்காரணம் கொண்டும் தன் பேச்சு மேடைக்கு முன் மனைவியை குத்துவிளக்காய் இருத்துவதில்லை என்று. அன்பே சிவம்…….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *