அன்பு மகளே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 7,674 
 

அன்புள்ள மகளே !

எனக்கு கம்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது.. அதனால் உனக்கு இன்லெண்ட் கடிதத்திலேயே இந்த கடிதம் எழுதுகிறேன். நான் வேலை செய்துகொண்டிருக்கும்

சமையல் காண்ட்ராகடர் வீட்டில் உள்ள அவர் பேரன் உங்க மகளுக்கு இ.மெயில் கடிதம் எழுதுங்க, உடனே போயிடும் அப்படீன்னு சொன்னான். எனக்கு அதை பற்றி எல்லாம் தெரியாது. நீ சிரமம் பாராமல் இந்த கடிதத்தை படிப்பாய் என்று நம்புகிறேன்.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா உன் அப்பாவை பற்றி ? இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். அவர் நம் இருவரை விட்டு போகும்போது உனக்கு பனிரெண்டு வயது இருக்கலாம், நீ ஏழாவதோ, எட்டாவதோ படித்து கொண்டிருந்ததாய் ஞாபகம். அப்பொழுதெல்லாம், நீயும், அவரும்தான் ஒன்றாய் இருப்பீர்கள். அவர் முதுகிலோ, தோளிலோ சாய்ந்து கொண்டோதான் இருப்பாய்.அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்களோ ஒரு சிரிப்பும், வேடிக்கையாகவும் இருக்கும். நான் கூட உங்கள் இருவரிடம் சண்டைக்கு வருவேன், என்னையும் சேர்த்துக்கொள்ள சொல்லி, ஹூம் நீங்கள் என்னை கண்டு கொள்ளவே மாட்டீர்கள்.

அப்பொழுது நமக்கு பணக்கஷ்டம் இருந்தாலும், வீட்டில் சந்தோசமாய் இருந்ததாய்த்தான் ஞாபகம். இதுக்கும் உன் அப்பா கல்யாண வீடுகளுக்கு சமையல் வேலைகள்

செய்து கொண்டுதான் இருந்தார். உனக்கு தெரியாது, நம்ம ஊரில் எங்கே கல்யாணம் நிச்சயமானாலும், வேம்பு தான் சமையலுக்கு வரணும்னு கல்யாண காண்ட்ராக்டர்கிட்ட மாப்பிள்ளை வீடும், பொண்ணு வீடும் சொல்லி விடும். அந்தளவுக்கு உன் அப்பாவோட

சமையல் பிரசித்தம். ஆனா அவருக்கு தன்னுடைய தொழிலை பத்திய கர்வமே தவிர அதனால, காண்ட்ராக்டர்கிட்ட அதிகமாக பணம் கேட்க தெரியலை. நான் கேட்டா கடவுள்

எனக்கு கொடுத்திருக்கற இந்த திறமையே போதும், அதனால உனக்கும் புள்ளைக்கும் வயிராற சாப்பாடு போட முடியுதில்லை,அது போதும். அப்படீன்னு சொல்லி என் வாயை அடைச்சிடுவாரு.

நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும்? இதை புரிஞ்சுக்காம உன் அப்பா

இருந்ததினால, திடீருன்னு அவர் நம்மை விட்டு போகும்போது நான் திகைச்சு போயிட்டேன். அடுத்து என்ன செய்யறதுன்னு?. எனக்கு படிப்பு ஒண்ணும் அதிகம் கிடையாது. நம்ம வழி முறையா சமையல் வேலைகள் செஞ்சுதான் பழக்கம். கல்யாணத்துக்கு அப்புறம், உன் அப்பா

என்னை அதுக்கும் போக வேண்டாமுன்னு சொல்லிட்டாரு.நீ, உன் அப்பா, அப்படீன்னு வட்டத்துலயே வாழ்ந்திட்டேன். அப்ப என்னுடைய சூழ்நிலை எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப்பாரு?

உன்னையும், ஸ்கூலுக்கு அனுப்பிச்சுட்டு, நான் மறுபடியும் கல்யாண சமையல்

வேலைக்கு போக ஆரம்பிச்சேன். அஞ்சாறு வருசமா வீட்டுல உட்கார்ந்து பழகின உடம்பு

ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன், சாயங்காலம் வந்து உன்னைய கவனிச்சு, ஆனா உன்னைய பத்தி ரொம்ப பெருமைப்பட்டேன், அப்பா நம்மை விட்டுட்டு போயிட்டாரு, இனி அவர் வரமாட்டாரு அப்படீங்கறதை அந்த வயசுலயே புரிஞ்சுகிட்டு எனக்கு ஆறுதல் சொல்லுவே. நான் கண்ணீரோடு உன்னை கட்டு பிடிச்சுக்குவேன். எனக்கு அதை இப்ப நினைச்சாலும் உடம்பு புல்லரிக்குது.

இனிமேல் உன் வாழ்க்கை வேறே, என் வாழ்க்கை முறை வேறே

அப்படீன்னு, எங்கிட்டே பேசின அம்மா, இப்ப எதுக்கு இந்த கடுதாசிய எழுதி பழைய கதை எல்லாம் எங்கிட்ட சொல்லிட்டு இருக்கறா அப்படீன்னு நினைப்பே.

நீ சூழ்நிலை உணர்ந்து நல்லா படிச்சே, அம்மாவுக்கு மேற்கொண்டு செலவுகள் வைக்காம உன் படிப்பு மூலமே ஸ்காலர்சிப்பெல்லாம் வாங்குனே. அம்மா நான் சம்பாரிச்சு

உன்னை எப்படி வச்சுக்கப்போறேன்னு அடிக்கடி சொல்லுவே. இந்த வார்த்தைதான் எனக்கு இன்னும், இன்னும், வாழனும்னு தோணும்.

உனக்கு ஞாபகம் இருக்கா? நீ பட்டப்படிப்பு முடிச்சு வந்து நின்ன சந்தோசத்தை விட, உனக்கு வேலை கிடைச்சுடுச்சு, பெங்களூர் போறேன்னு சொன்னப்ப நான் அழுத அழுகை, கடவுளே என் மகள் ஜெயிச்சுட்டா, இனி எனக்கு எந்த கவலையுமில்லை அப்படீன்னு உன்னைய கட்டி பிடிச்சு அழுதேனே. நீ கூட அம்மா அழுகாதே, நான் வந்துட்டேனுல்லை, அப்படீன்னு என் முதுகை தட்டிக்கொடுத்தியே.

. இப்ப கூட இந்த நினைப்புகள்தான் என்னைய இன்னும் நடமாட வச்சிட்டிருக்கு.

என்னைய இப்ப எல்லாம் சமையல் காண்ட்ராக்டரு, மகன் வேலை செய்ய விடறதேயில்லை.

‘அம்மா’ நீங்க வந்து நின்னீங்கன்னா போதும் எங்களுக்கு அதுவே யானை பலம், அப்படீன்னு சொல்லுவான். அவனுக்கு தெரியுமா, என்னோட பலமே உன்னோட நினைவுகள்தான்னு.

நம்ம அப்பாவுக்கும், எனக்கும் வேலை கொடுத்த காண்ட்ராக்டரு இறந்து போயி அவர் பையன் பொறுப்பு எடுத்து நாலைஞ்சு வருசம் ஆச்சு. நானும் ஒதுங்கிக்கறேன் அப்படீன்னு சொன்னதை ஒத்துக்க மாட்டேன்னுட்டான்.எங்களுக்கெல்லாம்,நீங்க குரு மாதிரி, அதனால உங்களால முடியற வரைக்கும் எங்க கூட வரணும்னு சொல்லிட்டான். இதெல்லாம் நீ என்னை விட்டுட்டு போன பின்னால நடந்தது. அதனால உங்கிட்ட சொல்ல முடியாம போச்சு.

கண்ணே, நீ உன் மனசுக்கு பிடிச்சவனோட கல்யாணம் பண்ணிட்டு என் எதிரில் வந்து நின்னப்ப, நான் “உன் வாழ்க்கையை நீ தேடிகிட்டே”இனி அதை பத்தி பேசறதுல அர்த்தமில்லை, அதனால நீ எங்கிருந்தாலும் நல்லா இரு அப்படீன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு உள்ளே போயிட்டேன். நீ அரை மணி நேரம் நின்னுட்டு கிளம்பி போயிட்டே.

நீ கிளம்பி போயிட்டே அப்படீன்னு தெரிஞ்சு நான் வெளியே வந்து உன்னை மனசார

வாழ்த்துன்னே தவிர வேறு எதுவும் சொல்லலை. “ஒரு பெத்தவளா இருந்து அந்த இடத்துல,

அப்படி ஒரு சூழ்நிலையில, என் மக எனக்கு தெரியாம எதுவும் செய்யமாட்டா அப்படீங்கற நினைப்புல வாழற என்னைய மாதிரி சாதாரண பொண்ணுக்கு வர்ற நியாயமான கோபம்தானே அது”. இதையாவது நீ ஒப்புக்குவேன்னு நினைக்குறேன்.

நான் இப்பவும் எனக்குன்னு உங்க அப்பா கட்டி வச்ச சின்ன வீட்டுலதான் இருக்கேன்.

என் வாழ்க்கைக்கு தேவையான பணமும் வச்சிருக்கேன், அது போக அப்ப, அப்ப அந்த தம்பி சம்பளமா கொடுக்குது., நான் இறந்துட்டா கூட யாரும் செலவு பண்ணி என்னைய அனுப்ப கூடாதுன்னு கொஞ்சம் பணம் அந்த தம்பி கிட்ட கொடுத்து வச்சிட்டேன்.

இதை நான் ஏன் உங்கிட்ட சொல்றேன்னா, இவ்வளவு தன்மானமா, தன்னம்பிக்கையா

வாழ்ந்துகிட்டிருக்கற நான் உங்கிட்ட இருந்து எனக்கு எதுவும் அனுப்ப வேண்டாமுன்னு சொன்னதுல தப்பு இல்லைங்கறதை நீ புரிஞ்சுக்கணும்னுதான். மத்தபடி நீ கல்யாணம் பண்ணிகிட்டதை பத்தி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மறுபடி சொல்றேன், உன் வாழ்க்கை நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை” நல்லா இருக்கணும்.

மகளே உன் கூட பேச்சு வார்த்தையோ, இல்லை எந்த தொடர்போ இல்லாம அஞ்சு வருசமா இருந்த நான் இப்ப எதுக்கு இவ்வளவு பெரிய கடிதாசி எழுதணும்னு நினைக்கிறயா?

ஒரு விசயம் அரசல் புரசலா என் காதுக்கு வந்துச்சு, நீ உன் கணவர்கிட்ட இருந்து விவாகரத்து கேட்டிருக்கேன்னு. அதை கேட்டதிலிருந்து என் மனசு கேட்கவே இல்லை.

வேண்டாம் மகளே வாழ்க்கையில முதல்ல கிடைக்கறதுதான் எதுவுமே, நல்லது.

எந்த குழந்தைக்கும் தன்னுடைய சொந்த தகப்பங்கிட்ட கிடைக்கற உறவு எங்கேயும் கிடைக்காது. அதைய உன் குழந்தைக இழந்திட கூடாது.தயவு செய்து இந்த எண்ணத்தை மட்டும் விட்டுடு அப்படீன்னு ஒரு தாயா இருந்து உனக்கு சொல்லிக்கணும்னு ஆசைப்படறேன். என் கல்யாணத்தையே ஒத்துக்காத நீ இதுக்கு மட்டும் எதுக்கு கடிதம் எழுதறேன்னு நினைச்சுக்காதே. எங்கிருந்தாலும் நீ நல்லா இருக்கணும் அப்படீன்னு நினைக்கிற ஒரு தாயோட புலம்பல் இது அப்படீன்னு நினைச்சுக்கோ.

அன்புடன்

அப்பாவோடவும் உன்னோடவும் இருந்த

நினவுகளிலே வாழ்ந்துகிட்டு இருக்கும்

உன் அம்மா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *