அனு அப்படித்தான்!

 

கோபி தன் கோபத்தையெல்லாம் காட்டி ஓங்கி உதைக்க, வண்டி ‘விர்’ரென்று சீறிக் கொண்டு ரோஷமாகக் கிளம்பியது. சிக்னல்களையெல்லாம் கடந்து அண்ணா சாலையின் மையத்திலுள்ள தன் அலுவலகத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ‘லிஃப்டுக்கு’ ஓடிய கோபிக்கு ‘சே!’ என்றிருந்தது.

‘என்ன மனைவி, என்ன வாழ்க்கை வேண்டியிருக்கிறது?’ ஒரு நாளைப் போல தினமும் அலுவலகத்திற்கு ‘லேட்டாகப் போனால் காலையிலேயே ‘மூட்’ கெட்டு விடுகிறது.

எல்லாம் அனுவால் வருவதுதான். நேரத்திற்குக் கிளம்பாமல் அனு தாமதப்படுத்துவதால் தினமும் லேட்! டென்ஷன்! இந்த அழகில் இதே வங்கியின் தேனாம்பேட்டை கிளையில் தான் அனு பணி புரிகிறாள்.

அலுவலகம் கிளம்புவதற்கு பத்து நிமிடம் முன்பு தான் புடவையா, சல்வாரா என்று யோசிக்க ஆரம்பிப்பாள். சில சமயம் கட்டிய புடவையை அவிழ்த்தெறிந்து விட்டு ஒரு சூடிதாரை உடுத்திக் கொண்டு கிளம்புவதும் உண்டு.

“இதையெல்லாம் கொஞ்சம் முன்னாலேயே ‘ப்ளான்’ பண்ணிக்கக்கூடாதா அனு?” என்று சாதாரணமாகக் கேட்டாலே போதும்! எரிமலை வெடித்து அக்னிக் குழம்பு பீய்ச்சி அடிக்க ஆரம்பித்து விடும்.

“ஆமாம்! எனக்கு உங்களை மாதிரி ‘ப்ளானிங்க்’ பண்ணுற தெறமையில்ல தான். இப்ப அதுக்கு என்ன பண்ண சொல்றீங்க?” என்பாள் யுத்த முஸ்தீபுகளுடன்.

இதற்கு பதில் சொன்னால் வார்த்தைகள் தடித்து, “உங்களை யாரு என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாங்க?” என்று பேச்சு திசை மாறி, “நான் ஒத்து வரலேன்னு நெனச்சா பேசாம ‘டைவோர்ஸ்’ பண்ணிடுங்க!” என்பாள் சர்வ சாதாரணமாக. அவன் எந்த விதமான பதிலும் சொல்லாமல் மௌனம் காத்தாலும் அவள் ‘ஒரு கை ஓசையாக’க் கத்திக் கொண்டே தான் இருப்பாள்.

‘காலையில் எழுந்து அலுவலகம் கிளம்புவதற்குள் எத்தனை முறை தேவையில்லாமல் எரிச்சல் பட்டு தானும் ‘டென்ஷனாகி’ எதிராளியையும் டென்ஷனாக்கி……………….சீச்சீ! என்ன பொண்ணு இவ?’

இத்தனைக்கும் இருவரும் காதல் கல்யணம் செய்து கொண்டவர்கள். நான்கு வருடங்களுக்கு முன் கோபியும் அந்த வங்கியின் தேனாம்பேட்டை கிளையில் தான் வேலை செய்து வந்தான். அனு அந்த வருடந்தான் வேலையில் சேர்ந்தாள். பெற்றோரை சிறு வயதிலேயே இழந்து சொந்த பந்தங்களும் சரியில்லாமல் ஹாஸ்டலிலேயே தங்கிப் படித்து வேலைக்கும் வந்தவள் அனு.

சராசரிக்கும் அதிக உயரம். சிவந்த நிறம். எவரையும் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அசத்தலான அழகு. அனுவின் பால் கோபி கவரப்பட்டதில் ஆச்சரியமில்லை. அவனுடைய அமைதியான சுபாவம், நிதானமான அணுகுமுறையால் அனுவும் அவன் பால் ஈர்க்கப்பட்டாள். அனு கல்யாணமானதும் ஹாஸ்டல் அறையிலிருந்து நேரே தனிக் குடித்தனத்திற்கு வந்தாள்.

கணவன், மனைவி இருவரும் ஒரே கிளையில் பணியாற்றக்கூடாது என்ற வங்கியின் விதிக்குட்பட்டு, கோபி அண்ணாசாலை கிளைக்கு மாற்றப்பட்டு விட்டான். காலையில் அவளை தேனாம்பேட்டையில் இறக்கி விட்டு விட்டு அரக்கப் பரக்க அவன் தன் அலுவலகம் செல்வான். மாலையில் அவளை அழைத்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து வந்ததும், சாவகாசமாகக் குளித்து ‘மேக்ஸி’க்கு மாறி, நிதானமாய்த் தான் சமையலறைக்குள் நுழைவாள் அனு. அதற்குள் பசி தாங்காமல் கோபியே ‘டீ’ போட்டு இருவருக்குமாக ஏதாவது ‘ஸ்நாக்ஸ¨ம்’ ரெடி பண்ணி விடுவான்.

கஷ்டப்பட்டு புத்தகங்களையெல்லாம் வைத்துக் கொண்டு சமையல் கற்றுக் கொண்டவள் என்பதால் சமையலைப் பற்றி சாதாரணமாக ஏதாவது தமாஷாகச் சொன்னால் கூட கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும்.

“நான் சமைக்கிறது புடிக்கலேன்னா, பேசாம வெளியிலேயே சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வாங்க. எனக்கும் வேலையாவது மிச்சமாகும்” என்று கத்த ஆரம்பித்தால் அத்தோடு நிறுத்த மாட்டாள்.

“இல்லாட்டி மட்டும் இந்த வீட்டுல எனக்கு இரக்கம் காட்ட யாரு இருக்காங்க? பொண்டாட்டி வேலைக்கும் போயிட்டு வீட்டிலேயும் வேலை செஞ்சிக்கிட்டு கஷ்டப்படறாளேன்னு யாரு நெனைக்கப் போறாங்க?”

‘அவளைத் தவிர இந்த வீட்டுல இருக்கிற ஒரே ஒரு ஜீவன் நான் தான். அப்படியிருக்க ஏதோ பத்து பேரோட குடித்தனம் செய்யுற கூட்டுக் குடும்ப வாழ்க்கை மாதிரி ‘டயலாக்’கெல்லாம் ஓடுதே?’ என்று கோபி எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போதே,

” எல்லாம் என் தலையெழுத்து! என்னைப் பெத்தவங்க தான் போயிச் சேந்துட்டாங்கன்னா, நா பெத்த கொழந்தையைக் கூட என்னோட வச்சிக்க முடியாம நான் அனுபவிக்கிற மன வேதனை யாருக்குத் தெரியும்?” என்று பேச்சு எங்கேயோ போய் அழுகையில் முடியும்.

அவர்களுடைய ஒன்றரை வயது அருமை மகள் தீபிகா கோபியின் பெற்றோரிடம் திருச்சியில் வளர்ந்து வருகிறாள். அனுவைப் பெற்றவர்கள் இல்லாததால், கோபியின் தாயாரே அனுவுக்குப் பிரசவம் பார்த்து, குழந்தையையும் தானே திருச்சியில் வைத்துக் கொண்டிருக்கிறாள். இவர்கள் அவ்வப்போது போய் பார்த்து வருவார்கள்.

படுக்கையில் குப்புறப்படுத்து விசும்பிக் கொண்டிருப்பவளைப் புரட்டி ஆறுதல் கூற முற்பட்டால் கைகளைத் தட்டி விடுவாள். மீறி அணைத்து சமாதானப்படுத்த முயற்சித்தால், “குழந்தை எங்கியோ இருக்கா. என் துக்கம் எனக்கு. ஒங்களுக்கு ஒங்க தேவை. சே!” என்று ஈவிரக்கமில்லாமல் ஈட்டி போல வார்த்தைகளை வீசுவாள்.

அவள் சிடுசிடுத்தால் அவனாலும் கோபப்பட்டுக் கத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. கடைசியில் வெறுப்பு மிக, ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பிக் கொள்ள, கோபத்தில் கத்துவதைக் காட்டிலும் கொடியதான மௌனம் வீடெங்கிலும் நிலவும்.

கூட வேலை செய்யும் பரந்தாமன் வயதில் பெரியவர். அவரிடம் வீடு நரகமாக இருப்பதைப் பற்றிச் சொல்லி வருத்தப்பட்டான்.

பரந்தாமன் சிரித்தார்.

“நீ எப்படி எடுத்துக்கிறியோ அப்படித்தான் இருக்கும் வாழ்க்கை. ‘நரகம்’னா நரகம். ‘சொர்க்கம்’னா சொர்க்கம். அனு சுபாவத்தை நல்லா புரிஞ்சிக்கிட்டே இல்லே? ‘அனு அப்படித்தான்’ ன்னு முழு மனசோட அன்போட ஏத்துக்கோ!. அப்புறம் இந்த டென்ஷனெல்லாம் போயி மனசே அமைதியாயிரும் பாரு. அப்புறம் ஒரு விஷயம்ப்பா! மெகானிகலா வாழ்க்கையிருந்தா அலுப்பு, சலிப்பு, கோபம், சிடுசிடுப்பு எல்லாம் நிச்சியம் வரத்தான் செய்யும்! உன் மனைவிக்கு ‘மூட்’ அவுட் ஆகும்போதெல்லாம் தாமதிக்காம ‘சட்’ டுனு லீவு எடுத்துக் கிட்டு ரெண்டு பேரும் ஊருக்குப் போய் குழந்தையைப் பார்த்திட்டு வாங்க! வாழ்க்கையில நிச்சயம் ஒரு மாறுதல் கிடைக்கும் பாரு!”

அனுவின் குழந்தையைப் போன்ற சுபாவம், தினசரி வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ‘டென்ஷனாகி’ சிடுசிடு, கடுகடு வென்று வார்த்தைகளைக் கொட்டி அவள் நடந்து கொள்ளும் விதம், ஆனால் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு அடிப்படையாக அவள் தன் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த பிரியம் என்று எல்லாவற்றையும் ஒரு இரவு முழுவதும் மனதில் பொறுமையாக அலசி ஆராய்ந்தான் கோபி. பரந்தாமன் சொன்னது போல மனம் நிறைய அன்போடு ‘ஆமாம்! அனு அப்படித்தான்! அவளாக மாறினால் தான் உண்டு.’ என்று ஒரு முறை நிதானமாகச் சொல்லிப் பார்த்துக் கொண்டான் கோபி. மனதிற்குள் அமைதி அலையலையாகப் பரவுவது போலிருந்தது.

குழந்தையைப் பார்ப்பது நிச்சயம் நல்ல மாறுதலாகத்தானிருந்தது. தாத்தா பாட்டியின் அன்பான பராமரிப்பில் ‘கொழு கொழு’வென்றிருக்கும் தன் குட்டி தேவதையைப் பார்த்ததும் துள்ளலும் துடிப்புமாய், குறும்பும் விளையாட்டுமாய் மாறிப் போகும் அனு, சென்னைக்குத் திரும்பியதும் திரும்ப ‘முருங்கை மரம்’ ஏறி விடுவாள். தினமும் காரணம் சொல்லத் தெரியாத கோபம், அழுகை!

கோபியின் தந்தை திருச்சியில் போஸ்ட் ஆஃபீசில் வேலை செய்கிறார். தங்கை அங்கேயே காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறாள். அதனால் அம்மாவால் சென்னைக்கு வர முடியாது. குழந்தையை சென்னையிலேயே வைத்துக் கொள்ளலாம், எல்லோரையும் போல ‘காப்பகத்தில்’ விட்டு விடலாம் என்றால், அனு ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாள்.

“என்ன இருந்தாலும் நம் மனிதர்கள் பார்த்துக்கிறது மாதிரி வருமா?” என்கிறாள். ஆனால் தினமும் ஒருமுறை குழந்தையைப் பிரிந்திருக்கும் தன் நிலைமையை நினைத்துக் கண்ணீர் வடித்து கோபியை தன் நிலைமைக்குக் காரணகர்த்தாவாக பாவித்து சண்டை போடுகிறாள்.

“அனு! நாம தான் சொந்தமா ஃப்ளாட், வீட்டுக்குத் தேவையான பொருட்கள்னு ஒரு ரவுண்ட் எல்லாமே வாங்கிட்டமே? இன்னமும் நீ வேலைக்குப் போய் ஏன் சிரமப்படணும்? பேசாம தீபுவோட வீட்டிலேயே இருந்துரேன்?” என்று ஒரு நாள் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

“என்ன பேசுறீங்க? இந்த ‘ரிசஷன்’ நேரத்தில பேசற பேச்சா இது? ஏங்க? அவங்கவங்க ஒரு வேலை கெடைக்குமான்னு அலையற நேரத்தில …. ச்சே! இப்படியேங்க புத்தி போகுது ஒங்களுக்கு?” என்று பாய்ந்த பாய்ச்சலில் கோபி வாயை மூடிக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

“எந்த வழிக்கும் ஒத்து வர மாட்டேங்கிறே! பிறகு இதுக்கு என்னதான் தீர்வு? சரி அனு! நீயே யோசிச்சு நீ சந்தோஷமா இருக்க ஒரு வழி கண்டு பிடி!” என்றான் கோபி எரிச்சலுடன்.

ஆனால் அனுவின் சுபாவமே வேறு ஆயிற்றே? குறை பட்டுக் கொள்வதிலும் புலம்புவதிலும் இருக்கும் தீவிரம், பிரச்சினைக்கான தீர்வைக் கண்டு பிடிப்பதில் அவளுக்கு என்றுமே இருந்ததில்லை.

“இப்படியே மனசு சோர்ந்து போய் ஒக்காராதே அனு! வா! எழுந்திரு! பீச்சுக்கு இல்லே ஏதாவது சினிமாக்குப் போகலாம்!” என்று அவள் ‘மூடை’ மாற்ற கோபி முயற்சித்தால்,

“என் கஷ்டம் எனக்கு. ஒங்களுக்கு எப்பவும் ஒங்க சுகம், ஜாலி, அதான் முக்கியம்!” என்று வார்த்தைகளை விட்டெறிவாள்.

தன் மன நிலையை மாற்றிக் கொண்டு சமாதானமாகவும் அமைதியாகவும் மாறுவதை விடவும் துக்கத்திலும் சோகத்திலும் உழன்று சுயபச்சாதாபத்தில் ஊறித் திளைத்து அழுகையும் புலம்பலுமாக இருப்பதையே அனு விரும்புவதைக் காண சகிக்காது கோபிக்கு. மேற்கொண்டு அந்த சூழ்நிலையில் இருக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே போய் விடுவான்.

‘ஓகே! ஓகே! அனு அப்படித்தான்! அவளை மாற்றுவது கடினந்தான்.’ என்று அடிக்கடி செய்வது போல மனதை அப்போதைக்கு சமாதானப்படுத்திக் கொண்டாலும், ‘இந்த தடவை இதுக்கு ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டும்!’ என்று மனதிற்குள் உறுதி பூண்டான் கோபி.

எல்லா யோசனைகளையும் நிராகரிக்கிறாள். ஆனால் குழந்தையைப் பிரிந்திருக்க வேண்டியிருக்கிறது என்று தினமும் புலம்பல்! என்ன தான் செய்வது? எப்படித்தான் அனுவை சந்தோஷப்படுத்துவது? யோசித்து யோசித்து கடைசியில், குழந்தைக்கு ரெண்டு வயதுக்கு மேல் ஆகி விட்டது என்கிற சாக்கில் தீபிகாவை சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்து தன் அலுவலகத்திற்கெதிரேயுள்ள ‘ப்ளே ஸ்கூலுடன்’ கூடிய காப்பகத்தில் விட்டு விடலாம் என்று தீர்மானம் செய்து, தன் பெற்றோரின் ஆட்சேபங்களையோ, அனுவின் அரை மனதான சம்மதத்தையோ பொருட்படுத்தாமல் நினைத்ததை செயலாக்கினான்.
குழந்தை தன்னுடன் நிரந்தரமாக வந்து விட்டதில் அனுவின் போக்கில் மாறுதல் ஏற்படத்தான் செய்தது. அந்த வீட்டுக் குட்டி தேவதையின் மழலைச் சொற்களும் அனுவின் கொஞ்சல் மொழிகளுமாக வீட்டில் அடித்த சந்தோஷ அலையில் கோபியின் ‘டென்ஷன்’ மறைந்து, தொலைந்து போன அமைதியும் மகிழ்ச்சியும் மீண்டது போலத்தான் தோன்றியது.

எப்போதுமே வீட்டு வேலைகளில் அனுவுக்கு உதவும் கோபி, இப்போது அனு தீபுவுடன் சந்தோஷமாக இருக்கட்டும் என்று பெரும்பாலான வேலைகளைத் தானே ஏற்று மகிழ்ச்சியோடு செய்ய ஆரம்பித்தான். வீடு சந்தோஷமாக இருந்தால் அதை விட ‘சொர்க்க பூமி’ வேறு எதுவாக இருக்க முடியும்?
ஒரு வாரம் சென்றிருக்கும்.

அன்று அலுவலகம் கிளம்பும் நேரமாகி விட்டது. கோபி வீட்டில் மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டே அலுவலகம் செல்லத் தயராகிக் கொண்டிருக்க, அனு தீபுவுக்கு இட்லி ஊட்டிக் கொண்டிருந்தாள். குழந்தை சாப்பிட முரண்டு பிடித்துக் கொண்டிருந்தாள்.

“இருக்கிற வேலையில இத்தை வேற குளிப்பாட்டி, சோறு ஊட்டி, ட்ரெஸ் மாத்தி கௌப்பி ‘ப்ளே ஸ்கூல்’ல கொண்டு போய் விட வேண்டியிருக்கு. இது ஊர்ல இருந்த போதே நிம்மதியாயிருந்தது!.” அனு தன் சுபாவப்படி கோபமும் ஆத்திரமுமாகப் புலம்ப ஆரம்பிக்க, கோபி விக்கித்துப் போய் நின்றான்.

‘அடிப்பாவி! கொழந்தை நம்மோட வந்து இருப்பாளான்னு நாட்கணக்கில கண்ணீர் விட்டு ஏங்கினதெல்லாம் நெனைப்பிலயே இல்லாம எப்படி நாக்கூசாமப் பேசறா பாரு!’ மனசு பொருமுவதைத் தாங்காமல் கோபத்தோடு அனுவை ஏறிட்டான்.

அனு முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. நாள்தோறும் எதற்காகவாவது குறைபட்டு சுயபச்சாதாபத்தில் புலம்பிக் கொண்டேயிருப்பது அவள் சுபாவம். எந்த விஷயத்திற்கும் தீர்வையே நினைத்துப் பார்க்காத சுபாவம்!

வழக்கமாக அலுவலகம், வீடு, கணவன் என்று ஒரு ரவுண்ட் எல்லோர் மேலும் கோபப்பட்டு ஆத்திரப்பட்டுக் கத்தித் தீர்ப்பாள். இப்போது அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டபடியால் தீபுவும் அந்த வட்டத்திற்குள் வந்து விட்டது. இனிமேல் எல்லோருக்கும் கிடைக்கும் மண்டகப்படி தீபுவுக்கும் உண்டு. அவ்வளவுதான்! மற்றபடி தீபுவைக் குறை சொல்ல வேண்டும், திட்ட வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு மனசார அனு செய்யவில்லை.

‘அனு அப்படித்தான்! அவளை மாற்றுவது கடினந்தான்!’ அனுவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கோபியால் அனுவை நன்றாகவே புரிந்து கொள்ள முரிந்தது. “டென்ஷனாகாதே அனு! நீ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணி ரெடியாகு! நான் தீபுவைக் கௌப்புறேன்!”

“வாடா செல்லம்!” என்று நிதானமாக குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான். ‘நாளையிலிருந்து தீபு சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் காலையில் நேரம் ஒதுக்க வேண்டும்’ என்று ஒரு பெருமூச்சுடன் நினைத்துக் கொண்ட போது அலுவலகம் செல்ல உடுத்திக் கொண்டிருந்த சட்டையில் இட்லி சாப்பிட்ட வாயோடு முகத்தைத் தேய்த்து சிரித்தாள் அந்த வீட்டுக் குட்டி தேவதை! 

தொடர்புடைய சிறுகதைகள்
மழை விட்டிருந்தது. அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய வாணி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள். சட்டென்று இடது கால் கோணிக்கொண்டது. ஒரு நொடி குனிந்து அந்த கால் செருப்பு அறுந்திருப்பதை கவனித்தாள். சாலை ஓரமாக ஒரு குப்பைத்தொட்டி இருந்தது. ஜோடி செருப்பையும் அவிழ்த்து ...
மேலும் கதையை படிக்க...
'கிளி ஆன்ட்டீ வீடு' எங்கள் தெருவில் பிரசித்தம். தெருக் குழந்தைகள் எல்லாம் மாலையில் பள்ளி விட்டு வந்து ஆன்ட்டீ வீட்டில் இருக்கும் பேசும் கிளிகள், மைனாக்கள், வகை வகையான வண்ணப்பறவைகளைப் போலக் குரல் கொடுத்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஆன்ட்டீ பறவைகளை மிக அன்பாகப் பராமரிப்பார்கள். ...
மேலும் கதையை படிக்க...
ஆடி வெள்ளிக்கிழமை! ஆடி வெள்ளிக்கிழமையென்றாலே மைத்ரேயியின் அலுவலகத்தில் பட்டுப்புடவை சீருடைதான். இன்று என்ன புடவை கட்டிக் கொண்டு போவது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள் மைத்ரேயி. படுக்கையறை கட்டிலின் மீது புடவைகளை கடை பரப்பிக் கொண்டு உட்கார்ந்தாள். நிச்சியதார்த்தப் புடவை? சம்பங்கி வண்ணத்தில் வைர ஊசிகள் ...
மேலும் கதையை படிக்க...
"ஏ புள்ள! நானெல்லாம் அந்த காலத்துல நெதமும் எட்டு மைலு தொலவு நடந்து போய் படிச்சிட்டு வந்தவந்தான்! அப்போ மாதிரியா இருக்குது ஊரு இப்போ? ரோட்டு போட்டிருக்காங்க. அக்கம் பக்கத்து ஊருங்களுக்கு பஸ்ஸ§ ஓடுது?" இளங்கோ வாத்தியார் பேசுவதை பூங்கோதையும் காவேரியும் ...
மேலும் கதையை படிக்க...
மஞ்சு கை கால்களெல்லாம் ஓய்ந்து போய் படுத்தாள். எப்போதடா பொழுது விடிந்து இந்த நீண்ட இரவு முடியும் என்று ஆயாஸமாக இருந்தது. நேற்று இரவு ஒன்றுமே விபரீதமாக நடக்காததைப் போல எப்பொழுதும் போல ஜகன் காலை எட்டு மணிக்குக் கண் முழித்து ...
மேலும் கதையை படிக்க...
உடம்பெல்லாம் கோபத்திலும் அவமானத்திலும் பதறியது வரதனுக்கு. நாலு பேர் எதிர்ல வச்சு எப்படி மட்டமா பேசிட்டாரு இந்த மொதலாளி, அதுவும் ஒரு சின்ன தப்புக்காக? வார்த்தீங்களா அது? நெருப்புத் துண்டங்களா இல்லே எடுத்து வீசினாரு? இன்னா சொன்னாரு? "ஸ்பானரு புடிக்கத் தெரியாத பயலுவளெல்லாம் எதுக்குடா பேண்ட்டை மாட்டிக்கினு ...
மேலும் கதையை படிக்க...
'ணங்'கென்ற சத்தத்துடன் முதலில் ஒரு பித்தளைக் குடம் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக வைக்கப்பட, தேசிய நெடுஞ்சாலையின் அந்தப் பகுதியே பல வண்ணக்குடங்களினால் போடப்பட்டது போல் தோற்றமளித்தது. வானம் பார்த்த பூமியான கருத்தம்பட்டி கிராமம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
அம்மா நான் பாஸ்
மொபைல் ஃபோன் அழைத்தது. ஆகாஷ் பாய்ந்து எடுத்தான். அவன் பள்ளி விடுமுறையை, தாத்தா பாட்டியுடன் கழிக்க சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறான். "ரிஸல்ட் வந்திடிச்சா? நீ பாஸா? ஓ! கங்கராட்ஸ்! என்னோடது? பாக்கலியா? ஓ.கே.!' என்று சுருக்கமாகப் பேசிவிட்டு ஓடிப்போய் கம்ப்யூட்டரை "ஆன்' செய்தான். ...
மேலும் கதையை படிக்க...
காசியில் கங்கைக்கரையில் தஸாஸ்வமேத கட்டத்தில் ஏழு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே மாலை நேர கங்கா ஆரத்திக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. ஒரே மாதிரி உடையலங்காரத்துடன் ஒவ்வொரு வளைவிலும் பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பாலகர்கள் பூஜையை ஆரம்பித்தனர். கரையிலிருந்து சற்று நேரம் ஆரத்தி ஏற்பாடுகளை ...
மேலும் கதையை படிக்க...
"கங்கிராட்ஸ்! நீங்க மறுபடி தந்தையாகப் போறீங்க!" டாக்டர் சொன்னதைக் கேட்டு வசீகரன் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சி அவன் முகத்தில் பிரதிபலித்தது. பதில் பேசாமல் டாக்டர் கொடுத்த மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு மைதிலியுடன் வெளியே வந்தபோது அவள் சந்தோஷமாக இருக்கிறாளா இல்லையா என்று ...
மேலும் கதையை படிக்க...
சொல்லாமலே…
மனிதர்கள் பலவிதம்
இவர்களும் வேலைக்குப் போகும் பெண்கள் தான்!
ஜான்சி ராணிகள்
போராட்டம்
மனம் ஒரு குரங்கு!
மாயப் பெட்டியும் மாறாத மனிதர்களும்
அம்மா நான் பாஸ்
சின்னஞ்சிறு பெண் போலே…….
ஒன்றா…. இரண்டா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)