Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அந்த மாதிரி பொம்பளை

 

மனம் இறுக்கமாகவே இருந்தது. அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இத்தனைக்கும் அப்பா போன பிறகு அம்மாதான் எல்லாமாமுமாக இருந்து என்னைப் பார்த்து கொள்கிறாள். இருந்தும் கோபத்தின் கனலில் மனம் பின்னோக்கி சென்று எண்ணிப் பார்த்தது.

எங்கள் தெருவில் வசித்து வந்த பவானி அம்மாள் இறந்து விட்டாள். அம்மாவை விட நான்கைந்து வயது இளையவளாக இருக்கக் கூடும்.என் சிறுவயது பருவத்தில் இதே தெருவில்தான் வசித்து வந்தாள். குழந்தைகள் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அதுவும் நானென்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் என் அம்மாவோ, இல்லை மற்ற குழந்தைகளின் அம்மாக்களோ அவளை எப்போதும் அருவெறுப்பாகவே பார்ப்பார்கள். அவள் எங்கள் தெருவில் வரும்போது எங்களுக்கு அதட்டல் விடப்படும். “ஏன்மா அந்த அக்கா வந்தாவே என்னை வீட்டுக்கு கூப்பிடறீங்க, மீறிப் போனா அடிக்கறீங்க” எனக் கேட்ட போதெல்லாம் அம்மா “அவ ஒரு மாதிரியான பொம்பளைடா” என்பாள்.

அந்த சிறுவயதில் எனக்கு விளங்கிய மாதிரியும் இருக்கும், விளங்காத மாதிரியும் இருக்கும். ஆனால் அவள் அதைப்பற்றி எல்லாம் கவலைப் பட்டதாகவே காட்டிக் கொள்ள மாட்டாள். அவள் ஒரு ஒண்டிக்கட்டை. அவளுக்குத் துணையெல்லாம் அவள் காலைச் சுற்றும் நாய்க்குட்டியும் ரேடியோ பெட்டியும்தான். காலை எட்டு மணிக்கே வீட்டை விட்டு கிளம்பி விடுவாள். பிறகு சாயங்காலம் ஆறு மணிக்குத்தான் வீடு திரும்புவாள். தெருவில் விளையாடும் எல்லாக் குழந்தைகளுக்கும் மிட்டாய் வாங்கி வர மறுக்க மாட்டாள். எங்கு போய் வருகிறாள் என்பது யாருக்குமே தெரியாது.

அகலமான முகம். அதில் அளவான பொட்டு. மஞ்சள் பூசாமல் அவளைப் பார்க்க முடியாது. எப்போதும் அவளிடம் ஒரு அமைதி லயித்திருக்கும். வெள்ளிக் கிழமை ஆனாலே எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். அம்மாக்கள் எல்லாம் கோவிலுக்குப் போகும் வேளையில் நாங்கள் அவளிடம் கதை கேட்பது வழக்கம். அவள் கதை சொல்லும் அழகே தனிதான். சைகை, பாட்டு என கதாபாத்திரங்களாகவே மாறி விடுவாள். கதை முடிந்த பிறகு எல்லாரையும் மார்போடு அள்ளி அணைத்து தான் பெற்ற குழந்தையைப் போலவே கொஞ்சுவாள். “அக்கா உன்னை எல்லாரும் அந்த மாதிரி பொண்ணுனு சொல்றாங்களே ஏங்கா? உனக்கு யாருமே இல்லையா”னு ஒருநாள் கேட்டேன். சிறிது நேரம் தீர்க்கமாய் யோசித்தவள் எதுவும் சொல்லாமல் எழுந்து போய்விட்டாள். நான் ஏதோ தப்பாய் கேட்டுவிட்டேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. மீண்டும் நாங்கள் விளையாடப் போய்விட்டோம்.

ஒருநாள் தூங்கி எழுந்தபோது அம்மா அந்த அக்காவை ஏகத்துக்கும் திட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு எதற்கென்றே தெரியலை. ஏன் அவுத்து விட்ட மாடுமாதிரி மேயற! உன் வேலையை எல்லாம் மத்த ஆம்பளைங்க கிட்ட வச்சுக்க. என் புருஷன்கிட்ட காட்டாதேனு வசை பாடிக் கொண்டிருந்தாள். தெருவே வேடிக்கைப் பார்த்தது. அப்பா அம்மாவை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்தார். “நீங்க சும்மா இருங்க. எல்லாம் நீங்க கொடுக்கற இடம் தான்” என அப்பாவையும் சாடினாள். அப்பா மௌனமாக உள்ளே சென்று விட்டார். அடுத்த நாளிலிருந்து பவானி அக்காவை இங்கு காணவில்லை. கண்டிப்பாக அவளை அவமானம் பிடுங்கித் தின்று இருக்க வேண்டும். “சே அம்மாவும் ஒரு பொம்பளைதானே ஏன் இப்படி பண்றாங்க”னு நினைத்துக் கொண்டேன்.

நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போது மீண்டும் எங்கள் தெருவிற்கு குடிவந்தாள் பவானி அக்கா. அடையாளமே தெரியாமல் மெலிந்திருந்தாள். அவள் கட்டி இருந்த ஆடை அவள் வறுமையில் வாடியதை சொன்னது. எட்டு வருடங்களில் ஏன் இவள் இப்படி மாறிவிட்டாள். மனதிற்கு சங்கடமாய் இருந்தது. அருகில் சென்று “அக்கா எப்படி இருக்கீங்க”னு கேட்டேன். என் வீட்டிலிருந்து சென்றதால் என்னை அடையாளம் கண்டுகொண்டாள். “சீணு வாப்பா! நல்லா இருக்கீயா? ராதா நல்லா இருக்காளா” னு கேட்டாள். ராதா என் தங்கை. “எல்லாரும் நல்லா இருக்காங்கக்கானு சொன்னேன்.” அப்பா தவறிட்டார்னு கேள்விப் பட்டேன். ஆனா வரமுடியலைப்பா” என்றாள். “இருக்கட்டுங்கா. ஒருநாள் உடம்பு சரியில்லைனு படுத்தவர், போய் சேர்ந்துட்டார். இப்போ அவர் போட்டு வச்சிருந்த எல் ஐ சி பணமும், கழனியில் இருந்து வர குத்தகை பணமும் தான் எங்களைக் காப்பாத்துனு” சொன்னேன். “ம்ம்ம்” என்று தலையாட்டினாள்.

அவள் எங்கள் தெருவுக்கு குடி வந்தது அம்மாவிற்கும் மற்றவர்களுக்கும் பிடிக்கவில்லை. வருடங்கள் சென்றன. அக்கம் பக்கத்து வீட்டுக்கு கூட செல்லாத பவானி அக்கா எங்கள் வீட்டிற்கு திடீரென வந்துவிட்டாள். அம்மாவிற்கு ஒரே அதிர்ச்சி. “அக்கா. உங்க வீட்டுக்காரோட மட்டும்தான் நான் வாழ்ந்தேன்றது உங்களுக்கு நல்லாவே தெரியும். அந்த மாதிரி பொம்பளைனு நீங்க கட்டி விட்ட கதை அக்கம் பக்கத்தில் பரவி சமூகத்தில நான் அந்த மாதிரி பொண்ணாவே பார்க்கப் பட்டேன். ஆனாலும் நீங்க அவர்கூட குடும்பம் நடத்தீனிங்களோ அப்படிதான் நானும். ஆனா என்ன முறையா தாலி கட்டிக்கலை. அவரோட சபல புத்திதான் நீங்க இருக்கும் போதே என்னைத் தொட வச்சது. ஆனாலும் இதுவரைக்கும் நான் அவர்கூட வாழ்ந்துட்டு இருக்கேங்கிற உண்மையை நான் யார்கிட்டேயும் சொன்னதில்லை. நீங்க பெத்த பசங்களுக்கு போட்டியா என் வாரிசு வந்துடக் கூடானுதான் நான் என் வயித்துல் ஒரு புழு பூச்சியைக் கூட வளர்த்துக்கலை. அதுக மூஞ்சியை பார்த்துகிட்டு இருக்கனும்னுதான் இந்த தெருவுக்கே குடி வந்தேன்.

நான் இதுவரைக்கும் யார்கிட்டேயும் கை ஏந்துனதில்லை. அவர் போனப்புறம் நான் கஷ்டப் பட்டப்பக்கூட உங்ககிட்ட வரலை. நாளுக்கு நாள் எனக்கு ஒடம்பு முடியலை. ஒருவேளை நான் செத்துட்டா சீனு தம்பிதான் எனக்கு கொள்ளி வைக்கனும். ஒரு அநாதை பொணத்துக்கு கொள்ளி வச்சதா நினைச்சுக்குங்க” என்று உடைந்து அழ ஆரம்பித்தாள். இதுவரை அவள் அழுது நான் பார்த்ததேயில்லை. அம்மா எதுவும் கூறாமல் உள்ளே சென்றுவிட்டாள். பவானி அக்கா இல்லை இல்லை என் சித்தி நின்று பார்த்துவிட்டு வீடு திரும்பி விட்டாள். கேட்க கேட்க எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. சே எவ்வளவு கேவலமானவர் அப்பா. அவருடைய தவறுக்கு ஒரு பெண் வாழ்நாள் முழுதும் தண்டனையை அனுபவித்து இருக்காளே. அந்த மாதிரி பொம்பளை என்பது எவ்வளவு கேவலமான அடைமொழி. அதை சுமந்து கொண்டு வாழ்நாளை கடத்தி விட்டாளே. நினைக்க நினைக்க அவள் காலைப் பிடித்து அழ வேண்டும் போலிருந்தது.

அன்று வேலை முடிந்து வீடு திரும்பினேன். ஒரே கூட்டமாக இருந்தது. ஆம் பவானி சித்தி செத்துவிட்டாள். என்னால் உறங்க முடியவில்லை. இதனால் தான் எனக்கு அம்மா மீது கோபம் கோபமாய் வந்தது. இயலாமை, ஆத்திரம், விரக்தி எல்லாம் சேர்ந்து அழுகையாய் மாறியது. அம்மாவை நோக்கிச் சென்றேன். அம்மா கனிவோடுப் பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன. “டேய் நீ தாண்டா அவளுக்கு கொள்ளி போடனும். ஆனா எந்த காரணத்தைக் கொண்டும் அவ உன் அப்பாவோட இன்னொரு பொண்டாட்டினு நீ காட்டிக்கக் கூடாது. உன் அப்பா மானம் போயிடும். புரியுதா” என்றாள். சரி எனத் தலையாட்டி விட்டு பவானி சித்தியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். அவளின் பிரேதத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய எல்லா காரியத்தையும் செய்து முடித்துவிட்டேன்.

பவானி சித்தியின் கதை கேட்டு வளர்ந்த குழந்தைகள் எங்களையும் ஒரு சிலரையும் தவிர வேறு யாருமே அங்கு இல்லை. பிணத்தை சுமந்து கொண்டு மயானம் நோக்கிப் புறப்பட்டோம். “யாருங்க கொள்ளி போடறது” வெட்டியான் கேட்ட கேள்விக்கு “நான் போடறேன்”னு சொல்லி கொள்ளிக் கட்டையை வாங்கினேன். கூட்டத்தில் ஒருவன் “எத்தனை பேரை மயக்கி வச்சி இருந்திருப்பா, இப்ப பாத்தியா கொள்ளி வைக்கக்கூட ஆள் இல்லாம அநாதைப் பொணமா போறா” என்றான்.

எனக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததென்று தெரியவில்லை. அவனை ஓங்கி அறைந்தேன். “யாருடா தப்பான பொம்பளை! யாருடா அநாதை. இது என் அப்பனோட இரண்டாவது பொண்டாட்டிடா. என் அப்பனுக்காகவே வாழ்ந்தவடா. நான் அவ புள்ளைடா. இவ என் அம்மாடா. இனிமேல் எவனாவது தப்பா பேசினா அவ்வளவுதான்” னு கத்திவிட்டு, சிதைக்கு தீ மூட்டினேன். ஊரே வாயடைத்து நின்றது. தன்மேல் பட்ட களங்கம் நீங்கிய சந்தோஷத்தில் நிம்மதியாக எரிய ஆரம்பித்தாள் என் பவானி சித்தி. மனம் இலேசாக மெதுவாக வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
விடுமுறையன்றும் வழக்கம் போலவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது நியூயார்க்கின் அந்த சாலை. வாகனத்தின் இரைச்சல்கள் சுவர்க்கோழிப் போல் ஓயாமல் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தன. அருணுக்கு மெல்ல விழிப்பு வந்தது. கண்ணைத் திறக்க விருப்பமில்லாமல் மெதுவாய்த் திறந்தான். நேரம் பத்தைத் தாண்டி பதினொன்றை ...
மேலும் கதையை படிக்க...
வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)