Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அந்தரங்கம்

 

அலுவலக அறைக்குள் நுழைந்ததும், தன் இருக்கைக்கு எதிரே தீப்தி உட்கார்ந்திருந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. அலுவலகத்துக்குப் போகாமல் அங்கே அவள் வந்த காரணம் என்ன? ”என்னாச்சு? ஏதாவது பிரச்னையா? இல்லே, உடம்பு கிடம்பு சரியில் லையா?” என்றான் கரிசனத்துடன்.

”இல்ல நிக்கி, இந்தப் பக்கம் ஒரு க்ளையன்ட் மீட்டிங் இருந்தது…” சிரிப்பும் தவிப்புமாகச் சொன்னவளைச் சந்தே கம் தீராமல் பார்த்தான். ”மீட் பண்ண வேண்டிய க்ளையன்ட் வர கொஞ்சம் லேட்டாகும்போலிருந்தது. அதுவரைக்கும் இங்கே இருக்கலாமேனு வந்தேன்” என்றாள், அவன் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டவள் போல!

தீப்தி. இப்போதுதான் உடம்பு வாசனை பழகிய ஆறு மாத மனைவி. அவனைப் போலவே எம்.பி.ஏ., 14 மணி நேர வேலை, அவசர வாழ்க்கை என்று சுழலும் பொருளாதார சுபிட்சம் உருவாக்கிய பிரஜைகளில் ஒருத்தி. அவனுக்குத் துளியும் பிடிக்காத கோல் கொப்பாவும் பாவ் பாஜியும் சப்புக்கொட்டிச் சாப்பிடுபவள். சமையல் செய்வதில் நாட்டம் இல்லாதவள். அவன் தாய்மொழி யான தெலுங்கைக் கற்றுக்கொள்ள எந்த ஆர்வமும் காட்டாதவள்.

அவள் பாதி, அலுவல் பாதி என்று இயங்க ஆரம்பித்தான். அவள்பாட்டுக்கு பேசிக்கொண்டு இருக்க, இன்டர்காம் தொட்டு யாரையோ விசாரித்தான். காபி வரவழைத்தான். யாரையோ கூப்பிட்டு, தன் அலுவல்களைப் பத்து நிமிடம் தள்ளிப்போடச் சொன்னான். கணிப்பொறியை ஆன் செய்தான்.

அவள் அதற்காகவே காத்திருந்தது போல இயல்பாக, ஆனால் அழுத்தமாக ஆரம்பித்தாள். ”பை த வே நிக்கில்… நான் இன்னிக்குக் காலைல தப்பா உனக்கு ஒரு மெயில் அனுப்பிட்டேன்” என்றாள். அவன் குழப்பத்தோடு அவளைப் பார்த்தான்.

”நிர்மலா இமெயில் ஐ.டிக்கு அனுப்புறதுக்குப் பதில் நிக்கில்ங்கற ஐ.டிக்கு அனுப்பிட்டேன். என்ஐனு முதல் ரெண்டு எழுத்து டைப் பண்ணவுடனே லிஸ்ட் வரவும், அதில் நிர்மலாவை க்ளிக் பண்றதுக்குப் பதிலா நிகிலைக் க்ளிக் பண்ணிட்டேன். நிர்மலா மெயில் வரலைனு சொன்னா. சென்ட் பாக்ஸ்ல பார்த்தா, அது உனக்குப் போயிருக்கு” எனச் சிரித்தாள்.

”ஹோ!” என்றான் அவன் இயல்பாக. கம்ப்யூட்டர் உயிர் பெற்று ஜன்னல் முகம் காட்டி வழிவிட்டு, நீலத் திரையில் கட்டங்களாக ஐகான்களைச் சேகரித்தது.

”அந்த மெயிலை டெலிட் பண்ணிடு நிக்கி!” என்றாள்.

”ஷ்யூர்!” என்று தலையாட்டினவனின் கண்களில் சந்தேகம் தேங்கியிருக்க, மறுபடி அவள் பேச ஆரம்பித்தாள். அவள் பார்க்க வந்த வாடிக்கையாளர் பற்றி… அந்த நிறுவனத்தின் வியாபாரத்தைப் பெற செய்கிற முயற்சிகள் பற்றி… அவள் நிறுவ னத்துக்கும் அவள் பதவி உயர் வுக்கும் அந்த கான்ட்ராக்ட் எவ்வளவு முக்கியம் என்பது பற்றி… பேசிக்கொண்டே போனவளை மேலோட்டமாகக் கவனித்துக்கொண்டு இருந்தான். ”உனக்கு நேரமாகலையா? எனக்கு இன்னும் அரை மணி யில் ஒரு மீட்டிங் இருக்கு!”

”யெஸ், கிளம்பணும்”என்று எழுந்தாள். காத்திருந்தாள். அவன் அலுவலக அஞ்சல் பெட்டியைத் திறந்து அலுவ லக அஞ்சல்களை நிரடினான். ”உன் ஜிமெயில் ஐ.டிக்கு வந்திருக்கும்” என்றாள் கம்ப் யூட்டரின் திரையைப் பார்த்த படி.

”அதை நான் அப்புறமா தேடி டெலிட் பண்ணிக்கறேன். இப்ப ஆபீஸ் மெயில்ஸ் வந்து குவிஞ்சிருக்கும். ரிப்ளை பண் ணணும். நீ கிளம்பும்மா ஸ்வீட் ஹார்ட்!” என்றான் அவ னுக்குள் உருவான லேசான எதிர்ப்பு உணர்வின் உந்து தலில்.

நின்றவள், போகாமல் மறுபடி உட்கார்ந்தாள். கேசத் தைப் பின்புறமாகத் தள்ளி விட்டுக்கொண்டாள். தன் கைப்பையை மேஜை மேல் வைத்தாள்.

”நிக்கி! ஐ வில் பி லாட் மோர் ரிலீவ்டு இஃப் யூ டெலிட் த மெயில் ஐ சென்ட்!” என்று சிரித்தாள்.

அவள் சிரிப்பில் நிறைய தினுசு இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும். ஃப்ரெண்ட்ஸ் பார்க்கும்போது ஒரு சிரிப்பு. அவன் உறவினர் களிடம் ஒரு தினுசுச் சிரிப்பு. அவனிடத்தில் வேறு மாதிரிச் சிரிப்பு. அவளின் தடுமாற்றத்தையும் படபடப்பையும் கணித்தவனுக்கு அந்த மின்அஞ்சலைப் படிக்க வேண்டும் என்கிற குழந்தைத்தனமான ஆர்வம் தோன்றியது. அந்தக் கடிதத் தில் அப்படி என்னதான் இருக்கிறது? இதற்காகத்தான் இங்கே வந்து தவமிருக்கிறாள். க்ளையன்ட் மீட்டிங் எல்லாம் பொய்.

”கமான் தீப்தி… யூ கேரி ஆன்! நான்தான் டெலிட் பண்றேன்னு சொல்றனே..!”

”அதை டெலிட் பண்ண ஒரு நிமிஷம் ஆகுமா டியர்?”

”ஆகாதுதான்! ஆபீஸ் வேலையை விட்டுட்டு அதை முதலில் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதில் நீ இவ்வளவு பிடிவாதமா இருப்பதுதான் எனக்குப் புரியலை தீபு!” அவளுக்கு இணையான பொய்ச் சிரிப்புடன் சொன்னான்.

”நான் யாருக்கோ எழுதினதை நீ படித்தால், எனக்குச் சங்கடமாய் இருக்காதா, நிக்கி?”

”கமான் தீப்தி! நான் அதைப் படிக்கப்போறேன்னு நீ முடிவு பண்ணிட்டியா?”

”அப்படிச் சொல்லலை நிக்…” அவன் கைக்குள் போய்விட்ட தன் உடைமையை, அவன் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் நைச்சியமாக மீட்டெடுக்கும் ஆயாசமான முயற்சியில் முதலடி எடுத்துவைத்தாள் அவள். ”நான் உன் அந்தரங்கமான விஷயங்கள்ல தலையிடறேனா? உன் மெயில் ஐ.டி. பாஸ்வேர்டு என்ன… நீ யாருக்கு மெயில் அனுப்புறேன்னு ஏதாவது கேட்கிறேனா நிக்கி?”

”ஆனா, இதையெல்லாம் உன்னிடம் பகிர்ந்துகொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை தீப்பும்மா!” என்றான் இடைமறித்து.

”அப்படின்னா, என் அந்தரங்க மான விஷயங்கள் அத்தனையும் உன்னிடம் ஷேர் பண்ணிக்க ணும்னு எதிர்பார்க்கிறாயா டார்லிங்?”

”அப்படி எதிர்பார்ப்பது தப்பா தீப்தி?” அவனையும் அறியாமல் சின்னதொரு விவாதத்துக்கு இட்டுச்சென்றது அவனது உள்ளுணர்வு.

”கல்யாணம் ஆகி உன்னுடன் எல்லாத்தையும் பகிர்ந்துகொண்டாலும், எனக்கென்று சில ரகசியங்கள் இருக்கலாம் இல்லையா நிக்?”

”லைக் வாட் தீப்தி?” பேச்சில் கொஞ்சமும் கோப உணர்வு தலையிடக் கூடாது என்று ஜாக்கிரதையுடன் தலையைப் பின்பக்கம் தள்ளி, இருக்கையில் நன்றாகச் சாய்ந்துகொண்டு நிதானமாக கேட்டான்.

”உதாரணமா, எனக்கும் என் தங்கைக்கும் சில ரகசியங்கள் இருக்கலாம். எனக்கும் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்களுக்கும்! ப்யூர்லி கேர்ள்ஸ் டாக். எங்கள் கணவர்கள் குறித்து, பழைய நண்பர்கள் குறித்து, பழைய சம்பவங்கள் குறித்து நாங்கள் விவாதிக்கிற சில விஷயங்கள் உனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை… இல்லையா ஹனி?”

”கணவன் மனைவி உறவுக்கு என்று பிரத்யேகமாக எந்தப் புனிதத்துவமும் இல்லை என்கிறாய். அப்படித்தானே?”

”தெலுங்குப் பட டயலாக்எல்லாம் பேசாதே நிக்கி! எனக்கு பிரத்யேகமாய், அந்தரங்கமான விஷயங்கள் இருக்கும் என்பதை நீ அங்கீகரிக்கணும். அது உன்னைப் பற்றியே இருந்தாலும், அதுபற்றி கவலைப்படாத பெருந்தன்மை உனக்கு இருக்கணும்!”

‘இது இங்கிலீஷ் பட டயலாக் மாதிரி இருக்கே?’ என்று அவளுக் குப் பதில் சொல்லும்முன், தொலைபேசி ஒலித்தது. எடுத்து, ”வா, சுரேஷ்!” என்றான். ஓர் இளைஞன் உள்ளே வந்து தீப்தியின் பக்கத்து நாற்காலியில் அமர்ந்து, சற்றே தயக்கத்துடன் நிகிலிடம் அன்றைய அலுவல் பற்றிப் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில், தீப்தி தீவிர யோச னையில் இருந்தாள்.

அவன் வெளியேறியதும் நிகில் மௌனமாக இருந்தான். ஆறு மாத உறவில் மணிக்கணக்காகப் பேசியபோது உணராத அவளின் இன்னொரு பரிமாணம் அந்தப் பத்து நிமிடங்களில் புலப்பட்டது போலிருந்தது. அவள் பிடிவாதத்தின் எல்லையைத் தொட்டுப் பார்த்துவிட வேண்டும்.

”தீப்தி, உன் அந்தரங்கத்தை நான் மதிக்க வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது போல, என் மேல் நம்பிக்கை வைத்து நீ நடந்துக்கணும்னு நானும் எதிர்பார்க்கலாம் இல்லையா? டெலிட் செய்றேன்னு சொன்னப்புறமும் போகாமல் உன் கண் முன்னாடியே அதைச் செய்யணும்னு எதிர்பார்ப்பது என் மேல் நம்பிக்கை இல்லாததால்தானே?”

”அது உன் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை ஹனி! என் மனச் சமாதானத்துக்காக!”

”அதில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறாய்?” என்றான், அவள் கண்களைப் பார்க்காமல். அவனுள் பற்றி எரியும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி, மிக இயல்பாகக் கேட்பது போன்ற தோரணையைக் கொண்டுவர முயன்றான்.

”இல்லை நிக்கி! அது எதுவா வேணாலும் இருக்கட்டும். அதைச் சொல்லச் சொல்லி என்னைக் கட்டா யப்படுத்தாதே!”

”கட்டாயப்படுத்தவில்லை தீப்தி! நிர்மலாவுக்கு நீ எழுதி னதை நான் யதேச்சையா பார்த்தா என்ன ஆகிடப் போகுதுங்கறேன்? அதுக்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகறே?” என்று சிரித்தான். (சொல்லு, என்ன எழுதி யிருக்கே? என்னைப்பத்தி தானே? என்னைவிட நீ அதிகம் சம்பாதிப்பதையா? படுக்கையில் நான் உன்னை சந்தோஷப்படுத்தவில்லை என்றா? நிர்மலாவுக்கா அல்லது நிர்மல் குமாருக்கா?)

”நான் விவாதம் பண்ண விரும்பலை நிக்கி! அது உனக்கு எழுதினது இல்லை. அதனால் அதைப்பற்றி நீ தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமும் இல்லை!” சலனமில்லாமல் சொன்ன அவளின் தீவிரம், அவனின் ஆணாதிக்க மனப்பான்மையை அசைத்து அறை கூவல் விடுத்தது. கெஞ்சிக் கூத்தாடிப் பெறுவாள் என்று நினைத்ததற்கு மாறாக அதட்டிக் கேட்கும் அவளது மனோபாவத்தை எப்படி எதிர்கொள்வது என்று தடுமாறினான். தார்மிக பலம் இல்லாத தன் எதிர்பார்ப்பில் தெரிந்துகொள்வதன் ஆர்வம் மட்டுமே மிஞ்சியிருக்க, அவளை வேறு ஆயுதத்தால் வெல்ல வேண்டியிருந்தது.

”உன் அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது என்பது நம் காதலைவிட முக்கியமானதா?” என்றான் மென்மையான குரலில்.

காதல் என்கிற வார்த்தைப் பிரயோகத்தில் அவள் முகம் பிரகாசமானது. அது அவள் அதிகாரம் செலுத்தும் களம். தீ மூட்டவும், தாக்கவும், தணிக்கவும் பழகியிருந்த களம். அவன் தோற்றுப்போனதை உணர்ந்த வேகத்தில் கைகளை நீட்டி மேஜை மேலிருந்த அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள். அவனை ஆழமாகக் கண்ணுக்குள் பார்த்தாள். ”நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரி யும். சத்தியமா உன்னைப் பத்தி அதில் ஒண்ணும் எழுதலை. என்னை நம்பு” என்றாள்.

அவன் மனதில் நெருடிக்கொண்டு இருந்ததை அவள் போட்டுடைத்ததில், அவன் மௌனமானான். இதற்கு மேல் என்ன செய்வது? நாகரிகம் கருதித் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டுமா? அவள் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ளும் காட்டுமிராண்டி மனப்பான்மையைக் கட்டுப்படுத்தி நடத்தையில் மேம்பட்டவனாக, நாசூக்கு நிறைந்தவனாக முகச்சாயம் பூசித்தான் ஆக வேண்டுமா? நிஜமாகவே அது நிர்மலாவுக்கு எழுதியதாக இருந்தால்?

கடகடவென்று ஜிமெயில் தளத்தைக் கொணர்ந்தான். தன் பெயரை அடித்தான். பாஸ் வேர்டை அடிக்கும் முன் எழுந் தான். ”நீயே செய்… என் பாஸ் வேர்டு சொல்றேன்” என்றான். தோற்றுப்போகும் முன் அவளைச் சங்கடப்படுத்தும் எண்ணம் மேலோங்கி நின்றது அவனுக்கு. அவள் மறுத்தும் அவளைப் பிடிவாதமாக உட்காரவைத்தான். பாஸ்வேர்டு சொன்னான்.

அவள் மௌனமாக விசைகளை அழுத்தினாள். மின் அஞ்சல் உயிர் பெற்று வரிசைப்படுத்த, அதன் நடுவில் அவள் பெயர் பளிச்சென்று ஒளிர்ந்தது. அதன் பக்கவாட்டிலிருந்த கட்டத்தைக் கிளிக்கி குப்பைத்தொட்டிக்குத் தள்ளினாள். அவன் காத்திருந்தாற் போல, ”சந்தோஷமா?” என்றான். அவளோடு ஒரு ஆயுசு பூரா வாழ்க்கை வாழ்ந்ததன் ஆயாசம் ஆட்கொண்டது. ”ஒரு நிமிஷம்” என்றாள் அமைதியாய். குப்பைத் தொட்டியை கொட்டிக் காலியாக்கினாள் சர்வ ஜாக்கிரதையாய்! அவன் பின்னால் நிற்பது தீப்பிழம்பு போல அவள் முதுகில் சுட்டது. தன் மௌனத்தால் அவளை இன்னும் வருத்தினான்.

”என் மேல் கோபம்தானே? எனக்குப் புரியுது” என்றாள், அவனை ஏதாவது பேசவைக்கும் நோக்கத்துடன்!

”நாட் அட் ஆல்! நீ சொன்ன மாதிரி, அது எனக்கு எழுதப்படவில்லை. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய தார்மிக உரிமை எனக்கு இல்லை!” தோல்வியை மறைத்துப் பாசாங்குடன் பெருந்தன்மையாகச் சொன்னான்.

”நிர்மலாவுக்குக் கொஞ்சம் ப்ராப்ளம்ஸ். விவாகரத்து பத்தி யோசிச்சுட்டிருக்கா. அதைப்பத்தி நாங்கள் எழுதிக்கொண்ட மெயில் உன் ஐ.டிக்குப் போனது தெரிந்தாலே, அப்செட் ஆகிவிடு வாள்! அதுதான், நான்…” பலமில்லாத வார்த்தைகளில் பேச ஆரம்பித்தவளைப் பாதியில் இடைமறித்தான்…

”அதான், எனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை என்று சொன்னேனே..!” (கடிதத்தை அழித்துவிட்ட தெம்பில் பொய் சொல்கிறாள்.)

அவன் கையை இறுகப் பற்றி னாள். ”சரி, நான் கிளம்பறேன்… லேட் ஆயிடுச்சு!” என்றாள். நகரில் புதிதாக ஓர் உணவு விடுதி திறந்திருப்பதாகவும், அந்த வார வெள்ளிக்கிழமை இரவு அங்கே போகலாம் என்றும் சொன் னாள்.

”உத்தரவு மகாராணி! தாங்கள் சொல்லி நான் ஏதாவது செய் யாமல் இருந்திருக்கிறேனா?” என்றான். அவனைச் செல்லமாக கன்னத்தில் தட்டி, ”போடா ராஸ்கல்!” என்று உதட்டைக் குவித்து முத்தமிடுவது போல அபிநயித்துவிட்டுப் புறப்பட்டாள்.

அலுவலகப் படிகள் இறங்கி வெளியே வந்து, மரத்தடி நிழல் மாருதியைக் கதவு திறந்து உட்கார்ந்துகொண்டாள். நீண்ட தாகப் பெருமூச்சுவிட்டாள்.செல்போன் எடுத்து ஆராய்ந்து அழுத்தி, ”ஹாய்… ஒரு சின்ன சந்தேகம். மெயில் ஒண்ணை தப்பா டெலிட் பண்ணிட்டேன். ட்ராஷ் கேனையும் எம்ப்ட்டி பண்ணிட்டேன். அந்த மெயிலை மறுபடி எடுக்கணும்னா முடியுமா?” என்றாள்.

நிகில் தன் தொலைபேசியைத் தொட்டு, ”மூர்த்தி… ஒரு டவுட்! மெயில் ஒண்ணைத் தப்பா டெலிட் பண்ணிட்டேன். ட்ராஷ் கேனையும் எம்ப்ட்டி பண்ணிட் டேன். அந்த மெயில் எனக்கு வேணும். எப்படி எடுக்கறது? ஏதாவது வழி இருக்கா?” என்றான்

- 07th மே 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
“டிரிங்க்ஸ் சாப்பிடும்போது கொறிக்க ஏதாவது பண்ணியிருக்கியா?” என்று சன்னமாக விசாரிக்கிறான் பிரபு. டிரிங்க்ஸ், அந்த வீட்டில் அவ்வப்போது புகும். கிருஷ்ணவேணிக்கு அது ஒவ்வாத ஒரு வழக்கம். அவள் அகராதியில் அதற்கு சாராயம் என்று பெயர். “காராசேவும் பக்கோடாவும் வாங்கி வெச்சிருக்கேன்...” கமறலும் புகையும் அடங்கி குக்கர் ...
மேலும் கதையை படிக்க...
உயரதிகாரி பத்மநாபன், அறைக் கதவைச் சாத்தி-விட்டு, மேஜை மேல் கவிழ்ந்து சன்னமான குரலில் “முக்கி-யமான, ரகசியமான வேலை. யாருக்கும் தெரியக் கூடாது!” என்றார். நான் ஏதோ உளவு ஸ்தாபனத்தில் இருப்பதாக நினைக்-காதீர்கள். நான் வேலை பார்ப்பது, பெங்களூர் விவஸ்தை இல்லாமல் அனுமதித்துக்கொண்டு இருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
அப்பா உள்ளே நுழைந்தபோது உடைகள் பரப்பிக்கிடந்த கட்டிலும் மூலையில் வாய்பிளந்து கிடந்த பெட்டியும் அறையை நிறைத்திருந்தன. படுக்கையறையை ஒட்டிய குளியலறையில் தண்ணீர் இறைத்துக் கொட்டும் சப்தத்துக்கு மேலே அருணின் பாட்டு சப்தம். வெளியூரில் பொறியியற் கல்லூரியில் படிக்கும், விடுமுறை கிடைத்தால் அம்மாவின் ...
மேலும் கதையை படிக்க...
கழுத்துப் பட்டையை இறுக்கிக்கொண்டு இன்னொரு முறை கண்ணாடியில் முகம் பார்த்தார் டாக்டர் ராம்நாராயண். மோவாயில் நரை தொட்டு அடர்த்தியாகப் படர்ந்திருந்த தாடியையும், கொஞ்சமாக முன் பக்கம் வெற்று மண்டையைக் காட்டிவிட்டுச் சரிந்த கேசத்தையும் வாஞ்சையாகத் தடவினார். மூப்பின் அடையாளங்கள் துவங்கிய, ஆராய்ச்சி, ...
மேலும் கதையை படிக்க...
வீட்டை அடைந்ததும் வாசல் கதவருகிலிருந்த ஜோடி செருப்பு கண்ணில் பட்டது. அவனுக்குப் பரிச்சயமான செருப்பு. முழுவதும் மூடாத கதவு வழியே கசிந்த பேச்சுக்குரல்கள் அவன் உள்ளே நுழைந்ததும் நின்று போயின. தங்கதுரைக்கு தெரியும் ரேணுகாவும் அவன் மாமனாரும் தன்னைப் பற்றிதான் விவாதித்துக் ...
மேலும் கதையை படிக்க...
மருந்து
பத்து ரூபாய் நோட்டு!
கோப்பை
ஆறாவது அறிவு
காத்திருப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)