கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2021
பார்வையிட்டோர்: 4,242 
 

“வா அனந்து…”

“அத்தை உடம்பு மிக மோசமாக இருப்பதாக லட்சுமி சொன்னாள். அதான் பார்த்துவிட்டுப் போகலாமேன்னு வந்தேன்… இப்ப எப்படி இருக்கு?”

“அன்னிக்கு லட்சுமி வந்திருந்தபோது ரொம்ப மோசமா இருந்தது. ஞாபகமே இல்லை. லட்சுமியைப் பார்த்து திருதிருன்னு விழித்தாள். லட்சுமி என்னிடம், அண்ணா புத்தியே மழுங்கிடுத்தே, இனிமேல் நாள் கணக்குத்தான் என்றாள். ஆனால் ஒருவாரம் கழித்து இப்போ தேவலை. முகம்கூட இப்போது தெளிவாக இருக்கிறது… வந்தது யார் என்று உடனே புரிந்து கொள்கிறாள். வாயேன் உள்ளேபோய் அத்தையைப் பார்க்கலாம்…”

உள்ளே போனார்கள்.

“அத்தை..”

கண்களை இடுக்கிக்கொண்டு “யாரு?” என்றாள்.

“நான்தான் அனந்து. உங்க அண்ணா பிள்ளை அனந்து.”

“ஓ அனந்துவா, வாப்பா செளக்கியமா இருக்கியா? தஞ்சாவூரிலிருந்து தானே வரே… குழந்தைகள் செளக்கியமா? உன் சம்சாரம் திடமாயிருக்காளா?”

“எல்லோரும் திடமாய்த்தான் இருக்கிறார்கள். மொதல்ல உன் உடம்பு எப்படியிருக்கு, அதைச் சொல்லு. நம்ம குடும்பத்திலேயே நீதான் பெரியவள்… இந்தா இந்த பழங்களை வாங்கிக்கோ…”

“பெரியவதான். வயசு எண்பத்தியேழு ஆயிடுத்து. உங்கம்மா என்னைவிட நாலு வயசு சின்னவள், போன வருஷமே போய்ச் சேர்ந்துட்டா. என் தங்கை என்னைவிட பத்து வயசு சின்னவள். அவளும் போயிட்டா. எனக்குத்தான் இன்னும் போற வழியே தெரியலை.”

“இதெல்லாம் பம்பாய் டில்லிக்கு போவதுபோல மூட்டை கட்டிக்கொண்டு போகிற பயணமில்லை அத்தை. நாம அசதிமறதியா இருக்கும்போது எதிர்பாராத நேரத்தில் நம்மை இழுத்துக்கொண்டு போகிற பயணம் இது. அதைப் பற்றி இப்ப என்ன? உனக்கு என்ன குறைச்சல்? எவ்வளவு நாள் இருக்கணுமோ அவ்வளவு நாள் இருந்துட்டுப் போயேன். உனக்கு அத்தான் சரியாகச் சாதம் போடலியா? அல்லது அத்தாமன்னி ஏதாவது சொல்கிறாளா?”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லைடா அனந்து. என்னை நன்றாய் தாங்குகிறார்கள். பிள்ளை என்னை ஒரு வார்த்தை அதிர்ந்து சொல்வதில்லை; மாட்டுப் பெண்ணும் கொஞ்சம்கூட அலுத்துக்காமல் கருத்தோடுதான் என்னைக் கவனித்துக் கொள்கிறாள். அவர்களை நான் ஒன்றும் குறை சொல்ல முடியாது.

என்னை நானேதான் நொந்து கொள்கிறேன்… காது கேட்கவில்லை; கண் தெரியவில்லை; எழுந்து உட்கார முடியவில்லை. எல்லாம் படுத்த படுக்கையில்தான். இப்படி நானும் சிரமப் பட்டுக்கொண்டு, இருக்கிறவாளுக்கும் சிரமத்தைக் கொடுத்துக்கொண்டு; இப்படி இருப்பதற்கு பதிலாக போய்விடுகிறது தேவலை என்றால். என் பெயரே எமதர்மன் கணக்கில் இல்லை போலிருக்கே!”

“கவலைப் படாதே அத்தை, உன் பெயரை மறந்துபோய் விட்டுவிட மாட்டான். தப்புக் கணக்கும் போடமாட்டான். இதெல்லாம் பற்றி உனக்கு என்ன கவலை? பேசாமல் ராமா, சிவான்னு பகவானை நினைத்துக்கொண்டு காலத்தைக் கழி…”

“வாங்கோ அம்மாஞ்சி… காபி சாப்பிடுங்கோ.”

“எப்படி இருக்கே அத்தாமன்னி.”

“உங்க அத்தை எப்படி இருக்கா பாத்தேளா?”

“இருக்கா வயசாச்சு… மூப்பும் பலவீனமும்தான். வேற வியாதி ஒன்றும் இல்லையே? இரண்டு வருஷத்துக்கு முன்னால்கூட அத்தை ஓடியாடிக் காரியம் செய்து கொண்டிருந்தவள்தான்… பேத்தி போனாள், இருக்கிற பணமும் போச்சு, அதிலேதான் அவள் இப்படி உட்கார்ந்து போனாள்.”

“ஆமாம்… இல்லாத போனால் இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு பலவீனம் அடைந்திருக்க மாட்டாள். எனக்கும் அதுதான் அம்மாஞ்சி மனசுக்கு கஷ்டமாயிருக்கு. சொந்த பங்களாவிலே இருந்தாச்சு. படுக்க கக்கூஸ் வசதியுடன் விஸ்தாரமான அறை. அப்படியெல்லாம் இருந்தது போக, இப்ப படுக்க தனியறை கிடையாது. கக்கூசோ பலிபீடம் மாதிரி. கூட்டிக் கொண்டுபோய் உட்கார்த்தி வைக்க முடியாது.”

“…………………….”

“பெட்பான் வைத்தால் அப்படியே அலம்பிக் கொட்ட சாக்கடை தோதாயில்லை… உங்க அத்தைக்கும் நரக வேதனை, இருக்கிறவாளுக்கும் நரக வேதனை. செல்வாக்காயிருந்த காலத்தில் வீட்டோடு வேலைக்காரன் வேலைக்காரி இருந்தார்கள். இப்போது ஒரு குட்டி வந்து நம்மாத்ல வேலை செய்யறது. அது வீட்டு வேலையைச் செய்யுமா? கக்கூஸ்காரி வேலையைச் செய்யுமா? இப்போது எனக்குத்தான் அந்த அபார யோகம் அடித்துக் கொண்டிருக்கு…”

“வருத்தப்பட்டுக் கொள்ளாதே அத்தாமன்னி. இதைச் செய்யக் கடமைப் பட்டவள் நீ. நன்றாகத்தான் செய்கிறாய்… செய்கிறதை சந்தோஷமாகச் செய்.”

“பின்னே சலிப்போடவா செய்யறேன்? ஆனா உங்க அத்தைக்கு என்னை மாதிரி செய்யறதுக்கு வேற யாராலும் முடியாது. நாக்கிலே விஷம். கண் தெரியாமல் போனதுக்கு பதிலா, வாய் பேசமுடியாமல் போயிருந்தால் நல்லதாயிருந்திருக்கும்.”

அப்போது அங்கு வந்த அத்தான், “ஆமாம்ப்பா அனந்து. வாயிலே இருந்து விஷத்தைத் தவிர, அவள் வேற எதையும் கக்கறதில்லை. இவ்வளவு வயசாயிடுத்தே கொஞ்சம் பொறுமை வர வேண்டாம்? கொஞ்சம் அடக்கம் அமைதி வேண்டாம்? எப்போதும் போல இன்னமும் ஆணவம், அகங்காரம், கோபம்… ஒன்றும் குறையவே இல்லை.”

“என்ன பண்றது அத்தான் அது அத்தையின் சுபாவம்.”

உடனே அத்தாமன்னி “சுபாவமாவது, மண்ணாங்கட்டியாவது, மரியாதை இல்லாமல் பேச ஆரம்பிச்சுடறா. அப்பத்தான் ஏன் இப்படி பாடுபட்டுச் செய்யணும்னுகூடத் தோன்றது. ஒருசமயம் நம்மாத்துக்கு சம்மந்தி வந்திருந்தா. அவாளை கவனித்து காப்பி கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்ப என்னைக் கூப்பிட்டிருக்கா உங்க அத்தை. நான் வேலையிலே இருந்ததால அதைக் கவனிக்கலை…

பேரனைக் கூப்பிட்டு சொல்றா, ஏண்டா உங்கம்மா உங்கப்பாவோட இளியறதிலே எனக்கு சாப்பாடு போடக்கூட மற்ந்துட்டான்னு. நானும் பேரன் பேத்தி எடுத்தாச்சு அம்மாஞ்சி. உங்க அத்தான் ஐம்பது வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் என்னிடம் முகம் கொடுத்து பேசறா… அதுகூட பொறுக்கலை உங்க அத்தைக்கு.

சாப்பாடு எடுத்துக்கொண்டு போனேன். எனக்கு பசிக்கல சாதம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் உங்க அத்தை. நானும் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தேன். உங்க அத்தானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். உங்க அத்தை அதை பொருட்படுத்தினால்தானே? உங்க அத்தானுக்குத்தான் முணுக்கென்று கோபம் வந்து விடுமே! விடு விடு… அவ்வளவு திமிரா. வேண்டாம். பட்டினி கிடக்கட்டும் என்று சொல்லி விட்டார்.”

“உன் சாதம் எனக்கு வேண்டாம். நானும் இனிமே இங்க இருக்கப் போவதில்லை. என்னைக் கிராமத்துக்கு அனுப்பிவிடு. நான் அங்கேபோய் இருந்து கொள்கிறேன்.” என்கிறாள் அத்தை.

“கிராமத்திலே யார் இருக்கா அத்தான்?”

“அதுதான் அனந்து… இவளுக்கு என்னை விட்டால் நாதி கிடையாது. எனக்கும் இவளை விட்டால் வேற உறவு கிடையாது. தன் சொந்தப் பிள்ளையிடம் இல்லாமல், ஊர்பூர போய் இருக்கேன் இருக்கேன் என்று சொன்னால், இவளை யார் வைத்துத் தாங்க காத்திருக்கிறார்கள்? தன்னைத் தாங்க உலகமே கை கட்டிக்கொண்டு காத்திருப்பது போலத்தான் வீறாப்பான பேச்சு.”

“போகட்டும் அத்தான், நீ இதைப் பாராட்டாதே. கிழவியின் புத்தி குழம்பி விடுகிறது. ஏதொ சில சமயங்களில் இப்படிப் பேசறா…”

“இல்லை அம்மாஞ்சி, தன் காரியம்னு வரும்போது மட்டும் குழப்பமே கிடையாது. ரொம்ப ஆழமா குத்திக் காட்றபோது அவளுக்குக் குழப்பம் இருப்பதாகத் தோன்றவே இல்லை.”

“இங்கே சமையல் செய்து கொண்டிருந்தாளே கல்யாணி, நீ கூட அவளைப் பார்த்திருக்கே… ஒரு வாரத்துக்கு முன்பு அத்தையைப் பார்க்க இங்கு வந்திருந்தாள். அந்த அம்மாள் கிட்டப் போய் தனக்கு காலையில் காப்பியே கொடுக்கலைன்னு ஆவலாதி சொல்லியிருக்காள்.

இதை அந்தக் கல்யாணி போய் அத்தாமன்னியிடம் கேட்டிருக்கா. இது என் காதிலும் விழுந்தது. நான் உடனே விசாரிச்சேன். என்னோட பெண்தான் அன்று அத்தைக்கு காப்பி கொண்டுபோய்க் கொடுத்திருக்கா… அத்தைக்கு தான் காப்பி குடித்ததே மறந்து போய்விட்டது. இருக்கட்டும். இதைப் போய் அந்தக் கல்யாணியிடம் சொல்வானேன்? சரி, காப்பி கொடுக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். மாட்டுப் பெண்ணைக் கூப்பிட்டு ஏன் எனக்கு இன்னமும் காப்பி கொடுக்கலைன்னு கேட்கக்கூடாது? எனக்கு இன்னும் கொஞ்சம் காப்பி கொண்டான்னுதான் கேட்கக்கூடாதா? இதை வேற்று மனுஷாளிடம் போய்ப் புகார் பண்ணுவானேன்? இதெல்லாம்தான் கோபம் வரப்பண்றது அனந்து.”

“சரிதான் அத்தான், கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? அத்தை எது சொன்னாலும் நீயும் அத்தாமன்னியும் பொறுத்துக்கொண்டுதான் போகணும். அவளோ வயசானவள். சில சமயம் புத்தி சரியா வேலை செய்யாது.

தவிர வேண்டுமென்றே உங்கள் மனம் புண்படும்படியாகச் சொல்றான்னே வைத்துக் கொள்வோம்… அப்ப என்னதான் பண்றது? அழுகிய வாழைப் பழமா இல்லை அழுகின கத்தரிக்காயா, தூக்கி எறிந்துவிட? இதயெல்லாம் பொறுத்துக்கொண்டு போக வேண்டியது உங்கள் கடமை. உனக்குத் தெரியாததில்லை.

அத்தை அந்தக் காலத்திலே தன் தேகத்தினால் பாடுபட்டு எத்தனை பேருக்கு உபகாரம் செய்திருக்கிறாள்? இருப்பதைக் கொடுத்து எத்தனை பேருக்கு ஒத்தாசை செய்திருக்கா? ஒண்டிக் கட்டையாக இருந்துகொண்டு உன்னை வளர்த்து ஆளாக்கி விட்டிருக்காளே? அது ஒன்று போதாதா? அதற்கே நீயும் அத்தாமன்னியும் எவ்வளவு செய்தாலும் தகும். நான் உனக்குச் சொல்ல வேண்டியதில்லை. இதெல்லாம் அற்பமான காரியங்கள்… இந்தச் சமயத்திலே அவைகளை பெரிது படுத்திக்கொண்டு கசப்பை வளர விடக்கூடாது…”

Print Friendly, PDF & Email

1 thought on “அத்தை

  1. ஒரு அருமையான சிறுகதை. இது ஒரு சிறந்த படிப்பினையைத் தருகின்றது. பெரியவர்களும், இளம் வயதினரும் நிலைமையை நன்கு புரிஞ்சுக்கணும். முதல்ல, இந்தப் பெரியவர்கள் நிறையவே அட்ஜஸ்ட் செய்துகொண்டு போகணும்; வேறு வழியில்லை. இது காலத்தின் கட்டாயம். பெரியவர்களைக் கவனித்துக்கொண்டு இருக்கும் இளம் வயதினர்களுக்கும் நிறையவே பொறுப்புக்கள் இருக்கின்றன. இவர்கள் நிச்சயம் பொறுமையோடு இருந்து அவரவர்கள் கடமைகளைச் செய்வது மிகவும் தார்மீகமான செயலே.

    “மணியன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *