தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 10,197 
 

காய்ந்து சுருண்டு போன தலை முடி. அழுக்கேறிய புடவை.. உடம்பில், ஒட்டிக் கொண்டிருக்கிற சுருங்கிப்போன சதைக்கு சொந்தக்காரியான பூரணி தனக்குத்தானே அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.

“”மத்தவங்க மாதிரி … நானும் மோள தாளத்தோடதான் வந்து, யென் அத்தமவன கண்ணாலம் கட்டிக்கிட்டேன்.., யென் அத்த சாவறப்ப மாமன பாத்துக்கன்னு சொல்லி எங்கிட்ட சத்தியவாக்கு வாங்கிடிச்சி. அந்த சத்தியத்துக்குத்தான்…” என்று முணுமுணுத்தவாறு உட்கார்ந்திருந்தாள்.

குழாயில் தண்ணீர் வராதபோது அங்கேயே உட்கார்ந்து… அவளுடைய அத்தை வாங்கிய சத்தியத்தை நினைத்துக் கொண்டு மூக்கைச் சிந்திப் போடுவாள்.. அவள் கண்டதெல்லாம் அங்கங்கே நெளிந்து போன ஒரு சின்ன குண்டானும், துடைப்பமும்தான்…

அத்தை மவன்தெருவாசலைக் கூட்டி ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதமும் தருகிற இரண்டு பத்து ரூபாய், இல்லாவிட்டால் மூன்று பத்து ரூபாயில், வீட்டுக்கு வீடு இரண்டு, ஒன்று ரூபாயை வாங்கி மொத்தமாக மூன்று பத்து ரூபாயாக அவளுடைய மாமன்காரன் பிச்சைக்குத் தினமும் கொடுத்துவிடுவாள், குடிக்கிறதுக்கு. சாப்பாட்டுக்கு அதே தெரு மாடி வீட்டில், மாடு கணக்கா வேல செய்வாள். அவர்கள் அங்கே கொடுக்கிற சுடுசோறையும் குழம்பையும் மாமனுக்குப் போட்டுவிட்டு, பழைய சோற்றைப் பூரணி சாப்பிடுவாள்.

மாமன்காரன் பிச்சை வக்கணையாக அதைச் சாப்பிட்டுவிட்டு மண் சுவரின் மேல் சாய்ந்து கொண்டே கவலை இல்லாமல், பீடியை நன்றாக இழுத்து ஊதித் தள்ளுவான்…

“”எத்தினி நாளிக்குதான் ஒன் மாமனுக்கு ஊடு, ஊடா வேல செஞ்சி சோத்தப் போடுவ?”என்று பக்கத்து வீட்டு ஆயா பாஞ்சாலி கேட்டது.

“”ஆயா, நான் உசுரோட இருக்கறவரைக்கும் அத்தைக்குக் குடுத்த சத்திய வார்த்தைய காப்பத்தணுமில்லியா?” என்பாள் பூரணி.

பூரணி, சில சமயங்களில் வாசலைப் பெருக்கிக் கொண்டே தானே பினாத்திக் கொண்டிருப்பாள்-

“யென் மாமங்காரன், பிச்சேரி (புதுச்சேரி) கெப்லாலையில வேல செஞ்சுது. அது வாங்கியாற சம்பளத்த அத்தகிட்ட பாதிய குடுத்துட்டு மீதிய வச்சிக்கினு அதுவே குடிக்கும். மாட்டுக்கறிக்கும், சாராயத்துக்கும் ஆசப்பட்டு குடிக்கப்போன மாடடிச்சான் தோப்புல சால்னா கட வச்சிருக்கிற காத்தாயிய வச்சிக்கிச்சு…. அத்தயும் நானும் எவ்ளோ சொன்னோம். ம்ஹூம்., அந்த சால்னா கடக்காரி பேச்சக் கேட்டுக்கிட்டு வேலய உட்டு நின்னுடுத்து. அந்தக் கணக்குத் தீத்த ரூவாவயும், அந்த சிரிக்கியே கதின்னு, அவகிட்ட குடுத்து காச பூரா அழிச்சிடுச்சி. மாமங்கிட்ட காசு இல்லன்னு தெரிஞ்சதும், அவளே ரௌடிங்கள வச்சி ஒதச்சி தொரத்தனப்பறந்தான், யென் மாமன் ஊட்டுக்கு வந்துது….

அதுக்கு எந்த வேலயும் தெரியாது. அதனாலதான், நான் இந்த ஊட்டு வாசல பெருக்கி, அதுக்குத் தெனம் படியளந்துக்குனு கெடக்கறேன்’ என்று பூரணி தனக்குத்தானே, பித்துப்பிடித்தவள் போல அவள் பாட்டுக்குப் பேசிக்கொண்டே வாசலைப் பெருக்குவாள். அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் விடியற்காலையில் அவர்கள் வீட்டு வாசலைப் பெருக்கும்போது, அவர்கள் காதில் விழுகிற மாதிரியும், அவர்கள் தன்னை மெச்சுகிற மாதிரியும்,

“இந்த ஊர்ல, புருஷன ஒக்கார வச்சி, தெனத்துக்கும், குடிக்கிறதுக்கு ரெண்டு பத்து ரூவாவுமா குடுத்து, சோத்தயும் போடறது, இந்த ஊர்லியே நான் ஒருத்தியாக்குந்தான்’ என்று ஒய்யாரமாக அவர்கள் காதுக்கு கேட்கிற மாதிரி, ராகத்தோட பேசி அங்கலாய்த்துக் கொள்வாள்.

கோழி, கொக்கரக்கோ என்று சத்தம் போட்டதும், துடைப்பத்தையும், குண்டானையும் எடுத்துக் கொண்டு பூரணி வீட்டை விட்டு வெளியில் வந்துவிடுவாள். அப்படி ஒருநாள் வரும்போது மழை பெய்து, “அடி, அடி’ என்று அடித்தது…. மழையும் நிற்கவில்லை.., அதனால் யோசித்த பூரணிக்கு மழைக்குத் தஞ்சமாகத் தெரிந்தது, ஆயா பாஞ்சாலி வீட்டின் முன்பகுதிதான். விடிந்ததற்கப்புறம், மழை ரொம்ப நேரம் பெய்தது. மழை நின்றாலும் “பிசுபிசு’ என்று தூறல் போட்டுக் கொண்டே இருந்தது.

மாமன் பிச்சை பீடியை ஊதிக் கொண்டே நனைந்தபடி வந்தான். அதைப் பார்த்த பூரணி, “”மாமா ஆயா வூட்டு கொரட்டாண்ட வா” என்று சத்தமாகச் சொன்னாள்.

பிச்சையும் ஆயா வீட்டின் முன்பகுதிக்கு வந்ததும், பூரணி தன் முந்தானையால், அவன் ஈரத்தலையைத் துவட்டிவிட்டாள்.

தலை துவட்டின பூரணியின் கையைப் பிடித்து உதறித் தள்ளிய பிச்சை…

“”அதெல்லாம் இருக்கட்டுன்டி, எங்கேடி ரூவா? மொதல்ல வைடி குளுருது” என்றான்.

“”மாமா மழை வேற பெஞ்சிக்கிட்டிருக்குது இப்ப கேட்டா, யாரும் தரமாட்டாங்க. அதனால சாங்காலாமா, வாங்கியாந்து தர்றேன்” என்றாள் பூரணி.

“”ம்ஹீம்… அதெல்லாம் முடியாது”- கோபத்துடன் சொன்னான்.

பிச்சை பூரணியின் கொண்டையைப் பிடித்து முறுக்கி, “தர தர’ என்று இழுத்ததும், பூரணி வலி தாங்க முடியாமல் ஓவென்று கத்த ஆரம்பித்தாள். பூரணி போட்ட சத்தத்தைக் கேட்ட பாஞ்சாலி ஆயா, வீட்டுக்குள்ளிருந்து முன்பக்கம் வந்து,””உடுடா அவள சோம்பேறி… ஒனக்கு சம்பாதிக்க வக்கில்ல.., பொண்டாட்டிய போட்டு ஒதைக்கிற?” என்று சத்தம் போட்டவள்,

“”இந்தாடா முப்பது ரூவா” என்று அவனிடம் கொடுத்தாள்.

“”வர்றேன் ஆயா”

என்றவாறு, ரூபாயை வாங்கிய பிச்சை தன் சட்டைப் பையில் செருகிக் கொண்டு நேராக ரெட்டாத்திக் கிணறு சாராயக் கடையை நோக்கி வேகமாக நடந்தான்.

பாஞ்சாலி ஆயா, பூரணியிடம், “” ஏன்டி அவன் ஒன்ன அடிச்சிப்புட்டாலும் அழுவுற. வேற யார்ன்னா ஒன் மாமன அடிச்சிட்டாலும், யென் மாமன உட்டுடுங்க உட்டுடுங்க-ன்னு அடிக்கிறவன் கால புடிச்சிக்கினு அழுவுற?”

“”இன்னா பண்றது ஆயா? மனசு வரல. யென் மாமனாச்சே… அதுவும் அத்த மவனாச்சே”

சாணம் மொழுகிய மண் தரையில் மாமன் பிச்சை வாயை “ஆ’வென்று திறந்து கொண்டே தூங்கினவன், இரண்டு தெருக்கள் கேட்கிறமாதிரி குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அந்தச் சத்தத்தால் தூக்கம் வராமல், புரண்டு புரண்டு படுத்த பூரணி, மெல்ல எழுந்து, விடிந்து போயிருக்குமோ என்று குடிசையிலிருந்து வெளியில் வந்து பார்த்தாள்.. ஒரே இருட்டாக இருந்தது.

சரி, இருட்டாக இருந்தால் இருக்கட்டும், இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்துவிடும் என்று தண்ணீரோடு இருந்த குண்டானையும் துடைப்பத்தையும் வெளியே எடுத்தாள். முச்சந்தி தெருவில், நரசம்மா வீட்டு வாசலைப் பெருக்கி தண்ணீர் தெளித்துவிட்டு வந்தாள் பூரணி. பக்கத்து வீட்டில் ரிப்பேர் ஆன குடி தண்ணீர் குழாயைச் சரி பண்ணியவர்கள் தோண்டிய பள்ளத்தை மூடாமல் போயிருந்தார்கள். அது தெரியாமல், தண்ணீர் குண்டானோடு வந்த பூரணி அந்தப் பள்ளத்தில் “”அய்யோ மாமா” என்று கூவிக் கொண்டே கீழே விழுந்தாள்.

முகம், முழங்கை மூட்டு, கால் மூட்டு எல்லாம் தேய்த்துக் கொண்டு விழுந்தவளைத் தூக்க அந்த இருட்டு நேரத்தில், யாரும் அந்த இடத்தில் இல்லை. அவளே மெல்ல மேலே எழுந்து வந்தாள். கை, கால்களில் ரத்தமாக ஊற்றியது. வலியைப் பொறுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள். மாமன் பிச்சையை எங்கே எழுப்புவதென்று பக்கத்து வீட்டுப் பாஞ்சாலி ஆயாவைக் குரல் கொடுத்து எழுப்பினதும், முன் லைட்டைப் போட்டுவிட்டு வெளிய வந்த ஆயா, பூரணியைப் பார்த்ததும்,

“”அடிப்பாவி, என்னடி இது கை, கால், முகமெல்லாம் ரத்தக் காயமா இருக்கே? உன் மாமங்காரன் அடிச்சிப்புட்டானா? பாவி பையன்”

“”ஆயா, ஆயா அதெல்லாம் இல்ல. ஆயா நான்தான் இருட்டுல பள்ளம்னு தெரியாம கீழ உழுந்துட்டன்”

“”தோ இருடீ வர்றன்”

என்று உள்ளே போன ஆயா, தெருவாசலில் தெளிக்க வச்சிருந்த சாணத்தைத் தண்ணி ஊற்றி பிசைந்து, எடுத்துக் கொண்டு வெளியே வந்து, பூரணி கை, கால்களில் காயம் பட்ட இடத்திலெல்லாம் அந்த சாணத்தைத் தடவினாள்.

“”காலையில, ஆசுபத்திரிக்குப் போயி ஊசிய போட்டா, எல்லாஞ் சரியா போயிடும்”

என்றவாறு, பாஞ்சாலி ஆயா, பூரணியை அவள் வீட்டுக்குள்ள விட்டுவிட்டுப் போய்விட்டாள்.

மறுநாள், ஆஸ்பத்திரிக்குப் பூரணி போகவில்லை. கை, கால் முகமெல்லாம் வீங்கிப் போனது.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்த மாமன் பிச்சைக்கு சட்டியில் இருந்த, சோற்றையும் குழம்பையும், பூரணி சாடை காட்டி, மெல்ல தாழ்ந்த குரலில்…

“”சோத்த சாப்ட்டுட்டு போ மாமா… இந்தா மாமா, மூணு பத்து ரூவா”

பணத்த வாங்கிக் கொண்டு, சோற்றையும் சாப்பிட்டுவிட்டுப் பூரணியின் உடம்புக்கு என்ன ஏது என்று, கேட்காமலேயே வீட்டிலிருந்து வெளியேறினான்.

இந்த சமயத்தில் பாஞ்சாலி ஆயா, தன் மகளைப் பார்க்க மரக்காணம் போய்விட்டாள். மூன்று நாளாக வீட்டை விட்டு எங்கேயும் எழுந்து போகாமலேயே படுக்கையிலே பூரணி படுத்துக் கிடந்தாள். முகம், கை, காலெல்லாம் ரொம்ப வீங்கிப் போனது. பசி மயக்கம் வேறு கண்ண இழுத்துக்கொண்டே போனது.

அப்போது கிணத்திலிருந்து கூப்பிடுவது மாதிரி ஒரு குரல் வந்தது. ஒரு சின்னப் பையன் வீட்டுக்கு வந்து, “”பூரணி ஆயா, பூரணி ஆயா, எங்கம்மா, இந்த சோத்தையும், கொழம்பையும் குடுத்துட்டு வரச்சொன்னாங்க” என்றான்.

மெல்லக் கையை ஊன்றி எழுந்த பூரணி, அந்தப் பையனைப் பாத்து,”” அத இப்படி வச்சிட்டுப்போப்பா, யென் ராசா” என்றாள்.

பையன் பாத்திரத்தை வைத்துவிட்டு ஓடிவிட்டான்.

பசி மயக்கம், மெல்ல கையை ஊன்றி உடம்பை இழுத்துக் கொண்டே போன பூரணி, குண்டானில் இருந்த பழஞ்சோற்றையும் பழங்கொழம்பையும் சட்டியில் போட்டு நன்றாகப் பிசைந்து உண்டையாக உருட்டி வாயருகே எடுத்துக் கொண்டு போனாள். ஊசிப் போன நாற்றம், எத்தனை நாள் மீன் குழம்போ தெரியவில்லை, பசி வேறு, ஆனது ஆகட்டும் என்று சோற்றை வாயில் போட்டதும், “கப கப’என்று எல்லாம் உள்ள போய்விட்டது. உடைந்த பானையில் இருந்த தண்ணீரை ஒரு தகரச் சொம்பால் மொண்டு குடித்துவிட்டு, “அப்பாடா’ன்னு பெருமூச்சு விட்டவாறு, அந்த இடத்திலேயே அசந்து படுத்தாள். தூக்கம் கண்ணை இழுத்துக் கொண்டே போனது.

நடு ராத்திரியிருக்கும். பூரணி வயிற்று வலியால் புரண்டு புரண்டு படுத்தாள். வலி தாங்கமுடியவில்லை. முட்டி போட்டுக் கொண்டே தோட்டத்துப் பக்கம் போனவளுக்கு வாயாலும், வயிற்றாலும் அதுபாட்டுக்கு குழாய்த் தண்ணீர் மாதிரி போய்க் கொண்டேயிருந்தது.

மறுபடியும், மறுபடியும் அவளால எழுந்து போக முடியவில்லை. எல்லாம் படுத்த இடத்திலேயே போய்க் கொண்டிருந்தது. நேரம் ஆக ஆக கை காலெல்லாம் சில்லிட்டுப் போனது. கையைக் காலை அசைக்கக்கூட முடியலை. மனது மட்டும்…..

மாமா, மாமான்னு… வாய் முனங்கிக் கொண்டது. விடியற் காலை கோழி கூவியபோது பூரணியுடைய மூச்சுக் காற்றும் மெல்ல மெல்ல அவள் கூட்டைவிட்டு போய்விட்டது. பூரணி வெறும் கட்டையாகக் கிடந்தாள்.

சாராயத்துக்காக கடையில் சொல்கிற வேலையைச் செய்து கொண்டு அவர்கள் கொடுக்கிற, சாராயத்தை வீட்டு நினைப்பேயில்லாமல் தொடர்ந்து மூன்று நாளாகக் குடித்துவிட்டு அங்கேயே மயங்கிக் கிடந்த பிச்சை, குடிபோதை தெளிந்ததும், சாராயக் கடையிலிருந்து வெளியே வந்தான். நேராக வீட்டுக்கு நடந்தான். ஊதிக் கொண்டிருக்கிற பீடியைக் கீழே போட்டுவிட்டு வாயில் இருந்த எச்சிலை துப்பிக் கொண்டே, “”பூரணி, பூரணி”ன்னு வீட்டுக்குள்ளே நுழைந்தவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். வீடு பூராவும், மலம், வாந்தி எடுத்த முடை நாற்றம். பூரணி முகத்தில் ஈயும், கொசுவும் அப்பிக் கிடந்தது. காது, மூக்கு வழியாக எறும்பு போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தன. இதைப் பார்த்த பிச்சை, வெளியில் ஓடிவந்து ஓவென்று கத்திக்கிட்டே, அவன் முகத்துலயும், தலையிலும் அடித்துக் கொண்டு,””அய்யய்யோ இனிமே எனக்கு யாரு இருக்காங்க?” என்று,

தரையிலே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். மூன்று நாளாக மகள் வீட்டுக்கு மரக்காணம் போயிருந்த பாஞ்சாலி ஆயா, காலையில் வீட்டுக்கு வந்திருந்தது. வீட்டுக்கு வெளியில் சத்தம் கேட்டதும், என்னமோ, ஏதோன்னு வீட்டை விட்டு வெளியில் வந்தது, “என்னைக்கும் இல்லாம இந்தப் பிச்சை ஏன் இன்னைக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்றான்’ என்று நினைத்தபடி வேகமாக வந்த ஆயா, பூரணி வீட்டருகே இருந்த கும்பலைத் தள்ளி விட்டிவிட்டு, உள்ளே நுழைந்தாள். பூரணி செத்துக் கிடந்த கோலத்தைப் பார்த்ததும், அதிர்ச்சியில் ஆயாவுக்கு வியர்த்துக் கொட்டி மூச்சிறைத்தது. அங்கிருந்த முடைநாற்றத்தைத் தாங்க முடியாமல் ஆயா முந்தானையால் மூக்கைப் பிடித்துக் கொண்டு பூரணியுடைய மூக்கில் கையை வைத்துப் பார்த்தாள். மூச்சு வரவில்லை என்று தெரிந்ததும், செத்து ரொம்ப நாழியாகுதுன்னு புரிந்து கொண்டாள்.

கண்ணீரைத் துடைத்து, மூக்கை சிந்திப் போட்டுக் கொண்டு, “”இன்னாத்த சாப்ட்டுட்டு இப்படி வாயாலயும், வயித்தாலும் இவளுக்குப் போயிருக்குது தெரியலியே” என்று பக்கத்திலிருந்த சோற்றுச் சட்டியைப் பார்த்தாள். அதை எடுத்து முகர்ந்து பாத்தவாறு, “”எத்தின நாலு கெட்டுப்போன பழங்கொழம்போ தெரியலியே, எந்த பாவி சிரிக்கி குடுத்தாளோ? அவ நல்ல கெதிக்குப் போவமாட்டா படுபாவி. நான் யென் மவ ஊட்டுக்கு, போயிட்டு வர்றதுக்குள்ள, இப்படி நடந்து போச்சே” தலையில் அடித்துக் கொண்டு ஆயா அழுதாள். அப்போது, கூட்டத்தில இருந்த ஒரு பையன் தன் அம்மாவிடம், “”அம்மா பூரணி ஆயாவுக்கு நீ, கொழம்பும் சோறும் குடுக்கச்சொன்ன நம்ம குண்டான் அதோ கெடக்குது, எடுக்கட்டாம்மா” என்றதும், உடனே பையனுடைய அம்மா, அவன் வாயைப் பொத்தி, அந்தக் கூட்டத்திலிருந்து பையனை நைசாக இழுத்துக் கொண்டு மெல்ல நழுவினாள்.

பூரணி தலைப்பக்கம் மேடாக இருக்குதே என்று தலையை ஆயா தூக்கிப் பார்த்ததும் சின்ன துணியைச் சுற்றி உருண்டையாக முடிச்சுப் போடப்பட்டிருந்தது. அந்த முடிச்சுப் போட்ட துணியை ஆயா அவிழ்த்ததும், ஒரு பாலித்தீன் தாள் பை உள்ளே பத்து, பத்து ரூபாயாக ஆயிரத்துக்கும் மேல் இருந்தது.

அவளுடைய கணவன் பிச்சை குடிப்பதற்காக.

– து. சுதர்சன் (டிசம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *