அத்தை மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2013
பார்வையிட்டோர்: 11,592 
 

“சும்மாவா சொன்னாங்க, பணம் பாதாளம் வரை பாயுமுண்ணு. அது இல்லாதவரை நாம வேணும். இப்போ மகன் சாப்ட்வேர் கம்பெனியில் பணத்தை அள்ளிக் குமிக்கிறப்போ நம்மை நினைக்க நேரமில்லே.”

“அப்படி ஏன் நினைக்கிறே கமலம்? கோகிலாவும் மைக்ரோ சாப்ட்லே சேரப்போறா. நம்ம உறவுலே இப்பத்தான் தணிகை தலை எடுத்திருக்கான். அக்காவும், அத்தானும் படாத கஷ்டமா? நம்மாலே முடிஞ்ச உதவியை படிப்புக்காகத்தானே செஞ்சோம். அதைக் கூட வேணாமின்னு அவங்க சுய மரியாதை தடுக்கலே?”

“அதைச் சொல்லலீங்க. நல்லா இருக்கட்டும். இந்த ரெண்டு வருஷமா நம்ம வீட்டுக்கு வரலயே? அமெரிக்கா மட்டும் போய் ஆறு மாசமா இருந்தாங்களே?”

“சென்னையில் இருந்து மதுரை வந்து, அப்புறம் பஸ் பிடித்து போடிக்கு வருவதை விட இப்போ அமெரிக்கா போவது ஈசி. அதோட நம்மையும் கூப்பிட்டாங்களே. நீதான் பிகு பண்ணிட்டே.”
அதிகாலை கதவு தட்டப்படும் சத்தம். கதவைத் திறந்தால் அங்கே சிதம்பரத்தின் அக்காவும் அத்தானும்.

முதல் தடவையாக இப்படி ஓர் நிகழ்ச்சி நடந்ததும் பதறிப் போனார்கள்.

“சிதம்பரம், என் பையனைத் தலை முழுகிட்டேன். இனி எங்களுக்குப் கடைசி காலம் போடிதான்.”

விஷயம் சாதரணமாகப் பட்டது சிதம்பரத்திற்கு. கம்ப்யூட்டர், சாம்பசிவத்திற்குத் தெரியாமல் இண்டெர்நெட் முலம் மருமளை ஏற்பாடு செய்து விட்டது. மருமகள் மும்பைப் பெண்.
“சிதம்பரம், ஆறு மாசமா நான் பட்ட பாடு போதும். என்ன சொல்லியும் கேட்கலே. மும்பைக்கு வந்து பதிவுத் திருமணம் செய்து கொண்டு எங்களிடம் ஆசீர்வாதம் வாங்க வந்து நிக்கறாங்க.”

“நீங்க என்ன செய்தீங்க, அத்தான்?”

“நாசமாப் போங்கன்னு சபிச்சுட்டு இங்கே வந்து நிக்கறேன். இந்த இண்டர்நெட்டையே அப்பா, அம்மான்னு வச்சுக்கோன்னு சொல்லி தலை முழுகிட்டேன். இனி கோகிலாதான் எனக்கு கொள்ளி போடணும்”

யதார்த்த வாழ்க்கையைப் புரிந்து அறிவு பூர்வமாய் நடந்து கொள்பவர் சிதம்பரம். அதிர்ச்சி அடைந்தாலும் நிதானம் இழக்காமல் பேசினார். கோகிலாவின் அம்மாவும், அத்தையும் வாயடைத்து நின்றார்கள்.

“அத்தான், இப்போ உங்களோட ஆரோக்கியம்தான் முக்கியம். பதட்டமே வேண்டாம். நீங்கள் பழைய கால கலாசாரத்தில் அதிகமாக ஊறிவிட்டதால் ஜீரணிக்க முடிய வில்லை. இந்த இண்டர்நெட் பூமாலையும் கொடுக்குது, பூகம்பத்தையும் உண்டாக்குது. நமது காலத்தில் இருந்த ஜெனரேஷன் கேப் இப்போ டி.வி, கம்ப்யூட்டர், செல்போனுன்னு நிறைய வந்து ஜெனரேசன் லீப் ஆயிடுச்சு. நாம அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம். நீங்கள் கவலைப் பட வேண்டாம். நாங்கள் எப்போவும் உங்களோடுதான் இருப்போம்.”

அப்பாவின் விளக்கம் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆகிவிட்டது. சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். அது கம்ப்யூட்டர் அரட்டைக்கான நேரத்தை நினைவு படுத்த மாடிக்கு விரைந்தாள்.
ஹெட்போனை மாட்டிக் கொண்டு திரையில் தெரிந்த போன் படத்தில் கிளிக் செய்து ‘ஹலோ’ என்றாள். காதலியின் குரல் கேட்ட காதலன் வின்சென்ட், ‘கல்யாணம்தான் கட்டிக் கிட்டு ஓடிப்போலாமா, இல்லை ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா’ என்று உற்சாகத்துடன் பாட,

“கிரீன் சிக்னல் கிடச்ச மாதிரி இருக்குடா. கொஞ்சம் பொறுத்துக்கோ. நயகராவில் நம்ம ஹனிமூனை சீக்கிரத்தில் வச்சுக்கலாம்.”

“கோகிலா கீழே வந்து அத்தையைக் கவனி.”

மாடிப்படி ஏறி வந்து கொண்டிருந்த அப்பாவின் குரல் கேட்டு கோகிலா அதிரவில்லை. லாவகமாக பாசிங் கிஸ் கொடுத்து கம்ப்யூட்டரை தூங்கச் செய்து விட்டு புன்முறுவலுடன் அப்பாவின் ஆணைக்கு அடி பணிந்தாள்.

– ஜூன் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *