அது உனக்கு புரியாது….!

 

கவினுக்கு இப்போதுதான் பதின் வயது தொடங்குகிறது… அது சிறுவர்களுக்கான
வயதா? பருவ வயதா? என்கிற வயதை பற்றிய குழப்பம் நமக்கென்றால், அந்த
வயதிற்கே உரிய பலவிதமான குழப்பங்கள் கவினுக்கு… உலகை பற்றியும், தன்
உடலை பற்றியும் நிறைய குழப்பங்கள் நிறைந்த அந்த வயதில், கவினுடைய
குழப்பம் அவன் மற்ற நண்பர்களிடமிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டது….

பொதுவாக ஒரு மனிதனுக்கு முதல் காதல் அரும்பும் அந்த வயதில், பெரும்பாலான
ஆண்களின் அந்த முதல் காதலுக்கு உரியவர், அவர்களின் பள்ளி ஆசிரியையாகவோ,
உடன் பயிலும் தோழியாகவோதான் இருப்பார்கள்… அதை காதலென்று கூட சொல்ல
முடியாது, ஒருவித ஈர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்….

ஆனால், கவினுடைய முதல் ஈர்ப்பு, அவன் மற்ற நண்பர்களிடமிருந்து முற்றிலும்
மாறுபட்டது… கவினுக்கு அவன் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்
‘வருண் அண்ணன்’ மீதுதான் அந்த முதல் ஈர்ப்பு உண்டானது… வருண் அந்த
பள்ளியின் மாணவர் தலைவனும் கூட… ப்ரேயர் ஹாலில் மேடையில் நிற்கும்
வருணை பார்ப்பதற்காகவே கவின் நேரம் தவறாமல் பள்ளிக்கு
சென்றுவிடுவதுண்டு…

நண்பர்கள் பலரும் பெண்களின் அழகை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கூட,
கவினுக்கு “வருண் அண்ணனை விட அழகா எந்த பெண்ணும் இல்லையே!” என்றுதான்
தோன்றும்…. முதல் காதல் எப்போதும் ரஜினி மாதிரி, எப்போது வரும்? யார்
மீது வரும்?னு சொல்ல முடியாது… அதே போல வந்த வேகத்தில் அது காணாமலும்
போய்விடும், மனதில் அழுத்தமான வடுவை மட்டும் சுவடாக பதித்துவிட்டு….

இது ஒரு தொடர் குழப்பமாக கவின் மனதிற்குள் உறுத்திக்கொண்டிருக்க, மேலும்
சில குழப்பங்களும் சங்கிலி போல அவன் மனதை இறுக்கத்தொடங்கியது …

“இரண்டாம் உலகம்” படத்தில் மற்ற நண்பர்கள் அனுஷ்காவின் அழகை ரசித்தபோது,
கவின் மட்டும் ஆர்யாவை கண்கொட்டாமல் ரசித்தான்… சானியாவையும்,
சாய்னாவையும் கனவு தேவதைகளாக சகநண்பர்கள் கொண்டாடிய வேளையில், கவின்
மட்டும் விராட் கோலியையும், நமன் ஓஜாவையும் விளையாட்டை கடந்து
ரசித்தான்…. அப்போதுதான் தன்னை பற்றிய ஒரு தெளிவான பிம்பம் கவினுக்குள்
உருவானது, “தனக்கு உண்டாகும் ஈர்ப்பானது வருண் அண்ணனுடனோடு
முற்றுப்பெற்றுவிடவில்லை, அது அழகான ஆளுமைமிக்க ஆண்கள் பலரை
பார்க்கும்போதும் தொடர்கிறது” என்று உணர்ந்தான்….

“சரி, இது சரியா?… ஆண்கள் பெண்களைத்தானே திருமணம்
செய்துகொள்கிறார்கள்?.. அப்போ எனக்கிருக்குற ஈர்ப்பு தவறானதா?” முதல்
முறையாக தன்னை பற்றிய பயம் நிறைந்த கேள்வி கவினுக்குள் தோன்றியது…

இந்த கேள்விகளுக்கு பதில் யாரிடம் கேட்பது?… அந்த வயதிலேயே டார்வினின்
“ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ்” முதல் ராமர் பிள்ளையின் “மூலிகை பெட்ரோல்” வரை
பலவிஷயங்களை பற்றியும் புரியும் வகையில் (சில நேரங்களில் புரியும்
வரையில்) சொல்லிக்கொடுத்த “அம்மா”வைத்தவிர இதை கவின் வேறு யாரிடம்
கேட்பதும் பொருத்தமாக இருந்திடாது…

அன்று விநாயகர் சதுர்த்தி…. அம்மா தீவிரமாக பூஜை வேலைகளில் தன்னை
ஆட்படுத்திக்கொண்டிருந்தாள்… மோதகமும், கொழுக்கட்டையும், சுண்டலும்
மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையாரின் படையலுக்காக
காத்திருந்தன… விளக்கிற்கு பொட்டுவைத்துக்கொண்டிருந்த அம்மாவின்
அருகில் சென்று பவ்யமாக அமர்ந்தான் கவின்…

“தம்பி, பூஜை முடிஞ்சப்புறம்தான் இதல்லாம் சாப்பிடனும்… இப்போ
தொடக்கூடாது” அம்மா அந்த உணவு பதார்த்தங்களை கொஞ்சம் தள்ளி வைத்தாள்…

பூஜைக்கு ஆயத்தமாகும் நேரத்தில், செவிக்காவது உணவை பெற்றிடலாம்! என்கிற
நோக்கத்தோடு, “ஏன்மா பிள்ளையாருக்கு கல்யாணம் ஆகல?.. முருகனுக்கு மட்டும்
ரெண்டு கல்யாணம்?” முதல் கேள்வியை அம்பாக பாய்ச்சினான்…

“ஹ்ம்ம்…. அவருக்கு பொண்ணு கெடைக்கலயாம், அதான்…” விளையாட்டாக
சிரித்தாள் அம்மா…

“ஏன்மா, ஆம்பளையும் பொம்பளையும்தான் கல்யாணம் பண்ணிக்கனுமா?… ஏன்
ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா?” இதை விநாயகருக்காக
கேட்பதாக நினைக்கும் அம்மாவிற்கு, கவினுக்குரிய கேள்வியும் இதுதான்
என்பது புரியவில்லை…

“இல்லப்பா… அதான் இயற்கை… ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிகிட்டாதான்
குழந்தை பிறக்கும்… நானும் அப்பாவும் கல்யாணம் பண்ணிகிட்டதாலதான் நீ
பிறந்த… இயற்கைக்கு புறம்பா நாம எதுவும் யோசிக்கவே கூடாது…” அம்மா
விளக்கில் திரியை போட்டுக்கொண்டிருந்தாள்….

“நான் எப்டிம்மா பிறந்தேன்?”

“அதல்லாம் உனக்கு புரியாதுடா… உனக்கு அதுக்கான வயசு வர்றப்போ
புரியும்…” தனக்குள் சிரித்துக்கொண்டே அம்மா விளக்கிற்கு எண்ணையை
ஊற்றினாள்….

“பிள்ளையார் எப்டிம்மா பிறந்தார்?”

“ஹ்ம்ம்… பார்வதி தேவிக்கும், கங்கைக்கும் பிறந்தார்…”

“ஐயப்பன்?”

“அவரு சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பிறந்தார்…”

“அதெப்டி ரெண்டு பெண்களுக்கு பிள்ளையார் பிறந்தார்? ரெண்டு ஆண்களுக்கு
ஐயப்பன் பிறந்தார்?”

விளக்கில் ஒளியை ஏற்றிவிட்டு, கண்களை கவினின் பக்கம் திருப்பிய அம்மா,

“அவங்கள்லாம் கடவுள்டா… நம்ம விதிகள் அவங்களுக்கு பொருந்தாது….
அதல்லாம் உனக்கு புரியாதுடா….” கவினின் தலையை கோதிவிட்டாள்…

மெல்ல எழுந்த கவின், அம்மாவின் அருகில் இருந்த கொழுக்கட்டையை எடுத்து ,
அதே வேகத்தில் கடித்தும் விட்டான்…

“ஏய்!.. என்ன பண்ற?.. நான்தான் சொன்னேன்ல, சாமிக்கு படைச்சதுக்கு
அப்புறம்தான் நாம சாப்பிடனும்னு?” அம்மா அடிக்க கை ஓங்கிவிட்டாள்….

மெல்ல சிரித்த கவின், “நானும் சாமி தான்மா…”

இன்னும் அதிகமான கோபத்துடன் அம்மா, “என்னடா சொல்ற?.. கொழுப்பா உனக்கு?”
சீறினாள்….

“அது உனக்கு புரியாதும்மா….” சொல்லிவிட்டு பூஜையறையை விட்டு வெளியே
ஓடினான் கவின், அம்மாவை தவிர அங்கிருந்த மற்ற அனைத்து கடவுள்களும்
எல்லாம் புரிந்தவர்களாக படங்களில் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்….

விளக்கின் வெளிச்சம் வீடுமுழுக்க விஸ்தரிக்க தொடங்கியது…

நீங்களும் சிரிப்பதை பார்த்தால், உங்களுக்கும் புரிஞ்சுடுச்சுன்னு
நினைக்கிறேன்????….. 

தொடர்புடைய சிறுகதைகள்
அதிகாலை மணி 5 இருக்கலாம்... முந்தையநாள் இரவு கொட்டிய மழையின் தாக்கத்தால் காற்று சில்லிட்டது... சாலையின் பள்ளங்களை மழைநீர் ஆக்கிரமித்து, வெளித்தோற்றத்தில் ஒரு பொய்யான சமதள பரப்பை உருவாக்கியிருந்தது... இன்னும் முழுமையாக விடியாத காலை என்பதால், மெல்லிருட்டு சூழ்ந்து, வழியில் பாதசாரிகள் ...
மேலும் கதையை படிக்க...
குளியலறைக்கு வெளியே போடப்பட்டிருந்த மேட் வழுக்கி, தடுமாறி கீழே விழப்போய், ஒருவாறு சுதாரித்து அருகிலிருந்த ஜன்னலை பிடித்துக்கொண்டு நின்று பெருமூச்சுவிட்டுக்கொண்ட மறுநொடியே என் கண்கள் வலதுபுறம்தான் திரும்பியது... “பார்த்து போங்க பெரியவரே!” கணினியின் திரையை விட்டே கண்களை விலக்காமல் சொல்கிறான் ஜெகா.. இடறியதை ...
மேலும் கதையை படிக்க...
வழக்கமான வெள்ளிக்கிழமை மாலையின் கூட்ட நெரிசல் இன்றைக்கும் திருச்சி பேருந்து நிலையத்தை நிரப்பியிருந்தது... மதியமே கிளம்பியிருந்தால் இவ்வளவு கூட்டத்தில் மாட்டியிருக்க மாட்டேன், நேரம் ஆக ஆக கூட்டம் இன்னும் அதிகமாகிக்கொண்டுதான் இருந்தது.... தோளில் ஒரு பை, கையில் ஒரு பெட்டி என்று கூடுதல் சுமையால்தான் இன்றைக்கு இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மதியழகனை அலைபேசி ஒலி சற்றே கலவரத்துடன் எழுப்பியது... நேரம் சரியாக நள்ளிரவு ஒரு மணி, அலைபேசி திரையில் “கணேஷ்” பெயர் பளிச்சிட்டது.... “இந்த நேரத்திற்கு கணேஷ் எதற்காக அழைக்குறான்?” குழப்பத்தில் கொட்டாவி விட்டபடியே எழுந்து அமர்ந்து, அலைபேசியை காதில் ...
மேலும் கதையை படிக்க...
“ஹலோ குணா, பீ நெகட்டிவ் ரத்தம் தேவைப்படுது... ஹாஸ்பிட்டல் வரைக்கும் வரமுடியுமா?” தேவ் பேசும்போதே, அவசரத்துக்கான அவதி தெரிந்தது... தேவ், ஜேகே மருத்துவமனையில் பணிபுரியும் என் சமீப கால நண்பன்... கண் தானம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று எங்கள் அலுவலகத்தில் நடந்தபோது தொடங்கிய ...
மேலும் கதையை படிக்க...
அட நாயே!
நிர்வாண நகரத்தில் கோவணம்!
பேய்க்கதை…
377
ஏன் இப்டி செஞ்சேன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)