அதிகாலை அழகு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 8,111 
 

மலர்விழியின் உடல் அந்த அதிகாலையின் குளிர்ந்த காற்றில் லேசாக நடுங்க அதுவும் இன்பமாகவே இருந்தது. பால்கனியின் விளிம்பிற்கு சென்று பார்வையைக் கீழே செலுத்த நேர்த்தியான தோட்டம். உனக்கு முன்பே குளித்துவிட்டோம் என்று சொல்வது போல நேற்று இரவு தூரிய மழையில் மலர்களிலும் இலைகளிலும் நீர்த்துளிகள். இவ்வளவு தான் என்றில்லாமல் வர்ணஜாலமாய் பூத்திருந்தன – டேலியாக்களும், ரோஜாக்களும், சம்பங்கியும், சாமந்தியும்.. இன்னும் இன்னும் அவைகளின் பெயர் நினைவில் வரவில்லை அவளுக்கு. அதிலும் அந்த பன்னீர் ரோஜாச்செடியில் இலைகளே தெரியாமல் பிங்க் வண்ண ரோஜாக்கள் மூடியிருந்தன. அதிலிருந்து பிரிக்க முடியாத விழிகளை காற்றில் வந்த ஜாதிமல்லியின் மணம் தன்புறம் இழுக்க, ஜாதியும், முல்லையும், மல்லியும், சந்தனமல்லியும் தங்கள் பந்தல்களில் அடர்த்தியாய் படர்ந்து மூங்கில்களை மறைத்திருந்தன. நேற்று இரவு சந்திரனின் முகம் பார்த்து மலர்ந்த அந்த வெண்மலர்கள் பல, இன்னும் சற்று நேரத்தில் தங்கள் காதலன் முகம் முழுவதுமாய் மறைந்துவிடுமே என்ற துயரத்தில் உதிர்ந்து உயிரைவிட்டிருந்தன. அந்த செயலால் பந்தலை சுற்றிலும் வெண்கம்பளமாய் மலர்க்கம்பளம் விரிந்திருந்தது.

மலர்விழியின் நீண்டவிழிகள் விரிந்து இந்த பேரழகைப் பருக அவள் மனம் இன்பத்தில் திளைத்தது. ஆதவன் உள்ளே வரவா என்று கேட்டுக்கொண்டே தன் விரல்களை மட்டும் நீட்ட, வானம் சற்று வெளுத்து ஆங்காங்கே ஆரஞ்சு வண்ணம் பூசிக்கொள்ள, சென்றுதான் ஆகவேண்டுமா என்று சந்திரன் முகம் ஒளியிழக்க, இன்னுமொரு புதிய நாள் என்று பறவைகள் தங்கள் கூடுகளின் கதகதப்பை துறந்து குளிர்க்காற்றில் சிறகடித்தன. வர்ணனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது இயற்கை. இந்த இன்பக்காட்சியில் கரைவதற்காகவே அதிகாலை எழலாம். மனம் நெகிழ இதழோரம் சிறியதொரு புன்னகையில் விரிந்தது மலர்விழிக்கு.

“மலர்.. ஏ மலர்…!” அழைத்துக்கொண்டே மகளின் அறைக்குள் வந்தார் சந்திரா.

இதழில் புன்னகையுடன் உறங்கிக்கொண்டிருந்தவளை பார்த்தவர் முகம் கனிய குரலைத் தாழ்த்தி “மலர் எந்திரி டா” என தொட்டு எழுப்பினார்.

“என்னம்மா.. இப்ப உன்ன யாரு எழுப்ப சொன்னா?.. சூப்பர் கனவு தெரியுமா..” சிணுங்கினாள்.

“ஆமாடி மணி ஏழாச்சு நீ படுத்து கனவு கண்டுடிரு.. பக்கத்து வீட்டு குழந்தைங்க கூட ஸ்கூல்க்கு கெளம்பிட்டாங்க.. போயிக் குளிச்சிட்டு வா சீக்கிரம்.. 8 மணிக்கு ஆஃபீஸ் இன்னும் தூக்கம்..”

“அதவிடும்மா அந்த கனவில்ல… “
“போதும் போதும்.. ரோஜா, டேலியா.. நிலா, சூரியன்.. அதானே.. நூறு தடவ கேட்டாச்சு.. ஏன் டி அந்த விடியக்காலய ஒரு நாள் சீக்கிரம் எந்திருச்சுதான் பாரேன்.. கனவு கண்டுட்றுக்கா”

“ஆரம்பிச்சிட்டியா.. நா எஸ்க்கேப்”

வழக்கம் போல் மாலை 7 மணிக்கு சற்று களைத்து வீடு திரும்பி, காபி அருந்தி, டி.வி பார்த்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் உணவு முடித்து, புத்தகம் படித்து.. நேரம் 10 மணியைத் தொட்டது. கண் இமைகள் கனமாக புத்தகத்தை மூடிவிட்டு படுத்தாள் மலர். அலாரம் வைக்க மறந்துவிட்டதே என தன் மொபைலை தேடி எடுத்தாள். (என்ன தான் அலாரம் அடித்தவுடன் அதை அணைத்துவிட்டு தூங்குவாள் என்றாலும் அலாரம் வைப்பதை கைவிடுவதுல்லை!) இப்போது பார்த்து அம்மா காலையில் சொன்னது நினைவு வர, ஒரு நாள் எழுந்து அதிகாலை அழகை ரசித்தாள் என்ன என்று தோன்றியது. எண்ணித் துணிந்தபின் அலாரம் வைப்பது தானே பாக்கி! காலை 5 மணிக்கு வைத்துவிட்டு ஏதோ சாதித்துவிட்டவள் போல் படுத்துக்கொண்டாள்.

“வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…”

அலைபேசி வாயிலாக ஏ.ஆர்.ரகுமான் எழுப்ப, பெருமுயற்சி செய்து தன் இமைகளை பிரித்தாள் மலர். நாளை பார்த்துக்கொண்டாள் என்ன? தினமும் தானே விடிகிறது.. என்ற எண்ணத்தை பிடிவாதமாக தள்ளிவிட்டு எழுந்தாள்.

பால்கனியின் கதவை திறந்தவளுக்கு தன்னுடைய பனியனை உதறி காயப்போட்டுக்கொண்டிருந்த எதிர்வீட்டு மாமா இடுப்பில் துண்டுடன் தரிசனம் கொடுத்தார் எதிர்வீட்டு பால்கனியில்! புருவம் சுருங்க தன்னை சுற்றி விழியை ஓட்டினாள். வலதுபுறம் பக்கத்துவீட்டு பால்கனியில் டாமி வாலை ஆட்டிக்கொண்டு இவளைப்பார்த்து குறைத்தது. இடதுபுறம் காலியாக இருந்த மணையில் சில முள்ளுச்செடிகளும் அதில் சில காகங்களும் காணப்பட்டன. கனவில் வந்த பிங்க் வண்ண பன்னீர் ரோஜா நினைவிலாடி வெறுப்பேற்றியது!

பால்கனியை சாத்திவிட்டு மொட்டைமாடிக்குக்கு விரைந்தாள். எப்படியும் ஆகாயம் அங்கேதானே இருக்கும்!

மாடியில் லேசான குளிர்காற்று வீச அதை முழுதாய் சுவைக்க முடியாமல் நெருடலான ஒரு துர்நாற்றம் சேர்ந்து வந்தது. அதன் பிறப்பிடத்தை தேடி விழிகளுக்கு தெருவில் சற்றுத் தள்ளி ஒரு பாதி நிரம்பிய குப்பைத்தொட்டியும் அதை சுற்றிலும் இரெண்டு மடங்காக கொட்டியிருந்த குப்பைகளும் காணக்கிடைத்தது. அதற்குப் பக்கத்தில் மூன்று நாய்கள் சண்டையிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தன. சற்று தள்ளி ஒரு வேப்பமரமும் அதன் பின்னால் ஒருவர் அதை தன் வீட்டுக் கழிப்பிடமாக்க முயல்வதும் தெரிந்தது. சீ.. சட்டென பார்வையை திருப்பினாள். கீழே ஒன்றுமே சரியில்லை – அன்னார்ந்து வானத்தை பார்த்தாள்.

வானம் சற்று வெளுத்திருக்க ஆங்காங்கே வெண்மேகங்கள் காணப்பட்டன. அடிவானம் சிவந்திருக்கிறதா என்று தெரியாதவண்ணம் சுற்றிலும் வானுயர்ந்து நின்றன அடுக்குமாடிக் குடியிருப்புகள். பக்கத்துக் கட்டிடத்தின் மாடியில் ஐம்பதுகளில் இருவர் வேக வேகமாக நடந்து கொண்டிருந்தனர்.

“என்னடி பண்ற இங்க..?” படிகளில் ஏறிவந்த சந்தரா கேட்டார்.

“இல்லம்மா.. ஏர்லி மார்னிங் அழகா இருக்கும்னு….”

“ஆமா இது ஊட்டி, கொடைக்கானல் பாரு.. இந்த முள்ளுச்செடிய பாக்க காலங்காத்தால இங்க வந்து நிக்கிறா.. போய் ஆஃபிஸ் கெளம்பு போ.!!”

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *