அண்ணாவின் டைரிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 5,963 
 

என் பெயர் .ஜமுனா.

பதினைந்து வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் நாங்கள் காரில் திருப்பதி சென்றுவிட்டுத் திரும்பும்போது, கார் விபத்துக்குள்ளாகி என் பெற்றோர்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். அப்போது எனக்கு வயது ஒன்பது. என் அண்ணாவுக்கு பன்னிரண்டு.

அதன்பிறகு எனக்கு எல்லாமே என் பாசமிகு அண்ணாதான். வருடங்கள் விரைந்து ஓடிவிட்டன. பணம், வசதிகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனாலும் இரண்டு பேருமே இன்னமும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.

கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கும் என் அண்ணாவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனை நினைத்தால் எனக்கு கோபம் கோபமாக வருகிறது.

எப்போதுதான் நீ கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய் அண்ணா? ப்ளீஸ்…சீக்கிரம் பண்ணிக்கொள்ளேன். உன்னை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. உடனே எனக்கு ஒரு அண்ணி வேண்டும். மாலையில் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேச; செஸ் விளையாட; குளிக்கும்போது எனக்கு முதுகு தேய்த்துவிட; இன்னும் சில ரகசிய விஷயங்களுக்கு எனக்கு உடனே அண்ணி வேண்டும்.

உனக்கு என் தோழி மாலாவைத் தெரியும். உன்னைப் பற்றி அவள் அடிக்கடி விசாரித்துக்கொண்டு இருக்கிறாள். உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஏக்கப் பெருமூச்சு விடுகிறாள். புரிந்துகொள் அண்ணா. அவள் உன்னைக் காதலிக்கிறாள். பெண் மனதைப் புரிந்துகொள். ஆனால் அவளை நீ வதைக்கிறாய்.. ஏன் உனக்கு மாலாவின் காதல் வேண்டாம்? உனக்கு அவளைப் பிடிக்கவில்லையா? மாலா அழகாகத்தானே இருக்கிறாள்? வெறும் அழகு மட்டுமல்ல, என் மாலா பெரிய அறிவாளியும் கூட…

சரி, மாலாதான் உனக்குப் பிடிக்கவில்லை; நம் சுந்தரேச மாமா பெண் மேகலா. அவளையுமா உனக்குப் பிடிக்கவில்லை? உன்மேல் அவள் உயிரையே வைத்திருக்கிறாளாம். ஆனால் அவளிடம் நீ ‘ஸாரி’ சொன்னாயாம். என்னிடம் வந்து அழுதாள்.

மாலா பற்றிப் பேசவே மாட்டேன் என்கிறாய்; மேகலாவை மறுக்கிறாய்; தாமரை மேல் பரிதாபம்தான் படுகிறாய்… உன்னுடைய மனத்தில் நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்? ஏய் அண்ணா, உன்னுடைய மெளனம் என்னைக் கவலையடையச் செய்கிறது.

அண்ணா, இனிமேல் நீ என்னிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இரு. உன்னுடைய சில டைரிகள் என் கையில் அகப்பட்டிருக்கின்றன. நானும் பண்பாடு கருதி அவைகளைப் படிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஸாரி… உன் டைரியிலாவது உன்னைப் புரிந்துகொள்ள முடியுமா என்று உன்னை உன்னுடைய வரிகளிலேயே தேடப் போகிறேன்.

ஆனால் நீ டைரியில் எழுதியிருக்கும் பல விஷயங்கள் எனக்குப் புரியவே இல்லை… அறிவுஜீவிதான் நீ…

அட… மாட்டிக் கொண்டாய் நீ! என்னிடம் வசமாய் மாட்டிக் கொண்டாய்! அது யாரது செளம்யா? அப்ஸரஸா? பெரிய புளியங்கொம்பா? அவளை நீ எங்கே பார்த்தாய்? பஸ்ஸில் பார்த்தாயா அல்லது லஸ்ஸில் பார்த்தாயா? அதைப் பற்றியெல்லாம் நீ எழுதவே இல்லையே ! சில பக்கங்களுக்குப் பிறகு “ஐ அட்மைர் செளம்யா” என்று மட்டும் அச்சுப் பதித்தது போல் எழுதி வைத்திருக்கிறாய்… அப்புறம்?

இதுதான் காதலாக மலர்ந்ததா? சொல்லேன் வாயைத் திறந்து. தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது. டைரியை மறைத்துக்கொண்டு அண்ணாவைத் தேடிப் போகிறேன்.

ஏதோவொரு புத்தகத்தில் ஆழ்ந்திருக்கிறான். தூரத்தில் இருந்து பார்க்க ஒரு சோகச் சித்திரமாகத் தெரிகிறான். சப்தம் செய்யாமல் அவனுக்குப் பின்னால் போய் நின்றுகொண்டு, “உன் செளம்யா வந்திருக்கிறேன்..” என்று அவனுடைய காதில் கிசுகிசுக்கிறேன். அண்ணா அதிர்ந்துபோய் திரும்புகிறான். அவனுடைய முக’பாவ’ த்தில் பயந்து விடுகிறேன்.

“ஸாரி உன் அனுமதி இல்லாமல் உன் டைரியைப் படித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு” – டைரியை அவனிடமே நீட்டுகிறேன். மெளனமாக டைரியைப் பெற்றுக் கொள்கிறான்.

“அண்ணா…”

பேசாமல் இருக்கிறான்.

“அண்ணா…”

தலை குனிந்திருக்கிறான்.

“அண்ணா…”

“உம்…”

“நான் ஒன்று கேட்பேன். பதில் சொல்கிறாயா?”

“கேள் ஜம்மு.”

“செளம்யா யார்?”

“…………………”

“அவள் எங்கே இருக்கிறாள்?”

தலை நிமிர்ந்து பார்க்கிறான்.

“எனக்கு அண்ணியாக அந்த செளம்யா எப்போது வருவாள்?”

அண்ணா லேசாகச் சிரிக்கிறான். தைரியமாக அவனைக் கேட்கிறேன்.

“செளம்யா என் மாலாவை விட அழகாக இருப்பாளா?”

பதில் சொல்லாமல் என் முதுகை அன்புடன் தடவிக் கொடுக்கிறான்.

“எனக்குக் கோபம் வரும் அண்ணா, செளம்யா எப்படித்தான் இருப்பாள் சொல்லேன்!”

“ஸாரி ஜம்மு அதையெல்லாம் நான் இன்னொரு நாள் சொல்கிறேன்.”

“முடியாது. இன்னிக்கே இப்பவே சொல்.”

அண்ணா யோசனையில் மூழ்குகிறான். சில வினாடிகளுக்குப் பின், “உனக்கு நான் என்ன சொல்ல வேண்டும் ஜம்மு?”

“அந்த செம்யாவைப் பற்றி.”

அண்ணா வேகமாகப் போய் அவனுடைய அலமாரியைத் திறந்து இரண்டு டைரிகளை எடுத்து வருகிறான். சில பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறான். பின் லேசான பெருமூச்சுடன் இரண்டையும் என்னிடம் தருகிறான்.

“டைரிகளைப் படித்தபின், என்னைத் திரும்பத் திரும்ப எதுவும் கேட்காதே…புரிந்ததா?”

டைரிகளுடன் என் அறைக்குப் போய் கதவைச் சாத்திக் கொள்கிறேன்.

அவைகளை வெறும் டைரி என்று சொல்லக்கூடாது. அண்ணாவின் சுய சரிதையின் சில அத்தியாயங்கள். பக்கம் பக்கமாக எவ்வளவு எழுதியிருக்கிறான்! காதலிப்பவர்களால் மட்டுமே அவ்வளவு ஆழமாக எழுத முடியும்!

முதல் டைரியின் முதல் பக்கம். பிளாஸ்டிக் உறைக்குள் நிஜமாகவே ஒரு சூரியகாந்தி மலர். சூரிய காந்தி மலரின் பெயர்தான் செளம்யா…அதே பிளாஸ்டிக் உறையில் செளம்யாவின் புகைப்படம். என் அண்ணாவின் செளம்யாதான் எத்தனை அழகு! அவளைப் பார்க்க பார்க்க எனக்குக் கண்ணிமைகள் இமைக்கவில்லை.

டைரியைப் படிக்க ஆரம்பிக்கிறேன்.

‘…முதன் முதலாக அவளை பஸ்ஸில்தான் பார்த்தேன்…”

நான் செளம்யாவின் புகைப்படத்தைப் பார்க்கிறேன்.

‘…திருவல்லிக்கேணி – பாரிமுனை பஸ்…”

நான் மறுபடியும் அவள் புகைப்படத்தை உற்றுப் பார்க்கிறேன்.

அண்ணா தினமும் செளம்யாவைப் பார்த்திருக்கிறான்… இருவரும் நேர்மையாகப் பேசிப் பழகி உயிருக்குயிராய் காதலித்திருக்கிறார்கள். அவள் ஒரு எபிடோம் ஆப் சோபிஸ்டிகேஷன்.

டைரியில் அவனுடைய வரிகளைத் தொடர்கிறேன்.

‘ஷி அட்ராக்டட் மி பை ஹர் இன்டெலக்சுவல் ஆனஸ்டி..’

சொல்வான் சொல்வான்! ஏன் சொல்ல மாட்டான்! அது என்னவாம் பெரிய்ய்ய்ய இன்டெலெக்சுவல் ஆனஸ்டி?

‘ஷி இஸ் மை ஐடியல் கேர்ள்…’

ஆரம்பித்து விட்டான்.

‘ஷி இஸ் மை இன்டெலெக்சுவல் கம்பேனியன்…’

தீவிரமாகி விட்டான்.

டைரிகளை மேலே ஆர்வத்துடன் படிக்கிறேன்.

அண்ணா ஓர் அழகின் அரசியைத்தான் காதலித்திருக்கிறான். ஒரு அருமையான அறிவுச் சுடரைத்தான் நேசித்திருக்கிறான். ஒப்புக் கொள்கிறேன் அண்ணா… என் மாலா உனக்கு ஏற்றவளே இல்லை. செளம்யாவைப் பற்றி நீ சொல்லச்சொல்ல மாலா எங்கேயோ ஒரு புள்ளியாகி விடுகிறாள். மேகலா? உருத்தெரியாமல் மறைந்து போகிறாள்.

அண்ணாவின் இரண்டாவது டைரியை எடுக்கிறேன்.

ஏனோ அதை எடுக்கும்போதே நெஞ்சில் ஒரு விதமான பயம் படர்கிறது. மனதை வருத்தும்படி அதில் எதுவும் இருக்கக்கூடாது என்கிற பிரார்த்தனையுடன் படிக்க ஆரம்பிக்கிறேன்.

நான் எதிர்பார்க்க்கவில்லை. முதல் பக்கத்திலேயே அதிர்ச்சி…

‘…திடீரென குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளால் அவசரமாக செளம்யாவுக்குத் திருமண ஏற்பாடுகள்…’

எனக்கு வியர்க்கிறது. தொடர்ந்து படிக்கிறேன்.

‘… அவளுடைய வீட்டில் சொல்லி உடனே நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று செளம்யா அவசரப்படுகிறாள். அவள் நிலை எனக்குப் புரிகிறது. ஆனால் என்னுடைய நிலை அவளுக்குப் பிடிக்கவில்லை. என் அன்புத் தங்கை ஜம்முவின் திருமணம் முடிந்தபின்தான் என்னால் செளம்யாவைத் திருமணம் செய்துகொள்ள முடியும்…’

முட்டாள்! உனக்கென்ன பைத்தியமா? எப்போது எனக்குக் கல்யாணமாகி நீ கல்யாணம் செய்து கொள்வாய்? கார் விபத்தில் பெற்றோர்களை இழந்து, வலதுகால் கால் ஒடிந்த ஊனமான பெண்ணை எவன் வந்து மணப்பான்?

அழுகையுடன் எனக்குக் கோபமும் வருகிறது. செளம்யாவை என்ன செய்தாய் அண்ணா? அழ விட்டாயா? அலைமோதித் துடிக்க வைத்தாயா? பக்கங்களை அவசரமாகப் புரட்டுகிறேன். பல பக்கங்கள் வெறுமையாக இருக்கின்றன. கடைசியில் சில பக்கங்களில் மறுபடியும் அண்ணாவின் எழுத்துக்கள்…

‘…ஜம்முவின் மனசு எனக்குத் தெரியும். அவளுடைய இளம் வயசு இன்றைய அழகான வாலிபன் ஒருவனைக் காதலிக்க விரும்புகிறது. ஆனால் அவள் காதலை ஏற்க எவனும் தயாரில்லை. அவளுடைய திருமணமும் அவளின் கால் ஊனத்தால் தடைபட்டு நிற்கிறது. அவளுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் வரை நான் திருமணம் செய்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தில் மாறுதல் இல்லை…’

‘… செளம்யா மிகவும் உத்தமமான பெண்தான். நான் பழகிய பெண்களில் அவள் ஒரு தனித்த வார்ப்பு. அவளிடம் என் காதல் அழியக்கூடியதே இல்லை. எதிர் பாராமல் அவளின் குடும்பத்தில் ஏற்பட்ட செல்வச் சரிவை நினைத்து அவள் வடித்த கண்ணீர் இன்னும் என் நினைப்பில் தேங்கிக் கிடக்கிறது.

‘… செல்வச் சரிவைச் சரி செய்யும் உடனடிக் காரியமாக அவளின் திருமணப் பேச்சு வீட்டில் எழுந்தபோது, செளம்யா அடைந்த கலவரம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால் அப்போதும்கூட என் தங்கை ஜம்முவிற்கு மணம் செய்விக்காமல் நான் மணம் புரிவதில்லை என்ற என் முடிவில் மாற்றமில்லை. ஆனால் செளம்யா அசைந்து கொடுத்துவிட்டாள்…

‘…வயதான ஒரு செல்வந்தரை அவளின் பெற்றோர்களுக்காக மணந்து கொண்டாள். செளம்யாவை நான் இழந்திருக்கிறேன். ஆனால் என்னை இன்னும் அவள் இழக்கவில்லை. பலமே இல்லாத செளம்யாவின் இனிய மனிதனாக, பலவீனமே இல்லாத நான் இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பது ஓர் இனிமையான சோகம்தான்…’

அண்ணாவின் டைரி முடிந்திருக்கிறது. பல வரிகளில் கண்ணீர் உறைந்திருக்கிறது. இந்த ஊனப் பெண்ணிற்காகவா ஒரு உத்தமியை அண்ணா இழந்திருக்கிறான்!?

நினைக்க நினைக்க எனக்குத் தாங்கவே இல்லை. அழுகை பீறிட்டு வர வேகமாக அவனுடைய அறையை நோக்கிப் போகிறேன். அண்ணாவை கட்டிப்பிடித்து அழுகிறேன்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *