அணைந்த விளக்கு

 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அப்பான்னா ஆரம்மா?”

“அடுத்த வீட்டுக் கிருஷ்ணனுடைய அப்பா இருக்கிறார் அல்லவா? அவரைப்போல உனக்கும் ஓர் அப்பா இருக்கிறார்.”

“அவர் எங்கே அம்மா?”

“அவர் ஊருக்குப் போயிருக்கிறார்.”

“எப்போ வருவாரம்மா?”

“சீக்கிரத்திலே வந்து விடுவார்.”

அப்படிச் சொல்லும் போது லக்ஷ்மியின் கண்களில் நீர்த்துளிகள் ததும்பின. துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டது.

“வரும்போது எனக்கு என்னம்மா கொண்டு வருவார்?”

“எல்லாம் கொண்டு வருவார், கண்ணே! பெப்பர் மெட்டு , பூட்ஸு, பொம்மை, எலெக்ட்ரிக் விளக்கு, ரெயில் வண்டி எல்லாம் கொண்டு வருவார்.”

அவ்வளவுதான்; குதித்துக்கொண்டு ஜயராமன் வாசலிலே ஓடினான்; “எங்கப்பா வரப்போறா! எல்லாம் கொண்டு வருவா!” என்று குதூகலத்தோடு

கூவிக்கொண்டே தன்னுடைய நண்பர்களுடைய கூட்டத்திலே கலந்து விட்டான்.

***

லக்ஷமிக்கு அவன் ஒரு செல்வக் குழந்தை. அவளுடைய புருஷன் வேலை கிடைக்காமல் திண்டாடினான். கல்யாணமாகிப் பிள்ளையும் பெற்றுவிட்டான். வேலையில்லாமல் இருந்தால், குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள்? லக்ஷ்மி பிறந்தகத்துச் செல்வி. ஆகையால் தகப்பனார் வீட்டிலேயே இருந்தாள். இருந்தாலும் எல்லோருடைய புருஷர்களும் வியாபாரமோ, உத்தியோகமோ செய்து ஸம்பாதித்து வாழும் போது தன் புருஷன் மாத்திரம் வெட்டியாளாக இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன் தான் என்ன செய்வான்!

குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆயிற்று. லக்ஷ்மி யின் கணவன் இல்வாழ்க்கையின் இனிமையை முற்றும் உணரமுடியவில்லை. பிறருடைய வீட்டில் இருந்துகொண்டு சாப்பிட்டு வந்தால் மனம் உடைந்து போகாதா? “திரைகட லோடியும் திரவியம் தேடு” என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். கடல் கடந்தேனும் ஸம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று; நாளடைவிலே அது முறுகி வளர்ந்தது.

துணிந்து ரங்கூனுக்குப் புறப்பட்டுவிட்டான். புறப்படும் போது, “கடவுளுடைய அருளால் எனக்கு ஏதாவது நல்ல வேலை கிடைக்குமென்றே நம்புகிறேன். கிடைத்த பிறகு உன்னையும் குழந்தையையும் அழைத்துக் கொள்கிறேன்” என்று சொல்லிப் போனான்.

அங்கே ஒரு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தான். அவ்வளவு நாள் ஓடிந்து போயிருந்த அவனது மனம் ஊற்றமடைந்தது. ‘இனி நாமும் உலகத்தில் மனிதனாகப் பிழைக்கலாம்’ என்ற தைரியம் வந்தது. ‘லக்ஷ்மியை அழைத்து வரலாம்’ என்று எண்ணினான். ‘இன்னும் இரண்டு வருஷங்கள் தனியாக இருந்தால் கையில் கொஞ்சம் பணம் சேரும். அப்புறம் அழைத்து வந்தால் நல்ல வீடாக வாங்கிக்கொண்டு சுகமாகக் குடித்தனம் செய்யலாம்’ என்று மற்றொரு நினைவு தோற்றியது. ‘இவ்வளவுகாலம் பெண்டாட்டியோடு தானே இருந்தோம்? இப்பொழுது சிலகாலம் பிரிந்து இருப்போமே. என்ன முழுகிப்போகிறது?’ என்று கருதினான். சில மாதங்கள் கழித்து வந்து அழைத்துப் போவதாகத் தன் மனைவிக்குக் கடிதம் எழுதி விட்டான்.

ஆறு மாதங்கள் ஆயின. லக்ஷ்மியின் கணவன் வரவில்லை. தேளுக்குப் பயந்து பாம்பின் வாயில் அகப்பட்டது போல, உத்தியோகமின்மைக்குப் பயந்து பிரிவுத்தீயில் அகப்பட்டுக்கொண்ட லக்ஷ்மியின் சிந்தை அலைகடல் துரும்பு போல நிலைகலங்கித் தத்தளித்தது.

“நீங்கள் இங்கே இருந்தபோது அடிக்கடி நான், ஏதாவதொரு வேலை பார்க்க வேணுமென்று தொந்தரவு செய்தேன்; அதற்கு இது அபராதமா? என்னை இனிமேல் சோதனை செய்யவேண்டாம். உங்களுடைய குழந்தை எவ்வளவு அழகாக இருக்கிறான்! எப்படி விளையாடுகிறான்! அவனுடைய மழலையைக் கேட்க வேண்டாமா? எனக்காக நீங்கள் புறப்பட்டு வராவிட்டாலும், அவனுக்காகவாவது வாருங்கள்” என்று

அவள் கடிதம் எழுதினாள்.

“அடி பயித்தியமே; என் குழந்தையைப் பார்க்க எனக்கு ஆவல் இல்லாமலா இருக்கும்? இங்கே எனக்கு ‘லீவு’ கிடைக்கிறது கஷ்டமாக இருக்கிறது. தவிர, இங்கே நானே இருந்து கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம் ஒன்று இருக்கிறது. அது முடிந்தால், எங்கள் கம்பெனி துரை எனக்குச் சம்பளம் அதிகமாகப் போடுவான். நான் இங்கே இருந்து அந்தக் காரியத்தைப் பூர்த்தி செய்து எனக்குச் சம்பளம் அதிகமானால், அது நம் இருவருக்கும் நல்லதல்லவா? அதனால் இன்னும் சில மாதங்கள் பொறுத்திரு” என்று பதில் வந்தது.

பின்னும் ஆறு மாதங்கள் ஆயின; “ஒரு வருஷம் ஆய்விட்டதே; உங்கள் மனம் இரங்கவில்லையா? உங்களுக்கு நான் என்ன குற்றம் இழைத்து விட்டேன்!” என்று எழுதினாள் லக்ஷ்மி,

ஒரு மாதத்திற்கு அப்புறம், “நான் இப்பொழுது சுற்றுப் பிரயாணத்தில் இருக்கிறேன். இந்தப் பிரயாணம் இன்னும் மூன்று மாதங்கள் செய்ய வேண்டியிருக்கும். அப்புறம் அங்கே வருவதைப் பற்றி யோசித்துக் கடிதம் எழுதுகிறேன். குழந் தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்” என்று விடை வந்தது.

ஒரு வருஷத்துக்கப்பால் இரண்டாவது வருஷம் சென்றது; மூன்று வருஷங்களும் ஆய்விட்டன. இப்பொழுது ஜயராமன் தன்னுடைய ஐந்தாவது பிராயத்தில் விளங்குகிறான். அவனுடைய இன்னிசை மழலைச் சொற்களைக் கேட்கும் போதெல்லாம் லக்ஷ்மி கண்ணீர் விடுகிறாள் ; ‘இதை அவர் கேட்பதற் கில்லையே!’ என்று விம்முகிறாள்.

இந்த நான்கு வருஷங்களாக அவ்விருவரிடையேயும் கடிதப் போக்குவரத்துக்குக் குறைவொன்று மில்லை. அக்கடிதங்களிலே பிரேம் வாசகங்களுக்கும் குறைவில்லை. தன் காதற் கணவனுடைய கடிதங்களை அருமையாகக் காப்பாற்றி வந்தாள் லக்ஷ்மி. ஒவ்வொரு கடிதமும் வரும்போது அவள், “நான் அடுத்த கப்பலில் வருகிறேன் என்று எழுதியிருக்கக் கூடாதா?” என்று ஆர்வத்தோடு பார்ப்பாள். கடைசிவரி வரையில் படித்து விடுவாள். தான் வராததற்கு ஒரு காரணத்தை அதில் எழுதியிருப்பான் அவள் கணவன். அதோடு அடுத்த ‘வாய்தா’வையும் எழுதியிருப்பான். அவள் என்ன செய்வாள்! ஒரு பெருமூச்சினால் அந்தக் கடிதத்தை அலைத்து இரண்டு கண்ணீர்த்துளிகளால் முத்திரையிட்டுத் தன்னுடைய சேமப் பெட்டியிலே பழைய கடிதங்களோடு வைப்பாள். இப்படி எத்தனை தரம் ஏமாந்து விட்டாள்!

***

“அம்மா தபால்; லக்ஷ்மியம்மாளுக்கு” என்றான் தபால்காரன். தன் தாய்க்கு முன் ஓடிச் சென்று அதை வாங்கி அம்மாவிடம் கொடுத்தான் குழந்தை. பழையபடி நாயகனை எதிர்பார்க்கும் பேரார்வத்தோடு அதைத் திறந்து படிக்கத் தொடங்கினாள். அதில் என்ன இருக்கிறது? அவள் விழியிலே எதற்காக இவ்வளவு ஒளி? அவள் முகத்திலே என்ன களிப்பு? இதென்ன? திடீரென்று அந்த முகத்திலே மேகத்திரை போட்டது போல் ஒரு சோர்வு உண்டாவானேன்? எதற்காக அவள் தொண்டைக்குள் எச்சிலை விழுங்கு கிறாள்?

குழந்தை வாயில் விரலை வைத்துக்கொண்டு தன் தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றான். அந்த முகத்திலே திடீரென்று தோன்றிய ஒளியின் அர்த்தத்தையும், அடுத்த கணமே அது மறைந்து விட்ட காரணத்தையும் அவன் எப்படி அறிவான்!

அவன் வரப்போகிறான், உண்மை. இதுதான் அவள் முகத்திலே முதலில் சோபையை உண்டாக்கி யது. ஆனால் -? அவனோடு அவனுடைய பழைய கட்டுடல் வரவில்லை; க்ஷயரோகத்தால் குன்றிப்போன தேகந்தான் வருகிறது! “ஐயோ கடவுளே!” என்று அவள் தலையிலே கையை வைத்துக்கொண்டாள்.

“கண்மணி, உனக்கு இனிமேல் மறைப்பதில் பிரயோசனம் இல்லை. வேலை மிகுதியினால் என் உடம்பு கெட்டு விட்டது. அங்கே சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த இந்தத் தேகம் இங்கே உள்ள புதிய சீதோஷ்ணஸ்திதியையும் அலைச்சலையும் தாங்கவில்லை. போன வருஷத்திலேயே எனக்கு க்ஷயரோகம் உண்டாயிற்று. தக்க மருந்துகள் சாப்பிட்டு நோய் நீங்கிய பிறகு அங்கே வரலாமென்று நினைத்தேன். ஆனால் இது என் உயிருக்கு யமனாக வந்திருக்கிறது. இதுவரையில் இதை உனக்கு ஒளித்திருந்தேன். இனிமேல் ஒளிப்பதனாற் பிரயோசனம் இல்லை. என்னுடைய வாழ்வின் காலம் குறுகிக் கொண்டு வருகிறது. இதைத் தெரிவிக்காமலே அங்கே வந்துவிடலாமென்று எண்ணினேன். எப்படியானால் என்ன? எப்படியும் தெரியத்தானே போகிறது? திடீரென்று தெரிவதைவிட முன்னாலே தெரிவது சிறி தளவு ஆறுதலாக இருக்கும். என்னுடைய இறுதிக் காலத்திலாவது நான் உனக்கருகில் இருக்கும்படி ஆண்டவன் அருள் புரிவானென்று எண்ணுகிறேன். அதோடு, ஏழையாகப் பிறர் வீட்டு உணவை உண்டு சாகவேண்டிய நிலையில் நான் இப்பொழுது இல்லை யென்பதும் எனக்குத் திருப்தியை விளைவிக்கிறது. நம்முடைய குழந்தைக்கு, என் காலத்துக்குப் பின் பிறர்கையை எதிர்பாராதபடி வாழ்வதற்கேற்ற பொருள் வசதியும் என்னிடம் இப்பொழுது உண்டென்பதை உனக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நமக்காக ஒரு தனி வீடு பார்த்து ஏற்பாடு செய்யும்படி உன் தமையனிடம் சொல். உன்னை விரைவிலே பார்க்கவேண்டும் என்ற அவா நிமிஷந்தோறும் விஷம்மாதிரி ஏறிக்கொண்டே இருக்கிறது.” இப்படி அவன் எழுதியிருந்தான். லக்ஷ்மியின் கனவுலகம் மறைந்து போயிற்று. அதில் அவள் கண்ட மாடமாளிகைகளும் சிங்கார வனங்களும் இன்ப ஊற்றுக்களும் பிரளய கால வெள்ளத்திலே மூழ்கடிக்கப்பட்டன. அவன் வருவான், வருவானென்று அவள் எதிர்பார்த்திருந்தாள்; வரவில்லை. இப்பொழுதோ அவன் வரப்போகிறான்; ஆனாலும் அவளுக்கு மகிழ்ச்சியில்லை.

***

வந்துவிட்டான்; இந்த வியாதியின் அழிவுச் சக்திதான் எத்தனை கொடிது! அழகு, வசீகரம் கட்டு எல்லாம் அமைந்திருந்த அவனுடைய தேகம் இப்பொழுது உளுத்துப்போய் எலும்பும் தோலுமாக இருக்கிறது. பெரிய பெரிய வைத்தியர்கள் பார்த்தார்கள். “ஏது? மிஞ்சி விட்டது” என்று எல்லோரும் சொல்லிவிட்டார்கள்.

அவன் வரும் போது ஜயராமனுக்கு எத்தனையோ அபூர்வ வஸ்துக்கள் கொண்டுவந்தான்; பர்மியப் பொம்மைகள், ரங்கூன் மிட்டாய்கள், சீனதேசத்துச் சாமான்கள் எல்லாம் கொண்டு வந்தான். அருமையான வேலைப்பாடுகளையுடைய ஓர் எலெகட்ரிக் டார்ச்சு விளக்கும் கொண்டுவந்தான். அதிலேயுள்ள பொத் தானை அமிழ்த்தினால் பளிச்சென்று வெளிச்சம் வீசும். வீசும்போது ஜயராமனுக்கு உண்டாகும் ஸந்தோஷம் இவ்வளவு அவ்வளவு அல்ல.

தன்னுடைய தாய் ஸதா அப்பா அப்பா என்று தனக்குச் சொல்லிக் கொடுத்த மந்திரத்தினால் குறிக் கப்படும் புருஷன், ஒரு வற்றல் உடம்புடைய நோயாளி யென்பதை அந்தக் குழந்தை அறிந்தபோது அவனுக்கு அந்த அப்பா விடம் அதிகக் கவர்ச்சி உண்டாகவில்லை. ‘அப்பா’ மட்டும் குழந்தையை எத்தனையோ அன்போடு கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டுத் தழுவிக் கொண்டான். குழந்தை அந்த அன்புக்குச் சரியான மதிப்பை அளிக்கவில்லை. அவனுக்கு அப்பா’ என்றாலே புரியவில்லை. ஆனால் அப்பாவைக் காட்டிலும் அப்பா கொண்டுவந்த பண்டங்களிலே அவன் குழந்தையுள்ளம் ஈடுபட்டது. அவைகளுக்குள், அந்த டார்ச்சு’ விளக்கிலே அவன் தன்னையே இழந்து மயங்றான். தன்னுடைய சகாக்களில் ஒருவர் தவறாமல் யாவருக்கும் அதைக் கொண்டு போய்க் காட்டினான்.

“இங்கே பார்” என்பான். அடுத்த வீட்டுப் பையன் பார்க்கும் போதோ அவன் கண்ணுக்கு நேரே அந்த விளக்கைத் திடீரென்று ஏற்றுவான். பளிச் சென்று அப் பையன் கண்ணிலே வெறியோடும் “அப்பாடா!” என்று அவன் கூவுவான். அந்தக் கூச்சலிலே ஜயராமனுக்கு ஓர் ஆனந்தம்.

“இது யார் கொடுத்தார்?”

“அப்பா !”

“அப்பா யார்?”

“இதைக் கொடுத்தாரே அவர்.”

இவ்வளவுதான் அவனுக்கு அப்பாவைப்பற்றித் தெரியும்.

***

அந்தி வேளை. சூரியன் கடலிலே மறைந்தான். வீடுகளிலே எல்லோரும் தீபம் ஏற்றினார்கள். ஜயராமன் தன்னுடைய அம்மா சொற்படி, டார்ச்சு விளக்கை ராத்திரியிலேதான் அழுத்தி வேடிக்கை பார்ப்பது வழக்கம். அன்றைக்கு வீட்டில் ஒரே குழப்பம். லக்ஷ்மி துயரமே உருவாக இருக்கிறாள். அவளுடைய கணவனது உயிர் யமனுடன் போராடிக் கொண்டிருக்கிறது.

ஜயராமன் கையிலே ‘டார்ச்சு’ விளக்கை எடுத் தான். அழுத்தினான். விளக்கு ஏற்றிக்கொள்ளவில்லை.

அது அவிந்துவிட்டது. அதே சமயத்தில் லக்ஷ்மியின் மாங்கல்ய விலாஸத்துக்கு ஆதாரமாகிய விளக்கும் அவிந்தது. அவள் கணவன் நோய்ப்புழுக்களால் அரிப் புண்டு பாழ்பட்ட கும்பியாகிய உடம்பினின்றும் விடுபட்டான். ஒரே அழுகை.

“ஐயையோ! இந்த விளக்கு அணஞ்சுபோச்சு. இதை ஏத்தித் தாயேன்” என்று ஜயராமன் தன் தாயினுடைய முன்றானையைப் பிடித்து அழத் தொடங்கினான். எல்லோரும் அழும்போது அவனுக் கும் அழத் தோன்றியது. அதற்கு ஒரு காரணமும் ஏற்பட்டது. பலமாக அழத் தொடங்கிவிட்டான். இருதயத்தைப் பிளந்து கொண்டோடிய துயரத்தினால் அலைப்புண்ட அக்கூட்டத்தினருடைய அழுகையின் பெருங் கோஷத்திலே கள்ளங் கவடற்ற அந்தக் குழந்தையின் சிறு குரலும் கலந்து ஒன்றுபட்டது. அவர்கள் ஒரு விளக்கு அணைந்து விட்டதென்று அழுகிறார்கள்; அவனும் ஒரு விளக்கு அணைந்ததென்று தான் அழுகிறான்!

- கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
[ குறிப்பு;-சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் ஒரு பெரிய நகரமாக இருந்தது. அங்கே கரிகாலன் காலத்தில் கப்பல் வியாபாரம் எவ்வளவோ சிறப்பாக நடந்துவந்த தாம்.கலங்கரை விளக்கம்,சுங்கமண்டபம் முதலிய இடங்கள் அங்கே இருந்தனவாம். இப்போது உள்ள காவிரிப் பூம்பட்டினத்தில் மீன்படகையும் வலைஞர் குடிசைகளையுமே பார்க்க ...
மேலும் கதையை படிக்க...
"கல்யாணி, உனக்கு இன்னும் பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகவில்லையா? எவ்வளவு நாழிகை அப்படியே உட்கார்ந்திருப்பாய்? எப்போது குளிக்கிறது, எப்போது சாப்பிடுகிறது?" "இன்றைக்குத்தான் பள்ளிக்கூடம் இல்லையென்று சொன்னேனே, அம்மா. எங்கள் பழைய தலைமை ஆசிரியர் இறந்து போனார். அதற்காக விடுமுறை." "மனிதர்கள் தினமுந்தான் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக ...
மேலும் கதையை படிக்க...
வழக்கம்போல அன்று தங்கவேலன் தன் எசமானர் குழந்தைகளைப் பக்கத்துத் தெருவில் இருந்த பள்ளிக் கூடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய்விட்டான். சரியாகப் பத்து மணிக்கு அவன் நாள்தோறும் சாமிநாத முதலியாருடைய- அவர்தாம் தங்கவேலனுடைய எசமானர் - அவருடைய ஏழு வயசுப் பையனையும் அவன் தங்கையையும் ...
மேலும் கதையை படிக்க...
சோழனுடன் ஏற்பட்ட மன வேறுபாட்டால் கம்பர் தம்முடைய கவிதையே துணையாகப் புறப்பட்டு விட்டார்.'எங்கே போவது? என்ன செய்வது?' என்ற தீர்மானம் இல்லாமல் அகில லோகமும் தமக்கு அடிமையென்ற நினைவு கொண்டவரைப் போலச் சோழநாட்டை விட்டு வடக்கே பிரயாணம் செய்யத் தொடங்கினார். அவருடைய ...
மேலும் கதையை படிக்க...
பிசிர் என்பது ஒரு சிறிய ஊர். ஆந்தையார் சிறந்த புலவர். அவர் பிறந்தமையால் அவ்வூருக்கே ஒரு தனிச் சிறப்பு உண்டாயிற்று. ஆந்தையார் பெயரோடு பிசிரின் பெயரும் ஒட்டிக்கொண்டது. பிசிராந்தையாரென்றே இன்றும் அப் புலவரை வழங்குகின்றோம். புலவர் பெருமான் புதிய பாண்டிய மன்னனைக் கண்டுவரலாமென்று ...
மேலும் கதையை படிக்க...
1 தேவி கன்னியாகுமரி அழகே வடிவமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். பராக்கிரம பாண்டியன் அம்பிகையைக் கண் கொட்டாமல் பார்த்தபடியே இருந்தான். அர்ச்சகர் லலிதாஸஹஸ்ர நாமத்தைத் தொடங்கினார். பாண்டிய மன்னனுடன் வந்தவர்களில் சிலர் மட்டும் கோயிலின் அர்த்த மண்டபத்தில் நின்று கொண்டிருந்தார்கள். தேவியின் மூக்குத்தி விளக்கொளியில் ...
மேலும் கதையை படிக்க...
தென்னாட்டிற்கு அகத்திய முனிவர் புறப்பட்டார் தாம் போகிற நாட்டிலே வாழ்வதற்கு அந்த நாட்டு மொழி தெரிய வேண்டாமா? சிவபெருமானிடத்திலே தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். போகிற இடத்தில் காடும் மலையும் அதிகமாக இருப்பதால் தமக்குத் தெரிந்தவர்கள் வேண்டும். 'குடியும் குடித்தனமு'மாக வாழ்வதற்கு வேண்டிய சௌகரியங்களை ...
மேலும் கதையை படிக்க...
எங்கள் பாட்டி எனக்கு அடிக்கடி கதை சொல்லுவாள். ராமன் கதை, கிருஷ்ணன் கதை, எல்லாம் சொல்வாள். "தசரத மகாராஜாவுக்கு மணிமணியாகக் குழந்தைகள் பிறந்தார்கள். ரத்னம் போல் ராமன் பிறந்தான்" என்று கதை சொல்வாள். கிருஷ்ணன் கதையைச் சொன்னாலும், 'அவன் மணிப்பயல்' என்று ...
மேலும் கதையை படிக்க...
கிழவியின் தந்திரம்
(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிவகங்கைச் சம்ஸ்தானத்தில் மருது சேர்வைக் காரர் என்ற ஜமீன்தார் ஆட்சி புரிந்து வந்தார். வீரத்திலும் கொடையிலும் புலவர்களைப் போற்றும் திறத்திலும் அவர் சிறந்து விளங்கி னார். அதனால் அவரை ...
மேலும் கதையை படிக்க...
கடவுள் மறுப்புக் கட்சிக்கு ஆட்கள் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். மார்கழிமாதப் பஜனைக்கு எவ்வளவு பேர் கூடவார்களோ அந்தக் கணக்குக்கு மேல் ஜனங்கள் இந்த கூட்டத்தில் கூடினார்கள்; அதில் வேடிக்கை என்னவென்றால், மார்கழி பஜனையில் சேர்ந்து கொண்டு தாளம் போட்டவர்களே இந்தக் கூட்டத்திலும் ...
மேலும் கதையை படிக்க...
நிர்வாண தேசம்
பெண் உரிமை
திருட்டுக் கை
நெடுஞ்சுவர்
யானைக் கதை
குமரியின் மூக்குத்தி
தொல்காப்பியரின் வெற்றி
நம்முடைய நேரு
கிழவியின் தந்திரம்
உள்ளும் புறமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)