அணைக்க மறந்ததேனோ!

 

“ஏய்! எங்கே புறப்படறே? சாப்பிட்ட தட்டைக் கழுவக்கூட முடியலியோ மகாராணிக்கு?” அவசரமாக வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த அஞ்சனா பதைத்துப்போய், குரல் கேட்ட திசையை நோக்கித் திரும்பினாள். வசவு தொடர்ந்தது: “இந்த திமிரு பொறுக்க முடியாமதானே விரட்டி விட்டுட்டுட்டான் அந்த மகானுபாவன்!”

`யாரும் என்னை விரட்டலே. பொறுக்க முடியாம, நானேதான் விலகி வந்துட்டேன்!’ என்று பதில் சொல்லிப் பயனிலை. அப்பா பேசும் ரகம். கேட்கும் ரகமில்லை.

காலை எட்டரை மணிக்குமேல் மார்க்கெட்டுக்குப் போய், முன்யோசனையின்றி அப்பா வாங்கிவந்த கீரையை ஆய்ந்து, வாழைப்பூவின் ஒவ்வொரு இதழின் நடுவிலும் இருந்த `திருடனை’ கிள்ளி எறிந்துவிட்டு, நறுக்கி, வேகவைத்து .. அப்பப்பா! சமைத்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது அவளுக்கு.

இனி, பஸ்பிடித்துப் போக வேண்டும். அவள் வேலை பார்க்கும் வீடியோ கடைக்கருகே ஏதாவதொரு சாப்பாட்டுக்கடையில் மத்தியான உணவைப் பார்த்துக்கொள்ளலாம் என்றால், அதற்கு ஒரு மணிவரை காத்திருக்க வேண்டும். அதோடு, அங்கு தண்டம் அழும் காசுக்கு வீட்டில் மூன்று நாட்கள் சாப்பிடலாம்.

போன வாரமே முதலாளி கண்டிப்பாகச் சொல்லிவிட்டார், “ஒனக்கென்னம்மா, சரியா எழுதக்கூடத் தெரியலே. இந்த வேலைக்கு ஒன்னைவிட்டா வேற ஆளா கிடைக்காது?” என்று இரைந்துவிட்டு, “ஏதோ, ஒங்கப்பா ரொம்ப கேட்டதாலதான் ஒன்னை வேலைக்கு எடுத்தேன்!” என்று, தனது பரோபகார சிந்தனையையும் சமயம் பார்த்துப் பறைசாற்றிக்கொண்டார்.

இப்போது சாப்பிட்ட தட்டைக் கழுவும் நேரத்தையாவது மிச்சப்படுத்தலாம் என்று பார்த்தால், அதற்கும் வழியில்லையே!

செருப்பைக் கழற்றிவிட்டு, புடவைத் தலைப்பை இழுத்திச் செருகிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். சுவருடன் ஒட்டியபடி, பயமே உருவாக நின்றிருந்த நித்யா தாவி அவளது இடுப்பைக் கட்டிக்கொண்டாள்.

“விடுடி! ஏற்கெனவே லேட்டாயிடுச்சுன்னு நான் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன். இவ ஒருத்தி!” முரட்டுத்தனமாக மகளின் கைகளை விலக்கியபோது, தானும் அவளைப்போலவே அப்பாவின் பெரிய குரலைக் கேட்டு பயந்து, அவரைத் தன் வாழ்விலிருந்தே விலக்க முயற்சிப்பதுபோல் அம்மாவின் முழங்காலில் முகத்தைப் பதித்துகொண்டது நினைவில் எழுந்தது.

அப்போதெல்லாம் அம்மா தன் முதுகை ஆதுரமாகத் தடவியோ, வேறு எந்த வழியிலோ ஏன் தன் பரிவைக் காட்டியதில்லை?

பன்னிரண்டு வயதானபோது, பள்ளிப் பரீட்சையில் குறைவான மதிப்பெண்கள் வாங்கிய மாபெரும் குற்றத்துக்காக, குடித்த போதையில் என்ன செய்கிறோம் என்றே புரியாது, அவள் முகத்தில் கத்தியில் அவர் கீறி, ரத்தமும் வடிய ஆரம்பித்தபோது, ஓடிப்போய் அத்தையைக் கட்டிக்கொண்டாள் — பெண்ணுக்குப் பெண் ஆதரவாக இருக்கமாட்டாளா என்ற நப்பாசையில்.

“ஒங்க மாமாவும் ஒங்கப்பன்மாதிரி முன்கோபிதான்! நான் வாங்காத அடியா, ஒதையா! நாப்பது வருசமில்ல பட்டிருக்கேன்!” என்று பெருமை பேசியவள், “இப்பவே பழகினா, நீ கட்டிக்கப்போறவன் என்ன செஞ்சாலும் தாங்கிக்க முடியுமில்ல!” என்று வரட்டுத் தத்துவம் வேறு பேசினாள்.

அதன்பின்னர் ஓர் ஆசிரியை , `முட்டாள்! வீட்டுப்பாடத்தில் இவ்வளவு தப்பா? நீங்க எல்லாம் ஏன் படிக்க வர்றீங்க?’ என்று திட்டியபோது, அவமானமோ, வருத்தமோ எழவில்லை. வீட்டில் அப்பா கொடுத்த தண்டனைகளால் தான்தான் எவ்வளவு திடமாக இருக்கிறோம் என்ற அற்ப பெருமைகூட உண்டாயிற்று.

`ஒழுக்கம்’ என்ற பெயரில் தாராளமாக தண்டனைகள் வழங்கிய தம் தந்தைமார்களைப்பற்றி சகமாணவிகள் பேசுகையில், `நாம் மட்டும் தனியாக இல்லை!’ என்று ஆறுதலாக இருந்தது. இடுப்பு பெல்டாலும், குடைக் காம்பாலும் அடிப்பார்களாமே! ஐயோ!

அவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசப்பட்டிருந்த சாந்தினியை ஏக்கத்துடன் பார்க்கத்தான் முடிந்தது அப்பெண்களால்.

ஆனால், அப்பெண்ணைத் தங்களிடமிருந்து விலக்கிவைத்து, அவளைப்பற்றி மட்டமாகப் பேசிய பிற பெண்களுடன் சேர அஞ்சனாவால் முடியவில்லை. அன்று தமிழ் வகுப்பில் டீச்சர் சொல்லவில்லை, `நாம் எந்தப் பிறவியிலோ செய்த பாவ புண்ணியங்களுக்கான பலனை இந்த ஜன்மத்தில் அனுபவிக்கிறோம்,’ என்று?

பள்ளி முடிந்ததும், அவளுடைய தோளைப்பற்றி அணைத்து, இன்முகத்துடன் பேசியபடி காருக்கு அழைத்துப்போகும் தந்தையைப் பெற்றிருக்க சாந்தினி முன்பிறவியில் என்ன நற்காரியம் செய்திருப்பாளோ!

`நான் நன்றாகப் படித்தால், அப்பாவும் இப்படி அன்பாக அணைப்பாரோ?’ என்ற ஆசையுடன், உழைத்துப் படித்தாள். ஆனால், பரீட்சை எழுத பேனாவைக் கையில் எடுத்தபோது, `அப்பா கத்தியால முகத்தைக் கிழிப்பாரா, எரியும் சிகரெட்டால உட்காரும் இடத்தில் சூடு வைப்பாரா, இல்லே, சாப்பாடு, தண்ணி இல்லாம இரண்டு நாள் ரூம்பில போட்டு அடைச்சுடுவாரா?’ என்று முன்பு பெற்றிருந்த தண்டனைகள் ஒவ்வொன்றாக சுழன்றெழ, மூளையை ஏதோ அடைத்தது போலிருந்தது. படித்தது எதுவும் ஞாபகம் வரவில்லை.

பெண்ணாய் பிறந்து தொலைத்துவிட்ட அஞ்சனாவை பதினாறு வயதுவரை வளர்த்ததே பெரிய காரியம் என்பதுபோல், அவளைத் திருமணம் செய்துகொடுக்க அவசரப்பட்டார் அப்பா.

தான் பார்த்த மாப்பிள்ளை சூதாடி, போதைப்பித்தன் என்று நிச்சயதார்த்தம் ஆகுமுன்னரே சந்தேகமறத் தெரிந்தபின்னரும், “படிப்பும் வரலே இந்தக் கழுதைக்கு! இந்தக் காலத்தில எவன்தான் யோக்கியன்? சின்ன வயசு! அதுவும் ஆம்பளை! கொஞ்சம் முன்னேபின்னேதான் இருப்பான்!” என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

குழப்பத்துடன் மணவறையில் அமர்ந்த அஞ்சனா ஆறுமாதங்களுக்குள்ளேயே தாய்வீடு திரும்பினாள், கண்ணீரும், வயிற்றுக்கருவுமாக. கணவன் என்ன கொடுமை செய்தாலும் பொறுத்துப்போனவள், அவன் தனது பழக்கங்களுக்காக வட்டி முதலைகளிடம் கடன் வாங்கி, அதற்கு ஈடாக அவளைப் போகச் சொன்னபோது, அதற்கு உடன்பட முடியவில்லை.

“கண்டிப்பா அந்த வீட்டுக்கு திரும்பிப் போகமாட்டேன். வற்புறுத்தினீங்கன்னா, விஷம் குடிச்சுடுவேன்!” அவள் வாழ்க்கையில் துணிந்து பேசிய ஒரே வசனம்.

“இது ஒரு மண்டு! சாமர்த்தியம் இருந்தா, கட்டினவனை நல்லவிதமா மாத்தியில்ல இருக்கணும்!” என்று ஓயாமல் அப்பா ஏசியபோது, வெறித்த பார்வையுடன் நிற்கத்தான் அவளால் முடிந்தது.

வெறித்த பார்வையுடன் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அஞ்சனா, “ஹேய்! நீ அஞ்சனாதானே?” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

புரோட்டான் வீரா காரில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தாள் அப்பெண். அப்பாவின் தோழமையும், அன்பும் ஒருங்கே கிடைக்கப்பெற்ற அதிர்ஷ்டசாலி!

முகமெல்லாம் சிரிப்பாய், “ஏறிக்க, அஞ்சனா. எங்கே போகணும்?” என்று அவள் அழைத்தபோது, அவள் பெயர்கூட ஞாபகம் இல்லையே என்ற சிறு அவமானம் கிளர்ந்தது அஞ்சனாவுக்குள்.

இவளைப் பார்த்து, பதினைந்து வருடங்கள் ஆகியிருக்காது? ஒன்றாய் படித்த தோழியை பிறகு சந்திக்கவேயில்லை. அப்போதுகூட அவளுடன் நெருங்கிப் பழகினதாக நினைவில்லை. இருந்தாலும், இன்முகம் காட்டுகிறாள்!

யாருமே இதுவரை தன்னைப் பார்த்து இப்படிப் பூரிப்படைந்ததில்லை என்ற சிறு எண்ணம் கசப்பாக எழுந்தது.

“நான் எங்கப்பா கம்பனியிலேயே வேலையா இருக்கேன். நீ?” அவளுடைய கலகலப்பு, பரிவு, அஞ்சனாவிற்குள் தடைப்பட்டிருந்த எதையோ திறந்துவிட்டது.

குனிந்த தலை நிமிராது, கைகளைப் பிசைந்தபடி, தன் வாழ்க்கை என்ற அவலத்தை சொல்லி முடித்தாள்.

சில நிமிடங்கள் அங்கு கனத்த மௌனம். தெருவில் பிற கார்கள் விரையும் சத்தமோ, பொறுமைகுன்றிய காரோட்டிகளின் ஹார்ன் ஒலியோ இருவருக்கும் கேட்கவில்லை.

அதிர்ச்சியிலிருந்து சற்றே விடுபட்டு, “கெட்டவன்னு தெரிஞ்சும், ஒன்னை அவனுக்குக் கட்டிவெச்சாங்களா!” தன்னைத்தானே கேட்டுக்கொள்வதுபோல பேசினாள் தோழி. முகத்திலுள்ள தசைகளையெல்லாம் சுருக்கினாள். பிறகு, “ஒரு குழந்தையா?” என்று விசாரித்தாள்.

“ஆமா. அது வயத்திலே இருக்கிறப்போவே திரும்பி வந்துட்டேனே!”

“இன்னொரு பெண்ணா?”

“என்ன கேக்கறே? ஒண்ணுதான்!”

“இல்லே, ஒங்கப்பா வாயிலே போட்டு மெல்ல இன்னொரு பெண்ணான்னு கேட்டேன்!”

சட்டென அதிர்ந்தாள் அஞ்சனா. அன்று காலை மகள் நின்றிருந்த நிலை நினைவு வந்தது.

முன்பெல்லாம் எது யோசிக்கவும் தயங்கி, அதை அப்பா ஏற்பாரா, வாய்வார்த்தையாகத் திட்டுவாரா, இல்லை அடிப்பாரா என்று பயந்த சுபாவம் முதன்முறையாக ஆட்டங்கண்டது.

அப்பா வன்முறையைப் பிரயோகித்தபோதெல்லாம், `என்மேல் தப்பு இருப்பதால்தானே இப்படியெல்லாம் செய்கிறார்!’ என்று பழியை நம் மேலேயே போட்டுக்கொண்டோமே! கணவன் கொடுமைப்படுத்தியதைத் தாங்கமுடியாது பிரிந்து வந்ததற்கு, `மண்டு,’ `தண்டச்சோறு’ என்று பட்டப்பெயர்கள் வேறு!

இப்போதுதான் அஞ்சனாவிற்கு இன்னொன்றும் புரிந்தது. அசடு, பைத்தியம் என்றெல்லாம் அவர் வர்ணித்த அம்மா அப்படி ஒன்றுமில்லை, அதைச் சொல்லிச் சொல்லியே அவளை நம்ப வைத்துவிட்டார்!

அதுதான் அம்மா சில வருடங்களாகவே ஒருமாதிரி ஆகிவிட்டாளா! குளிப்பதோ, தலைசீவிக்கொள்வதோ கிடையாது. அவ்வளவு ஏன், சோற்றைப் பிசைந்துவைத்து, பல முறை நினைவுபடுத்தினாலேயொழிய சாப்பிடக்கூடத் தோன்றாதே!

காலம் மாறிவிட்டது என்கிறார்களே! ரேடியோ மட்டும் இருந்த இடத்தில் டி.வியும், கணினியும் வந்ததாற்போல் அம்மாபோன்ற பெண்களுக்கு என்ன ஆயிற்று?

நடை, மாட்டு வண்டி, ரயில் என்றிருந்தது மாறி, இப்போது அவ்வளவாக வசதி இல்லாதவர்கள்கூட விமானப்பயணமாம். அதனால் மட்டும் காலம் மாறிவிட்டதென்று அர்த்தமா?

வாழ்க்கை முறையில் எவ்வளவோ மாற்றங்கள் வந்தாலும், சில நியதிகள் ஏன் மாறவில்லை?

யார் மாற்ற விடவில்லை?

கணவன் எப்படி இருந்தாலும், மனைவி பொறுத்துப்போக வேண்டுமாம். இல்லாவிட்டால், அவளுடைய மகள் அல்லது தங்கைகளின் வாழ்க்கை துளிர்க்காமலேயே பாழாகிவிடுமாம். இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லியே பெண்களை அடிமைத்தனமான வாழ்க்கைக்குப் பழக்கிவிட்டார்கள்! பாவம், அம்மா! தனக்காக எப்படிப்பட்ட நரக வாழ்க்கையைப் பொறுத்துப்போயிருக்கிறாள்!

வேலைக்குப் போகப் பிடிக்காது, மீண்டும் வீட்டுக்கே திரும்பியபோது, அஞ்சனாவின் மனம் தெளிவாக இருந்தது.

வழக்கம்போல் அம்மாவைக் குப்புறப்போட்டு, முதுகை ஈரத்துணியால் துடைத்துவிட்டபோது, ஏதோ கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்வதுபோல ஓர் உன்னதமான உணர்வு எழ, சிலிர்த்தது.

அம்மா பேசுவதே அபூர்வம். அன்று ஏதோ பேச முயன்றாள். “அஞ்சு! நீ.. தனியா.. போயிது,” என்று குழறினாள்.

மகளின் கை ஒரு கணம் செயலிழந்தது. சிறு வயதில் தான் அப்பாவுக்குப் பயந்து, ஓடிப்போய் கட்டிக்கொண்டபோதெல்லாம் திரும்பவும் அணைக்காதவள்! இன்றோ, வார்த்தைகளாலேயே உதவிக்கரம் நீட்டுகிறாள்!

சிறு மகிழ்வூடே உண்மை புரிந்தது. அம்மா அவளுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாதது அன்பு இல்லாததால் அல்ல. ஆற்றில் மூழ்கிக்கொண்டிருப்பவனால் எப்படி இன்னொருவனைக் கைத்தூக்கி விடமுடியும்?

“நான் போயிட்டா, ஒங்களை யாரும்மா பாப்பாங்க?” என்று கொஞ்சலாகச் சொன்னபோது, அஞ்சனாவால் புன்னகைக்கக்கூட முடிந்தது. பாட வேண்டும்போல இருந்தது.

அன்றிரவு பூராவும் அம்மாவின் உயிரற்ற உடலின் பக்கத்திலேயே அமர்ந்திருந்தாள் அஞ்சனா. அழுகை வரவில்லை.

அம்மாவின் நெற்றியில்.. அது என்ன புடைப்பு?

இன்னுமா பயம்?

வீங்கியிருந்த அந்த நரம்பை ஒரு விரலால் அழுந்தத் தடவியபடி, `இனிமேலாவது நிம்மதியா இருங்கம்மா. இப்போ ஒங்களை யாரும், எதுவும் பண்ண முடியாது,’ என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னாள், ஏதோ பிரார்த்தனை செய்வதுபோல.

அம்மாவுக்கு அவள் குரல் எட்டியிருக்க வேண்டும். அரை மணி நேரத்தில் அம்மாவின் மனம் சீரானதுபோல முகத்தின் இறுக்கம் குறைய, அந்த இடத்தில் அமானுஷ்யமான — சாவுக்களை.

அஞ்சனாவுக்கு ஒன்று புரிந்தது. கூண்டைத் திறந்துவிட்டாலும், வெளியே பறக்க அஞ்சும் பறவையைப்போல் இருப்பது மடத்தனம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது பறந்துவிட வேண்டும்.

“மூட்டை கட்டிட்டு எங்கே பறந்துக்கிட்டிருக்கே? எவனோட ஓடப்போறதா உத்தேசம்?” வார்த்தையிலேயே விஷத்தைக் கக்கிய அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள் அஞ்சனா. அவளுடைய முதுகும் சமயத்துக்கேற்ப நிமிர்ந்தது.

அதன் எதிர்விளைவுபோல, அப்பாவின் உடல் பின்னோக்கிப்போயிற்று. மூச்சை பலமாக இழுத்துக்கொண்டது அவளுக்கும் கேட்டது.

இந்த மனிதரை எதிர்ப்பது இவ்வளவு எளிது என்று முதலிலேயே தெரியாமல் போய்விட்டதே! “ஒருத்தர் வீட்டிலே தங்கற வேலை!”

“நீ படிச்சுக் கிழிச்ச லட்சணத்துக்கு பின்னே ஆபீசர் உத்தியோகமா குடுப்பாங்க?” என்று எக்காளமிட்டவர், “அந்த வீட்டில எத்தனை ஆம்பளைங்க?” என்று தொடர்ந்தபோது, முதன்முறையாக அஞ்சனாவுக்கு அப்பாவின் மனோநிலையில் சந்தேகம் உண்டாயிற்று. இந்த அப்பாதான் அம்மாவை `பைத்தியம்’ என்று வாய்க்கு வாய் கரித்துக் கொட்டினாரா!

`ஒரு வயசான அம்மா மட்டும்தான். அவங்களுக்கு மருந்து, மாத்திரை குடுத்து துணையா இருக்க! மத்த வேலைங்களுக்கு ஆளிருக்கு!’ என்று சொல்லவந்ததை அடக்கிக்கொண்டாள். அந்தக் கேள்விக்கு மதிப்புக் கொடுத்து பதிலளித்தால், அது தனக்குத்தான் அவமானம்.

“நீபாட்டிலே எங்கேயோ போய், எவனோடவோ சொகுசா இருப்பே! இங்கே நான் ஒருத்தன் தனியா இருந்து கஷ்டப்படணுமா?” உணர்ச்சிப்பெருக்கில், இதுவரை அறியாத பயத்தில், அப்பாவின் குரல் கீச்சென்று ஒலித்தது.

`ஒங்களுக்கு யாரையாவது பாத்துக் கத்தணும். அவ்வளவுதானே! கண்ணாடி முன்னாடி நின்னு கத்துங்க!’ என்று பதிலடி கொடுக்கத் தோன்றியதை கசப்புடன் விழுங்கிவிட்டு, அவரை ஒரு தடவை உற்றுப்பார்த்தாள்.

மேலும் தாமதிக்காமல், விறைத்துப்போய் நின்றிருந்த மகளை ஒரு கையால் அணைத்தபடி வெளியே நடந்தாள்.

இப்படித்தானே அந்த தோழியின் அப்பா அவளை ஆதரவாக அழைத்துப்போவார்! அவள் பெயர்கூட — கமலினியோ, வினோதினியோ! ஏதோ ஒரு `னி’.

அவளைப்போலவே நித்யாவும் ஒரு நாள் பெரிய படிப்புப் படித்து, பெரிய உத்தியோகத்தில் அமர்ந்து, பெரிய காரில் தன்னை எல்லா இடங்களுக்கும் அழைத்துப்போவாள்!

தெருவில் நடக்கையிலேயே, வாய்விட்டுச் சிரித்த தாயை எதுவும் விளங்காது பார்த்தாள் சிறுமி. அவளுக்கும் சிரிப்பு வந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
கணவனின் குரல் கேட்டு கண்விழித்தாள் வேணி. மெலிந்திருந்த உடலுக்குள் ஏதோ ஒன்று பரவியது -- வரண்ட நிலத்தில் குளிர்ந்த நீர் படர்ந்தாற்போல். அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த முக்காலிமேல் சுடுநீர் போத்தல், கோப்பை, `டிஷ்யூ’ பேப்பர். கீழே குப்பைக்கூடை. அந்தச் சிறிய ...
மேலும் கதையை படிக்க...
ஒனக்கு இப்போ `நாள்,’ இல்லே?” தாயாரின் குரலில் கவலை தொனித்தது. மகள் அலட்சியமாகக் கையை வீசினாள். “இப்போ என்ன அதுக்கு?” “இல்லே, ஹம்சா. நாளைக்குக் கோயில்ல ஆடப்போறியே..,” மீதியைச் சொல்லாமல் விட்டாள். “ஆமா, எந்தக் கோயில்லேன்னு சொன்னே?” எங்க கிளாஸ் நடக்கிற கோயில்லதான்!” “காமாட்சி அம்மன் கோயில்!” ...
மேலும் கதையை படிக்க...
தனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆனால், அம்மாமாதிரி இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் வைதேகி. புராண இதிகாச காலங்களில் கணவனை வழிபட்ட பெண்கள் பிற கடவுளை நாட வேண்டி இருந்ததில்லையாம். அப்போது இருந்த ஆண்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருந்தார்களோ, என்னவோ! ஆனால், `பெண்’ ...
மேலும் கதையை படிக்க...
ஏற்கெனவே பஞ்சடைந்திருந்த கண்கள் பசியிலும், தாகத்திலும் இன்னும் மங்கலானது போலிருந்தன. அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, “அம்மா சுசீலா!” என்று ஈனஸ்வரத்தில் அழைத்தாள் முதியவள். உரக்க அழைத்தாலே வராத மருமகள் இப்போது மட்டும் காதில் வாங்கிக்கொள்வாளா, என்ன! “குடிக்க கொஞ்சம்..,” அதற்குமேல் பேச முடியாது ...
மேலும் கதையை படிக்க...
தனக்கும் பிள்ளை, குட்டி என்றிருந்தால், தான் இப்படி ஓயாது மனைவியிடம் `பாட்டு' கேட்க வேண்டியிருக்காதே என்று ஆயிரத்தோராவது முறையாக சிதம்பரம் தன்னைத்தானே நொந்து கொண்டார். `புத்தகத்தை எடுத்து வெச்சுக்கிட்டு படிங்களேண்டா! எப்போ பாத்தாலும், என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு?' என்று, எல்லா அம்மாக்களும் தொணதொணப்பதுபோல, ...
மேலும் கதையை படிக்க...
பரம்பரை பரம்பரையாக
நாளும் கோயிலும்
கனவு நனவானபோது
காலம் மாறவில்லை
சிதம்பர ரகசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)