கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 11,907 
 

பலராமன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு, இப்போது சூரியன் வந்து விட்டான். சுள்ளென்று உறைக்கும் வெய்யிலில் இருந்து தப்பிக்க நிழல் படும் இடத்தைத் தேடினார். கடந்த ஒரு மணி நேரமாக அவர் அந்தப் பார்க்கில்தான் இருந்தார். காலையில் வாக்கிங் வந்து அந்தப் பார்க்கைச் சுற்றிச் சுற்றி வந்த வயதானவர்கள், யுவர்கள், யுவதிகள், குழந்தைகள் எல்லோரும் இப்போது திரும்பிப் போய் விட்டிருந்தார்கள்.

அடி

அவர் சித்தலிங்கத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார். பார்க்குக்கு வலது பக்கம் சென்றால் பதினாறாவது கிராஸில், சித்தலிங்கத்தின் வீடு இருந்தது. அதாவது, அவரது மகனின் வீடு. பத்து போர்ஷன்கள் இருந்த கட்டிடத்தில், ஒரு போர்ஷனில் சித்தலிங்கம் குடியிருந்தார். பலராமன், ஒரு மணி நேரத்துக்கு முன்பு வந்த போது, தன் வருகையைத் தெரிவிக்க அங்கே சென்றார். கதவைத் திறந்த சித்தலிங்கத்தின் மகன், பலராமனைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் சிரிக்கலாமா அல்லது வேண்டாமா என்று யோசிப்பவன் போல் நின்றான். பிறகு வரவழைத்துக் கொண்ட புன்னகையை உதட்டில் நிற்க வைத்து, “”வாங்கோ” என்றான்.

ஆனால் அவர் அந்த அழைப்பை ஏற்று, உள்ளே செல்ல முடியாதபடி, அவன் வாசலை அடைத்துக் கொண்டு நின்றான். அப்போதும் கூட அவர் மனதில் இவன் என்ன இப்படி ஊதிப் போய் நிற்கிறான் என்ற கேள்வி எழுந்தது. சித்தலிங்கத்தின் வெட வெட உடம்புக்கும் அவரது பையனின் குண்டு உடம்புக்கும் எவ்வளவு வித்தியாசம்?

அவன் நகர்ந்து வழி விடுபவன் போல் தோன்றவில்லை. ஆதலால் “”இருக்கட்டும், பரவாயில்லே, நான் கொஞ்சம் காத்தாட பார்க்கிலே போய் உட்கார்ந்துக்கறேன். நான் வந்திருக்கிறதா அப்பா கிட்டே சொல்லிடறையா?” என்று திரும்பி நடந்தார். அவன் கதவை மூடித் தாழிட்டுக் கொள்கிற சப்தம் அவருக்குப் பின்னால் கேட்டது. சித்தலிங்கம் தான் அவருக்கு நண்பன், வேண்டப்பட்டவன். அவன் பிள்ளைக்கு அதனால் என்ன ஆக வேண்டும் … அவன் ஒரு லிக்கர் கம்பனியில் வேலை பார்க்கிறான். அவன் உருவத்தைப் பார்த்தால், கம்பனியின் பாதி சரக்குகளை அவனே காலி பண்ணி விடுபவன் போல இருக்கிறான். அவர் தனக்குள் சிரித்துக் கொண்டே பார்க் உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டார்.

இப்போது, ஒரு மணி நேரம் ஆகியும் சித்தலிங்கம் வரவில்லையே என்று அவருக்குக் கோபம் ஏற்பட்டது. ஆனால், கோபித்துக் கொண்டு திரும்பிப் போகிற நிலைமையில் இல்லை. பென்ஷன் பணம் வர இன்னும் நான்கு நாள்கள் ஆகும். ஆனால் அந்த நாலு நாள் செலவுக்கு அவருக்கு இப்போது பணம் வேண்டும். முக்கியமாக, மருந்து வாங்க வேண்டும். அவருக்கு முற்றிய சர்க்கரை வியாதி. மருந்து இல்லாமல் ஒரு வேளை கூட இருக்கக் கூடாது. முந்தாநாள், அலமாரி மேல் இருந்த பையை எடுக்கிறேன் என்று பைக்குப் பக்கத்திலிருந்த மருந்து டப்பா மேல் கை பட அது தவறிக் கீழே விழுந்தது. விழுந்த அதிர்ச்சியில், டப்பா மூடி திறந்து கொண்டு, மாத்திரைகள் சிதறி விழுந்தன. அப்போது பார்த்தா அவர் மனைவி, வீட்டை அலம்புகிறேன் என்று அறை நிறையத் தண்ணீரை ஊற்றி வைத்திருக்க வேண்டும். நிமிஷத்தில் மாத்திரைகள் தண்ணீரில் ஊறி, பிளந்து, கரைந்து…. கையிலெடுத்துக் காய வைத்த மாத்திரைகளை வைத்து நேற்று வரை ஒப்பேற்றியாகி விட்டது. எவ்வளவு மணி நேரம் ஆனாலும், சித்தலிங்கத்துக்காகக் காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.அவனை விட்டால் அவருக்குப் பணம் கிடைக்க வேறு வழியில்லை. ஒரு காலத்தில் அவரை விட்டால் அவனுக்கு வேறு வழி இல்லாதது போல.

அப்போது இருவரும் தில்லியில் இருந்தார்கள். பலராமனுக்கு, மத்திய அரசாங்கத்தில், உள்துறை இலாகாவில் வேலை. சரோஜினி நகரில், ஒரு பஞ்சாபி அரசாங்க உத்யோகஸ்தனின் வீட்டில் பேயிங் கெஸ்டாக இருந்து வந்தார். தமிழ் நாட்டிலிருந்து தில்லியில் வேலை கிடைத்து வந்த பிரமச்சாரிகளுக்கு, தங்குமிடம் கொடுக்கும் கடவுள்களாக, இந்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள்தான் இருந்தார்கள். அவர்கள் அரசுக்கு இருபத்தி ஐந்து ரூபாய் வீட்டு வாடகை கொடுத்து விட்டு, இந்தப் பிரமச்சாரிகளிடம் ஓர் அறைக்கு நூறு ரூபாய் வாடகை வாங்கிக் கொண்டார்கள். பலராமனின் அறையில், கோவிந்தன் என்று ஒரு மலையாளியும் பங்கு போட்டுக் கொண்டு இருந்தான். அவனுக்கு, வெளியுறவு இலாகாவில் வேலை. சித்தலிங்கத்தின் அண்ணாவும், கோவிந்தனுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அனுப்பி, சித்தலிங்கம் கோவிந்தனைப் பார்க்க வருவான். அப்போது அவனுக்கு வேலை கிடைத்திருக்கவில்லை. அரசுப் பணியாளர் தேர்வு எழுதி, ரிசல்ட்டுக்காகக் காத்திருந்தான். அப்படி சித்தலிங்கம் வந்து போன சமயங்களில்தான், பலராமனுக்கும் சித்தலிங்கத்துக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. ஒரே வயது, ஒரே பாஷை என்று அந்த நட்பு துளிர்த்து வளர்ந்தது.

ஒரு சனிக்கிழமை மாலை, பலராமன் அறையில் இருந்த போது, சித்தலிங்கம் வந்தான். அப்போது ஆறு மணி இருக்கும். ஆள் பார்க்க சோர்ந்து இருந்தான்.

“”என்னாச்சு உடம்பு சரியில்லையா?” என்று பலராமன் கேட்டான்.

“ஒன்றுமில்லை’ என்பது போல் அவன் தலையை அசைத்தான்.

“”கோவிந்தனைப் பார்க்க வந்தியா? ஊர்ல இல்லே போலிருக்கே” என்றான் பலராமன்.

“”இல்லே, உன்னைத்தான் பார்க்க வந்தேன்” என்று சொல்லி விட்டுத் தயங்கினான்.

“”சொல்லு, என்ன விஷயம்?”

“” இல்லே, எனக்கு ஒரு பத்து ரூபா குடுக்க முடியுமா?”

பலராமனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சித்தலிங்கத்தின் அண்ணா கமலா நகரில் இருக்கிறார். ஒரு பத்து ரூபாய் வாங்குவதற்காகவா இவன் பதினைந்து கிலோ மீட்டர் கடந்து வந்திருக்கிறான்.

மறுபடியும் பலராமன் சித்தலிங்கத்தின் சோர்ந்த முகத்தைப் பார்த்தான்.

“” நடந்துதானே நீ வந்திருக்கே?”

அவன் ஆமென்று தலையை அசைத்தான்.

“”எதுக்கு பத்து ரூபா?”

பதில் ஒன்றும் வரவில்லை.

பலராமன் கால்சட்டைப் பையில் வைத்திருந்த பர்சை எடுத்தான்.

பிறகு, சித்தலிங்கத்தைப் பார்த்து, “”சரி வா, வெளில போய் ஒரு காபி சாப்பிடலாம்” என்றான்.

இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து, சரோஜினி நகர் மார்க்கெட்டைப் பார்க்க நடந்தார்கள். டிசம்பரின் ஆரம்ப காலக் குளிரே கடுமையாகத்தான் இருந்தது. சித்தலிங்கம் ஸ்வெட்டர் எதுவும் அணிந்திருக்கவில்லை. செட்டியார் மெஸ் வாசலில், வழக்கம் போல் தஞ்சாவூர், திருநெல்வேலிப் பையன்கள், மறுநாள் எம்ஜிஆர் படத்துக்கா, இல்லை பாலச்சந்தர் படத்துக்கா போவது? என்று ஆரவாரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே போய் காலியாய் இருந்த ஒரு மேஜையின் முன் உட்கார்ந்து கொண்டார்கள். பலராமன் தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா? என்று கண்களைச் சுழற்றினான். இடது பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருந்த பிள்ளையார் கோயில் குருக்களின் பிள்ளை, பலராமனைப் பார்த்து புன்னகை செய்து விட்டு, தனது தட்டில் இருந்த இட்லியை ஸ்பூனால் வெட்டிச் சாப்பிட்டான். அவனுக்கு எதிரே இருந்த சர்தார்ஜி வலது கைச் சட்டையை முழங்கை வரை ஏற்றி விட்டு, மசால் தோசையைக் கையால் பிய்த்துத் தின்று கொண்டிருந்தார்.

சர்வர் வந்து, பலராமனிடம் “”சூடா ரவா தோசை இருக்கு. கொண்டு வரட்டா?” என்று கேட்டான்.

“”சரி, ரெண்டு ரவா தோசை, ரெண்டு வடை, ஒரு குடம் சாம்பார் எல்லாம் எடுத்துண்டு வா” என்றான் பலராமன். சர்வர் சிரித்துக் கொண்டே உள்ளே போனான். சித்தலிங்கத்தின் முகத்தில் லேசான புன்னகை இழையோடியதைப் பலராமன் பார்த்தான்.

சர்வர் கொண்டு வந்தவற்றை, சித்தலிங்கம் சாப்பிட்ட விதம், அவன் எவ்வளவு பசியோடு இருக்கிறான் என்று தெரிவித்தது. அவனுக்கு இன்னொரு தோசை கொண்டு வரச் சொன்ன போது, சித்தலிங்கம் மறுப்பேதும் எழுப்பவில்லை.

மெஸ்ûஸ விட்டு வெளியே வந்ததும், மார்கெட் வழியாக, ஸ்டேஷன் பக்கம் நடந்தார்கள்.

“” நீ எத்தனை மணிக்கு வீட்டுக்கு போகணும்?” என்று கேட்டான் பலராமன்.

“”நான் இன்னிக்கு ஒரு நாள் உன்கூட இருக்கட்டுமா? கோவிந்தன் கூட ஊர்ல இல்லையே” சித்தலிங்கத்தின் குரல் இறைஞ்சிற்று.

“” கோவிந்தன் இருந்தாக் கூட, நீ தங்கிக்கலாம்” என்று சிரித்தான் பலராமன். “”ஆனா உங்க அண்ணா கிட்டே சொல்ல வேண்டாமா?”

“”அதைப் பத்தி கவலைப் படறவா யாரும் இல்லே அங்கே” என்றான் சித்தலிங்கம்.

பலராமன் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

அதன் பிறகு, நடந்து கொண்டே அவர்கள் வினய் மார்க் வரையிலும் சென்று விட்டு, வீடு திரும்பினார்கள். வழி முழுவதும் நடந்த பேச்சிலிருந்து, சித்தலிங்கத்தின் அண்ணா “பெண்டாட்டியாத்தா பெரியாத்தா’ என்றிருப்பவர் எனத் தெரிந்தது. மன்னிக்கு, வேலை வெட்டி இல்லாமல், உட்கார்ந்து தின்று தங்கள் குடும்பச் சொத்தைக் கரைக்க வந்த மச்சினனாகத் தெரிந்தான். அண்ணாவின் இரு குழந்தைகளும், கதை சொல்லும், பாட்டுப் பாடும், மாயா ஜாலங்கள் புரியும் சித்தப்பாவின் மேல் உயிரை வைத்திருந்தாலும், அம்மாவின் பார்வையும், பேச்சும், அவர்களைத் தூரத் தள்ளி வைத்தன. வந்த புதிதில், அவன் செலவுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அண்ணா, திடீரென்று பர்சையே தொலைத்து விட்டவராகிப் போனார்.

“”முந்தா நாள் ராத்திரி சாப்பிட்டதுக்கு அப்புறம், இப்பதான் எனக்கு அடுத்த வேளை சாப்பாடு கெடைச்சது” என்று சித்தலிங்கம் பலராமனை நன்றியோடு நோக்கினான். பலராமன் அவன் கையைப் பற்றிக் கொண்டான்.

அடுத்து வந்த நாட்களில், சித்தலிங்கம் பலராமனுடன்தான் பெரும்பாலான நேரத்தை கழித்தான். பலராமன், செலவுக்கென்று சித்தலிங்கத்தின் கையில் பணம் கொடுத்து வைத்திருந்தான். அண்ணனுடன் ஒரேயடியாய் முறித்துக் கொள்ள வேண்டாமென்று, வாரத்தில் சனிக்கிழமையோ, ஞாயிற்றுக் கிழமையோ கமலா நகருக்குப் போய்த் தலையைக் காட்டி விட்டு வருமாறு சித்தலிங்கத்தை அனுப்பி வைத்தான்.

ஏப்ரல் முதல் வாரத்தில், சித்தலிங்கத்துக்கு நிதி அமைச்சகத்தில் வேலை கிடைத்தது. மே மாதத்தில் ஒரு நாள் இருவருக்கும் சரோஜினி நகரிலேயே, ஒரு வங்காளியின் வீட்டில் குடியிருக்க ஓர் அறை கிடைத்து விட்டது. இருவரும் தத்தம் வாழ்வில் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்றுக் கொண்டு அவர்களை வளர்த்து விட்டு, வேலையில் இருந்து ஒய்வு பெறும் வரையில் தில்லியிலேயே இருந்தார்கள். நண்பர்களாகவும்.

ஓய்வுக்குப் பின், அவரது மனைவியின் ஊரென்று, பலராமன், பெங்களூருக்கு வந்து விட்டார். அதற்கு அடுத்த வருஷம் சித்தலிங்கத்தின் பிள்ளைக்கு பெங்களூரில் வேலை கிடைக்க, சித்தலிங்கமும் பெங்களூர்வாசியாக ஆகி விட்டார். தில்லியில் இருந்தது போல, இப்போதும் இருவரும் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடிந்தது. ஒரு வருஷத்துக்கு முன்பு, பிசினசில் கொழித்துக் கொண்டிருந்த பலராமனின் ஒரே பையன், சித்தூர் அருகே காரில் வந்து கொண்டிருக்கும் போது ஒரு விபத்தில் உயிரிழக்க, அவனது தொழில் கடன்களை அடைப்பதில், எல்லா சேமிப்பும் கரைந்து விட்டது. பலராமன் பென்ஷனை நம்பி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். பணப் பற்றாக்குறை அவரைக் காதலித்து, அடிக்கடி அவரைத் தேடி வர, அவர், இன்றையப் பொழுதுக்கு சித்தலிங்கத்தைத் தேடி வந்து…

பலராமன் நூறாவது முறையாக பதினாறாம் கிராஸ் முனையை நோக்கினார். இம்முறை வெற்றி கிடைத்து விட்டது. சித்தலிங்கம் தன்னை நோக்கி வருவதைக் கவனித்தார். அவர் முகம் சுருங்கிற்று.

“”ஏன் சித்தலிங்கம் நடையில், இவ்வளவு தொய்வு? உடம்பு சரியில்லையா? அதனால்தான் இவ்வளவு தாமதமா?”

அவரை நெருங்கியதும், சித்தலிங்கம் புன்னகை செய்தார்.

“”வெரி ஸாரி, இவ்வளவு நேரமா உன்னை காக்க வச்சதுக்கும், வீட்டுக்குள்ளே வந்து உக்காருன்னு கூப்பிடாததுக்கும்” என்றார் வருத்தத்துடன்.

“” அட போப்பா, உன்னை எனக்கு தெரியாதாக்கும் நீ என்ன வேணும்னேயா லேட்டா வந்தே?” என்ற பலராமன்

“”ஏன், என்னவோ போல இருக்கே? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டார் .

“”என் ஒய்ஃபுக்குத்தான் எல்லாம். முந்தா நாள், பாத்ரூம்ல விழுந்துட்டா.. இடுப்பு எலும்பு முறிஞ்சுடுத்துன்னு கட்டிலோட கட்டிப் போட்டிருக்கா.. அசைய முடியலே. அவ பாத்ரூம் போறதிலேர்ந்து எல்லா வேலையும் நானே பார்க்கிறேன். அவளால் வலியைப் பொறுத்துக்க முடியலை. அதைவிட அவளோட துக்கம் என்னன்னா, நான் எல்லாத்தையும் செய்ய வேண்டியிருக்கேன்னு. நீதான் இவ்வளவு நாளா என்னைப் பாத்துண்டே, இப்ப நான் உனக்கு இந்த மாதிரி சின்ன வேலை கூட செய்யக் கூடாதான்னா கேக்க மாட்டேங்கிறா?”

“” அடடா” என்றார் பலராமன்.

“”இவ்வளவு பணம் வச்சிண்டு இருக்கற உன் பிள்ளை, ஒரு நர்ûஸ வேலைக்கு வச்சு அம்மாவைப் பாத்துக்கக் கூடாதா?” என்று வாய் வரை வந்து விட்டது. அடக்கிக் கொண்டார்.

அவர் மனதில் ஓடுவதைப் படம் பிடித்து விட்டது போல, “”சித்தலிங்கம் யாரையானும் வேலைக்கு வச்சுக்கலாம். ஆனா பிள்ளை கையை எதிர்பாத்துண்டு நிக்கணுமே. இப்பவே செலவு செலவுன்னு முணுமுணுப்பு. எனக்கு பென்ஷன் வர்றதாலே, அவனோட கம்பனி மெடிகல் ஸ்கீம்ல, அப்பாவையும் அம்மாவையும் கவர் பண்ண மாட்டாளாம். கையை விட்டு செலவு பண்ண வேண்டியிருக்கேன்னு நினைக்கிறான், பாவம்” என்றார்

“” இதிலே எது பாவம்? யார் பாவம்?” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டார் பலராமன்.

“”அதுவும் சரிதான். நான்தான் ஆக்சுவலா பாவம். இடது கையாலேயும், வலது கையாலேயும் சம்பாதிக்கறான். தோளுக்கு மேலே போனா தோழன்னு சொல்லுவா..ஆனா அவன் என் தோளுக்கு மேலே போய்ட்டான். ஆனாலும், என்னை தோழனா சகிச்சுக்க முடியலை அவனால. யாரைச் சொல்லி என்ன பிரயோஜனம் எல்லாம் நம்ம பிரார்ப்தம்” என்றார் சித்தலிங்கம் பெருமூச்சுடன்.

பலராமன் நண்பனைப் பரிவுடன் பார்த்தார்.

“”சரி விடு, என்ன பேசி என்ன ஆகப் போறது? வீட்டுக்குள்ளே ஒரே களேபரம். அதனாலதான் உன்னை வெளியே நிக்க வைக்க வேண்டியதாயிடுத்து” என்றார் சித்தலிங்கம். “”வா, வீணா ஸ்டோர்ஸ் போய் காபி சாப்பிடலாம்” என்று கூப்பிட்டார்.

இருவரும், பார்க்கை விட்டு வெளியே வந்து இடது பக்கம் திரும்பிச் சென்றார்கள். வீணா ஸ்டோர்ஸ் வாசலில், ஈக்களை விட ஜனம் அதிகமாக இருந்தது. சீக்கிரமாக வேலைக்குச் செல்லும் ஆண்கள், வீட்டில் அடுப்பைப் பற்ற வைக்க விரும்பாத பெண்கள், லக்ஷ்மி அம்மிணி காலேஜுக்குப் போவதற்கு முன்பு, வழியில் சந்தித்து விட்ட பாய் ஃப்ரெண்ட்சுடன் வந்த மாணவிகள், வாக்கிங் போயும் இழந்து விட முடியாத எடையுடன், திரும்பிக் கொண்டிருந்த ரிடையர்ட் ஆசாமிகள் என்று அப்படி ஒரு கூட்டம், இட்லியையும், வடையையும், காரா பாத்தையும், உப்பிட்டுவையும் காப்பியையும் ஒரு வேகத்துடன் காலி பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

“” என்ன சாப்பிடலாம்?” என்று சித்தலிங்கம் கேட்டார்.

“” எனக்கு காப்பி மாத்திரம் போறும்” என்றார்.

சித்தலிங்கம் டோக்கன் வாங்கி, இரண்டு காப்பி தம்ளர்களை எடுத்துக் கொண்டு வந்தார். அவர்கள் எதிர்சாரியில் இருந்த டெலிபோன் அலுவலகம் பக்கம் சென்று வாசல் குறட்டில் உட்கார்ந்து கொண்டார்கள்.

“”என்ன விஷயம் சொல்லு?” என்று சித்தலிங்கம் பரிவுடன் கேட்டார்

இவ்வளவு தூரம் பிரச்னைகளில் உழன்று கொண்டு இருப்பவனிடம், உன் கஷ்டத்தைச் சொல்லி அவனை இன்னும் அமுக்கப் போகிறாயா? என்று உள்ளிருந்து குரல் எழுந்தது.

“” நான் கொஞ்சம் பணம் கேட்டு வாங்கிண்டு போலாம்னுதான் வந்தேன். ஆனா, இப்ப உன் ஒய்ஃபுக்கு வந்திருக்கிற கஷ்டத்திலே, எனக்கு எப்படி கேக்கறதுன்னு இருக்கு?” என்றார் பலராமன்.

சித்தலிங்கம் பதில் எதுவும் பேசவில்லை. அந்த வினாடிகளின் மெüனம், பலராமனைத் தாக்குவது போலிருந்தது.

“”எவ்வளவு வேணும்?” என்று சித்தலிங்கம் கேட்டார்.

பலராமன், நண்பனிடம் ஓர் ஆயிரம் ரூபாயாவது வாங்கிக் கொண்டு போகலாம் என்று நினைத்து வந்திருந்தார்.

“”ஒரு ஐநூறு ரூபாயாவது வேண்டியிருக்கும்” என்றார்.

மறுபடியும் சித்தலிங்கத்திடமிருந்து உடன் பதில் எதுவும் வரவில்லை.

பலராமன் நண்பனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். “சரி, விட்டுத் தள்ளு என்று சொல்லிவிடேன். மனுஷன் என்ன பாடு படுகிறான் பார்’ மறுபடியும் உள்ளிருந்து முனகல்.

சித்தலிங்கம், “”எனக்கு என்னையே செருப்பால அடிக்கணும் போல இருக்கு. சீ, நான் வாழறதெல்லாம் ஒரு வாழ்க்கையா? என்னடா, ஒரு ஐநூறு ரூபாய்க்கு இப்படி டிராமா போடறானேன்னு கேக்கறவன் நினைப்பான். நீ அது மாதிரியெல்லாம் நினைக்கிறவன் இல்லேன்னு எனக்கு தெரியும். ரெண்டு நாள் முன்னாடி பத்மாவுக்கு, கீழே விழுந்து எலும்பு முறிஞ்சுதுன்னு பதறிண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடறேன். என் பிள்ளைங்கிற கபோதி, கூட வந்திண்டு இருந்தவன் அப்பா, வண்டியை வழியிலே இருக்கற ஏ. டி.எம். கிட்டே நிறுத்தி, பணம் எடுத்துண்டு வாங்கோன்னு கூசாம சொல்றான். அவனை வண்டியை விட்டு கீழே தள்ளிட்டு போக எனக்கு துப்பில்லை. அவன் சொன்ன மாதிரி, என்னோட அக்கவுண்ட்லேர்ந்து பணம் எடுத்துண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். அவன் பொண்டாட்டி இருக்காளே, அவ எமகாதகி அப்பா நீங்க வாக்கிங் போய்ட்டு வரப்போ, ரிலையன்ஸ்லேர்ந்து ரெண்டு ஆப்பிள், ரெண்டு ஆரஞ்ச் வாங்கிண்டு வாங்கோம்பா. ரெண்டுன்னா ரெண்டு இல்லே, ரெண்டு கிலோ, ரெண்டு டஜன் அப்படின்னு கணக்கு. அவர் என்கிட்டே ஒரு பைசா கொடுத்து வக்யரதில்லேன்னு புருஷன் மேல அப்பப்போ ஒரு வியாக்யானம் வேறே. அவா எங்களை காப்பாத்தறதுக்கு பதிலா, நான் அவாளைக் காப்பாத்திண்டு இருக்கேனோன்னு அடிக்கடி சந்தேகம் வரும். என்ன சொல்லி என்ன, கடைசியில் காலி பர்சை தூக்கிண்டு நடக்கற நிலைமைதான். நீ எனக்கு செஞ்சதுக்கு எல்லாம், என் தோலை செருப்பா தச்சு உனக்கு போடணும். நீ ஐநூறு ரூபாய் கேக்கறச்சே. நான் ஐயாயிரம் ரூபாயை எடுத்து உனக்குத் தரணும். அப்படிப்பட்ட ஆத்மா நீ” என்றார்.

“”சே சே, என்ன சித்து இதெல்லாம். உனக்கு இருக்கற கஷ்டத்திலே, நான் உதவி பண்ணறதுக்கு பதிலா, உபத்திரவம் கொடுக்க வந்துட்டேனேன்னு எனக்கு உறுத்தலா இருக்கு. எல்லாம் நல்ல படியா நடக்கும். நீ மனசை தளர விடக் கூடாது. நான் மேனேஜ். பண்ணிக்கிறேன், சரியா?” என்று பலராமன் சித்தலிங்கத்தின் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

மார்கோசா ரோடில் இரைச்சலுடன் விரைந்த வாகனங்கள், அவர்கள் இருவரிடையே நிலவிய மெüனத்தைத் தூக்கிக் காட்டின.

“”சரி, அப்ப நான் கிளம்பறேன். நீ எனக்கு அப்பப்ப போன் பண்ணி, பத்மா எப்படி இருக்கான்னு சொல்லு. நானும் என் ஒய்ஃபை ஒருநாள் அழச்சிண்டு வரேன். ருக்மிணி இந்த ஆக்சிடெண்ட் பத்திக் கேட்டாலே ஷாக் ஆயிடுவா” என்று எழுந்தார் பலராமன்.

“”கிளம்பிட்டயா இரு, இரு” என்று எழுந்த சித்தலிங்கம் கால்சட்டைப் பைக்குள் கையை விட்டுத் துழாவி எடுத்து, “”இந்தா. இருநூறு ரூபா இருக்கு. இதை வச்சுக்கோ, இப்போ இருக்கறது இவ்வளவுதான்” என்று கசங்கிய நோட்டுக்களைக் கொடுத்தார்.

“” நோ, நோ, நீ இப்ப ஒண்ணும் எனக்கு பணம் தர வேண்டாம். உனக்கு இருக்கற கஷ்டத்திலே எனக்கு என்ன தானம் வேண்டியிருக்கு” என்று மறுத்தார் பலராமன்.

“” நீ இதை வாங்கிக்கிலேன்னா, நான் இந்த உலகத்திலே மனுஷன்னு சொல்லிண்டு நடமாடறதுக்கே லாயக்கில்லாதவனா ஆயிடுவேன். ப்ளீஸ்” என்று சித்தலிங்கம் பணத்தை பலராமன் கையில் திணித்தார் அவரது குரலின் நடுக்கத்தைத் தாங்க முடியாது, பலராமன் வாங்கி கால்சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார்.

இருவரும் பதினைந்தாவது கிராஸில் வலது பக்கம் திரும்பி நடந்தார்கள். நாலாவது மெயின் வந்ததும், பலராமன் விடை பெற்றுக் கொண்டார். இடது பக்க மர நிழல்களில் ஒட்டிக் கொண்டு மேலே நடந்தார். பத்து மணிக்கு மேல் ஆபிஸ் போகும் கூட்டம் நின்று போய் சாலையில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் இருந்தது. மனது அலை பாய்ந்தது. தனக்கு மகன் போய், கொடுத்த துக்கத்தை விட, சித்தலிங்கத்துக்கு மகன் இருந்து கொடுக்கும் துக்கம் தாங்க முடியாதது என்று மனம் அரற்றியது. இல்லாத பணம் தரும் கொடுமையை விட, இருக்கும் பணம் தரும் ராட்சசத்தனத்தை நினைத்து உடல் நடுங்கிற்று.

“நீயும் ஒரு விதத்தில் கொடுமைக்காரன்தான், ராட்சசன்தான்’ என்று உள்குரல் சீறிற்று. உன்னை மாதிரி ஒரு கேடு கேட்ட ஜன்மம் இருக்க முடியாது அவனோட கஷ்டம் நன்றாகத் தெரிய வந்த பின்னும் கூட, உன் சுயநலம்தானே உனக்கு முக்கியமாகப் போய் விட்டது? சித்தலிங்கத்தைப் பார்ப்பதற்கு முன்னேயே, அவன் பிள்ளையின் லட்சணம் உனக்குத் தெரிந்து விட்டது. அப்புறம், சித்தலிங்கமே வாய் விட்டு, பிள்ளையைப் பற்றி அரற்றினான். அப்போதே உனக்கு கொஞ்சமேனும் மனிதாபிமானம் இருந்திருந்தால், அவனிடம் பணம் கேட்டிருக்க மாட்டாய். ஆனால் உனக்குத்தான் உள்ளுக்குள் நீ என்றோ செய்த உதவிக்கு எப்பாடு பட்டாவது நன்றியைப் பெற்றுக் கொண்டாக வேண்டுமே. ச்சீ… என்ன கேவலமான ஜடம் நீ’ பலராமன் உள்குரலை அடக்க முடியாது தவித்தபடி நடந்தார். தன்னைக் கவ்வும் குற்ற உணர்விலிருந்து தப்பிக்க முடியாது போலிருந்தது.

“”அய்யா, அய்யா” என்று அவருக்குப் பக்கத்தில் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தார். மாதக் கணக்கில் வழிக்கப்படாத கன்னமும், அழுக்கேறிய தலைமயிர்க் கொத்தும், கட்டை உடலும், கிழிந்த ஆடையும் அவனை அறிமுகப்படுத்தின.

“”ஒண்ணும் இல்லே போ, போ” என்று மேலே நடந்தார். “”நானே இப்போ பிச்சை எடுத்துட்டுதாண்டா வரேன்” என்று தனக்குள் அரற்றிக் கொண்டார்..

“”அய்யா , அய்யா , சாப்பிட்டு பத்து நாளாச்சுங்க. தண்ணியாக குடிச்சு, குடிச்சு ஒப்பேத்தலாம்னு பாத்தா இப்ப தண்ணி குடிச்சாலே வலியில உயிர் போகுதய்யா. ஏதாச்சும் காசு குடுங்க சாமி” என்று இறைஞ்சியபடி அவர் கூடவே நடந்து வந்தான்.

“”இல்லேங்கிறேன்ல. வேற யார் கிட்டயாவது போய் கேளு” என்று கர்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு நடந்தார்.

சட்டென்று கழுத்தின் மேல் ஏதோ படுவது போலிருந்தது. திரும்பிப் பார்க்கும் போது, உருண்டு திரண்டு இருந்த கட்டை ஒன்று அவர் கழுத்தைத் தாக்கிற்று. என்ன அடி அம்மா என்று கழுத்தைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தார். பரட்டைத் தலைக்காரன் வேகமாக அவர் கால் சட்டைப் பையில் கையை விட்டு, கிடைத்ததை அள்ளிக் கொண்டு, அவரை உதறி விட்டு ஓடினான்.

சாலையின் வலது பக்கத்து எதிரில், சைக்கிளில் வந்து கொண்டிருந்த யாரோ, அவர் கீழே விழுவதைப் பார்த்து விட்டு, சைக்கிளை திருப்பிக் கொண்டு வந்து அவர் அருகில் இறங்கினான்.

“” ஏனாயித்து ஏனாயித்து” என்று பதறியபடி அவரைத் தூக்கி உட்கார வைத்தான். அருகே இருந்த வீடு ஒன்றிலிருந்து, இரண்டு பெண்மணிகள் ஓடி வந்தனர். ஒருத்தி, மற்றவளிடம் வீட்டில் போய், தண்ணி எடுத்திட்டு வா என்றாள். அவள் ஓடிப் போய் ஒரு தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வந்தாள். அவரை உட்கார வைத்தவன், நீர் அருந்த வைத்தான். கழுத்தைத் தூக்க முடியாமல் வலி பிய்த்து எடுத்தது. கையை கழுத்தில் வைத்துப் பார்த்தார். வீக்கம் தெரிந்தது. என்ன வலி? என்ன அடி?

“”திருட்டுப் பய ஓடிட்டான். பாருங்க, எல்லாம் சரியா இருக்கான்னு?” என்றான் சைக்கிளில் வந்து உதவியவன். பலராமன் நினைவு வந்தவராக, கால் சட்டைப் பைக்குள் கையை விட்டுப் பார்த்தார். கையை வெளியே எடுத்த போது, வெறுங்கையாக வந்தது.

“”எல்லாம் சரியாய் இருக்கு என்றார். வீட்டுக்கு போகணும்” என்றபடி கஷ்டப்பட்டு எழுந்தார்.

கூடியிருந்தவர்கள் கலைந்து போனார்கள்.

பலராமன் இப்போது உள்குரல் எதுவும் கேட்கவில்லை என்பதை ஆச்சரியத்துடன் உணர்ந்தார்.

– மே 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *