அசைவுறாக் காலம்

 

ஃபாத்திமா பாபு வாசித்த செய்தி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அசோக்கை வாரியணைத்து எடுத்து வந்தார்கள். அசோக் ஆறாம் வகுப்பு முடித்து ஏழாம் வகுப்பிற்கு போவதற்காக காத்திருந்திருந்தவன். சித்திரை மாதத்தின் ஒரு முன்னிரவில் வீட்டிற்கு முன்பாக மிதிவண்டி ஓட்டிக் கொண்டிருந்த போது ஆட்டோ இடித்ததில் கீழே விழுந்துவிட்டான். காயம் எதுவும் ஆகியிருக்கவில்லை என்றாலும் கூட மயக்கமாக இருந்தான். முகத்தில் தண்ணீரைத் தெளித்து பார்த்தார்கள். எந்த அசைவும் இல்லாமல் கிடந்தவனை ராஜேந்திர டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். வீட்டிற்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த ராஜேந்திர டாக்டர் முதலுதவி அளித்துவிட்டு தன் மருத்துவமனையிலேயே படுக்க வைத்தார்.

அடுத்த நாள் காலையில் அசோக் வாந்தியெடுக்க ஆரம்பித்திருந்தான். பின்னந்தலையில் அடிபட்டிருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கோவை பெரிய மருத்துவமனைக்கு போவதுதான் நல்லது என்றார் டாக்டர். அந்தக் காலகட்டத்தில் ஆம்புலன்ஸ் கிடைப்பது அத்தனை சுலபமில்லை என்பதால் மஞ்சள் கருப்பு வர்ண அம்பாஸிடர் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அம்மா மடியில் தலையும் அப்பா மடியில் காலும் வைத்து படுக்கச் செய்து அசோக்கை தூக்கிச் சென்றார்கள். கோவை செல்லும் வரைக்கும் அசோக்கின் தலையையும், கால்களையும் நனைத்த கண்ணீர்த் துளிகளுக்கு அவன் எந்தச் சலனத்தையும் காட்டவில்லை.

ஒரு வார கால அவசர சிகிச்சைபிரிவில் கண்களை விழித்தது சிகிச்சையின் முதல் முன்னேற்றமாக இருந்தது. டாக்டர்களும், அசோக்கின் உறவினர்களும் சற்று நம்பிக்கையை பெற்றார்கள். ஆனால் விழியசைவோ கண்சிமிட்டலோ இல்லாத விழிப்பு அது. அடுத்த ஒரு மாதத்தில் இடதுகையின் ஆட்காட்டி விரலை மட்டும் மேலும் கீழுமாக மெதுவாக அசைத்தான். அதோடு சரி. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த அடுத்த நான்கரை மாதத்திலோ அல்லது இது நாள் வரைக்குமோ வேறு எதுவும் மாறியிருக்கவில்லை. நான்கரை மாதங்களுக்கு பிறகாக இனி மருத்துவமனையில் தங்கி இருப்பதாலும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பதால் வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிடலாம் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்.

வீட்டில் அவனுக்கென ஒரு அறையும் படுக்கையும் தயாரானது. படுக்கையில் சில சமயங்களில் கண் சிமிட்டல் இல்லாமல் விழித்திருப்பான். கண்களை மூடியிருந்தால் அவன் உறங்குகிறான் என்று வீட்டிருந்தவர்கள் முடிவு செய்துகொள்வார்கள். மற்றபடி அவனுக்கு தொடு உணர்ச்சியிருக்கிறதா, காது கேட்கிறதா, பசி, தாகம் உண்டா அல்லது கண் பார்வை இருக்கிறதா என்பதெல்லாம் எதுவும் தெரியவில்லை. உணவுக்காக ஒரு குழாயையும் கழிவு வெளியேற்றத்திற்காக இன்னொரு குழாயையும் செருகியிருந்தார்கள். அடுத்த இரண்டு வருடங்களுக்கும் இப்படியேதான் கிடந்தான்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அசோக்கின் தம்பி தொலைக்காட்சியை அதிக சத்தமாக வைத்த போது மூடியிருந்த கண்களை அசோக் திறந்ததை அவனது அம்மா கவனித்தார். அதுவே அவருக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தந்தது. அவனுக்கு முன்பாக தொலைக்காட்சியை வைத்தார்கள். அப்பொழுது பல சேனல்கள் வந்திருக்கவில்லை. தூர்தர்ஷன் மட்டும்தான். ’டெக்’ வாடகைக்கு எடுத்து வந்து நிறையப்படங்களை காட்டினார்கள் என்றாலும் அசோக்கிடம் மாறுதல் எதுவும் இல்லை. இடதுகையின் ஆட்காட்டி விரலுக்கு கீழாக ரிமோட்டை வைத்துவிட்டால் டிவியை அணைப்பது அல்லது திரும்ப போட்டுக் கொள்வது என்பதை மட்டும் செய்தான். அப்பொழுதும் கண்களைச் சிமிட்டியதோ உதடுகளை அசைத்ததோ நிகழவில்லை என்பதால் அவன் டிவியைப் பார்க்கிறானா, வசனத்தை கேட்கிறானா என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியாமலேயேதான் இருந்தார்கள்.

சவந்திருந்த தபால் ஒன்றை படித்துவிட்டு எதேச்சையாக அசோக்கின் இடதுகை விரலுக்கருகில் வைத்திருந்தார்கள். தபாலில் இருந்த ஸ்டேப்ளர் பின் மீது தன் விரலை வைத்து அழுத்தியிருந்தான். ஓரிரு துளி ரத்தம் கசிந்திருந்தது. அப்பொழுது அவன் தற்கொலைக்கு முயல்வதாக அடுத்த இரண்டு நாட்களுக்கு அவனது அம்மா கேவி அழுது கொண்டிருந்தார். அதன் பிறகாக அவன் படுக்கைக்கு அருகில் எந்தப் பொருளையும் வைக்காமல் கவனமாக தவிர்த்தார்கள். இது நடந்து சில வருடங்கள் ஆகியிருந்தாலும் அவர்களால் மறக்க முடிந்ததில்லை.

இருபது வருடங்களாக செடியொன்றை வளர்ப்பதைப் போலவே அவனை வளர்த்திருந்தார்கள். எதிர்வீட்டுக்கு குடி வந்திருந்த பெண்ணொருத்தியிடம் அசோக்கின் அம்மா பேசிக் கொண்டிருந்தபோது அசோக் சாவதற்கும் கூட உரிமையில்லாதவனாகவும் வழியற்றவனாகவும் இருந்திருக்கிறான் என்று எதிர்வீட்டுப்பெண்மணி குறிப்பிட்ட போது தனது இருபது வருட வலியையும் அழுது தீர்த்துவிட்டார் அசோக்கின் தந்தை. இருபது வருடங்களில் அவர் மற்றவர்களுக்கு தெரியும்படி அழுதிருக்கவில்லை. ஆனால் அழுத்தமானவராக மாறியிருந்தார். யாரிடமும் அதிகம் பேசாத “உம்மணாமூஞ்சி” என்ற பெயரையும் பெற்றிருந்தார்.

இரண்டு நாட்களாக தூக்கமற்று தவித்த அவர் நேற்றிரவு அசோக்கின் அறைக்கதவைச் சாத்திவிட்டு அவனிடம் பேச ஆரம்பித்தார். அவன் வழக்கம் போலவே எந்தச் சலனமும் இல்லாதவனாக இருந்தான். அவன் வாழ்வதையும், வாழ விரும்பாததையும் தடுக்கவோ அல்லது ஆதரிக்கவோ தமக்கு எந்தவிதமான உரிமையும் அருகதையும் இல்லை என்றாலும் அவன் வாழ விரும்பினால் இன்னும் எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் தான் பாதுகாப்பதாவும் உறுதியளிப்பது அவரது பேச்சின் சாராம்சமாக இருந்தது. அவனுக்கு தான் சொன்னது புரிந்திருக்குமா என்பதைப் பற்றிய குழப்பம் அவரை வதைத்தது. வெளியே வரும் போது கத்தி ஒன்றை அவனது இடதுகையின் ஆட்காட்டி அருகில் மிகுந்த நடுக்கத்துடன் வைத்துவிட்டு வெளியேறினார். வரவேற்பறையில் அமர்ந்து உரத்த சப்தத்துடன் அழத் துவங்கிய போது ஃபாத்திமா பாபு ஜெயா டி.வியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்.

- மே 11, 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு திருடனின் கையை உடைப்பது என்பது சாதாரண விஷயமா அதுவும் என்னைப் போன்ற நோஞ்சானுக்கு. நான் குடியிருக்கும் ஒண்டிக் குடித்தன வீட்டிற்கு எதிர்புறமுள்ள வீட்டில்தான் திருட்டு நடந்தது. அந்த வீட்டு அம்மிணி சாயந்திரமானால் வாக்கிங் போவார். அரை மணி நேரம்தான். ஆனால் ...
மேலும் கதையை படிக்க...
சாவதும் ஒரு கலை
உங்களுக்கு சில்வியா பிளாத் பற்றித் தெரியுமா? எனக்கு ஷோபனாவைத் தெரியும் வரை சில்வியா பிளாத் தெரியாது. ஷோபனாவை எப்படித் தெரியும் என்பதும் சொல்ல வேண்டிய விஷயம்தான். அருண்ஜவர்லால் எனது முக்கியமான நண்பர்களில் ஒருவர். ஜவகர்லால் இல்லை-ஜவர்லால். என்னோடு வேலூரில் படித்தவர். தற்பொழுது, ...
மேலும் கதையை படிக்க...
சரவணனை ஆரம்பத்தில் ‘கெழடு’ என்றார்கள். ஆரம்பம் என்பது பள்ளிப்பருவம். பொலவக்காளிபாளையம் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அவனை அப்படி அழைத்தார்கள். அதுவே காலப்போக்கில் கெல்டு ஆகி இப்பொழுது கெல்ஸ் என்றாகிவிட்டது. கெல்ஸ் படித்துக் கொண்டிருந்த போது அவனது அப்பா சென்னையில் இருந்தார். ...
மேலும் கதையை படிக்க...
" உங்களை ரவுண்ட் அப் செஞ்சிருக்கோம். வெளியே வந்துடுங்க. இல்லாட்டி ஃபயரிங் செய்ய வேண்டியிருக்கும்” “வேளச்சேரி பேங்க் ராப்ரி, தாம்பரம் காலேஜ் பொண்ணு ரேப் அண்ட் மர்டருக்காக உங்க நாலு பேரையும் அரெஸ்ட் செய்ய ஆர்டர் இருக்கு. நீங்க கோ-ஆப்ரேட் செய்யலைண்ணா என்கவுண்ட்டர் ...
மேலும் கதையை படிக்க...
நரேஷ் தற்கொலை செய்து கொள்வான் என்று எனக்கு முன்பே தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக செய்து கொள்வான் என்றுதான் தெரியவில்லை. ஒரு வெளிநாட்டு வங்கியில் அவன் கடன் வாங்கியிருந்தான். இந்த‌ விஷயம் எனக்குத் தெரியும். எனக்கு மட்டுமில்லாமல் இந்தத் தெருவில் இருக்கும் எல்லோருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
மொக்கையான சோகக் கதை
சாவதும் ஒரு கலை
காமத் துளி
போலீஸ் என்கவுண்ட்டர்
ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)