Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அசத்தும் ஆடவன்

 

காலை ஐந்து மணிக்கெல்லம் அவன் எழுந்துவிடுவான். கீழ் மாடியில் வரவேற்பறை, சமையலறை ஒரு குளியலறையையும் மேல் மாடியில் நான்கு படுக்கையறையோடு ஒட்டியதாக ஒரு உல்லாச அறையையும் ஒரு களிவறையோடு ஒரு குளியலறையையும் கொண்ட அந்த வீட்டின் கீழ் மாடிக்கு வந்து காலைக்கடமைகளை முடித்துக்கொண்டு தனக்கும் அவளுக்குமான தேனீரை தயார் செய்துவிட்டு, கையில் தேனீர்க்குவழையோடு மெல்ல மாடிப்படியேறி வந்து சரியாக ஆறு மணிக்கு அவளை எழுப்புவான்.

இரவு இரண்டு மணிவரையும் இருந்து தான் அன்று பொறியியல் கல்லூரியின் பரிசோதனைக் கூடத்தில் செய்து பார்த்த பரிசோதனைக்கான அறிக்கையை செய்து முடித்து மின் பெட்டியில்(Fronter) சமர்ப்பித்துவிட்டு, வந்து படுத்தவள் அவள். கண்ணெல்லம் புகையாக இருக்கின்றது, எரிகிறது என்று சொல்லி, கண்ணைக் கசக்கியவாறு சிணுங்கிக் கொண்டு அதே நேரம் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் தூக்கம் கலைந்துவிடாது மெல்ல எழும்ப முயற்சிப்பாள். அவளை ஒவ்வொரு நாள் காலையிலும் எழுப்புவதே அவனுக்கு ஒரு வேலையாக இருந்தது.

எழும்பிவிட்டாள் என நினைத்து அவன் கீழ் மாடிக்கு வந்து வர்ண வர்ணமாய் இருக்கும் உணவு பெட்டிகளில் மதிய உணவுவை தயார் படுத்துவான். பாண் துண்டுகளில் யாருக்கு என்ன பிடிக்குமோ அவையெல்லாவற்றையும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து நான்கரை வயதான மூத்தவளுக்கு அரைத்த ஈரல், மூன்றரை வயதான இரண்டாவது மகளுக்கு ஜாம், ஒன்றரை வயதான கடைக்குட்டி பையனுக்கு சீசும் பச்சைக்காயும் தன்னவளுக்கு மக்கிறல் பெட்டி ஒன்று. அவனுக்கு பிடித்த பாணோடு ஒரு வாழைப்பழம். பிள்ளைகழுக்கு ஆப்பிள் பழத்தை துண்டுகளாக வெட்டி அவற்றோடு ஓரிரு குட்டித் தக்காளிப்பழம், சில திராட்சைப்பழங்கள் என ஒழுங்குபடுத்திக்கொண்டு மீண்டும் அவளுக்கு குரல் கொடுப்பான்.

அவள் அப்பொழுதும் படுத்துக்கொண்டே “ எழும்பிவிட்டேன் என்பாள்” அவள் இன்னும் எழும்பவில்லை என்பதை அவள் குரலில் கண்டுபிடித்து விட்ட அவன். மாடிப்படிகளில் ஏறி வரும் சத்தம் கேட்டு, சட்டென்று எழுந்து குளியலறை நோக்கி விரைவாள். அவன் மீண்டும் கீழே சென்று தன் வேலைகளை கவனிக்கத்தொடங்குவான்.

தூங்கச் செல்லும் முன்பே கம்பளியிலான மெல்லிய மேல், கீழ் ஆடைகளை பிள்ளைகளுக்கு அணிவித்து உறங்க வைப்பது அவள் வழக்கம். கம்பளி ஆடைகள் சூழலின் வெப்ப தட்பத்திற்கேற்ப தம்மை இசைவாக்கும் தன்மை கொண்டவை.

அவள் தன் காலைக் கடமைகளை முடித்துக்கொண்டு தான் வெளிக்கிட்ட பிறகு மெல்லத் தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை எழுப்புவாள். மாலை ஏழு மணிக்கெல்லாம் பிள்ளைகளை தூங்க வைப்பத்தால் காலையில் எழுப்புவது சிறிது இலகுவாக இருக்கும். பஞ்சு மெத்தையை கொஞ்சிய படியே தூங்கும் அவர்களை எழுப்ப பொல்லால் யாரோ சுள்ளென்று அடிப்பதுபோல் உணர்வாள் அவள். கம்பளி ஆடையில் கத கதப்போடு இருக்கும் அவர்களுக்கு பஞ்சுகளை உள்ளே வைத்து தைத்த கனத்த குளிராடையை அணிவிப்பாள்.

மெல்ல அவர்களை ஒவ்வொருவராக கீழே இறக்கி கொண்டுவந்து பெட்டியில் அடைக்கப்பட்ட பசும்பாலை கொடுப்பாள். மீண்டும் ஒவ்வொருவராக தொப்பி, கையுறை அணிவித்து, கனத்த, குளிருக்கான சப்பாத்தை அணிவித்துக்கொண்டிருக்க. அவன் வெளியில் சென்று மகிழூந்தின்மேல் அன்றிரவு கொட்டிய பனியின் படிவுகளை அகற்றி, பின் அதை இயக்கி சூடாக்கியை போட்டுவிட்டு முற்றத்திலிருந்து காரை வெளியில் எடுப்பதற்கு வசதியாக பனிக்கட்டிகளை ஓரமாக இரு மருங்கிலும் ஒதுக்கிவிடுவான். இவ்வளவும் ஆறு மணி ஐம்பது நிமிடத்திற்குள் நடந்து முடிந்திருக்க வேண்டும்.

தட தட வென்று வெளிக்கதவிற்கு முன்னால் இருக்கும் ஓரிரு படிகளில் ஏறி வந்து “என்ன தயாரா” என்று கேட்கவும் அவள் தனது குளிராடையை போட்டுக்கொண்டு சப்பாத்தைப்போடவும் நேரம் சரியாக இருக்கும். கவனமாக பிள்ளைகளைக் காரில் ஏற்றிவிட்டு மீண்டும் ஒரு முறை வீட்டுக் கதவு பூட்டப் பட்டிருக்கின்றதா என்று சரி பார்த்துவிட்டு மகிழூந்தை எடுத்துக்கொண்டு புறப்படும்போது கும்மென்ற இருட்டில் பூம்பனி சொட்டச் சொட்ட கிறீச் கிறீச் என்ற வைபரின் (windshield wipers) சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே மூன்றே நிமிடத்தில் விர் என்று சென்று காரை தரித்து நிறுத்திவிட்டு, பிள்ளைகளை இருவரும் சேர்ந்து பராமரிப்பு பள்ளியில் இருத்தி அவர்களை காலை உணவு உண்ண ஒழுங்கு செய்துவிட்டு கையசைத்து விடைபெறும் போது நேரம் கிட்டத்தட்ட ஏழு மணியை தாண்டியிருக்கும்.

அதிகமாக பாலசுப்ரமணியம், சுசீலா,ஜானகி ஆகியோரின் பாடல்களை சுமந்த ஒலிவட்டுக்களை மாற்றி மாற்றி போட்டுக் கேட்டுக்கொண்டிருப்பாள் அவள். இடையில் பாக்கியராஜ் படப் பாடல்கள் வந்துவிட்டால்….சட்டென்று நிறுத்துவாள் அவள். அவனுக்கு குப்பென்று சிரிப்புவரும்.

இந்த பயண இடைவேளைகள்தான் இருவரின் கருத்துப்பரிமாற்றத்திற்கும் கிடைக்கும் அற்புத நேரமாக இருக்கும். அவளை கல்லூரியின் வாசலில் இறக்கிவிட்டு, அவன் வேலைக்குச் செல்வான்.

முழு நாள் விரிவுரைகளுக்கு அவள் சமூகம் கொடுப்பதென்பது அவளால் முடியாத ஒன்று. நேரம் 3:00 என்றால் அன்றைய நாள் கடைசி வகுப்பு நேரத்தை தவிர்த்துவிட்டு பேரூந்திலேறி வந்து அவன் வேலை செய்யும் இடத்தின் வாசலில் அவனுக்காக காத்திருப்பாள். நேரம் 3:30 என்றால் மீண்டும் மகிழுந்து வீடு நோக்கி உருளத்தொடங்கும்.

அவளை வீட்டில் இறக்கி விட்டு, பிள்ளைகளை பராமரிப்பு பள்ளியில் இருந்து கூட்டிக் கொண்டுவர, அவர்களுக்கான உணவு தயாராக வைத்திருப்பாள் அவள். இருண்ட அந்த மாலை நேரத்தை மின் விளக்குகளின் ஒழியில் கொஞ்சிக் குலாவும் குழந்தைகளுக்கே அர்ப்பணிப்பார்கள் இருவரும்.

இரவு ஏழுமணிக்கெல்லாம் கட்டிலில் குழந்தைகளுக்கு கதைப் புத்தகம் வாசிப்பாள். ஒரே புத்தகத்தை ஒரு கிழமை தொடர்ந்து வாசிப்பாள். கதைப்பிரியர்களான குழந்தைகளும் அதற்கு தயாராக பிஞ்சுக்கைகளால் புத்தகத்தை பிடித்து படங்களையும் பார்த்தபடியே தங்களை மறந்து தூங்கிப்போவார்கள்.

தனக்கும் அவளுக்குமான உணவை சமைத்துவிட்டு இரவு ஒன்பது மணிக்கு, குழந்தைகளோடு சேர்ந்து சாப்பிடாமலே தூங்கிப்போன அவளை எழுப்புவான் அவன். அப்பொழுதுதான் அன்றைய நாள் அறிக்கைகளை எழுதி முடிக்க வேண்டுமே என்ற எண்ணம் வர துள்ளி எழும்புவாள் அவள்.

ஒரு இருமல், சில பேச்சு அவ்வளவுதான். இரவுச்சாப்பாட்டின் பின் அவனும் தூங்கிவிட, கணனியோடு கண்கள் சொருகிவிடும் அவளுக்கு. இப்படியே நகர்ந்து கொண்டிருந்தது ஒவ்வொரு பரபரப்பான நாட்களும்..

அன்றும் அப்படித்தான் இரவு ஒரு மணி மட்டும் விழித்திருந்து அன்றைய நாள் கல்லூரி பரிசோதனைக் கூடத்தில் செய்த பரிசோதனை ஒன்றின் அறிக்கையை செய்து முடித்து மின் பெட்டியில் சமர்ப்பித்துவிட்டு படுத்தவளுக்கு றிங் றிங் றிங் என்ற சத்தம் கேட்கவே யார் அது இந்த நேரத்தில் என்று எண்ணிய வாறே ஒரு வேளை ஊரில் இருந்து அவசரமாக தொலைபேசி அழைப்பாக இருக்குமோ என எண்ணிக்கொண்டு கண்ணைக் கசக்கியவாறே எழுந்தாள்.

சத்தம் கேட்கும் திசை நோக்கி விரைந்தாள். மேசைமேல் இருந்த மின்விளக்கின் மங்கலான ஒளியில் தென்பட்டது; கைத்தொலைபேசியின் அலாரம், அருகே அலங்கரிக்கப்பட்ட கடதாசி இதளில் வடிவமைக்கப்பட்ட ஓர் சிறிய பெட்டி, சிவப்பு ரிபண் கட்டப்பட்டு இங்கே வா என்று அழைப்பதுபோல் இருந்தது. பக்கத்து அறையின் திறந்து விடப்பட்ட கதவினூடே சிரிப்பொலி எழுப்பியபடி கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தபடியே “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மடம்” என்றான் அவன். அவளுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி.

அன்று தனது பிறந்தநாள் என்பதே அவளுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. பெட்டியை திறந்து பார்த்தாள், அவள் வாங்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசைப்பட்டுக்கொண்டிருந்த, வெள்ளியில் முத்துக்கள் கோர்க்கப்பட்ட ஓர் கழுத்து மாலை பளபளத்துக் கொண்டிருந்தது… ஓடிச்சென்று அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.

அன்றைய காலைப்பொழுதினை ஆங்காங்கே பரிசுப்பொருட்களை வைத்து அவளுக்கு இன்ப அதிர்ச்சியூட்டிக் கொண்டிருந்தான் அவன். பூக்கொத்க்துகளாலும் சிறு சிறு பரிசுப்பொருட்களாலும் அவள் மட்டுமல்ல அந்த வீடும் குதூகலித்துக்கொண்டிருந்தது… 

தொடர்புடைய சிறுகதைகள்
அது ஒரு அதிகாலை வேளை, எப்பவும்போலவே ஒலிக்கும் வில்வையடிப்பிள்ளையார் கோயில் மணியோசை அன்று ஒலிக்கவில்லை. இலைகளின் சலசலப்பு கேட்டால் கூட திடுக்கிடும் பயம் உடனே தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு ஊரே பேரமைதியாய் இருந்தது. அது ஒரு சிறிய நகரம் என்றே சொல்லலாம். ...
மேலும் கதையை படிக்க...
காயா, அவள்தான் வீட்டில் கடைசிப்பிள்ளை. அவள் இப்பொழுது மிகவும் கோவமாக இருக்கிறாள். காலையில் கனவு கண்டனீங்களா? என்று மிகவும் பயமுறுத்தும் குரலில் கேட்டார் அப்பா. இல்லை, என்று சத்தமிட்டு கூறினாள் காயா. இல்லை, இல்லை இல்லை என்று கத்தினாள். வா இங்கே, காலை உணவு ...
மேலும் கதையை படிக்க...
பென்குயின்( பறக்கமாட்டாது ஆனால் நீந்தும் தன்மை கொண்டது ) ஒரு சிறிய பறவை. அது எப்பொழுதும் பெரிய பொருட்களைப்பற்றியே கேள்விகேட்டுக்கொண்டிருக்கும்! " கடல் எவ்வளவு ஆழத்திலிருக்கின்றது?” “சூரியன் இரவில் நித்திரை செய்கின்றதா?” என்றெல்லாம் வினாவிக்கொண்டிருக்கும். இப்படித்தான் ஒரு நாள் அது வானத்தின் உயரம் எவ்வளவு? எனக்கேட்டுக்கொண்டிருந்தது..... " ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு ஆவணி மாதத்து வெள்ளிக்கிழமை. வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த ப்ரியா, அவசர அவசரமாக சமையல் வேலைகளை முடித்துவிட்டு, வெளியில் புறப்படத் தயாரானாள். நானும் வருகின்றேன் என்று அடம்பிடித்தான் ஏழு வயதான மகன். இதோ அரை மணித்த்கியாலத்தில் வந்து விடுகின்றேன் ...
மேலும் கதையை படிக்க...
ஒஷ்லோ மாநகரம் பல்லின மக்களை உள்வாங்கி தனித்துவமாய் ஓங்கி நிற்கின்றது நோர்வே நாட்டில். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்தவர்கள் முதலாம் தலைமுறையாகவும், இரண்டாம் மூன்றாம் தலைமுறையாகவும் வசிக்கும் இந்த நாட்டில்தான் லவனி பிறந்தாள், வளர்ந்தாள், படித்தாள், பட்டமும் பெற்றாள் என்பது அவளுக்கே உரிய ...
மேலும் கதையை படிக்க...
புரியாத புதிர்
காயாவும் அவள் கோபமும்!
பென்குயின் பயணம்
ப்ரியாவின் விபத்து
ஐரோப்பாவில் ஜாதிக்கலவரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)