Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்

 

23 வயது முதல் 28 வயது வரை

அங்கயற்கன்னிதான் குடும்பத்தில் மூத்தப் பெண். வயது இருபத்து மூன்றாகிவிட்டது. இருபத்தைந்து வயதில்தான் அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதென பழனிவேலும் மண்டோதரியும் திட்டமிட்டிருந்தார்கள். அங்கயற்கன்னிக்கு அடுத்து வரிசையில் நிற்பவள் பூங்குழலி. ஆனால் அவளுக்கு இப்போதுதான் பத்தொன்பது. அவசரமேதும் இல்லை என்ற சாவகாசத்தில் காலாட்டிக்கொண்டு அங்கையற்கன்னிக்கு மாப்பிள்ளை தேடினார்கள் இருவரும்.

ஆனால், சில நிபந்தனைகள். எந்த மாப்பிளையாக இருந்தாலும் சரி. நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுக்கு உடையவனாயிருந்தாலொழிய அங்கையற்கன்னி அவனுக்கு எட்டாக்கனி. பழனிவேலுக்கும் மண்டோதரிக்கும் அங்கையற்கன்னியின் வாழ்க்கை ஒரு பொன் தேசமாகத் திகழவேண்டும் என்பதுதான் குறிக்கோள்.

அவளது அழகுக்கு எத்தனையோ ஆண்கள் சொக்கிப் போவார்கள். மாநிற மேனியில் எள்ளளவுகூட கரும்புள்ளியோ வடுவோ கிடையாது. மொழமொழவென இருக்கும் அவளது கன்னத்துக்கே ஆயிரம் புள்ளிகள் தேரும்! அங்கையற்கன்னியின் கண்கள் இருக்கின்றனவே, அவை இரண்டும் அருவி நீர்போல பளபளவென இருக்கும். பார்ப்பவர் முகம் அதில் தெரியும்! பெண்ணுக்கேற்ற உயரம்; உயரத்துக்கேற்ற எடை.

இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் இளங்கலைப் பட்டத்தை முடித்தாள். அவளது படிப்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? சமையலும் அத்துப்படிதான். கோலம் போடத்தெரியும்; துணி தைக்கத் தெரியும். பள்ளியில் படித்தும் தேராத பிள்ளைகளுக்குக் கொஞ்ச நேரம் அங்கையற்கன்னி சொல்லித் தந்தால் போதும்; தேரிவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றவர்கள் சொன்ன சொல்லைத் தாண்டவே மாட்டாதவள் அவள். வரப்போகிற கணவனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? ஒரு பெண்ணை எப்படி வளர்க்க வேண்டுமோ அப்படித்தான் வளர்த்திருக்கிறோம் என்பதில் பழனிவேலுக்கும் மண்டோதரிக்கும் ஆத்ம திருப்தி. இப்பேற்பட்ட பெண்ணைத் திருமணம் செய்ய ஒருத்தன் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்? சும்மா போகிற வருகிறவனுக்குத் தள்ளிவிட முடியுமா?

அதனால்தான் மாப்பிள்ளையாக வரக்கூடிய ஆண்மகனுக்குச் சில தகுதிகளை நிர்ணயித்து வைத்திருந்தனர் இருவரும். மாப்பிள்ளை ஆகக் குறைந்தது இளங்கலை பட்டதாரியாக இருக்கவேண்டும். முதுகலையாக இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க நினைத்திருந்தார்கள். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அம்மா அப்பா இரண்டு பேருமே உடனிருப்போராக இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றவர் அருமை தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்கிற அனுமானம். நல்ல கடவுள் பத்தியாக இருக்கவேண்டும். ஏனென்றால் அப்போதுதான் கடவுளுக்குப் பயந்து தப்புத்தண்டா செய்யாதவனாக இருப்பான் மாப்பிள்ளை. குடும்பம் நல்ல வசதியான குடும்பமாக இருக்கவேண்டும். சொந்த வீடு இருக்கவேண்டும். நாளை அங்கையற்கன்னி வாழ்ந்தால் மகாராணிபோல் வாழவேண்டும் என்ற நோக்கம்தான். பங்குச் சந்தையில் பங்குகள் வைத்திருப்போருக்கு முன்னிரிமை. காப்புறுதியும் இருக்கவேண்டும். உடல் அளவிலும் மன அளவிலும் எந்த கோளாறும் இல்லாத ஆரோக்கியம் மிகுந்த ஆளாக இருப்பது அவசியம். எங்கும் கடன் வாங்கியிருக்கக்கூடாது; கொடுத்திருக்கக்கூடாது. கூட்டாளிகள் சகவாசம் கூடாது. மது மாது சூது முப்பழக்கங்களும் இருக்கக்கூடாது. புகைபிடிப்பவனாக இருந்தால் முதல் சுற்றிலேயே அவுட்! காதல் செய்த அனுபவம் இருக்கக்கூடாது; அங்கையற்கன்னிக்கும் அந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது! முக்கியமான இன்னொன்று மாப்பிள்ளை கட்டாயமாக ஜாதிக்காரனாய் இருக்கவேண்டும். அவர்களது குடும்ப அந்தஸ்துக்கு அது மிகப் பொருந்தும்!

என்ன? மூச்சு வாங்குகிறதா?

இந்த கட்டுப்பாடுகள் 23 வயதுமுதல் இருபத்தெட்டு வயதுவரை நடைமுறையில் அமல்படுத்தப்பட்டுவந்தவை. அதில் தேரிய ஒருத்தரைக்கூட கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்த ஆண்டோடு இருபத்து ஒன்பது வயதாகிவிட்டது அங்கையற்கன்னிக்கு. அதனால், விதிமுறைகளைக் கொஞ்சம் தளர்த்த முடிவு செய்திருந்தார்கள் பழனிவேலும் மண்டோதரியும். அங்கையற்கன்னி தற்சமயம் வங்கி ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். வேலையே அவளுடைய பாதி பிராணனை வாங்கிக்கொண்டிருந்த சமயம்.

29 வயது முதல் 33 வயது வரை

வேலை வேலை என்று போனதில் ஐந்தண்டுகளுக்கு முன்பிருந்த பருவக்கலை கொஞ்சம் தேய்பிறை கண்டிருந்தது அங்கையற்கன்னிக்கு. வேலைக்குப் போவதும் சம்பாரித்ததைப் பழனியப்பனிடம் ஒப்படைப்பதுமாக வாழ்க்கை உருண்டுகொண்டிருந்தது.

தூரத்துச் சொந்தம் ஒன்றில் பையன் இருப்பதாக பழனியப்பனின் தமக்கை வந்து சேதி சொன்னாள். ஆனால், பையன் பல்கலைக்கழகம் எட்டிப்பார்த்தது கிடையாது என்ற கறுப்புப் புள்ளியையும் போட்டுவைக்க மண்டோதரிக்கு ஏதோ உதைப்பது போன்று இருந்தது. படித்தப் பெண்ணுக்கு படிக்காத துணை எத்தனை நாட்கள் தாக்குப்பிடிக்கும்? வேண்டாம் என்றாள். அவன் நிராகரிக்கப்பட்டோர் பட்டியலில் பதினேழாவது மாப்பிள்ளை.

பழனியப்பனுக்கு, மாப்பிள்ளை பல்கலைக்கழகம் எல்லாம் போகவில்லை என்றாலும் பரவாயில்லை. சிகரெட், மது இதெல்லாம் இல்லாமல் இருந்தால் போதும். சொந்தத்திலேயே மாப்பிள்ளை கிடைக்குதா என்று கேட்டிருந்ததில் இன்னொருவனின் பெயர் பட்டியலுக்கு இழுத்துவரப்பட்டது. ஆனால், பையனுக்கு ஏற்கனவே காதல் தோல்வி கண்ட அனுபவம் இருப்பதாகக் கேள்விப்பட்டதும் அவன் பதினெட்டாவது எண்ணைத் தழுவினான். இன்னும் சிலருக்கு சிகரெட் பழக்கம் இருந்தது; சிலர் வருமைக் கோட்டைத் தாண்டி சில ஆண்டுகள் கழிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்…

ஆறேழு ஆண்டுகளாக மாப்பிள்ளைகளைத் தேடிக் கொடுத்து அலுத்துப்போன அத்தைகளும் பெரியம்மாக்களும் சில உறவினர்களும் பின்னங்கால் பிடரியடித்துப் பின்வாங்கிகொண்டனர். மாப்பிள்ளை தேடும் பளுவை தன்னந்தனியாக ஏற்றுக்கொண்டு தேடுதல் வேட்டையில் தீவிரம் செலுத்தினர் பழனியப்பனும் மண்டோதரியும்.

எதையும் கேட்க மனமும் இல்லாமல் ஆசையும் இல்லாமல் சிவனே என்று வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அங்கையற்கன்னி. ஆனால், பூங்குழலிக்கு மட்டும்தான் கொஞ்சம் அவசரம். அவள் வாய்திறந்து கேட்கக் கூடியவள். அங்கையற்கன்னியைப் போல அல்ல. இன்றைய தேதியில் அக்காளுக்கு வயது முப்பத்திரண்டு என்றாள் தங்கைக்கு இருபத்தெட்டு.

34 வயது முதல் 38 வயது வரை

பூங்குழலி வீட்டை விட்டு ஓடிப்போய் சில ஆண்டுகள் கழிந்துவிட்டன. அக்காவுக்குத் திருமணம் ஆன பின்பு உனக்கு என்று சொல்லிவைத்தது வைத்தபடியே கிடக்க, சொல்லிச் சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை யாரும். தனது முப்பதாவது வயதில் ஓடிப்போனாள் ஒருத்தனுடன். இதில் பழனியப்பனுக்கும் மண்டோதரிக்கும் மிகுந்த வருத்தம். ஏனென்றால் பூங்குழலியைத் திருமணம் செய்தவன் ஏற்கனவே திருமணமாகி மனைவியைச் சாலை விபத்தில் பலிகொடுத்த ஆசாமி. அங்கையற்கன்னிக்குப் பார்க்கும் மாப்பிள்ளை போல் பூங்குழலிக்கும் பார்த்துத் தரவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்கள். அவசரக்கார இளைய மகள்! ஓடிப்போனது போனதாக இருக்கட்டும் என்று விட்டாகிவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னரே மாப்பிள்ளைக்கான விதிமுறைகளைக் கொஞ்சம் தளர்த்தியிருந்தார்கள் இருவரும். பழனியப்பன் மிக தாராளமாகத் தளர்த்தியிருந்தாலும் மண்டோதரி சில தகுதிகளைக் கராராக எதிர்பார்த்திருந்தாள்.

ஜொகூரின் ஒரு மாப்பிள்ளையின் பெயரைக் கேள்விப்பட்டு பழனியப்பன் நைசாக விசாரித்துவந்து விவரத்தைச் சொன்னார். பையனுடைய அப்பா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் தவறியிருக்கிறார். அம்மா அவன் பிறந்தவுடனேயே இறந்துபோய்விட்டாள். கௌவுண்டரில் வன்னியர் அல்லன். கொஞ்சம் பணவசதி குறைவு. மற்றபடி அவன் ஒரு உத்தமன். தமிழ் படிக்கத் தெரியாவிட்டால் பரவாயில்லை; பணவசதி, படிப்பு இதெல்லாம் தளர்த்தப்பட்டவை பட்டியலில் இடம்பெற்றாலும் அனாதைப் பையனுக்குப் பெண்ணைக் கட்டிக்கொடுப்பது எப்படி எனும் சிக்கல் எழுந்தது. யாராவது ஒருத்தர் இருந்திருந்தாலும் பரவாயில்லை. பாதபூஜை யாரை வைத்துச் செய்வதாம்?
ஜொகூரில் பார்த்த அந்தப் பையனுடைய உறவுகளின் வழியே இன்னொரு பையன். சரியான கறுப்பு. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். அங்கையற்கன்னியைவிட இரண்டு ஆண்டுகள் மூத்தவன். அப்படியானால் இன்றைய தேதியில் அவனுக்கு முப்பத்தெட்டு. சிகரெட் பழக்கமுண்டு. மற்றவை பரவாயில்லை. ஆனால், அவனது கரிய நிறம் மண்டோதரிக்குப் பிடிக்கவில்லை.

39 வயது முதல் 43 வயது வரை

வயது அங்கையற்கன்னிக்கு நாற்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அவளுக்காகப் பார்க்கப்பட்ட மாப்பிள்ளைகளின் எண்ணிக்கையும் நாற்பதை நெருங்கிகொண்டுதான் இருக்கிறது. தனது தலையிலிருந்து முதல் வெள்ளை முடியை யதார்த்தமாகப் பிடுங்கி போட்டபோதுதான் தனக்கு வயதாகிறதோ என்ற சிந்தனை வந்தது.

அங்கையற்கன்னிக்கு ஓர் ஆசை. பூங்குழலியின் இரண்டு மகன்களையும் விமானத்தில் பறக்கவைக்க வேண்டுமென்று சில நாட்களாக நினைத்திருந்தாள். இருவரில் யாரோ ஒருவன்தான் கேட்டிருக்கவேண்டும். அதற்காக சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்தம் செய்துகொண்டிருந்தாள். பூங்குழலி எப்படியோ மறுபடியும் குடும்பத்தோடு ராசியாகியிருந்தாள்.

பூங்குழலி வேலை செய்யும் இடத்தில் பழக்கமான பெண்மணி மூலமாக ஒரு ஆளைத் தெரிந்து வந்து மண்டோதரியிடம் விபரத்தைச் சொன்னாள். “பேரு இரும்பொறை. அவருக்கு வயசு நாப்பத்தி அஞ்சி. பொண்டாட்டி செத்துப்போயிட்டாங்க. மொத பையன் கல்யாணம் பண்ணி வெளிநாட்டுல இருக்கான். ரெண்டாவது பொண்ணு. இன்னும் படிக்கிது. பையனுக்கும் பொண்ணுக்கும் வயசுல பெரிய இடைவெளி. பையன் இருவத்தி மூனு வயசு. பொண்ணுக்கு பன்னண்டு வயசு. அவளத் தாய்மாதிரி பாத்துக்குற ஒருத்தியத்தான் ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்குறாராம்,” என்றாள் பூங்குழலி. ரெண்டாந்தாரமாவது மூன்றாந்தாரமாவது எவனாவது வந்து கல்யாணத்தைப் பண்ணி அங்கையற்கன்னியைக் கூட்டிக்கொண்டு போனால் சரி என்ற மனோநிலைக்கு வந்தாயிற்று. யோசனைக்கு ஒத்தாசை செய்ய பழனியப்பன் இல்லை. கடந்த ஆண்டு அவர் இறைவனடியைச் சேர்ந்துவிட்டார்.

“சிகரெட் தண்ணியெல்லாம் உண்டு. ஆனா அளவோடதானாம். படிப்பு கிடையாது. எல்லாம் சொந்தமா ஒழைச்சது,” என்று பெண்பார்க்க வந்த இரும்பொறையைப் பற்றி மேல் விவரங்களைத் தெளித்தாள் பூங்குழலி. அங்கையற்கன்னி தேநீரைக் கொண்டுவந்து இரும்பொறை உட்பட குழுமியிருந்தவர்களுக்கு நீட்டிவிட்டு தட்டை மேசையில் வைத்தாள். பெண்பார்க்க வரும் சடங்கு அவளுக்கு சலிப்புத்தட்டும் அளவுக்கு இன்னும் போகவில்லை. பெண்பார்க்கும் சடங்கு வரை தாக்குப் பிடித்த மாப்பிள்ளைகளில் இரும்பொறை மூன்றாவது ஆள்தான்.

ஆளைப் பார்க்க தடியாக இருந்தார் இரும்பொறை. முகத்தில் அம்மை வடுக்கள் தெளிவாகவே தெரிந்தன. வயசுக்கேற்ற வெள்ளை முடி. அதில் சமயத்துக்கேற்ற கருஞ்சாயம். வரதட்சினை எதுவும் வேண்டாம் என்று அவர் சொன்னது கொஞ்சம் சிறப்பாம்சம் கொண்ட செய்தி.

அவருக்கு வயது நாற்பத்து ஐந்து. அங்கையற்கன்னியின் வயது நாற்பத்து மூன்று. ஆக, வயதில் பெரிய வித்தியாசம் கிடையாது. எல்லாம் ஒத்துப்போய்விடும் போலத்தான் இருந்தது.

மண்டோதரி “மாப்பிள்ளை நம்ம ஆளுதானே. பாத்தா அப்படித் தெரியலையே?” என்று பூங்குழலியிடம் கேட்டாள். பூங்குழலி “இல்லை,” என்று சொன்னதும் மண்டோதரியின் முகம் கறுத்துவிட்டது. “ஏண்டி, ஆளு நம்ம ஜாதியா இல்லையான்னு ஏன் விசாரிக்கலே? நீ விசாரிச்சுத்தான் சொன்னேன்னு இல்ல நான் நெனைச்சிக்கிடு இருந்தேன்?” என்று குதிக்க ஆரம்பித்துவிட்டார். அவரது குரலில் இருந்த கடுகடுப்பு சிலர் காதுகள் வரை போய் பாய்ந்தது. “இன்னும் நீங்க திருந்தலையா?,” என்று பூங்குழலி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அங்கையற்கன்னி அடுத்த ஐந்தாண்டு திட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

(மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆசுவாசமாய் நிறம்பி கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச் சமாளிக்க, முடிந்தவரை முடக்கிவிட, அது முடியாமல் போக வரும் கோபத்தை யார் மேலாவது அல்லது எதன் மேலாவது காட்டுவது, சொல்லப்போனால் ...
மேலும் கதையை படிக்க...
ஊட்டச்சத்து தின்னுத் தின்னு நாளுக்கு நாள் வெரசா வளருது பார் கட்டடம். மாசத்துக்கு ஒரு கட்டடமாச்சும் முளைச்சுருதுடா சாமி இந்த கோலாலம்பூருல. பய மவனுங்களுக்கு மட்டும் பணம் காய்க்கிற மரம் எப்பிடிதான் கெடைக்குதோ? போன வாரம் வரைக்கும் அந்த பிரிக்பீல்ட்ஸ் ட்ராபிக்காண்ட ...
மேலும் கதையை படிக்க...
“இன்னைக்கு நான் ரெண்டுல ஒன்னு கேக்குறதே சரி!” கடுப்பின் உச்சத்தில் இருந்த எனக்கு, கற்று வைத்திருந்த யோகப் பயிற்சியும் வேலை செய்யவில்லை; ப்ளட் ப்ரஷர் மாத்திரையும் வேலை செய்யவில்லை. பொட்டில் நரப்புப் பொட்டலங்களில் சுண்டக் காய்ச்சின ரத்தம் அழுத்ததைக் கொடுக்க அதைத் ...
மேலும் கதையை படிக்க...
அவளுக்கு அன்றுதான் முதல்நாள் வேலை. மிகவும் உற்சாகமாக இதுநாள்வரை தனக்காகவும் தொழிலுக்காகவும் கற்றதெல்லாம் பயன்படப்போகிறது என்பதை நினைத்துத் தனக்குத் தானே ‘ஷபாஷ்’ சொல்லி தட்டிக் கொடுத்துக் கொண்டாள் கலைமதி. தலைமையாசிரியர் அவளைத் தன் அறைக்கு அழைத்து, “பாரம்மா, அட்டவணையெல்லாம் பார்த்தாச்சா? நீ சொல்லிக் ...
மேலும் கதையை படிக்க...
அறிவியல் பாடத்தில் அன்றுதான் போதித்தார்கள் அது எதனால் என்று. ஒரு எக்ஸ் ஒரு ஓய் குரோமோசோம் ஆணின் மரபணுவாகவும் இரு எக்ஸ் குரோமோசோம்கள் பெண்ணுக்குரிய மரபணுவாகவும் இருக்கும். ஆனால் ஆணுக்கு ஒரு ஒய் குரோமோசோமோடு இரு எக்ஸ் குரோமோசோம் அமைந்து விட்டால் ...
மேலும் கதையை படிக்க...
[என்றாவது ஒரு நாள் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்று நம்புகிறவர்களுக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இப்படைப்பு சமர்ப்பணம்] ஆரவமர பத்து மணிக்கு எழிஞ்சே பழக்கமா போயிடிச்சிப்போ. என்னாவோ கெட்ட பழக்கம்! கண்ண முழிச்சதும் சொவருல ஒட்டிவச்சிருக்குற அந்தப் படத்தப் பாத்துப்புட்டாதான் நமக்கு நாளே ஓடும். ...
மேலும் கதையை படிக்க...
“முடியவே முடியாது” என்று கறாராகச் சொல்லிவிட்டேன். விடவே விடமாட்டோம் என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பிள்ளைகளைப் பார்த்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. போனால் போகிறது என்று அவர்கள் போக்குக்கு ஒத்துப்போகலாம் என்றுதான் தோன்றிற்று என்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் எனக்கென்று ஒரு ‘இது’ இருக்கிறது அல்லவா? ...
மேலும் கதையை படிக்க...
மாறனுக்குக் கண்ணத்தில் அறை வாங்கியதுபோல் இருந்தது. அவமானமும் ஆத்திரமும் ஜிவுஜிவுயென தலைக்குமேல் ஏறி உச்சந்தலையில் ஆணியடித்துப் பொறிகிளப்பின. ஒன்றும் செய்யமுடியாத வக்கற்ற நிலை அவனை ஏளனம் செய்து உட்கார வைத்துவிட்டது. பக்கத்து நாற்காலியில் எதிர்த்த வரிசையில் என்று எல்லாரும் தன்னைப் பற்றித்தான் ...
மேலும் கதையை படிக்க...
ஆசுவாசமாய் நிரம்பிக் கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச் சமாளிக்க, முடிந்தவரை முடக்கிவிட, அது முடியாமல் போக வரும் கோபத்தை யார் மேலாவது அல்லது எதன் மேலாவது காட்டுவது, சொல்லப்போனால் ...
மேலும் கதையை படிக்க...
1 திருமணமாகி மூன்றாண்டுகள் ஒய்யாரமாய் ஓடிவிட்டன. என் மருமகள் செண்பகத்தின் வயிற்றில்தான் இன்னும் எந்த மாறுதலும் இல்லை. திருமணத்திற்கு முன்பு இருந்த அதே தட்டை வடிவில்தான் இருக்கிறது. அது கொஞ்சம் உப்பினால்தான் என்னவாம்? பேரனையோ பேத்தியையோ பார்க்க எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? ...
மேலும் கதையை படிக்க...
நேற்றைக்கு ராதா
கோல பெர்ணம் எஸ்டேட்டிலிருந்து கோலாலம்பூர் மாநகர் வரை
உடைந்த மூக்கில் இன்னொரு அரசியல்
சிவப்புப் புள்ளிகள்
ஆண்மகன்
தமிழீழம் 2030
நான் பாடிய பாட்டு
இன்னும் அரைமணிநேரத்தில்…
ராதா : எண் 7, இருபத்து நான்காவது மாடி
யார் அந்த சண்முகம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)