அங்கே என்ன இருக்கு?

 

வீட்டிற்குள்ளேயே நீச்சல்குளம், விளையாட்டு மைதானம், கைதட்டினால் ஓடும் கார், காந்த விசையால் மேலே, கீழே போகும் பென்க்வின்கள். போலீஸ் சைரனோடு ஓடும் கார்… இப்படி வீடு முழுவதும் எத்தனை எத்தனையோ வெளிநாட்டு விளையாட்டுச் சாமான்கள்!

ஆனால், ரகுராமன் குழந்தைகளான சங்கீதாவும், சுமித்ராவும் இவை அத்தனையையும் ஒதுக்கிவிட்டுச் சதா அடுத்த வீட்டுக்கே போவது தான் அவனுக்குப் பிடிக்கவில்லை.

அவனும் எத்தனையோ முறை கண்டித்துப் பார்த்து விட்டான்; அவர்கள் கேட்டபாடில்லை, அப்படி அந்த வீட்டில் என்னதான் இருக்கிறது? விளையாடக் கூட இவர்கள் வயதொத்தவர்கள் கிடையாது. ஒரு கணவன், மனைவி கல்யாணவயதில் ஒரு கன்னிப்பெண். அவனுக்குப் புரியா புதிராக இருந்தது.

“ஏம்மா, இத்தனை சாமான்கள் வாங்கிப் போட்டிருக்கேன். அங்கே போய் என்ன விளையாட்டு?” என்று அவன் கேட்ட பொழுது…

“போங்கப்பா, இதென்ன வீடு! அந்த வீட்டு வாசலிலே கம்பி இருக்கு. ஜாலியா அதில் ஏறி ஆடலாம். அழகான திண்ணை இருக்கு! ஏறி இறங்கிக் குதிக்கலாம். அப்புறம் கொல்லையிலே இருக்கிற மாமரத்து நிழலிலேயும் விளையாடலாம்…”

குழந்தைகள் வர்ணித்ததைக் கேட்ட பொழுது, ரகுராமனுக்குச் சிரிப்பாக இருந்தது. இருப்பினும் குழந்தைகளை முன்னிட்டு அவனுக்குள்ளேயே ஒரு தீர்மானமும் ஏற்பட்டுவிட்டது.
ஒரு மாதத்திற்குப் பின்…

அதிகத் தொகையானாலும் பரவாயில்லையென்று அந்த வீட்டை விலைபேசி முடித்துவிட்டான். அந்த மகிழ்ச்சியைக் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள விரைந்தான்.

சங்கீதா! சுமித்ரா உங்களுக்கு அந்த வீடு தானே பிடிக்கிறது! போங்க… போய் ஜாலியா விளையாடுங்க! இனிமேல் அது நம் வீடு, எப்பவும், போகலாம் விளையாடலாம்!

ஆனால் குழந்தைகள் நகரவில்லை. சதா காலமும் எதையோ பறிகொடுத்தவர்கள் போல் இருந்தார்கள்.

“ஏம்மா, அந்த வீட்டுக்கே போகலை? கம்பியிலே ஆடலாம்; திண்ணையிலே குதிக்கலாம்! ஏன் போகமாட்டேங்கிறீங்க, சொல்லுங்கம்மா?” ரகுராமன் புரியாமல் குழம்பிக் கேட்டான்.

“அந்த வீட்ல எல்லாம் இருந்து என்னப்பா? எங்களைக் கம்பியிலே தூக்கிவிட்டு ஆடச்சொல்லி ரசிக்க, அந்த அக்கா இல்லையே! ஆசையோடு கடலை அவிச்சு ஊட்டற ஆன்ட்டி இல்லையே! அதனாலே எங்களுக்கு அங்கே போகவே பிடிக்கலைப்பா…” விரக்தியோடு பேசின, குழந்தைகள்.

“நான் ஒரு முட்டாள்! வீடு என்பது வெறும் கட்டடம் மட்டும் தான் என்றல்லவா நினைத்து விட்டேன்…’ என்று மனத்துக்குள்ளேயே அங்கலாய்த்தான் ரகுராமன்.

- 20-09-1987 

தொடர்புடைய சிறுகதைகள்
“ஏம்மா திலகா, புது கணக்கு ஆசிரியர் வசந்தகுமார் எப்படி? நல்லா பாடம் சொல்லிக் கொடுக்கிறாரா?” தலைமையாசிரியர் தன் மகளைக் கேட்டார். “ரொம்ப விரட்டல் ஜாஸ்தியா இருக்கு. சரியான சிடுமூஞ்சியா இருக்காரு. சந்தேகம் கேட்கவே என் தோழிகள் எல்லாம் பயப்படுறாங்கப்பா.” தலைமையாசிரியர் சிந்தனையோடு நடந்தார். சின்ன வயசு, நல்ல ...
மேலும் கதையை படிக்க...
தட்டில் கொய்து வைத்திருந்த பிச்சி மொக்குகள் கட்டவிழ்ந்து சுற்றுப்புறத்தையே சுகந்தமாக்கின. கதிரவன் காய்ந்து காய்ந்து களைத்துப் போனவனாய் மேல்திசையில் மயங்கி வீழ்ந்தான். இருளோனின் அரசாட்சி ஆரம்பமாகியது. பத்து ஜாமம் வரை யக்ஞவல்கியர் வரவில்லை. கார்த்தியாயினி சுத்தமான பாரிஜாதமலர். நிலை குலைந்து போயிருந்தது. யக்ஞவல்கியர் ...
மேலும் கதையை படிக்க...
“நாணா, உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம லலிதா மேடம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்” ரங்கசாமி சொன்னதும் அதிர்ச்சியால் கையில் உள்ள பேப்பர் கீழே விழ “வாட் நான்சென்ஸ், உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு இப்படியொரு புரளியைக் கிளப்பி விட?” கோபமுற்றான் நாணா என்ற நாராயணசாமி. “ஆமாண்டா, நாணா, ...
மேலும் கதையை படிக்க...
வானத்தில் எங்கும் ஒரே கரிய இருள் சூழ்ந்திருந்தது.  வையத்தைக் குளிர வைக்க வானம் தன் வண்ணத்தை மாற்றிக் கரிய போர்வையில் ஒளிந்து காட்சி தந்தது. மருத்துவமனையின் ஒரு மூலையில் உள்ள கட்டிலில் அசைவற்று படுத்திருந்தான், சுந்தர்.  நீல வானிலே தோன்றும் நித்திலக் குவியலாம் ...
மேலும் கதையை படிக்க...
இத்தனை காலமும் மனசுக்குள்ளிருந்து ஒரு பார்வை. ஒரு திருப்தி எல்லாமே திடுதிப்பென்று அசைவது போலிருந்தது வினிதாவுக்கு. உண்மையில் தன் கணவர் தனக்குத் துரோகம் செய்கிறாரா? அதுவும் தன் தோழியுடன்...? இந்த அதிர்ச்சிமிக்க ஒரு விஷயத்தை அவளால் நம்ப முடியவில்லை. அவளால் நம்ப முடியவில்லை என்பதைவிட ...
மேலும் கதையை படிக்க...
வசந்தகுமார்
ஜ்வாலை
அணையா விளக்கு
நாட்டுப் பற்று
ராங் நம்பர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)