அக்கரைப் பச்சை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 2,575 
 

கடற்கரைக் கோயிலை ஒட்டிய வெளிப்புறத்தில், சிறிய கைப்பிடிச் சுவர் மீது அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் புன்னைவனம். பிரகாரத்தில் போய் வந்து கொண்டிருந்த ஆட்கள் நல்ல வேடிக்கைப் பொருள்களாக விளங்கிய போதிலும், கிழக்கே விரிந்து கிடந்த கடலும் வானமும், கரையை ஒட்டியிருந்த மணல் மேடும் ஒரு சில மரங்களும் தந்த காட்சி இனிமையே அவருக்கு மிகுதியும் பிடித்திருந்தது.

இவை எல்லாம் அவருக்கு மன அமைதியைத் தந்தன என்று சொல்வதற்கில்லை. அந்த அமைதியும், அதனால் பிறந்த ஆனந்தமும் அவரை விட்டு விலகிப் போய் எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. உலகத்தின் அதிசயங்களையும் அழகுகளையும் கண்டு களிப்புதற்காக ஊர் சுற்ற வேண்டும்; நம்முடைய காலம் பூராவும் நமக்கே சொந்தமாக அமைதல் வேண்டும் என்ற பிடிவாதத்தோடுதான் அவர் வாழ்க்கைப் பாதையில் அடி எடுத்து வைத்தார். அந்த உறுதியும் ஊக்கமும் உற்சாகமும் அவரிடம் இப்போது இல்லை. “ஏதோ பழக்க தோஷத்தினால்தான்” அவர் இப்போதெல்லாம் இயங்கி வருகிறார்.

“ஒழுங்கு முறை தவறாத அன்றாட நியதிகள். ஓட்டல் சாப்பாடு. லாட்ஜில் வாசம். பொழுது போக்குவதற்குப் படிப்பு. ஊர் சுற்றல் – என்னவோ இயந்திர ரீதியில் நடந்து கொண் டிருக்கிறது நம் வாழ்க்கை!” என்று அவர் உள்ளம் அடிக்கடி அலுத்துக் கொள்வதும் ஒரு வழக்கமாகிவிட்டது.

இருபது இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு, புன்னை வனம் இப்படியா இருந்தார்? எவ்வளவு தன்னம்பிக்கை, உற்சாகம்! எத்தகைய உணர்ச்சிகளின், கொள்கைப் பற்றின், லட்சிய ஆவேசத்தின் உயிர் உருவமாகத் திகழ்ந்தார் அவர் அந்த நாட்களிலே! அவரைக் கண்டு பேச வந்தவர்கள் அவரிடமிருந்து நம்பிக்கை ஒளியும் உற்சாகப் பெருக்கும் பெற்றுச் சென்றார்கள். அவரை “முன் மாதிரி” யாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையையும் மாற்றி அமைப்போம் என்று கூட ஒரு சிலர் துணிந்ததும் உண்டு.

ஆனால் கால வேகத்திலே, வாழ்க்கை நதியின் சுழிப்பில் இழுபட்டு, அவர்கள் பலரும் எங்கெங்கோ எப்படி எப்படியோ ஆழ்ந்துவிட்டார்கள். புன்னைவனம் மட்டும் கம்பீரமாக, மிடுக்காக, மகிழ்ச்சியோடு எதிர் நீச்சல் போடுவதில் ஈடுபட்டிருந்தார்.

“என்ன பிரயோசனம்? கால வேகத்தோடு, வாழ்க்கை நதி இழுத்த இழப்பில் போகிறவர்களும் முடிவில் செத்துத்தான் போகிறார்கள், எதிர்நீச்சல் போடுகிறவர்களுக்கும் அதே முடிவுதான். இவர்கள் உடலின் பலமும் உள்ளத்தில் உறுதியும் இருக்கிற வரை எதிர் நீச்சலடிக்கலாம். கை ஓய்ந்ததும் கால வேகத்தினால் அடிபட்டுப் போக வேண்டியவர்கள் தான்” என்று ஒரு அனுபவஸ்தர் சொன்னார்.

இளமைத் துடிப்பில் புன்னைவனம் அவரைப் பார்த்து அலட்சியமாகச் சிரிக்கவில்லையா என்ன? தன்னம்பிக்கையும் மனோபலமும் இல்லாதவர் என்று பரிகசிக்கவும் செய்தார்.

ஆமாம். அது ஒரு காலம்! அப்போது அவருக்கு இருபத் தைந்து அல்லது இருபத்தாறு வயதுதான்.

இப்போது? ஐம்பது வயதைக் கடந்துவிட்ட புன்னை வனத்துக்கு வாழ்க்கையே வறண்டதாய் அர்த்தமற்றதாய், “நேற்றுப் போல் இன்று – இன்று போல நாளை” என்று ஒரே கதியில் சுழலும் தன்மைய தாய் சாரமற்றுத் தோன்றியது. “உலகத்து அற்புத இலக்கியங்களை எல்லாம் படித்து இன்புற வேண்டும்; நாட்டில் கவனிப்பற்றுக் கிடக்கும் கலைச் செல்வங்கள் அனைத்தையும் ரசித்து மகிழ வேண்டும்; இயற்கை இனிமைகளைக் கண்டு ஆனந்திக்க சதா ஊர் விட்டு ஊர் போய்கொண்டே இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மனைவி ஒரு விலங்கு ஆகவும், வளரக்கூடிய குடும்பம் ஒரு தடையாகவும் இருக்கும்” என்று கருதித் தனிமை வாழ்வைத் தேர்ந்து கொண்ட அவருக்கு அந்த வாழ்வே சுமையாய், பயனற்றதாய், பசுமை இல்லாததாய் தோன்றலாயிற்று.

இப்பொழுதும் அவர் புத்தகங்கள் படிக்கத்தான் செய்தார். புதிய புதிய புத்தகங்கள் எத்தனையோ. முன்பு பல முறை படித்த நூல்களை மீண்டும் படித்தார். புதுப்பது இடங்களுக்குப் போனார். பத்து இருபது வருஷங்களுக்கு முன்பும் – அதற்கு முந்தித் தனது சின்னஞ் சிறு பிராயத்திலும் – அறிமுகம் செய்து கொண்டிருந்த இடங்களுக்கும் போனார். அங்கு அவர் காண நேர்ந்த மாறுதல்கள், வளர்ச்சி அல்லது சிதைவுகள், பலவும் அவருக்கு விதம் விதமான உளக் கிளர்ச்சி ஏற்படுத்தின.

அதே போல, அவருக்கு அறிமுகமாகியிருந்த மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த மாறுதல்களும் அவர் உள்ளத்தில் சலனம் உண்டாக்கின. “வாழ்க்கை நதி வேகமாகத்தான் ஒடுகிறது” என்று எண்ணுகிறபோதே, தான் அன்று போல் இன்றும் – குறிப்பிடத் தகுந்த மாறுதல் எதுவும் அற்று, கால வெள்ளத்தாலும் அசைக்க முடியாத கரும்பாறை போல் நிற்பதாக ஒரு நினைப்பும் அவருள் சுழியிடும். பந்த பாசங்களற்று, பிடிப்பற்று, பற்றுதல் எதுவுமற்று, தன்னைப் பற்றிக் கொண்டு வாழ்வுச் சுழல்களில் ஈடுபடுத்த எவருமற்று, ஒற்றைத் தனிநபராய் நாளோட்டும் தன்னுடைய நிலைமையும் புன்னைவனத்தின் மனசை உறுத்தும்.

öஇப்படி வாழ்வதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது” என்று பெருமையோடு கருதிவந்த அவர் உள்ளத்திலே, நாளடைவில் இப்படி வாழ்வதும் ஒரு வாழ்க்கைதானா?” என்றொரு சஞ்சல நினைவு அலை மோதுவதை அவராலேயே தடுக்க முடியவில்லை.

கடற்கரைக் கோயில் அருகே அமர்ந்திருந்த புன்னை வனத்தின் கண்கள், விரிந்து கிடந்த நீர்ப்பாலை மீது படர்ந்து விழுந்த சூரியஒளி செய்து கொண்டிருந்த மினு மினுப்பு வேலை நயங்களை வியந்தன. வெள்ளித் தகடுகள் போலவும், அசைந்து அசைந்து நெளியும் வெள்ளிய பறவைகள் போலும், நீர்ப்பரப்பு சிற்றலைகளைச் சித்தரித்துக் கொண்டிருந்தது. அதன் அசைவு களினால் சிதறும் ஒளிக்கற்றைகள் இனிய காட்சிகளாகி அவர் ரசனைக்கு விருந்து அளித்தன. ஆனாலும், வறண்ட மணற் பாலையின் வெறுமையும் தனிமையும்தான் அவர் உள்ளத்தில் நிலைபெற்றிருந்தது.

“அங்கேயே என்ன பார்க்கிறே? வேடிக்கை ஏதாவது இருக்குதா?” என்று அவர் அருகில் ஒலித்த ஒரு குரல் அவரை உலுக்கித் திருப்பியது.

ஒரு சிறுமி, ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். அவரை அதிசயமாக நோக்கியவாறு அவர் பக்கத்தில் நின்றாள். அவள் தனியாகத்தான் காணப்பட்டாள். அவர் தன் கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லாமல், தன்னையே பார்த்துக் கொண்டிருப் பதைக் கண்டு பொறுமை இழந்து, “ஊங்?” என்றாள்.

“ஒண்ணும் இல்லியே!” என்றார் அவர்.

“பின்னே அப்பவே புடிச்சு அங்கேயே பார்த்துக்கிட்டு இருக்கியே? நான் வந்து எவ்வளோ நேரமா நிக்கிறேன். உனக்குத் தெரியாதே” என்று, கூச்சமோ தயக்கமோ அச்சமோ, இல்லாமல் பேசினாள் அவள்.

அவருக்கு அவள் பேச்சும் துணிச்சலும் சுவையான விஷயங்களாகப்பட்டன. லேசாகச் சிரித்தார். “பொழுது போகலே. துணைக்கு யாரும் இல்லே. அதுதான் உட்கார்ந் திருக்கேன்” என்றார்.

“உனக்கு அப்பா அம்மா இல்லே? யாருமே இல்லையோ?” என்று கேட்டாள் சிறுமி.

“ஊகுங். ஒருத்தரும் இல்லை” என்று கூறித்தலையை ஆட்டினார் அவர்.

அவள் கலகலவெனச் சிரித்தாள்.

இப்ப ஏன் சிரிக்கிறே?” என்று அவர் விசாரிக்கவும், அவள் தந்த பதில் அவருக்கும் சிரிப்பு எழுப்பியது.

“உன் தலையை மொட்டை அடிச்சிட்டால், அப்போ நீ தலையை ஆட்டினால், எப்படி இருக்கும்னு நெனைப்பு வந்தது. அதுதான்!” என்று அவள் சொன்னாள். “எனக்கு மொட்டை போடணுமின்னு சொன்னாங்க. அதுதான் நான் ஒடியாந் துட்டேன். எனக்கு எதுக்கு மொட்டை? “மொட்டை மொட்டை மொளக்கு ஸார் – கம்பளி மொட்டை டேக்கு ஸார்” ஒனு புள்ளைகள் எல்லாம் கேலி பண்ணுறதுக்கா? அப்புறம் நான் தலைபின்னி பூ வைக்க முடியுமா?” என்று பொரிந்து கொட்டினாள்.

அவள் வேடிக்கையான குழந்தை என்று தோன்றியது அவருக்கு. உன் பேர் என்ன?” என்று கேட்டார்.

“கேலி பண்றதுக்கா?” என்று வெடுக்கெனச் சொல் உதிர்த்தாள் சிறுமி.

நான் ஏன் கேலி பண்ணப் போறேன்!”

“தெரியும் தெரியும். எல்லாப் புள்ளைகளும்தான் கேலி பண்ணுதே. வள்ளி அம்மே தெய்வானே, உம்புருசன் வைவானேன்? கச்சேரிக்குப் போவானேன் – கையைக் கட்டி நிப்பானேன்னு நீட்டி நீட்டி ராகம் போடும். அது மாதிரி நீயும்….”

“உன் பேரு வள்ளியா?”

அவள் ஒரு விரலால் ஒரு கண்ணை மூடிக்கொண்டு, தலையைச் சாய்த்தபடி, வெட்கப் பார்வை பார்த்தது ரசமான காட்சியாக இருந்தது.

“ஏட்டி, இங்கே வந்தா நிக்கிறே? உன்னை எங்கே எல்லாம் தேடுவது? அந்த மாமா கிட்டே என்ன வம்பு பண்ணுறே?” என்று சத்தமிட்டுப் பேசிய வாறே பிரகாரத்தில் வந்தார் ஒரு பெரியவர்.

“எங்க அப்பா. புடிச்சிட்டுப் போக வாறா. எனக்கு மொட்டை போட வேண்டான்னு நீ சொல்லுவியா?” என்று புன்னைவனத்தோடு ஒண்டி நின்றாள் வள்ளி.

“பெரிய வாயாடி ஸார் அது. கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும். தொந்தரவு பண்ணி, பிய்ச்சுப் பிடுங்கி எடுத்துவிடும். சரியான குட்டிப்பிசாசு. இங்கே வாடி” என்று கூச்சலிட்டவாறே வந்தவர், புன்னைவனத்தைக் கண்டதும் வியப்பினால் வாயபிளந்து நின்றார். “புன்னைவனம். புன்னைவனம் தானே நீங்க?” என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்.

அவரை இனம் தெரியாதவராய்த் திகைத்தபடி நோக்கினார் புன்னைவனம்.

“ஏஹே, பேரைப் பாரு பேரை புன்னைமரம்.” என்று கெக்கலி கொட்டினாள் வள்ளி.

“ஏட்டி இந்தா வாறேன்!” என்று சொல்லி, சிறுமியின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைப்பதற்காகப் பாய்ந்தார் வந்தவர்.

ஆனால் புன்னைவனம் சிரித்துக்கொண்டே அவளைப் பாதுகாப்பாய் அனைத்து, “சின்னப்புள்ளே தானே! விட்டுவிடுங்கள்” என்றார்.

“என்னைத் தெரியலியா இன்னும்” என்று விசாரித்தார் வள்ளியின் தந்தை.

“தெரியலியே” என்று தன் அறியாமையை ஒப்புக் கொண்டார் மற்றவர்.

“தெரியிறது சிரமம்தான். பார்த்து எத்தனையோ வருசம் ஆச்சுல்லே? இருபது வருசம் இருக்கும். நான் குடும்பக்கவலை, பிய்க்கல் பிடுங்கல்னு அடிபட்டு ஆளே மாறிப்போனேன். அடையாளம் தெரியாது தான். ஆனால், நீங்கள் அப்படியோ தான் இருக்கிறீங்க. கொஞ்சம்கூட மாறலே. தலையிலே ஒரு நரை கூடத்தோணலியே! என் தலையில் ஃபிஃடி.ஃபிப்டி ஆயிட்டுது!” என்று சொல்லி, அவரே அதை ரசித்து அனுபவித்து, வாய்விட்டுக் கடகடவென நகைத்தார்.

அந்தச்சிரிப்பு, அந்தப்பேச்சு முறை – முன்பு அடிக்கடி கேட்டுப்பழகிய ஞாபகம் இருந்தது. ஆனால் அவர்யார் என்று விளங்காத திகைப்புத்தான் இன்னும். கன்னங்கள் ஒட்டி, தலைநரைத்து, கிழடுதட்டி, வதக்கல் புடலங்காயை நினைவுக்கு இழுக்கும் இந்த உருவம்.

”அருணாசலத்தை அடியோடு மறந்தாச்சுன்னு சொல்லுங்க! அதுவும் சரிதான். வாழ்க்கைச் சுழிப்பில் திசை திருப்பப்பட்டு, காலவேகத்தால் அடித்துக் கொண்டு போகப்பட்டு அலைக் கழிந்த ஒட்டைக் கப்பல்தானே இது!”

அந்தக்காலத்தில் புன்னைவனத்துடன் நெருங்கிப் பழகி உரையாடிய பழைய நபர் என்பதை அவர் பேச்சுப் பாணி யிலேயே எடுத்துரைத்தார் வள்ளியின் அப்பா.

புன்னைவனம் இயல்பாகப் பொங்கிய உவகைப் பெருக் கோடு எழுந்து, அருணாசலத்தின் கைகளைப் பற்றியவாறே உணர்ச்சியோடு பேசினார்: “மன்னிக்கணும். என்ன மறதி! சேச்சே என் மறதிக்காக நான் ரொம்பவும் வெட்கப்படுறேன். அருணாசலம்! நீங்க சொல்வது சரிதான். ஆளே அடையாளம் தெரியாமல் மாறித்தான் போனிங்க. செளக்கியம் எல்லாம் எப்படி?”

“என்கதை கிடக்கு. எல்லோருக்கும் உள்ள மாதிரித்தான். சராசரிப்பிழைப்பு. நீங்க இப்போ என்ன செய்கிறீங்க, எப்படி வாழ்க்கை நடக்குது?”

“எல்லாம் வழக்கம் போல்!” என்று கூறி முறுவலித்தார் புன்னைவனம்.

“குடும்பம் குழந்தை குட்டி?

“எதுவுமே கிடையாது. நான் பழைய புன்னைவனம் தான்!”

“இந்த வகையிலும் நீங்கள் மாறவில்லை என்று சொல்லுங் கள். பேஷ்பேஷ்! நான் தான் பலவீனமான ஒரு சந்தர்ப்பத்தில், உணர்ச்சிகளின் உந்துதலுக்கு வசப்பட்டு, மனசின் ஒரு தூண்டுதலுக்கு அடிமையாகி. கல்யாணம் செய்துவிட்டு, அப்புறம் அடிக்கடி ஏண்டா இந்த வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டோம் என்று வருத்தப்படுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்” என அலுப்புடன் பேசினார் அருணாசலம்.

“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்.”

“அதில் எல்லாம் குறைச்சல் இல்லை. ஆறேழு இருக்கு. இதுதான் கடைசிப் பதிப்பு” என்று அறிவித்தார் அவர்.

அவரைப்பார்த்து முகத்தைக் கோணலாக்கி “லவ்வவ்வே!” என்றாள் வள்ளி.

புன்னைவனத்தினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

இதற்குள் ஒரு படையெடுப்பு வந்து சேர்ந்தது அங்கே. அநேக பையன்கள் பெண்கள் அவர்களின் தாய், அவள் தங்கை – இப்படி ஒரு கூட்டமாக வந்தவர்களில் மூத்தவள், ”நல்லாத் தான் இருக்கு உங்ககாரியம். புள்ளையைத் தேடப் போறேன்னு வந்துபோட்டு, இங்கே நின்னு வம்பளக்கிறேளாக்கும்? எல்லாம் புள்ளைகளுக்கும் மொட்டை அடித்தாச்சு. அந்தக் குரங்குதான் ஒடி வந்திட்டுதே” என்று முழங்கினாள்.

“இவள் தான் என் கிருகதேவதை. அது அவள் தங்கச்சி. இதுகள்ளாம் என் புத்திரபாக்கியங்கள்” என்று அறிமுகப்படுத் தின அருணாசலம், புன்னைவனத்தைப் பற்றி அவர்களுக்கு ஒரளவு சொன்னார். பிறகு வள்ளியைப் பார்த்து, “ஏட்டி, உனக்கு மொட்டை அடிக்க வேண்டாமோ?” என்று கேட்டார்.

அவள் பரிதாபமாகப் புன்னைவனத்தைப் பார்வையினால் கெஞ்சினாள். அவர் முகம் சிரிப்பால் மலர்ந்தது. அவளுக்குப் பூவைத்து. தலைமுடிச்சு, பள்ளிக்கூடம் போகணும்னு ஆசை யிருக்கு. அதைக்கெடுப்பானேன்? மற்றப் பிள்ளைகள் எல்லாம் மொட்டை – மொட்டையின்னு கேலி பண்ணுமேன்னு வருத்தப் படுறா” என்றார்.

சரி, போகட்டும். இன்னொரு சமயம் பார்த்துக்கலாம். புன்னைவனம், இன்று நீங்க நம்ம அதிதி எங்களோடு வாருங்க” என்றார் அருணாசலம்.

இந்த மாமா நல்ல மாமா” என்று ராகம் போட்ட வள்ளி அவர் கையைப் பிடித்து ஆட்டியபடி “உம். வாங்க இப்ப நாங்கள்ளாம் உங்களுக்குத் துணைக்கு வந்தாச்சு. இனிமே நீங்க ஒத்தை இல்லே” என்றாள்.

புன்னைவனத்தின் உள்ளம் கிளுகிளுத்தது.

“சிவகாமி, ஸாருக்கு என்ன வயசு இருக்கும்னு உனக்குத் தோணுது?” என்று அருணாசலம் அவர் மனைவியிடம் கேட்டார்.

“எனக்கு என்ன தெரியும்” என்றாள் அந்த அம்மாள்.

“சும்மா உனக்குத் தோணுவதைச் சொல்லேன்” என்று அவர் சொல்லவும், “முப்பத்தாறு, முப்பத்தேழு இருக்கும்” என்று அவள் தயக்கத்துடன் கூறினாள்.

மீண்டும் தமது கடகடச் சிரிப்பை உருட்டிவிட்டார் அருணாசலம். இவருக்கு ஐம்பதுக்கு மேல் ஆகுது. அப்போ இருந்தது மாதிரித்தான் இப்பவும் இருக்கிறார். நான்தான் கிழவன் ஆகிப்போனேன். பார்க்கப் போனால், இவரைவிட நான்கு வயசு குறைவு தான் எனக்கு!” என்றார்.

அவள் அவர்மீது ஏவிய பார்வையில் அன்பு மிதந்தது. அவரது முதுமையையோ இதர குறைகளையோ அவள் பெரிதுபடுத்துவதாகத் தோன்றவில்லை. இதைப் புன்னைவனம் கவனிக்கத் தவறவில்லை.

இப்படி எத்தனையோ அக்குடும்பத்துடன் அவர் பொழுது போக்க நேரிட்ட சில மணி நேரத்தில், இல்லறத்தில் நிலவும் பல இனிமைகளை அவர் உணரமுடிந்தது. அவர்களுக்குள் மனக்கசப்பும், பிணக்கும், வாக்குவாதமும் ஏற்படக் கூடும். என்றாலும் அவற்றை எல்லாம் மீறிய ஒரு பிணைப்பு, ஒட்டுறவு, பரஸ்பரத் துணை நெருக்கம் அவர் உள்ளத்தில் சிறு சிறு அலைகம் எழுப்பின.

“ஒற்றைக் காட்டு ஒரியாக” வாழ்ந்து பழகிவிட்ட போதிலும் புன்னைவனம் குடும்ப வாழ்வில் திகழும் சிறுசிறு இனிமைகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டு, தன் வாழ்வின் வறட்சியை எண்ணி, ஒருவித ஏக்கம் வளர்ப்பது சென்ற சில வருடங் களாகவே அவருடைய புதுப் பழக்கம் ஆயிருந்தது. இப்பொழுதும் அந்தக் குறுகுறுப்பு இருந்தது அவர் உள்ளத்தில்.

ஒரு சந்தர்ப்பத்தில், சிவகாமி நான் என்ன தங்கமும் வைரமுமா கொண்டு வந்தேன்?” என்றாள். அதற்கு அருணாசலம், “எனக்கு நீயே மணியான வைரமாகக் கிடைத்திருக்கிறே. அதே போதும்” என்று சொன்னார். மகிழ்ச்சியும் நாணமும் முகத்திலே தவழ, அவள் தலைகுனிந்தபோது, அந்த முகம் இன்ப ஒவியமாகத் திகழ்ந்தது. அதையே பெருமையுடன் நோக்கியிருந்த கணவனின் முகத்திலும் மலர்ச்சி படிந்தது.

இக் குடும்பச் சித்திரம் புன்னைவனத்தின் கவனத்தைக் கவராது போகுமா?

“எத்தனை வயசுப் பெண்ணாக இருந்தாலும், நாணம் பெண்மைக்கு விசேஷமான அழகு சேர்த்து விடுகிறது!” என்று அவர் உள்ளம் ரசித்தது. நண்பரின் பெருமையையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்த விதமான குடும்ப இனிமைகளை – ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் இல்லறத்தின் சிறு சிறு மகிழ்வுச் சிதறல்களை, நயங்களை – எல்லாம் அனுவித்து ரசிக்க வாய்ப்பு இல்லாதபடி, தன்னுடைய வாழ்க்கையைத் தானே வறளடித்துக் கொண்டதை எண்ணித் தன் மீதே அவர் அனுதாபம் கொள்வது உண்டு. இப்பொழுது குழந்தைகளின் கலகலப்பும், வேடிக்கைப் பேச்சும், தம்பதிகளின் போக்கும் அவருக்கு அதே உணர்வுக் கிளர்ச்சிகளைத் தந்தன.

அருணாசலம் புன்னைவனத்திடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது, தனது வாழ்க்கைச் சுமைகளையும் தொல்லைகளையும் பற்றிப் புலம்பித் தீர்த்தார். “எங்கே போக முடியுது, எங்கே வர முடியுது என்கிறீங்க? இந்த நேர்த்திக் கடனை நிறைவேற்ற இவ்வூர் கோயிலுக்குக் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட்டடேன் தெரியுமா? ரொம்ப வருஷம் ஆயிட்டுது, இனியும் தள்ளிப் போடப்படாதுன்னு கடன் வாங்கிக் கொண்டு வந்தேன். வெளியூரு, புது இடம், கோயில் என்பதனாலே எல்லோரும் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும் இருக்கிறாங்க. ஊரிலே, வீட்டிலே, தினசரி, ஒரே சோக நாடகம்தான். எத்தனையோ பிரச்னைகள், குழப்பங்கள், கவலைகள் மனுசனுக்கு அமைதி என்பதே இல்லை. சரியான தூக்கம் கூடக்கிடையாது. சண்டை, எரிந்து விழுவது இதுகளுக் குக் குறைவே இராது. அடிக்கடி உங்களைத்தான் நான் நினைத்துக் கொள்வேன். என்னை மாதிரி வாழ்க்கைச் சுழலில் சிக்கிக்கொண்டு திணறுகிற மகாராஜன், சொக்கையா இவர்களும் உங்களை நினைத்து பொறாமைப் படுவாங்க. எனக்குக்கூட உங்கமேலே பொறாமை தான். உங்களுக்கு என்ன! கவலையில்லாத வாழ்வு, நினைத்தால் நினைத்த இடம் போவது, மனசுக்குப் பிடித்த ஊரில் முகாம், எவ்விதமான சுமையோ, கால் விலங்கோ, பொறுப்போ கிடையாது, உங்க மாதிரி நானும் தனி வாழ்வு வாழாமல் இப்படி அகப்பட்டுக்கிட்டு முழிக்கிறோமே என்று நான் ஏங்காத காலமே கிடையாது.”

அருணாசலம் பேசப்பேச, தன்னுடைய மனநிலையை, இழப்பை, ஏக்கத்தை அவரிடம் வாய்விட்டுப் பேசாமல் இருப்பதே நல்லது என்று புன்னைவனம் கருதினார்.

“நீங்க ஒரு ஆங்கிலக்கவிதை சொல்வீர்களே. தனியாக நிற்கும் ஒரு மலையின் உயர்ந்த முடி. அதன் கீழே, மலையின் மத்திய பாகத்தில், வெயில் அடிக்கும்; மழைபெய்யும்; காற்று தவழும்; சூறை சாடும். என்றாலும் அந்தச் சிகரம் அவற்றால் பாதிக்கப்படாது, அவற்றைப் பார்த்தபடி, மகாரகசியத்தின் கம்பீரமான ஒரு சின்னம் போல நிமிர்ந்து நிற்கும். இப்படி அந்த மனிதர் வாழ்ந்தார் என்று. அதுபோல் தான் வாழ்க்கையின் மாறுதல்கள் மோதல்கள் சாடுதல்களுக்கு மத்தியில், அவற்றால் பாதிக்கப்படாது, அவற்றை எல்லாம் பொறுமையோடு பார்த்தவாறே நீங்கள் உங்கள் காலத்தைக் கழிக்கிறீர்கள். உங்கள் நினைவு வரும்போதெல்லாம், இந்தக் கவிக்கருத்தைச் சொல்லி, உங்களை ஒரு மாடர்ன் ரிஷி என்று நான் நண்பர்களிடம் சொல்வது வழக்கம்.”

அருணாசலம் பேசப்பேச, புன்னைவனத்தின் உள்ளத்தில் ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் கண்களில் நீர் கசிந்தது. ”நீங்க ஒண்ணு! அளவுக்கு அதிகமாக என்னைப் புகழ்கிறீர்கள்!” என்று மட்டுமே அவரால் சொல்லமுடிந்தது.

(தீபம், 1967)

– வல்லிக்கண்ணன் கதைகள், ராஜராஜன் பதிப்பகம், 2000 – நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *