கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 14,129 
 

சுறு சுறுப்பாக ஓடும் இந்த காலக்கட்டத்தில் சூறாவளியாக இருக்கும் இவள் தான் அகமணி, இவளது வயது 25 இவளுக்கு, எப்பொழுதும் சிரித்த முகம், துடுக்கான பேச்சு,பள்ளி படிப்பு முடித்தவள். பேருந்தில் பயணம் செய்யும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்.

அவள் படிப்புக்கு தகுந்த வேலையை தேர்ந்தெடுத்து கொண்டு தன் பணியை சிறப்பாக செய்து வந்தாள். அகமணி நகரபேருந்து மூலமாகதான் வேலைக்கு செல்வாள் ,அதே பேருந்தில் பயணம் செய்து வருபவன் மாசீலன். பெயருக்கு தகுந்தாற் போல் தூய்மையான உள்ளம் கொண்டவன். இவன் வீட்டிற்கு ஒரே மகன். இவன் கல்லூரி படிப்பை முடித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான். இவனும் நகர பேருந்தில் தான் வேலைக்கு செல்வான். இவர்கள் தொடர்ந்து 6 மாதங்களாக 21 B என்ற நகரபேருந்தில் வேலைக்கு செல்வதை வழக்கமாக இருந்து வந்தது .

6 மாதங்களாக பயணம் செய்தும் ஒருவரிடம் ஒருவர் பேசியது கூட இல்லை. தினமும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு மட்டும் போவார்கள். ஒரு நாள் மாசீலன் அகமணியிடம் பேச துணிந்தான்.

அவளிடம் பேச அவளை நெருங்கினான். ஆனால் ஒரு வித படபடப்பு அவளை கண்டால் ஒருவித உற்சாகம். இதற்கு பெயர் தான் காதலா ? என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். அகமணியோ பார்ப்பதற்கு அழகு முகம், நல்ல குணமும் கொண்டவள். மாசீலன் தன் காதலை சொல்ல முடிவு எடுத்து தன் மனதை தெளிவுப்படுத்திக் கொண்டு அவளை நெருங்கினான் .

அவன் யோசித்து தன் காதலை அவளிடம் சொல்லி விடலாம் என்று அவளை நெருங்கியதும் அவளது பேருந்து நிறுத்தம் வந்து விட்டது. அவள் பேருந்தை விட்டு இறங்கி சென்று விட்டாள். அவள் இறங்கும்போது சீலனை பார்த்தபடி இறங்கினாள். அவனுக்கு தன் மனதில் ஆயிரம் ஆயிரம் பூக்கள் ஒரே நேரத்தில் மலர்ந்த ஒரு பேரானந்தம் அவன் முகத்தில் தெரிந்தது.

மறுநாள் காலையில் இருவரும் அதே பேருந்தில் பயணம் செய்தனர். அதே போல் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே பயணம் செய்தனர். இப்படியே 2 மாதங்கள் சென்றது.

மாசீலன் ஒருநாள் அவளிடம் சென்று நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று தன் காதலை வெளிப்படுத்தினான் , இதை கேட்டவுடன் அகமணியின் கண்கள் கலங்கியபடி அவ்விடத்தை விட்டு சென்று விட்டாள். சீலனுக்கு ஒன்றும் புரியவில்லை, இவள் ஏன் இப்படி கண்கள் கலங்கியபடி செல்கிறாள் ? இவளும் என்னை விரும்பியதாக தானே நான் எண்ணினேன். என்று யோசித்தவாரே அந்தநாள் சென்றது. மறுநாள் அதே பேருந்தில் அவளை கண்டான். அவள் அருகில் சென்று நான் உன்னிடம் பேச வேண்டும். என்றான், அவள் பேச மறுத்து விட்டாள்.

அவன் அவளை பின் தொடர்ந்து பேசிகொண்டே நடந்தான். நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீயும் என்னை விரும்புகிறாய் எனக்கு தெரியும், உனது கண்களே நீ என்னை விரும்புவதை சொல்கிறது. ஆனால் நீ ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய் ? என்று கேட்டான். அப்பொழுது அவளின் கண்களில் கண்ணீர் தழும்ப…. இந்த திருமணம் நடக்க இயலாது என்றாள். அப்பொழுது அவளின் ஆண் குரலை கேட்டு அதிர்ச்சி அடைந்தான் மாசீலன்.

அப்பொழுது அகமணி தான் ஒரு திருநங்கை எனவும், தன்னை என் குடும்பத்தினர் ஒதுக்கி வைத்துள்ளதையும் தெரிவித்தாள். அவள் தன் குடும்பத்தார்களும் , அவளது உறவினர்களும், நண்பர்களும் அவளை ஒதுக்கி வைக்கப்பட்டதை கூறினாள்.

அவள் தன் குடுப்பத்தை விட்டு எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்துவிட்டாள். ஊர் மக்களின் பேச்சுக்கும், கேலி கிண்டலுக்கும் பயந்து, ஊரின் ஒதுக்கு புறத்தில் அவள் தன் சக திருநங்கைகளுடன் தங்கி இருப்பதாகவும், அவர்கள்தான் தன்னை பார்த்து கொள்வதாகவும் கண்ணீர் பெருக கூறினாள்.

இதை கேட்ட மாசீலன் அதிர்ச்சியில் ஒன்றும் பேசவராமல் தலை குனிந்து சென்று விட்டான்.

மறுநாள் அப்பேருந்தில் அவள் மட்டும் பயணம் மேற்கொண்டாள். ஆனால் மாசீலன் அப்பேருந்தில் வரவில்லை.

அவனை காணாததால் அவள் மனம் வாடியது. அவனை 6 மாதங்களாக இவளும் காதல் கொண்டாள். ஆனால் ஓரு நாள் கூட அவனை காணாமல் இவளால் இருக்கமுடியவில்லை. ஆனாலும் அவள் மகிழ்ச்சி கொண்டாள். தன்னால் ஒருவருக்கு எந்தவித துன்பமும் வரக்கூடாது என்று எண்ணி தன் மனதை தேற்றிக்கொண்டாள் .

ஓரு மாதம் சென்றது. அவன் அந்த பேருந்தில் வரவில்லை.
அகமணியோ , தன் நிலையினை எண்ணி அவனே விலகி சென்றுவிட்டான் என்று எண்ணி ஓரு புறம் சந்தோசப்பட்டாலும், ஓரு புறம் அவனை காணாமல் இவளால் இருக்கமுடியவில்லை. அப்படி ஓரு காதல் அவன் மேல் வைத்து இருந்தாலும் அவள் அக்காதலை வெளிபடுத்தாமல் இருந்து விட்டாள்.

அப்போது இவள் தன் பேருந்தை எதிர்நோக்கி பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தாள், அப்போது மாசீலன் அவளை நோக்கி வந்தான். அவள் தன்னை பற்றி அறிந்து கொண்டதால் அவன் விலகி விட்டான் என்று நினைத்தாள். ஆனால் சீலன் அவள் அருகில் வந்தான். அதிர்ச்சியில் அவனை பார்த்தபடி அகமணி நின்றாள். ………… அகமணி…………… என்று தன் காதலுடன் அவளை கூப்பிட்டான்.

அருகில் வந்த சீலன் அவளை நெருங்கி நான் உன்னை திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளேன் என்று மன தைரியத்துடன் அவளிடம் தெரிவித்தான் . அவள் அதிர்ச்சியில் வாய் பேசமுடியாமல் தன் கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்தாள். உடனே சீலன் அகமணியின் கைகளை பற்றிக்கொண்டான். இருவர் கண்களிலும் காதல் மிளிர்ந்தது .

சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பெண் என்று தெரிந்தும் அவளை காதல் செய்தால் தனக்கு எந்த வித கஷ்டங்கள் வந்தாலும் பரவாயில்லை என்று வாழ்க்கையினை ஒரு சவாலாக எடுத்து அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.

திருமணம் செய்து தன் வீட்டிற்கு அவளை அழைத்து வந்தான். சீலன் குடும்பத்தினர் இத்திருமணத்தை ஏற்றுகொள்ளவில்லை. அவன் தங்களை மீறி திருமணம் செய்து கொண்ட கோபத்தில் அவர்கள் இருந்தனர். அவர்கள் அந்த வீட்டிலேயே தனியாகத்தான் இருந்தார்கள். அகமணியிடம் யாரும் பேசுவதில்லை. ஆனால் மாசீலனும் அகமணியும் ஒருவரை ஒருவர் நேசித்து அன்பாக இருந்தார்கள். தனது வீட்டில் உள்ளவர்கள் அகமணியிடம் பேசுவதில்லையே என்ற ஒரு வருத்தம் சீலனுக்கு இருந்து வந்தது.

திருமணமாகி இரண்டு மூன்று வருடங்கள் கழித்து சீலனின் தாய் தந்தையர் குழந்தையைப்பற்றி பேச ஆரம்பித்தார்கள். சீலன் தனக்கு குழந்தைகள் வேண்டாம். எனக்கு அகமணி போதும் என்றான். வீட்டில் உள்ளவர்கள் இதை ஏற்று கொள்ளவில்லை. சீலனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர். இதை பற்றி அவனிடல் கூறாமல் தனக்கு பேரக்குழந்தை வேண்டும் என்பதற்காக வேறு திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர்.

இதை எல்லாம் அகமணி கவனித்து கொண்டே இருந்தாள். அவளும் மனதில் தன் கணவருக்கு ஒரு வாரிசு வேண்டும் என எண்ணினாள். இது விஷயமாக தன் கணவர் சீலனிடம் நீங்கள் வேறு திருமணம் செய்துகொள்ளுங்கள் அப்போதுதான் நமது வாழ்க்கை முழுமை அடையும் என்று அவனை வற்புறுத்தினாள் ஆனால் இதை அவன் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. உன்னை விட்டு என்னால் வேறு பெண்ணை மணக்க முடியாது என்று கூறினான்.

பின் கட்டாயபடுத்தி சீலனிடம் பேசி வேறு திருமணதிற்கு ஒப்புதல் வாங்கினாள். வீட்டில் உள்ளவர்களிடம் இவர் திருமணதிற்கு ஒப்புக்கொண்டதாக தெரிவித்தாள். இதை கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் தன் மனதில் பெரும் இழப்பை எதிர்பார்த்தப்படி இருந்தாள். முகத்தில் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தாள். திருமணதிற்கு பெண் பார்க்கும் வேலைகள் மிக விரைவாக நடந்துகொண்டிருந்தது.

தன் கணவருக்கு தெரியாமல் திருமணத்திற்கு முன் தங்கியிருந்த திருநங்கை இல்லத்திற்கு தான் வருவதாக கூறி தனது தோழிக்கு தகவல் தெரிவித்து, அங்கு இருப்பதற்கு முடிவு செய்தாள்.

சீலன் வீட்டில் உள்ளவர்கள் திருமணத்திற்கு பெண் பார்த்துகொண்டிருந்தார்கள் இவள் யாரிடமும் சொல்லாமல் தனது இல்லத்திற்கு சென்றுவிட்டாள். வேலையை முடித்து வீட்டிக்கு வந்த சீலன் தன் மனைவியை காணாததால் அக்கம் பக்கம் தேடி இல்லை என்று தெரிந்தும் மிரண்டுபோனான். தேடி விட்டு தன் அறைக்குள் வந்தான் அப்போது அவர் மேசையில் ஒரு வெள்ளை காகிதத்தில் தான் தனது திருநங்கை இல்லத்திருக்கு செல்வதாகவும் நீங்கள் திருமணம் செய்து கொண்டு உங்கள் வாழ்கையை வாழ வேண்டும். நீங்கள் என்னை உண்மையாக நேசித்திருந்தால் என்னை தேடி வரக்கூடாது என்றும் அதில் எழுதி இருந்தாள். அதை கண்டு அலறினான் கத்தினான் சீலன். அவளை பிரிந்து இருக்கமுடியாமல் தவித்தான். ஆனால் அவள் மீது உள்ள காதலால் அவள் கூறியதை நிறைவேற்றுவதற்காக அவளை சென்று பார்க்காமல், பெற்றோர் பார்த்து முடிவு செய்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். அவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், அவனுக்கு அகமணியின் மிது உள்ள காதல் குறையவில்லை. அவளை நினைக்காத நாளே இல்லை.

தன் கணவனை பார்க்க வரக்கூடாது என்று கூறி அகமணி, தன் கணவரின் திருமண வாழ்க்கையை கண்டு மகிழ்ச்சிக் கொண்டாள். அவனுக்கு பிறந்த குழந்தைகளின் மீதும் அன்பு வைத்திருந்தாள். அக்குழந்தைகளின் பள்ளிக்கு சென்று அக்குழந்தைகளுக்கு தெரியாமல் அக்குழந்தைகளை பார்த்து வருவாள் இப்படியே 5 வருடங்கள் ஓடியது.

ஒருநாள் அவள் வேலைக்கு செல்வதற்கு அதே நகரபேருந்து 21B பேருந்தில் ஏறினாள். இருவரும் எதிர்பாராமல் சந்தித்தனர். இருவர் முகத்திலும் அளவில்லா மகிழ்ச்சி இருவரும் முதல் முறையாக சந்தித்தபோது என்ன மகிழ்ச்சியோ அதே அளவு மகிழ்ச்சி இருவரின் முகத்தில் இருந்தது. இருவரும் பேசிகொண்டார்கள். அப்பொழுது அவள் சீலனின் குடும்பத்தை தெரியாததுபோல் விசாரித்தாள். அவனுக்கு 2 குழந்தைகள் இருப்பதாக கூறினான். அவளுக்கும் தானே அக்குழந்தைகளை பெற்று எடுத்த சந்தோஷத்தில் முகமலர்ந்தாள். வாழ்நாளில் இவளை சந்திக்கமுடியாமல் போய்விடுமோ என்று பயத்தில் இருந்த சீலன் இப்போது அவளை கண்ட ஆனந்தத்தில் மிதந்தான். இருவரின் ஆனந்ததிற்கும் எல்லையே இல்லை.

இருவரும் விடைபெற்றனர். நான் நினைத்தது போல் உங்கள் வாழ்க்கை அழகாயிற்று. இனி நாம் சந்திக்க நேராது என்று கூறி அகமணி விடைபெற்றாள் .

அகமணி வாழ்க்கை ஒரு வினாவாக இருந்தாலும், அவளே அவ்வினாவிற்கு விடையாகி விடுவாள் கால சக்கரத்தில் அவள் ஓர் சுழற்சிதான். …

Print Friendly, PDF & Email

2 thoughts on “அகமணி

  1. கதைகள், நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் புனைவாகவோ அல்லது கற்பனையாகவோ இருக்கலாம்.ஆனால், கற்பனையிலும் கூட திருநங்கையை மணந்து ஒரு குழந்தையின் நிமித்தம் பிரிவதை என் மனம் ஏற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *