விபத்து, கொலை, விடுதலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 19,595 
 

23 ஜனவரி 2011:

மனோ வேகமாக காரில் போய்க்கொண்டிருந்தான். காரின் வேகம் அதிகமானாலும், அவன் கவனம் முழுவதும் துல்லியமாக ரோட்டிலேயே இருந்தது. ஈ. சி.ஆர். ரோடு குறைந்த ட்ராபிக்கோடு அமைதியாக இருந்தது. காருக்குள் மெல்லிய இசையும் இதமான குளிர் காற்றும் கார் ஓட்டுவதை இன்பமாக்கிக்கொண்டிருந்தன. முத்துக்காடு தாண்டி கார் மேலும் வேகம் பிடித்தது.. வேகமாக கார் சென்றுகொண்டிருந்தாலும், சாலை ஓரம் இருந்த அது மனோகரின் கண்களில் பட்டது. அது ஒரு சிவப்பு நிற துப்பட்டா. உடனே காரின் வேகத்தை குறைத்து விட்டு வாண்டியை நிறுத்தினான் மனோகர். சந்தேகமில்லாமல் அது ஒரு பெண் அணியும் சுடிதாரின் துப்பட்டாதான். காரை அப்படியே ரிவேர்சில் ஒட்டி துப்பட்டா கிடந்த இடத்துக்கு வந்தான்.

கிழே இறங்கி அருகில் சென்று பார்த்த மனோகருக்கு பெரிய அதிர்ச்சி. ஒரு அழகான இளம் பெண் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். மனோகர் சிறிது கூட தாமதிக்காமல் அருகில் சென்று அந்த பெண்ணுக்கு மூச்சு இருக்கிறதா என்று பார்த்தான். அவளுக்கு உயிர் இருந்தது. உடனே அவளை அள்ளி காரில் போட்டுக்கொண்டு அருகில் இருந்த அந்த பெரிய தனியார் மருத்துவ மனைக்கு சென்றான்.

அந்த பெண்ணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். அவளுக்கு இடது தோளிலும் இடது கையிலும் வெட்டுப்பட்டு ரத்தம் பெருகி இருந்தது. அவள் நினைவிழந்து இருந்தாள். நீல நிற சுடிதாரும் சிவப்பு நிற துப்பட்டாவும் அணிந்திருந்தாள். தலை முடியை உலர்த்துவதைப்போல பின்புறம் அப்படியே விட்டிருந்தாள். ஒரு கையில் கடிகாரம். இன்னொரு கையில் எதுவும் இல்லை. நெற்றியில் தேடி கண்டுபிடிக்கும்படி சிறிய பொட்டு. வலது தோளில் ஒரு விலை உயர்ந்த கேமரா.

மனோகர் பிரபல தொழில் அதிபர். அவன் செல்வாக்கை உபயோகித்து அந்த பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தான். அன்று இரவு முழுவதும் அங்கேயே இருந்து விட்டு, அவளுக்கு சிகிச்சை முடிந்து மருத்துவ அறைக்கு வரும் வரை கவனித்து விட்டு, பிறகே வீட்டுக்கு சென்றான். டாடரிடம் மீண்டும் வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டான்.

25 ஜனவரி 2011:

மருத்துவ மனையிலிருந்து தொலை பேசியில் அழைத்தார்கள். அந்த பெண்ணுக்கு உணர்வு திரும்பி விட்டதாகவும் அவளால் இப்பொழுது பேச முடியும் என்றும் கூறினார்கள். அந்த பெண் தனக்கு உதவி செய்தவரை உடனே பார்க்க விரும்புவ்பதாகவும் கூறினார்கள். மனோகர் உடனே மருத்துவ மனைக்கு சென்றான். அந்த பெண்ணுக்கு இடது தோளில் ஆப்பரேஷன் செய்திருந்தார்கள். இடது கையில் காட்டு போட்டிருந்தது. அவள் மிகவும் களைத்து காணப்பட்டாள். அவள் அருகிலேயே ஒரு நர்ஸ் அமர்ந்திருந்தாள். மனோகரைப் பார்த்ததும் நர்ஸ் அந்த பெண்ணுக்கு மனோகரை அறிமுகம் செய்து வைத்தாள்.

அவள் உயிர் பிழைத்ததைப் பார்த்ததும் மனோகருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “கடவுளுக்கு நன்றி.. நீங்கள் உயிர் பிழைத்தது அந்த கடவுளின் செயல். என்னால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி”

அந்த பெண் மனோகரை மிகுந்த நன்றியுடன் பார்த்து புன்னகைத்தாள்.

“என் பெயர் சாதனா. நான் ஒரு பத்திரிகை நிருபர்.. நீங்க ஏன் சார் உங்களுக்கே நன்றி சொல்றீங்க?”

“நான் கடவுளுக்கல்லவா நன்றி சொன்னேன்!”

“எனக்கு நீங்கள் தான் கடவுள். இன்று நான் உயிரோடு இருப்பதற்கு நீங்கள் சமயத்தில் செய்த பேருதவிதான். இதை என் உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன். நான் உங்களைப்பத்தி தெரிஞ்சுக்கலாமா?”

“என் பெயர் மனோகரன். நான் ஒரு தொழில் அதிபர். நீங்க பூரண ஓய்வு எடுங்க. நீங்க உங்க வீட்டு விவரம் தந்தால் நான் அவங்க எல்லோருக்கும் தெரியப்படுத்த வசதியா இருக்கும்.”

“ரொம்ப நன்றி சார். நானே நர்ஸ் மூலம் என்னோட அம்மா அப்பாவுக்கு போன் செய்துவிட்டேன். அவங்க சேலத்துல இருக்காங்க. இப்ப சென்னை வரவேண்டிய அவசரம் இல்லை என்று சொல்லிவிட்டேன். உங்களைப்போல நல்லவர் இருக்க எனக்கு என்ன கவலை?”

“இது ஒரு சாதாரணமான மனிதாபிமான உதவிதான்..உங்களுக்கு வேறு ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்க..”

“சார்,, என்னுடைய கேமரா. மற்றும் என்னுடைய ஸ்கூட்டர்…”

“ஓ..உங்கள் ஸ்கூட்டரை வொர்க் ஷாப்பில் விட்டிருக்கிறேன். உங்கள் கேமரா மிகவும் பத்திரமாக இருக்கிறது. ஆஸ்பத்திரி தலைமை மருத்துவரிடம் கொடுத்து வைத்திருக்கிறேன். நீங்க எப்ப வேணும்னாலும் அதை வாங்கிக்கலாம்.”

“அது மிகவும் பாதுகாப்பாக இருக்கட்டும் சார்..ஒரு வகைல நான் இந்த நிலைமைக்கு அந்த கேமராதான் காரணம்.”

“கேமரா படம் எடுக்கத்தானே. அது ஒரு ஆளைக் கொல்லுமா என்ன? நான் அந்த கேமராவை வாங்கி என் வீட்டில் பத்திரமாக வைத்துக்கொள்கிறேன். நீங்க கவலைப்படவேண்டாம். நீங்க எப்ப கேட்டாலும் கொண்டுவந்து கொடுக்கிறேன்.. உங்களுடன் நான் நிறைய பேச வேண்டும்.. நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். உங்களை கவனிக்க நான் தனியாக ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறேன். நான் இரண்டு நாட்கள் சென்றபின் உங்களை சந்திக்கிறேன். அதற்கு முன் உங்களுக்கு எதாவது உதவி தேவை என்றால் என்னை உடனே போனில் கூப்பிடுங்கள். இதில் என்னுடைய தொலைபேசி எண்கள் இருக்கிறது..” மனோகர் சாதனாவிடம் தனது விசிடிங் கார்டை கொடுத்தான்.

மனோகர் சென்றுவிட்டான்.

நாம் இபொழுது சற்று பின்னோக்கி செல்கிறோம்:

23 டிசம்பர் 2009:

மனோகர் நடத்தி வந்த தொழில் ஆலையில் திடீரென்று ஒரு தீ விபத்து ஏற்பட்டது.

இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள் நாசம் ஏற்பட்டது.

இன்சூரன்ஸ் காலாவதி ஆகி இருந்ததை மனோகர் கவனிக்காததால் நஷ்டம் முழுவதும் அவனே ஏற்க வேண்டியதாகிவிட்டது.

மனோகர் நஷ்டத்தை சரி செய்ய கடன் வாங்க வேண்டி இருந்தது.

வங்கியில் கடன் கொடுக்க மறுத்துவிட்டதால், வேறு வழி இல்லாமல் தனி நபர் ஜாமீன் மூலம் ராம் சேட் என்பவரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி நிலைமையை சமாளித்தான்.

இரண்டு மாதங்களில் தொழிற்சாலை முன்பு போலவே எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடத்துவங்கியது. கடனுக்கு மூன்று வட்டி என்று சொல்லி மாதம் ஒரு லட்சம் வரை அசலுக்கும் சேர்த்து பணம் கட்டி வந்தான் மனோகர்.

22 ஜனவரி 2011:

ராம் சேட் தனக்கு உடனடியாக மனோகர் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்.

கடன் வாங்கி பனிரெண்டு மாதங்கள் மாதம் ஒரு லட்சம் வீதம் பனிரெண்டு லட்சம் இதுவரை மனோகர் ராம் சேட்டுக்கு கொடுத்திருந்தான். மீதி பணத்தை விரைவில் கொடுத்து விடுவதாக மனோகர் கூறினான். ராம் சேட் அந்த பனிரெண்டு லட்சம் வட்டிக்கு சரியாகி விட்டது என்றும், அசல் இருபது லட்சம் உடனடியாக கட்டவேண்டும் என்றும் கூறினார். இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியது. இது நடந்தது ராம் சேட் வீட்டில்.

“ராம் சேட்.. நான் இருபது லட்சம் எல்லாம் கொடுக்க மாட்டேன். இது வரை பனிரெண்டு லட்சம் கொடுத்து விட்டேன். மேற்கொண்டு பத்து லட்சம் கொடுத்து விடுகிறேன். நம் கணக்கை முடித்துக்கொள்ளலாம்”

“அதெல்லாம் முடியாது மனோகர். நீங்க இருபது லட்சம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால் நான் கோர்ட்டுக்கு போவேன்..”

“கோர்ட்டுக்கு போனால் நீ மூன்று வட்டியெல்லாம் கேட்க முடியாது..”

“தெரியும்.. அதனால் தான் அப்பொழுதே புரோநோட்டில் முப்பது லட்சம் ரூபாய்க்கு எழுதி வாங்கி இருக்கிறேன்..”

“கோர்ட்டுக்கு போக நீ உயிருடன் இருக்கமாட்டாய் ராம் சேட்!.. மரியாதையாக பத்து லட்சம் பணத்தை வாங்கிகொண்டு கணக்கை முடித்துக்கொள். நாளைக்கு நான் மீண்டும் வருவேன்.. நான் எழுதி கொடுத்த புரோ நோட்டு எல்லாம் தயாராக எடுத்து வை..” என்று கூறி விட்டு மனோகர் சென்றுவிட்டான்.

23 ஜனவரி 2011:

அடுத்த நாள் மனோகர் ராம் சேட் வீட்டுக்கு போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ராம் சேட் கொலை செய்யப்பட்டதாக அன்றய செய்தித்தாள்கள் கூறின. அதை பார்த்ததும் மனோகருக்கு பெரும் அதிர்ச்சி. அன்றுதான் அவன் தொழில் தொடர்பாக பாண்டிச்சேரி போகவேண்டி இருந்தது. அப்படி போகும் வழியில்தான் அவன் சாதனாவைப் பார்த்து மருத்துவ மனையில் சேர்த்தது.

28 ஜனவரி 2011:

மனோகரை போலீஸ் கைது செய்தது. ராம் சேட்டை அவன்தான் கொலை செய்தான் என்று குற்றம் சாட்டப்பட்டது. ராம் சேட் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் மனோகர் ராம் சேட்டை கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டியது ஒலியுடன் பதிவாகி இருந்தது. அந்த சாட்சியின் அடிப்படையில் அவன் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டது. அவனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது. “நான் ராம் சேட்டை கொன்று விடுவதாக கூறியது உண்மைதான். ஆனால் அவரை நான் கொலை செய்யவில்லை.” என்ற மனோகாரின் வாக்குமூலத்தை போலீஸ் ஏற்கவில்லை. மனோகருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மனோகரை கொலை குற்றவாளியாக்கி போலீஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

15 பிப்ரவரி 2011:

சாதனா ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்து விட்டாள். அவள் இப்பொழுது நன்கு குணமாகி இருந்தாள். மனோகர் அவளை மீண்டும் பார்க்க வராமல் இருந்தது ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. அவனது செல் பேசி எண்ணுடன் தொடர்பு கொண்டாலும் எந்த பதிலும் இல்லை. எப்படியும் அவனை நேரில் சந்திக்கவேண்டும் என்று முடிவு செய்தாள். அதோடு இல்லாமல் அவளுடைய ஸ்கூட்டரும் கேமராவும் மனோகரிடம் இருந்தது.

வீட்டுக்கு வந்து சிறிது ஓய்வு எடுத்த பின் பத்திரிகைகளை படிக்க ஆரம்பித்தாள். ராம் சேட் கொலை வழக்கு பற்றி தினமும் செய்தி வந்துகொண்டிருந்தது. அதில் மனோகர் கொலை குற்றவாளி என்று படித்தவுடன் சாதனாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவள் உடனே போலீஸ் காவலில் இருந்த மனோகரை சந்தித்தாள்:

“மனோகர்.. நீங்கள் எப்படி இந்த கொலை வழக்கில் சிக்கிக்கொண்டீர்கள்?”

மனோகர் நடந்த எல்லாவற்றையும் விளக்கமாக கூறினான்.

“மனோகர்.. நீங்கள் இந்த கொலையை செய்யவில்லை என்று என்னால் மிக எளிதாக நிரூபிக்க முடியும்.”

“அது எப்படி முடியும் சாதனா?”

“நீங்கள் என்னுடைய கேமராவை பத்திரமாக வைத்திருந்தால் அது கண்டிப்பாக முடியும்!”

“அது மிகவும் பத்திரமாக என் வீட்டில்தான் இருக்கிறது. நீங்கள் இப்பொழுது என் வீட்டுக்கு சென்றால், என் மனைவியிடம் இருந்து அதை வாங்கிக்கொள்ளலாம். உங்களைப் பற்றி எல்லா விவரமும் என் மனைவியிடம் கூறி இருக்கிறேன். அதனால் நீங்கள் சென்று கேமராவை வாங்கிக்கொள்ளலாம். அது சரி.. அதன் மூலம் நான் கொலை செய்யவில்லை என்று எப்படி நிரூபிக்க முடியும்?”

“நான் சென்று கேமராவுடன் வருகிறேன். அப்பொழுது எல்லாம் புரியும்”

20 பிப்ரவரி 2011:

மனோகர் விடுதலை ஆகிவிட்டான். அவனுக்கும் அந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று போலீஸ் அவனை விடுதலை செய்துவிட்டது.

கொலை நடந்த அன்று சாதனா ராம் சேட் கொலை செய்யப்படும் காட்சியை தனது கேமராவில் பதிவு செய்துவிட்டாள். அதை தெரிந்து கொண்ட கொலையாளி அவளை துரத்திக்கொண்டு வந்தான். அவள் தனது ஸ்கூட்டரில் வேகமாக தப்பித்துகொண்டு செல்லும்போது, ஈ.சி.ஆர் ரோடில் கொலையாளியின் கார் மோதி விழுந்துவிட்டாள். அவள் இறந்துவிட்டதாக நினைத்து கொலையாளி சென்றுவிட்டான். இப்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *