யாரைத் தான் நம்புவதோ?!

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 6,347 
 

பாகம் 1| பாகம் 2

ஞாயிற்றுக்கிழமை, காலை ஆறு மணி.

மாமனார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ். இரண்டு நாட்களாக சரியாக தூங்காததாலும் முந்தின நாள் இரவு மாமனாருடன் வெகு நேரம் பேசிக் கொண்டே இருந்ததாலும், அண்ணாநகர் சோமுவின் வீட்டில் செய்த வேலை களைப்பினாலும் நேரம் கழித்துத்தான் உறங்கினார்.

அந்தக் கடத்தல் ஆசாமி ஏதாவது ஃபோன் பண்ணி சொல்லுவான், அவனை மடக்கலாம் என்று மிக ஆவலுடன் சோமுவின் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து பின்னர் ஏமாந்து போனதில் களைப்பு கூடியிருந்தது…மாமனார் வீட்டில் ஏஸி சொகுசில் பின்னர் நன்றாக உறங்கினார்.

ஹாலில் இருந்த ஃபோன் ஒலிக்க, மாமனார் எழுந்து சென்று எடுத்து பேசினார்… “மாப்பிள்ளை…. மாப்பிள்ளை…..உங்களுக்குதான் ஃபோன்”

இன்ஸ்பெக்டர் பரபரக்க எழுந்து வந்து ரிசீவரை வாங்கிக்கொண்டார். “ஹலோ” ராஜேஷ் பேச, “சார் நான் சோமு பேசறேன்… நீங்க சீக்கிரம் கிளம்பி வாங்க எங்க வீட்டுக்கு” சோமுவின் குரலில் அவசரம் தெரிந்தது.

“என்ன சோமு?… என்ன நடந்தது? அவன் ஃபோன் பண்ணினானா?” ராஜேஷ் படபடத்தார்.

“இல்லை சார், ஆனா ஒரு சின்ன பார்சல் அனுப்பி இருக்கான்… பேப்பர் போடுற பையன் கிட்ட கொடுத்து அனுப்பி இருக்கான்…. இப்பத்தான் கொஞ்சம் நேரம் முன்னாடி வந்தது…. இங்கே இருக்கிற உங்க போலீஸ்காரங்க பேப்பர் பையனை மடக்கி கேட்டாங்க, யார் கொடுத்தது, எங்கே கொடுத்ததுன்னு விசாரித்து அவன் சொன்ன இடத்துக்கு ஓடிப் போய் பார்த்தாங்க…. பேப்பர் பையன் சொன்ன அடையாளத்துடன் அந்த ஆளும் இல்லை, அவன் வண்டியும் எதுவுமில்லைன்னு ஏமாந்து திரும்பி வந்துட்டாங்க…..அந்தப் பையன் கிட்ட 50 ரூபாயை கொடுத்து பார்சலை என் வீட்டில் கொடுக்கும்படி சொல்லிவிட்டு ஓடி இருக்கான் அந்த சண்டாளன்…. நீங்க சீக்கிரம் வாங்க. இன்னும் பார்சலை யாரும் பிரிக்கலை…”

“ஓகே…. இதோ கிளம்பி விட்டேன்” இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சோமுவின் வீட்டை போய் சேர…. அவர் பின்னாடியே திண்டிவனத்திலிருந்து அவர் உதவியாளர் பைக்கில் வந்து இறங்கினார். கூட அந்த கரும்புச்சாறு கடைக்காரப் பையன் வந்திருந்தான்.

ராஜேஷ் அவனை ஆர்வத்துடன் பார்த்து “என்னப்பா விஷயம்?… ஃபோட்டோ வந்திருச்சா?” என்றார்.

“அந்தப் பையன் இப்பொழுது கொஞ்ச நேரம் முன்னாடிதான் என்னை வந்து பார்த்தான். உங்களுக்கு அந்த கார் ஃபோட்டோவை வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம் என்று சொன்னதற்கு உங்களை நேரில் வந்து பார்த்து கொடுக்க வேண்டும் என்று அடம் பிடித்து என் கூட வந்துள்ளான்…. ஏதோ நீங்கள் அவனுக்கு சின்ன பரிசு கொடுப்பதாக சொன்னீர்களா?…. அதை நம்பி வந்துள்ளான். அதுமட்டுமில்லாம கூட வந்து கார்ல அன்னிக்கு கடைக்கு வந்து கரும்பு ஜுஸ் குடிச்சவனை அடையாளம் காட்டமுடியும்னு சொன்னான்…. அதான் கூட்டி வந்தேன்”

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அந்த கடைக்கார பையனின், அவன் மச்சானின் தொலைபேசியில் இருந்த ஃபோட்டோவை தன் கைத்தொலைபேசி வாட்ஸ்அப்புக்கு மாற்றிக்கொண்டார். அந்த மாருதி காரின் சொந்தக்காரனின் தடையம் இதுல தான் இருக்கு என்று புன்னகையுடன் பொதுவாக கூறியவர் “பார்சல் எங்கே?” என்று சோமுவை பார்த்தார்.

“உள்ளே வாங்க….ஏதாவது வெடியா இருக்குமோன்னு பயந்து அதை திறக்காமல் அப்படியே மொட்டை மாடியில் வெச்சிருக்கோம்” அனைவரும் மொட்டை மாடிக்கு விரைந்தனர்.

பார்சலை கைத்தடியால் அழுத்திப் பார்த்தவர் நிதானமாக அதைப் பிரித்து “வெடி ஏதுமில்லை” என்று தீர்க்கமாக நம்பினார் ராஜேஷ். பார்சலை மெதுவாக கைரேகை படாமல் திறந்தார்.

முதலில் ஒரு ரெடிமேட் கவுன் வந்தது. “இது…. இது என் பொண்ணு நளினி உடையது….பொங்கலுக்கு வாங்கி தந்திருந்தோம்….” சோமுவின் உடல் நடுங்க ஆரம்பித்தது.

அந்தக் கவனுக்கு நடுவில் ஒரு பென் டிரைவ்ம் ஒரு கடிதமும் இருந்தது…. கடிதத்தை கைரேகை படாமல் பிரித்துப் படித்தார் ராஜேஷ்… மற்றவர்கள் கண்களை அகல விரித்து காதை கூர்மையாக்கிக் கொண்டனர்.

“இந்த லெட்டரில், இதோடு அனுப்பியிருக்கும் பென் டிரைவ்ல் கைரேகை இருக்குமென்று அனாவசியமாக தேடிக் குழம்ப வேண்டாம்…. நான் முன்னமே சொன்னேன்…. நான்….நாங்கள் பெரிய கில்லாடிங்க… ஒரு கேங்காக வேலை செய்கிறோம்ன்னு…. அன்னிக்கு ஃபோன்ல சொன்னதை நிரூபிக்க இத்தோடு உன் பொண்ணு நளினிய கடத்திட்டு போனப்போ அவ அணிந்து இருந்த கவுனும், அவ சௌக்கியமா எங்ககிட்ட இருக்கிறதை காட்டுற வீடியோ படமும் அனுப்பி இருக்கேன். பார்த்தப்புறம் நம்புங்க, நேத்து காலையில தான் படம் பிடித்தோம். அதாவது ராணி செத்த தேதி வேற இப்போ நீங்க வீடியோ படத்துல பாக்க போற தேதி சமீபத்து தேதி. அதனால குழம்பாதீங்க, நளினி இன்னும் உயிரோட தான் இருக்கா. மறுபடியும் சொல்றேன், உன் பொண்ணு நளினி எங்ககிட்ட உயிரோட தான் இருக்கா. வீடியோவை பார்த்து நீயே ஊர்ஜிதம் பண்ணிக்கோ… போலீஸ் கிட்டே தொடர்பு இருந்தா அவங்க கால்ல விழுந்து கெஞ்சி ஓடிப்போய்டச் சொல்லுங்க. மீதி பணத்தை ரெடி பண்ணி வையுங்க. திடீர்னு அதை எப்படி எங்கே எனக்கு கொடுக்கணும்னு நான் சொல்லுவேன். போலீஸ்காரங்க என் கண்ணுலபட்டா, உன் பொண்ணு உயிரோடு இருக்கமாட்டா, சொல்லிட்டேன்”

சோமு தலையை பிடித்துக் கொண்டு தரையில் விழுந்து புலம்பினான். அவனை யாராலும் தேற்ற முடியவில்லை. மனைவி காயத்ரி ஓடி வந்து அவன் அருகே உட்கார்ந்து அவளும் சேர்ந்து அழ ஆரம்பித்தாள்.

நேற்று மாலை தான் அப்பாவின் உடலையும் நளினி (என்று நம்பிய) ராணியின் உடலையும் தகனம் செய்து இருந்தார்கள்.

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேயறைந்தது போல் நின்றார்.

பின்னர், “ப்ளீஸ்… ப்ளீஸ்…. இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாதீங்க… இவன் ரொம்ப பெரிய சூழ்ச்சிக்காரன் தான்…….. இந்த கவுன் வேற கண்ல காட்டி குழப்ப பார்க்கிறான்……ஊர்ல இதே மாதிரி ரெடி மேட் டிரஸ் எத்தனையோ இருக்கும்…. அவன் ஏதோ வேற திட்டம் போட்டு உங்களிடம் மேலும் மேலும் பணத்தை கறக்கத் தான் பார்க்கிறான்…. நீங்கள் எங்களோடு சேர்ந்து முழுசா ஒத்துழைச்சீங்கன்னா, கூடிய சீக்கிரத்தில் அவனை பிடித்து விடலாம்…. உங்களோட பொண்ணுக்கும் எதுவும் ஆகாது…. நான் கேரண்டி தருகிறேன்…. எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம்…. மீதி பணத்தை அவன் சொன்ன மாதிரி ரெடி பண்ணி வையுங்க… இல்லைன்னா நாங்களே எங்க டிபார்ட்மெண்ட்ல பேசி ரெடி செய்து வைக்கிறோம்…. என்ன செய்யணும்னு எங்களுக்கு தெரியும்…. நீங்கள், நாங்க சொல்றபடி மட்டும் ஒத்துழைத்தால் போதும்” என்றார் ராஜேஷ் ஆறுதலாக.

அனைவரும் கீழே சென்று ஹாலில் இருந்த டி வி யில் அந்த பென் டிரைவ் நுழைத்து டி வி திரையில் வீடியோ படத்தை பார்க்க ஆரம்பித்தனர்…

சில நொடிகளுக்குப் பின் படம் தெரிந்தது…. முதலில் ஒரு மேசை மேல் இருந்த கடிதத்தை படம் கொஞ்சம் கொஞ்சமாக குளோஸ்-அப்பில் காட்டியது… அது… அதே கடிதம்தான், பார்சலில் வந்திருந்த அதே கடிதம்… இப்பொழுது ஒரு குரல் அகோரமாக அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டி கடகடவென்று சிரித்தது…. பிறகு…. அடுத்த ஷாட்ல் நளினி…. மிக அழகாகத் தோன்றினாள், சிரித்தாள்….

“அப்பா.. தாத்தா… அம்மா… பாட்டி… நீங்க எல்லாம் இந்த வீடியோவை பார்ப்பீங்களாம், நான் பேசுவதை பார்த்து ரசிப்பீங்களாமே?…. அக்கா, நீங்களும் முன்னாடி வாங்க…” நளினி வீடியோ கேமரா பக்கம் நின்றிருந்த வேறு யாரோ ஒரு பெண்ணை அழைப்பது போலிருந்தது…ஆனால் வீடியோ நளினியை மட்டும் காட்டியது. ஏதோ ஒரு வீட்டிற்குள்ளேயே எடுத்தது போல் இருந்தது வீடியோவில் தெரிந்த ஒரு டிவி நிகழ்ச்சி வீடியோ எடுக்கப்பட்ட தேதியை ஊர்ஜிதப்படுத்தியது… அது நேற்றைய தேதி!!

இன்னும் சில நிமிடங்களுக்கு நளினியை காட்டியது வீடியோ படம்… வீட்டிற்குள் அவள் விளையாடுவது, சாப்பிடுவது, குளிப்பது, என்று பல காட்சிகள் தெரிந்தன. நெற்றியிலும் தொப்புளிளும் அந்த மச்சங்கள் தெளிவாக தெரிந்தன….

இவள் நளினி தான் என்பதை எல்லோரும் நம்பினார்கள்.

“இது நம்ம நளினி தான்” என்று காயத்ரியும் சோமுவும் வாய்விட்டு கதறினார்கள்.

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குழப்பத்துடன் இருந்தார். அப்படியானால் அந்த இன்னொரு பாஸ்டர்ட் ஏன் சோமுவுக்கு ஃபோன் செய்து இன்னொரு பெரிய பொய்யைச் சொன்னான்? அவனை இப்போதே போய் பிடிக்க வேண்டும்… இன்ஸ்பெக்டர் ஒரு வெறியுடன் எழுந்தார். வீடியோவில் ஒரு தடயமும் இல்லை என்பதால் அதை வைத்துக்கொண்டு குற்றவாளியின் இடத்தை தேட முடியாது என்பது புரிந்தது…. இப்போதைக்கு ஒரே ஒரு வேலை, அந்த மாருதி காருக்கு சொந்தமானவனை…. இந்த கடைகாரப் பையன் தந்த ஃபோட்டோவில் தெரியும் காரை வைத்துக்கொண்டு அவன் விலாசத்தை அறிந்து கொண்டு அவனை பிடிக்க வேண்டும்.

ராஜேஷ் தன் சகாக்கள் இருவரை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினார்.

***

மகேந்திரனின் தனி வீடு… மணி 9…. டெலிஃபோன் ஒலிக்க மகேந்திரன் எடுத்துப் பேசினான்.

“ஹலோ… டேய் மகேந்திரா… நான் அனந்து பேசறேன்…நீ என்னை உன் வீட்டுக்கு வரச் சொன்னதா அப்பா சொன்னார் “மாமன் மகன் அனந்த் தான் பேசியது.

“ஆமாம்டா… ஒரு பெரிய ஹெல்ப் பண்ணனும் நீ… சீக்கிரம் வாடா”

“சாரிடா… இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை…. நான் ஏற்கனவே சில ப்ரோக்ராம் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்… கெளம்பிக்கிட்டும் இருக்கேன்… ஐ அம் வெரி சாரிடா என்னால வர முடியாது…. பாய்” அனந்த் சோமுவின் பதிலுக்கு காத்திராமல் ஃபோனை வைத்து விட்டான்.

மகேந்திரன் இப்பொழுது என்ன செய்யலாம் என்று யோசிக்கலானான்.

‘யாரை கூப்பிடலாம்?… யாரை கூப்பிடலாம் உதவிக்கு?…. இந்த ராமு?.. வேண்டாம் அவன் சின்னப் பையன்…. சுதாகர் இருக்கிறானே?….என் உயிர் நண்பன், அவனை கூப்பிடலாம்… சுதாகரிடம் ஃபோனில் பேசுவதற்கு பதில் அவனை நேரில் பார்த்து பேசி அவனிடம் நடந்ததை எல்லாம் கூறி அவனை அழைத்து வருவது சரி’ என்று தோன்றியது மகேந்திரனுக்கு.

விபத்து நடந்ததில் இருந்து தன் காரை வெளியே கொண்டு போக பயந்ததால், ஒரு ஆட்டோவில் சென்றுவர நினைத்தான்.

“டேய் ராமு, நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்… நீ எங்கேயும் போய்விடாத… நான் சீக்கிரம் வந்து விடுவேன்… வந்தப்புறம் நீ சினிமாவுக்கு கிளம்பலாம்… என்ன சரியா?”

“சரிங்க சார்” என்ற ராமு, இன்னிக்கு 12 மணி ஷோ பார்த்த மாதிரி தான் என்று அலுத்துக் கொண்டான்.

அவசரத்தில் கிளம்பிய மகேந்திரன் டைரியை பாதுகாப்பாக எடுத்து வைக்க மறந்து இருந்தால், அது ஹாலில் வைத்தது வைத்த இடத்திலேயே இருந்தது!.

***

காலை சிற்றுண்டியை தன் மாமனார் வீட்டில் சாப்பிட முடிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தன் சகாக்களை அருகில் இருக்கும் ஒரு சின்ன ஹோட்டலில் இறக்கிவிட்டு சாப்பிட்டு ரெடியாக இருக்கும்படி சொல்லி மாமனார் வீட்டிற்கு சென்றார். கூட வந்திருந்த கரும்புச்சாறு கடைப் பையனும் ஹோட்டலில் சாப்பிட அனுமதித்தார்.

போகும் வழியிலேயே ஆர் டி ஓ க்கு ஃபோன் செய்து அந்த மாருதி கார் நம்பரை கொடுத்து அதன் உரிமையாளரின் முழு விபரத்தையும் தனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். ஞாயிற்றுக்கிமை விடுமுறை நாள் என்பதால் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து விவரம் தெரிய சற்று சங்கடமாக இருந்தது, ஆனால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி விலாசத்தை கேட்டார்.

மாமனார் வீட்டை அடைந்து சிற்றுண்டி உண்ணும் பொழுதே வாட்ஸப்பில் அந்த மாருதி காரின் உரிமையாளர் விவரம் தெரிந்தது…. மகேந்திரன் விலாசம் நுங்கம்பாக்கத்தில் இருப்பதை பார்த்தவர் சிற்றுண்டியை வேகமாக முடித்துக்கொண்டு கிளம்பினார். சகாக்களையும் அழைத்துக்கொண்டு காரில் பறந்தார்…. சைரனை ஒலிக்கச் செய்யாமல்….இப்பொழுது அவர் தன் படையுடன் மகேந்திரனின் விலாசத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்

மணி பத்து ஆகியிருந்தது. நுங்கம்பாக்கத்தில் மகேந்திரனின் வீட்டுக்கு முன் அவர் கார் சரேலென்று போய் நின்றது. கூடவே வந்து இருந்த கரும்புச்சாறு கடைப் பையன் வீட்டை நெருங்கியதும்…. கேட் வழியே தெரிந்த அந்த ராமர் கலர் மாருதி காரை சுட்டிக்கட்டி “அதோ… அந்த மாருதி கார்” என்று சந்தோஷத்தில் துள்ளினான்.

“என் கூடவே வா” என்று ராஜேஷ் வேகமாக நடந்து கேட்டைத் திறந்தார். தோட்டத்தை பார்வையிட்டவாறே நடந்தார் கம்பீரத்துடன்… அவருக்குப் பின்னால் அவரின் இரண்டு சகாக்களும் தொடர்ந்தனர். ஒருவர் கையில் கைவிலங்கை ரெடியாக வைத்திருந்தார்.

ராஜேஷ் காலிங் பெல்லை அழுத்தினார். சில விநாடியில் கதவு திறக்க….

ஒரு வினாடி கூட முகத்தைப் பார்த்து இருக்க மாட்டான் அந்தப் பையன்…… அதற்குள் “அதே ஆள் தான் சார்… என் ஆத்தா மேல சத்தியமா சொல்றேன்…….. அவர் தான் சார்…. அன்னிக்கு என் கடையில ஜூஸ் வாங்கி குடித்தது…. இவர் தான் சார்” என்று கெட்டியாக பேசினான் பையன்.

“மிஸ்டர் மகேந்திரன், திண்டிவனம் கிட்ட ஒரு ஆறு வயசுப் பெண்ணை உங்க மாருதி காரில் நசுக்கி சாகடித்த குற்றத்துக்காக, hit-and-run கேஸ் விஷயத்தில் உங்களை நான் அரஸ்ட் செய்கிறேன்”…ராஜேஷ் கூற, காப்பு வைத்திருந்தவர் முன்வந்து கைவிலங்கை நீட்டினார்.

“பட்….. பட்…சார் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க….இது எல்லாம் அந்தக் கடத்தல்காரன் வேலை தான்….மரத்திலிருந்து அந்தப் பொண்ணு என் கார் மேல விழுந்தது….என் தப்பு எதுவும் இல்லை…. எனக்கு இன்னும் நாலு நாள்ல கல்யாணம் ஆகப்போகுது”

“நீங்க உங்க வக்கீல் மூலமா பேசலாம்”

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இன்ஸ்பெக்டர் சார்… அந்தக் கடத்தல்காரன் இன்னிக்கு என் கிட்ட பணம் வாங்குவதற்காக இங்கே வருவான் அவனையும் பிடித்து விடுங்கள்…. இதைப் பாருங்க இதுதான் அவன் முகம்…. தாடி வச்சுக்கிட்டு…”

இன்ஸ்பெக்டர் ராஜேஷ், கையால் வரையப்பட்ட அந்தப் படத்தைப் பார்த்தார். அந்தத் தாடியை நன்றாக மனதில் பதிய வைத்தார்.

“சரி…. அவனை பிடிக்கிற வேலையை நாங்க பார்த்துக்கறோம்…. எத்தனை மணிக்கு வரதா சொல்லி இருக்கான்?” அந்தப் படத்தை சன் பாக்கெட்டுக்குள் வைத்தவாறே கேட்டார் ராஜேஷ்.

“மத்தியானத்துக்கு மேல வரதா சொன்னான் சார்”

“ஆல் ரைட்…. நான் உடனே அதுக்கு அரேஞ்ச் பண்ணுகிறேன்… என் கைப்பட அவனை பிடிக்கணம்னு தான் எனக்கும் ஆசை…. இப்போ ஸ்டேஷனுக்கு நடங்க” அவனை லாக்கப்பில் வைத்து அதன்பின் திரும்பி வந்து தாடியை வேட்டையாடலாம் என்று ராஜேஷ் நினைத்துக் கொண்டார்.

வீட்டைப் பூட்டிக்கொண்டு குற்றவாளியை தன் காரில் ஏற்றிக் கொண்டார்… கார் தெருவை கடக்கும் முன்… ஒரு பக்கத்தில் அந்த தாடி…. போலீசை கண்டு ஒரு வினாடி அசந்துபோய்…. ராஜேஷும் அந்த தாடியை கவனித்து விட்டார்….

தாடி உடனே ஓட்டம் பிடித்தது. பக்கத்தில் இருந்த ஒரு சந்துக்குள் நுழைந்து ஓடினான் தாடி…..

“ஸ்டாப்…. ஸ்டாப்… அந்த தாடிக்காரனை பிடிங்க…. நீ இவரை, மகேந்திரனை ஜாக்கிரதையா பார்த்துக்க” என்று அலறியவாறே சர்ரென்று நின்ற காரில் இருந்து இறங்கி ஓடினார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ். ஒரு கான்ஸ்டபிள் மாத்திரம் காரில் இருக்க, இன்னொருத்தர் கூடவே ஓடினார். அந்தப் பையனும் தன் பங்கிற்கு ஏதாவது உதவி செய்ய நினைத்து அவனும் ஓடினான்.

சந்தில் மறுமுனையில் நின்றிருந்த பைக்கை உதைத்து சீற்றத்துடன் அதை கிளப்பினான் தாடி… துப்பாக்கியை இன்னும் ஏந்திராத இன்ஸ்பெக்டரை நோக்கி சிறுத்தை வேகத்தில் பைக்கை பாய்ச்சினான்….

அவன் வேகத்தில் சற்று மிரண்டு போன ராஜேஷும், கான்ஸ்டபிளும்…. அவனுக்கு வழி கொடுத்து விட்டனர்…. கை வீசி தாக்கிய முயற்சி வீண் போனது.

ராஜேஷ் உடனேயே துப்பாக்கியை எடுத்து சுட்டார்… குண்டு ‘நங்’ என்று பைக்கை பதம் பார்த்தது, ஆனால் அது தாடியை ஒன்றும் செய்யவில்லை….

காரின் முன்னால் வந்து சரேலென ஒரு அரைவட்டம் அடித்து தாடி பைக்கை சந்தைப் பிரிந்து சாலையில் பறக்க விட்டான்.

ராஜேஷும் கான்ஸ்டபிளும் பையனும் காரில் வந்து ஏறிக்கொள்ள அதன் சைரன் ஒலியை இயக்கி கார் பறந்தது.

‘ஏன் தான் இந்த நேரத்தில் மகேந்திரனை பார்க்க முடிவெடுத்தேனோ?’ என்று நொந்து கொண்ட தாடி இப்பொழுது எங்கே செல்வது என்று திணறினான்…. இனி என்ன செய்வது என்று குழம்பினான்… என்ன ஆனாலும் செங்கல்பட்டுக்கு போய்விடவேண்டும் என்று கடைசியாக தீர்மானித்துக் கொண்டான்.

நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் கண்ணில் பட… அந்தப்பக்கம் பைக்கை திருப்பினான்… அவன் போக்கை சிறிதும் எதிர்பார்த்திராத சாலை ஜனங்கள் தங்கள் வாகனத்துடன் திணறினார்கள்.

ஸ்டேஷன் வாசல்வரை சென்று பைக்கை சரேலென படுக்கப்போட்டு தாடி உள்ளே ஓடினான். போலீஸ் கார் பின்னாடியே வந்து நின்றது.

ராஜேஷ் தன் குழுவுடன் கத்தியவாறு பொதுமக்களை எச்சரித்துக் கொண்டு தாடியை பிடிக்க அவன் பின்னாடி ஓடினார்.

யாரோ ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் தாடியை வழிமறிக்க…… தாடி சிறிதும் தயங்காமல் அவன் வயிற்றுக்கு கீழே தன் வலது காலால் உதைத்து விட்டு ஓடினான்.

ஏற்கனவே நகர்ந்து கொண்டிருந்த மின்சார ரயிலை துரத்தினான் தாடி… சிறிது தூரம் ஓடிய பின் அதில் தொற்றிக் கொண்டான்.

ராஜேஷ் ஒரு கனம் என்ன செய்வது என்று யோசித்து பின் “நீங்க ரயில் பின்னாடியே ஓடுங்க….நான் அதை நிற்கவைக்க சொல்கிறேன்” என்று கூறிவிட்டு ஸ்டேஷன் மாஸ்டர் அறையை நோக்கி ஓடினார்.

ஆனால் அதற்குள் முன்னாடி சென்ற அந்த ரயில் நின்று போயிருந்தது…. பொதுஜனங்களில் யாரோ ஒருவர் செயினை இழுத்திருந்ததால்….

ராஜேஷ் தண்டவாளத்தில் குதித்து ஓடினார் அவர் சகாவும் முன்னாடி ஓடிக் கொண்டிருந்தார்.

ரயிலில் இருந்த சில பொது ஜனங்கள் தாடியை பிடிக்க நினைத்து…. அடி வாங்கியது தான் மிச்சம்…. அவன் அனைவரையும் உதறித் தள்ளி விட்டு ஓடி தண்டவாளத்தில் குதித்தான்.

எதிர்ப்புறத்தில் ஒரு சூப்பர் ஃபாஸ்ட் ரயில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது….

“ஷுட் பண்ணிடுவேன் நில்லு” என்று கத்தியவாறு ராஜேஷ் மறுபடியும் துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டார்…. தாடி அப்படியும் நிற்கவில்லை.

ஆகையால் ராஜேஷ் தான் ஓடுவதை நிறுத்திவிட்டு இரு கைகளாலும் துப்பாக்கியை அழுத்திப் பிடித்து தாடியை குறிபார்த்து அவன் பாதத்தை நோக்கி சுட்டார்…. தாடி கைகளை தூக்கியவாறு நின்றுவிட்டான்…. குண்டு அவன் காலை பதம் பார்க்கவில்லை… ஆனாலும் இனியும் ஓடினால் அபாயம் நிச்சயம் என்பதை புரிந்துகொண்டு நின்றுவிட்டான், முதுகை ராஜேஷுக்கு காட்டியவாறு…. என்ன செய்வது என்று தீவிர யோசனையில் ஆழ்ந்தான் தாடி.

ராஜேஷ் அவனை நெருங்கிக் கொண்டிருக்கையில்…துப்பாக்கியை சுடும் ஆயத்தத்தோடு பிடித்துக்கொண்டே முன்னோக்கி செல்கையில்….

சூப்பர் ஃபாஸ்ட் ரயில் தாடியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில்…. அந்த தாடிக்கு எங்கிருந்து தான் அவ்வளவு தைரியம் வந்ததோ….ரயிலுக்கு முன்னால் வலப்பக்கம் தாவி ஓடினான்…

மயிரிழையில் தப்பி ரயிலுக்கு மறுபக்கம் சென்று மறுபடியும் ஓட்டம் பிடித்தான்.

ராஜேஷ் இதை எதிர்பர்க்காததால் திணறிப் போய் விட்டார்… ரயில் அவனை அடித்து தூக்கி எறியும் என்று பயந்த வேளையில் அவன் தப்பி விட்டிருந்தான். ராஜேஷ் ஓடுகின்ற ரயிலை குனிந்து குனிந்து பார்த்தார்…தாடி ஓடுவது தெரிகிறதா என்று….சிறிது தூரம் ஓடிய கால்கள் தெரிந்தன…. பின் மறைந்து விட்டது. இப்படியும் அப்படியும் ஓடிச்சென்று குனிந்து குனிந்து பார்த்தும் தாடி அதன்பின் தென்படவில்லை… கடைசியாக ரயில் முழுவதும் கடந்து சென்றதும் பார்க்கையில், அவன் சுத்தமாக அருகாமையில் எங்கும் தென்படவில்லை.

தூரத்தில் பாலத்தின் மேல் அவன் ஓடிக் கொண்டிருந்தது தெரிந்தது… ஆட்டோ ஒன்றில் ஏறிச் சென்றதும் தெரிந்தது.

“ச்சே!” என்று சலிப்பில் கையும் காலும் உதறினார் ராஜேஷ்.

ஸ்டேஷன் வாசலில் அவன் விட்டுச் சென்ற பைக்கை போலீஸ் கைப்பற்றியது. இனி அந்த பைக்கை வைத்துக்கொண்டு தாடியின் விலாசத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

***

மணி மதியம் 12 தாண்டிக் கொண்டு இருந்தது.

மகேந்திரன் தன் உயிர் நண்பன் சுதாகருடன் ஆட்டோவில் வந்து தன் வீட்டருகே இறங்கினான். அக்கம்பக்கத்து வீட்டார்கள் தன்னை ஏனோ ஒரு மாதிரி வேடிக்கை பார்ப்பது அவனுக்கு சங்கடமாக இருந்தது… எதிர் வீட்டைத் தவிர மற்ற வீட்டில் இருப்பவர்களிடம் அவன் பேசியதே இல்லை… சில மாதத்திற்கு முன் தான் அவன் இந்த வீட்டிற்கு குடி வந்து இருந்தான்…

இப்போது இருவரும் எதிர் வீட்டை நோக்கிச் சென்றனர்….

“சார் நீங்க மகேந்திரனா?…இல்லை மனோகரனா?” எதிர் வீட்டு வாசலுக்கு சென்றதும் அவ்வீட்டில் இருப்பவன், சேகர், மகேந்திரனைப் பார்த்து கேட்டான்.

“யேய்… சேகர்…. என்ன ஆச்சு உனக்கு?” மகேந்திரன் புன்னகைத்தவாறு வினவினான்.

“…..இல்ல…கொஞ்ச நேரம் முன்னாடி தான் உங்களில்…. உங்களில் யாரோ ஒருவரை போலீஸ் பிடிச்சுக்கிட்டு போச்சு…. நான் பார்த்தேனே!…..அது மனோகரன் ஆகத்தான் இருக்கும் இல்ல?” சேகர் நெற்றியை வருடியவாறு கேட்டான்…

மகேந்திரனுக்கு இரத்தம் உறைந்தது… “என்ன?… என்ன சொல்றே நீ?”

“ஆமாம் போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணிட்டு போனாங்க” மற்ற அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் சேகர் வீட்டு அருகே நெருங்கிக்கொண்டிருந்தார்கள்…. ‘என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள….’என்ன நடந்தது?… யார் என்ன தப்பு பண்ணாங்க இந்தத் தெருவில்?’

“நான் பக்கத்து தெருவுல ஷாப்பிங் பண்ணிட்டு திரும்பறச்ச கவனிச்சேன்…. அந்த தெருவுல போலீஸ்காரங்க யாரோ ஒரு தாடி ஆசாமியை துரத்திக்கிட்டு போனாங்க…. போலீஸ் கார்ல பார்த்தா மனோகரன் சார் கைவிலங்கு மாட்டிக்கிட்டு உட்கார்ந்திருந்தார்…. திடீர்னு தாடிக்காரன் பைக்கை எடுத்துக்கினு சர்ர்னு வந்தான்…. பைக்ல என்னமா பறக்கிறான்… இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால அந்த தாடியை சுட்டார்…..”

நடந்ததைப் பார்த்த சேகர் பேச, “தாடியை பிடித்து விட்டார்களா?” மகேந்திரன் பரவசத்துடன் கேட்டான்.

“இல்லை….. பைக்ல தப்பிவிட்டான்…. என்ன சார் நடந்தது?”

“எனக்கே தலைகால் புரியலை நீ சொல்றது… நான் வரேன்… பேப்பர்ல பார்க்கலாம் என்ன நியூஸ்ன்னு” மகேந்திரன் நழுவிக்கொண்டு சுதாகருடன் தன் வீட்டில் நுழைந்தான் பூட்டைத் திறந்து கொண்டு.

‘ஆக மனோகரன் ஜப்பானில் இருந்து வந்து விட்டான் போலிருக்கிறது’… ஹாலில் இருந்த அவனுடைய சிறிய பெட்டி ஒன்று அதை ஊர்ஜிதப்படுத்தியது….

“நானும் மனோகரனும் இரட்டை பிறவிகள் இல்லையா!?… ஒரே மாதிரி தான் இருப்போம்….உனக்குத் தான் தெரியுமே?…. புதுசா பாக்குறவங்க குழம்பிப் போயிடுவாங்க!… அதான் அவனை நான்னு நெனச்சுக்கிட்டு போலீஸ் பிடிச்சுட்டு போயிட்டாங்க… பாவம் மனோகரன்…. ஜப்பானில் இருந்து வந்ததும் இப்படி ஒரு சோதனையா? அவன் என்னை ஏன் காட்டிக் கொடுக்கவில்லை?… நான் மனோகரன், மகேந்திரன் இல்லைன்னு ஏன் போலீஸிடம் சொல்லலை?…” மகேந்திரன் தலையை பிய்த்துக் கொண்டு பேசினான்.

“இப்போ அவனை எங்கே கூட்டிட்டு போய் இருப்பாங்கன்னு கண்டுபிடிச்சு பார்ப்போம் வா” சுதாகர் ஆக வேண்டியதைப் பற்றிப் பேசலானான்.

அப்பொழுது தான் மகேந்திரன் சோபாவுக்கு முன்னிருந்த டீப்பாயில் டைரி விரிந்து கிடப்பதைக் கவனித்தான்…. தாடியின் படம் ஒன்றும் குறைகிறதை கவனித்தான்….

“ஒருவேளை மனோகரன் வந்து அமர்ந்ததும் இதைப் படித்துப் பார்த்து எல்லாவற்றையும் புரிந்து கொண்டு….. எதேச்சையாக போலீசிடம் மாட்டிக் கொண்டபோது….. என்னைப் போல் வேஷம் போட்டுக் கொண்டானா?… ஏன்?…. எனக்கு கல்யாணம் ஆகப் போவதாலயா?”

“போலீஸ் எப்படிடா உன் அட்ரஸ் கண்டுபிடிச்சாங்க?” சுதாகர் கேட்டான்.

“அவங்களுக்கு என்ன தடயம் கிடைத்ததோ தெரியவில்லை…. ஆமாம், மனோகரன் ஜப்பானில் இருந்து வந்தவன்… என்ன எதையும் கொண்டு வந்த மாதிரி காணோம்?… இந்தச் சின்னப் பெட்டியை தவிர?… ஏதேதோ கொண்டுவருவதாக சொன்னானே?… சரி வா… அவன் எங்கே இருக்கானு கண்டுபிடிச்சி பேசுவோம்”

***

இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மகேந்திரனும் சுதாகரும் நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் உள்ளே நுழைவதைக் கண்டு திடுக்கிட்டார்.

“நீங்க யாரு?….மகேந்திரனைப் போலவே இருக்கீங்களே?”

“என் பெயர் மனோகரன்… மகேந்திரனின் ட்டுவின் பிரதர்…. இரண்டு பேரும் இரட்டையாக பிறந்தோம்…. எதுக்கு அவரை அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க?…. இந்தாங்க இந்த டைரி அவரோடது….இதப் படிச்சுப் பாருங்க, எல்லாம் புரியும்” மகேந்திரன் தன் பெயரை மனோகரன் என்று தற்காலிகமாக மாற்றிக் கொண்டு பேசினான்.

“என்ன வேணும் இப்போ உங்களுக்கு?” ராஜேஷ் டைரியை புரட்டியவாறு கேட்டார்.

“மகேந்திரனைப் பார்த்து கொஞ்சம் பேசணும்”

ராஜேஷ் அதற்கு ஏற்பாடு செய்துவிட்டு டைரியை படிக்கலானார்.

மகேந்திரனும் மனோகரனும் தனியாக பேசிக் கொண்டனர்

“டேய் நீ எப்படா ஜப்பானிலிருந்து வந்த?…. ஏன் என்கிட்ட ஒண்ணுமே சொல்லல?” தாழ்ந்த குரலில் மனோகரனின் தோலைப் பற்றிக் கொண்டு கேட்டான் மகேந்திரன்.

“சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் சொல்லலை… காலையில் தான் வந்தேன்… ஃப்லைட் லேண்ட் பண்ணும்போது அதோட டயர் ஒன்னு பத்திக்கிச்சி… ஏர்போர்ட்ல கொஞ்சம் டென்ஷனாக இருந்தது… என் லக்கேஜ் எல்லாம் அப்புறம் நாளைக்கு வந்து வாங்கிக்கறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்….

வீட்ல ராமு பையன்தான் இருந்தான்.. நீ அப்பத்தான் வெளியே போய் இருக்கிறதா சொன்னான். அவன், ராமு வெளியே போகணும்னு அடம்பிடித்தான்… நானும் அவனை அனுப்பிவிட்டு குளித்து சாப்பிட்டு ஹால்ல வந்து உட்கார்ந்தேன்… அப்புறம் நீ எழுதி இருந்த டைரி கண்ணில் பட்டது … கேஷுவலா புரட்டிப் பார்த்தபோது ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்குதேன்னு எல்லாத்தையும் திரும்பத் திரும்பப் படித்தேன்… நீ வரைஞ்சு வெச்சிருந்த அந்த தாடியின் படத்தையும் பார்த்தேன்…. அந்த நேரத்தில தான் போலீசும் வந்தது…. என்னை பார்த்து ஒரு பையன்… இந்த ஆள்தான்னு என்னை போலீஸுக்கு காட்ட, இந்த இன்ஸ்பெக்டரும் என்னை நீன்னு நினைச்சு அரஸ்ட் பண்ணிட்டார்… அப்பவே சொன்னேன்…. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… அந்த தாடியும் வருவான் பிடிச்சிடலாம்னு சொன்னேன்…. டைரியை படித்ததால் எனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச முடிந்தது…. அப்புறம் போலீஸ் கார்ல போற வழியில நம்ம வீட்டு பக்கத்து தெருவுல அந்த தாடியை பார்த்து….சினிமா ஸ்டைல்ல போலீஸ் சேஸ் பண்ணி….ஆனா ஆள் கடைசியில தப்பிவிட்டான்” மனோகரன் நடந்ததை விவரித்தான்.

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அருகே வந்தார்…அவர் கையில் டைரி இருந்தது, அதைப் படித்துவிட்டிருந்தார் போலும், “ஒரே ஒரு கேள்வி மிஸ்டர் மகேந்திரன்…. அந்தப் பொண்ணு நளினி தான்னு இப்பவும் நம்புறீங்களா?” என கேட்டார், ஜெயில் கம்பிக்கு அந்தப்பக்கம் இருந்த மனோகரிடம்.

மனோகரன் மகேந்திரனைப் பார்த்து, அவன் கண் அசைவில் புரிந்து கொண்டு “ஆமாம் சார் நம்புகிறேன்” என்றான்.

“ஏதாவது தப்பா கற்பனை பண்ணியிருப்பீங்களா?”

“ஏன் அப்படி கேட்கிறீர்கள்?” இப்பொழுது மகேந்திரன் குறுக்கிட்டான்.

இன்ஸ்பெக்டர் அவனை முறைத்துவிட்டு “ஏன்னா…. அந்த கடத்தல் ஆசாமி நளினி அப்பாவுக்கு ஒரு வீடியோ இன்னிக்கு காலையில கொடுத்து அனுப்பியிருந்தான்…. அதுல நளினியோட படங்கள் எல்லாம் இருக்கு. ஏதோ ஒரு வீட்டில் அவ சந்தோஷமா நடமாடிக்கிட்டு இருக்கிறதை படம் பிடித்து அனுப்பியிருக்கிறான் அந்த கடத்தல் ஆசாமி” என்றார் ராஜேஷ்.

“சந்தோஷமா…. நடமாடிக்கிட்டா?…. என்ன சொல்றீங்க சார்?… எப்படி அது சாத்தியம்?…. வீட்டைப் பிரிந்து ஒரு வாரமா வெளியில இருக்குற ஒரு சின்னப் பொண்ணு எப்படி தன்னை கடத்தியவன் வீட்டுல சந்தோஷமா நடமாட முடியும்?” உண்மையான மனோகர் பட்டென்று பேசினான்.

இன்ஸ்பெக்டர் தலையை சொரிந்தார்……

’யாரைத்தான் நம்புவது???…..கன்ஃப்ஷ்யனாகத் தான் இருக்கு… அந்தக் கடத்தல் ஆசாமி நம்ம கையில மாட்ற வரைக்கும் ஒன்னும் புரியாது போலிருக்கு…….. யாரையும் நம்ப முடியவில்லை…’ இன்ஸ்பெக்டர் யோசனையுடன் திரும்பினார்…கொஞ்ச தூரம் நடந்ததும், திரும்பிவந்து “உங்களை பெயில்ல வெளியே விட நான் தயார்….. வக்கீலை பிடித்து ஏற்பாடு பண்ணுங்க” என்று புன்னகையுடன் கூறிவிட்டு சென்றார்.

“எனக்கு இப்போ அதுதானே வேலை…. அது சரி…. நீ ஏன் உன்னை மகேந்திரன் இல்லைன்னு அவர்கிட்ட சொல்லலை?” இன்ஸ்பெக்டர் போனதும் மகேந்திரன் மறுபடியும தாழ்வான குரலில் பேசினான்

“டைரியை படிக்கும்போதே உன் நிலைமை ரொம்ப பரிதாபமாகப் பட்டது எனக்கு…. கொஞ்ச நாள்ல கல்யாணம் வேற, அதான் அப்படி நடித்தேன்!” மகேந்திரன் அவனை அணைத்துக் கொண்டான்.

“சரி நான் போய் பெயிலுக்கு வேண்டியதை கவனிக்கிறேன்”

************

தாடியின் பைக்கை வைத்துக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அது காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு உரிமையானது என்பதும், அந்த நபர் ஒரு டாக்டருக்கு, பெயர் சுரேஷ், இரண்டாந்தாரமாக விற்று விட்டதாகவும் தெரியவந்தது. மேலும் அந்த டாக்டர் சுரேஷ் ஒரு போலி டாக்டர் என்பதும், ஒரு நாள், சுமார் ஐந்து வருடங்களுக்கு முன், இரவோடு இரவாக ஊர் விட்டு போய் விட்டதாகவும் தெரியவந்தது. மேலும் அந்த டாக்டர், அவனது நர்ஸ் லட்சுமி, லட்சுமியின் தம்பி பிரபாகர் மூவரும் இதுநாள் வரையிலும் தலைமறைவு…… என இத்தனை தகவல்களும் எண்ணற்ற ஃபோன்கள் சலிக்காமல் செய்து பேசிப் பார்த்து, பைக்கை கைப்பற்றிய நான்கு மணி நேரத்திற்குள் கண்டு பிடிக்கப்பட்டது ராஜேஷால்.

“அந்த டாக்டர் சுரேஷ் ஒரு போலி டாக்டரா?” விஷயத்தைக் கேள்விப்பட்டதும் சோமு வாயைப் பிளந்தான்.

“ஐயோ… அடக்கடவுளே அவன்கிட்ட போய் நான் பிரசவம் பார்த்தேனே!…. நம்ம இரண்டாவது குழந்தை சாவறதுக்கு அப்ப அவங்க தான் காரணமாக இருக்கும்…. பாவிங்க நம்ம குழந்தையை கொன்னுட்டாங்க” காயத்ரி ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

ஒன்றும் புரியாமல் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் திருதிருவென்று முழித்தார். தாடியின் பைக்கை கொண்டு விரைவாக கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களை சோமுவிடம் சொல்வதற்காக அண்ணா நகருக்கு வந்திருந்தார் ராஜேஷ்.

“எனக்கும் ஒன்னும் விளங்கல” என்று சோமுவிடம் கூறினார்.

“என் மனைவியோட சொந்த ஊர் காஞ்சிபுரம்…. தலைப்பிரசவம் அங்கேதான் நடந்தது… டெலிவரி அன்னிக்கு இவ ரொம்ப துடிச்சதால, பக்கத்துல இருந்த 24 மணிநேர ஆஸ்பத்திரிக்குப் போனோம்… அந்த நர்ஸ் லட்சுமி டெலிவரி கேஸெல்லாம் நல்லா பார்ப்பாங்கன்னு கேள்விப்பட்டிருந்தோம் அப்ப…. டெலிவரியில் 2 பெண் குழந்தை பிறந்துச்சு…. ஆனா ஒன்னு செத்துருச்சு… கேர்ளஸ்ஸாக ஏதோ பண்ணியிருப்பாங்கன்னு இப்போ தோணுது…. ப்ளடி பாஸ்டர்ட்…. இவங்க கைக்கு திரும்ப நம்ம மகள் நளினியா?” சோமு விக்கித்து அழுதான்.

இன்ஸ்பெக்டருக்கு இருப்புக் கொள்ள முடியவில்லை….மனம் ஏதேதோ நினைத்து முடிச்சுப்போடப் பார்த்தது….

‘5 வருடத்திற்குப் பின் அந்த சுரேஷ் திரும்பவும் ஏன் சோமுவின் வாழ்க்கையில் தலையிட வேண்டும்? கொயின்ஸ்டன்ஸா?… இதில் ஏதோ மர்மம் இருக்கிறது..’

“மிஸ்டர் சோமு… ஒரு குழந்தை செத்துப் போனதாக சொன்னீர்களே… அந்த குழந்தையை நீங்கள் நேரில் பார்த்தீர்களா?… உங்க கண்ணால?”

“ஏன் பார்த்தோமே?… காயத்ரிக்கும், இன்னும் அவ வீட்டில கொஞ்ச பேருக்கும் அப்போதைக்கு சொல்ல வேண்டாம்னு… என் ஃப்ரெண்ட்ஸ் உதவியோட அந்தக் குழந்தையை நாங்க மறுநாள் காலைல அடக்கம் கூட பண்ணினோமே!” சோமு காயத்ரியை பார்த்தவாறு கூறினான்…..காயத்திரி பேயறைந்தது போல் சோமுவை பார்த்தாள்!

இன்ஸ்பெக்டர் கைகளைப் பிசைந்து கொண்டார்…. எல்லா குழப்பத்திற்கும் விடை அவனிடம் இருக்கிறது….தாடி…. சுரேஷ்…போலி டாக்டர்….இப்பொழுது கடத்தல் ஆசாமி!!… எங்கே இருக்கிறான் இப்போது?

***

செங்கல்பட்டில்….. பங்களாக்கள் நிறைந்த பகுதி அது….

குமார், 16 வயது வாலிபன்….. அவன் மாமா அவனுக்கு 15 வயது பிறந்த நாள் பரிசாக ஒரு பவர்ஃபுல் பைனாகுலரை கொடுத்திருக்க அதை அவன் மார்பில் தொங்க வைத்துக் கொண்டு தூரத்தில் தெரியும் பறவைகளை…இயற்கை காட்சிகளை ரசித்துப் பார்க்க தொடங்கினான்…. சில மாதங்களாகவே வீட்டில் இருக்கும் பொழுது எல்லாம் இதுதான் அவனுக்கு ஹாபி மாதிரி இருந்தது!

பைனாகுலர் கைக்கு வந்த ஒரு மாதம் கழித்து…., எதேச்சையாக அந்த பைனாகுலர்ல் ஒரு பெண் உடை மாற்றிக் கொள்வது தெரிய… இளவயதுக்காரன், வயசுக் கோளாறினால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு அதை பார்த்து பார்த்து உடல் பரவசப்படுவதை அனுபவித்தான்…. அன்றிலிருந்து இந்த பைனாகுலரை பெண்களை வேவு பார்ப்பதற்கு என்றே பயன்படுத்தப்பட்டது!

இப்பொழுதும், அதை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்… அவன் வீட்டிற்கு வலப்பக்க வீட்டில் மாடியில் யாரோ புதிதாக குடி வந்திருந்தார்கள்…. அந்த வீடு கொஞ்சம் தூரம் தள்ளி இருந்ததால் வெறும் கண்ணுக்கு…. அவனது இச்சைக்கு… தேவையான காட்சிகள் புலப்படவில்லை. பைனாகுலரில் புதிய பெண் எப்படி தெரிகிறாள் என்று அலைந்தான்…. ஒருமுறை அவளை பார்க்கவும் செய்து எச்சிலை வெகுநேரம் வரை விழுங்கி கொண்டே இருக்க வேண்டியதாகியது!!

அதோ… அவள் மீண்டும் தெரிந்தாள்…. அவளுடன் ஒரு சிறுமி… சிறுமியை குளிப்பாட்ட வேண்டி, அவளின் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தாள் அவள்…. குமார் இப்பொழுது அந்த சிறுமியின் மேல் பைனாகுலர் விழிகளை அகல திருப்பினான்……அச்சிறுமியின் முகத்தைப் பார்த்தவன், நெற்றியை சுளித்தான்….. மறுபடியும் பார்த்தான்… மனதில் ஏதோ உறுத்தியது….

‘இவளை எங்கேயோ பார்த்திருக்கிறேனே?’

சட்டென்று ஞாபகம் வந்தவனாய் மாடியிலிருந்து கீழே விரைந்தான்… தாத்தா படித்துக் கொண்டிருந்த தினசரியை பிடுங்கினான்….கொஞ்ச நேரம் முன்புதான் அதை அவன் ஒரு கடையிலிருந்து வாங்கி வந்திருந்தான்…. அதில் நளினி என்பவள் ‘காணவில்லை’ என்பதை பார்த்து இருந்தான்…. தாத்தா கத்துவதை பொருட்படுத்தாமல், தினசரியை எடுத்துக் கொண்டு மீண்டும் மாடிக்கு ஓடினான்… நளினியின் ஃபோட்டோவை திறந்து வைத்துக்கொண்டு பைனாகுலரில் மறுபடியும் நோட்டமிட்டான்…. அந்தச் சிறுமி….’அவளே தான்….. சந்தேகமே இல்லை!’

தினசரியை எடுத்துக்கொண்டு, தனியாகவே துணிந்து, ஒரு ஹீரோவைப் போல் நினைத்துக் கொண்டு…. வாழ்க்கையில் முதல் முறையாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் தான் பார்த்ததை விளக்கினான்.

இன்ஸ்பெக்டரும் மூன்று பேருடன் உடனே அந்த வீட்டிற்கு படையெடுத்தார். வீட்டில் இருந்த அந்தப் பெண், லட்சுமி வயது 32, அவளது தம்பி பிரபாகர் வயது 26, இருவரையும் கைது செய்தார்.

மிரட்சியுடன் பார்த்த நளினியை அன்புடன் அணைத்து தூக்கி “இவங்க எல்லாம் புள்ள பிடிக்கிறவங்க…. உன்னை நான் உன் அம்மா அப்பா கிட்ட சேர்த்துவிடறேன்… சமத்தா இருக்கணும்” என்று கூறி பயத்தை நீக்க முயன்றார் இன்ஸ்பெக்டர்.

அவர்கள் மாடியில் இருந்து இறங்கும் பொழுது, தூரத்தில் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த தாடி…. சுரேஷ்…. கவனித்து விட்டான். “ஆட்டோவைத் திருப்பு….இந்த தெரு இல்லை” என்று ஆட்டோ டிரைவரிடம் கூறி திசை மாறினான்.

அவன் கண்கள் ஆத்திரத்தால் சிவந்தன… பாடுபட்டு போட்ட திட்டமெல்லாம் பாழ் ஆகிவிட்டதை எண்ணி எண்ணி கொந்தளித்தான்.

வாழ்க்கையில் மூன்றாவது முறையாக போலீசுக்கு பயந்து ஓட வேண்டிய நிர்பந்தம் வந்து விட்டது…. ‘ஆனாலும் கில்லாடிதான் நான்…. இதுவரையிலும் சிக்கவில்லை… இப்பொழுதும் நிரந்தரமாக தப்பிவிட வழி தேட வேண்டும்…. பம்பாய்க்கு சென்று விட வேண்டும் முதலில்….. உடனே…. அங்கே தான் மற்ற வேலைகளை தொடர்ந்து செய்ய ஏதுவாக இருக்கும்…. டிப்டாப்பாக ஃபிளைட்டில் தப்பிக்க வேண்டும்’ என நினைத்துக்கொண்ட சுரேஷ்….

முதல் காரியமாக, சாலையோரத்தில் திறந்த வெளியில் இருந்த குட்டி சவரக் கடையில் தாடியைக் கலைத்தான். ஒரு மூக்குக் கண்ணாடி வாங்கிக்கொண்டான்… பிறகு மீனம்பாக்கம் நோக்கி பயணம் செய்தான்.

மீனம்பாக்கத்தில் அவனுக்கு அடுத்த நாள் ஒன்றில் தான் பம்பாய் டிக்கெட் கிடைத்தது…. இனி அது வரை என்ன செய்வது என்று திட்டமிடலானான்.

பத்திரிக்கையில் என்ன செய்தி வெளியாகி இருக்கிறது என்பதை வாங்கிப் பார்த்தான். அதில் அவன் படம் தாடியுடன் வெளியாகியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தான்… யாரோ கையால் வரைந்து இருக்கிறார்கள்….ஆனால் பரவாயில்லை இப்போது தான் தாடி எடுத்தாகி விட்டதே!…மேற்கொண்டு அந்த மாலை தினசரியில் அன்று காலையில் நடந்த சம்பவத்தைப் பற்றி தெளிவாக வெளியாகியிருந்தது.

லட்சுமி பிடிபட்ட செய்தி இனிமேல் தான் வரும்…. மாலை 6 மணியில் தான் அவள் பிடிபட்டாள்…. இனி அவன் போட்ட அந்த மகா திட்டமெல்லாம் அம்பலமாகும்…. லட்சுமி கண்டிப்பாக கூறிவிடுவாள்……

‘மூதேவி….இவள் கேட்டதையெல்லாம் செய்ததால் வந்த விணை தானே இப்பொழுது இப்படி தவிக்க வேண்டியதாகி உள்ளது!!’

***

வாலாஜாபேட்டையில், கம்பவுண்டர் வேலை பார்த்து வந்த சுரேஷ், படிப்படியாக டாக்டர் வேலையை பழகி இருந்தான்… என்னென்ன நோய்க்கு என்னென்ன மருந்து என்பது அவனுக்கு அத்துபடி ஆகிவிட்டது!!

ஒரு நாள் அவனின் டாக்டர் ஆஸ்பத்திரிக்கு வர நேரமாகியது…. ஜுரத்தால் அவதிப்பட்டுக் கிடந்த ஒரு நோயாளியை இவனே ஸ்டெத்தாஸ்கோப் எல்லாம் வைத்து செக் செய்து மருந்து கொடுத்து அனுப்பினான்.

அதைப்பார்த்து நெடுநேரமாக காத்திருந்த இன்னும் இரு நோயாளிகளும் தங்களை சோதித்து மருந்து கொடுக்கும்படி அவனிடம் வந்து அமர்ந்தனர்….

சுரேஷ், டாக்டர் சீட்டில் அமர்ந்துகொண்டு பந்தாவாக இருந்த சமயத்தில் டாக்டர் திடீரென்று வந்துவிட இவனது செய்கையை கவனித்து விட்டார்… காரசாரமாக திட்டி அவனை வேலையிலிருந்து உடனேயே நீக்கினார் டாக்டர்.

மனம் ஒடிந்து போன சுரேஷ், தன் மனைவி, நர்ஸ் லட்சுமியின் உதவியை நாடினான்.

இருவரும் சேர்ந்து தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். லட்சுமியின் தம்பியையும் அழைத்துக்கொண்டு காஞ்சிபுரத்திற்கு சென்று அங்கு ஒரு ஒதுக்குப்புறத்தில் 24 மணிநேர ஆஸ்பத்திரி ஒன்றை துவக்கினார்கள்… சுரேஷ் டாக்டர், லட்சுமி நர்ஸ், அவள் தம்பி எடுபிடி வேலை மற்றும் கம்பவுண்டர்……என கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக ஆரம்பித்தனர்…

சில நோயாளிகளிடம் நயமாகப் பேசி, அவர்களுக்கு இலவச சிகிச்சை கொடுத்து மயக்க….. தாங்கள் ராசியான டாக்டர், இது ராசியான 24 மணிநேர மருத்துவமனை என்று மற்றவர்களிடம் பேசச் செய்து….பொய் பிரச்சாரம் பண்ணி….. தங்கள் பணியை பிரபலப்படுத்தி, விரிவாக்கினர்.

பிரச்சினையின்றி அவர்கள் போலி வேஷம் தொடர்ந்து கொண்டு இருக்கையில்…. ஒரு நாள் காயத்திரிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது….

நேரம் இரவு 11 இருக்கும்……இரண்டு அழகான பெண் குழந்தைகளை ஈன்றெடுத்தாள் காயத்திரி.

லட்சுமிக்கு சில காலமாகவே குழந்தை மேல் அபார ஆசை….அவளுக்கு குழந்தை பாக்கியம் இதுவரை இல்லை…. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் உள்ளுக்குள் ஆசை பேயைப் போல் கிளம்பும்…. ‘இதை என் குழந்தையாக எடுத்துக் கொண்டால் என்ன’வென்று தோன்றும்.

இப்பொழுதும் இந்த இரட்டைப் பெண் குழந்தைகளைப் பார்த்ததும் ஒரு ஐடியா தோன்றியது…. இரண்டில் ஒரு குழந்தையை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் உருவானது.

ஆஸ்பத்திரியில் இருந்த இன்னொரு வார்டில் அன்று மாலைதான் திருமணமாகாத ஒருத்தி கொஞ்ச நேரத்திற்கு முன் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்திருந்தாள்… அது பிறக்கும் போதே செத்திருந்தது… திருமணம் ஆகாத அந்தப் பெண்ணின் தாயார் அக்குழந்தையை எப்படியாவது அப்புறப்படுத்தும்படி கூறி பணமும் தந்து இருந்ததால், அக்குழந்தையை மறுநாள் விடியற்காலை அப்புறப்படுத்தலாம் என்றிருந்த வேளையில்…. இப்பொழுது காயத்ரியின் பிரசவம் நடந்தது.

லட்சுமி சுரேஷின் காதில் கிசுகிசுத்து தன் ஆசையை வெளிப்படுத்தி, இரண்டில் ஒரு குழந்தையை எடுத்துக்கள்ள வேண்டும் என திட்டவட்டமாக சொல்லி விட்டாள்.

சுரேஷ், லட்சுமியின் அழகிலும், காமத்தில் அவளின் நெருக்கமான பழக்கத்திலும் மிகவும் அடிமையாகிப் போய் இருந்தவன்…. இப்பொழுது அவள் பேச்சைக் கேட்டு அதன்படி செய்ய ஒப்புக் கொள்ளும்படியானது.

சுரேஷ், வந்திருந்தவர்களை, சோமுவின் நண்பர்கள், தன் அறைக்கு அழைத்துச் சென்று “மிஸ்டர் சோமு… உங்க வைஃபுக்கு இரட்டைப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது…. ஆனால்…”என்று சோகமாக குரலை இழுத்தான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு குழந்தை மாற்றத்தை துரிதமாக நடத்திக் கொண்டிருந்தாள் லட்சுமி, தன் தம்பி பிரபாகர் உதவியுடன்….

“என்ன ஆச்சு டாக்டர்?” சோமு பதற்றத்துடன் கேட்டான்.

“அது ஒன்றும் இல்லை…. பிரசவத்தின் பொழுது ஒரு பெரிய சிக்கல் நடந்திருக்கு… முதல்ல வெளியே வந்த குழந்தைக்கு ஒன்னும் ஆகல….ஆனா அந்த இரண்டாவது….பெரிய சிக்கலாயிடுச்சு அதுக்கு வெளியே வர….அப்புறம் பார்த்தா…. பிறக்கும் பொழுதே அந்தக் குழந்தை செத்து விட்டது…. எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை….வெரி சாரி மிஸ்டர் சோமு” நடுங்கிய கைகளால் சுரேஷ், சோமுவின் கைகளைப் பற்றிக் கொண்டு, தன் வாழ்நாளின் மிகப் பெரிய பொய்யை கூறினான்.

அந்த இன்னொருத்திக்கு பிறந்த குழந்தை…. செத்துப் பிறந்த குழந்தை, காயத்ரிக்கு பிறந்த குழந்தையைப் போலவே கொஞ்சம் சிவப்பாக இருந்ததால் குழந்தையை மாற்றியதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை….

அசைவற்றுக்கிடந்த குழந்தையை பார்க்கவே பயந்தான் சோமு.

டாக்டர் சுரேஷ் சொன்னதை முழுவதுமாக நம்பி காயத்ரிக்கும் நெருங்கிய உற்றார் உறவினர்களுக்கும் தெரியாமல் தன் நண்பர்களின் உதவியுடன் செத்துப் பிறந்த அக்குழந்தையை மறுநாள் விடியற்காலை சிம்பிளாக அடக்கம் செய்து விட்டான்.

லட்சுமி, தான் திருடிக் கொண்ட பெண் குழந்தைக்கு ராணி என்று பெயர் வைத்தாள்… அவளை உண்மையிலேயே ராணி போல் வளர்க்க வேண்டும் என்று ஆசை ஆசையாக செல்லம் கொடுத்து வளர்க்க ஆரம்பித்தாள். வீட்டில் வளர்த்தால் பலரின் சந்தேகத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதால், ஆஸ்பத்திரிலேயே வைத்து வளர்த்தாள்.

ஆனால் சில மாதங்களுக்குள் சுரேஷ் தன் போலி டாக்டர் தொழிலை கைவிட வேண்டியிருந்தது….. போலி டாக்டர்களை ஆங்காங்கே போலீசார் பிடித்துக் கொண்டிருந்தனர்…. எனவே ஒரு நாள் இரவு சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடினர் கைக்குழந்தையுடன்…….

சென்னைக்கு வந்து நண்பர்கள் சிலரின் துணையுடன் பர்மா பஜாரில் ஒரு சிறு கடையை ஆரம்பித்தான் சுரேஷ்…சிறுசிறு கடத்தல் வேலையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வசதிகளை சிறிது சிறிதாக பெருக்கிக் கொண்டு வந்தான்.

காலங்கள் உருண்டோடியது… போலீஸ், பர்மா பஜாரில் ரெய்டு செய்யத் துவங்கியதும் தன் கடையை இழுத்து மூட வேண்டியதாகியது.

அவசரமாக தன் குடும்பத்தை திண்டிவனத்துக்கு மாற்றிக் கொண்டான்…. இனி தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று சுரேஷும் லட்சுமியும் பயந்தனர்.

அடுத்தக் கட்ட முயற்சியாக ஒரு நாள் சென்னை அண்ணா நகரில் இருக்கும் ஒரு நண்பனை காணச் சென்றான் சுரேஷ். நண்பனை பார்த்து விட்டு திரும்புகையில்…. ‘யாரிவள்?…. நம் ராணியைப் போலவே இருக்கிறாளே!’ வீதியில் விளையாடிக் கொண்டிருந்த நளினியைப் பார்த்து அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தான் சுரேஷ்.

“உன் பேரு என்னம்மா?”

“நளினி”….. கூட விளையாடிக் கொண்டிருந்தவன் சுரேஷைப் பார்த்ததும் ஏனோ ஓடிவிட்டான்.

“எந்த வீட்ல இருக்கே?… அங்கேயா? உன் அப்பா அம்மா பேரு என்ன?” சுரேஷ் அவள் தலையைத் தொட்டுப் பேசினான்.

“ஆமா, அந்த வீடுதான்…. அப்பா பேரு சோமு….. அம்மா பேரு காயத்ரி…. நீங்க யாரு?… வீட்ல தாத்தா பாட்டி தான் இருக்காங்க… அப்பா அம்மா எல்லாம் மும்பாயில இருக்காங்க…. தாத்தாவை கூப்பிடட்டுமா?” நளினி ஓடிச்சென்று வீட்டிற்குள் இருந்த ஆறுமுகம் தாத்தாவை அழைத்து வந்தாள்.

சுரேஷ் அவளைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.

ஆறுமுகம் சுரேஷை பார்த்து “என்ன வேணும்? யாரு நீங்க?” எனக் கேட்டார்.

“நான் சோமுவோட ஃபிரண்டு தான்… இப்படி போற வழியில நளினியை பார்த்தேன்…. இவ காஞ்சிபுரத்தில் தானே பிறந்தா?”

“ஆமாம்… ஏன் கேட்கிறீங்க?” ஆறுமுகம் சுரேஷை காஞ்சிபுரத்தில் பார்த்ததில்லை…. காயத்திரிக்கு பிரசவம் ஆன இரண்டு வாரம் கழித்துதான் அமுதாவுடன் காஞ்சிபுரம் போக நேரிட்டது… அந்தச் சமயம் வேறு ஒரு குடும்ப விஷயமாக வெளியூர் சென்றிருந்ததால். காயத்ரியின் பிரசவத்தின் போது அவர்கள் அருகில் இருந்ததில்லை.

“ஒன்றுமில்லை… சும்மாதான்” பேசியவாறே சுரேஷ் அருகில் சுவற்றில் தெரிந்த சோமு-காயத்ரி திருமண ஃபோட்டோவை கவனித்தான்.

“சோமு-காயத்ரி…. நல்ல ஜோடி தான்” புன்னகைத்தவாறே “நான் வருகிறேன்…. சும்மாதான் இப்படி வந்தேன்… சோமு இங்கு திரும்பி வரும் பொழுது நான் திரும்பி வருகிறேன்…. அப்பொழுது பேசிக்கொள்ளலாம்” என சுரேஷ் சொல்லிவிட்டு கிளம்பினான்.

ஆறுமுகத்திற்கு அப்பொழுது தெரியவில்லை…. இந்த சுரேஷ் தான் இரண்டு நாட்கள் கழித்து நளினியை கடத்திச் செல்லப் போகிறான் என்று.

இரண்டு நாட்களுக்குள் சுரேஷின் மூளை அபாரமாக வேலை செய்து நளினியை கடத்தி பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது…. இனி தங்கள் வாழ்க்கையில் கடத்தல் தொழில் தான் செய்யணும்….செய்ய முடியும் என லட்சுமியோடு சேர்ந்து முடிவெடுத்து இருந்தான்…. அதுவும் சிறு பெண்களை கடத்துவது நல்ல பணத்தை ஈட்டும் என்பதை மும்பாயில் உள்ள சில நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டு அதில் வெறித்தனமாக ஈடுபட நினைத்தான்.

முதலில் லட்சுமி பயந்தாள்…. பிறகு “சோத்துக்கு பணம் வேணும்டீ” என்று அவன் கத்த ஆரம்பித்ததும் ஒப்புக்கொண்டாள்.

அதன்பின் சுரேஷ், நளினி வீதியில் வந்து விளையாடும் தக்க நேரத்தை பார்த்து அவளை நெருங்கினான்.

“ஹாய் அங்கிள்” நளினி சுரேஷைப் பார்த்து புன்னகைத்தாள். கூட விளையாடிக் கொண்டிருந்தவன் சுரேஷைப் பார்த்ததும் மீண்டும் ஏனோ ஓடிவிட்டான்.

“நளினி கண்ணு… நீ பொறந்தப்போ உன் கூடவே ஒரு தங்கச்சி பாப்பாவும் பொறந்தது தெரியுமா உனக்கு?”

நளினி வியப்புடன் முழித்தாள்.

“அந்த பாப்பா இப்போ உன்ன மாதிரியே வளர்ந்து இருக்கா…உன்னோட ட்டுவின் ஸிஸ்டர் அவ…பேரு ராணி…. என் வீட்லதான் இருக்கா… உன் அப்பா அம்மாவும் இப்போ என் வீட்டுக்கு தான் வந்திருக்காங்க… வரியா போகலாம்?”

சுரேஷ் அவளிடம் நயமாகப் பேசி தூக்கிக்கொண்டு போய் கட்சிஃப்பில் மயக்க மருந்தை தடவி அவள் மூக்கில் அப்பினான்…. யாருக்கும் சந்தேகம் வராதது போல் நடந்து கொண்டான்.

நளினி கண் விழித்து பார்த்ததும் அவளுக்கு முன்னால் ராணி நின்று இருப்பது கண்டு மிகவும் வியந்தாள்.

“என்னைப்போலவே இருக்கிறாயே நீ!” என அவளைத் தொட்டுத் தொட்டு பார்த்து அதிசயித்தாள்….ராணியும் நளினியை தொட்டுப்பார்த்து பேசி….. விளையாடி மகிழ ஆரம்பித்தாள்.

லட்சுமியும் சுரேஷூம் பற்பல பொய்களை சொல்லி நளினியை தன் வீட்டை மறந்து இருக்கும்படி செய்தனர்…. பலவிதமான தின்பண்டங்களையும் விளையாட்டுப் பொருட்களையும் கொடுத்து, நளினியை மகிழ்வித்தனர். ராணிக்கு, நளினிக்கு உள்ளதுபோல் மச்சங்களை பச்சை குத்தி தோற்றுவித்தார்கள். நளினியை வெளியே எங்கும் போகாமல் பார்த்துக் கொண்டனர்.

ராணி ஒரு நாள் நளினி முதல்நாள் அணிந்திருந்த டிரஸைப் போலவே தனக்கும் வேண்டும் என அடம்பிடிக்க பல கடைகளுக்கு சென்று தேடி அலைந்து அதே போன்ற உடையை ராணிக்கு வாங்கிக் கொடுத்து, இருவருக்கும் அதே டிரஸ்களை போட்டு ஒன்றாக நிற்க வைத்து அதிசயித்து பார்த்தனர்…. இரட்டைப் பிறவிகள் எப்படி எல்லாம் இப்படி அதிசயமாக இருப்பார்கள் என்பதை நேரில் கண்டு மகிழ்ந்தனர்.

சுரேஷ் இனி தன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தான்.

முதலில் ஆறுமுகத்திடம் இருந்து மூன்று லட்சம் வாங்கிக் கொண்டான். பிறகு நளினியை திண்டிவனம் அருகே வந்து எடுத்துச் செல்லும்படி ஆறுமுகத்திற்கு ஃபோனில் கூறினான் எந்த நேரத்திலும் போலீசிடம் அகப்பட்டு விடக்கூடாது என்று உஷாராக இருந்தான்.

ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவிக்கும் முன் பிரபாகரை கூப்பிட்டு “நீ உன் வண்டியை எடுத்துக்கிட்டு திண்டிவனம் பஸ் ஸ்டாண்ட் கிட்ட போய் இரு… இந்தா, இதுதான் நளினியோட தாத்தா கார் நம்பர்… மாருதி கார்… ராமர் கலர்… அந்த ஆள் திரும்பி சென்னைக்கு கிளம்பியதும் எனக்கு சொல்லணும்… அவர் கொஞ்சம் கிழம்… கண்ணாடி போட்டிருப்பார்… நீ அப்புறம் எனக்கு சொல்லிட்டு அங்கேயே இரு…. நான் காரியம் நல்லபடியா முடிஞ்சப்புறம் உனக்கு ஃபோன் பண்ணி சொல்வேன். இப்போ உன் ஸ்கூட்டர்ல பெட்ரோல் நிரப்பிக்கிட்டு போ” என்று நிதானமாக விளக்கிக் கூறி கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அனுப்பினான்.

லட்சுமி இரு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து இருந்தாள். கைவசம் சில மாத்திரைகளை தயாராக வைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து சுரேஷ் லட்சுமியிடம் “நாம் நம் ராணியை இந்தத் திட்டத்திற்கு யூஸ் பண்ணிப்போம்…. நளினி சாகாமல் இருந்தால் தான் மேலமேல அவள் தாத்தாகிட்ட இல்ல அவள பெத்தவங்ககிட்ட பல பொய்களை சொல்லி பணம் கறக்க முடியும்…. அதனால் நம் ராணி இப்போது சாக வேண்டியது தான் சரி…. சரியா?”

லட்சுமி இதை கண்டிப்பாக மறுத்தாள்…. ஆசை ஆசையாக செல்லமாக ஆறு வருடங்கள் ராணியை வளர்த்து இப்படி சாகடிக்கக் கொடுக்க முடியுமா?… அவள் கண்டிப்பாக மறுத்தாள்….திடீரென்று வந்த கோபத்தில் அவள் கன்னத்தில் அறைந்தான் சுரேஷ்….பின் அவளைக்கட்டிக் கொண்டு அழுவது போல் நடித்து அவளை சில நிமிடங்களுக்குப் பின் சம்மதிக்கச் செய்தான்.

பிரபாகரனை அனுப்பியதும் சுரேஷ் ஆறுமுகத்திற்கு, அருகிலிருந்த ஒரு பப்ளிக் ஃபோனிலிருந்து தொடர்புகொண்டு தான் முந்திய தினம் அவரிடமிருந்து 3 லட்சம் தொகையை நல்லவிதமாக பெற்றுக் கொண்டதற்காக நன்றி கூறி, இன்று இன்னும் சில மணி நேரங்களில் பொழுது சாய்வதற்குள் திண்டிவனம் அருகே வந்து நளினியை அழைத்து செல்லலாம் என்று கூறி மேலும் எங்கே எப்படி வந்து அவளை அழைத்துச் செல்வதைப் பற்றி விரிவாக ஆறுமுகத்திற்கு விளக்கிக் கூறினான்.

பின்பு லட்சுமியை அழைத்து, தன் பைக்கில் பெட்ரோல் போடுவதற்கு சென்று வருவதாகவும், ராணியை தயார்படுத்தி வாசலில் காத்திருக்கும் படியும் சொன்னான்.

லட்சுமி, ராணிக்கும் நளினிக்கும் வேண்டிய தூக்க மாத்திரை கொடுத்து இருந்ததால் இருவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.

ராணியை விட்டுப் பிரிகிறோம் என்று அவள் மனம் துடித்தது…. 15 நிமிடங்கள் கழித்து சுரேஷ் திரும்பி வந்தான். லட்சுமி ராணியை இடுப்பில் பிடித்தவாறு சென்று பைக்கிற்கு பின்னாடி அமர்ந்தாள். சுரேஷ் சந்தேகம் வந்தவனாய் ராணியின் நெற்றியிலிருந்ந மச்சத்தை உற்று நோக்கிப் பார்த்து அது உண்மையான மச்சமா, அல்லது பச்சை குத்திய மச்சமா என்பதை ஆராயந்து இவள் ராணிதான் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான்.

பிறகு பைக்கை கிளப்பியதும்….. உடனே ஆஃப் செய்துவிட்டு லட்சுமியிடம் “நீ ராணிக்கு போட்டிருக்கும் டிரஸ்ஸை மாற்றிவிடு….அன்னிக்கு நளினி முதல் நாள் நான் கடத்தி வந்தப்போ அவ என்ன டிரஸ் போட்டு இருந்தாளோ அந்த டிரஸ்ஸை போட்டு கூட்டிட்டு வா” என்று லட்சுமியை வீட்டிற்குள் அனுப்பினான்…. 4-5 நிமிடங்களில் லட்சுமி வேறு டிரஸ்ஸை மாற்றி வந்து பைக்கில் அமர்ந்து கொண்டாள்.

சுரேஷ் திட்டமிட்டபடி எங்கு செல்ல வேண்டுமோ அங்கு பைக்கை பறக்கவிட்டான்…. தூங்கிக் கொண்டிருந்த ராணியை லட்சுமி இறுக்கப் பிடித்துக்கொண்டு பைக்கில் சுரேஷின் தோளைப் பற்றிக்கொண்டு… சுற்றும்முற்றும் பார்த்தவாறே பயணித்தாள்…. வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் நளினி இனி மறுநாள் காலை வரை எழுந்திருக்க மாட்டாள்…. அதற்கு தகுந்தபடி வேண்டிய தூக்க மாத்திரையை பாலில் கலந்து கொடுத்தாகிவிட்டது!

திண்டிவனம் – சென்னை நெடுஞ்சாலையில் இருந்த அந்தக் குறிப்பிட்ட அடர்த்தியான புளியமரத்தை சுரேஷ் தன் திட்டத்திற்கு தேர்ந்தெடுத்து இருந்தான். அந்த மரம் திண்டிவனம் பஸ் ஸ்டாண்டிலிருந்து எவ்வளவு நேர தூரத்தில் இருக்கிறது என்பதை ஏற்கனவே ட்ரையல் பார்த்திருந்தான்…. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தால் சரியாக 20 நிமிடம் ஆகும்… ஆனால் அவன் வேண்டுமென்றே ஆறுமுகத்திடம் 22 நிமிடம் என்று பொய் சொல்லி இருந்தான்…

‘ஆமாம் அப்பொழுது தான் மனுஷன் இன்னும் இரண்டு நிமிடம் இருக்கிறது என்று காரின் வேகத்தை குறைக்காமல் வந்து கொண்டிருப்பார்…. அப்பொழுது மரத்திலிருந்து ராணியை தள்ளிவிடலாம்…. ராணி செத்தாலும் அல்லது அடிபட்டுக் கொண்டாலும் அதற்கு தகுந்தபடி மேலும் எப்படி பேசி ஆறுமுகத்திடம் பணத்தை இன்னும் பல லட்சங்கள் கறப்பது என்று யோசித்துக் கொள்ளலாம்…’

சுரேஷின் பைக் அந்த புளிய மரத்தை அடைந்தது. அந்த மரத்திற்கு சுமார் 40 அடி தள்ளி ஒரு சின்ன கால்வாய் சாலையின் குறுக்கே சென்றது… சாலையை கடக்கும் இடத்தில் கல்வெர்ட்டு, சிறு வாய்க்கால் பாலம், ஒன்று அமைத்திருந்தார்கள் நெடுஞ்சாலைத்துறையினர். கால்வாயில் இப்பொழுது நீர் ஓடவில்லை எங்கும் வறட்சியாக காணப்பட்டது…. சுரேஷ் தன் பைக்கை அந்த பாலத்தின் கீழ் சாலையிலிருந்து தென்படாதபடி மறைத்து வைத்தான். அது சாலையின் உயரத்திலிருந்து சுமார் 5 அடி கீழே இருந்தது.

“நீ ராணியோட இங்கேயே கொஞ்ச நேரம் இரு…. ராணிக்கு இன்னொரு தூக்க மாத்திரை வேணும்னா கொடு…. சாகும்போது வலி தெரியாமல் சாகட்டும்”….லட்சுமியின் கண்களில் நீர் சுரந்தது…..

சுரேஷ் புளியமரத்தில் மேல் ஏறிக்கொண்டான்… ‘ராணியை எங்கிருந்து தள்ளிவிடுவது, தள்ளி விட்ட பின் தான் மரத்தில் எந்த பகுதியில் சந்தடியின்றி வினாடிப் பொழுதில் மறைந்து கொள்வது’ என்பதை ஆராய்ச்சி செய்து பார்த்துக் கொண்டான்.

மணி ஐந்தேகால்…. பொழுது சாயும் நேரத்தில் தன் திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே முடிவு செய்து இருந்தான் சுரேஷ்… இந்த சமயம்தான் எல்லா வகையிலும் பாதுகாப்பு என்பதை அவன் நம்பியிருந்தான்.

சுரேஷ் புளியமரத்தின் நிறத்திற்கேற்ப ராணுவ வீரர்கள் அணியும் உடையைப் போல், ஒரு கடையில் வாங்கி வந்து தனக்கும் லட்சுமிக்கும் கொடுத்து, அதை அணிந்திருந்தான்…. லட்சுமியும் பேண்ட் ஷர்ட் போட்டு ராணுவப் பெண்ணைப் போல் காட்சியளித்தாள்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னென்ன நடக்கும் என்பதையும் அதன்பின் அவன் செய்ய வேண்டிய காரியங்கள் பற்றியும் மரத்தில் அமர்ந்தவாறே யோசிக்கலானான்….

கொஞ்ச நேரத்திற்கு முன் பிரபாகரன் ஃபோன் செய்து திண்டிவனம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆறுமுகம் கிளம்பி விட்டதாக சொன்னான்…

‘ஆக இன்னும் இருபது நிமிடத்தில் ஆறுமுகம் இங்கு வந்து விடுவார்….. தக்க தருணம் பார்த்து ராணியை அவரின் காருக்கு முன்னால் தள்ள வேண்டும்…. ராணி தாத்தாவின் கார் பட்டு சாவாள்…. அல்லது பலமாக அடி படுவாள்….என்ன ஆயிற்று என்று தாத்தாவும் காரை விட்டு இறங்கி பார்க்க, ஆள் நடுங்கிப் போய் விடுவார்…. எப்படி விழுந்தாள் என்று குழம்புவார்….. நிலைமையை சமாளிப்பது அவர் பாடு…. அவளை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவதென்றால் ஓடட்டும், இல்லை பொது மக்களிடம் மாட்டிக்கொண்டு தவிப்பது என்றால் தவிக்கட்டும்… அனேகமாக அவரே அவளைத் தன் காரில் போட்டுக் கொண்டு ஓடும்படி நேரிடும்…. கையில் ராணிக்கு பச்சை குத்தி இருப்பது ஆறுமுகத்தை குழப்பும்…பிறகு போலீஸுக்குத் தெரிந்தால் போலீசும் குழம்பும்…. எல்லோரும் நல்லா குழம்பட்டும்…. ஹாஹா….’ என்று மனதுக்குள்ளே சிரித்துக் கொண்டான்…. அப்புறம் சாவகாசமாக ஒரு நாள் பார்த்து மறுபடியும் நளினி உயிரோடு தான் இருக்கிறாள் என சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தி மேலும் பணத்தை கறக்கலாம்….

சுரேஷ் இப்பொழுது கீழே இறங்கி வந்து லட்சுமியிடம் சென்று ராணியை தன் தோளில் ஏற்றிக் கொண்டு அவள் விழாதபடி, கொண்டுவந்த துணியால் கட்டிக் கொண்டான், லட்சுமி அதற்கு உதவி செய்தாள். பின் அந்தப் புளிய மரத்தில் ஏற ஆரம்பித்தான்…. லட்சுமி அங்கே பாலத்தின் கீழே இருக்க…’நடக்கப்போவது ஒரு வகை கொலை’ என்பதை அவள் மனம் நினைத்துக் கொண்டே உடல் நடுங்கியது…. ஆனால் இது பணப் போராட்டம்…. என்று நினைத்துக் கொண்டு தன்னை சமாதானாப் படுத்திக் கொண்டாள்.

சுரேஷ் மரத்தின் மேல் ஏறி விட்டிருந்தான்… எங்கிருந்து ராணியை தள்ள வேண்டுமோ அந்தக் கிளையில் உட்கார்ந்து கொண்டான். முடிச்சுப் போட்டுக் கொண்ட துணியை அவிழ்த்து ராணியை தன் மார்போடு அணைத்துக் கொண்டபடி உட்கார்ந்தான்…. ராணி இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள்… அவள் உடலை சாய்ந்து விடாதபடி இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று….

சுரேஷ் மாருதி கார் வரும் நேரத்திற்காக காத்திருந்து அந்த திசையையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்…

மணி ஆறு நெருங்கிக் கொண்டிருந்த வேளையில்…. அந்த மாருதி கார்…. ராமர் கலர் மாருதி கார், சுரேஷ் கண்ணில்பட்டது.

சுரேஷ் அதைப் பார்த்ததும் சுறுசுறுப்பானான்.

மாருதிக்கு பின்னால் எந்த வாகனமும் தெரியவில்லை…. சாலையின் மறுபக்கமும் எந்த ஒரு வாகனமும் தெரியவில்லை…. ‘ஆஹா என்ன ஒரு அருமையான சிச்சுவேஷன்….. ஆறுமுகம் கிழத்தை கதிகலங்க வைத்துவிடலாம் இன்னிக்கி’ என்று நினைத்தவனாய் ராணியை கீழே தள்ள ஆயத்தமானான்….

அருகே வந்து கொண்டிருந்த மாருதி காரை பார்த்து… “இது ஏன் சற்று வேகமாக வருகிறது?” என்று குழம்பினான்… “ஒருவேளை ஆறுமுகம் தாத்தாவிற்கு நளினியை பார்த்துவிட வேண்டும் என்ற வேகத்தில் இப்படி பறந்து வருகிறாரோ?”

யோசித்து முடிப்பதற்குள் கார் மரத்தை நெருங்கிவிட்டது….

“என்னை மன்னிச்சிடும்மா ராணி” என்றவாறு அவள் நெற்றியிலும் இரு கன்னத்திலும் முத்தமிட்டு சுரேஷ் ராணியை தள்ளிவிட்டு…. என்ன ஆனது என்றும் பாராமல் இன்னும் மறைவான இடத்திற்கு தாவிச் சென்று பதுங்கிக் கொண்டான்….

அவன் இதயத்துடிப்பு பல மடங்காக அதிகரித்து வியர்வையை பெருக்கியது. சற்றே இலைகளை நகர்த்தி கீழே பார்த்தான்…. ‘யார் இவன்?… அந்தக் கிழம் ஆறுமுகம் எங்கே?.. கிழம் திண்டிவனத்திலிருந்து யாரையாவது கூட்டிக்கொண்டு வந்து விட்டாரா?… போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டாரா?… நான் எதிர்பார்க்காத ஏதோ ஒன்று கிழம் செய்து விட்டதா?’… சுரேஷ் பலவாறு குழம்பிப் போனான்.

அந்த காரில் இருந்து இறங்கியவன் (மகேந்திரன்), பின்பு வாந்தி எடுத்தது தெரிந்தது… ராணியின் உடல் மார்பிலிருந்து தொடை வரை நசுங்கி இருந்தது தெரிந்தது…. ராணி மரத்திலிருக்கும் சுரேஷைப் பார்ப்பது போல் கண்களை அசைத்தது தெரிந்தது…. கீழே இருந்தவன் மரத்தை நோக்கி பார்த்ததும் சுரேஷ் ஒதுக்கியிருந்த இலையை கைவிட்டு மறைந்து கொண்டான்…. அதன் பின் கார் கதவு திறக்கப்பட்டு மூடிய சத்தம் கேட்க… கீழே எட்டிப் பார்த்தான்….

‘அடப்பாவி!… யாரோ ஒருத்தன் ராணியை சாகடித்து விட்டு அப்படியே விட்டு விட்டு ஓடப் பார்க்கிறானே!?’… சுரேஷ் அவசரம் அவசரமாக மரத்தை விட்டு இறங்க ஆரம்பித்தான் கார் கிளம்பும் சமயத்தில் அதன் நம்பரை கவனித்தபோது, என்ன தப்பு நடந்தது என்பது புரிந்தது…. இந்த மாருதி காரின் நம்பரை மனதில் பதிய வைத்துக் கொண்டான்….

‘என்ன செய்வான் இவன்?… போலீசுக்கு போனால் என்னென்ன சொல்வான்?… பின்னாடி வந்து கொண்டிருக்கும் ஆறுமுகம் இதைப் பார்த்து என்ன நினைப்பார்?… என்ன நினைத்தால் என்ன, இதையும் ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளலாம்… இன்னும் அதிகமாக பணம் ஈட்ட பயன்படுத்தலாம்…போலீஸ் வந்தால் மேலும் குழப்பலாம்’ என்று நினைத்து கீழே இறங்கி இருந்த சுரேஷ் இன்னும் வாகனங்கள் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்த பின் ஒரு பெரிய பாறாங்கல்லால் ராணியின் முகத்தை சிதைத்து விட்டு…. அந்தக் கல்லை ரத்தம் விழாதவாறு எடுத்துக்கொண்டு லட்சுமி மறைந்திருந்த இடத்திற்கு விரைந்தான்.

லட்சுமி, “என்ன ஆச்சு?” என்று திருதிருவென முழித்தவாறு கேட்டாள். சுரேஷ் பேசாமல், அந்த பாறாங்கல்லை கீழே போட்டுவிட்டு அதன் மேல் மண்ணையும் சின்ன செடிகளையும் இழுத்து மூடி மறைத்தான்.

பிரபாகருக்கு ஃபோன் செய்து, ராணியை கொன்ற அந்த இளைஞனின் மாருதி கார் நம்பரை சொல்லி, அதன் விலாசத்தை எப்படியேனும் கண்டுபிடித்து எல்லா தகவலையும் தெரிந்து கொண்டு வரும்படி சுரேஷ் கட்டளையிட்டான்.

“வா போகலாம்… அப்புறம் எல்லாத்தையும் சொல்றேன்” என்று கூறிவிட்டு பைக்கை சாலைக்கு இழுத்துக் கொண்டு வந்தான். இன்னும்கூட இருபக்கமும் எந்த வாகனங்களும் தெரியவில்லை…

அவன் கருப்பு நிற மூக்குக் கண்ணாடியையும் சிறு தொப்பியையும் அணிந்து கொண்டு, லட்சுமி ஏறி அமர்ந்ததும் பைக்கை வேகமாக பறக்க விட்டு…. போன வேகத்தில் ராணியின் முகத்தின் மேல் வண்டியை ஏற்றி விட்டு நகர்ந்தான்….

“என்ன சுரேஷ்?” என்று லட்சுமி கத்தினாள். அவளை அடக்கியவாறு சுரேஷ் பைக்கை விரைவாகச் செலுத்தினான் திண்டிவனம் நோக்கி.

சில நிமிடத்தில் எதிரே ஒரு அரசு பஸ்சும் அதற்குப் பின்னால் இன்னொரு ராமர் கலர் மாருதி காரும் தென்பட… ‘காரில் இருப்பது ஆறுமுகம் தானா?’ என்று சற்று குனிந்து உற்றுப் பார்த்தான்…. ஆமாம் அதில்தான் ஆறுமுகம் இருந்தார்…. ஆறுமுகம் இவனை கவனிக்கவில்லை.

***

விசாரணையில், லட்சுமி நடந்ததை சொல்லி முடித்தாள்.

அனைத்தையும் கேட்டு அறிந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் எழுந்து கொண்டார்.

“சுரேஷ் இப்போ எங்கே?”

“தெரியாது… மகேந்திரனைப் பார்த்து பணம் வாங்கிட்டு வருவதாக சொன்னான்” பிரபாகர் கூறினான். “இப்படி திடீர்னு போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டா எங்கே தப்பிச்சு போறதுக்கு திட்டம் போட்டு இருந்தீங்க?”

“இல்லை… வேற திட்டம் எதுவும் போடவில்லை… இல்லை ஒருவேளை சுரேஷ் மனசுக்குள்ள வைத்திருந்தானா எங்களுக்கு தெரியாது…….கொஞ்ச நாள் முன்னாடி தான் செங்கல்பட்டு வந்தோம்”

ராஜேஷ் தன் லத்தியால் இருவரையும் அடித்து கேட்டும் சுரேஷ் பற்றி வேறு தகவல் தெரியவில்லை. உண்மையில் அவர்களுக்கு தெரியவில்லை தான் போலும் என்று நினைத்துக் கொண்டார்.

நகரமெங்கும் போலீஸ் பந்தோபஸ்து அதிகப்படுத்தி இருந்தும் இதுவரை சுரேஷ் பிடிபடவில்லை.

***

மறுநாள் – மகேந்திரனும் மனோகரனும் மிக சந்தோஷமாக மாருதி காரில் ஏர்போர்ட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆக்சிடெண்ட் பயம் காரணத்தால் மகேந்திரன் காரை ஓட்ட முன்வரவில்லை… அவனுக்கு பயம் தெளிய சில நாட்களாகும்!.

மனோகரன் தான் இப்பொழுது காரை ஓட்டினான். முந்தைய நாள் ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு வந்த தன் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு போக வேண்டியிருந்தது இன்று.

நடந்து முடிந்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

“நான் தான் உண்மையான மகேந்திரன்னு சொன்னதும் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் முகத்தை பார்த்தாயா நீ?!”

“பார்த்தேனே!…. நாட்டில் இரட்டை பிறப்பு அதிகம் ஆயிடுச்சின்னா என் போலீஸ் வேலையை விட்டுவிடப் போறேன்னு சொன்னாரே பார்க்கலாம்!”

இருவரும் கலகலவென சிரித்தனர்.

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நேற்று அவர்களை சந்தித்து, லட்சுமியை கைது செய்து அறிந்த உண்மைகளை கூறி இனி அவர்கள் பயப்படத் தேவையில்லை என்று கூறி விட்டுச் சென்றிருந்தார். அப்போது அவர்களும் உண்மையான மகேந்திரன் யார் என்பதை தெரிவித்துக் கொண்டனர்.

இவர்கள் இருவரும் ஒன்றாக சென்றால் வழியில் பார்ப்பவர்கள் யாரும் ஒருமுறைக்கு இருமுறை திரும்பிப் பார்ப்பார்கள்… அந்த அளவுக்கு உருவத்தில் ஒற்றுமையாக இருப்பார்கள்.

“டேய் புதுசா கட்டிய டமஸ்டிக் டெர்மினலை நான் கிட்டே போய் பார்த்ததில்லை…. அங்கே ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம், ஓகே தானே?” மகேந்திரன் மனோகரிடம் கூற, கார் அங்கு சென்று நின்றது.

அப்போது தான் மகேந்திரன் அவனை கவனித்தான்… அந்த முகம்… அந்த நடை… தாடியை நீக்கிவிட்ட…. சுரேஷ்!… ஆமாம் அவன்தான்!.

“டேய் அவன் யாருன்னு தெரியுதா உனக்கு?”

“அந்த தாடியாத் தான் இருக்கணும்னு தோணுது”

“ஆமாம்டா”

சுரேஷ் விமான நிலையத்தின் வாசல் வழியே உள் நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

“காரை பார்க் செய்து விட்டு ஓடி வா…. இரண்டு பேருமா சேர்ந்து பிடித்துவிடலாம் அவனை”

மகேந்திரன் இறங்கிக்கொண்டு வாயிலை நோக்கி வேகமாக நடந்தான்…

சுரேஷ் தன் டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்று விட்டிருந்தான்.

மகேந்திரனை டிக்கெட் கேட்டு மடக்கினார் விமான நிலைய செக்யூரிட்டி.

“சாரி….சார் அங்கே…. அதோ போறானே…அவன் ஒரு கிரிமினல்… அவனை பிடிக்கணும்… ப்ளீஸ்” அவசரமாக பேசிய மகேந்திரன் நடந்ததை சுருக்கமாக விளக்கினான்.

அதைக் கேட்டதும் செக்யூரிட்டி “ஹேய்… யுவ்” என்றவாறு சுரேஷை நோக்கி கத்த…. சுரேஷ் திரும்பிப் பார்த்தான். மகேந்திரனை பார்த்துத் திடுக்கிட்டான் சுரேஷ்.

மகேந்திரனும் அந்த செக்யூரிட்டி இன்னொரு செக்யூரிட்டிக்கு சைகை செய்ய….

வாசல் அருகேயே உள்ளே இன்னமும் நின்று இருந்தபடியால், விமான நிலையத்தின் உள்நோக்கி ஓட ஆரம்பித்தான் சுரேஷ். ஓடிக்கொண்டே இடுப்பில் பெல்ட்டோடு மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தாக்குதலுக்கு தயாரானான்… உள்ளிருந்த ஜனங்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக அலறிக்கொண்டு ஓடினார்கள்.

செக்யூரிட்டி ஒருவர் சுரேஷின் சட்டையை ஓடிச்சென்று பிடிக்க சுரேஷ் கண்மண் தெரியாமல் கத்தியை பிடித்துக் கொண்டிருந்த கையை சுழற்றினான்.

செக்யூரிட்டி பிடியை தளர்த்தினான்…. கத்தி அவன் கையைப் பதம் பார்த்து விட்டது. சுரேஷ் அவனைத் தள்ளிவிட்டு மேலும் ஓடினான்.

காரை பார்க் செய்து விட்டு வந்திருந்த மனோகரனும் வேட்டையில் கலந்து கொண்டான்.

சுரேஷ் ஒரு பெண்ணிடம் இருந்த மூன்று வயதுப் பையனை இழுக்க முயன்றான். அந்தப் பெண் தன் மகனை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். பையன் சுரேஷின் கையைக் கடித்தான்…. அதற்குள் 3 பேர் தன்னை நெருங்குவது கண்டு பெண்ணை எட்டி உதைத்து தள்ளிவிட்டு ஓடினான் சுரேஷ். அந்தப் பெண்ணும் பையனும் அலறினார்கள்.

சுரேஷ் மீண்டும் உட்புறமாக நோக்கி ஓடினான்…. எதிரில் மடக்க வந்தவர்களை எல்லாம் தயவு தாட்சண்யமின்றி பட்ட இடத்தில் எல்லாம் கத்தியால் சீவினான்…. அதனால் அவனைக் கண்டு பயந்து ஜனங்கள் பயந்து ஓடும்படி ஆகியது… ஆங்காங்கே தத்தம் பணிகளை செய்து கொண்டிருந்தவர்கள், இனி இவன் யாரை தாக்குவான் என்று பயத்துடன் பார்த்தனர்.

இன்னொரு செக்யூரிட்டி தன்னிடம் இருந்த துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு சுரேஷை நிற்கும்படி கத்தினான்…. ஆனால் சுரேஷ் நிற்கவில்லை. செக்யூரிட்டியாலும் சுட முடியவில்லை…. தவறிப்போய் வேறு யாரையாவது, அனாவசியமாக காயப்படுத்தி விடுவோமோ என்று பயந்தவனாய்!…ஆனால் சுரேஷை தொடர்ந்து துரத்தினான்.

மும்பை செல்லும் விமானம் தயாராகத்தான் இருந்தது… ஆனால் இந்நிலையில் வெறும் கத்தியை வைத்துக்கொண்டு பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்பதை அறிந்தவன்… எதிரில் லக்கேஜ்களை விமானத்தின் அருகே விட்டுவிட்டு அந்த வாகனம் வெறுமனே திரும்பி வந்து கொண்டிருப்பதை கவனித்தான்…. தாவிச் சென்று அதன் டிரைவரை கையில் காயப்படுத்தி கீழே விழும்படி எட்டி உதைத்தான்.

கொஞ்ச தூரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்கிக் கொண்டிருந்தது.

சுரேஷ், தன்னை துரத்தியவர்கள் நெருங்குவதற்கு முன் அவன் அந்த லக்கேஜ் வாகனத்தை திசைதிருப்பி விரைந்து செலுத்தினான்.

செக்யூரிட்டி இப்பொழுது வெட்டவெளி என்பதால் அவனை நோக்கி சுட்டான்…. மறுபடியும் சுட்டான்….மூன்றாவது முறையாக சுட்டான்… அப்பொழுது தான் அந்த விபத்து நிகழ்ந்தது…. அத்தகைய லக்கேஜ் வாகனத்தை இதுவரை ஓட்டி பழகியிராத சுரேஷ், பின்னால் செக்யூரிட்டி வேறு சுடுகிறாரே என்று வண்டியை திருப்ப… ஆக்சிலேட்டரை வேறு மொத்தமாக அழுத்தி விட… அந்த லக்கேஜ் வாகனம் நின்று கொண்டிருந்த விமானத்தை நோக்கிச் சென்றது….

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த விமானத்தின் ப்ரொப்பல்லர் தனக்கு ஒரு இறை கிடைக்கிறது என்று மகிழ்ந்து…’வா வா’ என்று சுரேஷை கூப்பிடுவது போல் கர்ஜித்தது!

ஆனால் சுரேஷ் அதற்குள் முழு ப்ரேக்கையையும் அழுத்திவிட்டான்… அந்த விசையில், ப்ரொப்பல்லரை நெருங்கிக் கொண்டிருந்த லக்கேஜ் வாகனம் திசை திரும்பி பல்டி அடிக்க ஆரம்பித்தது… மூன்றாவது பல்டி முடியும் தருவாயில்…. சரியாக ப்ரொப்பல்லரை தொட்டு நின்றது!.

அதற்குள் சுரேஷ் கீழே குதிக்க, அவன் சிறு காயங்களுடன் தப்பி இருந்தான். அனைவரும் இப்பொழுது அவனை பிடிக்க ஓடினார்கள். அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து இருந்த சுரேஷ் மறுபடியும் ஓட ஆரம்பித்தான்.

ஒரு நிமிடத்திற்கு முன் வந்து நின்றிருந்த கேன்டீன் வேனை அனுகி, உள்ளிருந்த டிரைவரை பிடித்து வெளியே தள்ளினான்…. மறுவினாடி அந்த வேனுக்குள் புகுந்து அமர்ந்து அதை இயக்கி, ராட்சஸ வேகத்தில் செலுத்தினான்.

மறுபடியும் செக்யூரிட்டி திணறி, என்ன வாகனம் தென்படுகிறது என்று தேடினார்கள்…. தரையிறங்கியிருந்த ஹெலிகாப்டரின் பைலட், நடப்பவைகளை பார்த்து புரிந்து கொண்டு இவர்களை நோக்கி கையசைக்க…. ஒருவன் ஹெலிகாப்டரை நோக்கி ஓடினான். மற்ற செக்யூரிட்டிகள் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேறு வாகனங்களை நோக்கி ஓடினர்.

மகேந்திரனையும் மனோகரனையும் ஏர்போர்ட் ஆஃபீசர்கள் சூழ்ந்துகொண்டு விசாரணையை தொடங்கி இருந்தனர்.

சுரேஷ் எந்தப்பக்கம் எப்படித் தப்பிப்பது என்று திணறினான். ரன்வேயில் திருப்பிவிட்டான்… நிச்சயம் சுற்றிலும் சுவர்கள் இருக்கும்…. துரத்திக் கொண்டு வருபவர்கள் நெருங்குவதற்குள் தாண்டி விட வேண்டும் என திட்டமிட்டான் சுரேஷ்.

பின்னால் இருந்து திடீரென ஹெலிகாப்டர் வேன் முன் பாய்ந்து வந்தது…. அதை சற்றும் எதிர்பார்த்திராத சுரேஷ் பிரேக்கை அழுத்தினான். ஹெலிகாப்டர் முறைத்துக் கொண்டு மிதந்தது….. அவர்களை பயமுறுத்தலாம் என்று எண்ணிய சுரேஷ் சரேலென ஹெலிகாப்டரை நோக்கி வேனை பாய விட்டான்…. ஹெலிகாப்டர் திணறலுடன் ஒரு ரவுண்ட் அடித்து மேலே எழும்பியது.

சுரேஷ் கண்ணில் எதிரில் ஒரு விமானம் தரை இறங்குவதற்கு…. ரன்-வே நோக்கி சாய்ந்தவாறே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. மேலும் பீதி அடைந்து பிரேக்கை அழுத்தி நிறுத்தினான்…. எந்தப் பக்கம் திருப்புவது என்று நோட்டமிட்டு முடிவு செய்த பின் கியரை மாற்ற….. எஞ்சின் சட்டென நின்று விட்டது… அதை மறுபடியும் இயக்க துடித்து ஏமாந்த சுரேஷ் தரையில் 600 மீட்டர் தொலைவில் இறங்கிவிட்ட அந்த விமானத்திற்கு பயந்து வேனை விட்டு கீழே குதித்து ஓடலானான்.

தரையிறங்கி இருந்த விமானத்தின் பைலட் ஏற்கனவே நிலைமையை உணர்ந்து செயல்படத் துவங்கி இருந்தார்… விமானத்தின் பிரேக்கை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி இருந்தார்….விமானம் வேனை நெருங்கிய நேரத்தில் சிறிதாக விமானத்தின் திசையை திருப்பினார்… விமானத்தின் வலது இறக்கை வேனைத் தள்ளி படுக்கப் போட்டது…விமானமும் நின்றது….. எந்த விபத்தும் இன்றி!

சில வினாடிகள் என்ன ஆகிறது என்று வேடிக்கை பார்த்த சுரேஷ் இப்பொழுது அருகே தெரிந்த சுவரை நோக்கி ஓடினான்… ஹெலிகாப்டர் அவன் முன் பாய்ந்து சென்று அவன் பக்கம் திரும்பிப் பார்த்து இரண்டு ஆள் உயரத்தில் நின்றது. அதில் இருந்த செக்யூரிட்டி கீழே குதித்தான். குதித்ததும் தன் துப்பாக்கியை எடுத்து இரு கைகளாலும் பற்றிக்கொண்டு சுரேஷின் மேல் கூறி வைத்தான்.

சுரேஷுக்கு அதற்குப்பிறகு தப்பிவிட தோன்றவில்லை “சரண்” என்றவாறு கைகளை தூக்கினான்.

***

லட்சுமியை கைது செய்த அன்று… நேற்று…..

லட்சுமியையும் நளினியையும் ஒரு போலீஸ் காரிலும், பிரபாகரனை இன்னொரு போலீஸ் காரிலும் ஏற்றி செங்கல்பட்டு காவல் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர் அந்த போலீஸ் படை…

இன்ஸ்பெக்டர் மோகன் நளினியை தன் அருகே அமர்த்தி இருந்தார்.

நளினி விசும்பிக் கொண்டே இருந்தாள்….லட்சுமி அவளை அவ்வப்பொழுது திரும்பிப் பார்த்து முறைத்துக்கொண்டு வந்தாள்.

கார் ஸ்டேஷனை நெருங்கியதும், நளினி பயங்கரமாக நடுங்கி ஓவென்று அழ ஆரம்பித்தாள்

“நீ ஏம்மா பயப்படறே…..அவங்களைத் தான்……ஜெயில்ல போடப் போறோம்,,,,நீ பயப்படாதே….உன் அப்பா அம்மா வந்துடுவாங்க” மோகன் அவளை சமாதானப்படுத்த முயன்றார். அவளை அன்புடன் அணைத்துக் கொண்டு தன் மேசை மேல் அமரச் செய்து புன்னகையுடன் நளினியை பார்த்தார்.

நளினி, லட்சுமியை ஜெயிலுக்குள் தள்ளப்படுவதை பார்த்து மேலும் பயங்கரமாக உடல் நடுங்கி திடீரென்று மயக்கம் போட்டாள். இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர் மோகன், அவளை தாங்கிப் பிடித்து அருகிலிருந்த நீளமான பென்ச் மேல் படுக்க வைத்து அவள் நெற்றியின் மேல் கைவைத்து பார்த்தார்…..ஜுரம் அனலாக கொதிக்க ஆரம்பித்திருந்தது. பின், இனியும் தாமதிக்கக் கூடாது என்று அவளை தூக்கிச் சென்று காரில் போட்டு, அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்தார்.

ஏற்கனவே கொஞ்ச நேரத்திற்கு முன் இன்ஸ்பெக்டர் ராஜேஷின் கைத்தொலைபேசி எண் கிடைத்திருந்ததால் அவரை தொடர்பு கொண்டு சீக்கிரமே நளினியின் பெற்றோரை அழைத்து வரும்படி கூறி நளினியின் கடும் காய்ச்சல் பற்றி விளக்கினார்.

ஒரு மணி நேரம் கழித்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வந்தார். அதன் பின் சோமுவும் கயாத்திரியும் தங்கள் காரில் வந்து சேர்ந்தனர்.

அதற்குள் நளினியை பரிசோதித்திருந்த டாக்டர் வேண்டிய சிகிச்சையை கொடுத்திருந்தார்.

“ஏதோ பெரிய பயம்னு நினைக்கிறேன்…இப்போ நீங்கதான் வந்துடீங்களே, போய் பாருங்க…ஆனா இப்போ அவ நல்லா தூங்கிக்கிட்டு இருக்கா….டிஸ்டர்ப் பண்ணாதீங்க ப்ளீஸ்” என்றார் டாக்டர், நளினியின் பெற்றோரை பார்த்து.

சோமுவும் கயாத்திரியும் நளினியின் நிலைமையை கண்டு கண் கலங்கினார்கள். இருவரும் அவளை நெருங்கி அவள் தலையை கோதிவிட்டனர். காயத்திரி அவளை பார்த்தவாறே அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அருகே வந்து நெற்றியில் இருந்த மச்சத்தை கூர்ந்து பார்த்தார்…..பின் சோமுவை பார்த்தார்.

“ஏன் சார் இன்னமும் சந்தேகப்படுறீங்க?…..இவ எங்க நளினி தான்” என்ற சோமு, தொப்புள்ளருகே இருந்த மச்சத்தையும் நளினியின் ஆடையை சற்று விலக்கி காண்பித்தான்.

“இட் இஸ் ஒகே…..எப்படியோ, உங்க பெண் கிடைச்சுவிட்டதை நினைச்சு எனக்கும் சந்தோஷம் தான்…இன்னும் அந்த ராஸ்கல் சுரேஷ் தான் நம்ம கைக்கு மாட்டலை…சரி நான் போய் என் மற்ற வேலைகளை கவனிக்கிறேன்…. நீங்கள் டாக்டர் ஆலோசனைப்படி என்ன செய்யணுமோ செய்ங்க….ஒகே தானே?” என்ற ராஜேஷ், சோமு தலையசைத்ததும் கிளம்பினார்.

சோமுவுக்கும் கயாத்திரிக்கும் சென்னைக்கு வந்ததிலிருந்தே ஏகப்பட்ட களைப்பினாலும் சோகத்தினாலும் கண்களில் குழி விழுந்து பாவமாக தெரிந்தனர். ‘நளினி சீக்கிரம் கண் விழிக்கமாட்டாளா, வீட்டிற்கு அழைத்து சென்றுவிடலாமே’ என துடித்தவாறு அவ்வப்பொழுது நளினியை ஏறிட்டுப் பார்த்த வண்ணம் இருந்தனர்.

அப்படியே அன்றைய இரவுப்பொழுதை அந்த ஆஸ்பத்திரியிலேயே கழித்தனர்.

நளினி காலை ஏழு மணி போல் கண் விழித்தாள். அவள் ஜுரம் முற்றிலும் போய்விட்டிருந்தது. சோமுவும் கயாத்திரியும் மகளை பாசத்துடன் நெருங்கினர்.

நளினி மிரட்சியுடன் அவர்களை பார்த்தாள்.

“என் ராசாத்தி” என்ற காயத்திரி அவளுக்கு முத்தமழையில் நனைத்தாள். சோமுவும் அருகே வந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டான்.

நளினி அசைவற்று உணர்ச்சியின்றி இருப்பதை கண்டு வியந்தார்கள்!.

“ஏம்மா இப்படி பார்க்கிறே?…ஓ… உனக்கு பாட்டி தான் எல்லாம் இல்லியா?…வா போய் பாட்டியை பார்க்கலாம்” என்றாள் காயத்திரி. மகளைப் பிரிந்து மும்பையில் இருப்பதால், நளினியிடம் அவ்வளவாக பாசப்பிணைப்பு இல்லை என்பதை சோமுவும் கயாத்திரியும் முன்னமேயே அறிந்து புரிந்து கொண்டு இருந்தனர்.

“இல்ல…அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு போகணும்” என்றாள் நளினி. அதைக்கேட்ட இருவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.

இதற்குள் அங்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் மோகன் “ஏம்மா அங்கே போகணும்?” என கேட்டவாறு அருகே வந்து நின்றார்.

“இன்ஸ்பெக்டர் அங்கிள்…என்னை அங்கே கூட்டிட்டு போங்க ப்ளீஸ்” நளினி மோகனிடம் கெஞ்சி அவரிடம் தஞ்சம் புகுந்தாள்.

“சரி….போகலாம்….முதல்லே டாக்டர் வந்து பார்த்து செக் செய்துட்டு நீ ஒகே, வெளியே போலாம்னு சொல்லட்டும், ஒகே?” என்றவர் ‘Hi-Fi’ என்று தன் வலக்கையை நீட்டினார்.

நளினியும் புன்னகையுடன் ‘Hi-Fi’ செய்ததைக் கண்டு பெற்றோர்கள் முழித்தனர்.

“நீங்க கொஞ்சம் வெளியே வாங்க….டிப்பன் சாப்பிடீங்களா?” என்றவாறு பெற்றோர்களை வெளியே அழைத்து சென்றார் இன்ஸ்பெக்டர் மோகன்.

அருகிலிருந்த கேன்டீனில் அமர்ந்தனர் மூவரும்.

“என்ன ஆச்சு சார் என் பொண்ணுக்கு?” பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டாள் காயத்திரி.

“எனக்கும் புரியல…..நேத்து அரெஸ்ட் பண்ணிட்டு கார்ல வரும்போது அடிக்கடி அந்த லட்சுமியை பார்த்து விசும்பிகிட்டே இருந்தாள் நளினி…அந்த லட்சுமியும் இவளை பார்த்து முறைச்சுகிட்டே இருந்தாள்…..டாக்டர் முதல்ல இவளுக்கு எல்லாம் ஒகே தான்னு சொல்லட்டும்….ஸ்டேஷனுக்கு போய்த்தான் பார்ப்போமே”

ஒரு மணி நேரம் கழித்து டாக்டர் நளினியை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் எனக் கூறி சில மருந்துகளை கொடுக்க, அதன் பின் நளினியை அழைத்துக் கொண்டு செங்கல்பட்டு ஸ்டேஷனுக்கு விரைந்தனர் அனைவரும்.

ஸ்டேஷன் உள்ளே நுழைந்ததும் நளினி லட்சுமியை தேடி அவள் அருகே சென்று விசும்பி…… பின் தரையில் படுத்து பலமாக அழுது புலம்பினாள்.

அனைவரும் குழம்பிப் போய் சிலையாக நின்றனர்.

ஜெயிலறைக்குள் இருந்த லட்சுமியும் தன் தலையை இருகைகளால் பலமாக அடித்துக்கொண்டு அழுதாள்.

நளினி சட்டென்று எழுந்து வந்து சோமுவிடம் பேசினாள் “சார்…சார்….நான் உங்க பொண்ணு நளினியில்லை….என் அம்மாவை விட்டுரச் சொல்லுங்க…..எல்லாம் என் அப்பா பண்ண தப்பு தான் சார்…..அவர் உங்க நளினியை யார்கிட்டயோ வித்துட்டார்ன்னு அம்மா நேத்து சொன்னாங்க….இப்போ என்னையும் உங்ககிட்டே வித்துட்டாதா அம்மா சொன்னாங்க”

இன்ஸ்பெக்டர் மோகன் தன் நாற்காலியில் சரிந்து தலைமேல் கை வைத்துக் கொண்டார்!

சோமுவும் கயாத்திரியும் யார் பேச்சை இனி நம்புவது என புரியாமல் திகைத்தனர்.

இன்ஸ்பெக்டர் மோகன் ராஜேஷுக்கு தகவலை தெரிவிக்க அவர் ஒரு மணி நேரத்திற்குள் விரைந்து வந்தார்.

வந்தவர், சோமுவையும் கயாத்திரியையும் கொஞ்சம் பொறுத்துக் கொண்டு காத்திருக்கும் படி கூறிவிட்டு லட்சுமியை விசாரணை செய்யும் அறைக்குள் இழுத்துச் சென்றார்.

அறைக்குள் நுழைந்ததும் கொஞ்சமும் தயங்காமல் லட்சுமியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார். மிரண்டு போன லட்சுமி நடுங்கியவரே “உண்மையை சொல்லிடறேன்” என அவர் காலில் விழுந்து அழுதாள்.

***

அன்று திண்டிவனத்தில் சுரேஷின் திட்டத்தை நிறைவேற்றும் வேளையில்….

சுரேஷ் லட்சுமியிடம் ராணியின் ட்ரெஸ்ஸை மாற்றிக் கொண்டு வரும்படி சொல்லி தன் பைக்கில் காத்திருந்த சமயத்தில்….

வீட்டிற்குள் ட்ரெஸ்ஸை மாற்ற, அதை தேடும் போது, மின்னலாக ஒரு ஐடியா தோன்றியது லட்சுமிக்கு….. பெற்றெடுக்காத குழந்தையானாலும், ஆறு வருடம் பாசமாய் செல்லமாய் வளர்த்த தன் ராணியை விட்டுக்கொடுக்க மனம் வராதவளாக தவித்துக்கொண்டிருந்தவளுக்கு…. அந்த ஐடியா தோன்றியது.

ராணியை படுக்க வைத்து, நளினிக்கு அந்த ட்ரெஸ்ஸை போட்டுவிட்டு அவளை தன் இடுப்பில் தூக்கிக்கொண்டு ஓடிப்போய் சுரேஷுக்கு சந்தேகம் வராத படி பைக்கில் அமர்ந்து கொண்டாள் ….சுரேஷும் சில நிமிடங்களுக்கு முன் தான் இவள் ராணியா என்று சோதித்து ஊர்ஜிதப்படுத்திக்கொண்டதால், இப்பொழுது சந்தேகம் வராமல், பைக்கை கிளப்பினான்.

***

தான் செய்த குழந்தை மாற்றத்தால் ராணிக்கு பதில் அன்று திண்டிவனத்தில் செத்தது நளினி தான் என்று சொல்லி முடித்தாள் லட்சுமி.

இது தவிர, சுரேஷ் போலீசிடம் பிடிபட்ட செய்தி அறிந்ததும், இனி ஒரு வேளை தன்னையும் பிடிக்க வந்தால் என்ன செய்வது, ராணியின் வாழ்க்கையை எப்படி காப்பாற்றுவது, என நினைத்து, ராணியிடம் தான் நளினி தான் என்று பொய் பேச வேண்டும் இல்லையென்றால் விரல்களை வெட்டிவிடுவார்கள் என பயமுறுத்தியிருந்தாள் லட்சுமி.

பின், லட்சுமி இன்ஸ்பெக்டர் ராஜேஷைப் பார்த்து, “சார், கொஞ்சம் என் ராணியை என்கிட்ட விடுங்க…நடந்ததை பூராவும் அவளுக்கு புரியற மாதிரி சொல்லி அவளை பெத்தவங்ககிட்ட அனுப்பிவிடறேன்” என்று கெஞ்சினாள்.

அவளை அங்கேயே இருக்கும்படி சொன்ன ராஜேஷ் வெளியே யோசனையுடன் வந்தார்.

நளினியிடம்…..இல்லை இல்லை….ராணியிடம் வந்தவர், அவளை தூக்கி “நீ ராணி தான்…நான் இப்போ நம்பறேன்” என்று புன்னகைக்க, அவளும் புன்னகைத்தாள்……..”ஆனா இத பாரு ராணி…உனக்கு சின்ன வயசு….உன்னை லட்சுமி அம்மா நல்லா தான் வளத்து ஆளாக்கியிருக்காங்க…..அவங்க கொஞ்சம் நல்லவங்க தான்…ஆனா ரொம்போ…..ரொம்போ ரொம்போ கெட்டவங்க அவங்க…..உனக்குத் தெரியாது….உன் கூட இருந்தாளே அந்த நளினி…..அவளுக்கு என்ன ஆச்சு தெரியுமா உனக்கு?…. அவளை யார்கிட்டயும் பணத்துக்காக விற்கவில்லை….சாகடிச்சுட்டாங்க…. தெரியுமா உனக்கு?…. ” என்று கேட்டவாறே அவள் கை ஒன்றை பற்றிக்கொண்டு நிதானமாக பேசினார் ராஜேஷ்.

பின் அவளை இன்ஸ்பெக்டர் மோகனின் கம்ப்யூட்டர் அருகே உட்கார வைத்து மோகனிடம், “நளினி அன்று சாலையில் எப்படி இறந்து கிடந்தாள்….அந்த ஃபோட்டவை காட்டுங்க” என்றார்.

மோகன் சில வினாடிகளில் அந்த அகோரமான ஃபோட்டவை கம்ப்யூட்டர் திரையில்…… தயக்கத்துடன் இதை இந்த சிறுமியிடம் காண்பிக்கலாமா என ராஜேஷை முறைத்தவாறு காண்பிக்க, ராணி தன் இரு கைகளையும் வாயில் பொத்திக் கொண்டாள்….. மிரண்டு போய் கண்களை மூடிக்கொண்டாள்.

“இதை செஞ்சது…. நீ அப்பான்னு நினைக்கிற அந்த சுரேஷ்…..அதுக்கு ஹெல்ப் பண்ணினது….. நீ அம்மான்னு நினைக்கிற அந்த லட்சுமி….. நளினியை யாருக்கோ வித்துட்டாங்கன்னு உன் கிட்ட பொய் சொல்லியிருக்காங்க…..இப்போ போய் அந்த லட்சுமி அம்மாவை பார்…..யாரை நம்புவதுன்னு உனக்கு புரியும்படி அவங்க சொல்லுவாங்க… உனக்கும் புரியும் ….ஏன்னா நீ கெட்டவங்களுக்கு பிறந்த ராணி இல்லை….அதோ அந்த சோமு காயத்திரி நல்லவர்களுக்கு பிறந்த ராணி நீ!”

ராணி, சோமுவையும் கயாத்திரியையும் பரிதாபமாக பார்த்தவாறு…. சற்றே நடுங்கியவாறு….. விசாரணை அறையில் இருக்கும் லட்சமியை பார்க்க மெதுவாக நடந்து போனாள்.

***

பின்குறிப்பு:

– ராணிக்கு தன் நிஜமான சோமு-காயத்திரி பெற்றோர்களிடம் சரளமாக பழக சில மாதங்கள் பிடித்தது. அவளுக்கு கொஞ்சம் மிமிக்ரி (பல குரலில் பேசும் திறன்) தெரியும், அதை வைத்துக்கொண்டு தான் அவளை நளினிபோல் அந்த வீடியோ படத்தில் பேச சொல்லி நடிக்க வைத்திருந்தனர் சுரேஷும் லட்சுமியும். இப்பொழுது அந்த மிமிக்ரியை பயன்படுத்தி அவளின் கடந்தகால சோகமான நிகழ்வுள்களை மறக்கடிக்கச் செய்தனர் பெற்றோர்.

– இன்ஸ்பெக்டர் ராஜேஷுக்கு பின்னர் ப்ரோமோஷன் மட்டுமில்லாமல், சிறு பெண்களை கடத்தும் மும்பை கும்பலை பிடிக்கும் தனிப் படைக் குழுவில் ஒரு பெரிய பொறுப்பை வழங்கியிருந்தது தமிழ்நாடு போலீஸ் துறை.

Print Friendly, PDF & Email

1 thought on “யாரைத் தான் நம்புவதோ?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *