Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மன்னிப்பு

 

வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை துடைக்கத் தோன்றாமல், அந்தச் சிறுவனை பார்த்துக் கொண்டிருந்தார் ரங்கராஜன். கண்கள் நிலைகுத்தி நின்றிருந்தது. அதன் கூர்மையை சந்திக்கும் திராணியற்று காழ்ப்புணர்ச்சியுடன் தரையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான் மணிகண்டன். இந்த 14 வயதில் அவன் செய்திருக்கும் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல, எனினும் சட்டம் அவனை கடுமையாக தண்டிக்கும் நோக்கமற்று சிறுவர் சிறைக்கு அனுப்பியிருந்தது. மணிகண்டன் கடைசியாக பேசியது 2 மாதங்களுக்கு முன் ஏதோவொரு நாள். அவன் பேசுவதையே நிறுத்திவிட்டான். அவனுடன் பேசுகையில் அவன் கவனிப்புடன்தான் இருக்கிறான் என்பதற்கு அவன் கண்களில் இருந்து அவ்வப்பொழுது வழியும் ஒரு சொட்டு கண்ணீர் தான் சாட்சி.

ரங்கராஜன் இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு முறைவைத்து 10, 12 முறையாவது நினைத்து நினைத்து அழுவார். தனது மகன் உடலிலிருந்து உயிர் பிரிந்த அந்த கடைசி நொடி, அவன் எத்தகைய வலி உணர்வை அனுபவித்திருப்பான். அதை நினைக்கையில், உடல் முழுவதும் கசப்பான திரவம் சுரப்பது போன்றதொரு உணர்வு மேலோங்கி, அவரது கண்ணீர் ஒட்டு மொத்தத்தையும் வெளிக் கொண்டு வந்துவிடும். இளம் வயதில் மகனை தொலைத்த தந்தையின் உணர்ட்வுகள் எந்த அளவிற்கு சகிக்கவொண்ணாத வேதனையாக இருக்கும் என்பது ரங்கராஜனைப் பார்த்தால் தெரியும்.

மகன் கார்த்திகேயன் பிறந்த பொழுது பாரதியரைப் போல மீசை வைத்திருந்த ரங்கராஜன் திடீரென ஒரு நாள் மொத்தமாக மழித்துவிட்டு ஹிந்தி நடிகனை போல் வீட்டிற்கு வந்து மனைவியை உரிமையோடு தொட அன்று வாங்கினார் வலிமையான அறை ஒன்று. அதில்ஆடிப்போன கடவாய் பல் அடுத்த இரண்டு வாரங்களில் தன் இருப்பிடத்திலிருந்து வெளிவந்துவிட்டது. அந்த அறைகுறித்து அவரது மனைவி மீனாட்சி வருத்தப்பட்டாரா? சந்தோஷப்பட்டாரா? என்ற கேள்விக் குறி வெகு நாட்கள் மண்டையை குடைந்து கொண்டுதான் இருந்தது. மகனின் பட்டு போன்ற தேகத்தில் தன் மீசை முடி குத்துவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் ரங்கராஜனால். பாரதியை பற்றி கடந்த 10, 15 வருடங்களாக அங்கலாய்த்துக் கொண்டும், பின்பற்றிக் கொண்டும், பாவனை செய்து கொண்டும், நகல் எடுத்தாற்போன்று தன்னை மாற்றிக்கொண்டும் வாழ்ந்து வந்த ரங்கராஜன் மீசை எடுத்த சம்பவம் பரவிய வேகத்துடன் ஒப்பிட்டால் காட்டுத் தீ தோற்றுவிடும். குழந்தை கார்த்திகேயனை விட பாரதி அப்படி ஒன்றும் முக்கியமில்லையென்று முடிவிற்கு வந்திருந்தார்ட். அவர் தன் குழந்தையிடம் அடிமையான நிமிடங்களை நினைத்துப் பார்க்கையில், அவரது கண்களிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் திரவம் சிவப்பு நிறத்திலிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவரது மகனும், இந்த மணிகண்டனும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தார்கள். எப்படி ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு எதிரியானார்கள் என்பது விந்தையான விஷயம். குழந்தைகளுக்கிடையே முதன் முதலில் ஏற்படும் ஈகோ மனப்பான்மைக்குக் காரணம், அவர்களுக்கிடையே ஏற்படுத்தப்படும் போட்டி மனப்பான்மையும், குழுத்தன்மையும்தான். அவர்கள் தங்களுக்காக, தங்கள் குழுக்களுக்காக மறைமுகமாக போராட ஆரம்பித்துவிடுகிறார்கள். குழந்தைகளின் மூர்க்கத்தனத்தையெல்லாம் வெளிக்கொணரும் சக்தி இந்த குழு மனப்பான்மைக்கு உண்டு. அவர்கள் முதன் முதலில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட இடம் பள்ளி விளையாட்டு மைதானம். விஷயம் இவ்வளவுதான் கீப்பராக நின்று கொண்டிருந்த கார்த்திகேயன் பிடித்த பந்து, பேட்டிங் செய்து கொண்டிருந்த மணிகண்டனின் மட்டையில் பட்டதா? இல்லையா? என்பதுதான். இவன் பட்டது என்று 10 முறையேனும் வாதிட்டிருப்பான். அவன் படவில்லையென 10 முறை வாதிட்டிருப்பான்.

இருவருக்கும் பேசிக்கொண்டே போவதில் சலிப்பேற்பட்டதோ என்னவோ? கைகலப்பில் இறங்கிவிட்டார்கள். வெகு நேர சமருக்குப் பின் இருவரும் பிரித்துவிடப்பட்டார்கள் உடற்கல்வி ஆசிரியர் ரத்தினத்தால். இருவருக்கும் தலா ஒரு அறை வழங்கப்பட்டது. அதில் கேட்காமல் போன காதுடன் தான் மணிகண்டன் இன்று வரை வாழ்ந்து வருகிறான். ஆனால் அந்த பலி சாமர்த்தியமாக கார்த்திகேயன் மீது சுமத்தப்பட்டுவிட்டது. அன்று மாலை நடந்த சண்டையில் மணிகண்டனின் தாய் திட்டிய வார்த்தைகள் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு சுத்தமான, இலக்கண பிழையற்ற கெட்ட வார்த்தைகள். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரும் சேர்ந்து அவரை சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இழந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். மணிகண்டனின் தாய் யாருமற்ற வெளியில்தன்னந்தனியாக கால் மணி நேரத்திற்கு ஒரு திசை என நான்கு திசைகளிலும் சுற்றி சுற்றி திட்டிக்கொண்டிருந்தார்.

மணிகண்டனின் தந்தை ரிக்ஷா தொழிலாளி சண்முகம். எம்.ஜி.ஆர். தன் கையால் பரிசளித்தது என்கிற ஒரே காரணத்திற்காக காளை மாட்டைவிட கடுமையாக வண்டியிழுத்துக் கொண்டிருக்கிறார். அவர் தினசரி குடிக்கும் தெய்வீக பானம் (பட்டசாராயம்), உடல் சோர்வை போக்கிக்கொள்வதற்கு மட்டுமல்ல, மனைவி அங்கவையின் அன்பு மிகுந்த கனிவான, மேலும் சற்று காட்டமான வசை மொழிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், சேரிப்பகுதியின் நாற்றத்தால் தன் குடல் வெளியே வந்துவிடாமல் வயிற்றுக்குள்ளேயே பாதுகாப்பாக இருப்பதற்கும் சேர்த்ட்துதான் என்பதை யாரிடமும் உளறிவிடாமல் மனதிற்குள்ளாகவே பூட்டி வைத்திருந்தார். தினசரி சம்பாதிக்கும் சொற்ப வருமானத்தில், சொற்பத்தை மட்டும் மனைவி அங்கவையிடம் தந்துவிட்டு, அவர் தரும் தினசரி யதார்த்தங்களையும் வலுவாக வாங்கிக் கொண்டு வலிக்கிறது என்று ஒரு வார்த்தை கூட கூறாமல் குப்புற கவிழ்ந்துபடுப்பதுதான் அவரது தினசரி வாழ்க்கை முறை. இதில் தன் மகனின் ஒற்றை காது கேட்காமல் போனது அவரது ஒரு காதின் வழியாகக் கூட அவரது மூளையை சென்றடையவில்லை என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம் அல்ல. அவர் மிகுந்த வேதனைப்பட்ட ஒரு விஷயம் அந்த அங்கவை என்ற பெயர்தான். யாரோ ஒரு தமிழாசிரியரை சவாரி கூட்டிச் செல்லும் பொழுது அவர் அங்கவை என்ற அழகான தமிழ் பெயரின் விளக்கத்தை சொல்ல, வெகுண்டெழுந்து பின் வெதும்பி போனார் சண்முகம்.

மணிகண்டன் காது செவிடாய் போனது குறித்து மிகுந்த வேதனையடைந்தவர் ரங்கராஜன்தான். தன் மகன் செய்ததாக நினைத்த தவறுக்காக அவனை பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று காட்டினார். அத்துனை மருத்துவர்களும் கை விரித்து விட்டார்கள். பின் காதுக்குள் விளக்கெண்ணெய் ஊற்றும் வைத்தியம் திருமதி. அங்கவையால் செய்யப்பட லேசாக கேட்டுக் கொண்டிருந்த காதும் சுத்தமாக கேட்காமல் போய்விட்டது. அவரது மருத்துவ அறிவெல்லாம் வீணாய் போனது குறித்து அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவிட்ல்லை. தான் பெற்றெடுத்த பொருளை, தானே நாசம் செய்வது குறித்து எந்த அறியாமை நிறைந்த பெண் வருத்தப்பட்டிருக்கிறாள்? திருமதி அங்கவை மட்டும் வருத்தப்படுவதற்கு, ஆண்டவன் எதற்கு இரண்டு காதுகளை படைத்திருக்கிறான் ஒன்று போனால் ஒன்றை உபயோகிப்பதற்குத்தானே என்கிற தத்துவத்தை உதிர்த்துவிட்டு சமாதானம் அடைந்துவிட்டார்.

சிறுவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி மனப்பான்மையை பொறுத்தவரை காரண, காரியங்களை அலசி ஆராய்ந்தால்ட் ஒன்றுமற்ற விஷயமாகத்தான் தோன்றும், ஆனால் அவை கவனிக்கத் தகுதயற்றவை என ஒதுக்கிவிடுவதால் ஏற்படும் இழப்பு என்பது அவர்களின் மொத்த எதிர் காலத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு மொத்தமாக பழிவாங்கிவிடும்.

மணிகண்டன், கார்த்திகேயன் இருவரை பொறுத்தவரை தங்களுக்கிடையே நடந்த சண்டை எப்பொழுது மறந்து போனது என்று யோசிக்க நேர்ந்தால் தோற்றுப் போய்விடுவார்கள். அவர்கள் இருவரும் தோள்களில் கைபோட்டுக் கொண்டு செல்ல வெகுநாட்கள் எடுத்துக் கொள்ளவில்லை அதே போல்தான் அடுத்த சண்டைக்கான நாளுக்காகவும் வெகுநாட்கள் காத்திருக்கவில்லை.

நண்பர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு எனும் பேதத்தை விதைத்து விடக் கூடாது என்கிற விஷயத்தில், இந்த ஆசிரியர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. தமிழ் நாட்டை பொறுத்தவரை மனநிலை குழப்பமற்ற ஆசிரியர்கள் இரட்டை இலக்க எண்களுக்குள் அடங்கி விடுவார்கள். இவர்களை சரி செய்வதற்கு ஒரு நூறு பிராய்டாவது தேவைப்படுவார்கள். நல்ல ஆசிரியர்களை கொண்டிருக்கும் சமுதாயம், நல்ல இளைஞர்களை பெற்றிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள, திருவள்ளுவர் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் இரண்டிரண்டு வரிகளில் தத்துவ விளக்கங்கள் ஏதேனும் சொல்லி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. இங்கு இந்த இரண்டாயிரம் வருடத்திற்குத்தான் எத்தனை மரியாதை.

யாரும், எதுவும் கூறாததால் தானோ என்னவோ? இந்த ஆசரியர்கள் மாணவர்களின் மனநிலையில் மைதானம் அமைத்து விளையாடுகிறார்கள். தங்கள் பணிச்சுமையை குறைப்பதாக நினைத்துக் கொண்டு வகுப்பு மாணவர்கள் அனைவரையும் சிறு சிறு குழுக்களாக பரித்துவிட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குழுத்தலைவனை நியமித்து விடுவார்கள். தங்களுக்கிடையே எந்தவித ஏற்றத்தாழ்வும் அற்று சகஜமாக பழகி வந்த அந்த சிறுவர்கள், புதிதாக வலிந்து உருவாக்கப்பட்ட அந்த ஏற்றத்தாழ்வு சூழ்நிலையை ஏற்க முடியாமல், தங்களுக்கிடையே பகையுணர்ச்சியை வளர்த்துக்கொள்கிறார்கள்.

நல்ல சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட கார்த்திகேயன் சிறப்பாக படிக்க அவன் குழுத்தலைவனாக்கப்பட்டான் (லீடர்). ஏழ்மை, கல்வி என்றால் கிலோ 2 ரூபாய்க்கு கிடைக்குமா? என்று கேட்கும் தாய், தந்தை மற்றும் மோசமான வாழ்விடம் இவைகளுக்கிடையே கற்கும் திறனை நாள்தோறும் இழந்து வரும் மணிகண்டன் கார்த்திகேயனின் தலைமையின் கீழ் ஒரு அடிமையைப் போல் உணரத் தலைப்பட்டான். அந்த இரு சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட மனப்பிறழ்வை பற்றி உணரும் திறனை எந்த ஆசிரியராவது அன்று பெற்றிருந்திருப்பாரேயானால் இன்று கார்த்திகேயன் கொல்லப்பட்டிருக்க மாட்டான். மணிகண்டனும் ஒரு சமூக விரோதியாகியிருக்க மாட்டான். நியாயமாக தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள் கண்டு கொள்ளப்படுவதேயில்லை.

குழந்தைகள் ஒரு வெற்று காகிதம் போன்று அழகாக இருக்கிறார்கள். அதில் கன்னாபின்னாவென கண்டதை கிறுக்கி வைப்பதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஏணிப்படிகளை பற்றி என்ன கூறுவது? அவர்களுக்குத்தான் இளைஞர்களை உருவாக்குவதில் எத்துனை துன்பங்கள்?

அன்று வகுப்பறையில் நடந்த சண்டையில் தான் தோற்றுவிடக் கூடாது என்பதில் தீவிரமான முனைப்புடன் காணப்பட்டான் மணிகண்டன். தன் ஒரு காது கேட்காமல் போனது குறித்து இந்த சண்டையின் போது யாரோ ஞாபகப்படுத்தியது போன்று இருந்தது அவனுக்கு. எத்தனை நாள்தான் அவன் இட்ட ஆணைகளை சிரமேற்கொண்டு செய்வது. அதற்கு இன்று ஒரு முடிவு கண்டுவிட வேண்டும் என்கிற தீவிரம் அவனுடைய வெறித்தனமான தாக்குதலில் தெரிந்தது. சில நிமிடங்களில் அது நிகழ்ந்து விட்டது. கார்த்திகேயன் சுவற்றின் ஏதோ ஒரு மூலையில் முட்டிக் கொண்டு தனது கடைசி மூச்சை விட்ட்டான்.

கண்கள் சொருகிய நிலையில் அன்று அவன் இறந்த கிடந்த காட்சி அனைவரையும் கலங்கடித்துவிட்டது. திரு. சண்முகம் தனது மைந்தனை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். துன்பங்களை அதீதமாக அனுபவித்து ஐம்பது, அறுபது வயதுகளில் வர வேண்டிய மனப்பிறழ்வு, ஸ்மரணையற்ற மனநிலை, அதீத காழ்ப்புணர்ச்சி போன்ற உணர்வுகளெல்லாம் இந்த சிறு வயதிலேயே ஆக்கிரமிக்க மணிகன்டன் உயிருடன் செத்துக் கொண்டிருந்தான்.

தனது மகனின் சடல்ததை பார்த்த திரு. ரங்கராஜன் ஆறுமுறையோ, ஏழு முறையோ மயக்கமடைந்து, அடைந்து எழுந்தார். அவரால் நம்பவே முடியாத அந்த இறப்பை உள்வாங்கியதிலிருந்து, கண்கள் கண்ணீரை வெளியிடுவதிலிருந்து தன்னை நிறுத்திக் கொள்ளவேயில்லை. சிவந்து போன கண்களிலிருந்து வலிந்து கொண்டிருக்கும் கண்ணீர் இன்னும் சிறிது நாட்கள் கழித்து சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மனமானது மயக்கமடைந்த நிலையில் மட்டுமே அவரது கண்கள் கண்ணீரை வெளிப்படுத்தவதை மறந்திருந்தது. புண்ணாகிப் போன ரங்கராஜனின் மனம். தன் மகனையொத்த வயதுடைய சிறுவர்களைப் பார்த்தால் பொங்கி வரும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழ ஆரம்பித்துவிடுகிறது.

திரு. சண்முகத்தை பொறுத்தவரை, முன்பெல்லாம் வேலை பளுவில் குடித்துக் கொண்டிருந்தார். இன்று வேதனை மிகுதியில் குடித்துக் கொண்டிருக்கிறார். திருமதி. அங்கவை இன்றும் திட்டிக்கொண்டுதான் இருக்கிறார் தெருமுனையில் நின்று கொண்டு. ஆனால் என்ன திட்டுகிறார், யாரை திட்டுகிறார் என்று தான் புரியவில்லை. அவரிடமிருந்து தங்கு தடையின்றி வெளிப்பட்டுக் கொண்டிருக்கம் வசவு வார்த்தைகளை கவனிக்கும் பொழுது, புரியா மொழி இலக்கியத்தின், சர்ரியல் தன்மை கலந்த இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. திரு. சண்முகத்தின் நம்பிக்கையெல்லாம், தான் இன்னும் அரசாங்கத்திடமிருந்து 5 கிலோ அரிசியையும், 500 ரூபாய் பணத்தையும் வாங்கவில்லை என்பது மட்டும் தான்.

அன்று திரு. ரங்கராஜன் தன் மகனைக் கொன்ற, மணிகண்டனை சந்திக்க விரும்புவதாக மனு அளித்திருந்தார். நீண்ட விவாதத்திற்குப் பின் அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இன்று இருவரும் ஒருவர் முன் ஒருவர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமல். கண்ணீர் விட்டபடி வெகுநேரமாக அப்படியே இருந்தார்கள். அனைத்து விதமான ஆதீத உணர்ச்சிகளும் அடங்கி ஒரு உயிரற்ற சவத்தை போல அமர்ந்திருந்த மணிகண்டன் கண்களில் கண்ணீர் மட்டும் ஒரு வற்றாத ஜீவ நதியை போல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டேயிருந்தது. இருவருமாக சேர்ந்து அரை டம்ளர் கண்ணீரை செலவழித்தபின், நிகழ்ந்த அந்த அழகான நிகழ்வை பற்றி எப்படி விவரிப்பது…

திரு. ரங்கராஜனின் இளஞ்சூடான அந்த கை, மணிகன்டனின் தலையை மென்மையாக கோதிவிட்டது. அவனை ஆதரவாக தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். மணிகன்டன் வெடித்து கதறி அழ ஆரம்பித்திருந்தான்.

(தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் திரு. ரங்கராஜனுக்கு மனநிலை குழம்பவில்லை என்பது மட்டுமே)

வேதனையின் ஊடாக மன்னிப்பை வழங்குவது பற்றி உணரத் தலைப்பட்ட அந்த சில நொடித் துளிகள், உணர்வின் உச்சத்தை உணர்ந்தறிய ஒரு ஆன்மாவுக்கு கிடைத்த அரிதான வாய்ப்பாக கருதலாம். 

தொடர்புடைய சிறுகதைகள்
அப்போதுதான் எனக்குத் தோன்றியது. இது மழை பெய்யும் காலம் அல்லவே என்று, ஜன்னல் திறந்துதான் இருந்தது. ஆனால் நியாயமாக பாலைவனத்தில் அடிக்க வேண்டிய வெயில் எனது பள்ளிக்கு வெளியே அடித்துக் கொண்டிருந்தது. புதிதாக மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்திருந்த தினம் அது. ...
மேலும் கதையை படிக்க...
சார் வாட் டு யு வாண்ட் சார்” இரண்டு காபியை பேரரிடம் ஆர்டர் செய்து விட்டு மீண்டும் தனது சோகமான பார்வைக்கு பின்னே போய் ஒளிந்து கொண்டான் சிவா (சிவச்சந்திரன்). ஆதரவாக ஒரு நண்பன் இல்லையென்றால் சோகத்தை கடக்க வழியேது, எதிரே ...
மேலும் கதையை படிக்க...
நேற்று கனவில் ஆயிரக்கணக்கான தோழர்களிடையே திரு. சம்பத் சார் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தார். யாரும் கைத்தட்டவில்லை. அருகில் ஒரு பையன் சோடா பாட்டிலை வைத்துக் கொண்டு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பேச்சு அனல் பறந்தது. “அதிகாரிகளால் அதிகாரிகளுக்காக, அதிகாரிகளாக சேர்ந்து கண்டுபிடித்த ...
மேலும் கதையை படிக்க...
எல்.கே.ஜி.யிலிருந்து யு.கே.ஜி. சென்ற நாள் முதல் எனக்கு (வினோத்) பெரிய தலைவலியாக இருந்தது. யு.கே.ஜி. என்னைப் பொறுத்தவரை அவ்வளவு ராசியாக இல்லை. அந்த இடஅமைப்பும், அதன் வாஸ்து அமைப்பும் எனக்கு அவ்வளவாக ஒத்துப் போகவில்லை. ஏதோ மூச்சு முட்டுவது போன்றதொரு மனநிலை. ...
மேலும் கதையை படிக்க...
இது புரிந்து கொள்ளவே முடியாத குழப்பமான விஷயமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுது விஷயம் தெளிவாகிவிட்டது. அவன் சாலையின் வலப்பக்கமாகத்தான் போவான். அவன் இடது கையால் தான் சாப்பிடுவான். அவன் 9 மணிக்குமுன் படக்கையைவிட்டு எழுந்ததேயில்லை. அவன் பல்துலக்கியதே இல்லை. அவன் தலையில் எண்ணெய் தேய்த்ததேயில்லை. ஆனால், அவன் பள்ளிக்கு ...
மேலும் கதையை படிக்க...
கனவு தேசம்
நண்பர்கள்
அதிகாரி
மிரட்டல் கடிதம்
ஆச்சரியமான ஆச்சரியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)