Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மடி நெருப்பு

 

தெருவோரத்தில் தெரிந்தது அந்தப் போலீஸ் வண்டியும் ஆம்புலன்ஸும் அதைச் சுற்றி நின்ற கூட்டமும். செய்தித்தாளை எடுத்துக்கொண்டு யதேச்சையாய் கேட்டிலிருந்து எட்டிப்பார்த்த சிவசங்கரன் கதவைத் திறந்து வெளியே வந்து நின்றார். “மாசிலாமணி வீடு மாதிரி தெரியுதே!”

எதிர்ப்பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்துவிட்டு வருகிற ஒரு சைக்கிள்காரரைக் கேட்டார். “அந்த வூட்டு ஐயாவைவும் அம்மாவையும் யாரோ கொன்னுட்டாங்களாம். போலீஸ் கேஸு” ஒரு கால் வைத்து ஊன்றி போகிற வாக்கில் சொல்லிவிட்டுப் போனார் அவர். பனியன் வேட்டியுமாய் செருப்பில்லாமல் அரையாடையிலிருந்ததைப் பொருட்படுத்தாமல் அதிர்ச்சியில் தன்னிச்சையாய் தெருவில் இறங்கி நடந்தார்.

ஜே.பி. நகரின் அந்தத் தெருவுக்கு சிவசங்கருடன் ஒன்றாய்க் குடிவந்தவர். ‘இரண்டு நாட்களுக்கு முன்புகூடப் பார்த்தேனே… புதரும் செடியுமாய் மண்டியிருந்த பெரிய காலி மனைக்கு பக்கத்திலிருந்த வீடு. தெருவில் வசிக்கிற தெரிந்த முகங்கள் கூட்டத்தில் தென்பட்டன. போலீஸ்காரரோடு பேசிக்கொண்டிருந்தவர் பக்கத்தில் போய் நின்றதும் அந்தச் செய்தியின் அதிர்ச்சி மெல்ல உள்ளிறங்கியது. பணிப்பெண் வந்து போனபின் மதியத்துக்கு மேல் யாரோ வீட்டுக்குள் நுழைந்து இருவரையும் கட்டிப்போட்டு மாசிலாமணியை இரும்புக்கம்பியால் தலையில் அடித்தும், மனைவியைக் கழுத்தை நெறித்தும் கொன்றிருக்கிறார்கள். காலையில் வேலைக்கு வந்த பணிப்பெண்ணுக்கு கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்து வீட்டில் சொல்லி, போலீஸ் வந்து கதவை உடைத்து அறியப்பட்ட சங்கதி.

மூலையில் ரத்தம் தோய்ந்திருந்த வெள்ளை படுதாவால் மூடி ஒரு உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மூலையில் உட்கார்ந்தபடிக்கு போலீஸ்காரருக்கு அழுதுகொண்டே பதில் சொல்லிக்கொண்டிருந்த பணிப்பெண்ணும், பரட்டைத் தலையும் லுங்கியுமாய் நின்றுகொண்டிருந்த அவள் கணவனும் சந்தேக லிஸ்டில் முதல் ஆட்களாய் இருக்கவேண்டும். இன்னொருத்தர் செல் பேசியில் வெளிநாட்டிலிருக்கும் அவர் மகனுடனும், பக்கத்து வீட்டுக்கார சதாசிவம் மூத்த அதிகாரியாய்த் தெரிந்தஇன்னொரு போலீஸ்காரருடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். எப்படி மனது வந்தது அந்தக் கிராதகனுக்கு? வயது முதிர்ந்த தம்பதியினரை கட்டிப்போட்டு ஒருவர் முன்னாலேயே இன்னொருவரைத் தலையில் அடித்துக் கொல்லவும் கழுத்தை நெறிக்கவும்?

ஜே.பி. நகர், ஜெயநகர் உள்ளடக்கிய அந்தப் பிரதேசத்தின் நான்காவது கொலை. ஒவ்வொரு சம்பவத்திலும் அதே ஒற்றுமை. கொல்லப்படுவது வயதான பெற்றோர்கள். மகனையோ மகளையோ வெளிநாட்டு சுபிட்சத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு தனித்து வாழ்பவர்கள். இங்கே கொஞ்ச நாள் அங்கே கொஞ்ச நாள் என்று அல்லல் படுகிறவர்கள். பிறந்த மண்ணில் உறவுகளையும் புகுந்த மண்ணில் உடைமைகளையும் வைத்துக்கொண்டு அவஸ்தைப்படுகிற அர்த்தநாரிக் குடும்பங்களின் வயோதிக மிச்சங்கள்.

பெங்களூரு மாறிப்போய்விட்டது. அதன் பூங்காக்கள், சோம்பலான குளிர் காலை, மைசூர் மசாலா, ஒன் பை டூ காப்பி, நவராத்திரி என்று தேமே என்று இருந்த ஊரை அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் சல்லிசாய் நிரல் எழுதும் கொல்லைப்புறமாய் மாற்றி ஆட்களைக் கொணர்ந்து நிரப்பி, மரங்களை வெட்டி, ரோடுகளை நிரப்பி உருக்குலைத்து விட்டார்கள். 60/40 என்று சல்லிசாய்க் கிடைத்த வரிசையான மனைகளில் அவரும் சில நண்பர்களும் இணைந்து வாங்கியபோது அந்தப் பிரதேசமே பூங்காவாய், அதனூடே சின்னச் சின்ன வீடுகளாய், காக்கைகளும் குயில்களும் மட்டும் அதன் அமைதியைச் சிதைக்கும் ஸ்தலமாய் இருந்தது. இப்போது வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கமுடியாமல் திணறுகிறது. பின்பக்கம் காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப மையங்களில் இந்தியாவின் எல்லா பாகங்களிலிருந்தும் திரண்டு வரும் பேனர்ஜிகளையும், மிஸ்ராக்களையும், யாதவ்களையும், மேனன்களையும் குடியமர்த்தக் கிடைத்த இடங்களில் எல்லாம் பலமாடிக் கட்டிடங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஆயிரத்தில் இருந்த நிலத்தின் விலை கோடிகளாகி உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் அவசரத்துக்கு வரிசையாய் சின்னச் சின்ன தனி வீடு கட்டிக்கொண்டு வாழும் சிவசங்கரன்களும், மாசிலாமணிகளும் இடைஞ்சலாய் இருக்கிறார்கள்.

சதாசிவம் போலீஸ்காரரிடமிருந்து விடுபட்டு சிவசங்கரன் அருகில் வந்தார். “நகை பணம் ஒண்ணும் களவு போலை. ஃபோர்ஸ்ட் என்ட்ரி இல்லை,” என்றார். பிரதேத்தை அடையாளம் காட்டியவர் அந்தப் படபடப்பில் வியர்த்திருந்தார். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சிவசங்கரனைத் தள்ளிகொண்டு நடந்தார் “இது அவங்கதான்” என்றார் சன்னமாய்.

“அவங்க” என்று அவர் குறிப்பிட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பெங்களூரை வளைத்துப்போட்டிருக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு பினாமிகள். அரசுக்குச் சொந்தமான நிலங்களை வாங்குவது, புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போடுவது, நகர்ப்புறத்தில் அனுமதிக்கு மீறி அடுக்கு மாடிகள் கட்டுவது என்று பணம் ஒன்றே குறியாய் ஊரைச் சூறையாடும் கொள்ளைக்கார நிறுவனங்கள். அவர்கள் இருக்கும் ஜே.பி. நகர் போன்ற ரம்மியமாக வடிவமைக்கப்பட்ட நகர்களில் கட்டும் மனைகள் ஏகத்துக்கும் விலை போகின்றன. மாசிலாமணிக்கு பக்கத்து ப்ளாட்டில் கூட ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் வரப்போகிறது என்று பேசிக்கொண்டார்கள்.

அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திலிருந்து வந்த ஆள் அவர்களுடன் பேசியது சில மாதங்களுக்கு முன்புதான். காலி மனையில் ஆரம்பித்து சிவசங்கரன் வீடுவரை இருக்கிற நிலம் கிடைத்தால் அந்த இடத்தில் ஆறு மாடிக்கு மனைகளை எழுப்பிப் பெட்டி பெட்டியாக வீடு கட்டி விற்றுவிடுவார்கள். இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு அபார்ட்மெண்டும் கையில் கணிசமாய் பணமும் என்று தாடியும் மீசையும் பழுப்புப் பற்களுமாய் பணிவாகப் பேசிய அந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் சொன்ன கணக்கும் சுவாரசியமாய்தான் இருந்தது. “வீடு ரெண்டு கோடி மூணு கோடி பெறும்னு சொத்துக்கணக்கு சொல்லிக்கறதுல என்ன பிரயோஜனம் சொல்லுங்க. அதை இப்படி அபார்ட்மெண்ட் ஆக்கினா வீட்டுக்கு வீடும் ஆச்சு கைல நிறைய காசும் ஆச்சு” அவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவன் போல பழுப்புப் பல்லன் பேசினான்.

“உங்க பசங்கல்லாம் ஃபாரின்ல போய் செட்டில் ஆயிட்டாங்க. வயசான காலத்துல இப்படி பெரிய வீட்டை மெயின்டெயின் பண்றதும் கஷ்டம். அடக்கமா இரண்டு பெட் ரூம் இருந்தா உங்களுக்கும் சுளுவு. ஜேப்பி நகர்லயே இதுமாதிரி நிறைய அபார்ட்மெண்ட் வந்திருச்சுங்க. கட்டி முடிக்கற வரைக்கும் வேற இடத்துல நீங்க தங்கற வாடகைகூட கம்பேனி பாத்துக்குங்க,” வயதான அவர்களை ரட்சிக்க வந்தவன் போல நைச்சியமாய் பேசினான்.

சதாசிவம் தயாராய் இருந்தார். நடுவில் இருந்த மாசிலாமணி மட்டும் அதற்கு ஒப்பவில்லை. “சிட்டி சத்தத்துலந்து விடுபட்டு தோட்டம் சுத்தி இருக்கணும்னு தான ஒண்ணா வாங்கினோம். ஆசை ஆசையாய் பாத்து கட்டினோம். அதுல என் அடையாளம் போய் இன்னும் இருபது பேர் நடுவுல நெருக்கிகிட்டு இருக்கறதுல எனக்கு இஷ்டம் இல்லீங்க,” பிடிவாதமாய் மறுத்துவிட்டார். அது அவரைக் கொலை செய்கிற அளவுக்குப் போகும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

அவர் போன்ற தனித்து விடப்பட்ட வயதானவர்கள் ரியல் எஸ்டேட் கிராதகர்களுக்கு எளிதான இலக்கு. வீட்டை விலைக்குக் கேட்பது. தராவிட்டால் மிரட்டுவது, கொலை செய்யவும் தயங்காத கயவர்கள். இவர்களுக்குத் தெரியாமல் வீட்டை விற்கவும் முடியாது. விளம்பரம் கொடுத்தால் இடைத்தரகர்கள் தான் வந்து நிற்கிறார்கள்.

“போலீஸ் கிட்ட சந்தேகத்தை சொல்லிடறதுதான?” என்றார் சிவசங்கரன்.

“வேற வெனையே வேணாம் சிவா. அவங்களும் இதுக்கு உடந்தை. எங்கிட்ட கம்ப்ளெயிண்டு வாங்கிகிட்டு என்னையே போட்டு குடுத்துருவானுங்க. நான் உயிரோட இருக்கறது உனக்குப் பிடிக்கலையா?”

விலக்கில்லாமல் அத்தனை அரசியல் கட்சிகளும் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றன. ஒவ்வொருத்தருக்கும் இணக்கமான நிறுவனங்கள் அவரவர் கட்சி ஆட்சிக்கு வரும்போது அட்டூழியத்தை ஆரம்பிக்கும். சிலசமயம் கட்சிப் பாகுபாடு இல்லாமல் இவர்களின் பணம் பாய்கிறது. யாரிடம் போய்ச் சொல்வது?

“ஒண்ணும் செய்ய முடியாது சிவா. வித்துர்றதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன். என் பையன்கிட்ட சொல்லிட்டேன். அவன் எங்கியோ இருக்கான். பண்டிகைக்குப் பண்டிகை மட்டும் வர்றான். மீதி நாள்ல யாரால இப்படி பயந்து பயந்து வாழ முடியும்?” சொல்லிவிட்டு திரும்பிப்போனார்.

சிவசங்கரன் யோசனைகளைச் சுமந்து கொண்டு திரும்ப வந்ததும்தான் கவனித்தார் கேட்டைத் திறந்து வைத்துவிட்டு வந்ததை.

“எங்க போனீங்க எங்கிட்ட சொல்லிக்காம…. உள்ளேயிருந்து கூப்டுகிட்டே இருக்கேன்” எதிர்ப்படும் மனைவி விசாரிக்கிறாள். “இவளிடம் சொல்லலாமா வேண்டாமா? காலங்காலையில் சொல்லி பயமுறுத்துவானேன். மார் வலிக்கிறது என்று படுத்துவிடுவாள். எப்படியும் இன்னும் இரண்டு மணிநேரத்தில் விஷயம் வீடுவீடாய் கசிந்து வரும். அப்போது தெரிந்து கொள்ளட்டும். அதுவரை நிம்மதியாய் இருக்கட்டும்.”

சிவசங்கரன் இந்த பயத்தில்தான் அநேக தினங்களைக் கழிக்கிறார். ஊர் பூரா எழும்பும் கட்டிடங்களில் சல்லிசான சம்பளத்தில் வேலை செய்ய பிகாரிலிருந்தும், உ.பி.யிலிருந்தும் வந்து குவிந்திருக்கும் ஆட்கள் திருட்டில் ஈடுபடுகிறார்கள் என்று பத்திரிகைச் செய்திகள் நித்தியப்படி பயமுறுத்துகின்றன. தெருவிலிருந்து பார்த்தால் வீட்டிற்குள் தெரிகிறது என்று நாள்பூரா ஜன்னல்களை அடைத்தே வைத்திருக்கிறார். வராந்தாவில் கிரில் கதவு போட்டு பாதுகாப்பு செய்தாயிற்று. இரண்டு கதவுகள். அதிலும் மூன்று பூட்டுகள். கொல்லைப்புறம் ரெண்டு கதவு என்று பயத்தின் சுவடுகள் வீடு பூரா அப்பியிருக்கிறது.

இரவு மட்டும் பயந்த காலம் போய் இப்போது பகலிலும் பயம் பீடித்திருக்கிறது. யாரைப் பார்த்தாலும் சந்தேகமாய் இருக்கிறது. குழாய் ரிப்பேர் , கேபிள் டீவி ஆள், எலெக்ட்ரீஷியன், கூரியர் என்று வாசலில் யார் வந்து நின்றாலும் உடம்பு படபடக்கிறது. பணிப்பெண் முகவரி, அவள் கணவன் வேலை செய்யுமிடம் என்று எல்லா விவரங்களையும் விசாரித்தே வேலைக்கு ஆள் எடுக்கவேண்டியிருக்கிறது. திருட்டு பயத்தில் ஆரம்பித்து கொலையில் வந்து முடிந்திருக்கிறது. எத்தனை நாள்தான் இப்படி சிறையில் மாட்டிக்கொண்டிருப்பது போல வாழ்வது?

படபடப்பு அடங்க யாரிடமாவது பேசவேண்டும் போல இருந்தது. மணியைப் பார்த்தார். ஏழரைதான். நியூ ஜெர்சியில் பத்து இருக்கும். மகன் இன்னும் தூங்கப் போயிருக்கமாட்டான். தொலைபேசியை எடுத்து எண்களை ஒற்றிக் காத்திருந்து விட்டுத் துண்டித்தார். இரண்டு நிமிஷத்தில் தொலைபேசி அடித்தது “கூப்டீங்களாப்பா?” என்று அமெரிக்காவிலிருந்து மகன் குரல் கொஞ்சம் போலத் தாமதமாய் விசாரித்தது.

“நீ இன்னும் தூங்கலியே…. கொஞ்சநேரம் பேசலாமா” வினவுகிற அப்பாவின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த மகன், “சொல்லுங்கப்பா.. ஈஸ் எவ்ரி திங் ஆல்ரைட்?” என்கிறான்.

கொஞ்ச நேரம் என்னவோ பேசிவிட்டு விஷயத்துக்கு வந்தார் அந்த வீட்டை விற்றுவிட்டு ஒரு அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுக்குக் குடிபெயருவதைப் பற்றி அவனுக்கு அனுப்பின மின்னஞ்சலை நினைவூட்டினார்.

மகனுக்கு அதில் இஷ்டமில்லை. அவருக்குத் தெரியும். ஆனால் இங்கே அவர் படும் சங்கடங்களை எப்படி உணர்த்துவது? “பன்னார்கட்டா ஏரியால எல்லாம் பெரிய பெரிய அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் வந்திருச்சு. பார்க், கிளப், ஸ்விம்மிங் பூல் எல்லா வசதிகளோட இருக்காம். உள்ளயே மளிகைக் கடை, காய்கறிக் கடை எல்லாம் வச்சிருக்காங்க.” அவன் குறுக்கிடுவதற்கு முன் அத்தனையையும் பட்டியலிட்டார். அவர் பார்க்கப் போன நண்பர் ஒருவர் வளாகத்தைச் சுற்றிக் காண்பித்தபோது நிரம்பப் பிடித்திருந்தது. பசுமையான பார்க் நடுவில் போடப்பட்டிருந்த நீள நாற்காலிகளில் உட்கார்ந்து ஆற அமரப் பேசிக்கொண்டிருந்த அவர் வயது ஆட்களைப் பார்த்தபோது ஆசுவாசமாய் இருந்தது. “இருபத்து நாலு மணி நேரமும் செக்யூரிட்டி இருக்காம், பயமே இல்லை” என்றார் இறுதியில்.

“நிலத்தோட தனி வீடு கிடைக்காதான்னு அவனவன் அலையறான். இருக்கற நல்ல வீட்டை வித்துட்டு அபார்ட்மெண்ட் காம்பளெக்ஸ்ல சூட்கேஸ் சைஸ் வீட்ல போய் இருக்கணும்னு தலையெழுத்தாப்பா? நான் இந்தியாவுக்குத் திரும்பி வந்தா ரீஃபர்பிஷ் பண்ணி மேலகீழ பெரிசா கட்டிக்கலாம்னு ஒரு எண்ணம் இருக்கு. அதை விப்பானேன்.”

இவனிடம் எப்படிச் சொல்வது? அந்தத் தனிவீட்டில் அவர்கள் இருவர் மட்டும் பாதுகாப்பு இல்லாமல் பயந்தபடி இருப்பதை, ஒரு அவசரம் என்றால் ஆஸ்பத்திரிக்கு தூக்கிபோகக்கூட கூப்பிட்ட குரலுக்கு யாரும் இல்லாமல் இருப்பதை, எல்லோரும் திருட்டு பயத்தில் கதவை அடைத்து வைத்துக்கொண்டு டீவி பார்த்துக்கொண்டிருக்கிற அவலத்தை? தன் பயத்தை எப்படி வெளிப்படுத்துவது? வாழ்க்கையின் சேமிப்பையெல்லாம் கொட்டிச் சேகரித்த தன் உடமையே தனக்கு மனச்சுமையாகிப்போன நிலையை எப்படிப் புரியவைப்பது?

வாதமும் எதிர்வாதமுமாய் நீண்ட பேச்சு, இவர் படபடப்பிலும் அவன் சலிப்பிலும் போய் முடிந்தது. “உங்க இஷ்டம்ப்பா..” என்ற நியூ ஜெர்சி கோபத்தில் அறுபட்டது. சிவசங்கரன் தொலைபேசிக்கு அருகிலேயே நினைவுகளில் மூழ்கிப் போய் பேசாத மௌனத்தில் கொஞ்ச நேரம் உறைந்து போனார். ரத்தம் தோய்ந்த வெள்ளைப் படுதா இன்றைக்குப் பூரா கண்முன்னே நிற்கும். கூடவே மாசியின் சிரித்த முகமும். இரண்டு வீடு தள்ளி ஒரு கொலை விழுந்த பிறகு எப்படி அங்கிருப்பது? சதாசிவமும் விற்றுவிட்டுப் போய்விட்டால் தான் மட்டும் அங்கே உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது?

அந்த பழுப்புப் பல் ஆள் வீட்டுக்குள் பையப்பைய நடந்து வந்து மனைவியை இரும்புக் கம்பியால் தலையில் அடித்து அவர் மேல் ரத்தம் தெறிக்கிற பிம்பம் இன்னொரு முறை வந்து போகிறது. உடல் பதறுகிறது.

“சார்….. அம்மா” வராந்தாவின் கிரில் கதவின் தாழ்ப்பாளை அடித்துச் சப்தித்தபடி யாரோ உரக்கக் கூப்பிடுகிறார்கள். சிவசங்கரன் எழுந்து போய் அவனை விரோதமாய் எதிர்கொண்டார். அச்சடித்த ஒரு கற்றை காகிதத்தை வைத்துக்கொண்டு அதிலொன்றை அவர் முன் நீட்டினான். ஜே.பி. நகரில் புதிதாக ஒரு ஷாப்பிங் மால் திறக்கிறார்கள். அதற்கு விளம்பரம். முதல் நாள் வந்து என்ன வாங்கினாலும் 50% கழிவு என்கிறது வர்ணமயமான காகிதம்.

“வூட்ல பசங்க யாரும் இல்லிங்களா?” அவன் சுவாதீனமாய்த்தான் கேட்டான்.

“இந்த நோட்டீஸ் எல்லாம் கேட்டு கதவுல இருக்கற பொட்டில போட்டுட்டுப் போ. உள்ள வந்து கூப்படற வேலையெல்லாம் வேணாம்,” பெரிய மீசையும் சிவப்பேறிய கண்களுமாய் நின்ற அவனைப் பார்த்து இரைகிறார். வீட்டில் எவ்வளவு பேர் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று வேவு பார்த்துச் சொல்ல வந்தவனாய் இருக்கும்.

ஷாப்பிங் மால் – இது போல நூறு வீடுகளை அழித்துவிட்டு, எதிர்ப்பவர்களை அடித்துப் போட்டுவிட்டு கட்டியதாய் இருக்கும். வாழ்வதற்கு உண்டாக்கிய பெரிய வீட்டை இடித்துச் சிறியதாக்கிக்கொண்டு பெரிது பெரிதாய் ஷாப்பிங் மால் கட்டிக்கொண்டு சந்தோஷமாய் இருக்க நினைக்கிற அவசரகதியில் இயங்கும் ஊர். அவர் அந்தத் தாளை கசக்கி வெளியே எறிந்தார்.

“கேட்டை மூடிட்டுப் போ” என்று இவர் இரைகிறதைப் பொருட்படுத்தாமல் அவன் கேட்டைப் பாதி மூடிவிட்டு போனான். அன்றைக்கே வெளி கேட்டுக்கு ஒரு பூட்டை வாங்கிப் போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டார் சிவசங்கரன்.

- தென்றல் சிறுகதைப் போட்டி 2011 – மூன்றாம் பரிசு 

தொடர்புடைய சிறுகதைகள்
வீட்டை அடைந்ததும் வாசல் கதவருகிலிருந்த ஜோடி செருப்பு கண்ணில் பட்டது. அவனுக்குப் பரிச்சயமான செருப்பு. முழுவதும் மூடாத கதவு வழியே கசிந்த பேச்சுக்குரல்கள் அவன் உள்ளே நுழைந்ததும் நின்று போயின. தங்கதுரைக்கு தெரியும் ரேணுகாவும் அவன் மாமனாரும் தன்னைப் பற்றிதான் விவாதித்துக் ...
மேலும் கதையை படிக்க...
“டிரிங்க்ஸ் சாப்பிடும்போது கொறிக்க ஏதாவது பண்ணியிருக்கியா?” என்று சன்னமாக விசாரிக்கிறான் பிரபு. டிரிங்க்ஸ், அந்த வீட்டில் அவ்வப்போது புகும். கிருஷ்ணவேணிக்கு அது ஒவ்வாத ஒரு வழக்கம். அவள் அகராதியில் அதற்கு சாராயம் என்று பெயர். “காராசேவும் பக்கோடாவும் வாங்கி வெச்சிருக்கேன்...” கமறலும் புகையும் அடங்கி குக்கர் ...
மேலும் கதையை படிக்க...
பெங்களூரின் நவம்பர் மாதப் பின்னிரவுக் குளிர் சிலிர்க்கும் என் வீட்டுப் பால்கனியில் நின்று கதகதப்பாக சிகரெட் பிடிக்கும்போதுதான் கேட்டது அந்த ஒலி. ஒரு பெண் அழும் சத்தம். சின்னதாக விசும்பல், கொஞ்சம் மௌனம், பின்னர் என்னமோ சொல்லி அரற்றல், மறுபடி அழுகை. ...
மேலும் கதையை படிக்க...
உங்கள் வீட்டிலும் இப்படி ஒரு குழந்தை உண்டா? ''கொழந்தை மாத்திரை சாப்பிடணும். கொஞ்சம் வந்துட்டுப் போங்க''- ஒரு கை மாத்திரையும் இன்னொரு கை தண்ணீர் கூஜாவுமாக என் மனைவி, கொஞ்சம் கெஞ்சலாகவும் கொஞ்சம் கவலையோடும் கூப்பிடுகிறாள். நான், அடுத்த சில நிமிடங்களுக்கு எங்கள் ...
மேலும் கதையை படிக்க...
அலுவலக அறைக்குள் நுழைந்ததும், தன் இருக்கைக்கு எதிரே தீப்தி உட்கார்ந்திருந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. அலுவலகத்துக்குப் போகாமல் அங்கே அவள் வந்த காரணம் என்ன? ''என்னாச்சு? ஏதாவது பிரச்னையா? இல்லே, உடம்பு கிடம்பு சரியில் லையா?'' என்றான் கரிசனத்துடன். ''இல்ல நிக்கி, இந்தப் பக்கம் ...
மேலும் கதையை படிக்க...
காத்திருப்பு…
மருந்து
யார் அது அழுவது?
கொழந்தே…
அந்தரங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)