பாலியல் பாதைகள்

 

ராஜாராமன் சென்னையிலுள்ள அந்தப் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ப்ராஜக்ட் மனேஜர். அவன் மனைவி வைகுண்ட ஏகாதசிக்கு பெருமாளை சேவிக்க மூன்று வயதுக் குழந்தையுடன் தன் ஊரான ஸ்ரீரங்கம் சென்றிருந்தாள். மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு ஜாலியாக தனிமையில் இஷ்டத்துக்கு சுற்றுவதென்றால் அவனுக்கு ஏகப்பட்ட குஷி.

அன்றும் அப்படித்தான்… ஏழு மணிக்கு கம்பெனியிலிருந்து வீட்டிற்கு கிளம்பியவன் வழியில் இரண்டு பெக் குடித்துவிட்டு பிறகு சாப்பிட்டவுடன் வீட்டிற்கு செல்லலாம் என நினைத்தான். நங்கநல்லூரிலுள்ள தன் வீட்டிற்கு செல்வதற்குமுன் அருகே ஏர்போர்ட் மெயின் ரோட்டின் திருப்பத்திலுள்ள ட்ரைடன்ட் ஹோட்டலில் தன் காரை பார்க் செய்யும்போது அங்கு ஏற்கனவே பார்க் செய்யப்பட்டிருந்த காரில் சாய்ந்தபடி தன்னைப் பார்த்துச் சிரித்த அழகிய பெண்ணை மறுபடியும் உற்றுப் பார்த்தான். அவள் மறுபடியும் சிரித்தாள்.

ராஜாராமன் சற்று தைரியமுற்று அவளருகில் சென்று, “ஹலோ” என்றான். அவளும் “ஹலோ” என்று தன் வலது கையை நீட்டினாள். அவள் கையைப் பற்றி குலுக்கினான். கை மிருதுவாக இருந்தது. ‘மனைவி வீட்டில் இல்லை… இவளோடு இன்றைய இரவைக் கழித்தால் என்ன?’ என்று நினைத்தவன் “என்னுடன் வாங்களேன் சாப்பிட்டுக் கொண்டே நிறைய பேசலாம்” என்றான்.

அவள் “சரி வரேன்” என்று சொல்லி அவனுடன் உரசியபடி ஹோட்டலினுள் சென்றாள்.

ராஜாராமன் அப்சொல்யூட் வோட்காவும் அதனுடன் கலப்பதற்கு ஸ்ப்ரைட்டும் ஆர்டர் செய்துவிட்டு, அவளைப் பார்த்து “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றான். அவள் சிரித்துக்கொண்டே “எனக்கும் அப்சொல்யூட் வேணும்” என்றாள். ராஜாராமன் ஒரு கணம் திகைத்தான். அடுத்த கணம் ‘மாடர்ன் பெண்களும்தான் தற்போது நிறைய குடிக்க ஆரம்பித்துவிட்டார்களே’ என்று தனக்குள் நினைத்தபடி அவளுக்கும் ‘அப்சொல்யூட் ஆர்டர் செய்தான்.

ஹோட்டல் வெளிச்சத்தில் அவள் முகம் பளபளவென அழகாக தெரிந்தது. ஆங்கிலமும் தமிழும் நன்றாகப் பேசினாள். ராஜாராமன் தன் மனைவி ஸ்ரீரங்கம் சென்றிருப்பதையும் தான் தனிமையில் இருப்பதாகவும் சொன்னான். இருவரும் இரண்டு பெக் குடித்து முடிக்கையில் அவளுக்கு மொபைலில் போன் வந்தது. பேசி முடிந்ததும், “என் பாய் பிரென்ட்.. அவனையும் இங்கயே வரச் சொல்லிட்டேன்…உங்களுக்கு ஓகேதான ராஜாராம்?” என்றாள். ஒரு கணம் திகைத்தவன் பிறகு “நோ ப்ராப்ளம்” என்றான்.

அவளுடைய பாய் ப்ரென்ட் வந்தான். நான்கு நாள் தாடியுடன் கறுப்பாக உயரமாக இருந்தான். “ராஜாராமன் ப்ளீஸ் மீட் மிஸ்டர் சதீஷ் என்னுடைய வுட் பீ” என்றாள்.

ராஜாராமன் அவனுக்கும் சேர்த்து வோட்கா ஆர்டர் செய்ய அனைவரும் கண்கள் சிவக்க இரவு பத்து மணிவரை நிறைய குடித்தனர். சிகரெட் பிடித்தனர். அவளும் புகைத்தாள். சிக்கன், மட்டன் உணவு வகைகள் ஆர்டர் செய்து பேசிக் கொண்டே சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்தவுடன் 8300 ரூபாய்க்கு பில் வந்தது. ராஜாராமன் தன் கிரிடிட் கார்டை நீட்டினான்.

அவள் “மிஸ்டர் ராஜாராமன் இவ்வளவு குடித்துவிட்டு இனிமேல் நான் வீட்டிற்கு செல்ல முடியாது.. நானும் என் வுட் பீ யும் உங்களோட உங்க வீட்டுக்கு வரலாமா? ஐ வில் கிவ் யூ குட் கம்பெனி… யூ வில் பி எக்ஸைடட்” என்று கொஞ்சினாள். ராஜாராமனுக்கு உடம்பு முறுக்கேறியது.

“உன் வுட் பீ ஒன்றும் சொல்லமாட்டாரா?”

“ஸ்கின் டு ஸ்கின் நோ ஸின் என்கிற பாலிஸி எங்களுடையது ஈவன் ஆப்டர் அவர் மாரேஜ்”

ராஜாராமன் அடப் பாவிகளா என்று நினைத்துக்கொண்டு ‘இன்று ஒரு நாள் இவளை நன்கு அனுபவிக்கலாமே’ என்கிற ஆசையில் அவர்கள் இருவரையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கி செலுத்தினான். அவள் அவனருகில் முன் சீட்டில் அமர்ந்துகொண்டு அவ்வப்போது அவன் இடது பக்க தொடையை தன் வலது கையினால் தடவினாள். ராஜாராமன் ஏகத்துக்கும் உஷ்ணமானான்.

நங்கநல்லூர் மெயின் ரோடு ரோஜா மெடிகல் தாண்டி இடது பக்கம் திரும்பி தன் அபார்ட்மென்ட்டை அடைந்தான். பேஸ்மென்டில் கார் பார்க் செய்துவிட்டு, லிப்டில் ஏறி மூவரும் நான்காவது மாடியில் உள்ள ராஜாராமன் வீட்டையடைந்தனர். மூன்று படுக்கையறைகளுடன் வீடு விஸ்தாரமாக இருந்தது.

ராஜாராமன் வீட்டின் கதவை உட்புறமாகத் நன்றாகத் தாளிட்டு, அவர்களை தன் பெட்ரூமிற்கு அழைத்துச் சென்றான். ஏ.சி.யை இயங்கச் செய்தான். அவன் மனைவி அங்கிருந்த புகைப்படத்தில் அவன் தோளுடன் ஒட்டி சிரித்துக் கொண்டிருந்தாள். சதீஷ் பெட்ரூம் கதவைச் சார்த்திவிட்டு அதன் மேல் சாய்ந்து நின்று கொண்டான்.

அவள் ராஜாராமனை செல்லமாக கட்டிலில் தள்ளினாள்.

பின் நிதானமாக தன் கழுத்தை உயர்த்தி வலது கை கட்டைவிரலை கழுத்தின் அடிப்பகுதியில் விட்டு மெதுவாக முன்புறம் இழுத்து தூக்க, அந்த சிலிக்கான் முக உறை கழண்டு கையுடன் வந்தது. அவன் முகத்தில் மீசையுடன் இருந்தான். தான் அணிந்திருந்த புடவை, பாவாடை, ஜாக்கெட்டை களைந்தான். உள்ளே ஜட்டி பனியன்.

அது பெண் அல்ல ஆண் என்பது புரிந்தவுடன் அதிர்ச்சியில் ராஜாராமன் உறைய, அவன் ராஜாராமனின் சட்டைப் பையிலிருந்த மொபைலை உருவி எடுத்து சதீஷிடம் கொடுத்தான். சதீஷ் தன்னிடமிருந்த பளபளக்கும் கத்தியைக் காட்டி, “ராஜாராமன் மரியாதையா உங்க வீட்டு பீரோவைத் திறந்து காண்பிங்க, எங்களுக்கு எது வேணுமோ அதை நாங்க எடுத்துப்போம்.” என்றான்.

ராஜாராமனுக்கு ஏ.சி யிலும் உடம்பு வியர்த்தது. பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது.

பீரோவைத் திறந்து காண்பித்தான். அவர்கள் அதிலிருந்த ஐம்பதாயிரம் பணம், தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், வரலட்சுமி பூஜைக்கு வைத்திருந்த வெள்ளி முகம், வெள்ளிக் கலசம், வெள்ளிச் சொம்பு, குழந்தைக்கு வாங்கிய தங்கச் செயின், தங்க கொலுசு, அரைஞான் கயிறு, பஞ்சாத்திர உத்தரணி என்று அனைத்தையும் திரட்டி அந்த வீட்டிலிருந்த ஒரு பெரிய சூட்கேஸில் எடுத்துக்கொண்டனர். எல்லாம் சேர்த்து ஒன்பது லட்சங்கள் தேறும்.

அது தவிர ராஜாராமன் அணிந்திருந்த தங்கச் செயின், வைர மோதிரம், ரிஸ்ட் வாட்ச் ஆகியவைகளையும் கழட்டச்சொல்லி வாங்கிக் கொண்டனர். பிறகு ப்ரிட்ஜை திறந்து அதிலிருந்த மாங்கோ டிராப்பிக்கானாவை மெதுவாக ரசித்துக் குடித்தனர்.

இரவு மணி ஒன்று….

சதீஷ், “அவனுக்கு மிமிக்ரி நன்றாகத் தெரியும். சினிமாவுக்கு ட்ரை பண்ணான். சான்ஸ் கிடைக்கல… இப்ப இரவு நேரங்களில் இந்த அழகிய பெண்முக சிலிகான் வேடத்தில் சினிமாவைவிட நிறைய சம்பாதிக்கிறோம். எங்கள உன் கார்ல கூட்டிகிட்டு போய் கத்திப்பாரா ஜங்க்ஷன்ல விட்டுடு… இனிமேலாவது பெண்களைப் பார்த்தா ஜொள்ளு விடாத.” என்றான்.

போகிற வழியில் ராஜாராமனின் மொபைலை சுவிட்ச் ஆப் செய்தான். பெட்ரோல் பங்க் அருகிலிருந்த போஸ்ட் பாக்ஸில் அதைப் போட்டுவிட்டு, “நாளைக்கு பத்தரை மணிக்கு முதல் கிளியரன்ஸ், அப்ப இங்க வந்து உன் மொபைல போஸ்ட்மன்கிட்ட மறக்காம வாங்கிக்க” என்றான்.

காரை நிறுத்தச்சொல்லி அவர்கள் இருவரும் சூட்கேஸுடன் கத்திப்பாரா ஜங்ஷனில் இறங்கிக் கொண்டு, பக்கவாட்டின் இருட்டில் சென்று மறைந்தனர்.

ராஜாராமன் மிகக் கேவலமாக உணர்ந்தான். தன் மனைவி ஊரிலிருந்து திரும்பிவர இன்னம் இரண்டு நாட்கள் இருக்கின்றன. அவளிடம் என்ன மாதிரியான பொய் சொல்லி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டே காரை திருப்பி தன் வீட்டை நோக்கி செலுத்தினான்.

வழியில் ஒரு அழகான பெண் தலை நிறைய மல்லிகைப் பூவுடன் நின்றுகொண்டு அவன் காரை நிறுத்தும்படி சைகை செய்தாள். அவன் பயத்துடன் ஆக்சிலேட்டரை அழுத்தி விரைந்து சென்றான். 

தொடர்புடைய சிறுகதைகள்
காளிமுத்துவுக்கு சென்னையின் பிரபல ஐடி கம்பெனியில் வேலை. நல்லவேலை, இரண்டு கை நிறையச் சம்பளம், மிகச் சுதந்திரமான வாழ்க்கை எல்லாம் சேர்ந்து காளிமுத்துவை ஆனந்தக் கடலில் மூழ்கடித்தன. சென்னையில் வாய்க்கு ருசியான உணவுகள் கிடைக்கும் ஹோட்டல்கள் என்னென்ன, எந்தப் பகுதிகளில் இருக்கின்றன என்பதெல்லாம் காளிமுத்துவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
கெளதம புத்தருக்கு சிறிய வயதில் போதி மரத்தினடியில் ஞானோதயம் ஏற்பட்ட மாதிரி, என்னுடைய சிறிய வயதில் எனக்கு பெண்களைப்பற்றிய சுவாரஸ்யமான ஆர்வம் ஒரு மாமரக்கிளையில் அமர்ந்திருந்தபோது ஏற்பட்டது என்றால் அது மிகையல்ல. அப்போது எனக்குப் பதினைந்து வயது. நெல்லை திம்மராஜபுரம் அக்கிரஹரத்தில் வீடு. ...
மேலும் கதையை படிக்க...
சிவராமனும் நானும் கடந்த பத்து வருடங்களாக கிண்டியிலுள்ள ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் எங்களது பழக்க வழக்கங்கள் நேர் எதிர். சிவராமன் ஐயிரு வீட்டுப்பையன். அவன் என்னிடம் பழக ஆரம்பித்த புதிதில், “நாங்க வெங்காயம், பூண்டு, ...
மேலும் கதையை படிக்க...
இரவு ஒன்பது மணி. பெங்களூர் சிட்டி ரயில்வே ஸ்டேஷன். மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு தயாராக நின்றது. ரகுராமன் அவசர அவசரமாக எஸ்-6 ரிசர்வ்டு பெட்டியில் ஏறி அமர்ந்தான். கரூரில் உள்ள ரகுராமனின் அக்கா பெண்ணுக்கு நாளை காலை பத்து மணிக்கு நிச்சயதார்த்தம். பெண்ணுக்கு மாமா ...
மேலும் கதையை படிக்க...
குமரேசனுக்கு சொந்த ஊர் தென்காசி. சென்னையின் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலையில் இருக்கிறான். ஒருவாரம் முன்பு புதிதாக வந்து சேர்ந்த தன்னுடைய டீம்லீடர் கவிதாவின் மீது அவனுக்கு காதல் துளிர்விட்டது. ஒரு நாளில் குறைந்த பட்சம் பன்னிரண்டு ...
மேலும் கதையை படிக்க...
கடைசி விலை
மாமரங்கள்
சூட்சுமம்
தூக்கம்
நட்பதிகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)