பக்கத்து வீட்டுக்காரன்

 

இன்ஸ்பெக்டர் எதிரில் உட்கார்ந்திருப்பவர்களை உற்றுபார்த்தார். எதை வைத்து உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் சரியில்லை என்கிறீர்கள்?

சார் எப்பவுமே அந்த ஆள் எங்களோட சுமுகமா இருந்ததில்லை. ஆனா அவங்க சம்சாரம்

கொஞ்சம் நல்லா பழகுவாங்க. ஒருவாரமா அவங்களை பாக்கமுடியலை.

அவங்க எங்கயாவது வெளியே போயிருக்கலாமில்லையா?

அவங்க எந்த விசயமுன்னாலும் அக்கம் பக்கத்துல சொல்லுவாங்க. ஊருக்கு போறத பத்தி யாருகிட்டயும் சொல்லவேயில்லை.

சரி அவசர விசயமா அவங்க வெளியூருக்கு போயிருக்க வாய்ப்பிருக்கில்லயா?.

சரிங்க சார் அப்படி இருந்தாலும் இந்த ஆள் எப்பபார்த்தாலும் வீட்டுக்குளேயே இருக்காரு.

இன்ஸ்பெக்டர் சிரித்தார். அவரு எப்ப பார்த்தாலும் வீட்டுக்குள்ளேயே இருக்காரு அப்படீன்னு நாங்க போய் கேட்கமுடியாது.

இல்லைசார், எப்பவாச்சும் வெளியே வந்தாருன்னா அந்தாளு மூஞ்சி பேயறைஞ்ச மாதிர் இருக்கு. சட்டுனு உள்ளே போயிடறாரு.

நீங்க பேச்சுகொடுத்தீங்களா?

எங்க சார், அந்த ஆள் மூஞ்சிய பாக்கறதுக்கே பயமாயிருக்கு, அப்புறம் எப்படி சார் பேச்சு கொடுக்கறது.

சரி அவர் எங்க வேலைசெய்யறாருன்னு தெரியுமா?

சார் அவர் ஏதோ பெரிய கம்பெனியில் எக்ஸ்கியூட்டிவா வேலை செய்யறதா அவங்க மிஸ்ஸ்

எங்க மிஸ்ஸ்கிட்ட சொல்லியிருக்காங்க.

சரி நான் விசாரிக்கறேன், இன்ஸ்பெக்டர் அவர்களை அனுப்பி வைத்தார்.

தலை விண் விண் என்று வலித்தது கிருபாகரனுக்கு, எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. இந்த கேள்வி அவனை உலுக்கிக் கொண்டே இருந்தது. அவள் உடல் எங்கே போனது?

திடீரென்று காணாமல் போய்விட்டது. எப்படி போயிருக்கமுடியும்?.

ஐயோ நினைத்து பார்த்தவன் தன் தலையில் அடித்துக் கொண்டான். நான் ஏன் இப்படி செய்தேன். கொஞ்ச நேரத்தில் மிருகமாகிவிட்டேன்.

கதவை திறந்து கொஞ்சம் வெளியே வரலாமென்று நினைத்தால் அக்கம் பக்கத்து வீட்டுக்கார்ரகள் என்னை விரோதி போல பார்க்கிறார்கள். இந்த முகங்களை பார்ப்பதற்கு பேசாமல் வீட்டுக்குள்ளே போய் கதவை அடைத்துக் கொள்ளலாம்.

வேண்டாம் இனி இந்த உலகத்தில் இருக்கவேண்டாம். நான் செய்த தவறுக்கு போலீசில் மாட்டிக்கொண்டு கஷ்டப்படுவதை விட இந்த உலகத்தை விட்டு சென்று விடுவது உத்தமம்.

முடிவு செய்தவன் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான்

கதவு தட்டப்பட்டது.

விலுக்கென நிமிர்ந்தான் யார் கதவை தட்டுவது? அவள் காணாமல் போனதை கண்டு பிடித்துவிட்டார்களோ?. யார் கதவை தட்டுவது?.

பயந்து கொண்டே கதவருகில் சென்றான். கதவு இப்பொழுது சற்று பலமாக தட்டப்படுகிறது.

கதவை மெல்ல திறந்தவன் அதிர்ந்தான். அவனின் மாமனார், மாமியார் நின்று கொண்டிருந்தனர். என்ன செய்வது?

அவர்கள் இவன் உள்ளே கூப்பிடுவான் என்று எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

அவன் எதுவும் பேசாமல் ஒதுங்கி நின்றான்.உள்ளே வந்த அவர்கள், எங்க மாப்பிள்ளை பொண்ணை காணோம்?

அவ பிரண்டு கல்யாணமுன்னு பெங்களூரு போயிருக்கா ! சட்டென்று வாயில் பொய் வந்து விழுந்தது.

அப்படியா ! எப்பபோனா, வீடெல்லாம் இருண்டு கிடக்கு. பட்டென்று அங்கிருந்த எல்லா சுவிட்சுகளையும் போட்டார்கள். வீட்டில் வெளிச்சம் பரவியது.

இதென்ன தொல்லை. யோசித்தான், எனக்கு தலை வலிக்குது, நான் போய் கொஞ்சநேரம் படுத்துக்கறேன், எப்படியோ அவர்கள் கேள்வியில் இருந்து தப்பித்து உள்ளே சென்று தன் அறைக்குள் தாளிட்டுக்கொண்டான்.

இவர்கள் இருவரும் தனக்குள் பேசிக் கொண்டனர். கதவு மீண்டும் தட்டும் சத்தம்கேட்டது.

மாமனார் சென்று கதவை திறந்தார்.ஆஜாபாகுவாக இருவர் நின்று கொண்டிருந்தனர். கிருபாகரன் இருக்காரா?

இப்பொழுது கிருபாகரன் அந்த ஆஜாபாகுபவானர்கள் முன் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டிருந்தான். ஓரத்தில் மாமனார், மாமியார் பயத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

மிஸ்டர் கிருபாகரன் உங்க மனைவி எங்கே?

சார் அவ பிரண்டு மேரேஜூன்னு பெங்களுர்ரு போயிருக்கா.

எப்ப போனாங்க?

ஒரு வாரம் ஆச்சு,

கரெக்டா சொல்லுங்க, எப்ப போனாங்க, எதுல போனாங்க, டிரெயினா, பஸ்ஸா?.

சார் எதுக்கு இப்படி எல்லாம் கேக்கறீங்க? என் வீட்டுல வந்து என்னை இப்படிகேள்வி கேட்கறது நல்லாயில்லை. நான் ஒரு மரியாதையான குடும்பத்தை சேர்ந்தவன்.

அதுனாலதான் இவ்வளவு நேரம் மரியாதையா கேள்வி கேக்கறோம்.

அவனுக்கு ஞாபகம் வந்தது, அன்று நடந்த சண்டை. அந்த நாளில் அவள் பெங்களூரு சென்றதாக சொன்னான்.

எத்தனை மணிக்கு போனாங்க? பஸ்ஸா டிரெயினா, இல்லே நீங்க டிரையின் ஏற்றிவிட்டு வந்தீங்களா?

அன்று சண்டை நடந்த பொழுது இரவு பத்துமணிக்கு மேல் இருக்கும். அதை ஞாபகம் வைத்து மணியை சொன்னான். அதனால் தோராயமா பத்து இருக்கும். பஸ்ஸா டிரெயினா தெரியாது, வீட்டை விட்டு கிளம்பும் போது பத்துமணி இருக்கும்.

போய் ஒருவாரம் ஆச்சே?, இது வரைக்கும் உங்களுக்கு போனே பண்ணலையா? இல்லே நீங்களாவது போன் பண்ணி விசாரிச்சிங்களா?

இல்ல அவங்களும் போன் பண்ணலை. நானும் போன் பண்ணி கேட்கலை.

ஏன் உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா?

இவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆமாம் என்று சொன்னால் எதற்கு என்பார்கள். இல்லை என்று சொன்னால் அப்புறம் ஏன் போன் பண்ணவில்லை என்று கேட்பார்கள். யோசித்தான்.சொல்லுங்கள் அவர்களின் குரலில் கோபம் தெரிந்தது.

இவன் மெல்ல இல்லை என்றான். அவன் எதிர்பார்த்த கேள்வியைகேட்டார்கள்.

இவன் அப்படியே நின்றான். அவர்கள் கிருபாகரன் அன்னைக்கு உங்க மிசஸ் ஊருக்கு போகலை, ஏன்னா அந்த நேரத்துல உங்க மிசஸ் வெளியூரோ இல்லை பெங்களூருக்கு பஸ்ஸுலயோ போகலை. நாங்க எல்லா இடத்துலயும் விசாரிச்சுட்டோம். நீங்க உண்மையை சொல்லிட்டா நல்லாயிருக்கும்.

அடுத்த அரைமணி நேரத்தில்…!

கிருபாகரன், அவன் மனைவியுடன் வாய் வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சட்டென்று கையில் கிடைத்த ஒரு கட்டையை எடுத்து வீசிவிட்டான் அது சட்டென்று அவள் நெற்றியை தாக்கி அவள் அப்படியே சுருண்டு விழுந்துவிட்டாள். பதறிப் போனவன் ஒடி வந்து அவளை எழுப்ப முயற்சித்துள்ளான். ஆனால் எந்த அசைவும் அவளிடம் காணப்படாததால் மூக்கில் கை வைத்து பார்த்திருக்கிறான். மூச்சு வருவது போல தெரியவில்லை.

நான் கொலை பண்ணி வீட்டேனா? அப்படியே பயந்து நடுங்கி தரையில் உட்கார்ந்துவிட்டான்.

ஒரு மணி நேரம் அப்படி இருந்தவன் சட்டென்று முடிவு செய்தான். பின்புறம் இருக்கும் தோட்டத்தில் புதைத்து விடலாம் முடிவு செய்தவன் பின்புறம் போய் பார்த்திருக்கிறான். ஒரு ஆளை புதைக்கும்அளவுக்கு குழி எடுக்க முடியும் என்று முடிவு செய்து விட்டு கடப்பாறையை தேடி எடுத்தான்.

கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் ஆனது குழி எடுத்து முடிய. அப்படியே சோர்ந்து உடலெல்லாம் வேர்த்து ஒழுகி உள்ளே மனைவியின் உடலை எடுத்து செல்ல உள்ளே வந்தான்..

ஆனால் அந்த இடத்தில் அவள் உடல் காணவில்லை. அதிர்ச்சி அடைந்து விட்டான். பைத்தியம் பிடித்தது போல் சுற்றும் முற்றும் தேடி தேடி பார்த்து அப்படியே மயங்கி விழுந்துவிட்டான்.

எப்பொழுது விழித்தான் என்று தெரியவில்லை. எழுந்து வெளியே வந்தவன், மீண்டும் கதவை மூடிவிட்டான். கதவை திறக்க பயந்து உள்ளுக்குள்ளே பதுங்கிக் கொண்டான். பின்புறம் போய் குழி எடுத்த மண்ணை கொட்டி மீண்டும் குழியை மூடினான். மீண்டும் வந்தவன் ஷவரை திறந்து தலையில் நீர்வழிய குளித்தான்.

என்னவாயிற்று உடல்? எப்படி காணாமல் போகும்?, இந்த கேள்வி அவனை இந்த ஒரு வாரமாய் படாத பாடுபடுத்திக் கொண்டிருந்தது.

அனைத்தையும் சொல்லிவிட்டு கதறி அழுதான் கிருபாகரன். சார் நான் வேணுமின்னே கொல்லனுமுன்னு நினைக்கலைசார். கோபத்துல கட்டைய எடுத்து எறிஞ்சேன். அது படாத இடத்துல பட்டு அப்படியே சுருண்டு விழுந்துட்டா. ஆனா சத்தியமா அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியலை. என்னைய நம்புங்க சார், தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

அரைமணி நேரம் அழுதுஅழுது ஓய்ந்தான். அதுவரை அமைதியாக இருந்த அவர்கள் இருவரும் மெல்ல எழுந்து உங்களை இப்பகொலை முயற்சின்னு கைது பண்ணறோம். அவனை நெருங்கினர்.

அப்படியானால்..அப்படியானால் அவன் திகைத்து அவர்களை பார்த்து கொண்டிருந்த பொழுது அவன் மனைவி உள்ளே வந்து அவர்கள் பெற்றோர் அருகில் போய் நின்றுகொண்டாள்.

இவன் அவள் இறந்துவிட்டாள் என்று பின்புறம் சென்று குழி எடுத்து கொண்டிருந்த பொழுது மயக்கம் தெளிந்து எழுந்த மனைவி பின்புறம் குழி பறித்து கொண்டிருப்பதை பார்த்தாள். தன்னை புதைக்கத்தான் ஏற்பாடு செய்கிறான் என்று உணர்ந்து கொண்டவள் சத்தமில்லாமல் டேபிள்மேல் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். அந்த வழியாக வந்த ஆட்டோவை பிடித்து பஸ்ஸ்டாண்டிற்கு சென்றாள் அரைமணி நேரத்தில் அவள் ஊருக்கு செல்லும் பஸ்ஸில் ஏறிவிட்டாள். இவன் அவள் உடலை காணவில்லை என்றுதான் தேடிக்கொண்டிருந்தானே தவிர டேபிளின் மேல் வைத்திருந்த பணம் அங்கு இல்லை என்று உணர தவறிவிட்டான். உணர்ந்திருந்தால் அவள் உயிரோடு இருப்பதை ஊகித்திருந்திருப்பான்.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட அவர்கள் பெற்றோர் இரண்டு மூன்று நாட்கள் கலந்துபேசி அவன்மீது போலீஸ் புகார் கொடுக்க சென்றனர். அப்பொழுது பக்கத்து வீட்டார் கொடுத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்க ஆரம்பித்திருந்த இந்த ஊர்போலீஸிற்கு இவர்கள் கொடுத்திருந்த புகார் கவனத்திற்கு வந்தது. நேராக அவர்களிடம் வந்து இவர்கள் இருவரை அவன் வீட்டிற்குள் நுழைய ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் போலீஸ் நுழைந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
எங்கும் புகை மண்டலம், திடீர் திடீரென்று சீறிக்கொண்டு செல்லும் குண்டின் சத்தம், திடீரென்று பெரும் சூறாவளி சத்த்த்துடன் தலைக்கு மேல் பறந்து சென்று “டொம்” என்று விழுந்து பெரும் சத்தத்துடன் வெடிக்கும் பீரங்கி குண்டுகள். இடை இடையே தட தவென ஓடி ...
மேலும் கதையை படிக்க...
சங்கர், சங்கர் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்த சியாமளா அங்கு ரகு மட்டும் உட்கார்ந்திருப்பதை பார்த்து ஒரு நிமிசம் தயங்கினாள். ரகு அவளை வெற்றுப்பார்வையாய் பார்த்துக்கொண்டிருந்தான். இவள் மெல்ல தயங்கி சங்கர் இல்லையா? ஏன் சங்கர்தான் வேணுமா? அவன் குரலில் கேலியா, கிண்டலா தெரியவில்லை. சங்கர் என்னைய ...
மேலும் கதையை படிக்க...
ஒரு மரத்தில் ஆண் காகம் ஒன்றும் பெண் காகம் ஒன்றும் தன் குஞ்சுகளுடன் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள நகரத்துக்கு வந்து, கிடைக்கும் உணவை உண்டு மாலை ஆனதும் தனது கூட்டுக்கு சென்றுவிடும் கூடவே குஞ்சுகளையும் கூட்டிக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் ஒரு சிறு வயது குடியானவன் வாழ்ந்து வந்தான். அவன் கொஞ்சம் புத்திசாலி. அவன் வீட்டில் ஒரு பசு மாட்டை வளர்த்து வந்தான். அந்த பசு மாட்டில் பால் கறந்து வீடு வீடாய் சென்று பால் ஊற்றி தானியங்களை அதற்கு ...
மேலும் கதையை படிக்க...
என் பையனை அடிச்சவன் நல்லாவே இருக்க மாட்டான், நாசமாத்தான் போவான். அந்த பெண்ணின் கையை பிடித்து அமைதிப்படுத்திக்கொண்டிருந்தார் அவள் கணவர். பேசாம இரு, அதான் வக்கீல் நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டாருல்லை, அவங்க இரண்டு பேரும் என்னமா அடிச்சு போட்டிருக்காங்க என் பையனை.அவகிட்ட இவன் போனான்னா ...
மேலும் கதையை படிக்க...
சண்டை
மறுபக்கம்
காக்கையின் அருமை
குடியானவனின் யோசனை
சிலர் இப்படியும் காப்பாற்றுவார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)