தென்றல் வரும் நேரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்  
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 29,127 
 

சிவானி, வாசலில் கோலம் போட்டு முடித்தபின் .கேட்டை மூடிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். பின்னாலேயே கேட் திறக்கும் சப்தம் கேட்டு நிலைவாசல்படியிலேயே நின்று திரும்பிப் பார்த்தாள். சூட்கேஸை இழுத்துக்கொண்டு ஒருவன் வந்துகொண்டிருந்தான். இவ்வளவு அதிகாலையில் யார் வருவது என சிவானி யோசித்தாள். அங்கேயே நின்றுகொண்டு “யார் நீங்கள்? யாரைப் பார்க்க வேண்டும்?” என வினவினாள்.

வந்தவன், “ம்ம் எல்லாம் என் நேரம். ஜெயம் அம்மாள் இருக்காங்களா? அவங்களுக்காவது என்னை அடையாளம் தெரிகிறதா பார்ப்போம்” என்றான். சப்தம் கேட்டு உள்ளிருந்து வந்த ஜெயம்,.”அடேய்! வாடா உள்ளே! என்ன அவளிடம் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறாய்?” என்றவள்: “சிவானி! உள்ளே போய் காஃபி ரெடி பண்ணு. அப்படியே கமலியையும், கணேஷையும் “கண்ணன் வந்திருக்கிறான்” என்று சொல்லி எழுப்பிவிடு” சொல்லியபடி அவன் கைகளைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாள்.

ஓ! இவர் இந்த வீட்டு பெரிய பையனா? வெளியூரில் வேலையில் இருப்பதாகச் சொன்னார்களே! அவராக்கும். என சிந்தித்தபடியே சிவானி தன் வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்ய ஆரம்பித்தாள்.

“யாரம்மா இந்த மஹாராணி? வாசலை அடைத்துக் கொண்டு யார் நீங்கள் எனக் கேட்டது?”

அதுவா? எனக்கு உதவிக்காக வந்திருக்கிறாள். பெயர் சிவானி. நல்லா சமயல் பண்ணுகிறாள். சமத்தான பெண். அப்புறம், சந்தியாவுக்கு போன் பண்ணியிருக்கிறேன். இப்ப வந்துவிடுவாள். அப்பாவும் நாளைக்கு காலையில் வந்துவிடுவார்.

ஜெயத்திற்கு அண்ணன் மகள்தான் சந்தியா. அத்தையான ஜெயத்தின் வீட்டிலேயேதான் வளர்ந்தாள். அங்கிருந்தபடியே படிப்பை முடித்தாள். அவ்வப்போது அடுத்த தெருவிலிருந்த தன் அம்மா, அப்பாவைப் பார்க்கப் போவாள். பெரியவர்கள் எல்லோருக்குமே அவளை கண்ணனுக்கு மணம் செய்வித்துவிட விருப்பமாயிருந்தது..

சனிக்கிழமையன்று வீடு விழாக்கோலம் கொண்டுவிட்டது சந்தியா மிகவும் கலகலப்பான பெண். அவளுடன் கமலி, கணேஷ், கண்ணன், அத்தை எல்லோருமே சீட்டு விளையாட உட்கார்ந்துவிட, சிவானி அவர்களுக்கு காஃபி, நொறுக்குத்தீனி எல்லாம் அவ்வப்போது சப்ளை பண்ணிக்கொண்டிருந்தாள்.

கண்ணன் ஆங்கிலத்தில் “இவள் பார்ப்பதற்கு அழகா இருகிறாள். வேலை செய்ய வந்தவள் மாதிரியே தெரியலை. ஏதோ மஹாராணி விருந்தினரை உபசரிக்கிற மாதிரி நமக்கு எல்லாத்தையும் கொண்டுவந்து தருகிறாள்.” என்றான். அதனைக்கேட்ட எல்லோரும் நகைக்க ஆரம்பித்து விட்டனர். “அங்கே பார் அண்ணா சிவானியை” கமலி சொல்ல கண்ணன் திரும்பி சிவானியைத் தேடினான். கையில் முறுக்குத் தட்டுடன் சுவற்றோடு ஒட்டிக்கோண்டு வெட்கத்துடன் நின்ற சிவானி, தட்டை அங்கேயே வைத்துவிட்டு அவ்விடம் விட்டு ஓடினாள்.

சந்தியா! அண்ணன் இப்படி வேறொரு பெண்ணைப் புகழ்வதனால் உனக்கு கோபம் வரலயா? கணேஷ் கேட்டான். “ஏன் வரனும்? நானே சிவானி குறித்து அப்படி சொல்லலாமுன்னு நினைத்தேன்.”

“அண்ணா! சிவானி இப்போ போஸ்டலில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருகிறாளாக்கும். அவளுக்கு புரியாதுன்னு ஆங்கிலத்தில் பேசுகிறாயா?”

அப்ப அவள் மஹராணிதான் அப்படீன்னு சொல்ல வரியா கண்ணா? ஜெயம் சிரிக்க குடும்பமே சிவானியை கலாய்த்து ரசித்துக்கொண்டிருந்தது.

அந்த சமயம் வாசலில் சிவானி! என்றழைக்கும் குரல் கேட்டது. சிவானியின் பாட்டி தனம்தான், சிவானியின் அந்த மாதத்து சம்பளத்தை வாங்கிச் செல்ல வந்திருந்தார்கள். மணிமாமா ஒருநாள், “சிவானியின் பாட்டியை நேரில் பார்த்து சிவானியை இப்படி கெட்டிக்காரப் பெண்ணாக வளர்த்திருப்பதற்குப் பாராட்டவேண்டும். ஆனால் அவர்களை ஒருமுறைகூட பார்க்க முடியவில்லையே.” என்று சொல்லிக்கொண்டிருந்தது சிவானிக்கு நினைவுக்கு வந்தது. சொல்லிவைத்தாற்போல இப்படி மாமாவைப் பாட்டி பார்க்கமுடியாமல் போனது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. நாளைக்குதான் மாமா வர இருக்கிறார்கள்.

சிவானியின் அப்பா நோய்வாய்ப் பட்டதும், அவரை கவனித்துக்கொள்ளவே சிவானியின் தாய் பாக்கியத்திற்கு நேரம் சரியாகிப் போனதால், அந்த குடும்பமே தத்தளித்துக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு அவர்கள் தெருவுக்கு புதிதாக குடிவந்திருந்த ரௌடி ஒருவன் சிவானிக்கு அவ்வப்போது தொல்லை கொடுத்துவந்தான். அவர்கள் எல்லோருக்குமே சிவானியைப் பாதுகாப்பது மட்டுமே மிக முக்கியமாகப் பட்டது. தனம், தன் மருமகள் பாக்கியத்திடம் யோசனை கேட்டார்கள். மணி, ஜெயம் தம்பதியினர் வீட்டிற்கு ஒத்தாசைக்கு ஒரு நல்ல பெண் தேவை என கேள்விப் பட்ட விபரத்தைச் சொன்னார்கள். சிவானி, அங்கு வீட்டோடு பாதுகாப்பாக இருந்துகொள்ளட்டும். தபால் வழியாகப் படிப்பதற்கு ஒத்தாசை செய்வதாகவும் சொல்கிறார்கள். அவர்கள் பெரிய பையனுக்கு விவாகம் நடக்கப்போகிறதாம். அதனால் அவசரமாக வேலைக்கு ஆள் தேடிக்கொண்டு இருக்கிரார்கள்.

பலமான யோசனைக்குப் பிறகுதான் பாக்கியம் சரி சொன்னார்கள். சிவானி வேலைக்கு வந்து ஓரிரு மாதங்களே ஆனபோதும், அவள் அந்த குடும்பத்தில் ஒருத்தியாகவே ஆகிவிட்டாள். எல்லாவற்றிற்கும் சிவானிதான். அந்த அளவு அவள் அக்குடும்ப வேலைகளையெல்லாமே விருப்பமுடன் தன் கையில் எடுத்துக்கொண்டாள்.. கமலியும், கணேஷும் அவளுக்கு பாடங்கள் சொல்லித்தருவதில் ஆர்வம் காட்டினர். அவளுடைய வருமானம், அப்பாவின் மருந்து செலவுக்கும், சாப்பாட்டு செலவுக்குமே சரியாகப் போனது. அதனால் கண்ணனின் திருமணம் முடிந்ததும், வேறு வேலைக்கு முயற்சி செய்யும் எண்ணம் சிவானிக்கு இருந்தது. அதனை அவ்வப்போது ஜெயத்திடம் கூறி வந்தாள். ஜெயம், அவளுக்கு சம்பளத்தை ஏற்றிக்கொடுத்து அவளைத் தன்னிடமே இருத்திக்கொள்ள முடிவு செய்திருந்தார்கள்.

இவ்வாறு நிலைமை இருக்கையில், ஒரு நாள், சிவானி; கமலியின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அந்த அறை கமலிக்கும், சந்தியாவுக்குமானது. அப்பொழுது, அவசரமாக சந்தியா அவ்வறைக்குள் நுழைய பின் தொடர்ந்து கண்ணனும் வரவே, சிவானி வெலவெலத்துப் போனாள். அவர்கள் பேச ஆரம்பிக்கும் முன், சத்தமாக கனைத்துக் கொண்டு, “நான் இங்கு இருக்கிறேன்” என்று அறிவித்தாள்.

அதனைக் கேட்ட சந்தியா வாயைப் பொத்திக்கொண்டு சத்தமில்லாமல் சிரிக்கவே, கண்ணன்; “இந்த மஹாராணியை சாட்சி வைத்துக்கொண்டு நாம் பேசலாம்.” என்றான். “சரி கண்ணா!”. என சந்தியாவும் சொல்ல, சிவானி, அங்கிருந்து போய்விட எத்தனித்தாள். கண்ணன்,”அவ்வளவு சீக்கிரமாக இங்கிருந்து தப்பித்துச் செல்ல முடியாது மஹாராணி. இதில் அமருங்கள்.” என அங்கிருந்த ஒரு நாற்காலியைக் காட்டினான்.”ம்” என அவன் ஒரு அதட்டும் போடவே சிவானி நடுங்கியவாறு அவன் சொன்னபடி அந்த நாற்காலியின் நுனியில் அமர்ந்து கொண்டாள். கண்ணனும், சந்தியாவும் பேச ஆரம்பித்தார்கள்.

இப்பொழுது என்ன செய்வது? நிலைமை மோசமாகப் போவதற்குள் மாதவனைப் பற்றி மாமாவிடம் சொல்லிவிடு கண்ணன்.

ஏன் நீயே சொல்லேன். உன் விஷயம். நீதான் சமாளிக்கனும்.

அப்போ நான் உன்னையே கல்யாணம் செய்துகொள்கிறேன் கண்ணா.

ஐயய்யோ. சந்தியா!

பின்னே என்ன? இதை நம் இருவரின் விஷயமாகப் பாரேன்.

எப்ப சொல்ல?

அப்படி வா வழிக்கு. இப்பவே .சொல்லிவிடு.

சந்தியா! இந்த மஹாராணியை தூது அனுப்பிவிடலாமா?.

முயற்சி செய் கண்ணா.

சிவானிக்கு கொஞ்சம் யூகிக்க முடிந்தது. அதனால், அவசரம் அவசரமாக, “மஹாராணி தூது செல்லவது வழக்கமில்லை. அரசவை இத்துடன் கலைந்தது” என சொல்லிவிட்டு எழுந்து கொண்டாள். கண்ணன், ஆச்சரியத்திடன் பார்திருக்க, சிவானி, அவ்விடம் விட்டு வேகமாகப் போய்விட்டாள்.

அடுப்படிக்குச் சென்ற சிவானி; உள்ளுக்குள் மகிழ்ச்சியுடன் தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் மகிழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர்களிடமிருந்து சமயோசிதமாக தப்பிக்க முடிந்த தன் கெட்டிக்காரத்தனத்தை எண்ணி. மற்றொரு காரணம் அவளுக்கே புரிந்தும். புரியாத ஒன்றாக இருந்தது. ஒருவாரத்துக்குப் பிறகு அந்த மாதவன் தன் குடும்பத்தினருடன் சந்தியாவைப் பெண் பார்க்க என்று ஜெயத்தின் வீட்டிற்கு வந்திருந்த போது அவனைப் பார்த்த சிவானி அதிர்ச்சி அடைந்தாள்.. சந்தியாவின் பெற்றோரும் அங்கிருந்தார்கள். மாதவன் பற்றிய செய்தியை யாரிடம் சொல்வது எனவும், சொல்வதா கூடதா என்ற பரிதவிப்பும், அவளுக்கு மன குழப்பத்தைத் தந்தது.

விருந்தினர்கள் எல்லோரும் விடைபெற்றுப் போனபின்பும், மற்ற சொச்ச வேலைகளை குழப்பத்துடனேயே கவனிக்க ஆரம்பித்தாள். மாடியில் துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்த போது, அருகில் கண்ணன் வந்து நின்றதைக் கவனிக்காமல் அனிச்சையாக செயல்பட்டுக்கொண்டிருந்தாள்.

மஹாராணி! குரல் கேட்டு திரும்பினாள். “எந்த கோட்டையைப் பிடிக்கத் தீவீர யோசனையாம்?”

வந்து.. வந்து..நான் ஒரு விஷயம் உங்களிடம் சொல்லலாமா..வேண்டாமா.. என்றுதான்..யோசித்துக் கொண்டிருந்தேன்.

தாராளமாக சொல்லலாம். .உங்கள் சித்தம் என் பாக்கியம் மஹாராணி.

இப்படி கிண்டல் செய்தால் நான் சொல்லப் போவதில்லை..

சரி சரி. சொல்.

ஒரு காலத்தில்…

முன்னொரு காலத்திலா? திரேதா யுகத்திலா?

போங்கள். நான் கல்லூரியில் பி.ஏ படித்துக்கொண்டிருந்த போது..

அப்போ போன வருடம்..

ஆமாம். இந்த மாதவன், அளவுக்கு மீறி ஒரு பெண்ணை கேலி செய்ததால், அவளிடம் அறை வாங்கினான்.

“அவனுக்கு அறை கொடுத்த அந்த பெண் நீதான் என்று எனக்குத் தெரியும்.”

“எப்படி?”

“நீ இப்ப சொன்னதை வைத்தும், அன்று மாதவன்; உன்னைப் பார்த்ததும் தன் கன்னத்தை தடவிக்கொண்டதை வைத்தும்தான்.”

கண்ணனிடம் தன் மன பாரத்தை இறக்கி வைத்த பிறகு அவளுக்கு ஓரளவு நிம்மதி ஏற்படவே செய்தது. தன் முக்கிய கடமையை நிறைவு செய்து விட்ட திருப்தியில் அவள் இருந்தாள். ஆனாலும் கல்யாண வேலைகள் தொடர்ந்து நடைபெற்றபடி இருந்தது அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

சந்தியா கணவன் வீட்டிற்கு சென்று விட்டாள். அவளுடைய கலகலப்புப் பேச்சுக்கள் அந்த வீட்டில் ஒலிக்காத காரணத்தினால் அங்கு வெறுமை சூழ்ந்தது. கண்ணனும் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டான். கமலியும் கணேஷும் வரப்போகும் தேர்வுக்காக படிப்பில் முழு கவனம் செலுத்திபடி இருந்தார்கள். சிவானிக்கும் தேர்வு நெருங்கியதனால் ஒழிந்த நேரத்தில் தன்னுடைய தேர்வுக்கான புத்தகங்களை எடுத்துப் படித்துவரலானாள்.. அவ்வப்போது, ஜெயத்திடம் தனக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தர வேண்டுகோள் விடுத்தபடி இருந்தாள்.

அந்த சமயத்தில் சந்தியா முழுகாமல் இருக்கும் செய்தி வர, வீடு மறுபடி உயிரோட்டம் பெற்றது. மசக்கைவாந்தியும் மயக்கமும் படுத்திவந்ததால் சந்தியா படுத்த படுக்கையானாள். ஜெயமோ, சந்தியாவின் அம்மாவோ அவளுக்கு துணையாக சம்பந்தி வீட்டில் அவர்களோடு போய் இருக்க முடியாது என்பதனால், சிவானியை அனுப்ப முடிவு செய்தனர்.

“சம்பளம் உயர்த்திக் கேட்டாயே சிவானி, நீ கேட்டதைவிட அதிகமாக கொடுத்துவிடுவேன். சிவானி! உன்னைவிட அந்தப் பெண்ணை யார் நல்லா கவனித்துக் கொள்ள முடியும்?” என ஜெயம் கேட்டார்கள்.

சந்தியாவை நம் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுங்கள் அம்மா. நான் நல்லா பார்த்துக்குவேன். இல்லாவிட்டாலும், சந்தியாவின் பெற்றோர் வீட்டில் கூட சந்தியா வந்து இருந்தாலும் நானும் அங்கு தங்கிக் கொண்டு பார்த்துக்குவேன். சம்பளஉயர்வு எல்லாம் சந்தியாவைப் பார்த்துக் கொள்வதற்காகவா நான் கேட்கப் போகிறேன் அம்மா?

ஏன் அப்படி சொல்கிறாய் சிவானி.? சந்தியாவின் மாமியார் மாமனார் ரொம்ப நல்லவர்கள். உனக்கு அனுசரணையாக இருப்பார்கள். நானும் அவ்வப்போது அங்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்.

இல்லை. அம்மா இது சரிவரும் என்று எனக்குத் தோன்றவில்லை. வற்புறுத்தாதீங்க அம்மா.

சிறிது நாட்களிலேயே சந்தியா மிக மோசமான நிலைமையில் இருப்பதாக செய்தி வரவே அனைவரும் சிவானியையும் அழைத்துக்கொண்டு அங்கு போனார்கள். சந்தியா அவள் பெற்றோர் வீட்டிற்கோ; அத்தையான ஜெயத்தின் வீட்டிற்கோ வந்து இருக்க மறுத்துவிட்டாள்.. மாதவனிடம் அவள் கொண்டிருந்த அதீத காதல் காரணமாக அவனைப் பிரிய மறுத்து அவள் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்பதனால் அவளை வற்புறுத்துவதற்கு பதிலாக சிவானியை அங்கு தங்க வற்புறுத்தி தங்கும்படி செய்தனர்.

ஒரு வாரம் வரை நாட்கள் நல்லபடியாக நகர்ந்தன. ஒரு நாள் சந்தியாவுக்காக கஞ்சி தயாரித்து எடுத்துக்கொண்டு அவள் அறைக்குப் போனாள். சந்தியாவுக்குப் பக்கதில் அவள் மாமியாரும், மாதவனும் அமர்ந்திருந்தனர்.

மாதவன் சொன்னான் “அம்மா! இந்தப் பெண் நல்லா சமைப்பாளாம். அங்கு எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்வாள் என ஜெயம் மாமி சொன்னார்கள். இங்கு வருவதானால் இரட்டிப்பு சம்பளம் வேண்டும் என்று சொல்லிவிட்டாளாம். நாளையிலிருந்து நீ அடுப்படிக்குப் போக வேண்டாம்..உன் சமையல் வர வர வாயில் வைக்க முடியாமல் போகிறது.”

சிவானி, சந்தியாவைப் பார்த்தாள். அவளோ மாதவனை குறு குறுவெனப் பார்த்துக்கொண்டிருந்தாள். காதல் கண்ணை மறைக்கிறது என நினைத்த சிவானி; அன்று முதல் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பித்தாள். கூடவே சந்தியாவைக் கவனிப்பதில் அதிக கவனத்துடன் இருந்தாள். சந்தியாவுக்கு வாந்தி, மயக்கம் நின்றபாடில்லை. அவ்வப்போது கஞ்சி, மாதிரைகள், மருந்துகள் இத்யாதி இத்யாதி. கணவனான மாதவன் சந்தியாவின் ஆரோக்கியத்தில் எல்லாம் அக்கரை செலுத்துபவனாக இல்லை.என அவளுக்குப் புரிந்தது. என்ன ப்ரயோஜனம்? யார்யாருக்குப் புரியனுமோ அவர்களுக்கெல்லாம் புரியவில்லையே என சிவானி ஆதங்கப்பட்டாள்.

மொட்டை மாடியில் ஒரு அறை எப்போதும் பூட்டியே இருந்ததை சிவானி வந்த அன்றே கவனித்தாள். மாடிக்கு துணிகள் காயவைக்கச் செல்லும் போதெல்லாம், அங்கிருந்து ஏதேதோ சப்தங்கள் வரவே அது குறித்து சந்தியாவிடம் தெரிவித்தாள். சந்தியா மாதவனிடம் கேட்க, அவன், சமயம் வரும் போது சொல்கிறேன் என பதில் கூறினான்.

அன்றிரவே, பயங்கரமான ஒரு நிகழ்வு அந்த வீட்டில் நடந்தது .சந்தியாவுக்கு சாப்பாடு, மருந்து மாத்திரைகள் எல்லாம் கொடுத்துவிட்டு பத்தரை மணிக்கு அடுப்பங்கரைக்கு வந்து, தன் பாயை விரித்துப்போட்டு படுத்தவள், ஐயோ ஐயோ என சந்தியா அலறும் சப்தம் கேட்டு கதவைத் திறந்துகொண்டு; சந்தியாவின் அறைக்கு ஓட்டமாக ஓடினாள். அங்கே தலைவிரி கோலமாக ஒரு புதியவள், சந்தியாவைப் பிடித்துக்கொண்டு அவள் கன்னத்தில் அறைந்துகொண்டும் கீறிக்கொண்டும் இருப்பதையும்; மாதவன், அவளை விடுவிக்க முயற்சி செய்துகொண்டிருப்பதையும் பார்க்க நேரிட்ட அவளுக்கு தலையை சுற்றிக்கொண்டு வந்தது. சமாளித்துக்கொண்டு அவளும் சேர்ந்து அவளை சந்தியாவிடமிருந்து விலக்கிவிட்டாள். மாதவன் அந்தப் பெண்ணை இரு கைகளையும் பின்னால் கட்டி இழுத்துக்கொண்டு மாடியை நோக்கிச் சென்றான்.

சந்தியாவை ஆசுவாசப் படுத்தி, தண்ணீர் குடிக்கச் செய்துவிட்டு “,நீ அமைதியாக இரு. நான் மாடிக்குச் சென்று பார்த்துவிட்டு வருகிறேன்.” என சொல்லிவிட்டு மாடிக்கு சென்றவள், அங்கு மாதவன் அந்த பெண்ணிடம் கூறிக்கொண்டிருந்த விஷயத்தைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தாள். “நான் உன்னிடம் என்ன சொல்லி கதவைத் திறந்துவிட்டேன்? சந்தியா அறையிலிருந்து ஒரு பெண் வெளீயில் போவாள். அந்த பெண்ணைக் கன்னத்தில் அறைந்து கீறிவிடச் சொன்னேன். நீ சந்தியாவை ஏன் அப்படி செய்தாய்? உனக்கு முத்தம் கிடையாது போ”

“நாளைக்கு நீ சொன்னபடி செய்யறேன் அத்தான்” சரியா? அந்த பெண்ணின் பதிலைக் கேட்ட சிவானிக்கு தலையைச் சுற்றிக்கொண்டுவந்தது.

“அடக்கண்றாவியே” என்று நினைத்த சிவானி; அந்த வீட்டைவிட்டு சீக்கிரமாக வெளியேறிவிட உறுதி செய்து கொண்டாள். கீழே வந்து சந்தியாவை சந்தித்த அவள், மாடியில் ஒரு பெண் இருக்கிறாள். என்று மட்டும் கூறிவிட்டு எல்லாம் மாதவன் பார்த்துக் கொள்வார். நீ தூங்குவதற்கு முன் கதவை மறக்காமல் தாள் போட்டுக் கொள் என்று சொன்னாள். பிறகு அடுப்படி சென்று தூங்க முயற்சி செய்தாள். வெகுநேரம் வரை படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். சந்தியாவைக் குறித்து அவளால் எதுவும் செய்ய முடியாத கவலை அவளைப் பெரிதும் கலக்கமடையச் செய்தது.

மறுநாள் காலை சிவானி யோசித்தபடியே வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். எட்டுமணி இருக்கும் வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள். என்ன ஆச்சரியம்! ஜெயம் அம்மா காரிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்கள்..அவளுக்கு ஓடிப்போய் அவர்களைக் கட்டித் தழுவிக்கொள்ள வேண்டும் போல இருந்தது. சின்னஞ்சிறிய பெண்ணான அவளுக்குதான் எத்தனை எத்தனை சோதனைகள்? நல்ல ஆத்மாக்களுக்கு சோதனைக் காலங்களில் தெய்வம் வந்து துணை நிற்கும் என்பார்களே! அது மாதிரி ஜெயம், அவளுக்குத் தெய்வமாகத் தோன்றியதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் மாதவன், சிவானிதான் ஃபோன் பண்ணி அவர்களை வரவழைத்துவிட்டதாக எண்ணினான். அவன், இந்த சிவானிதான் உங்களுக்கு ஃபோன் பண்ணினாளா? என அவர்கள் வந்ததும் வராததுமாக கேட்கவே, ஜெயம் என்ன ஏது என்று அவனிடமே குறுக்கு விசாரணை செய்யும்படி ஆயிற்று.. ஜெயம்அம்மா சந்தியாவை பிரசவம் ஆகும்வரை தங்கள் வீட்டிற்கு அழைத்துப் போக விரும்புவதாக சொல்ல; சிவானிக்கு சிறிது நிம்மதி ஏற்பட்டது .மாடி அறையில் பூட்டி வைக்கப்பட்டிருப்பது; மருத்துவத்திற்கு கட்டுப் படாத மன நோயாளியான தன் தங்கை என அவன் சொன்ன போது சிவானி உள்ளுக்குள் வெகுண்டாள்.

ஜெயம் தன் அண்ணன் மகளை தன் மகள் போலவே வளர்த்து வந்ததினால், அவள் குறித்து மிகவும் கவலை அடைந்தார்கள். சந்தியாவின் பெற்றோருக்கு சந்தியா ஒரே மகள் மட்டுமே. அதனால், ஜெயம், அவளைத் தன் பிள்ளைகளுடன் கலகலப்பாக இருக்கட்டும் என்று தன். வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டார்கள். சிவானி, அவளை மிக நன்றாக கவனித்துவரலானாள். சந்தியாவின் உடல்நலனை ஓரளவு தேற்ற முடிந்தது. மனம்? “இப்படி ஒரு தங்கை தனக்கு இருக்கிறாள் எனறு என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டாரே” என அவள், சிவானியிடம் சொல்லி அடிக்கடி ஆதங்கப்பட்டபோதெல்லாம், “சந்தியா! உனக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது.” என அவள் நினைத்துக்கொள்வாள்.. சந்தியா பிள்ளை பெறும்வரை, மாதவன் பற்றிய தன் சந்தேகத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என அவள் முடிவு செய்துகொண்டாள்.

சந்தியாவின் வளைகாப்பிற்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தன. எப்போதும் போலவே அந்த விழா இனிது நடை பெற சிவானி மிகுந்த ஒத்தாசையாக இருந்து ஜெயத்தின் பாராட்டைப். பெற்றுக்கொண்டாள். கண்ணனுக்கு விடுமுறை கிடைக்காததனால் விழாவுக்கு வரவில்லை.

எல்லா விருந்தினர்களும் விடை பெற்றுக்கொண்டு போனவுடன், சிவானி ஜெயத்தை அணுகி,, தான் வேறு வேலையில் சேர இருக்கும் விஷயத்தை தயங்கியபடியே தெரிவித்தாள்.

ஜெயத்திற்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தாலும், “சரி, உன் இஷ்டப்படியே செய்” என நாசூக்கு கருதி சொன்னார்கள். “அம்மா! எனக்கு சனி ஞாயிறு விடுமுறை..ஒவ்வொரு வார விடுமுறைக்கும் இங்கு வந்து உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பேன்” .என அவள் சொன்னதும் ஜெயம்,சிறிது சமாதானம் அடைந்தார்கள்.. ஜெயத்திற்கு ஏற்பட்ட வருத்தத்தினால், அவள் எங்கு வேலையில் சேர்ந்திருக்கிறாள்? என்ன சம்பளம் என்பது குறித்தெல்லாம் விசாரிக்கவில்லை.

மணிமாமா மட்டும் அவற்றையெல்லாம் விசாரித்தார்கள். “ஆண்டர்சன் அண்ட் சன்” புதிதாக ஆரம்பிக்கப்பட்ட துப்பறியும் நிறுவனமாயிற்றே. அங்கு க்ளரிக்கல் வேலை என்றால், அவ்வளவு சம்பளம் எதிர்பார்க்க முடியாதே! என சொல்லி கவலைப்பட்டார்கள் “.விடுங்கள். பிடிவாதக்காரி இங்கிருந்து போக முடிவு பண்ணிவிட்டாள். அவள் போகட்டும் என்பது ஜெயத்தின் பதிலாக இருந்தது

ஜெயம், முதலில் வெளிவேலைக்கென ஒரு பெண்ணை நியமித்தார்கள். பாத்திரம் விளக்குவது, வீடு கூட்டுவது, வாஷிங் மெஷினிலிருந்து எடுத்து துணிகளைக் காயப்போடுவது. இந்த வேலைகளை செய்வதற்குள் அந்த அம்மாள் நொந்துகொள்வது அவர்களுக்கு சிவானியின் நினைவை அதிகப்படுத்தியது.

கமலியும் கணேஷும் தேர்வுக்கென பிரயாசைப்பட்டு படித்துக் கொண்டிருந்தார்கள். சந்தியாவைக் கவனிப்பது ஜெயத்திற்கு முழு வேலையாகப் போனதால், சமையலுக்கு மட்டுமாக வீட்டோடு இருக்கும்படி மற்றொரு பெண்மணியை நியமித்தார்கள்.

இந்த பெண்மணிகள் இருவரும் அவர்களுக்குள் ஓயாமல் வாக்குவாதம் செய்வதும், மரியாதை இன்றி சத்தம் போட்டு பேசுவதும் ஜெயத்திற்கு பெரிய தலைவலியாகிப் போனது. அவர்கள் சண்டையை விலக்கி சமாதானம் செய்துவைப்பதே ஜெயத்திற்கு பெரிய வேலையானது.

சனிக்கிழமையன்று காலையில் சிவானி ஜெயத்தின் வீட்டிற்கு வருகை தந்தாள் .அவளைப் பார்த்ததும் ஜெயத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நீண்ட நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டார்கள்.

வெளிவேலை செய்யும் அலமேலுவை அழைத்துக்கொண்டுபோய் எல்லா அறைகளையும் எவ்வாறு எளிமையாக, வாகாக தூசு தட்டி கூட்டி துடைக்க முடியும் என்பதை சொல்லிக்கொடுத்தாள்.

சமையல் செய்யும் வேதம்மாளுக்கு நேரம் மிச்சப்படுத்தி சமைப்பது எப்படி என்பது குறித்து பாடம் எடுத்தாள். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த ஜெயத்திற்கு இப்படியெல்லம் செய்தால் ஆட்களே வைக்காமல் தானே எல்லா வேலைகளையும் செய்துவிட முடியுமே என்பதுபோல தோன்றியது. கெட்டிக்காரி என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார்கள். சிவானி, அந்த வாரம் மாலை நேர நொறுவலுக்குத் தேவையான முறுக்கு, மற்றும் இனிப்புக்காக பாதுஷாக்களை செய்துவைத்தாள். சந்தியாவின் அறைக்குச் சென்று அவளிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

ஒத்த வயதினளாதலால் சந்தியா, அவளிடம் கொஞ்சம் மனதுவிட்டுப் பேசலானாள். மாதவனைப் பிரிந்து இருப்பது கஷ்டமாக இருப்பதாகவும் அவனுடைய பிள்ளையை சுமப்பது இஷ்டமாக இருப்பதையும் அவள் சொல்லிக்கொண்டிருந்த போது; சிவானிக்கு அவ்விடம் விட்டு எழுந்துபோய்விடலாமா என்றிருந்தது படித்த முட்டாள் என மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

“உன் பிள்ளையை நன்றாக வளர்க்கவேண்டுமானால் இப்படி சொங்கியாட்டம் படுத்துக்கிடப்பது கூடாது. எழுந்து நடமாடு. உன்னைக் கவனித்துக் கொள்பவர்களே அங்குவந்து உன் பிள்ளையைப் பார்த்துக்கொள்ளவா முடியும்?. உனக்கு நீயேதான் துணை..அடுத்தமுறை நான் இங்கு வரும்போது சமையல் வேலைகளையும் நீயே செய்வதைப் பார்க்க வேண்டும். உன் அத்தைக்கும் வயதாகிறது அவர்களுக்கு நீ உதவிகள் செய்வதுதான் உனக்கும் உன் அத்தைக்கும் நல்லது. அவ்வப்போது உன் பெற்றோர்களைப் போய்ப் பார்த்துவா”

இப்படி சிவானி சந்தியாவுக்கு அறிவுறை சொல்வதை; ஜெயம் அறைக்கு வெளியில் நின்றவாறு கேட்டபோது அவர்கள் புன்னகையுடன் “கெட்டிக்காரி” என மெதுவாக வாய் விட்டே சொல்லிக்கொண்டார்கள்.

அதற்கு அடுத்த வார இறுதியில் சிவானி, அங்கு வருகை தந்தபோது அவள் கையில்,பேப்பரால் சுற்றப்பட்டு, கண்ணாடி ஃப்ரேம் போட்ட ஒரு சித்திரம் இருந்தது. அதனை சந்தியாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதனைப் பிரித்துப் பார்த்த சந்தியா மிக மகிழ்ந்து போனாள். அழகிய குழந்தை ஒன்று தன்னைப் பார்ப்பவர்களை விழித்து நோக்கியபடி, புன்னகையுடன் விரல் சப்பிக்கொண்டு….. என்ன த்ருபபமாக!

சிவானி! நீ நல்லா வரைகிறாய்.

உன்னிடம் கற்றுக்கொண்டதுதானே!

சிவானி சந்தியாவிடம் சித்திரங்கள் வரைவதைக் கற்றுக் கொண்ட நாட்களை எண்ணிப்பார்தாள்.

“இது உனக்காக குருதட்ஷணை சந்தியா. எனக்கும் நீ ஒரு சித்திரம் வரைந்து கொடுத்தால் உன் ஞாபகமாக நான் வைத்துக்கொள்வேன். வரைந்து தருவாயா?

நிச்சயமாக அடுத்த முறை நீ வரும்போது ரெடியாக இருக்கும்.

இப்ப நானும் அத்தையும்தான் சமையல் செய்கிறோம்.தெரியுமா?

அப்படியா? அப்போ ஒரு கை பார்த்துவிடுகிறேன்.

மாடியிலிருந்து இறங்கிவந்துகொண்டிருந்த ஜெயம் சிவானியைப் பார்த்தவுடன் மலர சிரித்தார்கள் .இப்ப சந்தியா உடல் நலம் தேறி இருக்கிறாள் பார்த்தாயா சிவானி?

ஆமாம் அம்மா.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கமலியும், கணேஷும் தேர்வுகளை எப்படி எழுதி இருக்கிறார்கள்?

நன்றாக செய்திருப்பதாக சொல்கிறார்கள். நீ எப்படி எழுதி இருக்கிறாய் சிவானி? தேர்வு சமயத்தில் அந்த வீட்டிற்கு சென்று சந்தியாவை கவனிக்க வேண்டி இருந்ததால், உனக்கு நேரம் இல்லாமல் போனது இல்லையா?

நன்றாகவே தேர்வுகளை எழுதி இருக்கிறேன் அம்மா.

அப்பொழுது அங்கே வந்த சந்தியா “அது எப்படி சிவானி? உனக்கு படிக்க நேரமே இருக்கவில்லையே.?” என கேட்கவே “தினந்தோறும் கொஞ்சம் படித்தாலும், அவற்றை மனதிற்குள் நினைத்துப் பார்த்துக்கொள்வேன். அதனால் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு புத்தகத்தை ஒரு முறைதான் படிப்பேன்.. ஜெயம் மனதிற்குள் “சிவானி, கெட்டிக்காரிதான்” என சொல்லிக்கொண்டார்கள்.

அன்று சிவானியின் அலுவலகத்தில், ப்ரொப்ரைட்டர் பரமேஸ்வரனும், அவர் மகன் பாலாஜியும் முக்கியமான கஸ்டமர் ஒருவரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது உள்ளேவந்த கண்ணன், அட ஆண்டர்சனையும், சன்னையும் ஓரே இடத்தில் பார்க்க முடிகிறதே! என சொல்லிக்கொண்டு உள்ளே வந்தான். ஏன் அங்கிள்? பரமேஸ்வரன் அண்ட் சன் என்றோ பரமேஸ்வரன் அண்ட் பாலாஜி என்றோ அழகாக உங்கள் நிறுவனத்திற்கு பெயர் வைக்காமல்..இதென்ன இப்படி ஒரு பெயர்?

அதெல்லாம் தொழில் ரகசியம் கண்ணன். வீட்டிற்கு வராமல் என்ன விஷயமாக எங்கள் அலுவலகத்திற்கே வந்திருக்கிறாய் என்று சொல்லேன்

மஹாராணியைப் பார்க்கதான் இங்கே வந்தேன்.

சிவானியை சொல்கிறாயா? சமர்த்தான பெண். அவள் சொன்ன விஷயத்தைப் பற்றிதான் இப்ப பேசிக்கொண்டு இருந்தோம்.

என்ன சொன்னாள்? எதற்கு என்னை இங்கு வரச் சொன்னாள்?

இப்ப பாலாஜி உனக்கு ஒரு கதை சொல்லப்போகிறான். அதை முதலில் கேள். மற்ற விஷயங்கள் அப்புறம்தான். ஸ்ரிக்ட்டாக

பாலாஜி கதையை ஆரம்பித்தான். சேகரன் ,சேகரன் அப்படீன்னு ஒருத்தர் அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர்.

நம்ப ஊர் பணக்காரர் பெயரும் அதேதான்

உஷ்.. நடுவே நடுவே பேசக்கூடாது.

ம்ம் சரி.

ஆக்ச்சுவலா அவரது சொத்துக்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோமே அது அவரோடது இல்லை..அவரது மகள் மல்லிகாவிற்கு அவளுடைய தாத்தா; அதாவது அம்மாவின் அப்பா எழுதிவைத்தது, மல்லிகா உயிருடன் இருக்கும் வரை அதனை அனுபவிக்கலாம். அவளுக்கு குழந்தைகள் பிறந்தால் நேரடியாக அவளுடைய பிள்ளைகளுக்கு அந்த சொத்துக்கள் சொந்தமாகிவிடும். குழந்தைகள் பிறக்காது போனால், எல்லா சொத்துக்களும்,மல்லிகாவின் சின்ன தாத்தா, {மல்லிகாவுக்கு சொத்து எழுதிவைத்தாரே அவரது தம்பி} ”வசந்த்ஒர்க்ஸ்” ஓனர் வசந்தனின் வாரிசுகளுக்குப் போய்ச்சேரும். சேகரன், இந்த விஷயங்களை மூடிமறைத்து, அனைத்து சொத்துக்களும் தன்னுடையது என வெளியில் காண்பித்துக்கொண்டு இருக்கிறார். மல்லிகாவிற்கு கல்யாணமும் செய்துவைத்துவிட்டார். கையோடு தானும் மறுமணம் செய்துகொண்டார்.

இதற்கிடையில் மல்லிகாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது, அவளைக் கல்யாணம் செய்துகொண்ட கபோதி, எல்லாவற்றையும் மூடிமறைத்து ஒரு நல்ல குடும்பத்துப் பெண்ணை மணந்துகொண்டு, மல்லிகாவை அவள் அப்பா சேகரனிடம் கொண்டுபோய்விட்டான். ஆனால், தன் இரண்டாவது மனைவியைக் கலந்தாலோசித்த சேகரன், மாதம் ஒரு லட்சம் தருவதாகவும் அவன் பாதுகாப்பிலேயே மன நோயாளியான மல்லிகா இருக்க வேண்டும் எனவும் பேசி திருப்பி அனுப்பிவிட்டார்.

மல்லிகாவுக்கு எந்த மருத்துவமும் செய்யாமல் மாடி அறையில் பூட்டிவைத்துக்கொண்டு அது என் தங்கை என எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருக்கும் அந்த….

கபோதியின் பெயர் மாதவனா? கண்ணனின் கண்களில் கண்ணீர்.

இப்ப அந்த சேகரனை வரச்சொல்லி இருகிறோம். வந்துவிடுவார் நீ அந்த அறையில் போய் உட்கார்ந்துகொள் கண்ணா.

சேகரன் தன் மனைவியுடன் வந்திருந்தார். நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டார். எங்கள் சொத்து விவரத்தை எப்படியோ தெரிந்துகொண்டதால் நீங்கள் என்னை மிரட்டி என்ன செய்துகொள்ளமுடியும் என்று எனக்குப் புரியவில்லை. ஏதோ சில லட்சங்களுக்காக இப்படியெல்லாம் அலுவலகம் வைத்துப் பிழைக்கும் உங்கள் பிழைப்பு ஒரு பிழைப்பா?

வாயைமூடிக்கொண்டு நாங்கள் சொல்வதை செய்யுங்கள். மல்லிகாவை அழைத்துவந்து உங்களுடன் வைத்துக்கொண்டு அவளுக்கு நல்ல வைத்தியம் பார்த்து சரிபண்ணுங்கள். இல்லாவிட்டால், மன நோய் முற்றி அவள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், வசந்த் பிள்ளைகளுக்கு சொத்தைத் தந்துவிட தயாராக இருக்கிறீர்களா? நோய் முற்றினாலும் ஆபத்து. அப்படி இல்லாவிட்டாலும், மாதவன் புதிதாக கல்யாணம் செய்துகொண்டிருக்கிறான். அவனாலும் ஆபத்துதான் ஏன் என்றால், மல்லிகா ஒரு பணங்காச்சி என்பது அவனுக்குத் தெரியாது அல்லவா?

சேகரன் மனைவி, நடுவே குறுக்கிட்டு,”என்னங்க.? இவங்க என்ன சொல்கிறார்கள்?.”எனக் கேட்க,;. நாம் மல்லிகாவை நம்முடன் நல்லபடியாக வைத்துக் கொண்டால்தான் இந்த சொத்துபத்துகளை அனுபவிக்கமுடியும். அப்படிதான் பத்திரங்களில் இருக்கிறது என்பதை இவர்கள் துப்பு துலக்கி இருக்கிறார்கள்.

அதனால் இவர்களுக்கு என்ன லாபம்?

பரமேஸ்வரன் சொன்னார் “மன திருப்தி மட்டும்தான் தாயே!”

அப்புறமாக கண்ணன் கணிசமான தொகையை அந்த நிறுவனத்திற்குக் கொடுத்தான் என்பது வேறு விஷயம்.

அடுத்த சில நாட்களில் மல்லிகா தன் தந்தை வீட்டிற்கே அழைத்து வரப்பட்டாள்.

அந்த வார இறுதியில் சிவானி, ஜெயம்அம்மாள் வீட்டிற்குப் போனபோது சந்தியா தான் வரைந்த சித்திரத்தை சிவானிக்கு அன்புடன் கொடுத்தாள். அதனை வாங்கிப் பார்த்த சிவானி; அதன் அழகில் மலைத்துப் போனாள். இயற்கை காட்சிகள். ஒரு சிறிய நீர்வீழ்ச்சியிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. அது அழகிய ஓடையாக மாரி சலசலத்து ஓடுகிறதோ? கரையில் மாமரம். அதன் அடியில் ஒரு வழவழ பாறை. சிவானியின் உடலும் உள்ளமும் லேசாக ஆகிவிட்டது. மெதுவாக அந்த பாறையின் மேல் போய் அமர்ந்துகொள்கிறாள். சுற்றிலும் தென்னை மரங்கள். தென்றல் தாலாட்ட,. கண்மூடி அனுபவிக்கிறாள். தென்றல், கடுங்காற்றாக மாறுகிறது. அப்படியே புயலாக உருவெடுக்கிறது .மரங்கள் சாய்கின்றன. பழுத்திருந்த மாம்பழங்கள், காய்கள் அனைத்தும் உதிர்ந்து உதிர்ந்து..

சிவானி! சிவானி! குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறாள். என்ன சிவானி? ஏன் அழுகிறாய்?

ஒன்றும் இல்லை. இந்த ஓவியம் ஏதேதோ கதைகள் சொன்னது.

கமலியும் கணேஷும் வந்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள். சிவானி அவர்களுடன் பேசி சிரித்து மகிழ்ந்தாள். அவள் மனது அமைதியாகிவிட நாளை ஞாயிற்றுக்கிழமைதான். நாளையும் வருவேன் என்று சொல்லி விடை பெற்றாள். இந்த ஓவியத்தை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டுப் போகிறாயே என்று சந்தியா சொல்ல நாளைக்கு. என சொல்லி விடை பெற்றுச்சென்றாள்.

அடுத்த நாள், மாதவன் அந்த ஓவியத்தை எடுத்துச் சென்றுவிட்டதாக சந்தியா சொன்ன போது சிவானிக்கு பெரிதும் ஏமாற்றமாக இருந்தது.

சிவானிக்கு அலுவலகத்தில் வெளி வேலைகளும் கொடுக்கப்பட்டது. அதன் நிமித்தம், பலதரப்பட்ட மனிதர்களையும் அவள் சந்திக்கும் நிலமை. அவளுடைய அப்பா, உடல் நலம் தேறிவிட்டதால், அவளுடைய குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி தலை தூக்கியது. அவருக்கும் அவள் சிபாரிசில் அவளுடைய அலுவலகத்திலேயே வரவேற்பாளராக வேலை கிடைத்தது.

கண்ணன், சந்தியாவின் விஷயத்தில் கவலையுடன் இருந்தான். சிவானி சந்தியாவுக்காக எடுத்துக்கொள்ளும் பெருமுயற்சிகளை அவனுக்கு அவ்வப்போது சிவானி ஃபோன் மூலமாக தெரிவித்துவந்ததால், கொஞ்சம் சமாதானமடைந்தான். அதனால்தான் அவனே நேரில் வந்து பரமேஸ்வரனிடம் விவரங்கள் தெரிந்துகொண்டு அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டான். மற்றவர்களுக்கு இவ்விவரம் இப்போதைக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என சிவானியும், கண்ணனும் முடிவுசெய்திருந்தார்கள்.

ஒருநாள் கண்ணன், சிவானியைப் பார்க்கும்பொருட்டு அவள் அலுவலகத்திற்கு வந்தான் .வரவேற்பாளரான சிவானியின் அப்பா, மகேஸ்வரன், என்ன ஏது என விசாரித்தார்., எங்கே மஹாராணி? நகர்வலம் போயிருக்கிறார்களா? என்று கண்ணன் கேட்க, அந்த பெயரில் இங்கு யாரும் இல்லை என அவர் சொல்லவே, இங்கே புதிதாக வந்திருக்கும் காவலாளியா நீர்? எனக் கேட்டு அவரைக் கலாய்த்துக் கொண்டிருந்தான். அலுவலகத்தில் போரடிகிறதே என்று சோம்பி இருந்த அவர் நிமிர்ந்து அமர்ந்துகொண்டார். அவர், கண்ணனுக்கு சற்றும் சளைக்காமல், “எதிர்தரப்பிலிருந்து வந்திருக்கும் ஒற்றறோ தாங்கள்?” என வினவ கண்ணனுக்கும் சுவாரசியம் ஏற்படவே, “மஹாராணியைப் பற்றிய விவரங்களை நீர் சொன்னால், உமக்கு ஆயிரம் பொற்காசுகளை வழங்குவேன்.” என ஆர்ப்பரித்தான்.” ஒற்றனாகிய உமக்கே ஆயிரம் பொற்காசுகளை அளிக்க இயலுமானால் உங்கள் மஹாராஜா……”

“வாயைக் கழுவும். நானே மாறுவேஷத்தில் வந்திருக்கும் மஹாராஜா.”

ஐயஹோ! மஹாராஜாவுக்கே மனக்குழப்பம் என்றால் நாடு என்னத்திற்காகும்?

அப்பொழுது அங்கு பாலாஜி வரவே, மகேஸ்வரன், தன் சுட்டுவிரலை தன்னுடைய நெற்றிப்பொட்டில் வைத்து சுற்றி “இந்த ஒற்றன், மஹாராணியைப் பற்றி ஒற்று அறிய வந்திருக்கிறான்.” என்றார். இதைக் கேட்ட பாலாஜி வெடிச் சிரிப்பு சிரித்தான்.. அவனும் இந்த விளையாட்டில் பங்கு கொண்டான்.

“அமைச்சரே! உங்கள் புத்திரியைத்தான் இந்த சமஸ்த்தானத்திற்கு மஹாராணியாக்கி இருக்கின்றீர் என்பது அறியாமல், அவன் உங்களிடமே மஹாராணி பற்றி துப்பு விசாரிப்பது கொடுமையிலும் கொடுமை. அவனுக்கு என்ன தண்டனை அளிக்கலாம் என முடிவு செய்து கூறுங்கள்.

மகேஸ்வரனுக்கு இப்போ எல்லாமே புரிந்தது. ஆனாலும் அவர் வேடிக்கையான மனிதர். அதனால், “இந்த சமஸ்த்தானத்தில் உள்ள அனைவரும், மஹாராணி உட்பட மனம் பாதித்தவர்களாக இருக்கும் பட்சத்தில் ..

அப்போது அங்கே வந்த சிவானியைப் பார்த்த மூவரும் அமைதி ஆனார்கள். ஓ.சிவானியின் தகப்பனாரா இவர்? ஏதோ சொல்லவந்தவரை முழுதும் சொல்லவிட்டிருந்தால், நன்றாக இருந்திருக்கும்.என நினைத்துக்கொண்டான்.

சிவானிக்கு, லயன்ஸ் க்ளப்பில் இருக்கும் பெரிய மனிதர் ஒருவர் அலுவலக விஷயமாக தெரிந்தவர் ஆனார். அவர் பெயர் ரவிச்சந்திரன். அவர் சிறந்த ஓவியங்களை விலைக்கு வாங்கி வெளிநாட்டில் இருக்கும் தன் நண்பர்களுக்கும், தன்னுடைய தம்பிக்கும் அனுப்பி வியாபாரம் செய்பவர், சந்தியா வரைந்த ஓவியங்கள் சிலவற்றை அவரிடம் சிவானி காண்பித்த போது, தனக்கு அதே ஆர்ட்டிஸ்ட் வரைந்த ஓவியங்கள் வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதனை சந்தியாவிடம் சொன்னபோது அவள் மகிழ்ந்து ஓவியங்களை ஆர்வமுடன் வரைந்து கொடுக்க ஆரம்பித்தாள் அவளுக்கு பிரசவ நேரம் நெருங்கிவிட்டதால், ஜெயத்தின் வீட்டிற்கு .சந்தியாவின் பெற்றோர்களும் வந்து தங்கினர். மாதவனும் அவ்வப்போது அங்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கி செல்வான். வார விடுமுரைகளில் சிவானி அங்கு வருவதைத் தெரிந்து கொண்ட அவன், அந்நாட்களில் வர ஆரம்பித்தான். எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடிய கமலியை கண்ணனிடம் சொல்லி ஜாக்கிரதையாக இருக்கும்படிக்கு எச்சரித்துவிடச் செய்தாள்.

சந்தியா, சிவானியிடம் தன் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினாள். அதனால், அவளுக்கு ஆறுதலும் நிம்மதியும் கிடைப்பதை உணர்ந்தாள். மாதவனின் தங்கையை அவன் தனனுடைய மாமா வீட்டில் விட்டிருப்பதாக தெரிவித்தாள்.

சிவானி, ஓ அப்படியா? என்று மட்டும் சொல்லிவிட்டு, அமெரிக்காவில் சித்திரக் கண்காட்சியில் சந்தியாவின் பல படங்கள் வைக்கப் பட்டிருப்பதை ரவிச்சந்திரன் ஃபோட்டோ எடுத்து தனக்கு வாட்ஸப்பில் அனுப்பியிருப்பதைக் காண்பித்தாள். சந்தியாவுக்கு, சிவானியின் மேல் மேலும் மேலும் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.

மல்லிகா நன்றாக குணமடைந்து விட்டதாக செய்திகள் வந்தது. அந்த செய்தியை உறுதி செய்துகொள்வதற்காக சிவானி அலுவலகம் சார்பிலும், தன் திருப்திக்காகவும் அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்றாள். சேகரன் அவளை வரவேற்று, ஹாலில் அமரச்செய்தார். அவருடன் பேசி, மேற்கொண்டு மல்லிகா விஷயத்தில் அவர் என்ன செய்யப் போகிறார்? என அறிந்து கொள்ள விரும்பினாள். தயங்கியவாறே அவள் வார்த்தைகளை மென்று முழுங்கியபோது: மல்லிகாவின் தந்தை, சேகரன், தன் மகளின் எதிர்காலம் குறித்துதான் கவலையாக இருக்கிறது .என்று தன்னிலை விளக்கம் அளித்துவிடவே.: அது குறித்து தயக்கமில்லாமல் அவருடன் கலந்தாலோசிக்க மல்லிகாவுக்கு சுலபமாக இருந்தது.

முன்பே மணமானதை மறைத்துதான் சந்தியாவை மாதவன் மணந்துகொண்டான். அந்த விவரத்தை இதுவரையில் கண்ணனைத்தவிர அவர்கள் வீட்டில் யாருக்குமே தெரியப்படுத்தவில்லை என்பதையும், சந்தியாவுக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்கப் போகிறது, என்பதையும் சொல்லி, இந்த இரு பெண்களைப்பற்றியுமே தனக்கு கவலையாக இருப்பதையும் அவள் தெளிவாக எடுத்துச் சொன்னாள். சேகரனுக்குத் தன் மகள் குணமாக முக்கிய காரணமாக இருந்ததும், அவள் குறித்து கவலைப் படுவதும், இந்த பெண்ணால், எப்படி முடிகிறது? மதர் தெரசாவின் மறு பிறப்போ? என்று ஆச்சரியம்.

அப்பொழுது பக்கதிலிருந்த அறையிலிருந்து மல்லிகா வரவே, சேகரன்: “நீ சித்தியுடன் கோவிலுக்குப் போகவில்லையா மல்லிகா?” என ஆச்சரியத்துடன் கேட்டார்..

“நல்லவேளையாகப் போகவில்லை. இல்லாவிட்டால் முக்கியமான விஷயங்களை நான் தெரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கும்”

இவ்வாறு மல்லிகா தெளிவாகப் பேசியதைக்கேட்ட சிவானிக்கு மகிழ்ச்சி ஏற்படவே செய்தது.

அதன் பிறகு ஷாப்பிங்க்மாலில் சிவானியை சந்தித்த மல்லிகா, அவள் கைகளைப் பற்றிக்கொண்டு, சிவானி!.அன்று நடந்தவை எல்லாம் எனக்கு கனவில் நடந்தது போல விட்டு விட்டு நினைவுக்கு வருகிறது. அந்த பெண்ணின் பயந்த முகம் மனதில் அடிக்கடி தோன்றி, அவள் மேல் இரக்கம் கொள்ளச் செய்கிறது. அவள்தான் சந்தியாவா? பாவம் அவள். அவளுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாயே. என் வாழ்த்துக்களை அவளுக்குத் தெரிவிக்க முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

மல்லிகா! நீ அமைதியாக உன்னுடைய நலனில் அக்கறையுடன் இருந்து கொள். பிறகு மற்றவற்றைப் பற்றி சிந்திக்கலாம். சரியா?

மாதவனைப்பற்றி எனக்குதான் நன்றாகத்தெரியும். ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கைப் படகு அமைதியாக சென்றுகொண்டிருந்தது. அவனிடம் அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்திவந்தேன். நாளாக நாளாக மனைவி என்றும் பாராமல் பிற பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து ,அவர்களை என்னைவிட்டே உபசரிக்கச் சொல்வான். என் அத்தையும் மாமாவும் தட்டிக் கேட்டால் அவர்களுக்கும் அடி உதைதான்.,என் தந்தையோ மறுமணம் செய்து கொண்டார், எனக்கு எந்த ஆதரவும் இல்லாது போனதால். என் மனமும் பிரண்டுபோனது. இதை அவள் சிவானியிடம் சொல்லிக் கொண்டிருந்த போது சிவானி, கண் கலங்கினாள்.

“மல்லிகா! பெண் என்றால், உடல் பலமின்றி இருக்கக் கூடும். மனபலம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அவளே ஒரு குடும்பத்தின் அஸ்த்திவாரம். குடும்பம் ஆட்டம் காணும்போது, அஸ்த்திவாரத்தை பலப்படுத்த என்ன செய்யவேண்டும் என ஆலோசித்து, ஆவன செய்ய வேண்டும்.”

“சுக்கு நூறாகிவிட்ட குடும்பத்தைத் தூக்கிப் போடு சிவானி. அவனுடன் இனி என் வாழ்க்கை இல்லை. சந்தியாவுக்கு உன் அறிவுறைகளைக் கூறு .நான் வருகிறேன்.”

மல்லிகா அவ்விடம் விட்டுப் போவதை சிவானி வருத்தமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சந்தியாவுக்கு, ஹஸ்பிட்டலில் அட்மிட் ஆன அன்றே ஆண் குழந்தை பிறந்தது. மாதவன் குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு வருவான் என அனைவரும் எதிர்பார்திருந்தபோது வந்தான். என்ன நிலமையில் என்றால்: கத்தியால் குத்தப்பட்டு ஸ்ட்டச்சரில்! கூடவே போலிஸ்! நேராக தீவிர சிகிச்சைப் பிரிவில். நாற்பத்தெட்டு மணி நேரம் கழித்துதான் அவனுடைய ஆயுளைத் தீர்மானைக்க முடியும்.

சந்தியாவுக்கு பிள்ளை பெற்ற உடம்பு என்பதால் அவளிடம் இவ்விஷயம் மறைக்கப்பட்டது. ஆனாலும் வழக்கமில்லாத வழக்கமாக செவிலியர்களும், ஆயாக்களும், அவள் அறைக்குள் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனார்கள். அவர்கள் பார்வையில் இரக்கம். சந்தியா, குழந்தைக்கோ தனக்கோ என்னவோ ஏதோ என சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தாள். அப்போது, அறையைப் பெருக்க வந்த ஆயா அவளிடம் வசமாக மாட்டிக்கொண்டாள். துணைக்கு என இருந்த சந்தியாவின் அம்மா அந்த வேளையில் குளியல் அறையில் பல்விளக்கிக் கொண்டிருந்தார்கள். சந்தியாவின் குறுக்கு கேள்விகளால், ஆயா அளவுக்கு அதிகமாகவே உளறிக்கொட்டி, கிளறி, நான் சொன்னேன் என வெளீயில் சொல்லிவிடாதே கண்ணூ என்று வேண்டுகோள் விடுத்துச் சென்றுவிட்டார்கள்.

வெட்ட வெளிச்சமாக அனைத்தையும் ஆயாவே சொல்லிவிட்டார்கள். “மனைவியைப்போய் தங்கை என சொல்லியிருக்கானே பாவி!. ஏமாற்றி உன்னைக் கல்யாணம் செய்து, இப்படி இரண்டு பெண்களின் வாழ்வை நாசம் பண்ணி விட்டானே.! அந்த பாவம்தான் அவன் குத்துப்பட்டு சாக கிடக்கிறான்.”

அதன் பிறகு சந்தியா. யார் எது பேசினாலும் பதில் ஒன்றும் சொல்லாததுடன் எப்போதும் கண்ணை மூடிக்கொண்டே இருந்தாள். சாப்பாடு கொடுக்கப்பட்ட போது எழுந்து சாப்பிட்டுக்கொண்டாள். அழுத பிள்ளைக்கு பால் கொடுத்தாள்

அவள் டிஸ்சார்ஜ் ஆகப்போகும், நாள் அன்று காலை மருத்துவருடன், வேறு இரண்டு நபர்களும், சந்தியாவை சந்திக்க வந்திருந்தனர். அவர்களின் கிராப்பும், கிருதாவும் அவர்கள் போலிஸ்காரர்கள் என்பதைக் காட்டிக்கொடுத்தது.

பல்வேறு கேள்விகளுக்குப் பிறகு அவர்கள் சந்தியாவிடமிருந்து அறிந்து கொண்டது, அவள் மிகுந்து ஏமாற்றத்துடன் இருக்கிறாள் என்பதும், வேறு எந்த கருத்தும் அவளுக்கு இருக்கவில்லை என்பதும் மட்டுமே. மாதவன் எப்படி இருக்கிறான் என்று அறிந்து கொள்ளக்கூட அவள் விரும்பவில்லை.

எல்லோருடைய சந்தேகமும், மல்லிகாவின் மீதாக இருக்கவே, போலிஸ், மல்லிகாவை விசாரித்தது. என் கைகளால் அவன் இறந்தால், நன்றகத்தான் இருக்கும் ஆனால் அப்படி ஏதும் இல்லையே. என அவள் ஆதங்கப்பட்டாள்.

எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். சிவானி நடைபிணம் போலவே ஆனாள். அன்று ரவிச்சந்திரனிடமிருந்து ஃபோன் வரவே, அவரது இல்லத்திற்குச் சென்றாள். “என்ன சிவானி? ஏன் சோர்ந்து போயிருக்கிறாய்?” என அவர் கேட்டதும், அவள் மன இறுக்கம் தளர்ந்து அழவே ஆரம்பித்துவிட்டாள். சந்தியாவின் கணவன், மாதவன் மிக உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் இருக்கிறான் என்றும்: மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர் என்றும் தெரிவித்தாள்.

“சந்தியாவுக்கு சேர வேண்டிய பெருந்தொகையை செக்காக வைத்திருக்கிறேன். அதனை உன்னிடம் சேர்ப்பிக்கத்தான் உன்னைக் கூப்பிட்டேன். இரு எடுத்துவருகிறேன்” என சொல்லிவிட்டு.அவர் மாடிக்குப் போனார்,

ஹாலில் அமர்ந்திருந்த சிவானி தற்செயலாக அங்கு மாட்டப்பட்டிருந்த சித்திரத்தைக் காண நேர்ந்தது. அது சந்தியா, சிவானிக்காக வரைந்து கொடுத்தது. ஆனால் மாதவன் தனக்கு வேண்டும் என எடுத்துக்கொண்டு போனது. சிவானி, அந்த சித்திரத்தை வைத்த கண் வங்காமல் பார்த்தாள். நீர்விழ்ச்சியிலிருந்து கொட்டும் தண்ணீர் ஒடையாக மாரி சலசலத்து ஒடுகிறது. மாமரங்களும் தென்னைமரங்களும் பூச்செடிகளும் நிறைந்த அந்த இடம் தேவலோகமாக இருக்குமோ?. கண்களை, இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கையில் சிவானி லேசாக ஆகிறாள். மிக லேசாக மிக மிக லேசாகிப் போனாள். மாமரத்தின் அடியில் வழவழ பாறையில் மேல் அமர்ந்துகொண்டாள். கண்களைமூடி தென்றலை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். தென்றலோ இரக்கமற்ற புயலாக உருவெடுக்கிறது. மரங்கள், காய்களையும், கிளைகளையும் உதிர்க்கின்றன. சிவானி அவ்விடம் விட்டு ஓடிவிட எத்தனிக்கிறாள்.

“என்ன சிவானி? எழுந்துகொண்டாய்?” ரவி கைகளில் செக்குடன் நின்றிருந்தார். சிவானி சுதாரித்துக்கொண்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

அந்த சித்திரத்தை சுட்டிக்காட்டி “அங்கிள்! அது ரொம்ப நல்லா இருக்கு”. என சொன்னாள். “அதுவா? என் பேபி “சுபாங்கி” எனக்குக் கொடுத்தாள். அதுவும் அதே சந்தியாவால் வரையப்பட்டதுதான்.”

“உங்கள் மகளா? இப்ப எங்கே இருக்கிறார்கள்.?”

“அவள் அமெரிக்கா சென்று நான்கு நாட்கள் ஆகிறதே!”

“அவர்கள் தொலைபேசி நம்பர் தருகிறீர்களா அங்கிள்?”

அன்றே, சுபாங்கியுடன் ஃபோனில் தொடர்பு கொண்டாள். “

சுபாங்கி! மாதவனை உனக்கு எத்தனை நாட்களாகத் தெரியும்?

“நீங்கள், சித்திரங்களை அப்பாவுக்கு சப்ளை செய்வீர்கள் என்றும், ஆண்டர்சன் அண்ட் சன் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியும். அதற்காக கண்டபடி எல்லோரையும் சந்தேகிக்க முடியாது.”

“என்ன சுபாங்கி? எதற்கு நான் சந்தேகப்படப் போகிறேன்? ஏதேனும் விஷயம் இருக்கா? தவளை தன் வாயால் கெட்டுவிட்டதே?”

“வந்து.. வந்து…ஆமாம். ஆனால் நான் அவனைக் கத்தியால் குத்தவில்லை. எனக்கு அவன் ஒரு அபூர்வமான காணக்கிடைக்காத சித்திரம் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதன் அற்புத அழகை வர்ணிக்க முடியாது. அதனை நான் பெரிதும் நேசிக்கும் என் தந்தைக்குப் பரிசாகக் கொடுத்தேன். அதைப் போன்ற மற்றொன்றை என் தாய்க்குக் கொடுக்க எண்ணி அவனிடம் கேட்டேன். அவன் தன் வீட்டிற்கு வந்து வாங்கிச் செல்லும்படி என்னைக் கேட்டுக் கொண்டதால், அவன் இல்லத்திற்குச் சென்றேன்”.

அவள், தேம்பி அழத்துவங்கினாள். “அழாதே சுபாங்கி. உண்மை உலகுக்குத் தெரிய வரணும். மேற்கொண்டு சொல்லேன்.”

“அவன் என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான்.”

“என்ன சுபாங்கி? ஒரு பெண் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமோ? சந்தேகத்திற்கு கூட இடம் கொடுக்கக்கூடாதே?”

“அந்த அறையில் பெரிய போராட்டம் நடந்தது. அவனைக் கீழே தள்ளிவிட்டு வெளியில் ஹாலுக்கு ஓடிவந்தேன். அவன் என்னைப் பிடித்துவிட்டான். அப்பொழுதுதான் பார்த்தேன் அடுத்த அறையில் அவன் பெற்றோர் அடைபட்டுக் கிடப்பதை. காப்பாற்றுங்கள் எனக் கதறினேன் அவர்கள் ஜன்னல் கம்பிகளில் தங்கள் தலையை மோதிக்கொண்டு அழ, என் பலமெல்லாம்போய் நான் செயலிழந்தபோது தெய்வம் மாதிரி அவர்கள் உள்ளே வந்து அருகில் இருந்த கத்தியை எடுத்து மாதவனைக் குத்திவிட்டு, அறையில் அடைபட்டுக்கிடந்த பெரியவர்களை விடுவித்து, என் கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டு வெளீயில் வந்தார்கள்.”

சொல் சுபாங்கி. அவர்கள் என்கிறாயே! அவர்கள் யார்?

“சொல்லமாட்டேன். என் உயிர் போனாலும் சொல்ல மாட்டேன்.”

“சரி சொல்லவேண்டாம். அப்புறம் என்ன நடந்தது?”

“அவர்களை என் காரிலேயே ஏற்றிக்கொண்டேன். அவர்கள் மிகவும் முடியாமல் இருந்தார்கள். மருத்துவமனைக்குப் போகலாமா? எனக் கேட்டேன். வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். எனக்கும் காரை ஓட்டிக் கொண்டு வருவது பதட்டமாக இருந்தது. ஏன் என்றால், மாதவனிடம் அகப்பட்டுக்கொண்டு போராடியது ஒருபுறம், இந்தப் பெண்மணி காரிலேயே குழந்தை பெற்றுவிடுவார்களோ என்பது மறுபுறம்.”

இப்பொழுது அதே பதட்டம் சிவானிக்கும் ஒட்டிக்கொண்டது.

“அப்புறம்?”

“அவர்களை அந்த தெருவின் கோடியில் இறக்கிவிட்டேன்”

“உனக்கு என்ன வயதாகிறது?.”

“பதினைந்து”

அந்த வயதில் கார் ஓட்டுவது குற்றம் இல்லையா சுபாங்கி? அதான் விசாரித்தேன் . இந்தியா எப்ப வருகிறாய்?

“உங்களிடம் சொல்லக்கூடாத விஷயங்களை எல்லாம் சொல்லிவிட்டேனா?”

“இல்லை.அதெல்லாம் ஒன்றுமில்லை.”

அடுத்த நாள், தன் ராஜினாமா கடிதத்தை பாலாஜியிடம் நீட்டி இனி நான் வேலைக்கு வரவில்லை எனறு கூறினாள்

சிவானியும், சுபாங்கியும் பேசிக்கொண்டவற்றை ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்த ஃபோன் உரையாடலை ஓடவிட்ட பாலாஜி ,இதற்காக ராஜினாமாவா?. சிவானி தன் இருக்கைக்கு திரும்பினாள். மேஜையில் தலை கவிழ்த்து தேம்பி அழுதாள்.. சிறிது நேரத்திற்குப் பிறகு தென்றல், வீசுவதைப்போன்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. அது புயலாக மாரிவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு இருக்கவில்லை. தென்றல், இதமாக வீசவே அவள், தலை நிமிர்ந்தாள். அங்கே ஜெயம் நின்றிருந்தார்கள். அம்மா!… கதறியபடி அவளைக் கட்டிக் கொண்டாள். பாலாஜி எல்லாவற்றையும் சொன்னார். உன்னை நினைத்துக் கவலையாக இருப்பதாக சொல்லவே ஓடோடி வந்தேன் சிவானி. அப்புறமா என்ன ஆச்சு தெரியுமா சிவானி?

சந்தியா, மல்லிகாவை சந்திக்க விரும்பினாள். ஏற்பாடு செய்தோம். தன் குழந்தையை அவளிடம் ஒப்படைத்த சந்தியா போலிஸில் சரணடைந்துவிட்டாள். ஏன் தெரியுமா? அவள் போலிஸில் கூறியது என்ன தெரியுமா?

“மாதவன் இருந்த தீவிரசிகிச்சைப்பிரிவுக்கு சென்ற நான்; அவனுக்குப் பொருத்தப் பட்டிருந்த மருத்துவ உபகரணங்களை எல்லாம், எடுத்து குப்பையில் வீசிவிட்டேன். அப்பவே அவன் உயிர் போஈவிட்டது. முன்பு கத்தியால் குத்தியதும் நான்தான் எனக் ஒப்புதல் வாக்குமூலம் கூறி போலிஸில் சரணடைந்து விட்டாள்.

“என்ன!” மயங்கி விழ இருந்த அவளை இரண்டு ஆதரவுக்கரங்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டன. அவை கண்ணனுடைய கரங்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *