தூண்டில்

 

குடந்தை பஸ் ஸ்டேன்டுள் அங்குமிங்கும் சுற்றி, கோவிந்தபுரம் செல்லும் பஸ் நிற்குமிடத்தைத் தேடிப் பிடித்தேன். நிறுத்தப்பட்டிருந்த பஸ் முன்னால் வெற்றிலை மென்றபடி ஓட்டுனர் நடத்துனர் போல் நின்று கொண்டிருந்தவர்களிடம், “கோவிந்தபுரத்துல நிறுத்துவீங்களா?” என்றேன். “ஏளி க்காழுங்க, வன்” என்றார் ஒருவர். வெற்றிலைச்சாறு என் மேல் தெறிக்கும் போல் இருந்தது. பஸ்சுள் ஏறும்படி சைகை செய்தார் மற்றவர்.

பஸ்சுள் ஏறிக் கடைசி வரிசையில் தென்பட்ட இடத்தில் உட்கார்ந்தேன். இடப்புறத்திலிருந்தவர், கால் விரல்களில் அழுக்காக பேன்டேஜ் அணிந்து கால்களை உயர்த்தி பஸ் படிச்சுவர் மேல் வைத்து சாய்ந்து உட்கார்ந்திருந்தார். வலப்புறம் இரண்டு சிறுவர்கள். அவர்களைத் தாண்டி ஜன்னலோரமாக ஒரு நடுத்தர வயதுக்காரர். என்னுடைய தோள்பையை எனக்கும் பேன்டேஜ் காரருக்கும் இடையே வைத்துவிட்டு என்னால் வசதியாக உட்கார முடிந்தது. பத்து நிமிடங்களுக்குள் எல்லா இருக்கைகளிலும் கூட்டம் பரவத் தொடங்கினாலும், இன்னும் கூட்டம் சேரக் காத்துக் கொண்டிருந்தார்கள் வெற்றிலை மென்று கொண்டிருந்தவர்கள்.

பஸ்சுக்குள் அவர் மூன்றாவது முறையாக இடம் மாறியதைக் கவனித்தேன். முதல் தடவை ஒரு பெண்ணுக்கு இடம் கொடுத்து எழுந்தார். அந்தப் பெண்ணை இடித்து விடுவது போல் எழுந்தாலும் ஒதுங்கி வழி விட்டார். “உக்காருங்க, கர்ப்பிணியா இருக்கீங்க” என்றார். அடுத்த முறை ஒரு வயதான ஆசாமிக்கு இடம் கொடுத்தார். அங்கே இங்கே மாறி மாறி உட்கார்ந்து வந்தவர்களுக்கு எழுந்து இடம் கொடுத்தவர், கடைசியாக எனக்கு இரண்டு வரிசைகள் முன்னால் வந்து உட்கார்ந்தார். சில நிமிடங்களில் இரண்டு குழந்தைகளுடன் பஸ் ஏறி வந்த கணவன் மனைவிக்கு அந்த இடத்தையும் கொடுத்தார். “உக்காருங்க, பரவாயில்லை. பிள்ளைங்க களைச்சிருக்காங்க” என்றபடி எழுந்து, இப்போது எனக்கு எதிரே நின்று கொண்டார். நபருக்கு நாற்பது வயதிருக்கலாம். காக்கி பேன்ட், சுருட்டி விட்ட முழுக்கைச்சட்டை, ஜோல்னாப்பை, ஹவாய் செருப்பு, நெற்றியில் விபூதிக்கீற்று. சராசரி உள்ளூர் வாசி.

நிற்கும் அளவுக்குக் கூட்டம் சேரத் தொடங்கிவிட்டது. “என்னாங்க, எல்லாருக்கும் எடம் குடுத்தீங்க, உங்களுக்கு சீட் இல்லை பாருங்க?” என்றார், ஜன்னலோர ஆசாமி.

“அதனால் என்ன? நின்னா கொறஞ்சா போயிடுவேன்?” என்றார் நபர்.

சிறுவர்கள் காரணமாக என் வரிசையில் கொஞ்சம் இடம் இருப்பது போல் தெரிந்தது. அதை அவர் கவனித்ததை நானும் கவனித்தேன். ‘சோணகிரி, கிடைச்ச சீட்டையெல்லாம் எழுந்து எழுந்து கொடுத்துட்டு, இங்கே இடம் பிடிக்கப் பார்க்கிறானே?’ என்று மனதுள் நினைத்துக் கொண்டேன்.

இதற்குள் டிரைவர் வண்டியில் ஏறி ஒலியெழுப்பினார். நடத்துனர் பஸ்சின் பின் படிக்கட்டருகே வந்து நின்றதும், சொல்லி வைத்தது போல் இருபது பேராவது ஏறி இருப்பார்கள். நிற்கக் கூட இடமில்லாமல் போய்விட்டது. நபர் கூட்டத்தில் சப்பையாகிக் கொண்டிருந்தார்.

வண்டி கிளம்பியதும் படியேறி வந்த நடத்துனர் எங்களுக்கெல்லாம் டிகெட் கொடுத்தார். “கோவிந்தபுரம் எவ்வளவு?” என்றேன். “நாலு ரூவா” என்றார். பர்சைத் திறந்தால் ஒரே ஒரு ஐம்பது ரூபா நோட்டு மட்டும் இருந்தது. எடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு, “சில்லறை இல்லேன்னா இறங்குங்க” என்றார் நடத்துனர்.

இருந்த சில்லறையை முன் யோசனையில்லாமல் காபி குடிக்கச் செலவழித்த கடுப்பில், “சாரிங்க. சில்லறையை நீங்களே வச்சுக்குங்க சார், டிகெட் கொடுங்க” என்றேன். இதைக் கவனித்த நபர், “நான் வேணும்னா நாலு ரூவா கொடுத்துடறேன், ஆபத்துக்கு பாவமில்லே, வாங்கிக்குங்க” என்றார்.

நான் அசடு வழிவதைப் பார்த்த நடத்துனர், என் கையிலிருந்த ஐம்பதைப் பிடுங்கித் திட்டிக்கொண்டே டிகெட்டும் சில்லறையும் கொடுத்தார். கொடுத்ததை எண்ணிப் பார்க்காமல் பர்சில் திணித்து பேன்ட் பைக்குள் போட்டுவிட்டு வசதியாக உட்கார்ந்து கொண்டேன்.

நபர் டிகெட் வாங்காமல் ஒதுங்கி ஒதுங்கி வந்து எனக்கும் என் இடப்புறம் இருப்பவருக்குமிடையே இருந்த இடத்தில் உட்கார முயற்சித்தார். பேன்டேஜைப் பார்த்துவிட்டு அருவருப்பை மறைத்து ஒதுங்கியிருந்த எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வே. என் மடி மீதே உட்கார்ந்து விட்ட நபரை என்ன செய்ய? எழுந்து இடம் கொடுத்தேன்.

“உக்காருங்க சார், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்” என்றார் நபர்.

“பரவாயில்லை” என்றேன்.

“இறங்கப் போறீங்களா?” .

“இல்லை, நீங்க உட்காருங்க. நான் நிக்கிறேன், பரவாயில்லை” என்றபடி முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

நடத்துனர் நபரிடம் எரிந்து விழுந்தார். “ஏன் சார், இப்பத்தானே அந்த வரிசைல டிகெட் கொடுத்து முடிச்சேன்? சீட்டை வாங்கிட்டு ஒக்காருமய்யா. எங்க போவணும்?” என்றார்.

“கபிஸ்தலம்” என்றார் நபர்.

நடத்துனருக்குக் கோபம் வந்துவிட்டது. “அதா ஆடுதுறைனு பெரிய எழுத்துல எழுதியிருக்குதே முன்னால? ஏறிக்கிட்டு கபிஸ்தலம்னா எப்படி? இறங்குய்யா” என்று விசிலடித்து நிறுத்தினார்.

“மன்னிச்சுருங்க, எனக்குப் படிப்பறிவில்ல. வேணும்னா ஒரு ரூபாய்க்கு சீட்டு கொடுத்துருங்க” என்று அசடு வழிந்தபடி எழுந்து இறங்கினார் நபர். “இறங்குய்யா போதும்” என்று நடத்துனர் சலித்ததைப் பார்த்ததும், நபர் மேல் பரிதாபம் தோன்றியது.

பழைய இடத்தில் உட்கார்ந்தேன். பஸ் கிளம்பியதும் டிகெட் கொடுக்க முன்னேறினார் நடத்துனர். சுவாமிமலை திருப்பம் தாண்டி சில நிமிடங்களுக்குள் பஸ்சில் கலவரம். “என் பர்சைக் காணோமுங்க” என்று ஒரு குரல் வந்தது. தொடர்ந்து “பர்சை எடுத்துட்டான்யா எவனோ?” என்று பல ஆத்திரக் குரல்கள். “நிறுத்துயா, பஸ்சை போலீசுக்கு விடச்சொல்லுயா” என்று இன்னொரு குரல். பஸ் நின்றது. ஒரு உந்துதலில் என் பேன்ட் பையைத் தொட்டுப் பார்த்தேன்.

“என்ன சார்? உங்க பர்சைக் காணோமா?” என்றார் பேன்டேஜ்காரர்.

ஆமோதித்தேன்.

“அந்த விபூதி ஆளுதேன். எல்லார் பர்சையும் திருடிப்புட்டு கபிஸ்தலம்னு சொல்லி இறங்கிட்டு ஓடிட்டான்யா” என்றார் ஜன்னல் சீட்காரர்.

டிரைவர் கத்தினார். “போலீசுக்கெல்லாம் விடமுடியாது. வேணும்னா திருபுவனம் போலீஸ் டேசன் கிட்டே நிறுத்துறேன். பர்சைத் தொலைச்சவனெல்லாம் இறங்கிப் புகார் கொடுங்க. கவனமா இல்லாம இப்ப கூச்சல் போட்டு என்னத்த?” என்றார்.

“டிகெட் வாங்கக் கூட காசில்லை டிரைவரே”, “இந்த மாதிரி ஆளுங்களைச் சுடணும்” போன்ற பலத்த முணுமுணுப்புக்களிடையே அடுத்த பத்து நிமிடங்களுக்குள் திருபுவனம் போலீஸ் ஸ்டேசன் எதிரே எங்களை இறக்கி விட்டு விரைந்தது பஸ். முன்பெல்லாம் நடத்துனரோ டிரைவரோ உள்ளே வந்து புகார் கொடுப்பார்கள். அந்தப் பழக்கம் நின்றுவிட்டது. அவர்களுக்கு ட்ரிப் சீட் எழுத வேண்டும். தாமதமானால் ட்ரிப் பேட்டா பணம் நின்று விடும். அவரவர் சிக்கலும் அவசரமும் அவரவருக்கு.

பஸ்சிலிருந்து இறங்கியக் கூட்டம் போலீஸ் ஸ்டேசனுள் போவதைப் பார்த்து விட்டு, வெளியே சிறிய கூட்டம் சேர்ந்து விட்டது. திடீர் பிரபலம் கிடைத்த களிப்பில் காவல் ஏட்டு சுறுசுறுப்பாக இயங்கினார். கூட்டத்தை அடக்கி விட்டு, எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். ஆள் அடையாளம், பர்ஸ் நிறம், பறிபோன பண விவரம் என்று எங்களைப் பல கேள்விகள் கேட்டார் அங்கிருந்த இன்ஸ்பெக்டர். என்னவோ உடனே செயலில் இறங்கப் போகிறவர் போல். “படிச்சவராட்டம்” இருந்ததால் என்னிடமே எல்லாக் கேள்விகளையும் கேட்டார். புகாரெல்லாம் கொடுத்துவிட்டுக் கிளம்ப ஒரு மணிக்கு மேலானது. பணம் பறிகொடுத்தவர்கள் புலம்பிக்கொண்டே கலைந்து போனார்கள். தொலைத்த பணம், தொலைந்தது தான். போலீஸ்காரர் எங்கே கண்டுபிடிக்கப் போகிறார்? நாங்கள் கிளம்பியதும் எதிர் டீக்கடையிலிருந்து ஒரு ஓசி காபி சாப்பிட்டு, வீட்டுக்குக் கிளம்புவார். இதெல்லாம் மாறாது. ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவரும் இருப்பார்.

சித்தாந்தச் சிந்தனைகளோடு எதிர் டீக்கடையுள் நுழைந்தேன். “டபுள் ஸ்டிராங்க் சக்கர கம்மியா ஒரு காபி கொடுப்பா” என்றேன். மூலையில் தனித்திருந்த மேசை நாற்காலியில் உட்கார்ந்தேன். தோள்பையை இறக்கி வைத்தேன்.

தோள்பையினுள் ஆறேழு பர்சுகள் இருந்தன. என் மேல் உட்காரும் சாக்கில் நபர் என் பர்சை எடுக்கும் போது, அவருடைய ஜோல்னாப் பையிலிருந்து நான் அடித்தவை.

மேம்போக்காகச் சோதித்த போது எல்லாப் பர்சும் சேர்த்து நானூறு ரூபாய்க்கு மேல் தேறும் போலிருந்தது. நல்ல லாபம். அடுத்து எந்தப் பஸ்சைப் பிடிக்கலாமென்று நினைத்தபடி, காபியை நிதானமாகக் குடித்தேன்.

- 2010/03/01 

தொடர்புடைய சிறுகதைகள்
இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும் தர்மிஷ்டராகவும் இருந்து, இகத்தில் இன்பங்களை எல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர். அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ...
மேலும் கதையை படிக்க...
நியூஜெர்சி அருகே ஸ்டாக்டனில், ஸ்டாப் அன்ட் ஷாப்பில், வேலை பார்க்கிறேன். வாடிக்கை சேவையாளர் என்று வேலைக்கு எடுத்த போது கொடுத்த பதவி, பெயருக்குத் தான். காசாளர் வேலை, பிலாஸ்டிக்கா பேப்பரா என்று கேட்டு பொட்டலம் கட்டுவது, ஸ்டாக் ரூமில் மளிகை அடுக்குவது, காய்கறி ...
மேலும் கதையை படிக்க...
திரிலோகசந்தர் பார்வதி தம்பதிகளின் ஒரே மகனாகிய ரமணி என்னும் நான், சுய நினைவோட எழுதின கடிதம்: நான் தற்கொலை செய்ய முடிவு செஞ்சிருக்கேன். அதுக்குக் காரணம் இருக்குதுங்க. என் உயிர் நண்பன் ராஜூவின் மனைவியைக் கொலை செஞ்சது நான் தான். அந்தக் குற்றத்தோட ...
மேலும் கதையை படிக்க...
கனவுகளின் மகிழ்ச்சியை விட, கனவுகளின் நம்பிக்கையை விட, கனவுகளின் வலி சிலருக்குப் பிடித்திருக்கிறது. என் குரோம்பேட்டை நாட்களின் அதிகம் பழகாத நண்பன் ஸ்ரீரங்கன். ஒன்பதாம் வகுப்பில் எங்கள் பள்ளியில் சேர்ந்தான். கரிய நிறம். களையான முகம். சம்மர் கட் என்று அந்த நாளில் ...
மேலும் கதையை படிக்க...
வேகமாக நடந்த புங்கவர்மனைத் தொடர்ந்தாள். "மன்னா.. மன்னா" "என்னா?" "நான் சொல்வது காதில் விழாதது போலச் செல்கிறீர்களே? என் கணவருக்கு உறவோ என்று நினைத்துவிட்டேன்.. எனக்கு உதவி செய்வீர்களா?" "பெண்ணே.. அரக்கன் கணவன் காப்பாற்று போன்ற வசனங்களெல்லாம் கூத்துக்குப் பொருந்தும், சோத்துக்குப் பொருந்தாது. ஆளை விடம்மா" "உங்களால் ...
மேலும் கதையை படிக்க...
குதிரைக்கு ஏன் கொம்பில்லை?
வாலன்டியர்
மன்னிப்பு
மன விலங்கு
வந்தவளை – எங்கள் சவடால் 2K+11

தூண்டில் மீது ஒரு கருத்து

  1. தி.தா.நாராயணன் says:

    கதை நன்றாயிருந்தது.எத்தனுக்கு எத்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)