திட்டமிட்டக் கொலை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 22,870 
 

சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்தக் கம்பெனியில் வனிதாவுக்கு ஒரு தற்காலிக வேலை கிடைத்ததும் பூரித்துப்போனாள். அவளது மூன்று வருடக் கொலைக் கனவு நனவாகப் போகிறது என்பதால் சந்தோஷித்தாள்.

ஜெயராமனைக் கொல்ல, மூன்று வருடங்களுக்கு முன்பே – வனிதாவின் அக்கா தற்கொலை செய்துகொண்டபோதே – எடுத்த முடிவுதான் என்றாலும், கொலைக்கான சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

எம்.காம் படித்திருந்த வனிதா, கடந்த மூன்று வருடங்களாக அந்த ஒரே கம்பெனியில் மட்டுமே வேலைக்கான முயற்சியில் விடாது ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். தற்போது அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட் ரம்யா பிரசவத்திற்காக மூன்று மாதங்கள் லீவில் செல்வதால், அந்த இடத்தில் தற்காலிகமாக வனிதாவை மெரிட்டில் தேர்வு செய்தார்கள்.

ஜெயராமனைக் கொலைசெய்யக் குறிவைத்து காத்திருந்து காத்திருந்து அவன் வேலை செய்யும் கம்பெனிக்குள்ளேயே புகுந்துவிட்டாள். ஆனால் தற்காலிக வேலை. அது பரவாயில்லை. அவனைக் கொல்ல இந்த மூன்று மாதங்கள் போதும்.

திங்கட்கிழமை காலை ஒன்பது மணிக்கு தன்னுடையை ஐடி கார்டை ஸ்வைப் செய்துவிட்டு அக்கவுண்ட்ஸ் சென்று அமர்ந்தாள். அந்த டிப்பார்ட்மெண்ட்டில் வனிதாவைத் தவிர மரகதம் என்ற ஒரேயொரு பெண்.

கணக்காளர் என்கிற அறிவிப்புடன் வலது கோடியில் அமர்ந்திருந்த ஜெயராமனை அடையாளம் கண்டுகொண்டு சில வினாடிகள் அவனையே கண்கொட்டாமல் பார்த்தாள்.

வந்துட்டேண்டா வந்துட்டேன்… வனிதாவின் மனம் பழி உணர்ச்சியுடன் உள்ளுக்குள் பொருமியது. நீதானே என் அக்காவைக் காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி மோசம் செய்தது? அவள் கர்ப்பத்துக்கு காரணமாகி பின்பு மதுரையிலிருந்து சென்னைக்கு ஓடிவந்து அவளைக் கைவிட்டது? தன்னையே உன்னிடம் அர்ப்பணித்து ஏமாந்த அவள் தற்கொலை செய்துகொண்டதுகூட உனக்குத் தெரியாது. இப்ப நீ ஒரு பெரிய கம்பெனியில் மரியாதைக்குரிய கணக்காளர்… சீக்கிரமா உன் கணக்கை முடிக்கிறேண்டா நாயே.

வனிதா தனக்கு இடப்பட்ட பணிகளை செய்துகொண்டே ஜெயராமனையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். மதியம் ஒருமணிக்கு ஜெயராமனுக்கு உணவு வீட்டிலிருந்து வந்தது. மரகதம் வனிதாவை டைனிங்ஹாலுக்கு அழைத்துச் சென்றாள்.

டைனிங்ஹாலில் இன்னும் பலபேர் சாப்பிட வந்திருந்தார்கள். ஜெயராமனும் கேரியரை அங்கு எடுத்துவந்து சாப்பிட உட்கார்ந்தான். வனிதாவிற்கு தான் நடிக்கப்போகும் நாடகத்தை செம்மையாக நடிக்க முடியுமா என்று மலைப்பாக இருந்தது. அவள் இந்த நிறுவனத்திற்கு வந்திருக்கும் நோக்கமே வேறு.

மனம் முழுவதும் ஜெயராமனை பற்பல விதங்களில் கொலைசெய்கிற காட்சியே மறுபடியும் மறுபடியும் ஓடிக்கொண்டிருந்தது. கொலையைத் தவிர வேறு ஒவ்வொன்றுமே வனிதாவிற்கு சலிப்பூட்டியது. ஜெயராமனை ஓரக்கண்ணால் பார்த்தவாறே மரகதம் தந்த தக்காளி சாதத்தை சாப்பிட்டு முடித்தாள்.

ஜெயராமனும் சாப்பிட்டு முடித்தான். திட்டமிட்டிருந்தபடி வனிதா கையைத் துடைத்துக்கொண்டே ஜெயராமனிடம் சென்றாள்.

“குட் ஆப்டர்நூன் சார்… நான்தான் உங்க செக்ஷனுக்கு லீவ் வேகன்ஸிக்கு வந்திருக்கேன். என் பெயர் வனிதா…” புன்னகைத்தாள்.

“குட் ஆப்டர்நூன்… ஐயாம் ஜெயராமன். ஏன் நிக்கறீங்க? இப்படி உட்காருங்களேன்…”

வனிதா அவனருகில் அமர்ந்துகொண்டாள்.

“வேற எங்கேயும் இதுவரைக்கும் உங்களுக்கு வேலையே கிடைக்கலையா?”

“சரியான வேலை கிடைக்கலை சார்… ஒண்ணு இந்த மாதிரி லீவ் வேகன்ஸில கிடைக்குது… இல்லேன்னா அம்பத்தூர் ஆவடின்னு கெடைக்குது.”

“உங்களுக்கு வீடு எங்கே?”

“மயிலாப்பூரில்…” – பொய் சொன்னாள்.

“உங்களுக்கு எங்கே சார் வீடு?” மிக மிகக் கவனத்துடன் கேட்டாள்.

“நான் இருப்பது நங்கநல்லூரில்… விஜெய் பில்டர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்.”

மொபைலில் ஏதோ அழைப்பு வர, ஜெயராமன் அதில் கவனம் செலுத்தினான்.

வனிதா அவன் பேசுவதையே வெறித்துப் பார்த்தாள். பிள்ளையார் சுழி போட்டுவிட்ட கர்வம் அவள் கண்களில் கரைபுரண்டது. தற்கொலை செய்துகொண்ட அக்காவின் ஆத்மா சாந்தி அடைகிற வேளை நெருங்கிவிட்டது என்ற சந்தோஷத்துடன் அவளுடைய இருக்கையை நோக்கி நடந்தாள்.

திட்டமிட்டபடியே வனிதா நாளடைவில் ஜெயராமனுக்கு மிகவும் நெருக்கமானாள். அதேசமயம் ஆபீஸில் அவனிடம் அந்த நெருக்கத்தை வெளிக்காட்டவில்லை. எல்லாமே வெளியில்தான். ஜெயராமனோட வாழ்நாளை சித்ரகுப்தன் எண்ண ஆரம்பிச்சுட்டான். அது தெரியாம ஜெயராமன் வனிதாவின் நெருக்கத்தில் உருகினான். மனைவியிடம் அடிக்கடி பொய்சொல்லி வனிதாவுடன் ஊர் சுற்றினான்.

அன்று அவர்கள் இருவரும் பீச்சில் அமர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். “நீ நம்ம ஆபீஸ்ல ஜாய்ன் பண்ணி ரெண்டு மாசம்தான் ஆச்சு… ஆனா எத்தனையோ மாதங்கள் ஆனமாதிரி இருக்கு வனிதா.”

“அவ்வளவு டீப்பா பழகிட்டோம்…”

“நெனச்சா எனக்கே ஆச்சரியமா இருக்கு. எப்படி இவ்வளவு ஈஸியா உன்கிட்ட இன்வால்வ் ஆனேன்னே தெரியல! அதுவும் கல்யாணமாகி ஒரு பிள்ளையும் பெத்த பிறகு!”

“இன்னும் ஒரேமாசம்.. அப்புறம் மறுபடியும் நான் வேறு வேலை தேடணும்.”

“இரு இரு… நான் நம்ம ஜிஎம் கிட்ட பேசிப் பார்த்து உன்னை நம்ம ஆபீஸ்ல கன்டினியூ பண்ண முடியுமான்னு பாக்கறேன்…”

“வேண்டாங்க நம்மைப் பத்தி ஏதாவது தப்பா நெனச்சிடப் போறாங்க…”

“ஆபீஸ்லதான் நாம இப்ப பேசிக்கிறதுகூட இல்லையே?”

“ஆமாங்க நாம ரொம்பக் கவனமா இருக்கணும்…”

“முதல்ல என் வொய்ப்கிட்ட உன்னைப் பத்தி ரெண்டு மூணு தடவை சொன்னேன்… ஆனா உனக்கும் எனக்கும் க்ளோஸ் ரிலேஷன்ஷிப் டெவலப் ஆனப்புறம் உன்னைப் பத்தி பேசறதையே டக்குன்னு நிறுத்திட்டேன்…”

“நம்ம ரிலேஷன்ஷிப் இப்படியே தொடர்ந்தாலும் போதும் ஜெய்…”

“சொன்னா நீ நம்பமாட்டே வனிதா! என் ஜாதகப்படி எனக்கு ரெண்டு தார யோகம்!”

வனிதா உள்ளுக்குள் சினம் கொண்டு சிலிர்த்தாள். ரெண்டு தார யோகமா? பொறுக்கி ராஸ்கல்! நியாயப்படி பார்த்தால் உனக்கு ஒரு தாரம்கூட இருக்கக்கூடாது…! இன்னும் சொல்லப்போனால் உன்னை நான் இத்தனை நாட்கள் உயிரோட விட்டதே தப்பு… இரு இரு சீக்கிரமே உன் கதையை முடிக்கிறேன்… அல்பனுக்கு வாழ்வு வந்தா ரெண்டுதாரம் என்ன; மூணு தாரம்கூட கட்டிப்பான். அல்பாயிசில போகப் போறோம்னு தெரியலை பயலுக்கு…

“என்ன வனிதா ஒண்ணுமே பதில் சொல்லாம இருக்கே?”

“அதெல்லாம் நடக்காதுங்க. சும்மா கற்பனையை வளர்த்துக்காதீங்க…”

மறுநாள் டைனிங்ஹாலில் இருந்த ஜெயராமனுக்கு மொபைல் வந்தது. ஜெயராமனுடைய மாமனார் பேசினார். அவன் மச்சினியை யாரோ பெண்பார்த்துட்டு போனாங்களாம்… பத்துநாளில் நிச்சயதார்த்தமாம். அதுக்காக அவன் பெண்டாட்டியை உடனே தஞ்சாவூருக்கு அனுப்பிவைக்கச் சொன்னார்.

அங்கிருந்த வனிதாவுக்கும் அவன் பேசியது கேட்டது. அவளின் மனக்கடலில் அந்த பேச்சு பெரிய புயலைக் கிளப்பியது…

ஜெயராமனின் மனைவி தஞ்சாவூர் போகப்போகிறாள். வீட்ல அவன் தனியாக இருக்கப் போறான்னு தெரிஞ்சதும் அவளுக்குள் கைகளை விரித்துக்கிடந்த கொலைகார ஆக்டோபஸ் சிலிர்த்து எழுந்தது. ஜெயராமனை தீர்த்துக் கட்டுகிற வேளை வந்துவிட்டது என்பது அவளுக்குத் தெரிந்தது.

அடுத்தநாள் ஜெயராமன் பீச்சில் வனிதாவை சந்தித்தபோது சனிக்கிழமை இரவு தன் வீட்டுக்கு அவளை வரச்சொன்னான். வனிதா உடனே ஒப்புக்கொண்டாள்.

சனிக்கிழமைக்கு இன்னும் மூன்று நாட்கள்தான் இருந்தன.

மறுநாள் மாலை வனிதா தனியாகச் சென்று ஒரு ஜோல்னா பை; மெட்ராஸ் ரேஸ் பற்றிய லேட்டஸ்ட் புக்; பெரிய சைஸ் ஹவாய் சப்பல்; உள்பாவாடைக்கான நாடா ஆறு மீட்டர்; ரெண்டு காட்டன் சாக்ஸ் ஆகியவைகளை வாங்கினாள்.

அவனை எளிதாக விஷம் வைத்து கொன்றுவிட முடியும். ஆனால் அவனை கழுத்தை நெறித்து துடிக்க துடிக்க சாவடிக்க வேண்டும். அக்கா தூக்கில் தொங்கியபோது கழுத்து நெரிபட்டு எவ்வளவு துடித்திருப்பாள்? நான்குமாத கர்ப்பிணி என்பதால் பனிக்குடம் உடைந்து அக்காவின் அல்குல் வழியாக ரத்தம் தொடைகளில் வழிந்து; அக்காவின் கால்களை தூக்கிப் பிடித்த தன் கைவிரல்களிலும் ரத்தம் பிசு பிசுத்ததே! வரேண்டா….

சனிக்கிழமை ஜெயராமன் வீட்டுக்கு போகும்போது இந்தப் பெரிய ஹவாய் சப்பலை அணியவேண்டும். அவளுடைய கால்தடம் அவன் வீட்டில் விழவே விழாது. பெரிய ஹவாய் சப்பலோட தடம்தான் விழும். அதைப் பார்த்து கொலைசெய்தது ஒருபெண் என்கிற உண்மை போலீசுக்கு தெரியாமப் போயிடும். ரேஸ் புத்தகத்தை அவன் வீட்டில் விட்டு விடவேண்டும்.

எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் போலீஸுக்கு தடயங்கள் கிடைக்கத்தான் செய்யும். அதனால் கூடியவரைக்கும் தவிர்க்க முடியாத தடயங்களை, தப்பான தடயங்களாக ட்விஸ்ட் பண்ணிடனும். அது போலீஸை மிஸ்லீட் பண்ணிடும். நல்லா மிஸ்லீட் பண்ணிட்டா அப்புறம் போலீஸ் போகாத ஊருக்குத்தான் வழிதேடி அலையும்…

வீட்டுக்கு வந்ததும் உள்பாவாடைக்கான ஆறுமீட்டர் நாடாவை மூன்று சமமான அளவில் வெட்டி எடுத்து, அவைகளை ஒரு நுனியில் இணைத்து முடிச்சுப்போட்டாள். பின் அந்த மூன்று நாடாக்களையும் தலைப் பின்னல் நுனிகளைச் சேர்த்து இறுக்கி வலுவான நூல் போட்டு கட்டிக்கொண்டாள். ஜெயராமனோட கழுத்தை இறுக்கிக் கொல்ல உறுதியான கயிறு ரெடி!. காட்டன் சாக்ஸின் லேபிள்களை பிய்த்து எறிந்தாள்.

எல்லாம் ரெடி… இனி ஆப்பரேஷன்தான் !.

சனிக்கிழமை ஆபீஸ் ஹாலிடே. அன்று காலை பத்துமணிக்கு ஜெயராமன் மொபலில் வனிதாவிடம் உற்சாகத்துடன், “வனி…அவள ஊருக்கு அனுப்பிச்சுட்டேன்! நீ ராத்திரி பத்துமணிக்கு கிளம்பி ஓலா பிடிச்சு நங்கநல்லூர் ரோஜா மெடிக்கல்ஸ் வந்துரு… நான் அங்க என் ஸ்கூட்டர்ல வெயிட் பண்ணுவேன்….ராத்திரி என்கூட தங்கிடு. காலைல அஞ்சு மணிக்கு உன்னை பழவந்தாங்கல் ஸ்டேஷன்ல டிராப் பண்றேன்… யாரும் நம்மைப் பார்க்க சான்ஸே இல்ல…” என்றான்.

வனிதாவும் உற்சாகத்துடன் “சரி ஜெய்…” என்றாள்.

மாலையில் ஷவரைத் திறந்து வெதுவெதுவென வெந்நீரில் குளித்தாள். இரவு நன்றாகச் சாப்பிட்டாள். காது, கழுத்து, கைகளில் போட்டிருந்த நகைகளைக் கழட்டி பீரோவில் வைத்தாள். காயாமல் இருந்த தலைமயிரை நன்றாக இறுக்கமாக வாரி தூக்கி உசரமா கொண்டை போட்டுக்கொண்டாள். ஸ்டிக்கர் பொட்டை எடுத்து எறிந்தாள். கஞ்சி போட்டு வைத்திருந்த பழைய சாயம்போன நூல் புடவையைக் கட்டிக்கொண்டு, பவர் இல்லாத ஒரு மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டாள். இப்ப அவளை யார் பார்த்தாலும் வனிதான்னு சொல்லவே மாட்டாங்க…

புதுசா வாங்கியிருந்த ஜோல்னா பையை எடுத்து தோள்ல மாட்டிக்கிட்டா பையில் சப்பலையும், அந்த நாடாவில் தயாரித்த கயிற்றையும், ரேஸ் பற்றிய அந்தப் புத்தகத்தையும், காட்டன் சாக்ஸையும் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டாள். ஞாபகமாக கைக்குட்டை எடுத்துக்கொள்ளவில்லை.

சரியாக இரவு பத்துமணிக்கு பாலவாக்கம் பீச் ரோடில் உள்ள தன் வீட்டிலிருந்து நிதானமாக கிளம்பினாள். நடந்தே ஈசிஆர் ரோடிற்குச் சென்று ஓலா ஒன்றை ரோஜா மெடிக்கல்ஸ், நங்கநல்லூருக்கு புக் செய்தாள். அடுத்த மூன்று நிமிடங்களில் கார் வந்தது.

அவளுடைய லட்சியக் கொலையின் நிமிடத்தினை நெருங்கிவிட்ட பரவசம் அவள் கண்களில் மின்னியது. காருக்குள் அமர்ந்தபடியே அந்தப் பெரிய ஹவாய் சப்பலை காலில் அணிந்துகொண்டாள். பழைய செருப்பை வெளியே தூக்கி எறிந்தாள். ரோஜா மெடிக்கல்ஸில் இறங்கிக் கொண்டாள்.

உடனே ஜெயராமனின் ஸ்கூட்டர் அருகில் வந்து நின்றதும் அதில் ஏறிக்கொண்டாள். அபார்ட்மென்ட் செக்யூரிட்டி, மப்பில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

இருவரும் சத்தம் எழுப்பாது லிப்டில் ஏறிக்கொண்டு மூன்றாவது தளத்தில் இருந்த ஜெயராமன் வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டின் கதவைச் சாத்திவிட்டு, “வருக வருக என் தேவதையே…” ஜெயராமன் அவளை உணர்ச்சிப் பெருக்குடன் கட்டியணைத்து முத்தமிட்டான்.

ஹவாய் செருப்புகளுடன் நடந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

“குடிக்கத் தண்ணீர் வேண்டுமா?”

“முதல்ல கதவை நன்றாகப் பூட்டுங்க…”

அவன் கதவின் அனைத்துத் தாழ்ப்பாள்களையும் போட்டான்.

“ஏதாவது கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிடறியா வனி?”

“கொஞ்ச நேரம் ஆகட்டும் ஜெய்…”

“நீ நிஜமாவே என் வீட்டுக்கு வந்திருக்கேன்னு நெனச்சா சந்தோஷமா இருக்கு வனி.”

“எனக்கும் அப்படித்தான் ஜெய்…”

“நான் உனக்கு ஒரு பரிசு தரலாமா?”

“என்ன பரிசு?”

“என் வைப் கிட்ட எக்கச்சக்கமான பாரின் நைலக்ஸ் புதுப் புடவை இருக்கு. அதில் ஒண்ணு எடுத்துத்தரேன் உனக்கு…”

“ஊரிலிருந்து வந்ததும் பார்த்திடப் போறாங்க…”

“பாக்கமாட்டா… அப்படியே பாத்தாலும் வேலைக்காரி திருடியிருப்பான்னு சொல்லிடறேன்.”

“வேலைக்காரி வருவாளா?”

“ஆமா.. காலையில் எட்டு மணிக்கு வருவா…”

ஜெயராமன் பீரோவின் இரண்டு கதவுகளையும் அகலமாகத் திறந்து காட்டினான்.

“வந்து உனக்கு வேண்டியதை எடுத்துக்க வனி…”

வனிதா எழுந்து கொள்ளவில்லை. “புடவைகளை இங்கேயே எடுத்துவந்து போடுங்க… பிடிச்சதா பார்த்து செலெக்ட் பண்ணிக்கிறேன்.”

“உனக்கு இல்லாததா?”

ஜெயராமன் இரண்டு கைகளிலும் நைலக்ஸ் புடவைகளை அள்ளி எடுத்து வந்து சோபாவில் போட்டான். சில புடவைகள் கீழே விழுந்தன. வனிதா ஒன்றையும் தொடவில்லை. பேசாமல் புடவைகளைப் பார்த்தாள்.

“உங்க பேன்ட் ஷர்ட் எல்லாத்தையும் கொண்டுவந்து போடுங்களேன்… அதையும் பார்க்கிறேன்…”

“ஓயெஸ்…” ஜெயராமன் ஆர்வத்துடன் அவனுடைய உடைகளையும் எடுத்துவந்து வனிதாவின் முன் போட்டான்.

“ஒவ்வொரு ஷர்ட்டும் ரொம்ப காஸ்ட்லி வனி. எல்லாம் சிங்கப்பூரில் வாங்கியது.”

“டீ போடத் தெரியுமா உங்களுக்கு?”

“ஓ தெரியுமே… வேணுமா?”

“ஆமா. டயர்டா இருக்கு எனக்கு.”

“ஒரே நிமிஷம் இரு. சூடா மசாலா டீ போட்டுக் கொண்டுவரேன். அது வரைக்கும் இந்தப் புடவைகளைப் பார்த்து உனக்கு பிடிச்ச கலர்ல எடுத்துக்க.”

ஜெயராமன் வேகமாக கிச்சனுக்குள் போனான்.

சரேலென வனிதாவுக்குள் காத்திருந்த கருநாகம் படமெடுத்து தலையை உயர்த்தியது. எழுந்து நின்றாள். பீரோ திறந்து கிடந்தது. புடவைகளும், ஷர்ட் பேன்ட்களும் சோபாவில் நிறைந்திருந்தன. பையில் வைத்திருந்த உறுதியான கயிற்றை வனிதா எடுத்தாள்.

கிச்சனில் கேஸ் அடுப்பு பற்ற வைக்கைபடும் சப்தம் கேட்டது. வனிதா கயிறின் இரண்டு முனைகளையும் இரு கைகளிலும் பிடித்தவாறு ஒருநிமிடம் நின்றாள். மெதுவாக கிச்சனை நோக்கி நடந்தாள். அவளுக்குத் தேவையான வசதிப்படி ஜெயராமன் முதுகைக் காட்டிக்கொண்டு டீ தயாரிக்கும் மும்முரத்துடன் வனிதாவைக் கவனிக்காமல் நின்றான். வனிதா அடிமேல் அடி வைத்து அவனின் பின்னால் நெருங்கினாள். இரண்டு மீட்டருக்கு முறுக்கப்பட்ட கயிறு அவளின் தலைக்கு மேல் உயர்ந்தது.

சரியாக அளவு பார்த்து கயிறை ஜெயராமனின் தலைக்குமேல் வீசி கழுத்தின் முன்புறத்தை அழுத்தி அசுர வேகத்தில் பின்னால் இழுத்துப் பறித்து அவனை அப்படியே நிலைதவறி தரையில் விழ வைத்தாள். அவன் விழுந்த கணத்தில் மின்னலாய்ச் செயல்பட்டு; இடதுகை பற்றியிருந்த கயிற்று முனையை இரண்டு கால்களால் மிதித்துக் கொண்டு; வலது முனை கயிறால் அவனின் கழுத்தை ஒரு சுற்றுச் சுற்றி இரண்டு கைகளாலும் அந்த முனையை மேல்நோக்கி தன் பலம் பூராவையும் குவித்து உயர்த்தி இழுத்தாள்.

அந்த இறுக்கமான கிடுக்கிப் பிடியில் ஜெயராமனின் கழுத்து இறுகிப் பிழியப்பட்டு நெரிக்கப்பட்டதில், மறுத்து, பின் அடங்கி ஒடுங்கியது. உடல் துவண்டு மறுக்காமல் ஓய்ந்துவிட்ட பின்னும் வனிதாவின் கிடுக்கிப்பிடி நீங்கவில்லை. கால்களின் கீழ் ஒரு முனையும்; கைகளுக்குள் ஒரு முனையும் ஜெயராமனின் கழுத்தை நசுக்கியபடி நிலை கொண்டிருந்தன. வனிதாவுக்கு மூச்சு வாங்கியது. உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. கண்களை மூடியவாறு சற்றுநேரம் நின்றாள். அவளுடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் தளும்பி நிறைந்திருந்தது. கயிறைப் பிடித்திருந்த பிடியை தளர்த்தினாள். ஹவாய் செருப்பின் கீழிருந்த இன்னொரு முனையை, காலை நகர்த்திப் பார்த்தாள். அவளின் காலடியில் ஜெயராமன் வாய் பிளந்து கண்கள் பிதுங்கி பிரேதமாகக் கிடந்தான்.

வனிதா அப்படியே நகர்ந்து ஹாலுக்கு வந்தாள். கயிறை சுருட்டி பத்திரமாக பையில் வைத்தாள். காலுறைகளை எடுத்து இரண்டு கைகளிலும் அணிந்துகொண்டு கிச்சனுள் சென்று கேஸ் அடுப்பு எரிவதை நிறுத்தினாள். கிச்சன் லைட்டை அணைத்தாள். ஹாலுக்கு வந்து ரேஸ் புக்கை பையிலிருந்து எடுத்து தரையில் வீசினாள். யோசித்துப் பார்த்தாள். சுற்றிலும் பார்த்தாள். எல்லாம் கச்சிதமாக நடந்து முடிந்திருந்தது. சோபாவில் கிடந்த நைலக்ஸ் புடவைகளைப் பார்த்தாள். புடவை பரிசாகத் தருகிறானாம்! பொறுக்கி ராஸ்கல்.

வீட்டின் கதவை வெறுமனே சாத்திவிட்டு, கையில் போட்டிருந்த சாக்ஸை எடுத்து தன் ஜோல்னாப்பையில் வைத்தாள். நடந்தே பழவந்தாங்கல் ஸ்டேஷனுக்குச் சென்றாள்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு வேலைக்காரி ஜெயராமன் வீட்டுக்கு வந்தபோது விஷயம் தெரிந்து போலீஸ் வந்தது. எல்லோரையும் விசாரித்தது. திங்கட்கிழமை ஆபீஸுக்கும் போலீஸ் வந்து விசாரித்தது. ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. போலீஸுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. .

பீரோ திறந்து கெடக்கு; புடவை, ஷர்ட் பேன்ட்கள் சோபாவில் சிதறிக் கிடக்கிறது. எல்லா இடத்திலும் ஜெயராமனின் கை ரேகைகள் மட்டுமே இருக்கிறது. எதுவுமே திருட்டுப் போகலை. கொலைக்கு என்ன நோக்கம்னே ஊகிக்க முடியவில்லை. துப்பு ஒண்ணுமே கிடைக்கலை. கிடைத்த ஒரேதுப்பு கொலைகாரன் ரேஸுக்கு போகிறவனாக இருக்கலாம் என்பது மட்டுமே.

மூன்றுமாத லீவில் பிரசவத்துக்கு போன ரம்யா திரும்பி வந்ததும், ஜிஎம் வனிதாவைக் கூப்பிட்டு அவள் நன்றாக வேலை செய்ததாக பாராட்டி, அடுத்தமுறை ஏற்படும் வேகன்ஸிக்கு அவளை கண்டிப்பாக அழைப்பதாக சொன்னார். வனிதா, தான் வந்த வேலை முடிந்த திருப்தியில் சந்தோஷமாக அந்த ஆபீஸைவிட்டு வெளியேறினாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “திட்டமிட்டக் கொலை

  1. போலீஸ் இறந்தவரின் செல்போன் கால் ரெகார்டை பார்ப்பார்களே. எத்தனை கேசில் பார்த்திருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *