சோதனை

 

பொலிஸ் நிலையத்தில் இருக்கும் அந்தச் சிறிய அறைக்குள் என்னைத்தள்ளி இரும்புக் கதவைக் கிறீச்சிட இழுத்துச் சாத்தியபோது நான் கதவின் கம்பிகளைப் பிடித்தவாறு கெஞ்சினேன்.

“ நாளை எனக்குச் சோதனை…. என்னைச் சோதனை எழுத அநுமதியுங்கள்…. நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.”

இந்த இரண்டு வருடப் பல்கலைக் கழக வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட அரைகுறைச் சிங்களத்தில் கெஞ்சியது அந்தப் பொலிஸ்காரனுக்கு விளங்காமலிருக்க நியாயமில்லை.

“காகன்ட எப்பா; நிக்கங் இன்ட” அவன் அலட்சியமாகக் கூறியபடி வெளியே பூட்டைப்போட்டுப் பூட்டினான்.

எனது கண்கள் கலங்கின. மயக்கம் வருவதுபோல இருந்தது. அடிவயிற்றைக் குமட்டியது. விழுந்துவிடாமல் இருக்கவேண்டுமே என்ற உணர்வில் மெதுவாகத் தரையில் அமர்ந்தேன். அறையின் ஒரு மூலையிலிருந்து குப்பென்று சிறுநீரின் நெடி வீசியது.

எதிரே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறையிலிருந்து வந்த ‘மெர்க்குரி பல்ப்’பின் வெளிச்சம் நானிருந்த அறையின் கதவினூடாக உள்ளேயும் வந்து விழுந்தது. கதவின் இரும்புக் கம்பிகள் ஏற்படுத்திய கருநிழல்கள் ஆரம்பத்தில் ஒடுங்கியும் பின்னர் சற்று விரிந்தும் ஓர் அரக்கனின் கைவிரல்கள் போல என்மேல் படர்ந்தன.

நிலையப் பொறுப்பதிகாரி அங்கு இருக்கவில்லை. அங்கிருந்த நான்கைந்து பொலிஸ்காரர்களும் அசட்டையாக ஏதேதோ தமக்குள் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் காதுகளில் ஒரு கருவியைப் பொருத்திக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு வரும் ‘ரேடியோ மெசேஜ்’களைப் பெறுவதும் இடையிடையே ஏதோ குறிப்பெடுப்பதுமாக இருந்தார்.

நான் இருந்த அறையின் வலதுபுறத்தில் இதுபோன்ற வேறும்சில அறைகள் இருக்கவேண்டும். அங்கு பலர் பலமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர். யாரோ ஒரு குடிகாரன் கத்துவதும் கேட்டுக் கொண்டிருந்தது.

கடந்த சிலநாட்களாக வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் உக்கிரம் அடைந்ததைத் தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. சந்திக்குச் சந்தி ‘செக் பொயின்ற்’ சோதனைகள், ஆள் அறிமுக அட்டைப் பரிசீலனைகள், சுற்றிவளைப்புத் தேடுதல்கள், பரவலான கைதுகள், விரோதப் பேச்சுகள்….. ஏச்சுகள்……

நான் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது ஓர் எதிர்பாராத நிகழ்வுதான். இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு எனது அறைக்குவந்து படுப்பதற்கு ஆயத்தமானேன். நாளை நடக்கவிருக்கும் தவணைப் பரிட்சைக்கு வேண்டிய ஆயத்தங்களைத் திருப்தியாகச் செய்ததில் மனது லேசாக இருந்தது. அறை நண்பன் குமரேசன் மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்குப் போவதாகக் கூறிச்சென்றவன் இன்னும் திரும்பவில்லை.

அறைக் கதவைத் தள்ளிக்கொண்டு வீட்டின் சொந்தக்காரி சுதுமெனிக்கா உள்ளே எட்டிப்பார்த்தாள். என்றுமில்லாதவாறு அவளது முகத்தில் பதட்டம் தெரிந்தது.

“புத்தே, ஹம்முதாவ அவில்ல இன்னவா.” இராணுவத்தினர் வந்திருக்கிறார்கள் என அவள் கூறியதைக் கேட்டதும் என்மனம் திக்திக்கென அடித்துக்கொண்டது. பல்கலைக் கழகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று தேடுதல் நடக்கலாமென மூன்று நாட்களுக்கு முன்னரே குமரேசன் கூறியது என் நினைவில் வந்தது.

வீட்டின் முன்விறாந்தையில் சுதுமெனிக்காவுடன் இராணு வத்தினர் உரையாடுவது கேட்டது.

“இங்கு எத்தனைபேர் இருக்கிறார்கள்?”

“இரண்டு பேர்”

“ஏன் இவர்களுக்கு அறையை வாடகைக்குக் கொடுத்தீர்கள்?”

கிழவி மௌனம் சாதித்தாள்.

“நாங்கள் அவர்களை விசாரிக்கவேண்டும்.”

சுதுமெனிக்காவும் இராணுவத்தினரும் உள்ளே நுழைந்தனர். அவர்களுடன் இரண்டு பொலிசாரும் இருந்தனர்.

“கோ….. பென்னன்ட, ஐடென்ரிற்றி.”

எனது அறிமுக அட்டையை ஒருவன் வாங்கி முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு ஏதோ தனக்குள் முணுமுணுத்தான். வேறு இருவர் அறையில் இருந்த உடுப்புகள், புத்தகங்கள், மூலையிலிருந்த கட்டிலின் கீழ்ப்புறம், குப்பைக் கூடை, எல்லாவற்றையுமே புரட்டி எடுத்தனர்.

மேசையிலிருந்த எனது ‘என்ஜினியரிங்’ நோட்ஸ் கொப்பியை ஒருவன் எடுத்து விரித்தபோது அதற்குள் இருந்த புகைப்படங்கள் சில வெளியே விழுந்தன.

“இதென்ன போட்டோக்கள்?”

“சென்ற மாதம் என்ஜினியரிங் மாணவர்கள் ‘ஸ்ரடி ரூர்’ போனோம்; அப்போது எடுத்த போட்டோக்கள்தான் இவை.”

“மின் உற்பத்தி நீர்நிலையத்தின் அமைப்பு வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும். இந்தப் போட்டோக்களை யார் எடுத்தது?”

“எனது சகமாணவர்கள்… ரஞ்சித் சில்வா…. புஞ்சிஹேவா… இன்னும் பலர் புகைப்படங்கள் எடுத்தார்கள். அவற்றில் சில பிரதிகளை நான் பெற்றேன்.”

உண்மையில் எனது அறை நண்பன் குமரேசனும் அந்த மின் உற்பத்தி நிலையத்தின் அமைப்பினைப் பல்வேறு கோணங்களில் படம் எடுத்திருந்தான். அவன் எடுத்த படங்களில் சிலவும் அவற்றுடன் இருந்தன. இப்போது குமரேசனின் பெயரைக் கூறினால் சிக்கலாகிவிடும்.

“கோ அனித்தெக்கனா?”

மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றவன் இன்னும் திரும்பவில்லை என்ற விபரத்தைக் கூறினேன்.

“சரி, காற்சட்டையை அணிந்துகொண்டு எங்களுடன் வா; புறப்படு.”

எனது மனதைப் பயங் கௌவிக்கொண்டது. நண்பர்கள் கூறிய சித்திரவதைச் செய்திகள், வாவியில் மிதந்த பிணங்கள், எனது எதிர்காலம் தமது வாழ்வின் விடிவெள்ளியாக அமையுமென்ற கற்பனைகளுடன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் எனது ஏழைத் தாய்தந்தையர், இயக்கம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொண்டு திடீரெனக் காணாமல் போய்விட்ட எனது ஒரே அன்புத் தங்கை…. இப்படிப் பலவாறான எண்ணங்கள் எனது மனதில் தத்தளித்தன.

“விசாரிக்க வேண்டியதை இங்கேயே விசாரியுங்கள்….. தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள். நாளைக்கு எனக்குச் சோதனை இருக்கிறது.” நான் மன்றாடினேன்.

அவர்கள் விடுவதாயில்லை. “பயப்பட வேண்டாம், விசாரணை முடிந்ததும் உடனே அனுப்பிவிடுவோம்” என்றனர்.

சுதுமெனிக்காவும் அவர்களிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினாள். இரண்டு வருடங்களாக இவர்கள் இந்த அறையிலே தான் இருக்கிறார்கள். எந்தவிதத் தொந்தரவுக்கும் போக மாட்டார்கள் என்றெல்லாம் சொன்னாள்.

“நாங்கள் எங்களது கடமையைச் செய்யவேண்டியிருக்கிறது; கூடியவரை விரைவாகத் திருப்பியனுப்புவோம்.”

என்னை அழைத்துவந்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு மீண்டும் அவர்கள் தங்களது தேடுதல் நடவடிக்கைகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

அவர்கள் அறைக்கு வந்தநேரத்தில் குமரேசன் அங்கு இல்லாதது நல்லதாய்ப் போய்விட்டது. நாளைக்குச் சோதனை இருப்பதால் எப்படியும் குமரேசன் இதுவரையில் அறைக்கு வந்துசேர்ந்திருப்பான். சுதுமெனிக்கா எல்லா விபரங்களையும் அவனிடம் கூறியிருப்பாள்.

குமரேசனுக்குக் கொழும்பில் பலரைத் தெரியும். தேடுதலின்போது கைதானவர்களை விடுவிப்பதற்கு வேண்டிய வழிவகைகள் தெரியும். முன்பொருமுறை அவனை வெள்ளவத்தையில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் அவனது அறிமுக அட்டையைப் பறித்துக் கிழித்து வீசிவிட்டார்கள். ஆனாலும் அவனுக்கு வேண்டியவர்கள் மேலிடத்துடன் தொடர்புகொண்டு ஒருசில மணித்தியாலங் களுக்குள்ளேயே அவனை விடுவித்துவிட்டார்கள். அதற்காகப் பெருந்தொகைப் பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாக அவன் கூறினான். சிலநாட்களுக்குள் யார்யாரையோ பிடித்துக் கொழும்பு விலாசத்துடன்கூடிய அறிமுக அட்டையையும் பெற்றுக்கொண்டான்.

குமரேசனுக்கு எதிலுமே ஓர் அலட்சியப்போக்கு; பணத்தினால் எதையும் சாதித்துவிடலாம் என்ற நினைப்பு அதற்கேற்ப அவனது கையிலே நிறையப் பணம் புரண்டு கொண்டிருக்கும். உறவினர் யாரோ கனடாவிலிருந்து செலவுக்குப் பணம் அனுப்புவதாகச் சொன்னான்.

சிலவேளைகளில் அவனது போக்கு எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து விரிவுரைகளுக்குச் செல்லாமல் அறையிலேயே முடங்கியிருந்து ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பான். ஏனென்று கேட்டால் சிரித்து மழுப்பிவிடுவான். சில நாட்களில் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென எங்கோ புறப்பட்டுச் செல்வான். இரண்டு மூன்று நாட்கள் கழித்தே அறைக்குத் திரும்புவான். அவனை என்னால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

வேறொரு பொலிஸ்காரன் இப்போது அறையின் கதவைத் திறந்தான். இரண்டு நடுத்தரவயதான முரட்டு ஆசாமிகளை உள்ளே தள்ளிப் பூட்டினான்.

இருவரும் நன்றாகக் குடித்திருந்தனர். ஒருவன் அந்தப் பொலிஸ்காரனிடம் தனக்குப் பசிக்கிறதெனவும் சாப்பாடு தரும்படியும் அலட்சியமான தொனியில் கூறினான். பொலிஸ்காரன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

மற்ற ஆசாமி என்னை முறைத்துப் பார்த்தான். அவனை மாலைவேளைகளில் பல்கலைக் கழகத்திற்குச் சமீபமாகவுள்ள கடற்கரையோரத்தில் பார்த்திருக்கிறேன். அந்தப் பகுதியில் யாரோ போதைப் பொருட்கள் விற்பதாகவும் ‘குடு’ அடிப்பவர்கள் அங்கு கூடுவதாகவும் முன்பொருமுறை குமரேசன் சொன்னான்.

என்னைப் பயங் கௌவிக்கொண்டது. இரவு முழுவதும் இவர்களுடன்தான் இருக்கவேண்டுமா? இவர்கள் என்னை என்ன செய்வார்களோ?.

மனதிலே பலவாறான சிந்தனைகள். மெதுவாக எனது விரலிலிருந்த மோதிரத்தை அவர்களுக்குத் தெரியாமல் கழற்றி காற்சட்டை மடிப்புக்குள் செருகிக்கொண்டேன்.

தனக்குப் பசிக்கிறதெனக் கூறிய ஆசாமி சிறிது நேரம் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தான். பொலிஸ்காரன் தன்னைச் சரியாக உபசரிக்கவில்லை என்றான். சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படு பவர்கள் எல்லோரும் குற்றவாளிகளாக இருப்பதில்லை எனவும், அதனால் அவர்களை எவ்வாறு கண்ணியமாக நடத்தவேண்டும் எனவும் மற்றவனிடம் கூறினான். இடையிடையே என்னிடமும் அவற்றைக் கூறி எனது அபிப்பிராயத்தை எதிர்பார்த்தான். அவன் கூறியவற்றை ஆமோதிப்பதுபோல நான் பரிதாபமாகத் தலையாட்டிக் கொண்டி ருந்தேன்.

சிறிது நேரத்தில் அவன் ஓய்ந்துபோய் குறட்டை விடத்தொடங்கினான்.

இப்போது மற்றவன் எழுந்து என்னருகே வந்தான். எனது கைகளை முரட்டுத்தனமாகப் பற்றினான். “மல்லி, சல்லி தியனுவத?”

என்னால் பேசமுடியவில்லை. தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப்போல் இருந்தது. உமிழ்நீரை விழுங்கியபடி இல்லை என்னும் பாவனையில் தலையைமட்டும் ஆட்டினேன்.

“பொறு கியன்டெப்பா…..”

அவன் எனது சம்மதம் எதையும் எதிர்பார்க்காமல் எனது சேட் பொக்கற்றுக்குள் கையைவிட்டான். பின்னர் காற்சட்டைப் பொக்கற்றுகளை ஒவ்வொன்றாகத் துழாவினான். ஏமாற்றத்துடன் என்னைத் தகாத வார்த்தைகளில் ஏசினான்.

“ஒயா திறஸ்தவாதிநே….. ஒயாவ மறன்டோன .” எனது கழுத்தைப் பிடித்து நெரித்துப் பின்புறமாகத் தள்ளினான். எனது தலை பின்புறச் சுவரில் மோதிக் கண்கள் கலங்கின.

முதலில் ‘மல்லி’ என அழைத்தவன் இப்போது ‘திறஸ்தவாதி’ என்கிறான். எனது பொக்கற்றில் சிறிது பணம் இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

அவனது பலத்த சத்தத்தைக் கேட்டு வெளியே நின்ற பொலிஸ்காரன் கதவின் அருகேவந்து அவனை எச்சரித்தான். அதன்பின் அவன் அடங்கிப்போனான். ஆனாலும் என்னைப் பார்த்து இடையிடையே முறைப்பதை மட்டும் விட்டுவிடவில்லை.

என்னை விடுவிப்பதற்கு சுதுமெனிக்கா ஏதாவது முயற்சி எடுப்பாளா என எனது மனம் எண்ணியது. அது ஒரு முட்டாள்தனமான எண்ணம் ; ஏன் அவள் முயற்சிக்க வேண்டும் ? ஆனாலும் குமரேசன் அறைக்குத் திரும்பியிருந்தால் அவள் அவனிடம் எல்லா விபரங்களையும் கூறியிருப்பாள்.

குமரேசனுக்குச் சரளமாகச் சிங்களம் பேசத்தெரியும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதியவுடனேயே அவன் எப்படியோ கொழும்புக்கு வந்துவிட்டான். என்னைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியே வருவதற்கு ‘பாஸ்’ எடுப்பதில் சிரமம் இருந்தது. பல்கலைக் கழக அநுமதி கிட்டும்வரை இரண்டு வருடகாலம் காத்திருந்துதான் நான் கொழும்புக்கு வரமுடிந்தது. இந்தக் காலகட்டத்தில் அவன் நன்றாகச் சிங்களம் பேசவும் கற்றுக் கொண்டான். அதனால் அவன் சுதுமெனிக்காவுடன் சரளமாகக் கதைக்கமுடிகிறது.

யாழ்ப்பாணத்தில் நானும் குமரேசனும் அயலூரவர்கள். நாங்கள் வெவ்வேறு கல்லூரிகளிலேதான் கல்வி கற்றோம். பல்கலைக் கழகத்திற்கு வந்தபின்தான் அவனுடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

ஒருநாள் குமரேசன் என்னைச் சந்தித்தபோது, “உம்முடைய தங்கச்சியைப்பற்றி ஒரு விஷயம் அறிஞ்சனான்; உண்மையே?” எனக்கேட்டான்.

நான் திடுக்குற்றுவிட்டேன். எந்த விஷயம் ஒருவருக்கும் தெரியவரக்கூடாதென நான் விரும்பினேனோ அதையே குமரேசன் என்னிடம் கேட்டான். இவனுக்கு இது எப்படித் தெரியவந்தது!

நான் பதில் சொல்லவில்லை. கண்களுக்குள் நீர் முட்டி நின்றது.

“சரி சரி பயப்பிடாதையும்…. நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன்” என்றான். அன்றிலிருந்து அவன் என்னிடம் அன்பாக நடந்துகொண்டான். எங்களுடைய நட்பு இறுக்கம் பெற்று அறை நண்பர்களானோம்.

இப்போது நான் அடைக்கப்பட்டிருந்த அறையில் மற்ற இருவரும் நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். எனது கண்கள் கனத்தன. சோர்வு பெரிதும் வாட்டியது. ஆனாலும் நித்திரை மட்டும் வரவில்லை. மறுநாள் விடியும்வரை நான் விழித்திருந்தேன்.

காலையில் ஒருபொலிஸ்காரன் வந்து என்னை நிலையப் பொறுப்பதிகாரியிடம் அழைத்துச் சென்றான்.

“இன்று எனக்குத் தவணைச் சோதனை ; நான் போகவேண்டும். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள். வேண்டுமானால் சோதனை முடிந்ததும் இங்கு வருகிறேன்.”

இதனை நான் கூறியபோது அந்த அதிகாரி எனக்கு ஆறுதல் கூறினார்.

“உம்மைப் பற்றிய விபரங்களை எடுப்பதற்கு உடனே நான் ஒழுங்கு செய்கிறேன் ; இன்னும் சிறிது நேரத்தில் நீர் போகலாம்” எனக்கூறி மேசையில் இருந்த மணியை அழுத்தி வேறொரு பொலிஸ்காரனை வரவழைத்து, “இவரது விபரங்களை எடுத்துவிட்டு சந்தேகத்திற்கு இடமில்லையெனில் அனுப்பி விடுங்கள்” எனக்கூறினார்.

அந்தப் பொலிஸ்காரன் என்னைப் பக்கத்திலுள்ள அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கு வேறும் பலர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களில் முதலாம் வருட மாணவர்கள் சிலரும் இறுதிவருட மாணவர்கள் சிலரும் இருந்தனர். அவர்கள் எவருமே என்னைப் பார்த்து அறிமுகச் சிரிப்பைக்கூட உதிர்க்கவில்லை.

என்னை முதலில் விசாரணை செய்தார்கள்.

“நம மொக்கத?”

“பாலேந்திரன்.”

“சிங்கள தன்னுவத?”

“எச்சற தன்னனே……….”

இப்போது வேறொருவன் ஆங்கிலத்தில் விசாரணையைத் தொடர்ந்தான்.

“எவ்வளவு காலமாகக் கொழும்பில் வசிக்கிறீர்? இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறதா? சகோதரர்கள் யாராவது இயக்கத்தில் இருக்கிறார்களா? நண்பர்கள் யாருக்காவது இயக்கத் தொடர்பு இருக்கிறதா? என மாறிமாறிக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தான்.

எல்லாவற்றிற்குமே இல்லையெனப் பதிலளிப்பதைவிட நான் வேறென்ன சொல்லமுடியும்.

பின்பு வேறொருவன் எனது சேட்டைக் கழற்றச் சொல்லி உடம்பு முழுவதையும் சோதனை செய்தான். எனது நெற்றியில் இருந்த தழும்பு ஒன்றினைக் காட்டி இது எப்படி ஏற்பட்டது ? எனக் கேட்டான்.

சிறுவயதில் நான் கால்பந்து விளையாடியபோது ஏற்பட்ட காயத்தின் தழும்பு விசாரணை செய்பவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவர்கள் அந்தத் தழும்பைக் காட்டித் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்.

பின்னர் என்னைப் பலவித கோணங்களில் புகைப் படமெடுத்தார்கள் ; வீடியோ படம் எடுத்தார்கள் ; கைரேகைகளைப் பதிவுசெய்தார்கள்.

என்னைக் கைதுசெய்து அழைத்துவந்த பொலிஸ்காரர் அப்போது அங்கு வந்தார். இரவு எனது அறையிலே கண்டெடுத்த புகைப்படங்களைக் காட்டி, “இது சம்பந்தமாகவும் விசாரிக்க வேண்டியுள்ளது” எனக் கூறினார்.

அந்தப் படங்களை ரஞ்சித் சில்வாவும் புஞ்சிஹேவாவும் எடுத்ததாகக் கூறியிருந்தேன். அவர்களிடம் விசாரித்தால் என்ன கூறுவார்களோ ? குமரேசன் எடுத்த படங்கள் சிலவும் அவற்றுடன் இருந்தன.

விசாரணை முடிந்ததும் அந்த அறிக்கையை என். ஐ. பி. க்கு அனுப்பி அங்கிருந்து பதில் வந்த பின்னர்தான் என்னை விடுதலை செய்யமுடியுமென இப்போது புதிதாகக் கூறினார்கள்.

எனக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் அற்றுப்போய் விட்டது. நான் சரியாக இரண்டு மணிக்குப் பரீட்சை மண்டபத்தில் இருக்க வேண்டும் அதற்குமுன் குற்றப் புலனாய்வுப் பணியகத்திலிருந்து பதில் வந்துசேருமா?

நான் சோர்ந்துபோய் வாங்கொன்றில் அமர்ந்தேன். சாப்பிடும்படி பாணும் பருப்பும் தந்தார்கள். வயிற்றுக்குள் ஒரே குமட்டல். அவர்கள் கொடுத்த வெறும் தேநீரைமட்டும் குடித்தேன்.

சிறிது நேரத்தில் நிலையப் பொறுப்பதிகாரி என்னை அழைத்து, “உம்மைப்பற்றிய விசாரணைகள் இன்னும் முடியவில்லை. ஆனாலும் சோதனை எழுதும் மாணவர்களுக்கு உதவும்படி பல்கலைக்கழக மேலிடத்திலிருந்து என்னைக் கேட்டிருக்கிறார்கள். அதனால் இப்போது உம்மை அனுப்பி வைக்கிறேன். சோதனை முடிந்ததும் மீண்டும் இங்கு வந்துவிட வேண்டும்” எனக்கூறினார்.

நான் வெளியே வந்தபோது என்னைக் கண்காணிப்பதற்காக ஒரு பொலிஸ்காரன் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.

இந்நிலையில் என்னால் எப்படி நிம்மதியாகச் சோதனை எழுதமுடியும். ? ஆனாலும் வேறுவழி ஏதுமில்லை.

முதலில் நான் அறைக்குச் சென்றேன். சுதுமெனிக்காவைச் சந்தித்த போது, இரவு குமரேசன் வந்ததாகக் கூறினாள். அவனிடம் நடந்த விஷயங்கள் யாவற்றையும் தான் தெரிவித்ததாகவும் அவன் உடனேயே எங்கோ புறப்பட்டுச் சென்றதாகவும் சொன்னாள்.

சோதனைக்கு நேரமாகிவிட்டது.

குமரேசன் எப்படியும் பரிட்சை மண்டபத்திற்கு வந்து விடுவான். நான் பரிட்சை மண்டபத்தை அடைந்தபோது பரிட்சை ஆரம்பமாகியிருந்தது.

என் கண்கள் குமரேசனைத் தேடின. அவனை அங்கு காணவில்லை……. எங்கே போயிருப்பான்?

அவன் என்றுமே ஒரு புரியாத புதிர்தான் !

- 1996. 

தொடர்புடைய சிறுகதைகள்
பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் அந்த பஸ்தரிப்பு நிலையத்தின் அருகில் நிறைந்துவிட்டார்கள். தெருவின் மறுபுறத்தில் இருந்த வாசிகசாலைக் கட்டிடத்தின் திண்ணைகளில் ஆண்கள் வசதியாக அமர்ந்திருந்தார்கள். மாணவர்களைத் தவிர அங்கு பத்திரிகை வாசிப்பதற்காகவும் சிலர் வந்திருந்தனர். பெண்கள் அந்த பஸ்தரிப்பு நிலையத்தின் அருகில் வளர்ந்திருந்த ...
மேலும் கதையை படிக்க...
கொழும்பு நகரில் பிரபல்யமானது அந்த ‘லொட்ஜ்’ அங்கு இருந்தவர்களில் அநேகமானோர் என்னைப்போலவே வட பகுதியிலிருந்து வந்தவர்களாகக் காணப்பட்டனர். வெளி நாட்டிலிருக்கும் தமது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பணம் பெறுவதற்காகச் சிலரும் வெளிநாடு செல்வதற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்வதற்காக வேறு சிலரும் வெளிநாடுகளிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டி ருக்கிறாள். வியர்வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பி யிருக்கின்றன. பின் வளவைக் கூட்டித் துப்புரவாக்கிக்கொண்டிருந்த அவளிடம், அழுது அடம்பிடித்து வெற்றியடைந்துவிட்ட களிப்பில் அந்தச் சிறுவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். பால் கொடுப்பதிலே ஏதோ சுகத்தைக் ...
மேலும் கதையை படிக்க...
அறையின் நான்கு பக்கச் சுவர்களும் என்னை நோக்கி நகர்கின்றன. மெதுமெதுவாக நகர்கின்றன. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தச் சுவர்களுக்குள் நான் நசுங்கிச் சாகப் போகிறேன்.தலை சுற்றுகிறது. நெஞ்சு விம்மித் தணிகிறது. இதயம் படபடக்கிறது. தேகம் குப்பென்று வியர்க்கிறது. கைகளால் கண்களைப் பொத்திக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
பனை கொடியேறும் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு ஒரு தனி மவுசு பிறந்துவிடும். வெளியிடங்களில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் பலர் இக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு தடவையாவது விஜயம் செய்யாமல் இருக்க மாட்டார்கள். உள்ளூர்க் கோவில்களில் கொடியேறித் திருவிழாக்கள் நடக்கும் போதுகூட ஊர்ப்பக்கம் திரும்பியும் ...
மேலும் கதையை படிக்க...
கோணல்கள்
சுதந்திரத்தின் விலை
கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும்
காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும்…!
எங்கோ ஒரு பிசகு

சோதனை மீது ஒரு கருத்து

  1. Ramnath says:

    ஏன் கதை முடிவடையவில்லை. இந்த கதையின் நோக்கம் என்ன?

    ராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)