செல்லக் கிளியே கொஞ்சிப்பேசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 15,380 
 

இன்ஸ்பெக்டெர் சோமையா சொல்லிச் சென்ற வார்த்தைகள் பரமேஸ்வரனுக்கு வருத்தத்தையே கொடுத்தது. “உங்கள் மனைவியின் சாவில் எந்த துப்பும் இதுவரைக்கும், எந்த துப்புமே கிடைக்கவில்லை. ஆனாலும் கொலைகாரனை கூடிய சீக்கிரமே கண்டுபிடித்துவிடுவோம்.” இதையே இரண்டு நாட்களாக சொல்லிக்கொண்டிருந்தார். “மகன் ரகுவும் மகள் ராதையும் இன்னும் துயரத்திலிருந்து மீண்டபாடில்லை .என் கண்மணியோடு அவள் வளர்த்து வந்த டாமியும் அல்லவா கொலையுண்டிருக்கிறது? டாமிக்குதான் எவ்வளவு விஸ்வாசம்! அவளைக் காப்பாற்ற போராடியிருக்கும். அந்த சமையத்தில் நான் இல்லாமல் போனேனே”. என அவர் துக்கித்தார். கண்மணியின் மற்ற வளர்ப்புகளும் தாயை இழந்த சோகத்தில் இருந்ததைக்காண முடிந்தது. மியாமி, கீக்கீ எல்லாமே தங்கள் எஜமானியைக் காணாமல் வீடு முழுவதும் தேடிக்கொண்டு பரிதவித்தன. கொலைகாரப்பாவி யாராக் இருக்கும்? பீரோவிலிருந்த ஒட்டுமொத்தமும் களவாடப்பட்டிருந்தது. அந்த வீட்டிற்கு யாரெல்லாம் வர,போக இருந்தார்களென விசாரித்து அவர்களை எல்லாம் சோமையா, கேள்விகள் கேட்டே தண்டித்துக்கொண்டிருந்தார்.

பரமேஸ்வரன், கண்மணி இவர்களின் நண்பர்களைக்கூட கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார். ரகுவின் இரண்டு நண்பர்களை போலீஸ் கஸ்டடியில் பிடித்து வைத்துக் கொண்டுவிசாரித்து வந்தார்..ரகுவிற்கு இதல்லாம் சுத்தமாக பிடிக்கவில்லை. அம்மா என் நண்பர்களை மிகவும் நேசித்தார்கள். என் நண்பர்களும் அம்மாவிடம் பாசத்துடனும், மிகுந்த மரியாதையுடனும் இருப்பவர்கள். அம்மாவின் ஆத்மா இதையெல்லாம் சகித்துக் கொள்ளாது நிச்சயமாக. ரகுவை அவன் அப்பா தேற்றினார். “இதல்லாம் அவருக்குத் தெரியாதில்லையா. மேலும் அவரது வேலை எல்லோரையும் விசாரிக்கவெண்டும். அமைதியாக இரு ரகு”. என்று தேற்றினார்.

அப்பொழுது பரமேஸ்வரனின் கைபேசி ஒலிக்கவே ரகு சென்று எடுத்தான். எதிர்பக்கத்தில் பேசுவது சிவாமாமா என்றதும்; அவனுக்கு சிறிதே நிம்மதி ஏற்பட்டது. சிவாமாமா ஏர்ப்போர்ட்டிலிருந்து அங்கு வந்து கொண்டிருப்பதை மகிழ்ச்சியுடன் அப்பாவிடம் தெரிவித்தான். சிவாவிடம் கண்மணி போய் சேர்ந்துவிட்ட செய்தியை தெரிவிக்கவில்லை. இப்போது தெரிந்தபிறகு ஆடித்தான் போவான். வரட்டும். என்றைக்காவது தெரியத்தானே வேண்டும்? அவன், கண்மணிக்கு ஒன்றுவிட்ட சகோதரன். ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் பாசமலர்கள்.

அக்கா!, அக்கா! நொடிக்கு ஒரு அக்காதான். அவன் இருந்தாலே வீடு கலகலவென்று இருக்கும். ராதைக்கு அவன் ஏற்றவன் என்று கண்மணி கருதியிருந்தாள். ராதையும், தன் அம்மாவின் எண்ணத்தை அறிந்திருந்தாள். அப்பவின் துக்கத்தை பங்கு போட்டுகொள்ள ஒருவர் தற்சமையம் வர இருப்பது, அவளுக்கு ஆறுதலைத் தந்தது.

சிவா, முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் டாக்சியிலிருந்து இறங்கி வந்தான். தன்னை வா என்று சொல்லாமல் அப்பாவும் பிள்ளைகளும் கண்டுகொள்ளாது இருக்கவே “அக்கா! அக்கா! இந்த மூன்று உரான்குட்டான்களையும் உன் வளர்ப்பு பிராணிகள் லிஸ்டில் சேர்த்துவிட்டாயா?” என்று கேட்டுக்கொண்டே அடுக்களை, படுக்கையறைகள் எல்லாம் தேடிவிட்டு வந்தான். அரவேற்பறையில், கண்மணியின் புகைப்படம் பூமாலையிட்டு, விளக்கு, ஊதுவத்தி ஏற்றி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் உடைந்து போனான். தேம்பியவண்ணம் புகைப்படத்தின் முன்னால் விழுந்து நமஸ்க்காரம் செய்தான். அப்போது அங்கு வந்த கண்மணியின் வளர்ப்பு பூனை, மியாமி அவனை உரசிக்கொண்டு நின்றது. அவனை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்த அதனை அன்புடன் தடவிக்கொடுத்தான். “அக்காதான் பூனை ரூபத்தில் வந்து என்னை வாவென்று சொல்கிறாள் போலும்”ஏன்று அவன் தனக்குள் மெல்ல சொல்வதைக் கேட்ட ராதை தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“எங்கே டாமியைக்கணோம்?” அவன் கண்கள் தேடவே, ரகு விவரமாக எல்லாம் சொன்னான். “கொலைகாரன் அம்மாவைக் கொலை செய்தபோது டாமி போராடி இருக்குமாக்கும். அதனால், கொலைகாரன் அதனையும் குத்தி கொன்று விட்டான் போலும்.கீக்கீ கூட இரை எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இறந்துவிடும் போலிருக்கவே அதைக் கொல்லைப் புற வராண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறோம்”. ரகு சொல்ல சிவா கொல்லைப்புறம் விரைந்தான். கண்கள் சொருகிக் கிடந்த கீக்கீ இவனைப் பார்த்ததும் சிறகடித்து தன் மொழியில் கீச்சிட்டது. பரமேஸ்வரன் கீக்கீயையும் சிவாவையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவா ஓரிரு நாட்களில் சிங்கப்பூர் போக வேண்டுமாம்.

அவன் புறப்படவிருந்த அன்று காலை, சோமையா வந்து அவனை கைது பண்ணி அழைத்துப்போனார்.

“எப்படியப்பா”! என்று ஆச்சரியப்பட்ட தன் பிள்ளைகளுக்கு பரமேஸ்வரன் விளக்க ஆரம்பித்தார். “சிவாவைப் பார்த்த அன்று கீக்கீ வித்யாசமாக கத்திற்று அல்லவா? அதனால் என் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள கிளிக்கூண்டை வரவேற்பறையில் கொண்டு வந்து மாட்டி வைத்தேன். சிவா போகும் போதும் வரும்போதும் அது வித்யாசமாக சிறகடித்து கத்திற்று. என் சந்தேகத்தை சோமையாவிடம் தெரிவித்தேன். அவரும், விமான நிலையத்திற்கு சென்று சிவா வந்த நாளை உறுதிப்படுத்திக்கொண்டார். அந்த நாள் கண்மணி கொலையுண்ட நாள். இரண்டு நாட்கள் கழித்தே வந்ததாக நம்மிடம் நாடகமாடி இருக்கிறான்.

சிங்கப்பூரில் அவனுக்கு வேலையும் போய் விசாக்காலமும் முடிந்துவிடவே சம்பாத்யம் இல்லாமல் போய்விட்டதை மறைத்து, மறுபடியும் வேலைக்குப் போவதாக போய் கூறுகிறான். திருடியதை எல்லாம் எடுத்துக்கொண்டு வேறு எங்கோ ஒடிவிட திட்டமாம். சொல்லி முடித்த அவருக்கு மூச்சு இரைத்தது.

இப்போது கண்மணியின் புகைப்படத்தினருகே டாமியின் புகைப்படமும் இடம் பிடித்தது. “என் செல்லமே” என்று கொஞ்சியபடி கீக்கீக்கு பழம் ஊட்டிக்கொண்டிருந்தாள் ராதை. கிளியும் அவளோடு கொஞ்சியது. துரோகி மியாமியும் வாலை நிமிர்த்திக் கொண்டு அங்கே வளைய வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *