சுனாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 16,797 
 

டிசம்பர் 26, 2004.

காலை பத்தரை மணி.

சுனாமியால் தேவனாம்பட்டினம் தன் இயல்பு வாழ்க்கையை இழந்து எங்கு பார்த்தாலும் சேரும் சகதியும், வேரோடு சரிந்த மரங்களும், இடிந்த கட்டிடங்களும், அதனூடே பிணங்களும்…சோகமான சூழ்நிலையில் தவித்தது.

கடலூர் அரசு மருத்துவ மனைக்கு பிணக் குவியல்கள் தொடர்ந்து வந்தபடியே இருந்தன. அழு குரலும், அரற்றல்களும் காண்போரின் அடிவயிற்றைக் கலக்கியது.

மாறிச் சாமியின் வீடு தேவனாம்பட்டினத்திலிருந்து சற்றுத் தள்ளி அமைந்திருந்ததால் அங்கு பாதிப்பு எதுவும் இல்லை. தன் மனைவி வடிவுக்கரசியை பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு ஏற்கனவே ஒப்புக்கொண்ட சவாரிக்காக மாரிச்சாமி தன்னுடைய குவாலிஸ் வண்டியை எடுத்துக் கொண்டு கடலூரை நோக்கிச் செலுத்தினான்.

வழியில் கணேசனைப் பார்த்தான். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவனுடன் சுனாமியால் விளைந்த சேதங்களைப் பற்றி குரலில் நடுக்கத்துடன் பேசிக் கொண்டிருந்தவனுக்கு – சட்டென்று அந்தக் கொலைத் திட்டம் மனதில் அரங்கேறியது.

மாரிச்சாமிக்கு கணேசனை கடந்த நான்கு வருடங்களாகத் தெரியும். கணேசன் ஒரு ஷோக்குப் பேர்வழி, பசையுள்ளவன். தினமும் சேர்ந்து குடிக்கும் அளவுக்கு நெருக்கமான பழக்கமானதும் ஒருநாள் கணேசன் மாரிச்சாமி வீட்டிற்கு வந்தான்.

மாரிச்சாமி சரியான வேலையில் இல்லாததையும், அவனுடைய மனைவி வடிவுக்கரசி நல்ல வடிவில் கிரங்ககடிக்கச் செய்யும் அழகுடன் இருப்பதையும் புரிந்துகொண்டு, ஒரு தொழில் ஆரம்பிக்கச் சொல்லி மாரிச்சாமிக்கு நான்கு லட்ச ரூபாய் கடனாகக் கொடுத்தான். அத்துடன் சேர்த்து தன மனைவியின் நகைகள் மற்றும் சேமிப்பை எல்லாம் திரட்டி மாரிச்சாமி ஒரு டொயோட்டோ குவாலிஸ் வண்டி வாங்கி அதை வாடகை சவாரிக்கு ஒட்டி வந்தான்.

இதனால் வடிவுக்கரசிக்கு, கணேசன் மீது அன்பும் கரிசனமும் அதிகமாக, அவன் அடிக்கடி அவளைப் பார்ப்பதற்கு வீட்டிற்கு வரலானான். ஒரு கட்டத்தில் கணேசன்-வடிவுக்கரசி நெருக்கம் அதிகமாகி, மாரிச்சாமி சவாரிக்குப் போகும் நேரங்களில் வடிவுக்கரசியுடன் தனித்து இருக்கலானான்.

இதைப் புரிந்துகொண்ட மாரிச்சாமிக்கு கணேசன் மீது உள்ளூர வெறுப்பு அதிகமாகியது. தவிர, ஊரில் உள்ளவர்கள் தன் மனைவியின் தொடுப்பு பற்றி அரசல் புரசலாகப் பேசிக் கொள்வது மாரிச்சாமியின் ரத்தத்தை கொதிக்கச் செய்தது.

இப்போது சுனாமி…

கணேசனைக் கொன்று பாடியை தேவனாம்பட்டினத்திற்கு கொண்டு சென்று, சேற்றில் புதைத்து விட்டால், பெரிய கடன் தொகையிலிருந்து மீண்டு விடலாம். தவிர, வடிவுக்கரசி இனி அவனைப் பார்க்கவே முடியாது, நிம்மதியான வாழ்க்கை.

திட்டத்தை உடனே செயலாக்க முடிவு செய்தான்.

“அண்ணே மனசே சரியில்ல, மத்தியானத்துக்குள்ள எனக்கு சவாரி முடிஞ்சுடும் ஒரு மணிக்கு நாம மறுபடியும் பார்க்கலாம். அப்ப ரெண்டுபேரும் கொஞ்சம் சரக்கடிக்கலாம் வர்றியா?” என்றான்.

“சரி மாரி, நம்ம ரெகுலர் ஜாயிண்டுக்கே வந்துடு, சுனாமி கவலையை நாம தண்ணியடிச்சி தீத்துக்கலாம்.”

மாரி குவாலிசை கிளப்பினான்.

வழியில் வண்டியை நிறுத்தி ஒரு பாட்டில் பூச்சி மருந்தை வாங்கி, அதைத் தன்னுடைய பின்புறச் சட்டைப் பையில் பத்திரப் படுத்திக் கொண்டான்.

கணேசன் நேராக மாரிச்சாமியின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்ட, வடிவுக்கரசி சந்தோஷத்துடன் அவனை கட்டியனைத்து முத்தமிட்டாள்.

மதியம் ஒரு மணி.

கணேசன் மாரிச்சாமிக்காக காத்துக் கொண்டிருந்தான்.

பாவம் மாரிச்சாமி… இன்னையோட அவன் கதை முடிந்துவிடும். நானும் வடிவும் இனி கள்ள உறவு இல்லாமல் நிம்மதியாக சேர்ந்து வாழலாம்.

தான் வாங்கிக் கொடுத்த விஷத்தை இன்று இரவு வடிவு சாப்பாட்டில் மாரிச்சாமிக்கு கலந்து வைத்துக் கொன்று விடுவாள். அதன் பிறகு இரவு பத்து மணிக்கு அவள் வீட்டிற்குச் சென்று, மாரிச்சாமியின் பாடியை பத்திரமாக குவாலிஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டு எங்காவது சுனாமி பாதித்த பகுதியில் கடாசிவிட வேண்டியதுதான்…அரசாங்கமே சுனாமி பிணங்களுக்கு போஸ்ட்மார்ட்டம் தேவையில்லை என்று அறிவித்தது தனக்கு வசதியாகப் போயிற்று என்று நினைத்தான்.

சற்று நேரத்தில் மாரிச்சாமி வந்தான்.

இருவரும் சரக்கு அடிக்க ஆரம்பித்தார்கள். மாரிச்சாமி இன்றோடு குளோஸ் என்று கணேசனும், கணேசன் இன்றோடு ஒழிந்தான் என்று மாரிச்சாமியும்.. நினைவு தந்த சுகத்தில் ஒருவருக்கொருவர் நன்றாக உபசரித்தனர்.

கணேசன் நான்காவது ரவுண்டில் சற்று நிலை தடுமாறியபோது, மாரிச்சாமி பூச்சி மருந்தை எடுத்து லாவகமாக கணேசனின் சரக்கில் கலந்துவிட்டான்.

ஆறாவது ரவுண்டில் கணேசன் குழறலாகப் பேசினான். இனி அவன் தாங்க மாட்டான் என்பதை உணர்ந்த மாரிச்சாமி அவனை கைத்தாங்கலாக குவாலிஸ் வண்டியினுள் ஏற்றி கதவைச் சாத்தினான்.

சற்று நேரத்திலேயே கணேசன் ரத்தவாந்தி எடுத்தான். பேச்சு மூச்சின்றி வண்டியினுள்ளேயே சரிந்தான். சிறிது நேரத்தில் மூச்சு நின்றது.

அவன் சடலத்தை இப்போது டிஸ்போஸ் செய்ய முடியாது. இருட்டியதும் செய்தால் மிகவும் சுலபம் என்று நினைத்தவன் அடுத்து நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் வண்டியை கணேசன் பாடியோடு நேராக தன் வீட்டிற்குச் செலுத்தினான்.

இரவு எட்டு மணி.

வடிவுக்கரசி மணக்க மணக்க மீன் குழம்பு வைத்தாள். அப்போதுதான் குளித்துவிட்டு வந்த மாரிச்சாமியை வாஞ்சையுடன் அணைத்தாள்.

கடைசித் தடவையாக அவனுடன் கட்டிலில் சல்லாபித்து முயங்கினாள்.

‘என்னை மன்னிச்சிடுய்யா’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, அவனுக்கு தட்டு வைத்து பரிமாறினாள். அதில் மறவாது விஷம் கலந்தாள்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி மாரிச்சாமி தரையில் சரிந்தான். அவன் உயிர் பிரிந்து விட்டதை உறுதி செய்துகொண்ட வடிவுக்கரசி, கணேசன் வரவிற்காக காத்திருக்கலானாள்.

மணி பத்தைத் தாண்டி வெகு நேரமாகியும் அவன் வராததால் பதட்டமடைந்தாள். அவன் வராது போனால் மாரிச்சாமியின் சடலத்தை என்ன செய்வது என்று நினைத்து பயந்தாள்.

அப்போது –

கதவு தட தடவென தட்டப்படும் சத்தம் கேட்டதும் அவள் ஆவலுடன் ஓடிச் சென்று கதவைத் திறக்க, அங்கே நான்கு போலீசார் நின்றிருந்தார்கள்.

வடிவுக்கரசி அதிர்ச்சியடைந்தாள்.

“இந்தாம்மா எங்கே உன் புருஷன்? எங்களுக்கு வெளியே நிக்கிற குவாலிஸ் உடனே வேணும், வண்டியின் பின்புற சீட்டு எல்லாம் எடுத்துட்டு, சுனாமியில் விழுந்த பிணங்களை குவியலாக கொண்டுபோய் கடலூர் அரசாங்க மருத்துவ மனையில் சேர்க்கணும்… எல்லா வாடகை வண்டிகளையும் உபயோகிக்கச் சொல்லி கலெக்டர் உத்தரவு.”

வடிவுக்கரசி பதில் சொல்லத் தோன்றாது திகைக்க அவளைத் தாண்டி வீட்டினுள் சென்றனர். படுத்திருப்பதாக நினைத்திருந்த மாரிச்சாமியை குச்சியால் தட்டி எழுப்ப, வாயில் நுரை தள்ளிச் செத்திருப்பவனைப் பார்த்ததும் பதட்டமானார்கள்.

நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்ட வடிவுக்கரசி விசும்பி அழலானாள்.

மாரிச்சாமியின் சட்டைப் பையை போலீஸ் துழாவியபோது குவாலிசின் சாவி கிடைக்க அதை எடுத்துக் கொண்டனர்.

“நீயும் வாம்மா ஸ்டேஷனுக்கு” என்று வடிவுக்கரசியை நெட்டித் தள்ளிக் கொண்டு சென்றனர். குவாலிசின் கதவைத் திறக்க, அங்கு பிணமாகக் கிடந்த கணேசனைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்து இரட்டைக் கொலையை விசாரிக்கத் தீவிரமாயினர்.

மர்டர் கேஸ் ரெஜிஸ்டர் பண்ணியதும், இரண்டு பிணங்களையும் போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பிவிட்டு, வடிவுக்கரசியை மகளிர் காவல் நிலைய ஜெயிலில் அடைத்தபோது இரவு மணி பன்னிரண்டு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *