கேளுங்கள் தரப்படும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்  
கதைப்பதிவு: July 28, 2012
பார்வையிட்டோர்: 19,446 
 

பல வேகத்தடைகளைத் தாண்டி நகரினூடாக ஊர்ந்து வந்த அந்தப் பேருந்து நகராட்சி பேருந்து நிலையத்தினுள் நுழைந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் வரிசையில் தனக்கான இடைவெளியில் சொருகிக் கொண்டு நின்றது.

கியர் ராடுக்கு நேர்முன்னால் எஞ்சின் முடியின் மீது தொங்கிக்கொண்டிருந்த ஓட்டை வாஸரை பிடித்து இழுத்து ஓடிக்கொண்டிருந்த எஞ்சினை நிறுத்தினார் ஓட்டுநர்.

‘‘வண்டி ஒரு கால்மணி நேரம் நிக்கும். முன்னாடி டயம் வண்டிகள்ளாம் போனப்பறந்தான் கௌம்பும். எடவெளி ஓட்டல்ல எங்கயும் நிக்காது“ என பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு நடத்துனர் இறங்க, ஓட்டுநரும் தன்பக்கக் கதவினைத் திறந்து இறங்கினார். இருவருமாக வண்டியின் எதிர்புறத்தில் இருந்த தேநீர்க்கடையை நோக்கி நடந்தனர்.

பேருந்தினுள் இருந்த கிட்டத்தட்ட நாற்பது பயணிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தேநீருக்காகவோ, புகைப்பதற்க்காகவோ, கழிவறை தேடியோ எழுந்து வெளியேறத் துவங்கினர்.

பேருந்திலிருந்து இறங்குபவர்களை இறங்கவிடாதபடி முன்வாசல் வழியாகவும், பின்வாசல் வழியாகவும் நான்கைந்துபேர் வண்டிக்குள் ஏறமுற்பட்டனர்.
முன்வாசல் வழியாக ஏறிய இருவரில் ஒருவர் மிகப்பெரிய கருப்புநிறப் பை ஒன்றை வைத்திருந்தார். பேருந்தினுள் ஏறியதும் அவர் பையை கியர்ராடை ஒட்டி வைத்து திறக்கத் தொடங்கினார்.

மற்றொருவர் தனது கைகளை பலமாக மூன்றுமுறை தட்டி வண்டியிலிருந்த அனைவரது கவனத்தையும் கவர முயன்றபடி, “சார் கொஞ்சம் இங்க பாருங்க… அம்மா கொஞ்சம் கவனியுங்க… வண்டி நிக்கிற இந்த கொஞ்ச நேரத்துல ஒரு சின்ன யாவாரம்…“ என பேசத்துவங்கினார்.

கணீரென்ற அவரது குரலின் ஈர்ப்பிலும், பயணம் ஏற்படுத்தியிருந்த சலிப்பிலும் பயணிகள் பலரும் வியாபாரியின் பேச்சினை கவனிக்கத்துவங்கினர்.

பேருந்தின் இருக்கை வரிசைகளில் இரண்டாவது வரிசையில் நடைபாதையை ஒட்டிய இருக்கையிலிருந்தவர் தனது கையில் இண்டியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையை விரித்துப் படித்துக்கொண்டிருந்தார். வியாபாரியின் குரல் கேட்டு தலையை லேசாக ஒருமுறை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் பத்திரிகை நோக்கி தலையை கவிழ்த்துக் கொண்டபோது நாமம் பளீரெனத் தோன்றி மறைந்தது.

“ஸார்… நாங்க பொருட்களைக் காட்டுறோம். வேணுங்கற வெலக்கிக் கேளுங்க. ரேட் கட்டுபடியானா பொருளைக் குடுக்குறோம். கட்டலேன்னா இதோ பாருங்க இந்த சீப்பு, பேனா, டார்ச்லைட் இதுல ஏதாவது ஒண்ண கமிஷனாத் தரோம். சந்தோஷமா கேளுங்க. தகராறு எதுவும் வேணாம். ஏதோ வயித்துப் பொழப்புக்கு இப்படி பஸ்ல ஏறி எறங்கி யாவாரம்“ என வண்டி முழுவதையும் தன் பார்வையால் உள்வாங்கிக் கொண்டே பின்னால் கையை நீட்ட வியாபாரியின் கையில் இரண்டு துணிகளைக் கொடுத்தார் கறுப்புப் பைக்காரர்.

கைக்கு ஒன்றாக துணியினைப் பிடித்து ஒன்னுடன் ஒன்னு தட்டி சப்தமெழுப்பி “ஸார் பாருங்க ஸார்… அய்யா பாருங்க… ஒரு பேண்ட் பிட்டும் சர்ட் பிட்டும். ரெண்டும் சேந்து கடைல வாங்குனா ரூவா 500க்குக் குறையாது. தரமான கம்பெனி தயாரிப்பு ஸார். கைல வாங்கிப் பாத்துட்டு வெலயக் கேளுங்க ஸார்“ என்றபடி மெதுவாக நகர ஆரம்பித்தார்.
வாசிப்பில் லயித்திருந்த நாமக்கார்ரைத் தாண்டி இருந்த ஜன்னலோர இருக்கைக்காரர், “எங்க குடுப்பா பாக்கலாம்“ என கையை நீட்ட கொடுத்தான் வியாபாரி. சில விநாடிகள் இப்படியும் அப்படியுமாக துணிகளைத் திருப்பிப் பார்த்துவிட்டு, “நூறுதானப்பா பெறும். நூறுக்குத் தர்றியா?“ கேட்டபடி துணிகளை திரும்ப நீட்ட பெற்றுக் கொண்ட வியாபாரி, “கட்டாது ஸார்… மேல கேளுங்க…“ என நகர்ந்தான்.
மற்றொருவர் “120“ எனக்கேட்க “கட்டாது… கட்டாது ஸார்… மேல கேளுங்க…“
“140“ என கடைசி வரிசையிலிருந்த ஒரு குரல் கேட்க, “துணிய வாங்கிப்பாத்தாவது வெலயக் கேளுங்க ஸார்…“ என்று 140க்கு கேட்டவரிடம் சென்று கொடுத்தான்.

அவர் அதை லேசாக தொட்டுப் பார்த்துவிட்டு, “சரி… சரி… 150ன்னு குடுத்துட்டுப்போ…“
“அதெல்லாம் 150க்கு கட்டாது ஸார்…“ என பேருந்தின் முன்பகுதி வரை ஆ 150, 150, 150 என கூவிக்கொண்டே வந்து, “150க்கு கட்டாது. அதனால பொருள் கம்பெனிக்கு வாபஸ்… கேட்டதுக்கு கமிஷன் இந்தாங்க ஸார் சீப்பு… இத அவருக்கு பாஸ் பண்ணுங்க“ என்று நின்ற இடத்திலிருந்தே ஒரு சீப்பை எடுத்து முன்னால் இருந்தவரிடம் கொடுக்க, சீப்பு ஆள்மாறி மாறி 150க்கு கேட்டவரிடம் வந்து சேர்ந்தது.

வியாபாரியின் கையில் அடுத்ததாக ஒரு ஜமுக்காளம் முளைத்திருந்தது. பேருந்துக்கு
வெளியில் ஓட்டுநரும் நடத்துநரும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தனர்.

“ஸார்… பாருங்க ஸார்… ரூபாய் 800 மதிப்புள்ள ஜமுக்காளம் ஆரம்ப வெல ரூபாய் 100. அதுக்கு மேல கேக்குறவங்க கேக்கலாம். வியாபாரியின் தொனி கொஞ்சம் மாறியிருந்தது.
“கொஞ்சம் விரிச்சுக் காட்டுப்பா பாக்கலாம்“ என ஒரு பெண் கேட்க, “அப்படி விவரமாக் கேளுங்கம்மா“ என்றபடி ஜமுக்காளத்தை விரித்துக் காட்டினான். தொண்றுதொட்டு வரும் அதே கோடுபோட்ட ஜமுக்காளம். சற்று பெரியதாகவே இருந்தது. ஆனால் அந்தப் பெண் அப்புறம் வாயைத் திறக்கவே இல்லை.

“கேளுங்கம்மா… கேளுங்க ஸார்…“ என்று நகர விரித்துப் பிடித்த ஜமுக்காளம் இண்டியன் எஸ்பிரஸை உரசி மடக்கியது. நாமக்காரர் சற்று தள்ளிப் பிடித்துக் கொண்டார்.

முதலில் துணியை கையில் வாங்கிப்பார்த்து ரூபாய் 100க்கு கேட்டவர் தனது வரிசையை கடந்து சென்ற வியாபாரியை நோக்கி தலையைத் திருப்பி “எரநூறுஹ்ஹ என்றார்.

வியாபாரி ”ஆ… எரநூறு… எரநூறு… எரநூறு…“ என்றபடி நகரத் துவங்கினான்.

ஒரு பயணி வியாபரியை கூர்ந்து பார்க்கத் துவங்க “நீங்க கேளுங்க ஸார்…“ என்று அவரை ஏறிட அவர் பேசாமல் வேண்டாம் என கையை விரித்து ஆட்டினார்.

“என்ன… ஐநூறா…. ஆ 500, 500, 500“ என கூவினான் வியாபாரி

“நான் எங்க 500ன்னு கேட்டேன். வேணாம்னுதானே சொன்னேன்“ என சற்று பயங்கலந்த குரலில் அவர் முனங்க அவரைத் தாண்டி “500, 500“ என நடந்தான் வியாபாரி. “550“ என ஒரு குரல் வர, தான் சொல்லிக் கொண்டிருந்த 500 என்பதிலிருந்து 550 என மாற்றி சொல்லிக் கொண்டே மீண்டும் பை வைத்திருந்த இடத்திற்கு வந்தான்.

‘‘550 கூட கட்டாது ஸார். என்னா செய்றது. ஒங்களால முடிஞ்சமட்டும் கேட்டுட்டீங்க. எனக்குத்தான் கட்டல. அதனால் பொருள் கம்பெனிக்கு வாபஸ். ஒங்களுக்கு கமிஷம் இந்த டார்ச்லைட்‘‘ என 4 அங்குல நீளமுள்ள ஒரு சிறிய டார்ச்லைட்டை முன்பு சீப்பை கொடுத்த பாணியிலேயே கொடுக்கமுயல, டார்ச்லைட் பெற்றுக் கொள்ள வேண்டியவர் இருக்கையைவிட்டு எழுந்து தானேவலிய வந்து பெற்றுக்கொண்டு நாமதாரியின் இருக்கைக்கு அடுத்த வரிசையில் காலியாக இருந்த நடு இருக்கையில் அமர்ந்து கொண்டார். ஓட்டுநரும் நடத்துனரும் இப்போது புகைத்துக் கொண்டிருந்தனர்.

“வண்டி கௌம்பறதுக்குள்ள அடுத்ததா ஒரே ஒரு யாவாரம் ஸார்… பாருங்க…“ என்று குரலை இன்னும் உச்சஸ்தாயியில் உயர்த்திப் பேசினான். இப்போது அவன் கையில் கண்களைக் கவரும்விதமாக அழகிய ஒரு படுக்கைவிரிப்பு. எவரும் கேட்காத போதும் அதனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரித்து பிரித்துக் கொண்டிருந்தான்.

“ஸார் பாருங்க… ஷோலாப்பூர் வெல்வெட் பெட்ஷீட்… படுத்தா சும்மா மெத்த மாதிரி இருக்கும் ஸார்… விருந்தாளிக வந்தாலும் எடுத்து விரிச்சு உக்காரச் சொன்னா கௌரவமா இருக்கும் ஸார்… பளபளன்னு வௌக்குப் போட்டு கண்ணாடி பெட்டிக்குள்ள வைச்சா வெல 1500ன்னாலும் பேசாம வாங்கிட்டு வந்துருவீங்க ஸார். எங்களால முடிஞ்ச மட்டும் கொறயாத் தர்றோம். கேளுங்க ஸார். கேளுங்க… ஆரம்பவெல 300. மேல கேளுங்க. சீக்கிரம்“ என சிறு பரபரப்புக் காட்டியபடி “இந்த டிரைவர் அண்ணன் வந்துட்டிருக்காரு வண்டி கிளம்பப் போகுது“ என வெளிப்பக்கம் தன் பார்வையைத் திருப்பி சொல்ல சிலர் வெளியில் பார்த்தனர். ஓட்டுநரும் நடத்துனரும் கடைக்கார்ரிடம் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

ஆ… 300… 300… 300…“ என்றபடி நகரத் துவங்கினான் வியாபாரி.

பேருந்தின் கடைசி இருக்கையில் இருந்து “500“ என்று ஒரு குரல் வர “ஆ… 500… 500… 500…“ என்றபடி முன்னும் பின்னுமாக நடக்கத் தொடங்கினான். எந்தக் குரலும் கேட்காதபோதே “என்ன? எழுநூறா? ஆ… 700… 700… 700…“ என உரக்கக் கத்தத் தொடங்கினான்.

பேருந்தில இருந்த பலரது கண்களும் அந்த படுக்கை விரிப்பின்மீதே இருந்தன. சிவப்புநிற வெல்வெட்துணி ஜன்னல்வழி நுழைந்த வெளிச்சத்தில் பளபளத்துக் கொண்டிருந்தது.
“700, 700“ என கத்திக் கொண்டிருந்த வியாபாரி திடீரென ஒருபக்கம் பார்த்து “என்ன எண்ணூறா? ஆ.. 800… 800… 800…“ என்று கூவினான்.

800க்குக் கேட்டது யார் என அறிய பலரும் திரும்பிப் பார்த்தனர். வியாபாரி அவர்களது பார்வையை மறைக்கும் விதமாக வேகமாக முன்னும் பின்னுமாக நடந்துகொண்டிருந்தான்.

டார்ச்லைட்டை கஷினாக வாங்கியவர் தனக்கு முன்னாலிருந்த ஏற்கனவே விலைகேட்ட சன்னலோரத்து இருக்கைக்காரரிடம் தொளாயிரம்னா குடுத்துருவாம் போலருக்கு“ என சற்று லேசாக முனகியபடி “தொளாயிரம்னாலும் பெறும்“ என்று கொஞ்சம் சப்தமாகவே சொன்னார்.

சன்னலோரத்து இருக்கைக்காரர் லேசாகத் தனது சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். வியாபாரி அவரது வரிசைக்கு வந்து நின்று கொண்டு “கேளுங்க ஸார்… கேளுங்க… ஆ… 800… 800… 800…“ என வாய் ஓயாது கத்தினான்.

நடந்துனர் வந்து பின்வாசலில் ஏறிநின்று கொள்ள, ஓட்டுநர் தன் இருக்கையில் அமர்ந்து விசைப்பலகையில் பொத்தானை அழுத்தி எஞ்சினை உயிர்ப்பித்தார்.

ஜன்னலோர இருக்கைக்காரர் வியாபாரி, ஓட்டுநர், நடத்துனர் மூவரையும் மாறிமாறி பார்த்தார். அவரையும் அறியாத ஒருகணத்தில் அவரதுவாய் “தொளாயிரம்“ என்றது.

“ஸார் கேட்டாரு பாருங்க 900, 900 என விரிப்பை மடிக்கத் துவங்கினான் வியாபாரி“

“தொளாயிரம் ரூவாகூட கட்டல போலருக்கு. அதான் மடிக்கிறான்“ என தனக்குத்தானே முனகியபடி “சரி ஏதாவது கமிஷன் குடுப்பான்“ என எண்ணிய ஜன்னலோர இருக்கைக்காரர் வியாபாரியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஏம்பா, யாவாரம் போதும்… எறங்கிக்க… வண்டி கிளம்பணும்…“ என நடத்துனர் வியாபாரியிடம் சொல்ல, “இந்தா முடிச்சுட்டோம். ஆயிரத்துக்கு கொறச்சுன்னா எங்களுக்குக் கட்டாது. காலைல இருந்து ஒன்னும் யாவாரமில்ல. ஸார் வேற ஆசப்பட்டு கேட்டுட்டாரு. இந்தாங்க சார் 900க்கே வாங்கிக்கங்க“ என்றபடி விரிப்பை நீட்ட ஒருகணம் திகைத்த ஜன்னலோர இருக்கைக்காரர் வேறு வழியின்றி சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்து எண்ணிக் கொடுத்தார். அவரது விரல்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன.

வியாபாரியும் உடன் வந்தவனுமாக இருவரும் இறங்கிக் கொள்ள பேருந்து பின்னோக்கி நகர்ந்து நேராகி மீண்டும் முன்னோக்கி நகரத் துவங்கியது. நாமக்காரர் இன்னும் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.

பின்வாசலில் நின்றிருந்த நடத்துனரை விலக்கிக் கொண்டு பேருந்திலிருந்து இருவர் இறங்கினார்கள். ஒருவர் கையில் சீப்பும் மற்றொருவர் கையில் டார்ச்லைட்டும் இருந்தன.

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற சிறுகதை)

– பிப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *